அமெரிக்கா ஏன் இப்படி நடந்து கொள்கிறது? டொனால்ட் டிரம்ப் என்ற தனிமனிதரின் அடாவடித்தனம்தான் இதற்குக் காரணமா? இதற்கு முன்னர் அமெரிக்கா எப்படி நடந்து கொண்டது?
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பன்னாட்டுச் செய்திகளில் பரவலாக பேசப்படும் சிக்கல்களை எவ்வாறு புரிந்து கொள்வது?
- மேற்காசியாவில் உள்ள ஈரான் மீது இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா தாக்குதல். “ஈரான் என்ற நாகரிகத்தையே அழித்து விடுவேன்” என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல்.
- கிழக்கு ஐரோப்பாவில் உள்ள உக்ரைனுக்கு அமெரிக்கா தலைமையிலான நேட்டோ இராணுவக் கூட்டணியை விரிவாக்க முயற்சி, அதைத் தொடர்ந்த உக்ரைன் - ரசியா போர். உக்ரைனுக்கு அமெரிக்க ஆதரவை விலக்கிக் கொள்ளப் போவதாக டிரம்ப் மிரட்டல்
- டென்மார்க்கின் ஆட்சியின் கீழ் இருக்கும் தன்னாட்சிப் பகுதியான கிரீன்லாந்தை அமெரிக்காவுக்குக் கொடுக்க வேண்டும் என்று வெளிப்படையான மிரட்டல். அதைத் தொடர்ந்து அமெரிக்காவுக்கும் டென்மார்க்குக்கும் கிரீன்லாந்துக்கும் இடையே கிரீன்லாந்தில் அமெரிக்க இராணுவத் தளம் தொடர்பாகவும் கிரீன்லாந்தின் கனிம வளங்கள் தொடர்பாகவும் ஒப்பந்தம் என்று டிரம்ப் அறிவிப்பு.
- அமெரிக்காவின் வடக்கு எல்லையில் உள்ள நாடான கனடாவை அமெரிக்காவின் 51 ஆவது மாநிலமாக இணைத்துக் கொள்ளப் போவதாக அச்சுறுத்தல். அதற்குப் பணியாத நிலையில் டிரம்ப் கனடா மீது வர்த்தகப் போர் தொடுப்பு
- அமெரிக்காவுக்குத் தெற்கே லத்தீன் அமெரிக்காவில் உள்ள வெனிசுலாவின் கச்சா எண்ணெய் வளங்களைக் கைப்பற்றி விட்டதாக டிரம்ப் கொக்கரிப்பு. முன்னதாக, அமெரிக்க அதிரடிப் படைகள் நள்ளிரவில் தாக்குதல் நடத்தி அவரது மெய்க்காவலர்களை படுகொலை செய்து வெனிசுலா நாட்டுத் தலைவர் நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்காவுக்குக் கடத்தி வந்தது.
அமெரிக்கா ஏன் இப்படி நடந்து கொள்கிறது? டொனால்ட் டிரம்ப் என்ற தனிமனிதரின் அடாவடித்தனம்தான் இதற்குக் காரணமா? இதற்கு முன்னர் அமெரிக்கா எப்படி நடந்து கொண்டது?
இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடைகளை இன்றைக்கு 110 ஆண்டுகளுக்கு முன்னர், லெனின் எழுதிய “ஏகாதிபத்தியம் - முதலாளித்துவத்தின் உச்சகட்டம்” என்ற நூலில் பெறலாம்.
“போரின் உண்மையான சமூகத் தன்மையின் அல்லது துல்லியமாகச் சொல்வதெனில், மெய்யான வர்க்க இயல்பின் நிரூபணமானது, போரின் அரசுறவுகளின் வரலாற்றில் அல்ல, போரிட்ட எல்லா நாடுகளிலும் உள்ள ஆளும் வர்க்கங்களது எதார்த்த நிலையின் பகுப்பாய்வில்தான் இயல்பாகவே காணக் கிடைக்கிறது” (லெனின் தேர்வு நூல்கள், தொகுதி 4, பக்கம் 32) என்று லெனின் இந்நூலின் முன்னுரையில் குறிப்பிடுகிறார்.
1914 முதல் 1918 வரை அப்போதைய காலனியாதிக்க ஏகாதிபத்தியமான பிரிட்டனின் தலைமையிலான அணிக்கும் புதிதாக உருவாகி வந்த ஏகாதிபத்திய நாடான ஜெர்மனி தலைமையிலான அணிக்கும் நடந்த முதல் உலகப் போரின் நோக்கத்தை வெளிப்படுத்தும் இந்நூல் இன்றைய போர்களுக்கும் அமெரிக்க ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புகளுக்கும் காரணங்களைத் தேடுவதற்கு வழிகாட்டியாக உள்ளது.
“மிகப் பெரும் பகுதி கொள்ளையைப் பெறப் போவது பிரிட்டிஷ் நிதிக் கொள்ளையர் குழுவா அல்லது ஜெர்மானிய நிதிக் கொள்ளையர் குழுவா என்பதை முடிவு செய்வதற்காக நடைபெற்ற இந்தப் போரில் கோடிக்கணக்கானோர் மடியவும் முடமாகவும் நேர்ந்தது….” (பக்கம் 34)
டிரம்ப் அதிகாரத்துக்கு வருவதற்கு முன்னர் நாடு பிடித்தல், கனிம வளங்களைக் கைப்பற்றுதல், நிதி மேலாதிக்கம் முதலிய ஏகாதிபத்தியக் கொள்கைகளுக்கு ஜனநாயக முலாம் பூசி வந்தன, ஏகாதிபத்திய நாடுகள். அவற்றையே இப்போது வெளிப்படையாகப் பேசுகிறார், டிரம்ப். இதுதான் வேறுபாடு.
லெனின் ஏகாதிபத்தியம் பற்றிய நூலை எழுதிய பின்னர்
- 1917 இல், லெனின் தலைமையில் நடந்த ரசியப் புரட்சியும் சோவியத் ஒன்றியத்தின் உருவாக்கமும்
- 1939 முதல் 1945 வரை நடந்த இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனியில் ஹிட்லரின் தலைமையிலான நாஜி/பாசிச ஆற்றல்கள் முறியடிக்கப்பட்டது
- அதன் பிறகு அமெரிக்கா தலைமையில் மேற்கத்திய ஏகாதிபத்திய முகாமுக்கும் சோவியத் ஒன்றியத்தின் தலைமையில் சோசலிச முகாமுக்கும் இடையிலான மோதல்
- 1991 இல் சோசலிச முகாம் உடைந்து அமெரிக்கா தலைமையில் தனியார்மயம் தாராளமயம் உலகமயம் செயல்படுத்தப்பட்டு இன்றைய உலகளாவிய கார்ப்பரேட்டிச ஏகாதிபத்தியத்தின் உருவாக்கம்
என்ற மிகப்பெரிய மாற்றங்களுக்குப் பிறகும் இன்றைய உலக உழைக்கும் மக்களை சுரண்டும் பிற நாடுகளை அச்சுறுத்தி ஒடுக்கும் ஏகாதிபத்திய அரசியலின் அடிப்படைகளைக் கற்றுக் கொள்வதற்கு லெனினின் இந்த நூலும் அது இடம்பெறும் தேர்வு நூல் தொகுதி 4 உம் முதன்மையானவை.
எடுத்துக்காட்டாக, இத்தொகுதியில் இடம்பெறும் “மகாரசியர்களது தேசியப் பெருமித உணர்ச்சி குறித்து” என்ற கட்டுரை இந்தியா உட்பட பல உலக நாடுகளில் தூண்டி விடப்படும் வெறுப்பு அரசியலைப் பற்றியும் “ஐரோப்பிய ஐக்கிய நாடுகள் வேண்டும் எனும் முழக்கத்தைப் பற்றி” என்ற கட்டுரை, 1992 இல் சோசலிச முகாமின் வீழ்ச்சிக்குப் பின் உருவாகி இன்று 27 ஐரோப்பிய நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏகாதிபத்திய இயல்பு பற்றியும் புரிந்து கொள்ள உதவுகின்றன.
உலக நாடுகளை ஒடுக்கிச் சுரண்டுவதற்கான ஏகாதிபத்தியப் போர்களின் விளைவு என்னவாக இருக்கும்? போரின் அழிவுகள்,
“முதலாளித்துவ வர்க்கத்தால் மிதிக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் ஏமாற்றப்பட்டும் மடையர்களாக்கப்பட்டும் வரும் இலட்சக்கணக்கான, கோடிக்கணக்கான மக்களின் கண்களை என்றும் காணாத வேகத்தில் திறந்து விடுகின்றன. இவ்விதம் போரால் எங்கும் ஏற்பட்ட நாசத்திலிருந்து உலகு தழுவிய அளவில் புரட்சிகர நெருக்கடி எழுந்து வருகிறது” (பக்கம் 34)
உழைக்கும் மக்களின் சோசலிச, கம்யூனிஸ்ட் அரசியல் எதைத் தவிர்க்க வேண்டும் என்பதைப் பற்றிய “ஏகாதிபத்தியப் பொருளாதாரவாதத்தின் முளைப்போக்கு” என்ற கட்டுரையும் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து வீழ்த்துவதற்கான பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கான இராணுவ வேலைத் திட்டம் பற்றிய கட்டுரையும் இடம்பெறுகின்றன.
இந்தப் புரட்சிகர நெருக்கடி எவ்வளவு நீண்டது, கடினமானது, அதன் இறுதி முடிவு என்ன?
“இதன் கட்டங்கள் எவ்வளவுதான் நீண்டவையாகவும் கடினமானவையாகவும் இருப்பினும் இந்நெருக்கடி ஒரு பாட்டாளி வர்க்கப் புரட்சியிலும் அதன் வெற்றியிலும் தவிர வேறு வகையில் முடிவுற முடியாது.” (பக்கம் 34)
இவ்வாறு பாட்டாளி வர்க்கப் புரட்சி வெற்றியில் முடிந்து கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆட்சி செய்யும் சீனா, வியட்நாம், கியூபா, வட கொரியா, லாவோஸ் முதலிய நாடுகள் ஏகாதிபத்திய மேலாதிக்கத்தை எதிர்த்து அரசியல், பொருளாதாரத் துறைகளில் செயல்படுவதோடு இராணுவத் துறையில் தற்காப்பு முறையைப் பின்பற்றி வருகின்றன.
நம் நாட்டில் பாட்டாளி வர்க்கப் புரட்சி ஒன்றின் வெற்றி ஏகாதிபத்தியச் சுரண்டலுக்கும் போர்களுக்கும் முடிவு கட்டி சோசலிச உலகத்தைக் கட்டமைப்பதற்கான உலகளாவிய போக்கில் முக்கியமான திருப்புமுனையாக இருக்கும்.
அதற்காக வேலை செய்வதற்கு, இன்றைய உலகத்தின் பொருளாதார (உலகளாவிய கார்ப்பரேட் நிறுவனங்கள்), அரசியல் (இனவாத, மதவாத வெறுப்பு அரசியல்), இராணுவ (போர்கள், சமூகத்தை இராணுவமயமாக்கல்) செயல்பாடுகளைப் புரிந்து கொள்வது முதன்மையான தேவையாக உள்ளது. அதற்கு லெனின் தேர்வு நூல்கள் தொகுதி 4 இல் இடம்பெறும் ஆக்கங்கள் உறுதுணையாக அமைகின்றன.
விலை: ரூ.275/- | வெளியீடு: என்சிபிஎச், சென்னை.
(லெனின் தேர்வு நூல்கள் 12 தொகுதிகளில் - தொகுதி 4
“ஏகாதிபத்தியப் போர் - கோட்பாடு" )
- இந்திரா