"திருடன் திருடன்..." என்று கூவியவாறு துரத்துகிறார் ஒரு காவலர். அவர் எதிர்பார்த்ததை போலவே, பொதுமக்கள், காவலரிடம் இருந்து தப்பிக்க முனைந்தவரை விரட்டிப் பிடித்து, காவலரிடம் ஒப்படைத்தனர்.

"கட்சி வேலை தொடர்பாக தென்காசிக்குச் சென்று அதன் அருகேயுள்ள குற்றாலத்திற்கு ப. மா. 12.06.1950 அன்று சென்றிருந்தார். ஐந்தருவி செல்லும் சாலையிலிருந்து இலஞ்சி கிராமத்திற்குச் சாலை ஒன்று பிரியும். அப்பிரிவுச்சாலையில் சந்து ஒன்று உண்டு. அதன் வழியாக தோழர் ப.மா. சென்று கொண்டிருந்த போது பிடிபட்ட தோழர் ப. மாணிக்கத்தை அடித்துத் துவைத்து விட்டனர் காவல்துறையினர்" என்று தன் கட்டுரையில் விவரிக்கிறார், பேரா. ஆ.சிவசுப்பிரமணியன்.

thozhar manichakkathin thiyaga vaazhvuஅந்தக் கட்டுரை நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் வெளியிட்டுள்ள. "தோழர் ப. மாணிக்கத்தின் தியாக வாழ்வு" என்ற நூலில் இடம் பெற்றுள்ளது. தோழர் ப. மாணிக்கம் அவர்களிள் தொடக்கக்கால வாழ்வை இப்பகுதியில் பார்ப்போம்

1922 அக்டோபர் மாதம் 26ஆம் நாள் கடலூரில் பிறந்தார் ப. மாணிக்கம். தந்தையார் திரு. பக்கிரி சாமி பிள்ளை; தாயார் திருமதி மகமாயி அம்மாள்.

இவர் எப்படி கம்யூனிஸ்ட் ஆனார்?

1930-இல் இவருக்கு வயது 8. அப்போது காங்கிரஸ் இளைஞர் இராமச்சந்திரன் என்பவர் திருக்கோயிலூரில் நடந்த போராட்டத்தில் காவல்துறையின் தாக்குதலுக்கு உள்ளாகி இறந்து போனார்.

1931இல் பகத்சிங் தூக்கிலிடப்பட்டார் என்கிற செய்தி கடலூரில் பரவி அதை எதிர்த்து கடையடைப்பு உள்ளிட்ட போராட்டங்கள் நடைபெற்றன.

1932இல் காங்கிரஸ் கட்சியின் தடையை மீறி கடலூரில் திருமதி அஞ்சலையம்மாள் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். காவல்துறை தாக்குதல் நடத்திக் கூட்டத்தைக் கலைத்து, திருமதி அஞ்சலையம்மாள் அவர்களைக் கைது செய்கிறது.

தனது 8,9,10 வயதுகளில் நடந்த இந்த மூன்று நிகழ்ச்சிகளும் ப. மாணிக்கம் அவர்களை மிகவும் பாதித்து, பிரித்தானிய ஆட்சியின் மீது வெறுப்பையும் நாட்டு விடுதலைக்குப் பாடுபட வேண்டும் என்ற எண்ணத்தையும் தோற்றுவித்து விட்டன.

இளம் வயதில் உருவான இந்த எண்ணம் திடமாக வளர்ந்ததன் விளைவாகத் தான், ப. மாணிக்கம் பொதுவாழ்வில் அடியெடுத்து வைக்கிறார்.

இவ்வாறு ப. மாணிக்கம் அவர்களின் தியாக வாழ்க்கை வரலாற்றை விரித்துக் கூறும் இந்த நூலில் அவரே தன்னைப் பற்றியும், பி.சீனிவாச ராவ், ப. ஜீவானந்தம் கே.பாலதண்டாயுதம், ஏ.எஸ்.கே ஆகிய ஆளுமைகளைப் பற்றியும் எழுதிய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

தோழர் மாணிக்கம் அவர்களைப் பற்றி பிற ஆளுமைகள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன.

மேலும், ஜனசக்தி பொன்விழா மலர், 1987 இல் வெளிவந்த ஐம்பது ஆண்டுகளின் லட்சியப் பயணம் என்னும் தலைப்பிலான கட்டுரை, தாமரை- உலகத் தமிழ் மாநாட்டு மலர்- 1995 இல் உலகத் தமிழ் மாநாடு - 1995 என்னும் தலைப்பிலான கட்டுரை, புதுவை சுதந்திரம் - சிறப்பு மலர் - 1985 இல் வெளிவந்த பிரஞ்சிந்திய விடுதலை இயக்கம் என்னும் தலைப்பிலான கட்டுரை என ஆகிய ப. மாணிக்கம் அவர்களின் எழுத்துகளும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

தஞ்சைப் பகுதியில் நிலவுடைமையாளர்களால் சுரண்டப்பட்டு ஒடுக்கப்பட்டுக் கிடந்த விவசாயிகளின் உள்ளங்களில், 'அடித்தால் திருப்பி அடி...' என்ற உரிமை நிறைந்த வீர முழக்கத்தை அடிக்கோடிட்டு எழுதிய தோழர் பி .சீனிவாச ராவ் அவர்களைப் பற்றிய கட்டுரையில். சீனிவாச ராவ் 1930இல் தமிழ்நாட்டுக்கு வந்தது, அதே ஆண்டில் சென்னை ஜார்ஜ் டவுனில் அந்நியத் துணிகள் விற்பனைக்கு எதிராகப் போராடியதன் விளைவாகத் தாக்கப்பட்டு சுய நினைவை இழந்தது, சிறையில் சென்னை மாகாண முதலாவது அமைப்பாளரான அமீர் ஹைதர் கான் அவர்களைச் சந்தித்து, கொள்கையில் தன்னை மேம்படுத்திக் கொண்டது தொடங்கி, சீனிவாச ராவ் அவர்களின் மொத்த அரசியல் பணியையும் மிகச் சுருக்கமாக விளக்கியுள்ளார்.

சீனிவாச ராவ் அவர்களின் போராட்டங்கள், சிறைத் துன்பங்கள் எனப் பல முக்கியமான நிகழ்வுகள் இக்கட்டுரையில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

"1975 செப்டம்பர் 30இல் அவர் மறைவின் 14 ஆவது நினைவு நாளன்று, அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் ஒரு பெரிய கூட்டம் நடைபெற்ற போது திருத்துறைப்பூண்டியில் இரண்டு லட்சம் பேர் திரண்டனர். அந்த நாளில் விவசாயத் தொழிலாளர்களும் ஏழை விவசாயிகளும் நிறைந்த அந்தப் பேரணியினர் 20 அம்சத் திட்டத்தை நிறைவேற்றுவதற்குத் தங்களாலான எல்லா முயற்சிகளையும் செய்வதாக உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்." இவ்வாறு மாணிக்கம் குறிப்பிட்டுள்ளார். இது அப்போது உருவெடுத்த விவசாயிகளின் அரசியல் எழுச்சி ஆகும்.

அடுத்து, ப.ஜீவானந்தம் அவர்களைப் பற்றிய கட்டுரையில், சாதி அமைப்பு மற்றும் சாதிப்பாகுபாட்டின்பால் ஜீவாவுக்கு இருந்த வெறுப்பின் விளைவாக, சுயமரியாதை இயக்கத்தின்பால் அவர் ஈர்க்கப்பட்டது, புரட்சியாளர் பகத் சிங் எழுதிய. 'Why became an Atheist?' என்ற புத்தகத்தைத் தமிழில் 'நான் ஏன் நாத்திகனானேன்' என்ற தலைப்பில் மொழிபெயர்த்து வெளியிட்டதற்காக பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளால் 1931இல் கைது செய்யப்பட்டது உள்ளிட்ட பல செய்திகளைக் கொண்டது ப. மா. எழுதியுள்ள இந்தக் கட்டுரை.

காங்கிரஸ் கட்சியின் உள்ளே இருந்து கொண்டே கம்யூனிஸ்டாகச் செயல்படத் தொடங்கிய ஜீவா, இரண்டாம் உலகப் போரை எதிர்த்ததற்காக 1939இல் கைதுசெய்யப்பட்ட நிகழ்வு, அவர் சென்னை மாகாணத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டது, காந்தி ஜெயந்தி விழாவில் உரையாற்றியதற்காக திருவனந்தபுரம் சிறையில் அடைக்கப்பட்டது, இளைஞர் அமைப்புகள், தொழிற்சங்கங்கள், விவசாயிகள் சங்கங்கள் போன்றவற்றைக் கட்டியமைத்து திருவிதாங்கூர் எதேச்சாதிகார ஆட்சிக்கு எதிராக மக்களைத் திரட்டியது, கோவை மில் தொழிலாளர் சங்கத்தை நிறுவி 30,000 க்கு மேற்பட்ட தொழிலாளர்களைத் திரட்டி வேலைநிறுத்தம் செய்தது உள்ளிட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வுகளைப் பதிவு செய்துள்ளார், ப. மா.

அடுத்து, தோழர் கே. பாலதண்டாயுதம் அவர்களைப் பற்றிய கட்டுரை.

தோழர் பாலன் உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது நடந்த நிகழ்ச்சி ஒன்று.

அதில், பகத்சிங்கைப் போல தியாக உணர்வை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில், தங்கள் கால்களில் விலங்கிட்டும், கால்களில் ஆணி அடித்து, இரத்தக் காயத்துடனும் வெகுதூரம் நடந்து தியாக சோதனைப் போட்டி நடத்தினர். அதில் பாலன் வெற்றி பெற்றுள்ளார்.

அடுத்து, "பாலன் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பயின்ற போது, துணைவேந்தர் சீனுவாச சாஸ்திரியின் அநீதிக்கு எதிராக பாலன் மாணவர்களைத் திரட்டி கடுமையான போராட்டம் நடத்தியிருக்கிறார். 1938ஆம் ஆண்டில் இந்தப் போராட்டம் சுமார் இரண்டு மாதக் காலம் தொடர்ந்து நடைபெற்ற இந்தப் போராட்டம் இந்திய மாணவர் வரலாற்றிலும் நீண்டதொரு போராட்டமாகும். இப்போராட்டத்தில் பாலன் மட்டும் பழிவாங்கப்பட்டுள்ளார். பொது இலட்சியத்திற்காக தியாகம் செய்தார். அவருக்கு அப்போது 20 வயது."

இந்தச் செய்திகளுடன் பாலனின் தலைமறைவு வாழ்க்கை, சிறை வாழ்க்கையைப் பற்றியும் ப. மா. இந்தக் கட்டுரையில் எழுதியுள்ளார். 1949ஆம் ஆண்டில் அடக்குமுறை அதிகரித்த போது, பாலனுடன் சேர்ந்து, மலிவாகக் கிடைத்த கோதுமைத் தவிட்டைப் பனைவெல்லம் சேர்த்து சாப்பிட்டு உடலில் பட்ட சிக்கலையும்
ப. மாணிக்கம் எழுதியுள்ளார்.

அடுத்த கட்டுரையில், ஏ.எஸ்.கே அவர்களின் சிறை வாழ்க்கையைப் பற்றியும், மார்க்சின் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை தொடங்கி, 1960 இல் உலகக் கம்யூனிஸ்ட் இயக்கம் வெளியிட்ட அறிக்கை வரை விரிவான அரசியல் விளக்கங்களைக் கொண்ட 'கம்யூனிசம்' என்ற மாபெரும் சிறப்பு வாய்ந்த நூலை, எஸ் கே எழுதியதையும் தோழர் மாணிக்கம் பதிவு செய்துள்ளார்.

'ஜனசக்தி' இதழின் பொன்விழா மலர் - 1987 இல் ப.மா. எழுதிய கட்டுரையும் இந்த நூலில் இடம்பெற்றுள்ளது.

அதில், "ஜனசக்தி 1937 நவம்பர், இல் காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியின் வாரப் பத்திரிகையாகத் தொடங்கப்பட்டது" என்று தொடங்கி, இடையில் ஓரிடத்தில் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கிறார்:

"1937 முதல் 1942 வரை, ஜனசக்தி, நாட்டின் விடுதலை இயக்கத்திற்கும், உழைப்பாளி மக்கள் தங்களின் உரிமைகளைப் பெற நடத்திய போராட்டங்களுக்கும், ஜமீன் இனாம் ஒழிப்பு - விவசாயிகள் இயக்கங்களுக்கும் உறுதுணையாக நின்றது. தமிழகத்தில் மாணவர்கள் இயக்கம் வளர அன்று பெரிதும் உதவியது 'ஜனசக்தி' தான். தமிழக அரசியலில் இடதுசாரிக் கருத்துகள் பரவவும், கோவை, மதுரை, சென்னை போன்ற நகரங்களில் பஞ்சாலைத் தொழிலாளர்களின் போராட்டங்களுக்குத் துணை நின்றது. ரயி்வே தொழிலாளர் இயக்கம் புதுப்பித்து வளரவும் விரிவடையவும் துணை நின்றது ஜனசக்தி பத்திரிகையே" என்று ஜனசக்தி ஐம்பது ஆண்டுகள் தமிழ் மண்ணுக்கு என்ன தொண்டு செய்தது என்று விரிவாக எழுதி இருக்கிறார், மாணிக்கம்.

இவற்றுடன், உலகத் தமிழ் மாநாடு, 1995 பற்றியும், பிரஞ்சிந்திய இயக்கம் பற்றியும் இவர் எழுதியுள்ள கட்டுரைகள் வாசகர்களுக்கு முதன்மையான செய்திகளைத் தருகின்றன.

நூலின் பிற்பகுதியில் மூத்த தோழர் அமரர் இரா. நல்லகண்ணு எழுதிய, "தோழர் ப.மாணிக்கத்தின் தியாக வாழ்வு" என்னும் கட்டுரை இடம்பெற்றுள்ளது.

அதில், "இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தடைசெய்யப்பட்ட போது, மாணிக்கம் இரண்டாண்டு காலம் தலைமறைவாக இருந்த வேளையில் தனது தந்தையின் இறுதிச் சடங்குக்குக் கூடப் போக முடிய வில்லை என்றும், நெல்லைச் சதி வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதியாக சிறையில் இருந்த போது தோழர் மாணிக்கம் தனது ஒரே சகோதரியின் திருமணத்திற்கும் செல்ல முடிய வில்லை" என்றும் கூறியிருக்கிறார் தோழர் நல்லகண்ணு.

நெல்லைச் சதி வழக்கில் மூன்று ஆண்டுகளும், சீனத் தகராறையொட்டி ஓராண்டுக்கு மேலாகவும் தோழர் ப.மாணிக்கம் சிறையிலிருந்ததைக் குறிப்பிட்டுள்ள நல்லகண்ணு,

"நெல்லை, இராமநாதபுரம், மதுரை ஆகிய மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த முன்னூறுக்கும் மேற்பட்ட தோழர்கள் மதுரை மத்திய சிறையில் விசாரணைக் கைதிகளாகவும், ஆயுள் தண்டனைக் கைதிகளாகவும் இருந்தோம். கொடிய அடக்குமுறைக்குள்ளான நேரம். குடும்பங்களைப் பிரிந்த இளைஞர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், வேலையிலிருந்து நீக்கப்பட்ட படித்த இளைஞர்கள் என அனைத்துப் பிரிவுகளைச் சேர்ந்த தோழர்களையும் அரசியல் நெருக்கடியான நேரத்தில் ஒருங்கிணைத்து வழிநடத்திச் சென்றதில் தோழர் ப. மானிக்கம் அவர்களுக்குப் பெரும் பங்கு உண்டு. ஒவ்வொருவரையும் தனித் தனியாகச் சந்தித்து ஆறுதல் கூறுவார். அதே நேரத்தில் அரசியல் தெளிவும் நம்பிக்கையும் ஊட்டுவார்.

உள்கட்சி வாழ்வில், தனிநபர்களின் தவறுகளை எடுத்துக் கூறும் அதே வேளையில் பழிவாங்குதலுக்கு இடமளிக்காமல் கூடுமானவரை திருத்துவதற்கு முயற்சி செய்வார்.

கட்சி அமைப்புகளை உருவாக்குவதிலும், மாவட்ட அலுவலகங்களையும் மாநில அலுவலக வேலைகளை முறைப்படுத்துவதிலும் அக்கறை எடுத்து வழிகாட்டி வந்தார், என்று தோழர் மாணிக்கம் அவர்களின் ஆளுமையை விவரிக்கிறார்.

எளிமையான அரசியல் ஆளுமையாக வாழ்ந்து அண்மையில் அமரரானவர் தோழர் இரா. நல்லகண்ணு. அவரே மாணிக்கம் தோழரின் இயல்பாளுமையைப் பற்றிப் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கிறார்:

"தலைமறைவு, அடக்குமுறை, சிறைத்தண்டனை இவ்வளவையும் அனுபவித்துக் கொண்டு இம்மியளவும் சபலங்களுக்கு ஆளாகாமல், கட்சிப் பணியாற்றிய கம்யூனிஸ்ட் தலைவர் தோழர் ப.மாணிக்கம். ஆடம்பர அரசியல் அவருக்கு அறவே பிடிக்காது.எளிமையும் மன உறுதியும் கொள்கைத் தெளிவும் உள்ளவர்."

ப.மாணிக்கம் அவர்களின் சிறப்புகள் என்று முனைவர் மே.து.ரா. எழுதியிருப்பது:

1.      அமைப்புகளை உருவாக்கும் திறன்,

2.      அணிகளைப் பயிற்றுவிக்கும் பாங்கு,

3.      கொண்ட கொள்கைகளில் தெளிவு,

4.      பெரும்பான்மையை ஏற்றுக்கொள்ளும் பக்குவம்,

5.      எடுத்த முடிவுகளைச் செயல்படுத்துகின்ற உறுதி,

6.      மக்கள் மன உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் ஆற்றல்,

7.      செயல்பாடுகளுக்கு வடிவம் கொடுக்கக்கூடிய ஆக்கம்,

8.      சிக்கல்களை விவரித்து மையப் போக்குகளைத் தெளிவாக வெளிப்படுத்துகின்ற புரிதல்,

9.      விவாதங்களுக்கிடையில் திரண்ட கருத்துகளை இணைத்து இலக்கை வரையறுத்துக் கூறும் அறிவு,

10.    தன்னை முன்னிலைப்படுத்தாத துணிவு,

11.    இயக்க நலனை முன்னிறுத்தும் சால்பு,

12.    விட்டுக் கொடுக்கும் பெருந்தன்மை,

13.    பிறர் திறமைகளைக் கண்டு போற்றும் பண்பு,

14.    எதிர்காலத்துக்குத் திட்டமிடும் தொலைநோக்குப் பார்வை,

15.    அடுத்த தலைமுறையைப் பயிற்றுவிக்கும் கடமையுணர்வு.

பேரா. ஆ. சிவசுப்பிரமணியன் எழுதியுள்ள கட்டுரையில், "தலைமறைவு வாழ்க்கைச் செயல்பாடுகளை ஒடுக்கும் வகையில் காவல்துறையால் பல்வேறு சதிவழக்குகள் கம்யூனிஸ்ட் கட்சி மீது தொடுக்கப்பட்டன, இந்த வகையில், 'திருநெல்வேலிச் சதிவழக்கு. என்ற பெயரில் ஒரு சதி வழக்கை உருவாக்கியது, காவல் துறை. நாற்பத்தி ஒன்பதாம் ஆண்டில் தொடங்கி ஐம்பது வரையிலான காலக்கட்டத்தில் தூத்துக்குடி, விக்கிரமசிங்கபுரம், திருநெல்வேலி, களக்காடு, மணியாச்சி ஆகிய ஊர்களில் பதிவான குற்றவியல் வழக்குகளை ஒன்றிணைத்து, அதற்கு. நெல்லைச் சதி வழக்கு' என்று பெயரிட்டனர். 1951ஆம் ஆண்டுக்கான செசன்சு வழக்கு எண். 117 என்ற இவ்வழக்கில் அறுபத்தேழு பேர் குற்றவாளியாக்கப்பட்டிருந்தனர். இப்பட்டியலில் தோழர் ப.மாணிக்கம் 32ஆவது குற்றவாளியாகக் குறிப்பிடப்பட்டிருந்தார்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

'ஜனசக்தி.. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொன்விழா ஆண்டு மலர் 1975'இல் தோழர் ப.மாணிக்கம் தம்முடைய பொதுவாழ்வு நிலைப்பாட்டைப் பற்றிப் பின்வருமாறு அறிவிக்கிறார்:

"நாட்டில் ஏற்பட்ட அரசியல் நிகழ்ச்சிகள் மாணவப் பருவத்தில் என்னைத் தீவிர அரசியல் பாதைக்கு இழுத்தன. நாட்டின் விடுதலைக்கு வழி எது, சமுதாயத்தின் விடுதலைக்கு, ஏற்றத் தாழ்வற்ற, வளமான சமுதாயத்தை அமைக்க வழி எது என்று தேடி அலைந்த, என் சிந்தனைக்குக் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைகள், வேலை முறைத் தெளிவையும், நம்பிக்கையையும் தந்தன. அன்று தேர்ந்தெடுத்த வழியில் பயணத்தைத் தெளிவோடும், நம்பிக்கையோடும் தொடர்கிறேன்."

தோழர் ப, மாணிக்கம் அவர்களின் எழுத்து உரைநடையாக இருந்தாலும், செய்திகளை 'நறுக்'கென்று சுருக்கித் தருவதில், அது செய்யுளுக்கு ஒப்பாகும்.

"இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்" என்ற குறளுக்கு ஏற்ப, குறிப்பிட்ட ஒரு பணிக்காக கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர் ஒருவரை, மாணிக்கம் தோழர் பணித்தாரே யானால், அந்த தோழர் ஒட்டிய வயிறுடன், கெட்டியான உள்ள த்துடன் அந்தப் பகுதிக்குச் சென்று, சம்பந்தபட்ட பணியை முடித்துத்தான் திரும்புவார். இவ்வாறு அவரிடம் கற்றுக்கொண்டு தகையையுடன் உருவான செயல்பாட்டாளர்கள் ஏராளம்!

ஒரு பொதுவுடைமையாளரின் வாழ்க்கை வரலாறு என்பது ஒருபோதும் தனிமனித வரலாறு அன்று. அதற்குப் ப. மாணிக்கம் அவர்களின் வாழ்க்கை வரலாறு ஒரு ஒரு சிறப்பான எடுத்துக்காட்டு.

மொத்தத்தில், பெயரில் மட்டுமல்ல; செயலிலும் மாணிக்கமாக வாழ்ந்த மாமனிதர் இவர்!

(தோழர் ப. மாணிக்கம் அவர்களின் பிறந்தநாள் அக்டோபர், 26)

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.