ராமகிருஷ்ண பட்டாச்சார்யா உடன்  ரிச்சர்ட் மார்ஷல் நேர்காணல்.

தமிழில் : மகேஷ் இராமநாதன்

studiesofcarvaka 350இந்திய தத்துவச் சிந்தனைகளில் ஆய்வு செய்துவரும் தத்துவவாதிகளிடம் நேர்காணல்கள் செய்வது என்கிற வரிசையில் 3:am என்ற இதழ் ராமகிருஷ்ண பட்டாச்சார்யாவை (பாவ்லோவ் நிறுவனம், கொல்கத்தா, மேற்கு வங்காளம்) கடந்த ஆகஸ்ட் 2018ல் நேர்காணல் செய்துள்ளது.

ராமகிருஷ்ண பட்டாச்சார்யா 28 புத்தகங்கள் மற்றும் 175க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளின் ஆசிரியர். அவர் (இந்திய மற்றும் ஐரோப்பிய) இலக்கியம், (வங்காள மற்றும் சமஸ்கிருத) பனுவல் விமர்சனம், கருத்துகளின் வரலாறு, இந்திய அறிவியல் வரலாறு, நவீன இந்திய வரலாறு, தத்துவம் (குறிப்பாக சார்வாக/உலகாயத தரிசனம், பொருள்முதல்வாதம் மற்றும் பகுத்தறிவு) ஆகியவை பற்றி ஆய்வு இதழ்களிலும், பிற இதழ்களிலும் கட்டுரைகளும் மதிப்புரைகளும் எழுதியுள்ளார்.

இங்கே இந்தியாவில் பொருள்முதல்வாதம் எப்போது தொடங்கியது, சார்வாகத்திற்கு முந்தைய இந்தியப் பொருள்முதல்வாதிகளின் கருத்துகள், ஜபாலி, இந்தியாவில் தர்க்கத்தின் வளர்ச்சி, மாயாவாதம், அஜிதகேசகம்பளி, பிரஹஸ்பதி, சார்வாக சூத்திரத்திற்கும் பௌத்தர்களுக்குமான உறவு, உண்மையில் மக்களை எதை ஏற்றுக் கொள்ள சார்வாகர்கள் சொன்னார்கள், சுபாவத்திற்கும் சீன தாவோ கொள்கைக்கும் இடையிலான தொடர்பு, இக்காலத்தில் சார்வாக/உலகாயத பாரம்பரியம் தேய்ந்தழியவும் பௌத்தம் பிரபலமடையவும் காரணம் என்ன முதலானவை குறித்து விவாதிக்கிறார்.

3:am: எது உங்களைத் தத்துவவாதியாக உருவாக்கியது?

நான் என்னை தத்துவவாதி என அழைப்பதை விரும்பவில்லை. நான், குறிப்பாக இந்தியாவிலும் கிரேக்கத்திலும் உருவான பொருள்முதல்வாத தத்துவத்தின், வாழ்நாள் முழுதுமான தத்துவ மாணவனே. இதுவரை கிடைத்திருக்கக்கூடிய பெரும்பாலான சார்வாகம், உலகாயதம் பற்றிய பரபக்க மூலாதாரங்களைப் படித்தும் கூட, அவை எனக்கு திருப்தி தரவில்லை.

1980களில் நான் நேரடி மூலாதாரங்களைத் தேடத் தொடங்கினேன், தெளிவான புரிதலை வந்தடைய மேலும் அதிகமான வேலை செய்ய வேண்டியுள்ளது என்பதைப் புரிந்து கொண்டேன். நான் முதலில் சார்வாகம்/உலகாயதம் பற்றி என் தாய்மொழியான வங்காளத்தில் கட்டுரைகள் எழுதி வெளியிட்டேன், பிறகு என்னுடைய சில உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நன்பர்களின் ஊக்கத்தால், சர்வதேச இதழ்களில் கட்டுரைகளை வெளியிட்டேன்.

இப்படியாக நான் இயற்கையான ஆர்வத்தினாலோ அல்லது பயிற்சியினாலோ தத்துவவாதியாகாமலே, நான் இந்திய பொருள்முதல்வாதத்தில் முக்கியமானவனாக மாறினேன். மேலும் என்னுடைய உலகப்பார்வையான, மார்க்சிய-லெனினியமும், பொருள்முதல்வாத தத்துவ ஆய்வுகளின் பக்கம் என்னுடைய கவனத்தைத் திருப்பியது. இதுவே இப்பொழுதிற்கு நான் சொல்லக்கூடியது. உங்களைப் போன்ற சிலர் மிகுந்த தாராள மனதோடு என்னைத் தத்துவவாதி என்று அழைப்பீர்களேயானால், அப்படிச் செய்வது உங்களுடைய தயாளகுணம். 

நீங்கள் இந்தியத் தத்துவ மரபில் உள்ள பொருள்முதல்வாதம் குறித்து புலமை மிக்கவர். இந்தியாவில் பொருள்முதல்வாத மரபு எப்பொழுது தொடங்கியது? சிலர் குறிப்பிடுவதுபோல அது மன்னர்களால் உருவாக்கப்பட்டதா?

என்னுடைய Studies on the Carvaka/Lokayata (Florence 2009, London and New Delhi 2011) நூலில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளதைப் போல பொருள் முதல்வாதத்தின் (தொல் பொருள்முதல்வாதம் (proto-materialism) எனக் குறிப்பிடுவதே சரியானது) தோற்றம் என்பது அரசரீதியானது என்பதை விட வெகுசனரீதியானதே. தீக நிகாயத்தில் பயாசி இளவரசராகவோ ஆளுநராகவோ குறிப்பிடப்படுகிறார். அஜிதகேசகம்பளி கடும் துறவறத்தை மேற்கொண்டவர். அறுபத்தியிரண்டு வேத மறுப்பு கொள்கைகளின் முக்கியமான ஆறு கொள்கையாளர்கள் அரசவம்சத்தை சேர்ந்தவர்கள் இல்லை என்பதைப் பௌத்த மூலங்கள் தெளிவுபடுத்துகின்றன.

அவர்கள் இடம் விட்டு இடம் பெயர்ந்து தங்கள் சீடர்கள் பின்தொடர பயணித்துக் கொண்டே இருந்தவர்கள். தீக நிகாயத்தில் வரும் “சாமஞ்ஞபல சுத்தம்” (சிரமணநெறியின் பயன் குறித்த பொழிவு) தொல் பொருள்முதல்வாதத்தின் வெகுசன தோற்றுவாய் குறித்து குறிப்பிடுகிறது. முந்தைய அறிஞர்கள் இந்த அம்சங்களையெல்லாம் கணக்கிலெடுக்காமல் பயாசியை மட்டுமே குறிப்பிடுகிறார்கள். மரணத்திற்கு பிந்தைய வாழ்க்கை / மறுபிறப்பு மறுதலிப்பில் பயாசிக்கும் அஜிதகேசகம்பளிக்கும் இடையே ஒப்புமைகள் உள்ளன எனக் குறிப்பிடலாம், ஆனால் பயாசி தொட்டுக்கூட பார்க்காத பல அம்சங்களை அஜிதரின் கூற்று மிக விரிவாகப் பேசுகிறது.

இந்தியாவில் சார்வாகத்திற்கு முன் பொருள்முதல்வாதிகள் என எவரேனும் இருந்துள்ளனரா ?

இதற்குப் பதில் ஆம் என்பதே. இது குறித்து என்னுடைய கட்டுரையான ‘இந்தியாவில் பொருள்முதல்வாதத்தின் வளர்ச்சி: சார்வாகர்களுக்கு முன்பும் சார்வாகர்களும்’ (‘Development of Materialism in India: the Pre-Cārvākas and the Cārvākas’, Esercizi Filosofici 8, 2013, pp. 1-12. (2013) இது குறித்துதான் ஆராய்கிறது. தென் இந்தியாவில் பொது யுகத்தின் தொடக்கத்தில், குறைந்தது பூதவாதம், உலகாயதம் ஆகிய இரண்டு பொருள்முதல்வாதப் பள்ளிகள் இருந்துள்ளன என்பதை நிரூபிக்கப் போதுமான ஆதாரங்களைக் குறிப்பிட்டுள்ளேன். சமீபத்தில் நான் பழைய தமிழ் காப்பியமான நீலகேசி குறித்து அறிந்தேன், அது பூதவாதத்தை மட்டுமே தனியாகப் பேசுகிறது. இப்படியாகத் தென் இந்தியாவில் சார்வாகர்கள் வருவதற்கு முன்பே பௌத்தர்களும் ஜைனர்களும் (கி.பி. எட்டாம் நூற்றாண்டு அல்லது அதை ஒட்டி) பொருள்முதல்வாதத்தைத் தங்களின் கூட்டாளிகளாக அல்லாமல் எதிரிகளாகக் கருதி வந்திருக்கிறார்கள்.

நீங்கள் ஜபாலியை தொல் பொருள்முதல்வாதி எனவும், அவர் புத்தரைவிட வயதில் மூத்த, ஆனால் புத்தருடைய சமகாலத்தவரான அஜிதகேசகம்பளியைப் பின்பற்றியவர் எனவும் அழைக்கிறீர்கள். ஏன் அவர்கள் மறுஉலகம் உண்டு என்பதை மறுத்தார்கள், இறந்த மூதாதையருக்கு செய்யப்படும் சடங்குகள் பயனற்றவை என ஏன் எதிர்த்தார்கள்? அவர்கள் வேண்டுமென்றேதான் மரபான பழக்கங்களை எதிர்த்தார்களா? அப்படியானால் அவர்களுடைய நோக்கம்தான் என்ன?

சொர்க்கம், நரகம் என்பவற்றை கண்ணால் கண்ட சாட்சிகள் இல்லை என்பதால் தொல் பொருள்முதல்வாதிகளான ஜபாலி முதலானவர்கள் மறுஉலகத்தை மறுத்தனர். இந்த தொல் பொருள்முதல்வாதிகள் அறிதலுக்கான ஒரே கருவியாக, கண்ணால் காண்பதை மட்டுமே நம்புபவர்கள், அதில் அவர்கள் உறுதியாக ஊன்றி நின்றார்கள், அதனால்தான் அவர்கள் மறு உலகத்தையும், இறந்த மூதாதையர்களுக்கு செய்யும் சடங்குகளின் பயனையும் மறுத்தார்கள். தம் இருப்பை மட்டுமே ஏற்றுக்கொண்ட அவர்களிடம், நிலைபேறு சார்ந்த, அறம் சார்ந்த கூற்றுகளை மறுத்தொதுக்குவதற்கு ஒழுங்கமைவான அறிவுத் தோற்றக் கொள்ளை இல்லை. ஆகவே அவர்கள் முறையான [தத்துவார்த்த] பொருள்முதல்வாதிகள் அல்ல, தொல் பொருள்முதல்வாதிகள். ஆயினும் பண்பட்ட எதார்த்தவாதிகளான அவர்கள் பார்ப்பனியம் ஊட்டி வளர்த்த மரபான நம்பிக்கைகளுடன் முரண்பட்டார்கள். இந்த அர்த்தமற்ற சடங்குகளைக் கடைபிடிக்கச் சொன்ன தர்மசாத்திரக்காரர்களும், அச்சடங்குகளைத் திணித்த மதகுருமார்களும் அவர்களின் முக்கிய இலக்கானதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை.

தர்க்க வளர்ச்சியில் முக்கியமானதாக விளங்குகிற, புத்தர் காலத்தைச் சேர்ந்த முந்தைய தொல்பொருள்வாதியான அரசர்/ஆளுநர் பயாசியின் வாதம் குறித்து எழுதியுள்ளீர்கள். இது எவ்வாறு தர்க்கத்தின் வளர்ச்சிக்கு உதவியது? அவ்வாதம் தொல் பொருள்முதல்வாதியுடையது என்றால், எவ்வாறு மறு உலகத்தின் இருப்பை அவ்வாதம் உறுதிசெய்கிறது?

இல்லை. இந்தியாவில் தர்க்கத்தின் வளர்ச்சிக்கு நேரடியாகப் பயாசி பங்களிப்பு செய்தவரில்லை. அழியாத ஆத்மா முதலானவற்றின் இருப்பு குறித்த அவருடைய மறுப்புக்கு ஆதாரம் உபமானம் அல்லது அனுமானம் என்பதைத் தவிர வேறு எதையும் குறிப்பிட முடியாது. அரசர்/ஆளுநர் பயாசி பற்றிய சுத்தம், நோக்கி அவர் அறிதலின் இரண்டாவது உபகரணமான அனுமானத்தை முன்னேறியிருந்தார் எனத் தெரிவிக்கிறது. இவ்வாறு தர்க்கத்தின் வளர்ச்சிக்கு தொல் பொருள்முதல்வாதிகள் மறைமுகமாக காரணமாவார்கள். கட உபநிடதத்தில் வரும் எமனும், மறு உலகத்தின் இருப்பிற்கு சப்த பிரமானத்தைத் தவிர வேறு எந்த ஆதாரத்தையும் தரவில்லை. (பாதாள உலகத்தின் ஆட்சியாளனாக அவன்தான் நரகத்தைப் பற்றி பேச அதிகப் பொருத்தமானவன்) அவனே ஆப்தன், அறிவுடையவன் ஆகிறான். இவ்வாறே உபமானம் அல்லது அனுமானம், சப்த பிரமாணம் ஆகிய அறிதலுக்கான இரு உபகரணங்கள் பொருள்முதல்வாதத்தை மறுப்பதற்காகவே முன்வைக்கவும் பயன்படுத்தவும் படுகின்றன.

பயாசியோ அல்லது எந்தவொரு தொல் பொருள்முதல்வாதிகளோ மறு உலகத்தின் இருப்பை எப்போதும் ஆதரிக்கவில்லை; மாறாக அதனை மிகக் கடுமையாக மறுத்திருக்கிறார்கள். பொருள்முதல்வாதிகளாக இல்லாதவர்களே மறு உலகத்தின் இருப்பைக் காட்ட உபமானம், சப்த பிரமாணம் ஆகியவற்றைப் பயன்படுத்தினார்கள்.

பொருள்முதல்வாதத்திற்கும் சூனியவாதத்திற்கும் ஏதேனும் தொடர்புண்டா, இருமைவாத அமைப்பில்தான் எண்ணத்தை மதிப்பில்லாமலாக்கும் ஒரே சாத்தியம் உள்ளது, ஆகவே இது அன்றைக்கு இருந்த இருமைவாத அமைப்பு மீதான தாக்குதலா?

இந்தியப் பொருள்முதல்வாதத்திற்கு சூனியவாதம் முதலானவற்றுடன் எந்த உறவும் கிடையாது. அவர்கள் முழுமையான எதார்த்தவாதிகள். மாறாக, சூனியவாதம் உணர்வற்ற இறந்த உடல் இருக்க முடிவதைப் போல, உடலற்ற ஆத்மா இருக்க முடியும் என நம்பியது. பொருள்முதல்வாதம் உணர்வையும் பொருளையும் தனித்தனி வகைமைகளாக, ஒன்றில்லாமல் ஒன்று இருக்க முடியும் என்று பேசிய இருமைவாத அமைப்பின் மீது தாக்குதல் தொடுக்கவே செய்தது.

அஜிதகேசகம்பளி யார்? மேலும் ஒரு கேள்வி: அவர் சூனியவாதியா அல்லது பொருள்முதல்வாதியா?

நீங்கள் அறிந்திருப்பதைப் போல, அஜிதகேசகம்பளி புத்தரைவிட வயதில் மூத்தவரும் அவருடைய சமகாலத்தவரும் ஆவார். அவர், தீக நிகாயத்தில் வரும் அறுபத்தியிரண்டு வேத மறுப்புக் கொள்கைகளில் குறிப்பிடப்படும் முக்கியமான கொள்கையாளர்களில் ஒருவர். அவர் எல்லா காலங்களிலும் கம்பளி ஆடையையே உடுத்தினார். இது அவர் ஒரு கடுமையான துறவு விரதங்களையும், சுய விலக்கத்தையும் மேற்கொள்பவர் என்பதைக் குறிக்கிறது. இப்படியிருந்தும், ஜைன மூலங்களில் இவரும் இவருடைய சீடர்களும் சுகபோகிகள் என்று சாடப்படுகிறார்கள்.

carvastatue 350பிரஹஸ்பதி யார்? இவர்  இந்தியப் பொருள்முதல்வாதத்தை தோற்றுவித்தவரா? அவரிடமிருந்துதான் சார்வாகத் தத்துவம் தோற்றம் பெற்றதா? அவரது சிந்தனையின் தாக்குதல் இலக்குகள் பௌத்தமும் ஜைனமுமா?

நான் பிரஹஸ்பதியும் பிரஹஸ்பதியர்களும் (Brahaspati and the Brahaspatyas, Annali di Ca’ Foscari. Serie orientale, Vol.54 - Giugno (June) 2018, pp.147-176) என்ற பெரிய கட்டுரையில் இது குறித்து குறிப்பிட்டுள்ளேன். பிரஹஸ்பதி ஒரு புராண பாத்திரம், உண்மையில் அதற்கும் பொருள்முதல்வாதம் அல்லது பிற எந்தத் தத்துவ அமைப்பிற்கும் எந்தவித சம்பந்தமுமில்லை.

சில புராணங்களில் அவர் தேவர்களின் குருவாக, அந்தத் தகுதியுடன், வேத வழியிலிருந்து அசுரர்களைத் திசைதிருப்பித் தவறாக வழிநடத்தும் பொறுப்புடையவராகக் குறிப்பிடப்படுகிறார். ஆனால் இது எல்லா புராணங்களுக்கும் பொதுவானது அல்ல. சில புராணங்களில், பிரஹஸ்பதிக்குப் பதிலாக மாயமோகா வேதவழியிலிருந்து விலக்கும் பணியைச் செய்கிறார். எது எப்படியாயினும், பிரஹஸ்பதி பல இடங்களில் சுரகுரு (தேவர்களின் குரு) என்றும், அரைகுறை தெய்வ அம்சம் ஏதுமில்லாத லோகாயத ஆசிரியர் என்றும் குறிப்பிடப்படுகின்றார்.

பழைய தமிழ் காப்பியமான மணிமேகலையில் சமயவாத ஆசிரியர்களான கானாதர், கபிலர், ஜைமினி முதலானவர்களில் ஒருவராக, தெளிவாக ஒரு சாதாரண மனிதனாக பிரஹஸ்பதி குறிப்பிடப்படுகிறார். இதே உண்மை பத்மபுராணம் உத்தரகாண்டத்திலும் குறிப்பிடப்படுகிறது. கிருஷ்ணமிஷ்ரரின் “பிரபோத சந்திரோதயம்”உருவக நாடகத்தில் அவர் தேவர்களின் குரு என்பதற்குப் பதிலாக மாயமோகத்தை வணங்குபவராகக் குறிப்பிடப்படுகிறார்.

பிரஹஸ்பதி பொருள்முதல்வாத அமைப்பைத் தோற்றுவித்தவராகக் குறிப்பிடப்பட்டாலும், அதற்கு எந்த அடிப்படையும் இருப்பதாகத் தெரியவில்லை. இந்தப் பிரஹஸ்பதி தேவர்களின் குருவல்ல, ஒரு சாதாரண மனிதன். புராண மரபில் (குறிப்பாக விஷ்ணுபுராணம், 3.18ல்) பிரஹஸ்பதி, வேதவழியிலிருந்து விலக்கப் பௌத்தத்தையும் சமணத்தையும் போதிக்கிறாரே தவிர, உலகாயத்தைப் போதிக்கவில்லை. ஆனால் H.H. Wilson, Muir தொடங்கி பெரும்பாலானவர்கள் அந்தப் பகுதியை உலாகயதத்தைப் போதித்தார் எனவே எடுத்தாளுகின்றனர். நான் இந்த மோசமான தவறு குறித்து என்னுடைய “சர்வ தரிசன சங்கிரகத்தில் பிரஹஸ்பதி சூத்திரங்கள் அத்தியாயம் 1: ஒரு விமர்சன மதிப்பீடு (Verses Attributed to Bhaspati in the Sarvadarśanasagraha Chap. I: A Critical Appraisal’, Journal of Indian Philosophy, 41:6, December 2013, pp.615-30) என்ற கட்டுரையில் முன்பே குறிப்பிட்டுள்ளேன்.

சார்வாகப் போதனை எப்படிப்பட்டது ? அது மறு உலகம் உள்ளிட்ட எல்லா வகை மீ-இயற்கைச் சிந்தனைகளையும் மறுக்கும் முழுமையான பொருள்முதல்வாதத் தத்துவமா? அல்லது அது உலகாயதத் தத்துவ மரபு போன்றதா?

ஆமாம். சார்வாகப் போதனைகள் முழுமையான பொருள்முதல்வாதத் தத்துவம். இது எட்டாம் நூற்றாண்டு வாக்கில் எந்தவிதமான வெளித் தாக்கங்களும் இன்றி சுதந்திரமாக, இந்தியாவில் தோன்றிய தத்துவம் ஆகும். வாத்சாயனரின் காமசூத்திரத்திலும் பாணபட்டரின் காதம்பரியிலும் குறிப்பிடப்படும் உலகாயதம், இந்தியாவின் வடக்கிலும் தெற்கிலும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு நிலவிய தொல் பொருள்முதல்வாதத் தரிசனம் ஆகும். ஆனால் எட்டாம் நூற்றாண்டிற்குக் கொஞ்சகாலம் முன்பாக நாத்திகம், பிரஹஸ்பதியம் ஆகியவற்றுடன் சேர்த்து சார்வாகமும், உலகாயதமும் ஒரே பொருள் குறித்த பெயர்களாகவே அறியப்பட்டன. இது சாந்தரசிக்தரின் தொகுப்பான தத்துவ சங்கிரகத்திற்கு எழுதப்பட்ட கமலசிலாவின் உரை மூலமும் உறுதிப்படுகிறது. ஜைன அறிஞரான ஹேமச்சந்திரரின் சமஸ்கிருத நிகண்டிலும் இந்த நான்கு பெயர்களும் குறிப்பிடப்படுகின்றன.

பௌத்த தரிசனத்திற்கு சார்வாகசூத்திரம் எவ்வளவு நெருக்கமானது? குறிப்பாக பிரத்யக்ஷம், அனுமானம் ஆகியவற்றில் எந்த அளவிற்கு நெருக்கமானது? அவர்களது வாதம் பற்றிய வரைந்துகாட்டும்போது, ஆர்ப்பாட்டமில்லாமல் ஒத்த புள்ளிகள், மாறுபடும் புள்ளிகள் என எவற்றைக் காணமுடிகிறது?

சார்வாகர்களும் (பழைய பொருள்முதல்வாதிகள் அல்ல), பௌத்தர்களும் அறிதலின் இரண்டு அம்சங்களான பிரத்யக்ஷம், அனுமானம் ஆகியவற்றை ஏற்றுக்கொள்கிறார்கள் (அனுமானம் பற்றிய நேர்வில், [சார்வாகர்கள்] பிரத்யக்ஷத்திற்கு உட்பட்ட அல்லது பிரத்யக்ஷத்தில் ஊன்றிய அனுமானத்தை மட்டுமே ஏற்றுக்கொள்கிறார்கள்). சார்வாகர்களுக்கு முந்திய பழைய பொருள்முதல்வாதிகள் இரண்டு விசயங்களில் வேறுபடுகிறார்கள்.  அவர்கள் பிரத்யக்ஷத்தை மட்டுமே அறிதலுக்கான ஒரே கருவியாக ஏற்றுக்கொள்கிறார்கள். பிரத்யக்ஷத்தை அடிப்படையாகக் கொண்ட அனுமானத்தைக்கூட ஏற்றுக்கொள்வதில்லை. இரண்டாவதாக, சார்வாகர்களுக்கு முந்தையவர்கள் அனைவரையும் போல நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் எனும் ஐம்பூதங்களைப் பற்றி பேசுகிறார்கள். ஆனால் மறுபுறத்தில், புலனுணர்வால் அறியமுடியாது என்பதால் ஆகாயத்தை விலக்கி, சார்வாகர்கள் நான்கு பூதங்கள் பற்றி மட்டுமே பேசுகிறார்கள். எவ்வாறாயினும் பௌத்தர்கள் ஐம்பூதக் கொள்கையுடையவர்கள்.

இதில்தான் பௌத்தர்களுக்கும் சார்வாகர்களுக்குமான முக்கிய வித்தியாசம் உள்ளது. இருப்பினும் அறிதல்முறைகள் தொடர்பாக பௌத்தத்திற்கும் சார்வாகத்திற்கும் இடையிலான பார்வைகள் தொடர்பாக ஒப்புமைகளை அதிகம் வலியுறுத்தமுடியாது. குறைந்தபட்சம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டிலிருந்து, இவை இரண்டிற்கும் இடையில் எந்த நட்பும் இல்லை. இரண்டிற்கும் ஒத்துக் கொள்ளாது. சாந்தரக்ஷிதரின் தத்துவசங்கிரகம் யோகசார பௌத்தமும் சார்வாகமும் ஒன்றை ஒன்று எதிர்த்து வெளிப்படுத்தும் மறுப்புகளை பதிவு செய்துள்ளது. பௌத்தர்களைப் போலவேதான் சமணமும். வேதத்தின் பிழைபடா இயல்பு குறித்த பிரச்சனை தொடர்பான விசயங்களில் சார்வாகர்களும் பௌத்தர்களும் ஒன்றுபடலாம்.

சார்வாக சூத்திரத்தின் சில பகுதிகளே எஞ்சியுள்ளன, அவற்றிற்கும்கூட உரைகளையே நம்பி இருக்க வேண்டியுள்ளது. உத்பாதரின் உரை முதலான உரைகள், பொருள்முதல்வாத ஒருமைவாதமாக அல்லாமல் இருமைவாதமாக சார்வாகசூத்திரத்தைப் பொருள் கொள்கின்றன. இந்த மெய்மையை எவ்வாறு எடுத்துக்கொள்வது? உரைகள் அளிக்கும் குளறுபடியான விளக்கங்களைத் தாண்டி, சார்வாகசூத்திரம் உண்மையில் என்ன அர்த்தப்படுகிறது எனப் புரிந்துகொள்வது சாத்தியமா?

நமக்கு இதுவரை கிடைத்துள்ள உரைகளிலேயே உத்பாதபட்டர் மட்டுமே இத்தகைய ‘திருத்தல்வாத’ நிலைப்பாட்டை எடுத்துள்ளார். புரந்தரரால் ஒழுங்கமைத்துக் கொடுக்கப்பட்டதாக நம்பப்படும் சார்வாக சூத்திரத்தை அடியற்றி பெரும்பாலான உரைகளும் அதை உறுதியான ஒருமைவாதமாகவே குறிப்பிடுகின்றன. ஆகவே, குறிப்பாகப் பருப்பொருள், உணர்வு குறித்த விசயத்தில் மட்டுமாவது, நாம் இந்தச் சூத்திரங்களுக்கு விநோதமான மறுவிளக்கம் தரும் உத்பாதரைக் கவனமாக தவிர்த்துவிடலாம். ‘நிலம், நீர், நெருப்பு மற்றும் ஆகாயம் ஆகியவையே அடிப்படை, மற்றவை எதுவும் இல்லை’ (மி.2) என்ற சூத்திரத்திற்கு எதிராக உத்பாதர் இருமைவாதத்தை நோக்கி முன்னேறுகிறார். இந்த சூத்திரத்திலேயே உள்ள பல வார்த்தைகளுக்கு அடிக்கடி தவறான விளக்கங்களைத் தருகிறார் என்கிற உண்மையின் அடிப்படையில், உத்பாதரின் விநோதமான கருத்து நம்மை திசைதிருப்ப அனுமதிக்கக் கூடாது. நான் என்னுடைய கட்டுரைகளில் இவை குறித்து விவாதித்துள்ளேன். ‘சார்வாக சூத்திரத்தின் உரையாசிரியர்கள்: ஒரு விமர்சன ஆய்வு’ (Commentators on the Cārvākasūtra: A Critical Survey, Journal of Indian Philosophy (August 2010a), 38: 4).

‘உண்மையில் சார்வாகர்கள் எதைக் குறிப்பிட்டார்கள்: சார்வாக சூத்திர உரையாசிரியர்கள் குறித்து மேலும் அதிகமாக, (What the Carvakas Originally Meant: More on the Commentators of the Cārvākasūtra, Journal of Indian Philosophy (December 2010b), 38:6, ‘‘உலகாயதப் பொருள்முதல்வாதம்: மூலங்களின் பகுப்பு’ (Lokāyata Materialism: Classification of Source Material) சுபுதிசரன் கோஸ்வாமி தொகுத்த நூலான LokāyataPhilosophy: A Fresh Appraisal. Kolkata: The Asiatic Society, 2010. வந்துள்ள கட்டுரை. சார்வாகம்/உலகாயதம் உண்மையில் ஒருமைவாதமே, இருமைவாதம் அல்ல.

பழமைவாதிகளிடமிருந்து வேறுபட்ட வாழ்க்கையை வாழுமாறு மக்களை, சார்வாக/உலகாயத மரபு கூறினவா? உதாரணத்திற்கு சுயஇருப்பை தற்செயலுடன் தொடர்புபடுத்தினால், வாழ்க்கை செயலற்ற ஒன்றாகிவிடும், மற்றவர்கள் கூறுகிறபடி, மாறாக இருப்பைக் காரணகாரியத்துடன் தொடர்புபடுத்தினால் வாழ்க்கை மிகுந்த செயல்பூர்வமானதாகிவிடும். இதன்மூலம், பழமைவாதத் தத்துவ தரிசனங்களால் போதிக்கப்படுகிற ஆத்மா, வாழ்வு, வினை ஆகியவை தொடர்பான பார்வையில் மாபெரும் வேறுபாடு இருந்ததா? காரணகாரியம் அறிவியலுடன் தொடர்புடையதா அல்லது காரணகாரியம் மற்றும் தற்செயல் இரண்டுமே உண்மையில் அறிவியலுடன் தொடர்புடையதா?

நிஜத்தில் சார்வாகர்கள் மக்கள் எதனை ஏற்றுக்கொள்ள சொன்னார்கள் என்பதை அறிந்து கொள்ள வழியில்லை. உண்மையில் அவர்கள் தங்கள் சொந்த சமூகங்களில் ஒதுங்கியிருந்தார்கள். தங்கள் பார்வைகளை மக்களிடமிருந்து மறைத்துக் கொண்டு வாழ்ந்தார்கள். அவர்களுடைய அனைத்து எழுத்துக்களும் அவர்களுடைய எதிரிகள் அழித்தார்களோ இல்லையோ, பனிரண்டாம் நூற்றாண்டோடு அழிந்துவிட்டன, உத்பாதபட்டருக்கு (கிபி ஒன்பதாம் நூற்றாண்டு) பிறகு எந்த சார்வாகரின் பெயரும் நமக்கு அறிய கிடைக்கவில்லை. ஆனால் அவர்களுக்கு எதிரான அரசியல் எழுத்துக்களிலிருந்து, அவர்கள் எதார்த்த உலகில் இல்லையென்றாலும், அவர்கள் எத்தனை வலிமையான எதிரிகளாக இருந்தார்கள் என்பதை ஒருவர் யூகித்து அறியலாம். கிருஷ்ணமிஷ்ரரின் “பிரபோத சந்திரோதயம்” நாடகத்திலிருந்தும், ஸ்ரீஹர்சாவின் நளன் வாழ்வு (நைடதசரிதம்)-லிருந்தும் சார்வாகர்கள் சாதி அமைப்பிலும், ஏற்றுக் கொள்ளப்பட்ட நான்கு கட்டங்களான (ஆசிரமங்கள்) வாழ்விலும் நம்பிக்கை இல்லாதவர்கள் என அறியமுடிகிறது. இவை இரண்டினாலும் அவர்களை அன்றைக்கு அதிகாரத்தில் இருந்தவர்களால் சகித்துக் கொள்ள முடிந்திருக்காது. பொருள்முதல்வாதத்தின் ஆதரவாளர்களாக, அவர்கள் பெரிய எண்ணிக்கையில் இருந்ததற்கான ஆதாரங்கள் இல்லை.

எப்படியாயினும், இது தொடர்பாக ரிச்சர்ட் கார்பே குறிப்பிட்டவை நினைவுகூரத்தக்கவை,, ‘இத்தனைக்கும் பிறகு இன்றைக்குப் போலவே அந்தச் சித்தாந்தங்களுக்கு, நிறைய ரகசிய சீடர்கள் இருந்திருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.’ (The Philosophy of Ancient India. Chicago: The Open Court Publishing Company, 1899 (second ed.), p.25). இவை அனைத்தும் அவர்கள் விதிவாதிகள் இல்லை என்பதையும், கூர்நோக்கையும், ஆய்வின் அவசியத்தையும் வலியுறுத்தக்கூடியவர்கள் என்பதையும் உறுதிப்படுத்துகின்றன, அவர்கள் கண்டிப்பாக அறிவியலுக்கும் அறிவியல் அணுகுமுறை உருவாக்கத்திற்கும் பங்களிப்புச் செய்தவர்களாகவே இருப்பார்கள். காரணகாரியத்தின் மீதான உறுதியான கடப்பாடு, வெறும் காரணகாரியம் மட்டுமில்லாமல் இயற்கை விளைவுகள் குறித்த வலியுறுத்தல், ‘இயற்கைக்கு மீறிய ஆற்றல்’ குறித்த அனைத்தையும் மறுத்தல் ஆகியவை இந்திய பொருள்முதல்வாதத்தைக் குறிப்பிடுகின்றன. மருத்துவ அறிவியல் எழுத்துக்களின் பின்னுள்ள தத்துவம் கண்டிப்பாக, சார்வாகர்களுக்கு முந்தையது போன்ற பொருள்முதல்வாதமே.

ஒற்றைக்கடவுள் கொள்கைப் பண்பாட்டிலிருந்து ‘இயற்கையின் விதிகள் [laws of nature]’ தோன்றியிருக்க வேண்டும் என்ற அடிப்படையிலிருந்து சுபவாதத்தை ‘law of nature’ என மொழிபெயர்ப்பதை ஆட்சேபித்து, அதனை தாவோ என்னும் சீனக் கருத்தாக்கத்தோடு தொடர்புபடுத்தி சீனவியலாளரான ஜோசப் நீதம் நோக்கியது சரியா?

என்ன காரணமாக இருந்தாலும், சுபவாதத்திற்கும் தாவோவிற்கும் ஒப்புமைகள் உள்ளன என்பதில் தவறில்லை. எவ்வாறாயினும், ஒற்றைக்கடவுள் கொள்கைக்கும் பல்கடவுள் கொள்கைக்கும் அப்பால் சுபவாதம் தோற்றத்திற்கு வேறு பல காரணங்களும் இருக்கலாம். இருந்தாலும், தேவிபிரசாத் சட்டோபாத்யாயா சுபாவத்தை ‘இயற்கையின் விதிகள்’ என மொழிபெயர்த்ததை தவறு என நீதம் மறுத்ததைச் சரியென்றே கருதுகிறேன். இந்த விசயத்தை நான் என் கட்டுரையான ‘சுபாவம் என்றால் என்ன: சட்டோபாத்யாயாவும் நீதமும்’ (What is Meant by Svabhava: Chattopadhyaya and Needham, Psyche and Society, Vo.10 No.2, December 2012, pp.18-20)ல் விவாதித்திருக்கிறேன்.

இயற்கைக்கு மீறிய சக்திகள் பற்றிப் பேசாத மதத்தை தேடும் பொருள்முதல்வாதிகளுக்குப் பௌத்தம் கவனத்திற்குரியதாக இருக்கிறது. ஆனால் சார்வாக/உலகாயத மரபு அபூர்வமாகத்தான் குறிப்பிடப்படுகிறது. ஆயினும் பௌத்தம் இருமைவாதமாகவே கருதப்படுகிறது. சமகாலத்தவர்கள் மத்தியில் சார்வாக/உலகாயத மரபு கண்களில் படாமல் மறைந்து போகவும் பௌத்தம் பிரபலமாகவும் என்ன காரணம் எனச் சுருக்கமாகச் சொல்லமுடியுமா?

கடவுள் அல்லது கடவுள்கள் இல்லை என்று சொன்னாலும், வேதத்தைப் போன்ற கடவுளால் வழிகாட்டப்பட்ட புனித நூல்கள் இல்லாவிட்டாலும், சாதி அமைப்பு இல்லாவிட்டாலும் இதுவரை மறு உலகத்தையோ மறுபிறப்பையோ பௌத்தம் மறுக்கவில்லை. இதற்கு மாறாக சார்வாக/உலகாயதம் மத எதிர்ப்பிலும் மறுஉலகம், மறுபிறப்பு ஆகியவற்றை மறுப்பதிலும் சமரசத்திற்கு இடமற்றதாக இருக்கிறது. ஒருவர் சமரசத்திற்கு இடம் தராத பொருள்முதல்வாதியாக இல்லாதவரை அல்லது ஆகாதவரை, சார்வாக/உலகாயதம் அவருக்கு ஈர்க்க கூடிய ஒன்றாக இருக்காது.

இரண்டாவதாக, பௌத்தம் ஒவ்வொரு பிறப்பிலும் பெரும் துன்பங்களைக் கொண்டு வரும் பிறப்பு மறுபிறப்பு என்னும் சுழற்சியிலிருந்து விடுதலைபெறுவது, நிர்வாணம் அடைவது குறித்த நம்பிக்கைகளைத் தருகிறது. மாறாக மறுபுறத்தில், பொருள்முதல்வாதம் இறந்தவுடன் உணர்வும் இறந்து விடுகிறது என்கிற அப்பட்டமான உண்மையைத் தவிர வேறு எந்த நம்பிக்கைகளையும் தருவதில்லை. அதனால் விடுதலை அல்லது மறுபிறப்பு குறித்த எந்தப் பிரச்சினையும் அதில் இல்லை. நித்தியமாக சொர்க்கத்தில் வாழலாம் என்கிற எந்த நம்பிக்கையும் அதில் இல்லை. பௌத்தம் இவ்விசயத்தில் இந்து மரபிற்கும் சார்வாக/உலகாயதத்திற்கும் நடுவில் பயணிக்கிறது.

ராகுல சாங்கிருதித்யாயன், தேவிபிரசாத் சட்டோபாத்யாயா போன்ற அறிஞர்கள் தொடர்ச்சியின் தொடர்ச்சியின்மை, வினை - விளைவு இணைவு ஆகிய கோட்பாடுகளைத் தோற்றுவித்ததில் பௌத்தத்தின் பங்கு, படீகா சமுபாதா (சமஸ்கிருதத்தில் ப்ரதிய சமுத்பாதா) காரணகாரிய கோட்பாட்டை முன்னறிவித்தது குறித்தும் வலியுறுத்தியுள்ளார்கள். நான் என்னுடைய கட்டுரையான, ‘எங்கெல்ஸ், இயக்கவியல் மற்றும் பௌத்தம்’ (Engels, Dialectics and Buddhism, Frontier Weekly, Autumn No., Vol. 46, Nos. 13-16, October 6- November 2, 2013, pp. 35-38) என்பதில் குறிப்பிட்டுள்ளபடி, நான்கு சிறந்த உண்மைகள் கருத்து, இயக்கவியலின் அடிப்படைகள் பலவற்றை உள்ளடக்கியுள்ளது. ஒருவர் பௌத்தராகவோ அல்லது பொருள்முதல்வாதியாகவோ இல்லாமலேயே, தத்துவத்திற்கு புத்தரின் பங்களிப்புகளை (அவர் தத்துவார்த்த விவாதங்களில் ஈடுபடும் விருப்பமுள்ளவராக இல்லாத பொழுதும்) பாராட்டமுடியும்.

உங்களுடைய நூல்கள் தவிர உங்களின் தத்துவ உலகம் குறித்து மேலும் அறிந்துகொள்ள வேறு ஐந்து நூல்களை நீங்கள் 3:AM வாசகர்களுக்காக பரிந்துரைக்க முடியுமா?

அனைத்து முடிவுகளுடனும் எனக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும், பின்வருவனவற்றை ஒருவர் கவனிப்பது லாபமுடையதாக இருக்கலாம் 1) தேவிபிரசாத் சட்டோபாத்யாயாவின் உலகாயதம் 2) தேவிபிரசாத் சட்டோபாத்யாயாவின் பண்டைய இந்தியாவில் பொருள்முதல்வாதத்தின் உள்ளாற்றல், 3) பிரதீப் கோகலேவின் உலகாயத/சார்வாகம், 4) டி.ஆர். சாஸ்திரியின் சார்வாகத் தத்துவத்தில் பொருள்முதல்வாதம், சிற்றின்பக் கொள்கை, இன்ப நாட்டக் கொள்கை (Materialism, Sensualism and Hedonism in Cārvāka Philosophy). எலி பிரான்கோவும் கரின் பீரிசன்டென்சும் ரூட்லெட்ஜ் தத்துவக் களஞ்சியத்திற்காகத் தொகுத்ததிலிருந்து ‘இந்திய பொருள்முதல்வாதப் பள்ளிகள்...’ மற்றும் ‘உலகாயதம்’ மற்றும் பிரில்லின் இந்துமத களஞ்சியம் ஆகியவை. இறுதியாக இதுவரை நூலாகத் தொகுக்கப்படாத கிருஷ்ணா டெல் டோசோவின் சமீபத்திய மூன்று கட்டுரைகள்:

a)‘ஸ்கலிதபிரமதானயுக்திஹதுசித்தி’யில் சார்வாக/உலகாயத செய்யுள்கள் (‘The Stanzas on the Cārvāka/Lokāyata in the Skhalitapramathanayuktihetusiddhi’, Journal of Indian Philosophy 38 (2010): 543-552).

b) அறிதல் என்பது சுயத்தின் பகுதியா அல்லது உடலினுடையதா? நியாய மற்றும் வைசேசிகத்தின் நிலைப்பாடுகளுக்கு எதிரான உத்பாதபட்டரின் சில தருக்கச் சிந்திப்புகள் (Is Cognition an Attribute of the Self or It Rather Belongs to the Body? Some Dialectical Considerations on Udbhatabhatta’s Position against Nyāya and Vaiśesika), http://www.scirp.org/Journal/PaperInformation.aspx?PaperID=8726] Open Journal of Philosophy 1.2 (2011a): 48-56.

c) ‘ஓநாய்களின் காலடித்தடங்கள்: இந்தியப் பொருள்முதல்வாத கண்ணோட்டம்: ராமகிருஷ்ண பட்டாச்சார்யாவுடன் மேற்கோள்களுடன் உரையாடல்’ (The Wolf’s Footprints: Indian Materialism in Perspective: An Annotated Conversation with Ramkrishna Bhattacharya), Annali Istituto Orientale Napoli 71 (2011b): 183-204.

ஜோகன்னஸ் ப்ரோன்கோஸ்டின் ‘யார் சார்வாகர்கள்?’ Rev. Guillermode Ockham, 14(1), June 2016.

Pin It