தமிழ்நாட்டில் ‘புத்தர்’ பற்றிய கதைகள் பலவுண்டு. அதில் தமிழ்நாட்டிற்குப் புத்தர் வந்திருந்தார் என்பதும் ஒன்று. புத்தர் அறிந்த மொழிகளுள் தமிழும் இருந்தது என்பர். அசோகர் காலத்தில் தென்பகுதிக்கு வந்த பௌத்தம் தமிழ்நாட்டிலும் கால் கொண்டது என்பர். அறிஞர் மயிலை சீனி. வெங்கடசாமியின் ‘பௌத்தமும் தமிழும்’ அருங்கொடை.

jumbulingam bookவைதீக மரபுக்கு மாற்றான சிந்தனை கொண்டோரை சமண, பௌத்தம் ஈர்த்ததில் வியப்பில்லை. தமிழ்நாட்டின் ஊர்ப் புறங்களில் கூட இவற்றின் தாக்கம் உண்டு.

வரலாற்று ஆய்வாளர் முனைவர் பா.ஜம்புலிங்கம் தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை மிக்கவர். தமிழ்ப் பல்கலைக்கழக கல்வி சாராப் பணியில் உயர் அலுவலராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ‘சோழ நாட்டில் பௌத்தம்’ என்னும் தலைப்பில் முனைவர் பட்டம் பெற்றவர்.

கள ஆய்வில் சோழ நாட்டுப் பகுதிகளில் புத்தர் குறித்த அரிய தகவல்களைக் கண்டறிந்து ஆவணப்படுத்தி வருபவர். இவர் கண்டறிந்த புத்தர் சிலைகள் ஏராளம்.

‘சோழ நாட்டில் பௌத்தம்’ (2022) எனும் நூல் தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளிவந்துள்ளது. காவிரி தீரத்தில் பௌத்தத் தடத்தினை ஆய்வு செய்து வெளிப்படுத்தும் கருவி நூலாக இது விளங்குகிறது. வரலாற்றுக் குறிப்புகள், இலக்கியச் சான்றுகள், கல்வெட்டுகள், செப்பேடுகள், புத்தர் சிலைகள் அரிய தகவல்களின் தொகுப்பாக இது விளங்குகிறது.

சோழநாடு என்பதை இன்றைய தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சி, கரூர் பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியதாக வரையறை செய்கிறார்.

சோழநாடு, அசோகரின் சாசனங்கள், இலக்கியம், பிற சான்றுகள், பௌத்த விகாரங்கள், கோயில்கள், நாகப்பட்டினம் புத்தர் செப்புத் திருமேனிகள், புத்தர் சிறப்பங்கள், புத்தர் சிலைகள், புத்துயிர் பெறும் பௌத்தம் ஆகிய எட்டு தலைப்புகளில் நிரல்பட, உரிய சான்றுகளுடன் ஆய்வுத் தரவுகளை முன் வைக்கிறார். எளிய, இனிய, உயிரோட்டமான மொழி நடை வாசிப்பை ஈர்க்கச் செய்கிறது. அசோகர் காலம் தொடங்கி தற்காலம் வரை பௌத்தச் சுவடுகள் பரவி நின்றமையை இந்நூல் பதிவு செய்கிறது. பௌத்தம் சிதை வடைவதற்கான சமூக, சமய, அரசியல் காரணங்கள் கண்டடையப்பட வேண்டி உள்ளது. தமிழர் மெய்யியல் சார்ந்தும் இது அணுகப்பட வேண்டியுள்ளது. இப்படிப் பல திறப்புகளை இந்நூல் செய்கிறது.

"சோழ நாட்டில் உள்ள புத்தர் சிலைகளில் பெரும்பாலானவை பொ. ஆ. - 10 ஆம் நூற்றாண்டு முதல் பொ. ஆ. - 13 ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்தைச் சேர்ந்தவையாக உள்ளன. நாயன்மார்கள், ஆழ்வார்கள் காலத்தில் பௌத்தத்திற்கு அதிக எதிர்ப்பு இருந்தபோதிலும் அதற்குப் பின்னர், சோழர் காலம் தொடங்கி பௌத்தம் தழைத்திருந்ததை இந்தச் சிலைகள் மூலமாக அறிய முடிகிறது" (ப.168) என நூலாசிரியர் கூறுவது கவனிக்கத்தக்கது. மேலும், "ஆய்வாளர்கள், ஆர்வலர்கள், பொதுமக்கள், வெளிநாட்டினர் உள்ளிட்ட அனைவரும் கண்டு பயன்பெறும் வகையில் தமிழ்நாட்டில் பூம்புகாரில் தொடங்கி பௌத்தச் சான்றுகள் உள்ள அனைத்து இடங்களையும் ஒன்றாக இணைத்து ஒரு பௌத்த வட்டகை (Buddhist Circuit) அமைக்க வேண்டும்" (ப. 174) என்ற ஆய்வாளரின் எண்ணம் வரவேற்கத் தக்கது.

சோழ நாட்டில் பௌத்தம் குறித்த அரிய தகவல்களின் தொகுப்பு இது. இதைக் கருவி நூலாகக் கொண்டு கள ஆய்வுகளை நடத்தி நாட்டார் வழக்காறுகள், சமூக வரலாறு, மேல் நிலையாக்கம் முதலிய வட்டாரங்களில் தொடர் ஆய்வுகளை நிகழ்த்தலாம். தொடக்கக் காலத்தில் சைவம், வைணவம் ஆகியவற்றுக்கு இணையாகப் பௌத்தம் சோழ நாட்டில் நிலவியதை உறுதிப்படுத்தும் நூல் இது. நூலாசிரியர் பா. ஜம்புலிங்கம் அவர்களின் அரிய உழைப்பின் பயன் இது. களஆய்வு மட்டுமின்றி ஆவணப்படுத்துதலிலும் முன்னோடியான முயற்சி. வரலாறும், பண்பாடும் குறித்த அரிய பெட்டகம். அச்சும், அமைப்பும், படங்களுமாக அருமையான நூலாக்கம். பயன்படத் தக்க வரலாற்று நூல்!

சோழநாட்டில் பௌத்தம்
முனைவர் பா. ஜம்புலிங்கம்
படிமம், புது எழுத்து, 2/203,
அண்ணா நகர், காவேரிப்பட்டினம், கிருஷ்ணகிரி- 635112 / 9842647101, 6374230985 / விலை. ரூ 1000/-

- இரா. காமராசு, பேராசிரியர் – தலைவர், நாட்டுப்புறவியல் துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.