தமிழ்மொழி வழியாக கல்வியை வழங்கும்போது கிராமப்புற ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்கள் பாடங்களை எளிதில் புரிந்து கொள்ளும் வாய்ப்புகளைப் பெறுகிறார்கள். ஆங்கில வழிக் கல்வி - இந்த மாணவர்களுக்கு பெரும் சுமையாகவே உள்ளது என்பதில் இரு கருத்துகளுக்கு இடமில்லை. ஆனாலும், தமிழ் வழியில் கல்வி பெறும் மாணவர் களுக்கு எதிர்கால வாழ்க்கைக்கு எந்த உறுதியும் இல்லை. எனவே ஆங்கில வழிக் கல்வியை நோக்கி அவர்கள் விருப்பமின்றி தள்ளப் படுகிறார்கள்.
இந்த நிலையில் தமிழ் வழிக் கல்வி பயின்ற மாணவர்களுக்கு மருத்துவம், பொறி யியல் போன்ற தொழில் பட்டப் படிப்புகளில் தமிழ் வழிக் கல்வியில் தேர்ச்சிப் பெறும் விகிதாச்சாரத்துக்கேற்ப இடங்களை ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வருகிறோம். இப் போது தமிழக அரசு, தமிழ் வழிக் கல்வியில் பயின்ற மாணவர் களுக்கு அரசு வேலை வாய்ப்பு களில் 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை சட்டசபை கூட்டத் தொடரின் இறுதி நாளில் நிறைவேற்றியுள்ளது. (இதற்கான அவசர சட்டம் ஒன்றும் கடந்த செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டது)
தமிழக அரசின் இந்தச் சட்டத்தை பாராட்டி வரவேற்கிறோம். கிராமப் புற தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப் பட்ட இளைஞர்களுக்கு வாழ்வில் ஒளிவீசும் சட்டமாகவே இதை கருதுகிறோம். அதே நேரத்தில், சட்டம் உண்மையாக அமுல் படுத்தப்படும்போதுதான், அதன் நோக்கம் நிறைவேறும்.
அருந்ததியினர் உள் இட ஒதுக்கீடு சட்டம் ஒன்றை தமிழக அரசு கொண்டு வந்தது. அந்தச் சட்டம் ஆசிரியர் நியமனங்களில் அமுல்படுத்தப்படுவதில்லை. பொதுப் போட்டியில் இடம் பெறும் தகுதியுள்ள அருந்ததி மாணவர்கள், உள் ஒதுக்கீடு கோட்டாவின் கீழேயே சேர்க்கப் படுகிறார்கள் என்றெல்லாம் புகார்கள் வருகின்றன.
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டம், உச்சநீதி மன்றத்தில் முடங்கிப் போன நிலையில், சட்டம் எழுந்து நட மாடுவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வில்லை. சட்டம் நிறைவேற்றி யதோடு கடமை முடிந்து விட்டதாகவே கருதுகிறார்கள்.
இதேபோல் சமூக சீர்திருத்தக் குழு என்ற குழுவை சீரிய பெரியாரியல் சிந்தனையாளர் டாக்டர் நன்னன் தலைமையில் தமிழக அரசு அமைத்தது. அந்தக் குழு எந்த வேலையும் செய்து விடாமல், அரசு எச்சரிக்கையாகக் கண்காணித்துக் கொண்டிருப்பதாகவே தெரிகிறது. அதே போன்ற நிலை, இந்த சட்டத்துக் கும் வந்துவிடக் கூடாது என்பதே நமது கவலை.