‘தோழர் தமிழ்ஒளி’ ஆக்கங்களை முன்வைத்து...

“கவிதையின் ஒரு துகள், ஒரு நூற்றாண்டுக்குச் சுவையூட்டப் போதுமானது” என்றார், கியூபாவின் விடுதலைப் போராட்ட வீரரும் கவிஞருமான ஜோஸ் மார்ட்டி.

கவிதை என்பது மொழியைக் கற்பிக்கும்; அறிவைக் கற்பிக்கும். கவிதையானது மொழியினூடாக அறிவையும், அறிவினூடாக மொழியையும் கற்பிக்கும்.

இத்தகைய வலிமைமிகு கவிதைப் பேழையைத் தமிழ்ச் சமூகத்திற்கு அளித்திருக்கிறார், தோழர் தமிழ்ஒளி. பாரதிதாசனிடம் கவிதை பயின்ற தமிழ்ஒளி தனது படைப்புகளை வர்க்கப் பார்வையுடன் சமைத்தவர்.தோழர் தமிழ்ஒளியின் கையெழுத்துப் பிரதி

(தோழர் தமிழ்ஒளியின் கையெழுத்துப் பிரதி)

‘தோழர் தமிழ்ஒளி’ எனும் தலைப்பில் அவருடைய படைப்புகளை ஆறு தொகுதிகளைக் கொண்ட நூல் தொகுப்பாக நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்நூலின் பதிப்பாசிரியர்: பேரா. வீ.அரசு.

தமிழ்ஒளி பயின்றது, மார்க்சியரானது, கம்யூனிட்டாகத் திகழ்ந்தது, படைப்புகளை எழுதிக் குவித்தது, உடனிருந்த செ.து.சஞ்சீவி, தமிழ்ஒளியின் படைப்புகளை வெளியிட்டது என ஏராளமான செய்திகளைத் திரட்டி இந்த மாபெரும் தொகுப்பைத் தயாரித்திருக்கிறார் வீ.அரசு. காண்கிறவர் மலைத்துப் போகிற அளவுக்கு உழைத்திருக்கிறார் பேரா. அரசு.

“சுயமாகப் படைப்புகளைப் படைப்பதைவிட ஒரு படைப்பாளியின் படைப்புகளைத் தொகுப்பது என்பது சிரமமான பணியாகும். ஏனெனில், எந்தப் படைப்பாளியின் படைப்புகள் தொகுக்கப் படுகின்றனவோ, அந்தப் படைப்புகளில் ஏதாவது பிழை ஏற்பட்டால் அது வரலாற்றுப் பிழையாகி விடும். அதனால் கவிஞர் தமிழ்ஒளியின் படைப்புகளைத் தொகுக்கின்ற பணியை யாரிடம் ஒப்படைக்கலாம் என்று நாங்கள் எண்ணிய போது எங்கள் நினைவுக்கு உடனடியாக வந்தவர் பேராசிரியர் வீ. அரசுதான்,” என்று இந்தத் தொகுப்பின் முகப்புரையில் தோழர் இரா. முத்தரசன் பாராட்டியுள்ளார்.

தோழர் தமிழ்ஒளி படைப்பில் – 6 நூல்களில் முதல் தொகுதி: கவிதைகள்; இரண்டாம் தொகுதியும் மூன்றாம் தொகுதியும்: காவியங்கள்; நான்காம் தொகுதி: சிறார் பாடல்கள், கதைகள்: ஐந்தாம் தொகுதி: ஓரங்க நாடகங்கள்; ஆறாம் தொகுதி: கட்டுரைகள், தன்வரலாறு.

•••

இவற்றில் முதல் தொகுதியான “கவிதைகள்” என்னும் நூலில் 129 கவிதைகள் இடம்பெற்றுள்ளன.

அவற்றில் இரண்டு கவிதைகளை மட்டும் இங்கே பார்ப்போம்.

“தொழிலாளர்களின் துயர வாழ்க்கையை

நீக்கிடப் பெரிய நீண்ட போராட்டம்

தொடங்கிடச் சங்கம் துணிந்திடும் போதில்

ஏ, செந்தமிழா! என்னுடைச் சோதரா

நீ, யார்பக்கம் நின்றிட வேண்டும்?

கொள்ளை யடித்திடும் கொடியவர் பக்கமா

துன்ப முற்றிடும் தொழிலாளர் பக்கமா?”

இப்படியொரு கவிதைப் பகுதியை முதல் கவிதையான “நீ எந்தக் கட்சியில்?” என்னும் கவிதையில் தோழர் தமிழ்ஒளி எழுதியுள்ளார்.

அதாவது, ‘நீ யார்? நீ எந்தப் பக்கம் நிற்கிறாய்?’ என்பதுதான் இந்த வினாவின் சாரம்! முந்நாள் வரை எண்ணாதிருந்து, இந்நாளில் எண்ணியவரும் கூட இவ்வினாவைத் தனக்குள் கேட்டுக் கேட்டுத் தெளிவு பெற வேண்டும் என்று தோழர் வலியுறுத்துகிறார்.

“கண்ணம்மா” என்ற தலைப்பில் 1958-ஆண்டில் சுதேசமித்திரன் இதழில் தோழர் தமிழ்ஒளி எழுதிய கவிதை இது:

சேலை பிழிந்துவிட்டாள் – கண்ணம்மா

சித்திர ஓடையிலே!

ஆலை பிழிகரும் பாய் – என்னுளம்

ஆடநீ ராடுகிறேன்!

தமிழ்ஒளியின் காதலி எழில்மிகு ஓடையில் நீராடி தன் புடைவையைப் பிழிந்து விடுகிறார். அதை அறிந்ததும் தமிழ்ஒளியின் உள்ளம் ஆலையில் பிழியப்பட்ட கரும்பாக நசுங்கி, சிதைந்து நாட்டியமாடுகிறது. காதலால் பிழியப்பட்டு, கவிதையின் இதயம் துவண்டு வீழ்கிறது, நடன நடையில்.

காதலில் தோயாது எந்த மொழியும் இருப்புகொள்ள இயலாது. கவிஞர் தமிழ்ஒளி, தன்னுடைய இந்தக் காதல் வரிகளில் வர்க்க இருப்பைத் தோய்க்கிறார்.

•••

அடுத்து, தொகுதி இரண்டு நிலைபெற்ற சிலை, வீராயி, கவிஞனின் காதல், விதியோ? வீணையோ? புத்தர் பிறந்தார் ஆகிய ஐந்து காவியங்களைக் கொண்டது.

நிலைபெற்ற சிலை காவியத்தின் கதைத்தலைவி வஞ்சி ஒடுக்கப்பட்ட சாதிப் பெண்; கதைத்தலைவன் மருதவாணன் மேல்சாதி ஆண். இருவரும் ஒரு சோலையில் காதல் மொழிந்து கொண்டிருக்கின்றனர். மருதவாணனின் தந்தையார் ஒரு முதலாளி; அவர் நேரில் பார்த்து விடுகிறார்.

பின்வருமாறு ஆதிக்க மனப்பான்மையில் அவர் பேசுகிறார்:

“கீழ்ச்சாதி நாயின்மேல் ஆசை வைத்தாய்?

ஒடுங்கியுமே கிடக்கின்ற ஏழை யெங்கே?

ஒளிர்செல்வம் படைத்திடுநம் உயர்வும் எங்கே?”

இதில் சாதி ஆதிக்க உணர்வும், செல்வச் செருக்கும் வெளிப்படுகின்றன. இறுதியில், காதலர்கள் இருவரும் கொல்லப்படுகின்றனர். தொழிலாளர்கள் கூட்டத்தைப் பார்த்து அஞ்சி, முதலாளி தன்னைத் தானே சுட்டுக் கொள்கிறார். காதலர்களுக்குச் சிலையெழுப்பத் தொழிலாளர்கள் திரள்கின்றனர்.

வர்க்கத்தில் சாதியம் செழித்து, வர்க்கத்திற்குச் செழிப்பைத் திருப்பித் தருகிறது.

அடுத்து, வீராயி என்னும் காப்பியத்தில் வீராயி என்னும் தலித் பெண் கதைத்தலைவி.

இதில் தமிழ்ஒளி பின்வருமாறு குறிப்பிட்டிருக்கிறார்:

“ஒண்டஇடம் இல்லாமல் ஊரெங்கும் சுற்றித்

தெருவினிலே கையேந்திச் சிறுபிச்சை வாங்கித்

திரிவோர்கள் குறட்டோரம் போய் நின்று மெய்யை

இருகையின் ஆதரவால் காப்பாற்ற முயல்வார்!

எதிர்த்தடிக்கும் காதலிலே என்செய்வார் பாவம்?”

இவ்வாறு வறுமையில் உழலும் ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த வீராயியின் போராட்ட வாழ்க்கையை விவரிக்கிறது, இந்தக் காவியம்.

இந்தக் காவியத்திற்கான முன்னுரையில் கவிஞர் தமிழ்ஒளி “மக்களுக்காக, மக்கள் உயர மக்கள் காலத்துக் கதைகளை எழுதுங்கள். உலகம் முழுவதும் உருவாகிக்கொண்டு வரும் உழைக்கும் இனத்தின் கூட்டு முன்னணிக்கு உங்கள் எழுத்து உறுதுணையாகட்டும்” என்று எழுத்தாளர்களுக்கு வேண்டுகோள் வைக்கிறார்.

அடுத்து, கவிஞனின் காதல் என்னும் காவியம்! சோழமன்னனின் மகள் அமுதமும் சேனாதிபதியின் மகள் அழகன் என்னும் கவிஞனும் காதலிக்கின்றனர். அவர்களுக்கு மன்னனின் சூழ்ச்சியால் இன்னல்கள் விளைகின்றன. மன்னர் காலத்துக் கதையை, மக்கள் காலத்துக்கேற்பப் புனைந்து இந்தக் காவியத்தை எழுதியிருக்கிறார், தமிழ்ஒளி.

நான்காவது காவியம்: விதியோ? வீணையோ? சிலப்பதிகாரத்தில் வேனிற்காதையில் நிகழ்கிற நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டதே விதியோ? வீணையோ? என்னும் குறுங்காவியம். பழைய காவியக் கதையைப் புதிய பார்வையில் - குறிப்பாக மாதவியின் பார்வையில் எழுதியிருக்கிறார் தமிழ்ஒளி.

அடுத்து இடம்பெற்றிருக்கும் காவியம்: புத்தர் பிறந்தார் என்பது பௌத்த மரபில் ஈடுபாடு கொண்டு, அதில் தோய்ந்த தன்னுடைய துய்ப்பை எழுத முனைந்து, அது முடிவுறாத காவியமாக இந்த நூலில் இடம்பெற்றுள்ளது.

•••

தொகுதி மூன்றும் காவியங்களையே கொண்டது. அதில் கோசலைக் குமரி, கண்ணப்பன் கிளிகள், மாதவி காவியம் ஆகிய மூன்று காவியங்கள் இடம்பெற்றுள்ளன.

“பேராசிரியர் ராகுல சாங்கிருத்தியாயன் எழுதிய ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ என்ற நூலிற் காணும் பிரபா என்ற கதையைத் தழுவி, இச்சிறு காவியத்தைப் புனைந்துள்ளேன்; என் கற்பனைக்கேற்பக் கதையில் மாறுதல்களைச் செய்து கொண்டேன்” என்று தமிழ்ஒளி கோசலைக் குமரி என்னும் காவியத்திற்கான தம்முடைய முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். சாதியைத் தகர்க்க முனைகிறவனுக்கு ஏற்படும் இன்னல்கள் இக்காவியத்தில் விவரிக்கப்பட்டுள்ளன.

கண்ணப்பன் கிளிகள் என்னும் காவியத்தில் “ஆண் கிளி: அதன் பெயர் ‘குணம்’; பெண்கிளி: அதன் பெயர் குற்றம்; கண்ணப்பன்: கிளிகளின் எசமானன்” என்று கதைமாந்தர்கள் கட்டமைக்கப் பட்டுள்ளனர். மனிதன் குற்றத்தை மன்னிக்கவும், குணத்தைப் போற்றவும் கற்றுக்கொள்ள வலியுறுத்துகிறது – இந்தக் காவியம்.

அடுத்து, இடம்பெற்றிருப்பது மாதவி காவியம் “(சிலப்பதிகாரத்தில்) மாதவி, தன் செல்வங்களை அறவணடிகள் முன்னிலையில் தானஞ் செய்துவிட்டுக் காவியுடைபூண்டு பௌத்த சங்கத்தைச் சரணடைகிறாள். என் கதையில் மாதவி மனம் மாறும் நிலையை மட்டுமே காட்டி, செல்வங்களை தானஞ் செய்யும் நிகழ்ச்சி, பௌத்த சங்கத்தை அடையும் நிகழ்ச்சி ஆகியவற்றை உய்த்துணருமாறு விட்டுள்ளேன்” என்று தமிழ்ஒளி தமது மாதவி காவியத்தின் முன்னுரையில் கூறியுள்ளார்.

“தமிழ்ஒளி படைத்துள்ள மாதவி இளங்கோவடிகளின் மாதவியைவிட சமகால உணர்வுப் பாங்கான பாத்திரமாக மிளிர்வதைக் காண்கிறோம். தொல்பழம் இலக்கிய மரபை, சமகாலத்திலும் உயிரோட்டத்துடன் உருவாக்க முடியும் என்பதற்கு மாதவி காவியம் நல்ல எடுத்துக்காட்டு” என்று குறிப்பிடுகிறது, இக்காவியத்திற்கான பதிப்புரை.

•••

தொகுதி நான்கு சிறார் பாடல்களையும், கதைகளையும் கொண்டது. இத்தொகுதியில் 30 சிறார் பாடல்களும், 100 குட்டிக் கதைகளும் இடம்பெற்றுள்ளன.

சிறார் பாடல்களில் இருந்து ஒரு சில வரிகளை மட்டும் இங்கே பார்ப்போம். சிறார்கள் எளிதில் புரிந்துகொள்ளக் கூடிய அளவுக்கு,

“வட்ட மான கண்ணாடி போல்

வந்திருக்குது நிலவு!

“வாங்கித் தின்னும் அப்பம் போல

வடிவு கொண்ட நிலவு!”

“நல்ல பனஞ்சாறு

நல்கும் பனைபாரு

வெல்லமும் கற்கண்டும்

வேண்டினால் கிடைக்கும்”

போன்ற பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

“கதைகள்” பகுதியில் “மறந்துவிடாதே” என்னும் தலைப்பில் ஒரு கதை!

“தென்னை மரத்தின் மேல் ஏறி, அதன் இளநீர்க் காய்களை வெட்டிக் கொண்டிருந்த இளைஞனைப் பார்த்து தென்னை மரம் கூறியது: என் இனிய நீரைக் குடிக்கும் நீ எனக்குத் தண்ணீர் ஊற்ற மறந்துவிடாதே!”

“முட்டாள் மந்திரவாதி” என்ற தலைப்பில் ஒரு கதை!

“ஒரு மந்திரவாதி, செத்துப் போனவர்களுக்கு உயிர் கொடுப்பேன்” என்று சொல்லியவாறு, சுடுகாட்டின் அருகே சென்று, ஏதோ கூச்சல்போட்டுக் கொண்டிருந்தான். அப்பொழுது, புதைகுழியொன்று வாய் திறந்து அவனிடம் கூறியது: ‘முட்டாளே! செத்துப்போனவர் களை எழுப்புவதல்ல முக்கியம்; இருப்பவர்களை வாழ வைப்பதுதான் முக்கியம்!”

•••

தொகுதி ஐந்து: சிறுகதைகள், ஓரங்க நாடகங்களைக் கொண்டது. சாக்கடைச் சமுதாயம், குருவிப்பட்டி, உயிரோவியங்கள் ஆகிய மூன்று சிறுகதைத் தொகுதிகளையும், ‘அடக்குமுறை ஒழிக!’, ‘மக்கள் துரோகி ஒழிக!’, ‘மனசாட்சி பேசுகிறது’ என்னும் தலைப்புகள் உள்ளிட்ட 18 ஓரங்க நாடகங்களையும் கொண்டது. மேலே குறிப்பிடப்பட்ட சிறுகதைகளின், ஓரங்க நாடகங்களின் தலைப்புகளைப் பார்க்கும் போதே தமிழ்ஒளி எழுதியிருப்பவை எப்படிப்பட்டவை என்பதை அறிந்து கொள்ள முடியும்.

•••

தொகுதி ஆறு: ஆய்வுகள், கட்டுரைகள், தன்வரலாறு ஆகியவற்றைக் கொண்டது. சிலப்பதிகாரம் காவியமா? நாடகமா?, திருக்குறளும் கடவுளும், தமிழும் சமஸ்கிருதமும், தமிழர் சமுதாயம், வள்ளுவர் கண்ட காதல் வாழ்வு ஆகிய ஐந்து ஆய்வு நூல்களையும் ஏழு கட்டுரைகளையும் தன்வரலாற்றுக் குறிப்பையும் உள்ளடக்கியது.

•••

தனிமனிதனின் ஆளுமை வேறு; அவனது மொழியாளுமை வேறு என்று பிரித்துப் பார்க்க இயலாது. ஏனெனில், மொழி என்பது அந்த மனிதருடைய மொத்த ஆளுமையில் உள்ளடங்கியது. ஒரு தனிமனிதனின் சமூகப் பார்வைக்கேற்ப அவனுடைய மொழித் தகுதியும், மொழிப்பண்பும் அவனுள்ளே பொதிந்து இயங்கிக் கொண்டிருக்கும்.

தோழர் தமிழ்ஒளி மார்க்சியத் தத்துவத்தைக் கற்றுத் தேர்ந்தவர்; கோட்பாட்டை நடைமுறைப்படுத்த அரும்பாடு பட்டவர்.

கவிதைகள், காவியங்கள், சிறார் பாடல்கள், சிறார் கதைகள், சிறுகதைகள், ஓரங்க நாடகங்கள், ஆய்வு நூல்கள், தனிக்கட்டுரைகள், தன்வரலாறு என்கிற வகைமைகளுடன் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ள “தோழர் தமிழ்ஒளி” என்னும் இந்த நூல் தொகுப்பு, தமிழில் இதுவரை வெளிவந்துள்ள பேரிலக்கியங்களுள், சீரிலக்கியங்களுள் குறிப்பிடத்தக்க ஒன்று!

-  சா.ஜெயராஜ்

தோழர் தமிழ்ஒளியின் கையெழுத்துப் பிரதி

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.