கீற்றில் தேட...

உதயசங்கரின் வண்ணத்துப்பூச்சியும் புலிக்குட்டியும் என்ற நூலானது சிறுவர்களுக்காகச் சொல்லப்பட்டுள்ள சின்னச் சின்னச் சிறார் கதைகளின் தொகுப்பாகும். இத்தொகுப்பிற்கு, ‘கற்பனையில் பூத்த கதை மலர்கள்’ என்ற தலைப்பில் எழுத்தாளர் சுகுமாரன் எழுதியுள்ள முன்னுரையில் “உதயசங்கர் சிறார்களின் வயதுப் பிரிவுகளுக்கு ஏற்ப எழுதுகிறார். மழலையருக்கு என்றால் குட்டிக்கதைகள், சிறுவர்களுக்கு என்றால் சின்னச் சின்னக் கதைகள், இளையோருக்கு என்றால் நாவல்கள் என்று அவரவர்களுக்கான இலக்கியம் அவரிடம் இருக்கின்றது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

udayasankar book 358வண்ணத்துப்பூச்சியும் புலிக்குட்டியும் என்ற கதையோடு சேர்த்து மொத்தம் பத்து கதைகள் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. தொகுப்பில் ஒன்பதாவதாக வண்ணத்துப்பூச்சியும் புலிக்குட்டியும் கதை இடம்பெற்றிருந்தாலும் அதன் கருத்தாழத்தைக் கொண்டே அதைத் தொகுப்பிற்குத் தலைப்பாக்கி இருக்கக்கூடும். இவ்வுலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை என்ற கருத்தை வண்ணத்துப்பூச்சியையும் புலிக்குட்டியையும் பாத்திரங்களாக்கிச் சொல்லியிருப்பது கதையின் தனிச்சிறப்பு. தும்பைச் செடியின் பூக்களில் உள்ள தேனை உறிஞ்சிக் குடிக்க முயலும் புலிக்குட்டியிடம் “இயற்கையன்னை ஒவ்வொரு உயிரையும் ஒவ்வொரு விதமாகப் படைத்திருக்கிறார். உன்னைப் போல நான் இருக்க முடியாது; என்னைப் போல நீ இருக்க முடியாது” என்று வண்ணத்துப்பூச்சி சொல்லும் பதிலானது குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் ஏற்க வேண்டிய பாடமாகும்.

முதல் கதையான “தவளை மாமாவின் சந்தேகம்” டினு தவளை மாமாவின் சந்தேகத்தை மட்டுமில்லாமல் கதையைப் படிக்கும் சிறார்களின் சந்தேகத்தையும் தீர்த்துவிடும். சுவர்க்கோழி, கரப்பான், சிலந்திகளுக்கெல்லாம் காலில் இருக்கும் மெல்லிய முடிகள் வழியே சத்தத்தை உணரக்கூடிய திறன் உள்ளது என்ற உண்மையைச் குழந்தைகள் எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில் இக்கதை விளக்கியுள்ளது.

அடுத்ததாக அமைந்திருக்கும் “தேன்வழிகாட்டிக் குருவியும் திருடனும்” என்ற கதையின் மூலம் மனிதனோடு நட்பாக இருக்கிற தேன்வழிகாட்டிக் குருவியைப் பற்றிக் குழந்தைகள் அறிந்து கொள்ள முடியும். மலைக்கிராமம் ஒன்றில் தானியங்களைத் திருடிச் செல்லும் திருடனை அக்கிராமத்து மக்கள் தேன்வழிகாட்டிக் குருவியின் உதவியுடன் கண்டுபிடிப்பதோடு மட்டுமில்லாமல், ஒரு பெரிய தேனடையிலிருந்து அவனைக் காப்பாற்றுகின்றனர். கிராமத்து மக்கள் திருடனுக்கு வழங்கிய மன்னிப்பால் அவன் மனம் திருந்தி நல்வழியில் வாழ்வதாக உறுதியளிக்கிறான். மன்னிப்பதும், மறப்பதும் மனித வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கும் என்பதைக் குழந்தைகள் மனதில் பதிய வைக்கும் கதை.

“சிட்டுக்குருவியின் கர்வம்” என்ற கதையில் எப்போதும் பறந்து கொண்டே இருக்கும் சிட்டுக்குருவி ஒன்று தன் முதுகில் கூட்டுடன் மெல்ல ஊர்ந்து கொண்டிருக்கும் நத்தையை “உனக்கும் என்னை மாதிரி சிறகுகள் இருந்தால் நீயும் பறக்கலாம். ஆனால் உன் கூட்டையே உன்னால் சுமக்க முடியல” என்று கேலி செய்கிறது. ஆனால் நத்தையோ “நண்பா... இயற்கை ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதமாகப் படைத்திருக்கிறது. நான் என் கூட்டுக்குள்ளே என் உலகத்தைப் பார்க்கிறேன்.மண்ணின் மணம் தெரியும். தாவரங்களின் சத்துக்கள் தெரியும். மழை வருவது தெரியும். எதிரிகளின் ஓசை கேட்டால் கூட்டுக்குள் பதுங்கத் தெரியும். நான் நிதானமாக ஆனால் உறுதியாக முன்னேறுகிறேன். எனக்கு எந்த அவசரமும் இல்லை” என்று சிட்டுக்குருவியிடம் பொறுமையாக சொன்னது.

தன் கர்வத்தை உணர்ந்த சிட்டுக்குருவியோ நத்தையிடம் மன்னிப்பு கேட்டது. இயற்கை படைத்திருப்பதை அதன் வழியில் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தும் கதையாக இக்கதை அமைந்திருக்கிறது.

“பறத்தல்” என்ற கதையில் பறப்பதற்குப் பயப்படும் தன் குஞ்சான லல்லிக்கு பனிக்கொக்கம்மா உறுதுணையாக இருந்து பறக்கக் கற்றுத் தருகிறது. ஆரம்பத்தில் பறக்கவே பயப்பட்ட லல்லிக் குஞ்சு கதையின் இறுதியில் “நான் சைபீரியப் பனிக் கொக்கு...” என்று கம்பீரமாக முழங்கிக் கொண்டே பறக்கிறது. எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முயற்சியும், பயிற்சியும் இருந்தால் போதும்; எளிதில் இலக்கை அடையலாம் என்ற நல்லதொரு சிந்தனையை அழகாக விளக்கியிருக்கும் கதை.

“மரமும் மலரும்” கதையில் இருநூறு ஆண்டுகள் வாழ்ந்த தேவதாரு மரத்தில் பூக்கள் பூத்த பிறகே பூச்சிகளும், எறும்புகளும், பறவைகளும் மரத்தை நோக்கி வருகின்றன. ஆனால் தன்னில் ஒரு பகுதி தான் பூக்கள் என்பதை உணராத மரமோ பூக்கள் மீது பொறாமைப் படுகிறது. பின்பு தன் தவற்றை உணர்ந்து மரம் மனம் வருந்தும் போது பூக்கள் மரத்திலிருந்து உதிர்ந்து விடுகின்றன. காலத்தின் ஓட்டத்தில் இருநூறு ஆண்டுகளும் ஒன்றுதான். இரண்டு நாட்களும் ஒன்றுதான். நாம் வாழும் காலத்தில் எப்படி வாழ்கிறோம் என்பது தான் முக்கியம் என்ற கருத்தை இக்கதையின் மூலம் ஆசிரியர் குழந்தைகளுக்குச் சொல்லியிருக்கிறார்.

“இடமாற்றம்” என்ற கதையில் மேகங்கள் சொல்லும் கதைகளைக் கேட்கும் மலைகளுக்கும் மேகங்களைப் போலவே ஊர் சுற்றிப் பார்க்க ஆசை வருகிறது. பின்பு ஒரு நாள் மேகங்கள் மலைகளைப் போல பூமியில் தங்க வேண்டும் என்றும், மலைகள் மேகங்களைப் போல உயரே பறக்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்படுகிறது. அந்த முடிவைச் செயல்படுத்தும் போது அவதிக்குள்ளாகும் மலைகளும், மேகங்களும் திரும்பி அவரவர் இடத்திற்கே சென்று விடுகின்றன. நாம் நாமாக, நமக்கான இடத்தில் வாழ்வதே சிறந்தது என்பதை உணர்த்தும் கதை. மேலும் கதையைப் படிக்கும் குழந்தைகளுக்கு ஆர்வமூட்டும் வகையில் குட்டி மேகம், பெரிய மேகம், குழந்தை மேகம், தாத்தா மேகம், பாட்டி மேகம் என்று உறவு முறைகளின் அடிப்படையில் மேகங்களுக்குப் பெயரிடப்பட்டுள்ளது.

“நடிப்புத்திலகம்” கதையில் வரும் பழையனூர் காட்டின் பிறந்தநாள் விழாவில் பாட்டுப்போட்டி, நடனப்போட்டி,பேச்சுப்போட்டி,நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், கபடி, கண்ணாமூச்சி என வரிசையாக நடந்த எல்லாப் போட்டிகளிலும் விலங்குகளும், பறவைகளும் பங்குபெற்று வெற்றிபெறுகின்றன. இறுதியாக நடக்கும் மாறுவேடப் போட்டியில் எல்லோரும் ஒவ்வொரு வேடமேற்று நடிக்க ஹாக்னோஸ் என்ற பாம்பு மட்டும் செத்துக்கிடப்பதைப் போல நடிக்கிறது. ஆனால் நடுவர்கள், மற்ற விலங்குகள் என யாரும் அதனருகில் கூட செல்லாததால் போட்டியில் அதற்குத் தோல்வியே கிடைக்கிறது. அளவுக்கு மீறிய நடிப்பால் போட்டியில் வெற்றி பெற முடியாத ஹாக்னோஸ் பாம்பின் மூலம் எதுவும் அளவோடு இருக்க வேண்டும் என்ற கருத்தை இக்கதை அறிவுறுத்துகிறது.

“ஊர் சுற்றிய சிங்கக்குட்டி” என்ற கதையில் எப்போதும் அதிகம் சேட்டை செய்யும் டுமி சிங்கக்குட்டி அப்பா சிங்கத்திடம் கொண்ட கோபத்தால் காட்டிற்குள் தனியே நடக்க ஆரம்பிக்கிறது. செல்லும் வழியில் பச்சோந்தி, முள்ளம்பன்றி, யானை, வண்ணத்துப்பூச்சி என வரிசையாக எல்லாவற்றையும் சந்திக்கும் டுமி இறுதியாக கழுதைப்புலியைப் பார்த்ததும், தான் தனியாக வந்திருப்பதன் ஆபத்தை உணர்கிறது. ஆனால் தக்க சமயத்தில் அப்பா சிங்கமும், அம்மா சிங்கமும் வந்து டுமியைக் கழுதைப்புலியிடமிருந்து காப்பாற்றி விடுகின்றனர். எல்லா நேரங்களிலும் தங்கள் குழந்தைகளுக்காக உடனிருப்பவர்கள் தான் பெற்றோர்கள் என்பதை அப்பா சிங்கம் மற்றும் அம்மா சிங்கத்தின் வழியாக குழந்தைகளுக்கு இக்கதை சொல்லியிருக்கிறது.

“நடுவில் ஆறு” என்ற கதையில் மான்காட்டில் மழை இல்லாத காரணத்தால் டிட்டு மான் தன் இரண்டு குட்டிகளுடன் முதலையாற்றைக் கடந்து எருமைக்காட்டிற்குச் செல்ல வேண்டும். ஆனால் முதலையாற்றைக் கடப்பதென்பது ஆபத்தானது. அதனால் முதலைகளிடமிருந்து தன் குட்டிகளை. காப்பாற்ற சரியான திட்டம் ஒன்றைத் தீட்டிய டிட்டு மான் அந்தத் திட்டத்தின் படி முதலையாற்றை தன் குட்டிகளுடன் கடந்து எருமைக்காட்டிற்குள் நுழைகிறது. இக்கட்டான சூழல்களை, குழந்தைகள் தங்கள் புத்தி கூர்மையைப் பயன்படுத்தி எதிர்கொள்ள வேண்டும் என்பதை எடுத்துரைக்கும் கதையாக இக்கதை அமைந்துள்ளது.

தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் எல்லாக் கதைகளும் அளவில் சிறியவையாக இருந்தாலும் அவை உணர்த்தும் கருத்துகளோ ஆழமானவை. மேலும் குழந்தைகள் ஆர்வத்துடன் படிக்கும் வகையிலும், எளிதில் புரிந்து கொள்ளும் நடையிலும் கதைகள் அமைந்துள்ளன. கதை ஒவ்வொன்றும் குட்டி குட்டிச் சோலை!

- வெ.சந்தியா, முனைவர் பட்ட ஆய்வாளர், திருவள்ளுவர் பல்கலைக்கழகம், சேர்க்காடு, வேலூர்