கிழவன், கிழவி (காதலன், காதலி) இருவருக்கும் இயற்கைப் புணர்ச்சி முதல் (இருவரும் இயற்கையாகச் சந்தித்துக்கொண்டு காதல் வயப்பட்டது முதல்) களவு (பெற்றோர், ஊரார் யார்க்கும் தெரியாது இருவருக்குள் மட்டுமிருக்கும் காதல்) வெளிப்படும் காலம்வரை அவர்களுக்குள் நிகழக்கூடிய ஒன்பது வகையான உள்ளத்து உணர்வுகளைக் கீழ்வரும் தொல்காப்பிய நூற்பா சுட்டிக்காட்டுகின்றது.

வேட்கை ஒருதலை உள்ளுதல் மெலிதல்

ஆக்கம் செப்பல் நாணுவரை இறத்தல்

நோக்குவ எல்லாம் அவையே போறல்

மறத்தல் மயக்கம் சாக்காடு என்றுஅச்

சிறப்புடை மரபின் அவை களவு எனமொழிப

(தொல். பொருள். களவு. 9)

விருப்பம், இடைவிடாது நினைத்தல், மெலிதல், ஆக்கம் செப்பல், நாண எல்லையைக் கடத்தல், காண்பன அனைத்தும் தம்மைக் காணுவதாக நினைத்தல், தம் செயல்களை மறத்தல், மயங்குதல், சாதல் நினைவு ஆகியன அந்த ஒன்பது களவொழுக்க உணர்வுகளாகும். தொல்காப்பிய உரைகள்வழி இவைகளுக்குரிய விளக்கம் இவ்வாறு அமைகின்றன.

வேட்கை - இருவருக்கும் ஒருதலையாக நிகழும் விருப்பம்

ஒருதலை உள்ளுதல் - இடைவிடாது ஒருவரை யருவர் நினைத்திருத்தல்

மெலிதல் - அதனால் உடம்பு மெலிதல்

ஆக்கம் செப்பல் - ஏதாவது ஓர் இடையூறு கேட்ட வழி அதனை நன்மையாக நெஞ்சிற்குக் கூறிக் கொள்ளுதல்

நாணுவரை இறத்தல் - காதல் மிகுந்தவழி நாணை விடுதல்

நோக்குவ எல்லாம் அவையே போறல் - பிறர் தம்மை நோக்கிய நோக்க மெல்லாம் தம்மனத்துள் மறைத்து ஒழுகுகின்ற களவு ஒழுக்கத்தை (யார்க்கும் தெரியாதிருக்கும் காதல்) அறிந்து நோக்குகிறார் எனக் கொள்ளுதல்.

மறத்தல் - பிற தொழில்களை மறந்து நடத்தல்

மயக்கம் - செய்வன இன்ன என்று அறியாமல் மயங்குதல்

சாக்காடு - சாவிற்கு ஏதுவானவற்றைக் கூறுதல்

இவற்றுள் இறுதியாக உள்ள ‘சாக்காடு’ எனும் களவொழுக்க உணர்வு இந்தக் கட்டுரைக்கு வேண்டப் படும் ஒன்றாகும். சாக்காடு என்பதைச் ‘சாதல்’ என்பார் தொல்காப்பிய பழைய உரையாசிரியர் இளம்பூரணர். ஏனை உரையாசிரியர்கள்வழி ‘சாதலுக்கு ஏதுவான வற்றைக் கூறுதலும்’ சாக்காடாகக் கொள்ளப்படுகிறது. காதலன் மடலேறுதலும், காதலி காதல் மிகுதியால் உடல் மெலிந்து வருந்திக் கூறுதலும் சாக்காடாக அமைகிறது.

காதலியின் சுற்றத்தார் தம் காதலை ஏற்க மறுக்கும் நிலையில் காதலன் மடலேறும் வழக்கத்தைக் கொண் டிருக்கிறான். மடலேறுதல் என்பது காதலன் தன் காதலை ஊரார்க்கு அறிவிப்பது. அறவழியில் தம் காதலைப் பொதுவெளியில் வெளிப்படுத்துவதாக பண்டைக் காலத்தில் மடலேறும் வழக்கம் இருந்துள்ளது.   

மடலேறும் குறிப்புகளை நேரடியாக வெளிப் படுத்தக்கூடிய பாடல்கள் சங்க இலக்கியங்களுள் உள்ளன. ‘காதல் மிகுதியால் காதலன் பனைமடலால் குதிரையைப் போல உருவம் அமைத்து அதன் கழுத்தில் மணி, மாலை முதலியவற்றைப் பூட்டித் தன் உருவத் தையும் காதலியின் உருவத்தையும் ஒரு படத்தில் எழுதிக் கையில் ஏந்தி அதன்மேல் ஊரார் அறிய ஊர்ந்து வருதல்’ மடலேறுதல் எனப்படும். அவ்வாறு அவன் வருவதைக் கண்ட ஊரினர் ‘இன்னவளுக்கும் இவனுக்கும் நட்பு உண்டு’ என்பதை அறிந்து அதனை வெளிப்படக் கூறிப் பழிப்பர்; அது கேட்டுப் பெண் வீட்டார் மணம் செய்து வைப்பர் (கலித்தொகை 141).

மடல் ஏறும் காதலன் நீறு, எருக்க மாலை, ஆவிரம்பூ மாலை முதலியவற்றை அணிந்து வருதல் வழக்கம் என்பதை இந்தக் குறுந்தொகைப் பாடல் வெளிப்படுத்துகின்றது.

மாஎன மடலும் ஊர்ப; பூ எனக்

குவிமுகிழ் எருக்கங் கண்ணியும் சூடுப

மறுகின் ஆர்க்கவும் படுப;     

பிறிதும் ஆகுப - காமம் காழ்க் கொளினே (குறுந். 17)

பேரெயின் முறுவலார் எனும் புலவர் பாடிய இப்பாடல் “தோழியிற் கூட்டத்தால் காதலியைப் பெற காதலன் மேற்கொள்ளும் ‘மடலேறுதல்’ நிலையை வெளிப்படுத்துகின்றது. காதலனுக்குக் ‘காமநோய் முதிர்கின்றபோது, ஊரும் குதிரை என, ஊராத மனைமடலை ஊர்வர். சூடும் பூவென ஒருவரும் சூடாத குவிழ்ந்த அரும்புகளையுடைய எருக்க மாலையை அணிந்துகொள்வர். தெருவில் பலரால் ஆரவாரிக்கவும் படுவ. தம் கருத்து முற்றுப்பெறாத நிலையில் பிறிதும் செய்யத் துணிவர்” என்பதை மேற்கண்ட பாடல் புலப்படுத்துகின்றது.

இப்பாடலுள் வரும் ‘பிறிதும் செய்யத் துணிதல்’ என்பது ‘தற்கொலை’ செய்துகொள்ளும் நிலையாகக் கொள்ளப்படுகிறது. களவொழுக்க உணர்வுகளாகத் தொல்காப்பியம் சுட்டுவனவற்றுள் வரும் ‘சாக்காடு’ என்பதை நச்சினார்க்கினியர் இருவகையாகப் பகுத்துக் கொள்வார். ‘காதல் கைகூடப் பெறாத நிலையில் காதலன் மடலேறுவேன், வரைபாய்வேன் எனக் கூறுதல்’ என்பார் அவர்.

காதல் கைகூடப்பெறாத நிலையில் மலையி லிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொள்ளுதல் வரைபாய்தல் ஆகும் (வரை - மலை; பாய்தல் - குதித்தல்). இன்றும் காதல் கைகூடப்பெறாதவர்கள் இறுதியாகத் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு உள்ளாகும் வழக்கம் இருக்கின்றது. இது பண்டைக் காலத்திலிருந்த வழக்கின் நீட்சிதான் என்பதைப் பழைய பாடல்களின் குறிப்புகளால் அறிந்துகொள்ள முடிகின்றது. நாலடியார் பாட்டொன்றில் தற்கொலை செய்துகொள்ளும் நிலைகளுள் ஒன்றாகிய ‘வரைபாய்தல்’ பற்றி இவ்வாறு சுட்டப்படுகின்றது.

இனியார்தம் நெஞ்சத்து நோயுரைப்ப அந்நோய்

தணியாத உள்ளம் உடையார், - மணிவரன்றி

வீழும் அருவி விறன்மலை நன்னாட!

வாழ்வின் வரைபாய்தல் நன்று (நாலடி. 369)

‘மணிகளை வாரிக்கொண்டு வீழ்கின்ற அருவிகளை யுடைய வென்றிமிக்க மலைகளமைந்த சிறந்த நாடனே! தமக்கு இனியராயிருப்போர் தமது உள்ளத்திலுள்ள கவலையைத் தாமே ஆற்றிக்கொள்ளவியலாது எடுத்துச் சொல்ல அக் கவலைக்கு ஏதுவான குறையைத் தீர்த்து அதனைத் தணிவிக்காத இரக்கமற்ற வன்னெஞ்சுடையார், இவ்வுலகில் உயிர் வாழ்தலினும் ஒரு மலையின்மேல் ஏறி வீழ்ந்து உயிர் மாய்த்துக் கொள்ளுதல் நலமாகும்’ என்கிறது மேற்கண்ட நாலடியார் பாட்டு. ‘பிறர்க்கு உதவியாக இல்லாதவர் இருப்பதும் இறப்பதும் ஒன்றே’ என்பது இதன் பொருளாகும். காதலன் செய்து கொள்ளும் தற்கொலையை இப்பாடல் சுட்டவில்லை யாயினும் ‘வரைபாய்தல்’ வழக்கம் முற்காலத்தில் இருந்துள்ளதை வெளிப்படுத்துகின்றது.

‘அல்லகுறிப்படுதல்’ எனும் அகத்துறையைச் சார்ந்த அகநானூற்றில் உள்ள ஒரு பாடல் ‘வரைபாய்தல்’ குறிப்பை நன்றாக வெளிப்படுத்துகின்றது. காதலன் காதலியைச் சந்திப்பதற்காக ஏற்படுத்தும் அடையாள ஒலியைக் குறிப்படுத்தல் என்று அழைப்பது பண்டை வழக்காகும். காதலன் காதலியைச் சந்திப்பதற்காக ஒரு அடையாள ஒலியை எழுப்புவான். அந்த ஒலி கேட்டுக் காதலி குறியிடம் வந்து காதலனைச் சந்திப்பாள். சில நேரம் அவ்வகை ஒலி இயற்கையாக எழுந்துவிடுவதுண்டு. அப்பொழுது காதலி அவ்வொலியைக் காதலன் ஏற்படுத்தினான் என்று நினைத்துக் குறியிடம் வந்து ஏமாந்து திரும்பிவிடுவாள். பின் காதலன் வந்து உண்மையிலேயே ஒலி எழுப்பியும் அவ்வொலி இயற்கையாக எழுவது போலும்; காதலன் ஏற்படுத்துவது இல்லை என்று கருதி அவ்விடம் செல்லாமல் இருப்பாள். இதனை ‘அல்லகுறிப்படுதல்’ என்றழைப்பது பண்டை அகவாழ்க்கை நெறியாக இருந்திருக்கின்றது. அல்ல குறிப்பட்டுப் போகும் காதலன் தன் நெஞ்சுக்குச் சொல்லும் வகையில் அமைந்த இந்தப் பாடலில் வரைபாய்தல் குறிப்பு வெளிப்படுத்துகின்றது.

வயங்குவெயில் ஞெமியப் பாஅய், மின்னுவசிபு,

மயங்குதுளி பொழிந்த பானாட் கங்குல்,

ஆராக் காமம் அடூஉநின்று அலைப்ப,

இறுவரை வீழ்நரின் நடுங்கி, தெறுவர,

பாம்புஎறி கோலின் தமியை வைகி,

தேம்புதி கொல்லோ? - நெஞ்சே! - உரும்இசைக்

களிறுகண் கூடிய வாள்மயங்கு ஞாட்பின்,

ஒளிறுவேற் தானைக் கடுந்தேர்த் திதியன்

வருபுனல் இழிதரு மரம்பயில் இறும்பில்,

 பிழைஉறழ் மருப்பின், கடுங்கண், பன்றிக்

குறைஆர் கொடுவரி குழுமும் சாரல்,

அறைஉறு தீம்தேன் குறவர் அறுப்ப

முயலுநர் முற்றா ஏற்றுஅரு நெடுஞ்சிமை,

புகல்அரும் பொதியில் போலப்

பெறல்அருங் குரையள், எம் அணங்கி யோளே!

(அகம். 322)

இப்பாடலின் பொருள் ‘திதியன் என்பான் இடியென முழங்கும் களிறுகளையும், வாளடு போரிடும் போர்ப் படைகளையும், விரைந்தோடும் தேர்ப் படைகளையும் கொண்டவன். அவனது பொதியில் மலையானது அருவி தத்தி வீழும் மரங்கள் செறிந்த காட்டினைக் கொண்டது. பிறை மதியினைப் போன்ற கொம்பினை உடைய பன்றியினை அடித்துத் தின்ற வலிமை வாய்ந்த கொடிய புலிகள் கூடி முழுங்கும் பக்க மலையினையும், உச்சிப் பாறையின்கண் உள்ள இனிய தேனை எடுக்க முயலும் குறவர்களும், ஏறமுடியாத அளவுக்கு நீண்ட உச்சி மலையினையும் உடையது பொதியில் மலை. இத்தகைய அரிய, பெரிய மலை போல நம் காதலி கிடைத்தற்கு அரியவள் ஆவாள்.

ஞாயிறு மறைய வானில் மேகம் பரந்தது; மின்னல் மின்ன பெருமழை பெய்தது; நள்ளிரவில் அடங்காக் காதல் உள்ளத்தில் அலைமோத, மலை உச்சியிலிருந்து கீழே விழுந்து இறப்பார் போலத் துன்பம் உண்டாக நடுங்கி, கோலால் அடியுண்ட பாம்பினைப் போல நெஞ்சே! வேறு துணையின்றிக் கிடைத்தற்கு அரியவளை நினைத்து வாட்டமுறுவாயோ?’ என அமைகிறது. காதலன் தன் நெஞ்சிடம் பேசுவதாக உள்ள இப்பாடலில் மலையிலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொள்ளும் சங்ககால வழக்கம் அறியப்படுகிறது.

காதல் கைகூடப் பெறாத நிலையில் காதலன் முதலில் மடலேறும் வழக்கத்தை கைக்கொள்ளும் நிலை இருந்திருக்கிறது. இந்த அளவிலும் அவனது காதல் கைகூடப்பெறாத சூழலில் இறுதியாக ‘வரைபாய்ந்து’ உயிரை மாய்த்துக்கொள்ளுகின்ற நிலை இருந்துள்ளது. காதலன் மடலேறுதலும், வரைபாய்தலும், காதலி காதல் மிகுதியால் உடல் மெலிந்து வருந்தி இருத்தலும் பண்டைய அக வாழ்க்கை நெறியாக, மரபாக இருந்திருக்கிறது. இந்த மரபை அறிந்து உணர்ந்த நம்காலத்து மகாகவி பாரதி குயில் பாட்டில் இப்படி பாடியிருப்பார்.

காதல் காதல் காதல்

காதன் போயின் காதல் போயின்

சாதல் சாதல் சாதல்

கூடல் கூடல் கூடல்

கூடிப் பின்னே குமரன் போயின்

வாடல் வாடல் வாடல்

காதல் போயின் உயிரை மாய்த்துக்கொள்ளுதல் ஆணின் நிலையாகவும், உடல் மெலிந்து வருந்தி யிருத்தல் பெண்ணின் நிலையாகவுமிருந்த பண்டைக் கால வழக்கு இருபதாம் நூற்றாண்டின் பாரதி பாடலிலும் எதிரொலித்திருக்கின்றது. பல நூறு ஆண்டுகள் கொண்ட தமிழ் இலக்கிய, இலக்கண வரலாற்றுள் நிலைபேறு பெற்றுள்ள தொல்காப்பியரின் நூற்பாவும், பாரதியின் குயில்பாட்டு வரிகளும் ‘காதல் போயின் சாதல்’ என்ற தமிழர் மரபை வெளிப்படுத்தி நிற்பது சிறப்புக்குரிய குறிப்புகளாக உள்ளன. ‘காதல் போயின் சாதல்’ எனும் தமிழர் ஒழுக்கமானது இன்று ‘காதல் போயின் சாகடித்தல்’ என்று மறுவி வருகின்றது. மரபை மறந்ததன்/மறக்கடிக்கப்பட்டதன் விளைவு ‘சாகடித்தல்’ வழக்கம் பெருகிவருகின்றது. பெருகிவரும் இந்த வழக்கம் மனிதத்தையே சாகடிக்கக்கூடிய கொடியதாகும்.