நவீன தமிழ் இலக்கிய உலகில் பாரதியார் எல்லா துறைக்கும் முன்னோடியாகத் திகழ்ந்தவர் என்பதில் இரு நிலைப்பட்ட கருத்துக்களுக்கு இடமில்லை. தமது சமகால பிரச்சினைகள் குறித்து கவிதை கட்டுரை சிறுகதை வாயிலாக பல்வேறு கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அரசியல், பொருளியல், மெய்யியல், சமூகவியல், அறிவியல் முதலிய துறைகளையும் தமதாக்கி அதன் பின்னணியயிலே சமூகம் குறித்தும், தேசம் குறித்தும் கருத்து தெரிவிக்க காண்கின்றோம். இத்தகைய ஆளுமைமிக்க யுக புருஷனின் படைப்புகளும் எழுத்துக்களும் நாளுக்கு நாள் தொகுக்கப்பட்டு வந்துள்ளதை அறிகின்றோம். அவ்வாறே அவரது பன்முகப்பட்ட ஆளுமைகள் குறித்த ஆய்வுகள், ஆக்க பூர்வமான நூல்கள் வெளிவரவில்லையாயினும் சில குறிப்பிடத்தக்க நூல்கள் வெளிவந்துள்ளன என்பதையும் இவ்விடத்தில் மனங்கொள்ளல் வேண்டும்.

இவ்வாறிருக்க பாரதியாரின் முக்கிய பணிகளில் ஒன்றான அவரது கல்விச் சிந்தனை குறித்த ஆய்வுகளோ, அல்லது அவரது கல்வி சார்ந்த கட்டுரைகளை தொகுத்து முழுநிறைவான தொகுப்பொன்றோ இதுவரை nளிவந்ததாக Bharathiதெரியவில்லை. இவ்வாறானதோர் சூழலில் பாரதியின் வரலாற்று முக்கியத்துவத்தையும் இலக்கிய கதியில் அவனது ஆக்கங்கள் செலுத்தும் தாக்கத்தினையும் இயக்கவியல் பொருள் முதல்வாத அடிப்படையில் ஆய்வுகளை வெளிக் கொணர்ந்த கலாநிதி ந. இரவீந்திரன் அவர்கள் பாரதியாரின் கல்விக் கட்டுரைகளில் முக்கியவாவற்றை தொகுத்து “கல்விச் சிந்தனைகள்” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளார். கல்வியல் தொடர்பில் பல ஆளுமைகளின் கல்வி சிந்தனைகளையும் மற்றும் இன்றைய கல்வி முறையின் சுயத்தை தோலுரித்து காட்டியதுடன் மக்கள் சார்பான மாற்று கல்வி சிந்தனைகளையும் வெளிக் கொணர்ந்ததில் இந்திய மாணவர் சங்கத்திற்கு தனியிடமுண்டு. மாற்றுக் கல்வி குறித்து ஒரு பன்முகப்பட்ட பார்வையையும் விவாதங்களையும் ஏற்படுத்தும் நோக்கோடு இந்திய மாணவர் சங்கம் பாரதி புத்தகாலத்துடன் இணைந்து இருபத்தைந்து கல்வியல் சார்ந்த நூல்களை தமிழில் வெளியிட்டுள்ளமை இத்துறையில் முக்கிய சாதனையாகும்.
`
இத்தொகுப்பில் அடங்கியுள்ள கட்டுரைகள் பாரதியாரின் கல்விச் சிந்தனைகள் பற்றி பயனுள்ள சங்கதிகளையும் செய்திகளையும் வெளிக்கொணர்கின்றது. பாரதி படைப்புகளை அவை எழுந்த கால வழக்கில் வைத்துக்காட்டும் பதிப்பு அவசியமாகும். பாரதியின கட்டுரைகளை கால ஒழுங்கில் தொகுத்து வெளியிட்டதில் சீனி. விசுவநாதனுக்கு தனியிடமுண்டு. இத்தொகுதியில் காலம் குறித்து இடம்பெறுகின்ற பாரதியின் கட்டுரைகள் யாவும் அவரது தொகுப்புகளிலிருந்து பெறப்பட்டவையே என்பதும் இவ்விடத்தில் நினைவு கூறவேண்டியதொரு விடயமாகும். கால அடைவில் ஒரு சிந்தனையாளரின் எழுத்துக்களை தொகுத்தளிக்கின்ற போது அவன் குறித்த ஆய்வுகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக அமையும்.

வரலாற்று சக்தியின் ஆக்கமே மனிதனாவான். குரங்கிலிருந்து மனிதனாக பரிணாமம் அடைந்தது வரையிலான கூர்ப்பின் அடிப்படை உழைப்பாகும். உழைப்பே மனித தோற்றத்திற்கு ஆதாரமாக விளங்கியமையால் மனிதனை “உழைக்கும் விலங்கு” என சமூக விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். இது குறித்து காரல்மாக்ஸ் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

“உற்பத்தியில் மனிதர்கள் இயற்கையின் மீது மட்டும் வினையாற்றுவதில்லை. தங்களுக்கிடையிலும் வினைப்புரிந்தும் கொள்கின்றார்கள். ஒரு குறிப்பிட்ட விதத்தில் தமக்குள் கூட்டுறவாக செயற்பட்டும் தம் நடவடிக்கைகளை பரஸ்பரம் பறிமாறிக் கொண்டும் பொருள்களை உற்பத்தி செய்கின்றனர். உற்பத்தியில் ஈடுபடும் போது மனிதர்கள் தங்களுக்கிடையிலும் ஒரு குறிப்பிட்ட தொடர்புகளையும் உறவு முறைகளையும் பெற்றிருக்கின்றார்கள். இத்தகைய சமூக தொடர்புகளுக்கும் உறவுமுறைகளுக்கும் உட்பட்டுதான் மனிதர்கள் இயற்கையின் மீது வினையாற்றுகின்றார்கள். அப்போது தான் உற்பத்தி நிகழ்கின்றது”1

எனவே மனித உணர்வு என்பது தனிமனிதனுக்கும், இயற்கைக்கும் இடையில் நிலவுகின்ற ஒரு உறவாக மட்டுமன்றி தனி மனிதனுக்கும் ஏனைய சக மனிதர்களுக்கும் இடையில் நடைபெறுகின்ற உறவாகவும் அமைந்துள்ளது.

ஒரு சமூகமாய் வாழும் மக்கள் உயிர்வாழ்வதற்கு உணவு, உடை, உறையுள் என்பவற்றுடன் ஏனைய அடிப்படை வசதிகளும் அவசியமானதாகும். ஆனால் இயற்கை அவற்றினை மனிதர்கள் நுகரும் வகையில் தயாராக வைத்திருக்கவில்லை. அவற்றினைப் பெறுவதற்கும், தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கும் அவர்கள் உற்பத்தியில் ஈடுபட வேண்டியவர்களாக காணப்பட்டனர்.

எனவே, மனிதன் சமூகத்திலிருந்து பிரிந்து தனித்து நின்று வாழ முடியாதவன். அவன் பிறந்தது முதல் இறப்பது வரை சமூகம் அவனது ஆளுமையில் தாக்கம் செலுத்துகின்றது. வாழும் சூழல், சமூகம், சகமனிதர்கள் ஆகியவை மனிதனது சிந்தனையை உருவாக்குகின்றன என்பது சமூகவியல் நியதியாகும். அவ்வகையில் கல்வி என்பது சமூகத்தில் நிகழ்கின்றதொரு செயன்முறையாகும். வாழ்கின்ற மனிதனை உருவாக்குவதில் அது பெரும் பங்கு வகிக்கின்றது. எனவே கல்வி என்பது மனிதனின் பிறப்புரிமையாகும். அவ்வுரிமையை மறுப்பது சமூக அநீதியாகயாகும்.

ஆதி பொதுவுடமை சமூகத்தில் உற்பத்தி (Pசழனரஉவழைn) நுகர்வுடன் (ஊழளெரஅpவழைn) இணைந்திருந்தது. அச்சமூவமைப்பில் மனிதர்கள் கூட்டாக உழைத்து உபரி உழைப்பின் பயனை சகலரும் அனுபவித்தனர். பிற்காலப்போக்கில் மனிதன் நேர்த்தியான கருவிகளை உபயோகித்து பொருட்களை உற்பத்தி செய்ய தலைப்பட்டான். இப் பின்னணியே உபரி தோன்றவும் அதன் பக்க விளைவாக உழைப்பு பிரிவினை தோன்றவும் அடித்தளமாக அமைந்தது. இது தொடர்பில் ஜார்ஜ் தாம்ஸன் அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்.

“நேர்த்தியான கருவிகளைப் பயன்படுத்துவதன் மூலமாக உபரி உற்பத்தியின் வளர்ச்சி சாத்தியமாயிற்று. இதுதான் உழைப்புப் பிரிவினைக்கு அடித்தளமாக விளங்கியது. அந்த சமூதாயத்துக்குள்ளே இருந்த சில குறிப்பிட்ட குழுவினர் உழைப்பில் சில துறைகளிலே பயிற்சி பெற்றனர். தங்கள் உற்பத்திப் பொருள்களையும் சமுதாய உற்பத்திப் பொருள்களுடன் சேர்ந்தனர். அந்த பொதுவான பொருள்களினின்று தனிப்பட்ட உற்பத்திகளுக்குப் பொருட்கள் வழங்கப்பட்டன. உழைப்பு என்பது மேலும் மேலும் உற்பத்திகளை பெருக்கச் செய்ய உழைப்பு கூட்டுறவாக செயற்படுவதும் குறைந்து கொண்டே போயிற்று. இப்போது உழைப்பாளி தன் தேவைகளுக்கு அதிகமாகவே உற்பத்தி செய்ய முடிந்தது. அதன் விளைவாக அவன் தன் உழைப்பை பிரித்துப் பார்க்கத் தொடங்கி விட்டான். அதாவது சமுதாயத்தின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக இன்னமும் செய்யப்படும் உழைப்பு அதாவது அவசியமான உழைப்பு என்றும் தனக்காகச் செய்யப்படும் உழைப்பு அதாவது உபரி உற்பத்தி உழைப்பு என்றும் பிரிக்க ஆரம்பித்தான். அதன் பின் உபரி உற்பத்தி பொருளை தன் விருப்பம் போல் பயன்படுத்திக் கொள்வதற்கு உரிமை கோரினான். இந்த விதமாகத்தான் அவன் செய்த உற்பத்தி பொருள் சரக்காக (ஊழஅஅழனவைல) மாறிற்று. தேவைக்கான உற்பத்தி என்பது இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டு பரிவர்த்தனைக்காக உற்பத்தி என்பது மேலோங்கியது.”2

இவ்வாறாக உற்பத்திக் கருவிகளையும் உடமைகளையும் தமதாக்கிக் கொண்ட வர்க்கம் தம்மை உழைப்பிலிருந்து பிரித்துக் கொண்டதுடன், தமக்குக் கீழ்பட்டோரை நசுக்கவும் தொடங்கியது. அவர்களின் சகல உடமைகளையும் அபகரித்துக் கொண்டது போல கல்வி உரிமையும் அபகரித்துக் கொண்டது. கிரேக்க கல்வி மரபு. ரோமானிய கல்வி மரபு கீழைத்தேயத்தில் காணப்பட்ட பிராமணியக் கல்வி மரபு, இந்துக் கல்வி மரபு, பௌத்தக் கல்வி மரபு ஆகிய பாராம்பியங்கள் கல்வி என்பது குறிப்பிட்ட வர்க்கத்தின் ஆபரணமாக விளங்கிய வரலாற்றினை எடுத்துக் கூறுகின்றன.

எல்லோருக்கும் கல்வி என்னும் எண்ணக்கருவானது சென்ற நூற்றாண்டின் இறுதியில் ஐக்கிய நாடுகளின் மனிவுரிமை சாசனத்தினால் முன்வைக்கப்பட்டது. 1990 ஆம் ஆண்டு தாய்லாந்து நாட்டில் இடம்பெற்ற ஜொம்ரியன் மகாநாடு முக்கியமானது.

எல்லோருக்கும் கல்வி என்னும் எண்ணக்கருவானது எத்தகைய பின்னணியில் எத்தகைய நலனை அடிப்படையாக கொண்டு உருவானது என்பதைப் புற உலகு, மனித சிந்தனை என்ற இரண்டின் பொதுவான விதிகளை ஆதாரமாக கொண்டு ஒவ்வொரு காலத்துக் கல்வி சிந்தனைகளுக்கும் சமுதாய இயங்கங்களுக்குமான உறவை அவற்றின் பன்முகப்பாட்டின் அடிப்படையில் நோக்க வேண்டியது சமகால தேவையாகும்.

பாட்டாளிவர்க்கமும் அதன் நேச சக்திகளும் முன்வைத்த முதல் கோரிக்கை “அனைவருக்கும் கல்வி” என்ற கோரிக்கையாகும். கல்வி என்பது குறிப்பிட்ட வர்க்கத்தினருக்குரிய ஆபரணமாக அமையாது, அது சகலருக்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பது அதன் உள்ளீடாகும். இத்தகைய கோரிக்கைக்காக உழைக்கும் வர்க்கமும் அதன் நேசசக்திகளும் தாபன ரீதியாக ஒன்றிணைந்து முன்வைத்த முதல் போராட்டம் 1838 இல் இடம்பெற்றசாசன இயக்க போராட்டமாகும். பிரஞ்சு புரட்சியின் போதும் “அனைவருக்கும் பள்ளி” என்ற கோரிக்கை முதன்மைப்படுத்தப்பட்டிந்தது.

1848 இல் காரல் மார்க்ஸ், ஏங்கலஸ் முதலானோர் வெளியிட்ட கம்ய+னிஸ்ட் கட்சி அறிக்கையில் தான் “அனைவரும் பொதுக் கல்வி” எனும் கோரிக்கை வலியுறுத்தப்பட்டிருந்ததுடன் அதனை நடைமுறைச் சாத்தியமாக்குவதற்கான போராட்ட மார்க்கமும் விஞ்ஞானபூர்வமாக தெளிவுப்படுத்தப்பட்டிருந்து.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் மேற்கு ஐரோப்பியவாதிகள் மூன்றாம் உலக நாடுகளை தமது காலணித்துவ ஆட்சிக்குட்படுத்தியதுடன் அந்நாடுகளை தமது பொருளாதார வேட்டைக்கான காடாக மாற்றினர். இந்தவகையில் இந்தியா மீது பிரித்தானியர்கள் மேற்கொண்ட கொள்ளையடிப்பு தொடர்பாக காரல்மாக்ஸ் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

“எந்த பழைய உலகத்தில் இருந்து அது தன்னை படைத்துக் கொண்டதோ, அந்த பழைய உலகத்தை, தனது தேச எல்லைக்குள் அப்பால் கூட வைத்திருக்க அது (முதலாளித்துவம்) விரும்பவில்லை. எல்லா தேசங்களையும் தனது காலனித்துவ அரசியல் ஆதிக்க முறைக்கு கொண்டுவர ஆக்கிரமிப்பு யுத்தத்தில் இறங்கியது. நவீன துப்பாக்கிகளையும், பீரங்கிகளையும் பயன்படுத்தியது. 18ம் நூற்றாண்டின் தொடக்கத்தின் தனது அரசியல் இராணுவ கட்டுப்பாட்டுக்குள் இந்தியாவை கொண்டு வந்து சேர்த்தது. இந்திய மக்கள் தமது பழைய உலகத்தை இழந்தனர்.”3

பிரித்தானியாவின் பிரதான வர்த்தக கம்பனியான கிழக்கிந்திய கம்பெனி, தன் முகவர் ஸ்தாபனங்களை நிறுவிக் கொண்டு, இந்தியாவில் இருந்து தான் பெற்ற பொருட்களுக்கு மிக குறைவான பெறுமதியையே திருப்பிக் கொடுத்தது. உதாரணமாக பருத்தியை இந்தியாவில் இருந்து பெற்றுக் கொண்டு பின்னர் அதனை முடிவுப் பொருளாக்கி இந்தியாவிலேயே அதை சந்தைப்படுத்தியது. கைத்தறியந்திரத்தினால் புடவை நெய்தவர்கள் நடுத்தெருவில் விடப்பட்டனர். விவசாய உற்பத்தியில் தன்னிறைவு கண்டு கொண்டிருந்த விவசாயிகளின் உற்பத்தி காலனித்துவ வருகையினால் சீரழிந்து சின்னாபின்மாக்கப்பட்டன.4 “1866ல் ஒரிசா மாநிலத்தில் பிரித்தானியரின் ஏகபோக வர்க்கத்தின் காரணமாக, ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் பசியினால் இறந்தனர்”5

இந்தியாவில் சுயதேவை பொருளாதாரம் சிதைந்ததுடன் தமது பொருளாதார முறையை அறிமுகப்படுத்தி அதனூடாக இந்தியாவின் மீது ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டன. பிரித்தானியரின் இத்தகைய செயல்களை நியாயப்படுத்தும் வகையிலும் அதற்கானதொரு கூலிப்பட்டாளத்தை உருவாக்குகின்ற பணியினை ஆற்றும் வகையிலும் தான் பிரித்தானியர் இந்தியாவில் தமது கல்வி முறையினை அறிமுகம் செய்தனர். மதப்பிரசாரம் இவர்களின் அடிப்படையென காட்டிக் கொண்ட போதும் சுதேச மக்களின் வரலாற்று உணர்வையும் பண்பாட்டையும் சிதைப்பதற்கான நடவடிக்கைகளாகவே அச்செயற்பாடுகள் அமைத்துக் காணப்பட்டன. ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களின் சொந்த தத்துவார்த்த கருத்துக்களை நியாயப்படுத்தும் தேவைக்காகவும் ஆளும் வர்க்கத்தின் நுகர்வுத் தேவைப் போட்டிகளுக்காகவுமே இந்த கல்விமுறை திட்டமிட்டு புகுத்தப்பட்டன.

எங்கெல்லாம் ஒடுக்குமுறைகளும் அடக்குமுறைகளும் இடம்பெறுகின்றதோ அங்கெல்லாம் அதற்கு எதிரான போராட்டங்களும் இயக்கங்களும் தோன்றுவதுதான் வரலாற்றின் நியதி. இக்கால சூழலில் பிரித்தானிய காலணித்துவ ஆதிக்கத்தை எதிர்த்து இந்திய தேசிய விடுதலைப் போராட்டம் உச்சநிலை அடைந்திருந்தது. இப்போராட்டத்தில் கல்வி உரிமையின் அவசியமும் உணரப்பட்டு அதற்கான கோரிக்கைகளும் முன் வைகப்பட்டன. அந்தவகையில் இந்திய கல்விக்கு ஏற்றவகையிலான கல்வி முறையை முன் வைத்தவர்களில் சுவாமி தயானந்தர், சுவாமி விவேகானந்தர், அரவிந்தர், ரவிந்திரநாத் தாகூர், மகாத்மா காந்தி முதலானோர் குறிப்பிடத்தக்கவர்கள். பாரதி இவர்களின் தொடர்ச்சியாகவும் இவர்களைவிட நீண்ட தூரம் சென்று சமூகமாற்றப்போராட்டத்தில் கல்வியின் அவசியம் குறித்து எடுத்துக் காட்டியதுடன் மாற்றுக் கல்விச் சிந்தனையை முன் வைத்த சமூக விஞ்ஞானியாகவும் எம் முன் நிற்கின்றார்.

அவரது கல்விச் சிந்தனைகளை தொகுத்து நோக்குகின்ற போது பின்வரும் விடயங்களில் அவரது பார்வை அழ வேரூண்டியிருப்பதை காணலாம்.

1. விதேச கல்வி முறையை எதிர்த்து தேச நலன் பேனும் கல்வியை வலியுறுத்தல்

2. சமூகத்திற்கு நன்மையளிக்க கூடிய விடயங்களை வரவேற்றதுடன், தமிழர் சமூகத்தில் காணப்பட்ட பிற்போக்கான அம்சங்களை விமர்சித்தல்.

3. இன, மத, மொழி, சாதி வர்க்கம் கடந்து சகலருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்பதில் அக்கறை.

4. தனியார் மற்றும் சிறப்புரிமை பெற்ற கல்வி நிறுவனங்கள் ஒழிந்து பொதுமக்கள் சார்பான கல்வி நிறுவனங்களை வரவேற்றல்.

5. சகல மட்டங்களிலும் இலவசக் கல்வி என்ற கோரிக்கையை முன் வைத்தல்.

6. சகல மக்களும் தாய்மொழியில் கற்கும் உரிமைப் வரவேற்றதுடன் அதே சமயம் அம்மொழியில் காணப்படுகின்ற குறைபாடுகுள் நீக்கப்பட்டு அவை பரந்த கண்ணோட்டத்துடன் வளர்க்கப்பட வேண்டும் என்ற பிரேரனையை முன் வைத்தல்.

7. மக்கள் நலன் சார்ந்த கல்வியை அறிமுகப்படுத்தியதுடன் அவர்கள் சமூக பொருளாதார அரசியல் அறிவு பெற வேண்டியதன் அவசியம் உணர்த்தி வைத்தல்.

8. கல்வி நிறுவன்களில் கல்விப் பெறுவதற்கான தேசிய சமூக தடைகள் நீக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தல்.

9. கல்வியுடன் உற்பத்தியையும் உழைப்பையும் இணைத்தல்.

10. கல்வியுடன் அறிவியல் தொழில் நுட்பத்தை இணைத்தல்.

11. பெண்கள் கல்வி குறித்து விசேட அக்கறை செலுத்தியதுடன் பல்வேறு வேலைகளிலும் பதவிகளிலும் பணிப்புரியக் கூடிய அளுமையை பெண்களுக்கு வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் பெண் கல்வி குறித்த சிந்தனையை முன்வைத்தல்.

12. பாடசாலைக் கல்விக்கும் ஏனைய சமூக நிறுவனங்களுக்கும் சமூகத்திற்கும் இடையிலான உறவைக் உருவாக்கி வளர்த்தல்.

மேற்குறித்த அடிப்படையிலான அம்சங்கள் யாவும் பாரதியாரின் கல்வி குறித்த சிந்தனைகளில் இடம் பெறுகின்றன என்பதை இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகளை வாசிக்கின்ற போது தெளிவாகின்றது.

பிரித்தானியர் இந்தியாவில் அறிமுகப்படுத்திய கல்வி முறைமையின் முரண்பாடுகளையும் பிரச்சனைகளையும் இயக்கவியல் அடிப்படையில் உணர்ந்து அதன் மாற்றம் குறித்து சிந்திந்த்த பாரதி தமது முன்னயோர்களிலிருந்து காலத்தை மீறி தூர நோக்காடும் சிந்தித்துள்ளார். இப்பின்னணியிலே பாரதி எமக்கு மாற்றுக் கல்விச் சிந்தனையாளராக வழிகாட்டிச் சென்றுள்ளார். தேசிய கல்வி குறித்த அவரது பார்வை தொடர்பில் இந்நூலின் தொகுப்பாசிரியர் கலாநிதி ந. இரவீந்திரன் பின்வருமாறு குறிப்பிடுகினாறர்.

“நமது சுயமழிந்து அன்னியராட்சிக்குத் துதிப்பாட ஏற்றவராக எம்மை மாற்றுவதற்கு ஏற்றதாகத் தாய்மொழிக் கல்வியை மறுத்துத் தமது மொழிமூலக் கற்றலைத் திணித்தனர் ஏகாதியவாததிகள். இத்தகைய சூழலில் தாய்மொழிமூலக் கற்றலை வலியுறுத்துவார் பாரதி “தமிழ்நாட்டில் தேசியக் கல்வியென்பதாக ஒன்று தொடங்கி, அதில் தமிழ் பாஷையை ப்ரதானமாக நாட்டாமல் பெரும்பான்மைக் கல்வி இங்கிலீஷ் மூலமாகவும் தமிழ் ஒருவித உப பாஷையாகவும் ஏற்படுத்தினால் அது தேசியம் என்ற பதத்ததின் பொருளுக்கு முழுதும் விரோமாக முடியுமென்பதில் ஐயமில்லை. தேசபாஸையே ப்ரதானம் என்பது தேசியக் கல்வியின் ஆதாரக் கொள்கை. இதை மறந்துவிடக் கூடாது” என்று பாரதி “தேசியக் கல்வி” எனும் தலைப்பிலான கட்டுரையில் குறிப்பிட்டிருப்பதைக் காணலாம்.”6

தேசிய விடுதலையுடன் இணைந்து ஒவ்வொருவரும் சுதந்திரர்களாய்ப் பரிபூரணத்துவம் எய்தி ஆளுமையுடன் திகழ ஏற்ற கல்வி முறையொன்றை பாரதியின் கல்விச் சிந்தனை வெளிப்படுத்தி நிற்கின்றது. கல்வியில் சரிரப் பயிற்சியால் வலுப்பெறும் திடமான உடலே ஆன்மபலத்துடன் விடுதலை உணர்வை மேலெழசட செய்யும் என பாரதி கருதுகிறார்.”

ஒவ்வொரு மனிதனும் சுய ஆளுமையுடன் சமூக சிந்தனை வளர்ச்சி பெறுவதற்கு ஏற்ற கல்வி முறையை பாரதியார் வலியுறுத்தி சென்றுள்ளார்.ஆனால் இன்றைய உலமயமாதலின் சூழலில் கல்வியை வணிக பண்டமாக்கி ஏகாதிபத்திய நாடுகள் தேசம் கடந்து கொள்ளையடிப்பதற்கு துணை நிற்க கூடிய கூலிப் பட்டாளத்தை அந்தந்த நாடுகளிவேயே உருவாக்குகின்ற பணியினை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து விஜேந்தர் சர்மா ஆண்டுகளில் பின்வரும் கூற்று முக்கியமானதாகும்.

“இன்றைய உலகமயமான பொருளாதாரத்தில், உயர்கல்வி என்பது உலக வர்த்தக நிறுவனத்தின் நிகழ்ச்சி நிரலுக்குள் வந்து விடுகிறது. அதாவது உயர்க்கல்வி என்பது நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் ஒரு அம்சமாக பார்க்கப்படுவதற்குப் பதிலாக வர்த்தகம் செய்வதற்காக ஒரு சேவை அல்லது வர்த்தகம் செய்வதற்கான ஒரு சரக்கு என்ற முறையில் பார்க்கப்படுகிறது. பணக்கார நாடுகளும், பெரும் நிறுவனங்களும் மூன்று திரிலியன் டாலர்களுக்கு மேல் செலாவணியாகம் ஒரு பெரும் தொழிற்சாலையாக உயர்க்கல்வியைக் காணும் புதுபோக்கு தற்போது ஏற்பட்டுள்ளது. அதாவது இந்த பெரும் கல்வித் தொழில் இன்னும் வளர்த்தெடுக்கப்பட்டு அதன் மூலம் இன்னும் ஏராளமான இலாபம் ஈட்டவேண்டும் என்பதுதான் அவர்களது கணக்கு. இந்தத் தொழிற்சாலையில், கல்வி என்பது ஒரு சேவை இந்தக் கல்விக்குப் பெரும் பணி செய்யாத கல்வித்துறை ஊழியர்கள் போன்றவர்கள் மூலதாரமாகக் கொண்டு எக்கச்சக்கமான இலாபம் ஈட்டலாம் என்பதுதான் இவர்கள் திட்டம். இங்கே மாணவர்தான் நுகர்வாளர்கள் ஆசிரியர், கல்வி நிபுணர்கள், கல்விச்சேவையைத் தரும் நிறுவனங்கள் போன்ற அனைத்தும் சேவையை வழங்குபவர்கள் ஆவார்கள். அப்படியானால் அர்த்தம் என்ன? கல்வி கற்பிப்பது கல்வி கற்பது போன்றவை இனியும் ஒரு தேசத்தை உருவாக்கும் புனிதச் செயல் என்று கொள்ள முடியாது அது வெறும் இலாபத்தை குவிக்கும் ஒரு வியாபாரம்தான்.”7

உயர்க் கல்விக் குறித்து கூறப்பட்ட இக்கருத்தானது சகல மட்டங்களிலிலான கல்விக்கும் பொருத்தமானதாகஅமைந்துள்ளது. இத்தகைய கொள்ளையடித்தடித்லின் தர்க்க ரீதியான விளைவே இலவசக் கல்விக்கு எதிரான செயற்றிட்டமாகும்.

யுனெஸ்கோவின் உலகார்ந்த மேற்பார்வை அறிக்கையின் படி, 2015ம் வருடம் கூட இந்த மோசமாக திட்டமிடப்பட்ட சர்வ சீக்ஷா அபியன் திட்டம் தனது இலக்கை அடையப் போவதில்லை. சர்வசீக்ஷா திட்டமும் முறிந்து விழும் போது இன்னும் மோசமான தரமுள்ள பல தனியார் கல்விக் கடைகள் எங்கும் புற்றீசலைப் போல் புறப்பட துவங்கி விடும். இதுதான் எப்படி நவீன தாராளவாத நிரல் பள்ளிக் கல்வியை இந்தியாவில் சரக்குமயமாக்கிஅதை வளர்த்து எடுத்தது என்பதின் சுரக்கமான கதையாகும். இந்தப் புதிய பொருளாதார கொள்கை அமுல் செய்வதற்கு முன்னர். இந்தியா அரசு உதவி பெற்ற வலுவான அகன்ற பள்ளி அமைப்புக்காக பெயர் பெற்ற நாடகத் திகழ்ந்தது.

அரசு பள்ளிகளை மூடி விட்டு அதன் முக்கியமான சொத்துகளை குறிப்பாக நகரப்புறங்களில் நல்ல விலைக்கு விற்பது என்பது இப்போது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இயல்நிகழ்வாக நடந்து கொண்டுள்ளது. இது அரசு பள்ளிகளை நலிவுறச் செய்து, அதைக் கல்விகட்டணம் வசூலிக்கும் தனியார் கல்வியாக மாற்றியமைக்கும் ஒரு திட்டமிட்ட அயோக்கியத்தனமான செயலாகும் இது. இதைத்தான் வலிமை வாய்ந்த சர்வதேசிய நிதி நிறுவனங்களும் நிதி ஏஜன்சிகளும் தலைமை தாங்கி நடத்தும் உலகார்ந்த சந்தை சக்திகள் செய்யும் சதிச் செயலாகும்.8

இவ்வகையில் கல்வியில் பொதுமக்கள் சார்பு என்பது நாளுக்கு நாள் அபகரிக்கப்பட்டு வருகின்றது. உலகமயமாதல் சூழலின் பின்னணியில் மக்களின் சிந்தனைகள் சிதைக்கப்படகின்றன. சிந்தித்தல் ஆபத்தானது என்றவகையில் அவற்றுக்கு எதிரான கருத்துக்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றன.

உலகமயமாதலுக்குச் சிந்திக்கும் மக்கள் தேவையில்லை. சிந்திக்கும் மக்கள் அதைப் பொருத்த வரைக்கும் ஆபத்தானவர்கள். அவர்கள் தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் பல கேள்விகளை கேட்பார்கள். அவர்கள் கூடவே பல புதிய வேறுபட்ட பாதைகளைத் தேர்தெடுத்து முன்வைப்பார்கள். அவர்கள் விமர்சன சிந்தனையைத் தருமளவுக்கு தங்களைப் பயிற்றுவித்துக் கொண்டதுதான் மிகவும் மோசமான அம்சமாகும்.

உலகமயமாதல் அது அறிவு என்று எதை நினைத்துக் கொண்டிருக்கிறதோ, அந்த அறிவையும் தலைக்கும் மனதுக்குமான உணர்வுகளுக்குப் பதில் விரல்நுனி (கணினி ரீதியான) உணர்வுகளையும் தான் மேம்படுத்துகிறது. சிந்தனை என்பது சிந்திக்கும் கருவி) கணினி விசைப்பலகையில் விரல்நுனி அழுத்தத்தின் மூலம் செய்யப்படுகிறது. நமது மூளையும் மனதும் சிந்திப்பதில் இருந்து ஓய்வு கொடுத்து உட்கார வைக்கப்படுகிறது. இது புதிய ஆர்விலியன் அறிவுச் சமூகம் ஆகும். இங்கே சமூகம் அறிவை தற்போதைய சமூக யதார்த்தத்துடனும் பொருளாதார அடிப்படையுடனும் பொருத்திப் பார்த்து, அதைப் படைப்பாக்கமாகவே, அல்லது மாற்றமாகவோ செய்யாமல், அப்படியே ஏற்றுக் கொள்கிறது.9

இந்நிலையில் இந்த மன்னனை நேசிக்காத விதேச பக்தர்களை உருவாக்குகின்ற பணியினை இக்கல்வி முறை சிறப்பாகவே செய்து வருகின்றது. அத்துடன் அறிவியல் பூர்வமான மக்களின் சிந்தனை சிதைத்து அவர்களை விதேச பற்றாளர்களாகவும் , கறுப்பர் வெள்ளையராக வேடமிட்டு பின் ஏற்படப்போகின்ற தோல்வியால் மனமுறிவுக்குட்பட்ட மனநோயாளராக மாறி செல்கின்ற பண்பை இன்றைய கல்வி முறையில் காணக் கூடியதாக உள்ளது.

இவ்வாறான சூழலில் இதிலிருந்து விடுதலை பெறுவது எவ்வாறு என்பதே நம்முன் உள்ள வினா. மாற்றுப் பாடத்திட்டம், மாற்றுக் கற்பித்தல் முறை, மாற்றுப் பாடசாலை போன்ற சிந்தனைகள் தத்துவார்த்த ரீதியாக முன்னெடுக்கப்படுகின்றன. இத்தகைய மானுட அணியில் கால்பதித்து இது தொடர்பிலான அதிகமான நூல்களை வெளியிட்டு வரும் இந்திய மாணவச் சங்கம் அத்தகைய தளத்தில் தடம் பதித்து வருகின்ற கலாநிதி ந.இரவீந்திரனின் துனையுடன் பாரதியாரின் கல்விக் குறித்த கட்டுரைகளை தொகுத்து கல்வி சிந்தனைகள் என்ற நூலை வெளியிட்டுள்ளமை சிறப்பானதாகும்.

பாரதியாரின் எழுத்துக்களை பதிப்பிக்கின்ற போது நாம் ஒரு விடயத்தினை நினைவில் கொள்ளல் அவசியமாகும். பாரதியாரின் படைப்புக்களில் பெரும்பாலானவை அவர் இறந்த பின்னரே வெளியிடப்பட்டன. அதனை பாரதியார் நேரடியாக நோக்கி வெளியிடும் வாய்ப்பு இல்லாதிருக்கின்றது. அதற்கான பல முயற்சிகள் மேற்கொண்ட போதும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக அவைக் கைக்கூடவில்லை.”ஸ்வதேச கீதம்” என்ற நூல் 1908 இல் வெளிவந்தது. இதன் இரண்டாம் பாகம் 1909 இல் ஜன்ம பூமி என்ற தலைப்பில் வெளிவந்தது. அத்துடன் பாரதியார் வாழ்ந்த காலத்தில் வெளிவந்த பல படைப்புகளும் அவரால் மேற்பார்வை செய்ய முடியாத நிலையே காணப்பட்டது. அன்றைய அரசியல் சூழலிலும் இதற்கொரு முக்கிய காரணமாகும்.

இவ்விடத்தில் பாரதியாரின் கல்வி கட்டுரைகள் தவிர்ந்த ஏனைய சமூகம் தொடர்பான கட்டுரைகளிலும் கல்வி குறித்து ஆரோக்கியமான கருத்துக்களை கூறியுள்ளார். கல்வி குறித்த ஆய்வுகளில் அவையும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதுடன் காலக்கிரமத்தில் இவை அனைத்தையும் தொகுத்து அடக்க தொகுப்பொன்று வெளிவர வேண்டியது காலத்தின் தேவையாகும்.

ஆசிரியர் சங்கங்கள், சமூகமாற்ற இயக்கங்கள், கலாசார அமைப்புகள் இது தொடர்பில் தமது நடவடிக்கைகளை திட்டமிட்ட வகையில் முன்னெடுத்தல் அவசியமாகும். கல்வி இயக்கம், பெண்கல்வி இயக்கம், தொடர்க்கல்வி நிகழ்ச்சித்திட்டம, தொழிற் கல்வி திட்டம் போன்ற விடயங்களை கட்டியெழுப்புவதற்கான பிரமாண்டமான திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். இவ்வகையில் சமூகமாற்றத்திற்கான மாற்றுக் கல்விச் சிந்தனைகளை கட்டியெழுப்புகின்ற போது பாரதியாரின் கல்வி சிந்தனைகள் அவற்றுக்கு ஆதர்சனமாக அமைந்துள்ளன எனக் கூறின் மிகையாகாது. அத்தகைய செயற்பாடுகளுக்கு இத்தொகுப்பு முயற்சி உற்சாகத்தினையும் நம்பிக்கையையும் தருகின்றது. வணிகநோக்கில் பாரதி நூல்களை வௌவேறு வகையிலும் அளவிலும் வெளியிட்டுக கொண்டிருபதனை விடுத்து விஞ்ஞானப்பூர்வமான அறிவியல் நூல்களை, கட்டுரைத் தொகுப்புகளை கால ஒழுங்கின் அடிப்படையில் பதிப்பது பாரதி அன்பர்களின் கடமையாகும்.

காலத்தின் தேவையையும் கலாநிதி ந. இரவீந்திரனின் தகுதியையும் நன்கறிந்த இந்திய மாணவர் சங்கம் புக்ஸ் ஃபார் வில்ரன் வெளியீட்டாளர்களுடன் இணைந்து அழகான முறையில் நூலை வெளியிட்டுயிருக்கின்றனர். விலை 95 ரூ (இந்திய விலை)

அடிக்குறிப்புகள்:

1. மார்க்ஸ கா, ஏங்கலஸ். பி (1969) தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்கள், மாஸ்கோ, பக். 159.

2. தாம்சன் ஜார்ஜ் (1990) மனித சமூக சாரம், சென்னை புக்ஹஸ்(பி)லிட், சென்னை. பக்.13.

3. மார்க்ஸ கா, ஏங்கலஸ். பி (1963) இந்தியாவை பற்றி, நியூசெஞ்சரி புக் ஹவுஸ், சென்னை, ப.51.

4. ட்ரொட்ஸ்கி ஜெ. (2000) கட்டுரையாளர், “மலையக மக்களின் உரிமைப்

போராட்டங்கள்” மலையக பரிசுக் கட்டுரைகள், இர.சிவலிங்கம் நினைவுக் குழு, கொழும்பு.பக். 17.

5. Nadeson S. (1993) A History of Upcountry Tamil People, Nandalala Publication, Hatton. p. 27.

6. இரவீந்திரன்.ந (தொகுப்பாசிரியர்), (2007), கல்விச் சிந்தனைகள், இந்திய மாணவர் சங்கத்துடன் இணைந்து, புக்ஸ் ஃபார் சில்ரன், சென்னை, பக்.7.

7. விஜேந்தர் சர்மா (கட்டுரையாசிரியர்), (2008), இன்றைய இந்தியக் கல்வி- சவால்களும் தீர்வுகளும், இந்திய மாணவர் சங்கம் இணைந்து சவுத் விஷன், சென்னை, ப. 164,165.

8. அனில் சடஆகாபால், (கட்டுரையாசிரியர்), அதே நூல், பக். 113,114.

9. அதே நூல், பக். 106.

- லெனின் மதிவானம்இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Pin It