இப்போது அம்பேத்கரை ஏற்றுக் கொள்ளாதவர்களும் கூட டெல்டும்ப்டேவை தலையில் வைத்துக் கொண்டாட ஆரம்பித்திருக்கிறார்கள். இது எவ்வளவு பெரிய அபத்தமான ஓன்று என்பதையும், மீண்டும் அது நம்மை ஆரம்பித்த புள்ளியிலேதான் கொண்டு சேர்க்கிறது என்பதையும் இதுபோன்ற விவாதங்களை முன்னெடுப்பவர்கள் அறிவதில்லை.
அதே நேரத்தில் நீட்ஷேவை படித்து அதிமனிதனான கம்யூனிஸ்டுகளுடனும், பூக்கோவை ஆராய்ந்து மார்க்ஸுடன் இணைத்த மார்க்சிஸ்டுகளுடனும், ஃபோர்ட் பவுண்டேசனும் என்.ஜீ.வோக்களும் பெற்றெடுத்தும் தத்தெடுத்தும் வளர்க்கும் பல தலித்திய-விளிம்புநிலை அமைப்புகளுடனும், ஆராய்ச்சியாளர்களுடனும் பழகிப்போன நமக்கு இதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லைதான். ஆனால் எப்படி கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக நாம் இதுபோன்ற பின்நவீனத்துவ போலிகளுடனும், அமைப்புகளுடனும் தீவிரமாக போராடி வருகிறோமோ அதேபோல, இன்னும் ஒரு குறிப்பிட்ட காலம் வரை இத்தகைய கதம்பவாத தத்துவ எழுத்துக்களை உள்நோக்கத்துடன் பயன்படுத்தும் இயக்கங்களுடனும், போலி அறிவுஜீவி வட்டங்களுடனும் போராடித்தான் ஆகவேண்டும்.
இதில் கம்யூனிஸ்டுகள் மீதும், கம்யூனிஸ்டு இயக்கங்கள் மீதும் கொஞ்சம் கூட வரலாற்றுப் பார்வையில்லாமல் சேற்றைவாரி வீசும் இத்தகைய எழுத்துகளை தலித்-கம்யூனிஸ்டு இயக்க ஒற்றுமையை ஆதரிக்கும் ஆய்வுகள் எனக்கூறி, அவருடைய நூல்களை தொடர்ச்சியாக மொழிபெயர்ப்பதிலும், முன்னெடுப்பதிலும் அவர்கள் காட்டும் அக்கறை இங்கே அளப்பரியது. மேலும் இப்படி அறிமுகப்படுத்துபவர்களிடம் கவனிக்கவும் நமக்கு ஓன்று இருக்கிறது. அவர்கள்தான் தங்களது புரட்சிகர எழுத்துகளில் மார்க்சிய போதாமை குறித்தும், மண்ணுக்கேற்ற மார்க்சியம் குறித்தும் மற்றும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் பிரச்சனைகள் குறித்தும் நமக்கு தொடர்ந்து வகுப்பு எடுத்து வருபவர்கள். இருக்கட்டும்.
இவர்களுடன் ஒப்பிடுகையில் ஆனந்த் டெல்டும்ப்டே இவர்களைவிட கொஞ்சம் நேர்மையானவராகவும், வித்தியாசமானவரகவும் தெரிகிறார்.
அவர் கம்யூனிஸ்டுகளை, கம்யூனிஸ்டு இயக்கங்களை நேரடியாக அடித்து வீழ்த்துவதற்கு கம்யூனிஸ்டுகளின் உதவியவே நாடுபவர். அதற்கு தேவையான அவதூறுகள் எல்லாவற்றையும் எழுதி முடித்தபின்னர், அதுகுறித்த வெற்றிகர புன்னகையை நம்மிடமிருந்தே எதிர்பார்ப்பவர். அதற்கு எப்போதும் அவருக்கு இரண்டு அடையாளங்கள் மட்டுமே தேவைப்படும்.
ஓன்று அம்பேத்கர்; இன்னொன்று பிரிட்டிஷ் ஆட்சி. அது எந்த இடமாக இருந்தாலும் இந்த இரண்டிற்கும் அவர் நன்றி சொல்ல எப்போதும் தவறுவதில்லை. அதற்கு அவர் சொல்லும் காரணம் தலித்துகளின் மறுமலர்ச்சி. மறந்தும்கூட கம்யூனிஸ்டு இயக்கங்களை அவர் எங்கும் குறிப்பிடுவதில்லை. அவரைப் பொறுத்தவரை அப்போது இந்தியாவில் கம்யூனிஸ்டுகள் என்பவர்கள் வெகுமக்களை துன்புறுத்தும் சாதியை குறித்து எந்தவித கண்ணோட்டமும் இல்லாமல் அந்தரத்தில் மிதந்து கொண்டிருந்தவர்கள். அவரது ஏகாதிபத்திய எதிர்ப்பும் சாதி ஒழிப்பும் என்ற நூல் (தமிழில் எஸ்.வி.ராஜதுரை) உட்பட அம்பேத்கருக்கு பிந்திய தலித் இயக்கங்கள், அம்பேத்கரியர்கள்: நெருக்கடியும் சவால்களும் மற்றும் இன்னும் சில அவரது கட்டுரைகளையும், நேர்காணல்களையும் படித்தாலே அத்தகைய ஆய்வின் அபத்தக் குவியலையும், இதுபோன்ற தாரக மந்திரங்களையும் நாம் கண்டடையலாம். அந்த வகையில் அவரின் வாதங்களை இவ்வாறு சுருக்கிவிடலாம். .
1. சாதி ஒழிப்பு போராட்டத்திற்கும் கம்யூனிஸ்டுகளுக்கும் எந்தவொரு சம்மந்தமுமில்லை. சாதி ஒரு பிரச்சனையே இல்லை என அவர்கள் கருதுகிறார்கள். அதுதான் இடதுசாரி இயக்கத்தின் மாபெரும் தவறு. அதை இன்னும் அவர்கள் உணரவில்லை. சாதி என்பது இந்தியாவிற்கு மட்டுமே உரியது. அது வர்க்கப் போராட்டத்தின் போக்கில் தீர்க்கக்கூடிய பிரச்சனை அல்ல. உற்பத்தி உறவுகள் மாறுவதால் சாதி மாறாது. அதை மரபுவழி மார்க்சியத்தால் புரிந்துகொள்ள முடியாது. இடதுசாரிகள் திருந்த வேண்டும்.
2. இந்திய கம்யூனிஸ்டுகள் தொடக்க ஆண்டுகளில் விவசாய வர்க்கத்தை புறக்கணித்தனர். கம்யூனிஸ்டு இயக்கம் கோட்பாட்டு தளத்தில் தலித் இயக்கங்களுக்கு எந்த பங்களிப்பும் வழங்கவில்லை. தலித்துகளை ஒடுக்கும் பார்ப்பனியத்தை எதிர்த்து அது ஒன்றுமே பேசியதில்லை. அவர்கள் இந்து சாஸ்திரங்கள் மீது வெளிப்படையான ஆதரவு தெரிவித்தனர்.
3. தலையை மண்ணுக்குள் புதைத்து உலகை காண மறுக்கும் நெருப்பு கோழிகள் போன்றவர்கள் கம்யூனிஸ்டுகள். மார்க்சியத்தில் பிராமணிய தூய்மைவாதத்தை காண முயர்ச்சித்தவர்கள் கம்யூனிஸ்டுகள். இந்தியாவில் பிராமணியம் கம்யூனிஸ்டுகளுக்கு பரிச்சயமாக இருப்பதால் அவர்கள் அதை விரும்புகிறார்கள். இந்திய மார்க்சியவாதிகளின் புளித்துப்போன கோட்பாட்டு சொற்கள் பார்ப்பனியத்திற்கு ஒத்தது.
4. தலித்துகளின் சாதி எதிர்ப்பு போராட்டம் ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டங்களின் வெளிப்பாடுதான். (ஆனால் பல இடங்களில் தலித்துகள் ஏகாதிபத்தியம் செய்த நன்மைகளுக்காக அதற்கு நன்றிக் கடன்பட்டவர்களாக இருக்கின்றனர் என்பார்) பார்ப்பனியம் என்பது உள்நாட்டு ஏகாதிபத்தியம். அது துல்லியமானது. வெளிநாட்டு ஏகாதிபத்தியம் என்பது தூலமாக பார்க்க முடியாதது. வெளிநாட்டு ஏகாதிபத்தியமான பிரிட்டிஷ் ஆட்சியினால்தான் தலித்துகளுக்கு மானுட அடையாளம் கிடைத்தது.
5. பிரிட்டிஷ் ஆட்சி மட்டும் இந்தியாவை ஆளாமலிருந்தால் தலித்துகள் தங்களது விடுதலையை சாத்தியப்படுத்தும் வெளி கிடைத்திருக்காது. பிரிட்டிஷ் ஆட்சி தலித்துகளின் நேச சக்தியாக இருந்தது. கம்யூனிஸ்டுகளிடம் அம்பேத்கர் பகைமை கொண்டார் என்றால் அதற்கான பொறுப்பு கம்யூனிஸ்டுகளைதான் சாரும். அம்பேத்கரை அல்ல. அம்பேத்கரைத்தான் கம்யூனிஸ்டுகள் புரிந்திருக்க வேண்டுமே தவிர; அதை அம்பேத்கரிடம் எதிர்பார்ப்பது சரியல்ல. தலித் இயக்கங்கள் நம்பிக்கையை உருவாக்குவதாக இல்லாமல் இருப்பதுதான் பல தலித் இளைஞர்கள் இடதுசாரிகள் இயக்கங்களில் இணைகின்றனர்.
“கரும்பு துண்டிற்காக ஒன்றையொன்று தாக்கிகொள்ளும் எறும்புகள் போன்றவர்கள்தான் கம்யூனிஸ்டுகள்” என அம்பேத்கர் வர்ணித்ததை அட்சரம் பிசகாமல், ஆனால் வேறு வேறு வார்த்தைகளில் அதை மெருகேற்றிக்கொண்டு போகும் இவரைத்தான் இங்குள்ள சிலர் தங்கள் தலைமேல் வைத்து கொண்டாடி வருகிறார்கள்.
அதேபோல, எதையெல்லாம் பிரிட்டிஷ் ஆட்சியின், அம்பேத்கரியத்தின் கொடுமையாக, பின்னடைவாக பார்க்க வேண்டுமோ அதையெல்லாம் பூரித்துபோய் பார்க்கிறார். காடுகளை அழித்து, கள்ளிகளை உடைத்து தேயிலை தோட்டங்களாக்க, சொகுசு மாளிகைகளாக்க, கட்டிடங்கள் கட்ட, இரயில் பாதைகள் அமைக்க, சாலைகள்போட ஊர் ஊராக, நாடு நாடாக.. பிரிட்டிஷ் ஆட்சியால் துரத்தி அடிக்கப்பட்டவர்கள் தலித்துகள். இதனால் அவர்கள் அடைந்த துன்ப துயரங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. கொசுக்கடியிலும், பாம்புக் கடியிலும், அட்டைக் கடியிலும் அம்மை, கலரா, வயிற்றுப்போக்கு, மலேரியா என ஆயிரக்கணக்கான தலித் மக்களின் உயிரைப் பறித்தது இதே ஆனந்த் டெல்டும்ப்டே பெருமைப்படும் தலித்துகளின் நேச சக்தியான, அவர்களின் மானுட அடையாளத்தை மீட்டு தந்த அதே பிரிட்டிஷ் ஆட்சிதான். பிரிட்டிஷ் ஆட்சி தலித்துகளுக்கு இழைத்த கொடுமை ஏராளமானது. வார்த்தைகளால் விளக்க முடியாது. துன்பக்கேணியில் அதை புதுமைப்பித்தன் செய்து காட்டினார். எரியும் பனிக்காட்டில் டேனியல் செய்தார்.
ஆனால் அம்பேத்கர் என்ன செய்து கொண்டிருந்தார்?
“பிரிட்டிஷ் ஆட்சியை பொறுத்தவரை மற்ற குறைபாடுகள் எப்படி இருந்தபோதிலும் இந்தியர்களுக்கு அது இரண்டு அனுகூலங்களை செய்திருக்கிறது. அதாவது ஒரு பொதுவான மத்திய அரசாங்கத்தை தந்துள்ளது, மற்றும் இரண்டு வெவ்வேறு மதங்களை சார்ந்த மக்களிடையிலும் அவர்கள் ஒரே அரசாங்கத்தின் உறுப்பினர்கள் என்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளது” (தொகுதி 37, பக்:271)
“தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பிரிட்டிஷ் ஆட்சி நன்மை செய்ததால் என்னுடைய பொது வாழ்வு முழுவதயும் இந்தியாவிலுள்ள பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு நான் விசுவாசமாக இருந்து வந்துள்ளேன்” (தொகுதி 37, பக்:287) என்று வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை வாழ்த்தி துதிபாடிக் கொண்டே வந்தார்.
அதே வேலையை இவர் தொடர்கிறார். ஆனால் அம்பேத்கர் என்ன சொல்லி இருந்தாலும் டெல்டும்ப்டேவுக்கு அது ஒரு பிரச்சனையே இல்லை. எனவே டெல்டும்ப்டே முன்வைக்கும் விஷயம் இதுதான்:
அம்பேத்கரின் கோட்பாட்டு சிக்கல்கள் எதற்கும் அவர் பொறுப்பல்ல. அம்பேத்கரை உள்வாங்காமல் செயல்படும் கம்யூனிஸ்டுகளும், தலித்திய இயக்கங்களும், அதன் தலைவர்களும்தான் எல்லா பிரச்சனைகளுக்கும் காரணம். அம்பேத்கர் முதலாளித்துவ தாராள ஜனநாயகவாதி அல்ல, குட்டி முதளித்துவ சுதந்திர ஜனநாயக வாதி கூட இல்லை. அவரை புரிந்து கொள்வது கடினம். மாயாவாதத்தை ஆதரித்த, மதமாற்றம் என்பது புரட்சிகர தீர்வு என முன்வைத்த அம்பேத்கரின் கொள்கையில் எந்த பிரச்சனையும் இல்லை; மாய உலகத்தில் வாழும், மதமாற்றத்தை பின்பற்றும் தலித்துகளும், அம்பேத்கரின் கொள்கைகளை நடைமுறைபடுத்தியவர்களும்தான் தவறிழைக்கிறார்கள். தேர்தல்கள் மட்டுமே அதிகாரத்தை கைப்பற்றும் முறை என்று அம்பேத்கர் கூறுவதில் எந்த சிக்கலும் இல்லை. ஆனால் அதை இன்னும் கடைபிடித்துக் கொண்டிருக்கும் தலித்திய இயக்கங்கள்தான் பிற்போக்கானவை.
அம்பேத்கரியத்தின் பிரச்சனைகளை அதன் சிக்கல்களாக பார்க்காமல், அதை பின்பற்றுபவர்களின் பிரச்னையாக பார்க்கும் ஆனந்த் டெல்டும்ப்டேவின் ஆய்வுமுறை இவ்வாறாகத்தான் தலைகீழாக செல்கிறது. அதிகாரத்தில் ஒட்டிக்கொள்ள அலையும் தலித் இயக்கங்களுக்கும், தலைவர்களுக்கும் வழிகாட்டி அம்பேத்கரியம்தான்.. அதனால்தான் அவரால் ஒரு இடத்தில்கூட “பிரிட்டிஷ் ஆட்சியிடம் எதிர்பார்க்க ஒன்றுமில்லை” என்று கூறிக்கொண்டே ஏன் திரும்பத் திரும்பத் அதனிடமே போய் நான் உங்கள் விசுவாசி விசுவாசி என அம்பேத்கர் தொடர்ந்து கூறிக்கொண்டிருந்தார் என கேள்வி எழுப்ப முடியவில்லை? ஆனால் நம்மிடம் கேள்விகள் நிறையவே இருக்கின்றன.
டெல்டும்ப்டே கம்யூனிச இயக்கங்கள் மீது வைத்த நீண்டதொரு குற்றப்பட்டியலுக்கும், அவர் முன்வைத்த அவதூறுகளுக்கும் பதிலளிப்பதற்கு முன்னராக, முதலில் அவர் கேட்க மறந்த அல்லது வேண்டுமென்றே கேட்காமல் விட்ட கேள்விகளை நாம் கேட்டு விடுவோம்.
• ஏகாதிபத்தியம் தலித்துகளுக்கு கொடுமையே இழைக்கவில்லையா?
• அம்பேத்கரால் ஏன் எல்லா தாழ்த்தப்பட்ட சாதிகளையும் ஒருங்கிணைக்க முடியவில்லை?
• அரசிற்கு எதிரான புரட்சியை, வர்கப்போரட்டத்தை வெறுத்த அம்பேத்கர் சீர்திருத்தங்களை மட்டுமே ஏன் முன்னிலைப்படுத்தினார்?
• முழுவதும் என்ஜீவோ’மயமாகியுள்ள தலித் இயக்கத்தையும் கம்யூனிஸ்டு கட்சியையும் ஒரே அளவுகோலில் வைத்து பார்ப்பது ஏன்?
• நடாளுமன்ற முறை மட்டுமே ஒரே மாற்று வழி என இன்று தலித் இயக்கங்கள் எண்ணுவதற்கு அம்பேத்கர் காரணமில்லையா?
• சாதி ஒழிப்பு போராட்டத்தில் கம்யூனிஸ்டுகள் பங்கெடுக்கவில்லை என்றால் கம்யூனிஸ்டு கட்சிக்கு பறையர்கள் கட்சி என பரவலாக பெயர் வந்தது எப்படி?
• முதலாளித்துவ கட்டத்தை தாண்டாத அம்பேத்கரின் அரசு பற்றிய கண்ணோட்டம் தலித்துகளுக்கு எப்படி விடுதலையை பெற்று தரும்?
• அரசு என்பது அரசியலமைப்பு சட்டப்படி நடக்க வேண்டும் என்று அம்பேத்கர் விரும்பியது சரியென்றால் தவறு அம்பேத்கர் மீதா? அல்லது அவரின் வாரிசுகள் மீதானதா?
• பெருன்பான்மையான தலித் மக்களை வசப்படுத்துவதற்கு விஷ்ணு பகவானின் ஒன்பதாவது அவதாரமாக புத்தரை காவிகள் விளக்கம் கொடுப்பதற்கும், அம்பேத்கரை அவர்கள் கைப்பற்றுவதற்கும், புத்தமும் அவரது தம்மமும் நூலில் புத்தரை மனித சக்திக்கு அப்பாற்பட்டவராக காட்டுவது, இந்தியக் கலாசாரம் குறித்து பெருமிதம் கொள்வது, இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்துக்களை அள்ளி வீசுவது போன்ற அம்பேத்கரின் வலதுசாரி எழுத்துக்கள் காரணமாகாதா?
• அம்பேத்கரின் பேச்சும் எழுத்தும் தொகுதி 15; அதாவது அவரது பாகிஸ்தான் அல்லது இந்திய பிரிவினை நூலை ஒரு சாதாரண ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கூட எளிதில் பயன்படுத்திவிடும் அளவிற்கு அதில் பக்கம் பக்கமாக இஸ்லாமிய வெறுப்பு கொட்டி கிடப்பது ஏனோ?
• சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் என மார்க்சியத்திற்கு முந்தைய காலாவதியாகிப்போன அரசியல் முறையை முன்வைத்ததுடன், அரசிடம் எந்தவித குறைகளையும் காணாமல், அதை நிர்வகிக்கும் நபர்களிடம் குறைகளை கண்டது போன்ற அம்பேத்கரின் வரலாற்று பொருள்முதல்வாததிற்கு எதிரான வர்க்க சமரச கோட்பாடுகளைக் கொண்டு மார்சியத்தை எப்படி செழுமைபடுத்த முடியும்?
• அல்லது அரை நிலவுடமை சமூக அமைப்பு செல்வாக்கு செலுத்தும் காலகட்டத்திற்கு ஒரு விவசாய புரட்சிக்கான செயல் திட்டத்தை அது முன்வைக்கிறதா? இல்லை குறைந்தபட்சம் விவசாய, தொழிலாளர் பிரச்சனைக்கு தீர்வையாவது அது கொண்டுள்ளதா?
இதுபோன்ற இன்னும் நிறைய கேள்விகள் நம்மிடம் இருந்தாலும், நாம் எழுப்பிய இந்த கேள்விகள் அனைத்தும் டெல்டும்ப்டேவுக்கும் தோன்றி இருக்குமா? கண்டிப்பாக தோன்றிருக்கும். ஏனெனில் அவர் முன்வைக்கும் விவாதங்கள் அனைத்தும் இந்த கேள்விகளிலிருந்து அம்பேத்கரை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்ற வேட்கையைத்தான் கொண்டிருக்கின்றன. அப்படி இருந்தும் ஏன் அவர் இந்த கேள்விகளை எங்குமே எழுப்பி பதில் சொல்லவில்லை? அதற்கு இரண்டே காரணங்கள்தான் இருக்க முடியும். ஓன்று அவர் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் அதை தவிர்த்திருக்க வேண்டும். இல்லையெனில் அம்பேத்கரின் பாணியை அவர் அப்படியே பின்பற்றுகிறார். இது நம்மை மீண்டும் ஒரு ஆழமான புதைக்குழிக்குள் தள்ளுவது போன்றாகும். அம்பேத்கரை பொறுத்தவரை அரசியல் என்பது நாடாளுமன்ற தேர்தல் அரசியல்தான். அவர் மார்சியத்தை நெருங்கக் கூட இல்லை.
அம்பேத்கர் தயாரித்த குடியரசு கட்சியின் அமைப்பு விதிகள் “இந்திய குடியரசுக் கட்சி நாடாளுமன்ற ஜனநாயகத்திற்காக நிற்கிறது. இதுதான் பொதுமக்களின் நலனுக்கும் தனி நபர்களின் நலனுக்கும் சிறந்த அரசு வடிவமாகும்”. என்று தெளிவாக முன்வைக்கிறது. (தொகுதி 36, பக்:213) “எனவே இந்த அமைப்பு முறையை எப்படி கட்டி காப்பது என்பது பெரிய பிரச்சனை ஆகும். நாம் போது மக்களுக்கு கற்பிக்க வேண்டும். நாடாளுமன்ற ஜனநாயகம், நாடாளுமன்ற ஆட்சிமுறை பற்றியும் அவற்றினால் கிட்டும் பயன்கள் பற்றியும் நாம் எடுத்து சொல்ல வேண்டும்” (தொகுதி 37, பக்:535) என்கிறார் அம்பேத்கர்.
அம்பேத்கரிடம் முற்போக்கும் இருக்கிறது. பிற்போக்கும் இருக்கிறது. ஆனால் என்ன? பின்னது கொஞ்சம் கூடுதலாகவே இருக்கிறது. அதில் நாம் முற்போக்கை எடுத்துக்கொள்ளவேண்டும். நடைமுறை பிரச்சனைகளில் தலித் இயக்கங்களோடு இணைந்து போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும், அவர்களை சரியான திசையை நோக்கி இழுக்க வேண்டும் என்பது வேறு. ஆனால் இங்கே மார்க்சிய போதாமை, இந்திய தனித்துவம், மண்ணுக்கேற்ற மார்சியம் என ஆரம்பித்து, அம்பேத்கரியத்தை (உண்மையில் அம்பேத்கரியம் என்ற ஒரு தத்துவப்போக்கு இல்லை. ஒரு கோர்வைக்காக மட்டுமே இங்கே பயன்படுத்தப்படுகிறது) முழுவதும் முற்போக்காக மாற்றி தீவிர கம்யூனிஸ எதிர்ப்பான அதனைக்கொண்டு மார்க்சியத்தை செலுமைப்படுத்த முயற்சிப்பதில்தான் சிக்கல் ஆரம்பிக்கிறது. அதேபோல அம்பேத்கர் புரட்சி என்பதற்கு பதிலாகத்தான் சீர்திருத்தங்கள் என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார் என தன்னிலை விளக்கம் கொடுப்பதில் தொடங்கி, அவரை காப்பாற்ற ஐன்ஸ்டீன், ஹெகல் போன்றவர்களை துணைக்கு அழைப்பது முதற்கொண்டு இறுதியில் கம்யூனிச வெறுப்பு என்ற எல்லை வரை செல்ல டெல்டும்ப்டே தயாராக இருப்பதிலிருந்துதான் ஆபத்து தொடங்குகிறது.
இது எந்தளவிற்கு செல்கிறதென்றால், மார்க்சியத்தையும் பௌத்தத்தையும் அம்பேத்கர் சமமாக கருதினார் , மார்க்சியத்தை சமூக மாற்றத்துக்கான தத்துவமாக கருதினார் என அம்பேத்கர் சொல்லாததையெல்லாம் சொல்லும் அளவிற்கு போகிறது. அம்பேத்கர் கூறும் அரசியல் அதிகாரத்திற்கு ஒப்பானதுதான், மார்க்சியம் கூறும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்றெல்லாம் போகிற போக்கில் அவர் சொல்லிக்கொண்டு போவதெல்லாம் தனி. அது எதுவும் இதில் அடங்காது.
இது எப்படியாவது அம்பேத்கருக்கு மார்க்சிஸ்டுகளுக்கு நிகரான சொற்ப்பிரயோகத்தை வழங்குவதற்காக டெல்டும்ப்டே அல்லல்படுவதைத்தான் நமக்கு காட்டுகிறது. ஆனால் அவர் எவ்வளவு முயன்றும் அம்பேத்கர் ஒரு பேபியனிஸ்ட் என்பதை தாண்டி அவரால் அவரை வகைபடுத்தமுடியவில்லை. ஆனால் அம்பேத்கரோ தெளிவாக இருக்கிறார்.
“மார்க்சிய கோட்பாடு பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் வெளியிடப்பட்டது. அப்போதிருந்து அது மிகுந்த விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது. இந்த விமர்சனத்தின் விளைவாக காரல்மார்க்ஸ் உருவாக்கிய சித்தாந்த கட்டமைப்பின் பல பகுதிகள் நொறுங்கிப் போய்விட்டன. அவரது சோசலிசம் தவிர்க்க முடியாதது என்ற மார்க்சிய வாதம் முற்றிலும் தவறு என்று நிரூபிக்கப்பட்டு விட்டது என்பதில் சந்தேகத்துக்கு இடமில்லை... மற்ற கருத்துகளில் பலவும் தர்க்கவாதத்தின் மூலமும் அனுபவத்தின் மூலமும் தகர்க்கப்பட்டுவிட்டன.” (தொகுதி 7, பக்:407.)
இன்னும் சொல்லப்போனால் அம்பேத்கர் ஒரு நல்லவர், நீதிமான் என்பதை தாண்டி ஆனந்திடம் வேறு எதையும் நாம் எதிர்பார்க்க முடியாது. ஆனால் அனுமானத்திலே அம்பேத்கரை புரட்சிகரமாக்கும் ஆனந்த் கம்யூனிஸ்டுகளின் சாதி ஒழிப்பு போராட்டத்தை காணத் தவறுகிறார். ஒரு கட்டத்தில் டெல்டும்ப்டே சாதியை அழிக்கமுடியாது; எனவே அதை பார்பனர்களுக்கு எதிராக திருப்பி விடவேண்டும் என்று கருதும் பகுஜன் அமைப்பினரின் கொள்கை, இடதுசாரிகளின் சாதி பற்றிய புரிதலைவிட மேம்பட்டது என்கிறார். (இதில் ஆங்காங்கே ஸ்டாலின் எதிர்ப்பும் உண்டு) சமூக சீர்திருத்தம் எதனையும் செய்யாமலே புரட்சியை கொண்டு வரமுடியும் என கம்யூனிஸ்டுகள் நம்பினார்கள் என புது புது கதைகளை கூறுவதற்கு அவரிடம் எந்த ஆதாரமும் இருப்பதில்லை.
இன்னும் ஒருபடி முன்னேறி தலித் இயக்கத்தைவிட கம்யூனிஸ்டு கட்சி சிறந்த ஒன்றில்லை என்கிறார். அதில்தான் அவரின் உண்மைமுகமும் நமக்கு தெரிகிறது. கம்யூனிஸ்டு கட்சி தயாரித்த அறிக்கை எதிலும் சாதி பிரச்சனைகள் பற்றி எதுவும் கூறவில்லை. கம்யூனிஸ்டு கட்சிகளிலும், மார்க்சிய லெனினிய இயக்கங்களிலும் தலித்துகளுக்கு தலைமை பொறுப்பு தரப்படுவதில்லை. அங்கு தலித்துகள் எதிரிகளின் பீரங்கி குண்டுகளை எதிர்கொள்கின்றவர்களாகவே இருக்கின்றனர். அங்கு மற்ற சாதியினர் பாதுகாப்பாக இருக்கின்றனர். இதுதான் அவரின் ஆய்வு. கம்யூனிஸ்டு கட்சிகளின்பால் கொண்ட அணுகுமுறையும் இதுதான். பின்நவீனத்துவம்.. என்ஜீவோகள்.. அடையாள அரசியல் என எதை குறித்தும் எந்த பார்வையும் டெல்டும்ப்டே’விடம் இல்லை.
அம்பேத்கரின் தவறுகளை தலித் இயக்கங்களைக் கொண்டு சரி செய்ய முயல்கிறார். ஏகாதிபத்திய எதிர்ப்பு வேறு சாதி ஒழிப்பு தனி என பேசுவதற்கு ஒரு தயக்கமும் அவருக்கு இருப்பது இல்லை. தலித் இயக்கங்களில் பொருள்முதல்வாத அம்சங்கள் ஒதுக்கப்பட்டதற்கு காரணம் கம்யூனிஸ்டு இயக்கங்களின் முரட்டுத்தனமான பிரசாரம்தான் காரணம் என்கிறார்.
அம்பேத்கரை காலத்தை வென்றவராக காட்டும் அதே டெல்டும்ப்டேதான் அவர் வாழ்ந்த காலத்தைக்கொண்டு அவரை நாம் கணக்கிட வேண்டும் எனவும் சொல்கிறார். சூழ்நிலையின்மேல் பலி போடுவது அல்லது அதையே ஒரு வாய்ப்பாக பயன்படுத்துவது இந்த இரண்டும்தான் டெல்டும்ப்டே அம்பேத்கரை காப்பாற்றுவதற்கு கைகொள்ளும் உத்தி. ஏன் அம்பேத்கர் வாழ்ந்தபோது பகத்சிங் மற்றும் அவரது தோழர்கள் யாரும் வாழவில்லையா? அவர்களது புரட்சிகர கருத்துகள் காந்திக்கு கறுப்புக் கொடி காட்டும் அளவிற்கு இந்தியாவெங்கும் பரவவில்லையா? அம்பேத்கருக்கு கிடைத்த கம்யூனிச புத்தகங்களைவிட குறைவாக கிடைத்த நூல்களை வைத்துகொண்டு அவர்கள் சரியான இலக்கை நோக்கி செயல்படவில்லையா? இல்லை இந்தியாவில் அப்போது வர்க்கப் போராட்டங்கள் எதுவும் நடக்கவில்லையா? புரட்சிகள் நடக்கவில்லையா? நியூயார்க்கில் லஜபதிராய் அம்பேத்கரை சந்தித்து “புரட்சிகர இயக்கத்தில்தான் சேரவில்லை, சுதந்திர போராட்ட அரசியல் இயக்கத்திலாவது சேர வேண்டும்” என வற்புறுத்தியதற்கு “நான் மாணவன். படிப்பை முடிப்பதே எனது முதல் கடமை. நான் படிப்பதற்கு வாய்ப்பை கொடுத்த மன்னருக்கு இரண்டகம் செய்யமாட்டேன்” என்று கூறிய அம்பேத்கரை அவர் வாழ்ந்த காலத்தைக்கொண்டு கணக்கிட வேண்டுமா இல்லை அவரது கருத்துகளை கொண்டு கணக்கிட வேண்டுமா எனவும் நமக்கு தெரியவில்லை. ஆனால் இந்த இரண்டையும் கொண்டு கணக்கிட்டாலும், தனிநபர் வாதத்தை உயர்த்திப்பிடிக்கும் முற்போக்கு ஜனநாயகத்தை அம்பேத்கர் ஆதரித்த கருத்துகளில்போய்தான் நாம் சேருவோம். வரலாற்று பொருள்முதல்வாதத்தை அவர் துளியும் ஏற்கவில்லை என்பதற்கு அவர் சுயமாக சிந்தித்தார் என்று காரணம் கூறும் டெல்டும்ப்டே, இங்குள்ள இலக்கியவாதிகள் ராமாயணம், மகாபாரததத்திற்கு இன்னும் புது புது விளக்கங்களை கொடுத்து வரும் போல ஆனந்த் அம்பேத்கரின் ஒவ்வொரு கருத்துகளுக்கும் இதுபோன்றே புது புது விளக்கங்களை கொடுக்கிறார். ஆனால் இது எதுவும் தலித்துகளுக்கு ஒருபோதும் விடுதலையை பெற்றுத்தரப் போவதில்லை; மாறாக சலுகைகளை மட்டுமே அது பெற்றுத்தரும்..
ஆனால் அம்பேத்கர் காலத்தில் இன்னும் என்னவெல்லாம் நடந்து கொண்டிருந்தது?
தஞ்சை உட்பட இந்தியாவெங்கும் நிலவிய ஆண்டான் அடிமை சமூகம் கொடூரமான சாதிய சமூகமாகத்தான் இருந்தது. அதை ஒலித்து கட்டியது கம்யூனிஸ்டு கட்சிகள்தான். உதாரணத்திற்கு, அன்றைய தஞ்சையின் நிலவரத்தை நாம் எடுத்துகொண்டோமேயானால், நாம் கற்பனையில் எண்ணிப்பார்க்க முடியாத அளவிற்கு கொடுமையானதாக இருந்தது. டீ கடையில் தரையில்தான் உட்கார வேண்டும், குடித்த பின் தானே டம்ளரை கழுவி தொங்க விட வேண்டும், தண்ணீர் குடிக்க வாழை மட்டை, கணவன் மனைவி தகராறு என்றால் ஒருவர் சிறுநீரை மற்றவரை குடிக்க வைத்தல், இருவரையும் இரு தூண்களிலும் கட்டி வைத்து சவுக்கால் அடித்தல், பண்ணையார் நிலத்தில் நூற்றுக்கணக்கான தென்னம்பிள்ளை நடவேண்டும் என்றால் சேரியிலிருந்து ஒருவரை வரவழைத்து, அவர் எதிர்பார்க்காதபோது மூளை சிதறும் அளவிற்கு ஒரே அடியில் வீழ்த்தி குழியில் போட்டு தென்னம் பிள்ளை நடுதல், அநியாய வட்டி, சேரி மக்களுக்கு நொந்து போன சோறை போடுதல், குடும்ப-சாதிய அடிமை முறை, யாரவது கொஞ்சமாக பண்ணையாரை எதிர்த்தால்கூட குடி தண்ணீர் கிணற்றில் மலத்தை அள்ளி போடுதல். கட்டி வெல்லம் கரைத்து உடம்பில் ஊத்துதல், கட்டை விரலை வெட்டுதல், சாணிப்பால் கொடுத்தல், (சாணிப்பால் என்பது உடம்பை இளைத்து சுருக்கி, கொஞ்சம் கொஞ்சமாக உயிரை கொள்ளும் ஒன்றாகும்) தலைக்கு எண்ணை வைப்பதை அவர்கள் கனவிலும் எண்ணிப்பார்க்க முடியாது. கால்நடைகளைவிட கேவலமாக நடத்தப்பட்டனர். இன்னும் இதுபோல் சொல்வதற்கு ஏராளம் உண்டு. இப்படி அசல் மனுதர்மப்படியே வாழ்ந்த பண்ணையார்களை நடுங்க வைத்தது யார்? அந்த கொடூர சாதிய அமைப்பை தகர்த்தெறிந்தவர்கள் யார்?
சீனிவாசராவ், ஏ.கே.கோபாலன், நெடுங்காடி ராமசந்திரன், மணலி கந்தசாமி, ஏ.எம். கோபு, சித்தமல்லி சுப்பையா, தம்பிகோட்டை நாராயணன், ராமு, பாங்கல் தனுஷ்கோடி, அமிர்தலிங்கம் பிள்ளை, வெங்கடேச சோழகர், பட்டுராசு களப்பாடியார் போன்ற தோழர்களும், இளமையிலே தங்கள் இன்னுயிரை இழந்த களப்பால் குப்பு, ஆறுமுகம், வாட்டாக்குடி இரணியன், சம்பவான் ஓடை சிவராமன் போன்ற கம்யூனிஸ்டு கட்சி தோழர்களும்தான் தாழ்த்தப்பட்ட மக்களின் சுயமரியாதையை மீட்டு தந்தவர்கள். டெல்டுப்ம்டே சொல்வது போல பிரிட்டிஷ் ஆட்சி அல்ல. அவர்கள் மக்களுக்கு தைரியம் கொடுத்தார்கள்.
1934-ல், பின்னர் 1948-5௦-ல் என இயக்கம் தொடர்ந்து தடைசெய்யப்படுகிறது. ஆனால் அந்த தடைகளிலே சாதி ஒழிப்பை முன்னெடுத்தது கம்யூனிஸ்டு கட்சி. 1943ல் தஞ்சையில் தோன்றிய விவசாய சங்கம் சாதி ஒழிப்பு சங்கமாகவும்தான் இருந்தது. 1944ல் சாணிப்பால் சவுக்கடியை ஒரே வருடத்தில் ஒழிக்கப்பட்டது. அதனால்தான் அது 1948-க்குள் எல்லா சேரிகளுக்குள்ளும் கால் ஊன்ற முடிந்தது. தாக்கினால் திருப்பி தாக்குங்கள் என்ற சீனிவாசராவ் அவர்களின் முழக்கம் தஞ்சை முழுவதும் பரவியது. பெண்கள் அரிவாள் சுத்தியலில் தாலி செய்து போடும் அளவிற்கு எழுச்சி பெற்றனர். இரணியன் வீடு காவல்துறையால் இடிக்கப்பட்டு அவரது பெற்றோர்கள் நடுத்தெருவிற்கு தள்ளப்பட்டனர். இன்று தலித்துகளின் பிரச்னையை தலித்துகள்தான் பேச வேண்டும் என்போர், தாழ்த்தப்பட்டோர் தலைமை என உழைக்கும் மக்கள் ஒற்றுமையை சீர்குலைப்பவர்கள், ஆதிக்க சாதியில் பிறந்து தான் சொந்த சாதிக்கு எதிராக அவ்வளவு தீரமுடன் போராடிய சீனிவாசராவ், வாட்டாக்குடி இரணியன், சம்பவான் ஓடை சிவராமன் உட்பட பல தோழர்களின் தியாகத்தை கொச்சைபடுத்தவல்லவா செய்கிறார்கள்.
கொத்தடிமை நிலவிய விவசாய முறையை ஒழித்து கட்டியது கம்யூனிஸ்டுகள்தான். அதில் நாடக பங்களிப்பு முதல் நாகர்கோவில் முதல் சென்னை வரை தோழர் அப்பு ஒருங்கினைத்த, தோழர் சீனிவாசராவ் தலைமை தாங்கிய நடைபயணம் என பல்வேறு வகையான போரட்டங்களினால்தான் 1952-ல் பண்ணையடிமை முறையை அடியோடு ஒழித்த சாகுபடிதாரர் பாதுகாப்பு சட்டம் முதற்கொண்டு பல்வேறு சட்ட உரிமைகளை விவசாயிகள் பெற்றனர். பண்ணையடிமை என்ற பெயர் ஒழிந்து விவசாய தொழிலாளி என புதிய பெயர் வந்த கதை இதுதான்.
ஆனால் டெல்டும்ப்டே பார்வையில் கம்யூனிஸ்டுகள் தொடக்க ஆண்டுகளில் விவசாய வர்க்கத்தை புறக்கணித்தவர்கள். பிரிட்டிஷ் ஆட்சி மட்டுமே தலித்துகளின் மானுட அடையாளத்தை மீட்டுத் தந்தது. நாட்டின் விடுதலை என்பது தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலையும்தான் என 1928-லே முழங்கியதோடு அல்லாமல் அதை நடைமுறையில் நிரூபித்து காட்டியது கம்யூனிஸ்டு கட்சி. பொதுவுடமை கட்சி போல தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பாடுபட்ட கட்சி இந்தியாவில் வேறு இருக்கிறதா என கேள்வி கேட்க முழு உரிமையுடையவர்கள் கம்யூனிஸ்டுகள்தான். அவ்வளவு தியாகம். அவ்வளவு அடக்குமுறை. சேரிகள் இவர்களுக்காக அழுதது. இன்று வெல்-செட்டில்டு தலைவர்களாக உள்ள தலித் இயக்கங்களுக்கு இவை எதுவும் தேவையில்லை. அடையாள போராட்டங்களே போதுமானது.
முழு தமிழகத்தையும் எடுத்துக் கொள்வோம். நாலுமூலைக் கிணறில் தலித் மக்கள் மீதான துப்பாக்கி சூடு, கொடியங்குளம் நிகழ்வு, பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம், கொட்டக்கச்சியேந்தல் போராட்டங்கள், மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் பிரச்சனை, மேலவளவு முருகேசன் படுகொலைக்கு எதிரான போராட்டங்கள், வாச்சாத்தி பழங்குடி மக்கள் பிரசனைக்கு வழக்கு போட்டது, திண்ணியம் நிகழ்வு, இரட்டை குவளை, இரட்டை சேர், சலூன் கடைகளில் இரட்டை அலமாரி. பொது பாதையில் நடப்பது, சைக்கிள் ஓட்டுவது, உத்தப்புரம் தீண்டாமை சுவர் விவகாரம், அருந்ததியர் உள் இடஒதுக்கீடு, தமிழகம் முழுவதும் தீண்டாமை நிலவும் கிராமங்களில் களநிலவரம் நடத்தியது, காங்கியனூர், குடியாத்தம் பிரச்சனைகள், பஞ்சமி நில மீட்பு, குடிமனைபட்டா, இன்றைய ஆணவப் படுகொலைகள் என போராடுவது கம்யூனிஸ்டு கட்சிகள்தானே.
இவர்கள்தான் பொதுவுடைமை கோட்பாடு சாதிய ஒழிப்புக்கு எந்தவகையிலும் தீர்வாகாது, பொருந்தாது என்கின்றனர். தஞ்சாவூர் மட்டுமல்ல. தமிழ்நாடு, இந்தியா என பண்ணையடிமை முறை ஒளிந்ததற்கு அதுதான் சான்றாக இருக்கிறது. நிலத்தை கைபற்றாமல் தலித் விடுதலை எப்படி சாத்தியமாகும் என்பதற்கு தெலுங்கான புரட்சியே சான்று. 3௦௦௦ கிராமங்களில் தங்கள் அதிகாரத்தை நிறுவினர். 1௦ லட்சம் ஏக்கர் நிலங்களை தங்களுக்குள் விநியோகித்துக் கொண்டனர் தாழ்த்தப்பட்ட மக்களையும் மூன்று கோடி மக்களை ஒருங்கினைத்த இயக்கம் அது. கேரளாவும் ஆந்திராவும் அதற்கு சாட்சி. ஆனால் இப்போது என்ன சொல்கிறார்கள் கம்யூனிஸ்டுகள் பொருளாதார பிரச்னையை மட்டும் பார்கிறார்கள் என்று. எப்படி அம்பேத்கர் அவர் காலத்தில் நடந்த வர்க்கப் போராட்டங்களை பார்க்க மறுத்தாரோ, அதே போலதான் ஆனந்த் டெல்டும்ப்டேவும் செய்கிறார்.
அவரது ஏகாதிபத்திய எதிர்ப்பும் சாதி ஒழிப்பும் என்ற நூல் (தமிழில் எஸ்.வி.ராஜதுரை. விடியல் பதிப்பகம்) உட்பட எல்லாவற்றிலும் இதுபோன்ற (சாதி ஒழிப்பு போராட்டத்திற்கும் கம்யூனிஸ்டுகளுக்கும் சம்மந்தமில்லை. சாதி ஒரு பிரச்சனையே இல்லை என அவர்கள் கருதுகிறார்கள். அது வர்க்கப் போராட்டத்தின் போக்கில் தீர்க்கக்கூடிய பிரச்சனை அல்ல. தலித்துகளை ஒடுக்கும் பார்ப்பனியத்தை எதிர்த்து அது ஒன்றுமே பேசியதில்லை என பல) ஏராளமான குருட்டு முடிவுகள் காணக்கிடைக்கின்றன. ஆனால் அந்த நூலில் எல்லாவற்றிற்கும் மொழிபெயர்ப்பாளர் குறிப்பு கொடுக்கும் எஸ்.வி.ஆர் நாம் மேல சொன்ன கம்யூனிஸ்டு கட்சிகளின் போராட்ட வரலாற்றை பற்றி ஒரு சிறு குறிப்பும் கூட கொடுக்காமல், ஒருபடி மேலே சென்று அவரது முன்னுரையில் இந்த நூல் எழுப்பும் அடிப்படை கேள்விகள் அனைத்திலும் தனக்கு உடன்பாடுதான் என்று ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறார். இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் இதுபோன்று போராட்டங்கள் நடந்த விபரங்கள் எதுவும் எஸ்.வி.ஆர் அவர்களுக்கு உண்மையில் தெரியாதா என்னவோ!
தமிழகத்தில் 1934ல் இருந்து கம்யூனிஸ்டு கட்சி முறையாக செயல்பட்டு வருகிறது. உண்மையான அக்கறை டெல்டும்ப்டேவுக்கு இருந்தால் அவரின் கேள்விகள் இப்படி இருக்காது. எனவே அவரால் அப்படிப்பட்ட கேள்விகளை எப்போதும் கேட்கவும் முடியாது. அதையும் நாம்தான் இங்கே கேட்க வேண்டும்.
• இவ்வளவையும் செய்து காட்டிய கம்யூனிஸ்டு கட்சிகள் ஏன் இன்று தேக்கத்தில் சிக்கி கிடக்கின்றன?
• நாயக்கன் கொட்டாயில் நக்சல்பாரிகள் இருந்தவரை சாதி எங்கிருந்தது? தர்மபுரி ஏன் இன்று இப்படி இருக்கிறது? அதன் பின்னால் நடந்த சங்கதிகள் என்ன? யார் இருந்தார்கள்? அந்த போக்கை அறிமுகப்படுத்தியவர்கள் யார்?
• தருமபுரி மட்டுமா? தமிழகம் முழுவதும், ஏன் இந்தியா முழுவதும் என்ன நடந்தது? அதற்கான ஆய்வு ஏன் கம்யூனிஸ்டு கட்சிகளிடம் இல்லை? அதற்கு காரணம் என்ன?
• அதே நேரத்தில் தலித்திய இயக்கங்களின் நிதிவலைப்பின்னலை பற்றியும், அவரே சொல்வது போல தலித் இயக்கங்களின் தலைவர்கள் அரசிற்கும் மக்களுக்கும் இடைத்தரகர்கள் போல ஏன் மாறினர்? அதற்கு காரணம் என்ன?
• தலித்துகளின் உணர்வுகளை தலித் அல்லாதவர்கள் உணர முடியாது என்ற சித்தாந்தம் எங்கிருந்து வந்தது?
• எனவே தலித்துகள் தனியாக அணிதிரள வேண்டும், அதுவும் அந்தந்த சாதிகள் தனித்தனியாக அணிதிரள வேண்டும் என்ற போக்கு எவ்வாறு உருவானது?
டெல்டும்ப்டேவால் கேள்வியும் கேட்க முடியாது. பதிலும் சொல்ல முடியாது. ஆனால் அம்பேத்கரின் ஒழுக்க தத்துவத்தைவிட மார்க்சியம் கீழானது என்றும், புரட்சி தானாக நடைபெறும் என்று அம்பேத்கர் காலத்தில் எந்திரகதியாக கம்யூனிஸ்டுகள் கருதி வந்தார்கள் என்றும் அவரால் அவதூறுகளை தாராளமாக கொட்ட முடியும். மேலும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்ற பெயரில் உருவான அரசுகள் பின்னர் மக்கள் வாழ்க்கையுடன் விளையாடியதாலும், சோவித் யூனிய பிளவு போன்ற நிகழ்வுகளாலும் அம்பேத்கரின் புரட்சிக்கு எதிரான “மனிதாபிமான மனநிலையை” மற்றும் “ஆன்மீக ரீதியாக தனிமனித விமோசனம் பெறுவதற்கான” அவரது கோட்பாடை ஆதரிக்க வாய்ப்பு இருக்கிறது என்றும், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை சாபமாக நினைப்பதற்கு அம்பேத்கருக்கு காரணங்கள் இருந்தது என்றும், அதை சோஷலிச நாடுகளின் நிகழ்வுபோக்குகள் நிருபிக்கிறது என்றும் “அம்பேத்கருக்கு பிந்திய தலித் இயக்கங்கள்” என்ற தனது நூலில் முட்டு கொடுக்கவும் அவரால் முடியும். இப்படி இரு பக்கமும் நேர்மையில்லாததுதான் இவரின் உண்மை முகம். இவர்தான் தலித்-கம்யூனிஸ்டு இயக்கங்களை ஒருங்கிணைக்க வந்த ரட்சகராக இங்கு கொண்டாடப்படுகிறார்.
உண்மையில் அம்பேத்கருக்கு பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் மேல் ஆனந்த் சொல்வதுபோல அனுதாபம் இருந்ததென்றால் மார்க்சியத்தை படிக்காத கம்யூனிஸ்டுகள் மத்தியில் அதை படித்துவிட்டு நிராகரித்தது என்ன காரணம் இருந்தது? அம்பேத்கர் பார்ப்பனியத்தை உண்மையிலே ஒழித்துக்கட்ட வேண்டியது என்று கருதினார் என்பதில் மாற்று கருத்தில்லை. ஆனால் அந்த பார்ப்பனியம் என்றால் என்ன? அதன் உற்பத்திமுறை என்ன? அதை கண்டறிந்தவர்கள் கம்யூனிஸ்டுகள்தானே? ஆனால் அம்பேத்கர் ஒரு பேபியன் சோசலிஸ்ட்டாக இருந்தது கூட டெல்டும்ப்டேவுக்கு பெருமையாக இருக்கிறது என்றால் இங்கே நாம் சொல்வதற்கு என்ன இருக்கிறது.
இந்தியாவில் வர்க்கபோரட்டம் சாத்தியமில்லை என அம்பேத்கர் சொல்ல்லிக்கொண்டிருந்தபோதுதான் தாழ்த்தப்பட்ட மக்களும் ஆதிக்க சாதியினரும் சேர்ந்து அதை சாதிதுக்கொண்டிருந்தார்கள்.
சாதியை ஒழிப்பதென்பது வர்க்கமாக அணி சேர்வதில்தான் இருக்கிறதே ஒழிய சாதிகள் தனித்தனியாக அணிசேர்வதில் அல்ல. அதே நேரத்தில் உழைக்கும் மக்கள் வர்க்கமாக அணி சேர்வதற்கே சாதி தடையாக இருக்கிறது என்பது மோசமான வாதமாகும். வரலாறு அதை தெலுங்கானா, புன்னப்பரா, வயலாறு, தெபாகா விவசாயிகள் போராட்டம், வோர்லி ஆதிவாசி மக்கள் போராட்டம், ஆலய நுழைவு போராட்டங்கள், சாணிப்பால் சவுக்கடிக்கு எதிரான செங்கொடி இயக்கம் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலப்பிரபுகளுக்கு எதிரான போராட்டங்கள் என்பது சாதி அடக்குமுறைக்கு எதிரான போன்ற போராட்டங்கள் மூலம் அதை தொடர்ந்து பொய்பித்தே வந்துள்ளது.. சாதி ஆதிக்கவாதிகள் எந்தளவு பாதிக்கப்பட்டார்கள் என்பதற்கு கீழ்வெண்மணியே சான்று. சாதியை புரிந்து கொள்வதில் குழம்பிய கம்யூனிஸ்டுகள்தான் இவை அனைத்தையும் சாதித்தார்கள். ஆனால் இது எதையும் காணத் தவறிய அம்பேத்கரோ,
“நம்மீது குற்றம் சாட்டும் தொழிலாளர்கள் தலைவர்கள் ஏதோ ஒரு வித பிரமையில் இருக்கிறார்கள். அவர்கள் காரல்மார்க்ஸை படித்தவர்கள். உடமை வர்க்கம் தொழிலாளி வர்க்கம் இரண்டு வர்க்கம் மட்டுமே உண்டு என்பவர்கள். இந்தியாவிலும் இரண்டு வர்க்கங்கள்தான், ஆகவே நமது கடமை முதலாளித்துவத்தை ஒழிப்பது என்று கருதுபவர்கள்.. ஐரோப்பாவில் கூட மார்க்ஸ் சொன்னது சரியாக இருந்தது என்று சொல்வதற்கில்லை.. கம்யூனிஸ்டுகளை விட தொழிலாளி வர்க்கத்திற்கு பேரழிவை கொண்டு வந்தவர்கள் வேறு எவரும் இல்லை.. இவர்கள் வேலையே தொழிலாளர்களிடையே அதிருப்தியை வளர்பதுதான். அதிருப்திதான் புரட்சியை தூண்டும், புரட்சியின் மூலம் தொழிலாளி வர்க்கக்கட்சியை நிறுவ முடியும் என்றெல்லாம் இவர்கள் கணக்கு போடுகிறார்கள். இதற்காகவே இந்த அதிருப்தி பிரச்சாரத்தை முடுக்கிவிட்டு, பிளவு சிதறல் இவற்றையே ஓர் அமைப்பு வேலையாக தொடர்ந்து விளைவித்து வருகிறார்கள். இவர்கள் தொழிலாளர்கள் மீது திணிக்கும் தொடர் வேலை நிறுத்தங்களுக்கு என்ன அர்த்தம்?..” (தொகுதி 37, பக்:23௦-236) என்று வெறுப்பை விதைத்துக் கொண்டிருந்தார். அம்பேத்கர் மார்சியத்தை நிராகரித்து விட்டார் என்பது சுயநலமிகளின் கருத்து என இவர் கூறுவதை இங்கே கொஞ்சம் பொருத்திப் பாருங்கள்.
ஆனால் இன்றைய நிலை என்ன? தலித் கட்சிகள் சாதிய அடிப்படியில் தொழிற்சங்கம் அமைப்பதில் போய் நிற்கிறது. இதுதான் தாழ்த்தப்பட்ட மக்களின் தலைமையா? இந்த சமூகத்தை இயக்குவது வர்க்க உறவுகள்தான். சாதிய உறவுகள் அல்ல. உழைக்கும் மக்கள் சர்வதிகாரம்தான் அதற்கு தீர்வு. எனவே வர்க்கப் போராட்டத்தையும் சாத்திய போராட்டத்தையும் எதிர் எதிர் நிறுத்துவது மோசடியானது. ஒன்றுகொன்று சார்பு கொண்டவை. வர்க்கப் போராட்டம் இல்லாமல் ஒருகாலமும் சாதிய போராட்டம் வெற்றி பெறாது. சாதி, மத, ஆணாதிக்க உணர்வு என்பது இதன் வழியாகத்தான் அழியும். அதன் முரண்பாடுகளும் இதனூடாகத்தான் தீரும். வர்க்க கட்டமைப்பின் உருவாக்கத்தின் ஒரு பகுதியாகத்தான் சாதியமைப்பு தோன்றியது என கோசாம்பி, தேவிபிரசாத் சட்டோபாத்யாய, ராகுல்ஜி முதல் ரொமிலா தாப்பர் வரையிலான மார்க்சிய ஆய்வாளர்கள் விளக்கியுள்ளனர். இவர்களின் ஆய்வு எந்த விதத்திலும் யாருக்கும் சளைத்ததும் அல்ல. அதேபோல கம்யூனிஸ்டு கட்சிகளின் போராட்ட வரலாறு தலித்திய இயக்கங்களைவிட வீரியமானது. முந்தியது. அது எவருக்கும் சளைத்ததல்ல.
தலித் என்ற ஒற்றை அடையாளம் எதற்கும் தீர்வாகாது. கம்யூனிஸ்டு கட்சிகள் வென்றெடுத்த உரிமைகளில் கால்வாசி கூட இன்றைய தலித் இயக்கங்கள் இவ்வளவு காலங்களில் தலித் மக்களுக்கு பெற்றுத் தரவில்லை. மாறாக பல்வேறு வழிகளில் சீரழிந்ததுதான் மிச்சம்.
அம்பேத்கர் முதல் ஆனந்த் டெல்டும்ப்டே வரை சாதி ஒழிய வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால் அதற்கு அவர்களிடம் கோட்பாட்டு தீர்வு இல்லை. மாறாக 9௦ சதவீதத்திற்கு மேற்பட்ட தலித் இயக்கங்கள் என்ஜீவோமயமாகியுள்ளதை, பின்நவீனத்துவ சிந்தனை முறை புகுந்துள்ளதோடு இணைத்து கம்யூனிஸ்டு கட்சியையும் ஒரே அளவுகோலில் வைத்து பார்க்கும் அளவிற்கு அவரை கொண்டு சென்றிருப்பது அவரின் அம்பேத்கரியம்தான். உண்மையாகவே தாழ்த்தப்பட்டோர் ஒற்றுமையை பேண வேண்டும் என்றால் அது டெல்டும்ப்டே கூறும் இத்தகைய ஆய்வில் அல்ல.
உயர் சாதியினரின் திமிரை ஒழித்து அவர்கள் தாழ்த்தப்பட்ட மக்களிடம் ஒன்றிணைவதற்கு அம்பேத்கரிடமோ அல்லது இன்றைய தலித் இயக்கங்களிடமோ எந்த திட்டமும் இல்லை.. நாடாளுமன்ற அமைப்பு என்பது புரட்சிகர போக்குகளை தடுத்து நிறுத்துவதற்காக கொண்டு வரப்பட்ட அமைப்பு. அதில்தான் தலித்துகளின் விடுதலை அடங்கியுள்ளது என்று கூறிய அம்பேத்கர் இவருக்கு பிரச்சனை இல்லை. டெல்டும்ப்டே சொல்ல விரும்புவதும் இதுதான்: அம்பேத்கரை ஏற்றுக்கொள்ளவேண்டும். அவர் பிரச்சனைகள் தனி.. கோட்பாடுகள் தனி,, அவர் தனி..
தேர்தல் என்பது போலி ஜனநாயகம்; அதை புறக்கணிக்க வேண்டும் என பேசும் தலித் அமைப்புகள் எவை இருக்கின்றன? கம்யூனிஸ்டு கட்சிகளின் போராட்ட வரலாறு தலித்திய இயக்கங்களைவிட வீரியமானது. முந்தியது. தலித்துகள் யாரோடு ஒருங்கிணைய வேண்டும் என்று வெளிநாட்டு அறக்கட்டளைகள் திட்டம் தீட்டுகின்றனர். கம்யூனிஸ்டுகளின் தியாகங்கள் மறக்கடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அம்பேத்கரிடம் என்னென்ன தவறுகள் இருக்கின்றனவோ அவை அனைத்தையும் பெருமைகுரியவையாக மாற்றிவிட்டால் பிரச்சனை தீர்ந்தது அல்லவா! அந்த வேலையைத்தான் இவர் செய்கிறார். போராளிகளை கடவுளாக்கும் செயல்கள்போல.. சீர்திருத்தவதவாதங்களை புரட்சியை தாண்டி நிறுத்தும் செயல்கள் போல.
எதிர்காலத்தில் தனது செயல்பாடுகளும், எழுத்துகளும் எந்தவிதமான பின்விளைவுகளை உருவாக்கும் என அறிந்திருப்பதுதானே ஒரு தலைவருக்கான தகுதி. அந்த விசயத்தில் அம்பேத்கர் பூஜ்யத்தை நோக்கி வெற்றிகரமாக நகர்ந்தார். அம்பேத்கரின் எழுத்துகளில் இருந்து எப்படியாவது புரட்சிகர கூறுகளை எடுத்துவிட வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்படும் டெல்டும்ப்டே, அம்பேத்கரை போலவே முரண்பாடுகளின் மொத்த வடிவமாகவே தனது ஆய்வு முடிவுகளை முன்வைக்கிறார்அவர் தலித் இயக்கங்களின் குறைகளை சுட்டி காட்டுவதில் பிழை அல்ல; ஆனால் அதை அம்பேத்கரியம் கொண்டு சரி செய்ய முற்படுவதுதான் நமக்கு பிழையாக படுகிறது அவர் சொல்வது போலவே வைத்துக் கொண்டாலும், தலித் இயக்கங்கள் தங்களுக்கான மூலவுத்தியை வகுத்துகொள்வதென்றால் தத்துவ குறைபாட்டால் வாடும் அதனால் எப்படி அது சாத்தியமாகும் என நமக்கு தெரியவில்லை! தேர்தல் என்பது போலி ஜனநாயகம்; அதை புறக்கணிக்க வேண்டும் என பேசும் தலித் அமைப்புகள் எவை இருக்கின்றன?
முடிவாக, அம்பேத்கரிடம் பலவிதமான சிந்தனைகள் தாக்கம் செலுத்தினால்கூட அதுவும்கூட பெருமைக்குரிய விசயம்தான். ஆக மொத்தம் அம்பேத்கர் சொன்னது அம்பேத்கரியம் அல்ல.. ஆனந்த் டெல்டும்ப்டே சொல்வதுதான் அம்பேத்கரியம். வர்க்கம் என்றால் என்னவென்று அம்பேத்கருக்கும் பார்வை கிடையாது; ஆனந்த் டெல்டும்ப்டேக்கும் தெரியாது. எல்லா தீண்டபடாத சாதிகளும் ஒரு தனி வர்க்கம் அவருக்கு. இறுதியில் அம்பேத்கரியம் என்ற ஒன்றை குறிப்பிட்டு காட்ட முடியாது என பின்நவீனத்துவம் போல அதை நமக்கு காட்ட முயல்கிறார். அந்த வகையில் முரண்பாடுகள்தான் அம்பேத்கர். முரண்பாடுகள்தான் ஆனந்த் டெல்டும்ப்டே.
- பாவெல் சக்தி