சு.ஸ்ரீகுமரனின் ‘செல்லையா தாத்தாவும் செல்லக் குழந்தைகளும்’ என்ற குழந்தைகளுக்கான கதைகள் தொகுப்பை வாசிக்க நேர்ந்தது. இந்தத்தொகுப்பை பார்க்கம்போதும் வாசிக்கும்போதும் மிகவும் ஆறுதலும் மகிழ்ச்சியும் மேலிடுகிறது. உன்மையில் மிகவும் பெறுமதியான பணியைச் செய்திருக்கிறார் ஸ்ரீகுமரன். குறைவான விலையில் குழந்தைகள் வாங்குவதற்கேற்றபடி சாதாரணமான வடிவமைப்புடன் வந்திருக்கிற இந்தப் புத்தகம் குழந்தைகளின் சொற்களையும் கேள்விகளையும் கொண்டிருக்கிறது. குழந்தைகள் காண விரும்புகிற அழகான வெளியையும் பேச விரும்புகிற நெருக்கமான உரையாடல்களையும் பேசுகிறது இந்தப் புத்தகம்.

இப்பொழுது குழந்தைகளின் உலகம் சீரழிக்கப்படுகிறது. குழந்தைகளுக்குரிய இறப்பர் பொம்மைகள் மட்டும் கடைகளில் தொங்குகின்றன. அவற்றையும் குழந்தைகள் வாங்குவதில்லை. விரும்புவதில்லை. குழந்தைகள் சொற்களற்று Srikumaranதவிக்கின்றனர். உரையாடலற்று அறைகள் நிரம்பிய வீட்டின் மூலைகளில் ஒதுங்கியிருக்கின்றனர். அவர்களின் எந்தக் கதைகளும் கேட்கப்படுவதில்லை. அவர்களுக்கு எந்த கதை சொல்லிகளும் இல்லை. எங்கள் பாட்டிகள் இப்பொழுது குழந்தைகளுக்கு கதைகள் சொல்லுவதில்லை. பசுமையான கதைகளையும் நெருக்கமான சொற்களையும் அவர்கள் கேட்பதில்லை. ஓடித்திரிய வேண்டிய இடங்களும் பார்த்து ரசிக்க வேண்டிய வெளிகளும் இன்றி ஒடுங்கியிருக்கின்றனர். யுத்தமும் போட்டியான பொருளாதார வளர்ச்சியும் தொழிநுட்பமும் எங்கள் விரைவான காலமும் குழந்தைகளை பாதிக்கிறது. இன்றைய உலகம் குழந்தைகளின் படைப்புக்களத்தில் கவனம் செலுத்தாமலிருக்கிறது.

90களில் கவிதைகளை எழுதிய இயல்வாணன் தன்னை ஒரு குழந்தைகளின் கதை சொல்லியாக்கியபடி இந்தக் கதைகளை யாழ்ப்பாணத்தில் இருந்து வருகிற உதயன் பத்திரிகையில் சிறுவர் பகுதியில் ‘பாபு அண்ணா’ என்ற பெயரில் தொடர்ந்து எழுதியிருக்கிறார். சிறுவர் கதை என்று வெறும் பார்வையுடன் அவற்றை ஒதுக்கி விடுகிற பெருங்கதைகளின் ஆதிக்க சூழலில் குழந்தைகளுடன் உரையாடிக்கொண்டிருக்கிறார் ஸ்ரீகுமரன். ஒரு குழந்தையாக ஒட்டுமொத்த குழந்தைகளின் மனம் அறிந்து அவர்களுடன் கதையாடிக்கொண்டிருக்கிறார். இவரது இந்த எழுத்துப்பணியை மிகவும் பெரியதொரு பணியாக நான் கருதுகிறேன். குழந்தைகளின் கதை சொல்லிகள் வளர்த்துகொண்டிருக்கிற சூழ்நிலையில் குழந்தைகள் கதைசொல்லிகளை இழந்து விட்டிருக்கிற நிலையில் தன் வளர் நிலையில் இருந்து குழந்தை பருவம் நோக்கி சென்று கதை சொல்லிக்கொண்டிருக்கிறார்.

குழந்தைகளின் மனங்களில் இயல்பாக வெளிப்படுகின்ற கேள்விகளையும் அவர்களின் சொற்களையும் கொண்டிருக்கிறது இந்தக் கதைகள். 'செல்லையா தாத்தா' என்ற முதிர்ந்தவருக்கும் சாந்தி, பிரியன், அகிலங்கன், இனியன் போன்ற குழந்தைகளுக்கிடையிலும் தினந்தோறும் நடைபெறுகின்ற உரையாடல்களாக பன்னிரண்டு கதைகள் வருகின்றன. குழந்தைகள் சூழலைப்பற்றியும் வாழ்வைப் பற்றியும் கேட்கின்றனர். அறிவியலை அறிவதற்கு ஆர்வமாக இருக்கின்றனர். நமது பூர்வீகத்தையும் பண்பாடுகளையும் பிரதேசத்தின் அடையாளங்களையும் வரலாற்றையும் செல்லையா தாத்தாவிடம் இருந்து அறிந்து கொள்ளுகிறார்கள்.

குழந்தைகளுக்கும் தாத்தாவுக்கும் இடையில் நிகழ்கிற இந்த உரையாடல் மரபுக்கும் நவீனத்திற்கும் இடையில் இடம்பெறுகிறது. அது பல விடயங்களை காவி வருகிறது. உரையாடல்கள் குழந்தைகளின் உலகம் பற்றிய கேள்விகளாக விரிய கதை நிகழ்கிற புளியமரத்தடி அழகான சூழலானதும் ஆரோக்கியமானதுமான தளமுமான கதை நிகழ் களம் வருகிறது. இயற்கை பற்றியும், சூழல் பற்றியும், மாற்றங்கள் பற்றியும் குழந்தைகள் எப்பொழுதும் கதைகள் எங்கும் துருவிக்கொண்டிருக்கிறார்கள். முழுக் கதைகளும் குழந்தைகளின் விசாரணையாகவும் தாத்தாவுடனான விவாதங்களுமாக இருக்கின்றன. குழந்தைகள் மேலும் மேலும் தாத்தாவிடம் கேள்விகளை முன் வைக்கின்றார்கள்.

குழந்தைகள் தாமாகவே செல்லையா தாத்தாவை சூழ்ந்து மிகவும் ஆர்வமாக அவரிடம் உரையாடலை முன்வைப்பதும் அவர் குழந்தைகளுடன் மிகவும் நெருக்கமாக பழகிக்கொண்டிருப்பவையும் மிகவும் அமைதியான இடமும் தேவைப்படுகிற குழந்தைகளின் உலமாக கதையாசிரியரால் முன் வைக்கப்படுகிறது.

கதையாடலின் முறமை, மொழி என்பன குழந்தைகளுக்கு ஏற்ற வித்தில் இருப்பது முக்கிமான கனதியாக இருக்கிறது. 'செல்லையா தாத்தா' என்ற பாத்திரம் மற்றும் குழந்தைகளது பாத்திரங்கள் என்பன தனித்த அடையாளமுடயவை. உரையாடல்களின் முடிவில் தாத்தாவின் அனுபவங்கள் அறிந்தவைகள் சிறிய கதைகளாக வருகின்றன. குழந்தைகள் அறிந்து கொள்ள வேண்டியவைகளை 'குழந்தைக் கதைகள்' என்ற வடிவம் வாயிலாக சொல்லுகிறார் கதையாசிரியர். விஞ்ஞான பூர்வமாக மனிதன் பற்றிய வேறுபாடற்ற சமத்துவத்தினையும் குழந்தைகள் அறிந்து கொள்கிறார்கள். செல்லையா தாத்தாவின் அனுபவங்கள் கதைகள் வாயிலாக சேகரிக்கப்பட்டுள்ளன.

இன்னும் நிறைய கேள்விகளுடன் இன்னும் பல குழந்தைகளையும் பல கதைசொல்லும் முத்தவர்களையும் ஸ்ரீகுமரனின் கதைகளில் எதிர்பார்க்கலாம். ஒரு ஆசிரியராக இருந்து குழந்தைகளுடன் அதிகமாக வாழ்ந்து அவர்களை வளர்த்துக்கொண்டிருக்கிற அவர்களின் மனங்களை படித்துக்கொண்டிருக்கிற ஸ்ரீகுமரன் மிகவும் ஆழமாக குழந்தைகளை புரிந்து வைத்திருக்கிறார். குழந்தைகளுக்கான சொற்களை எழுதுவதற்கு ஒரு குழந்தையாக இருக்க வேண்டியிருக்கிறது.

புத்தகம்: செல்லையா தாத்தாவும் செல்லக்குழந்தைகளும்
ஆசிரியர்: சு.ஸ்ரீகுமரன்
வெளியீடு :சுமூக விஞ்ஞான மன்றம் பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தரப் பாடசாலை
முதற்பதிப்பு: ஆடி2008
தொடர்புகளுக்கு: பத்மபதி, முருகேசபண்டிதர் வீதி, சுன்னாகம் தெற்கு, சுன்னாகம்.

- தீபச்செல்வன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It