நக்வெய்ன் மார்க்சியப் பள்ளியில் (19)
இந்திய தேசிய அரசின் உருவாக்கம் என்பது ஒரு ‘நவீன சமுதாயத்தை’க் கட்டியெழுப்புவதற்கான நேருவின் பார்வையை அரசின் தத்துவமாக ஏற்றுக் கொள்வதிலும், அரசு தலைமையிலான முதலாளித்துவத்தை வளர்ப்பதற்கான அதன் ‘வளர்ச்சி’ நிகழ்நிரலிலும் வேரூன்றியுள்ளது.
சுதந்திரத்திற்குப் பிறகு முதல் இரண்டு பத்தாண்டுகளில் மிக முக்கியமான வளர்ச்சியானது காலனிய காலத்தில் தோன்றிய நிறுவன ஏற்பாடுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலையீடுகள் மூலம் இந்தியாவில் மூலதனத் திரட்டலின் ஆட்சியை நிறுவுவதாகும். இந்தத் தலையீடும், தலையிடாமையும் தான் 1960களில் தெளிவாகக் காணப்பட்ட, மற்றும் 1965-66 நெருக்கடியில் உச்சக்கட்டத்தை அடைந்த இந்த நிறுவனங்களின் முரண்பாடுகளை வரையறுத்தன.
காங்கிரஸ் தலைமையிலான அரசின் 'நவீனமயமாக்கல்' திட்டத்தில் முதலாளித்துவப் பாதையின் தனித்தன்மை சுதந்திரத்திற்குப் பிறகு மூன்று முக்கியக் கொள்கை முடிவுகளில் சுருக்கமாகக் கூறப்பட்டது – அவையாவன: 1.தனியார் சொத்தின் இறையாண்மையைப் பாதுகாப்பதற்கான முடிவு, 2. திட்டமிடலின் மூலம் வளர்ச்சிக்கான வளங்களை ஒதுக்குதல், 3. 1956ஆம் ஆண்டு நிறுவனங்கள் சட்டத்தில் வெளிநாட்டு மூலதனத்திற்கு எதிராகப் பாகுபாடின்மையைக் கொண்டுவருவதற்கு வழிவகுத்த 1949ஆம் ஆண்டு விவாதங்களில் நேரு 'வெளிநாட்டு மூலதன முதலீட்டுக்கு நிலையான களத்திற்கான உத்தரவாதம் அளித்தமை.
இவை இந்தியாவில் காங்கிரஸ் தலைமையால் உறுதிப்படுத்தப்பட்ட முடிவுகள், மேலும் காங்கிரஸ் அமைப்பிலும், மூலதனத்தின் பிற ‘சமூக அமைப்புகளிலும்உயர் மட்டங்களில் இருந்த முன்னணி முதலாளிகளால் அங்கீகரிக்கப்பட்டவை.
அடிப்படை வளர்ச்சி என்பது சொத்துரிமை, மூலதனத்திற்கும் உழைப்பிற்கும் இடையிலான உறவு ஆகியவற்றால் வரையறுக்கப்பட்ட நிறுவனமயக் கட்டமைப்பில் உள்ளார்ந்ததாகும். சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவில் மூலதனத் திரட்டலுக்கான ஆட்சியில் சொத்துறவுகளின் நிறுவனமயமாக்கத்தையும் தொழிலாளர் உரிமைகளின் கட்டமைப்பையும் ஆய்வு செய்வோம்.
இந்திய முதலாளித்துவத்தின் வணிகமுதல்வாதஅடிப்படை:
முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்களுக்கு இடையே, இந்தியாவில் முதல் கட்டப் பொருளாதாரப் பல்வகைப்படுத்தல்நடைபெற்றது. உற்பத்தியில் சாத்தியமான இலாபங்களுக்கான உதாரணம் நிறுவப்பட்டபின், வர்த்தகம், நிதித்துறைகளில்பணம் ஈட்டிய இந்திய முதலாளிகள் தொழில்துறையில் முதலீடு செய்யத் தொடங்கினர்.
1914க்கும் 1939க்கும் இடையில், நவீனத் தொழில்களில் இந்திய முதலாளிகளின் பங்கு வேகமாக வளர்ந்தது. துணி, சர்க்கரை,தீப்பெட்டிகள் போன்ற நுகர்வுப் பொருட்களின் உற்பத்தியில் இந்தியத் தொழில்துறை தன்னிறைவு அடைந்தது. பருத்தி ஆலைகள், அரிசி மற்றும் எண்ணெய் ஆலைகள் மற்றும் பிற சிறு அலகுகள்முதலாம் உலகப் போருக்கு முன்பே உருவாக்கப்பட்டன.
1939இல், பருத்தி ஆடை உற்பத்தியில் இந்தியா கிட்டத்தட்ட தன்னிறைவு பெற்றது. இரண்டாம் உலகப் போரின் போது இந்தியா ஒரு பெரும் ஏற்றுமதியாளராக மாறியது. சர்க்கரைஆலைத்துறை உள்நாட்டுத் தேவைகளை நிறைவுசெய்யும் அளவுக்கு வளர்ந்திருந்தது. இந்தக் காலகட்டத்தில் எஃகு, சிமெண்ட்ஆலைகள் பெரும் தொழில்களாக உருவெடுத்தன.
இருப்பினும், 1939இல் இந்தியா எந்திரங்கள், இயந்திரக் கருவிகள் மற்றும் வேதிப்பொருட்களுக்கு இறக்குமதியைச் சார்ந்திருந்தது.பிர்லா சகோதரர்கள்1941இல் ஆடை இயந்திர நிறுவனத்தைஏற்படுத்தியதை நவீனப் பருத்தி ஆடைகளுக்கான இயந்திரங்களை உற்பத்தி செய்யும் ஒரு தொழில்துறையின் ஆரம்பமாகக் குறிப்பிட முடியும்.
மூலதனப் பொருட்களை உற்பத்தி செய்யும்ஆலைகள் வளர்ச்சியடையவில்லை. ஒட்டுமொத்தத் தொழில்துறையும் ஐரோப்பியத் தொழில்நுட்ப நிபுணத்துவத்தையும், இறக்குமதி செய்யப்பட்ட இயந்திரங்களையும் பெரிதும் சார்ந்திருந்தது.
வெளிநாட்டு முதலாளிகள் பிரதானத் தொழில்துறைகளில் வர்த்தகத்தைக் கட்டுப்படுத்தினர், சர்வதேச கார்டெல்கள் இந்தியத் தொழில்துறையின் பெரும்பகுதியை மறைமுகமாக நிர்வாக முகமை அமைப்புகள் மூலம் கட்டுப்படுத்தினர். ஆகவே, சர்வதேச ஏகபோக மூலதனத்தின் மீது வளர்ந்து வரும் இந்திய மூலதனத்தின் தொழில்நுட்பச் சார்பு வடிவத்தில் முதலாளித்துவ உறவுகளின் கட்டமைப்பில் தொழில்நுட்பத்தடைநிறுவப்பட்டது.
அரசு தலைமையிலான முதலாளித்துவபாதையின் மையப் பணிகளில் ஒன்று, பிரதானமாகஇருந்த வணிக மூலதனத்தின் ஒரு பகுதியையாவது தொழில்துறை மூலதனமாய் மாற்றுவதாக இருந்தது. உண்மையில், இது சுதந்திரத்திற்கு பிந்தைய காலத்தில் முயற்சி செய்யப்பட்ட மிக முக்கியமான மாற்றமாகும். சுதந்திரத்தின் போது இந்திய முதலாளிகளின் இலாபங்களுக்கான வரம்புகள் இலாபத்தின் மீதான அரசின் கட்டுப்பாடுகளால்ஏற்படவில்லை. மாறாக காலனியக் கொள்கைகளால் உருவாக்கப்பட்ட குறைந்த உற்பத்தித் திறனுக்கான தளத்திலிருந்து வந்தன.
வேளாண்மை, மூலதனம், தொழில்நுட்பம் ஆகியவற்றிலான போதாமையால் / தடைகளால் தனியார் துறையின் முன்னெடுப்புகள் வரம்பிடப்பட்டிருந்தன. தேசியத் திட்டமிடல் குழுவின் முதலாளித்துவ உறுப்பினர்களைப் பொறுத்த வரை, பரந்த அளவிலான நிறுவன ஏற்பாடுகள் மூலம் முழு அளவிலான பொருளாதார நடவடிக்கைகளை லாபகரமான தாக்குவதையே தங்களுக்கான வழிமுறையாகக் கண்டனர்.
ஆசியாவில் 'கம்யூனிசம் வந்துவிடுமோ’ என்ற அச்சம் அதிகமாக இருந்த போது அரசுக்கும் மூலதனத்திற்கும் இடையிலான உறவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. கிட்டத்தட்ட நாற்பது கோடிக்கும் அதிகமான மக்களும், பன்முகத் தன்மையும், மோதலின் வரலாறும் கொண்ட இந்தப் பெரும் நாடு, முன்னோக்கிச் செல்லத ஒரு முதலாளித்துவ ஜனநாயகக் கட்டமைப்பையே தேர்ந்தெடுத்தது என்ற உண்மை ஏற்கெனவே கம்யூனிசப் பாதையைத் தேர்ந்தெடுத்த இருநாடுகளைக் கொண்ட கண்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.
எனவே இந்தியப் பரிசோதனை முதலாளித்துவ உலகிற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. திட்டமிடலில் சொத்துகளை ஒழிப்பதன் அவசியத்தை முன்வைக்க வேண்டியதில்லை மாறாகத் திட்டமிடலையே மூலதனக் திரட்டலுக்குப் பயன்படுத்தலாம் என்பதை நிரூபிக்கும் முன்மாதிரியாக இந்தியா இருந்தது.
இந்தியா சுதந்திரம் அடைந்த காலகட்டத்தில், கனரகத் தொழிற்சாலை, உள்கட்டமைப்பு போன்ற முக்கியத் துறைகளை வளர்ச்சியடையச் செய்வதற்கான பொறுப்பை இந்தியாவில் உள்ள முதலாளிகள் ஏற்றுக் கொள்ள முன்வரவில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது (FICCI, 1956).
முதலாளித்துவ வர்க்கம் 'அபாயத்தை எதிர்கொள்ளவும் ஒழுங்குமுறையுடன் செயல்படவும் தயக்கம் காட்டியதால், முதலீடுகளைப் பெருமளவு அதிகரிப்பதற்கு வரம்புகள் விதிக்கப்பட்டன, இல்லையெனில் தென் கொரியாவில் ஏற்பட்டது போல் அரசு வழிகாட்டும் புதிய வணிகமுதல்வாத மாற்றத்திற்கு வழிவகுத்திருக்கக் கூடும்.
சுதந்திர இந்தியாவில் தேசத்தைக் கட்டமைக்கும் குறிப்பிட்ட பணி, உள்கட்டமைப்பை உருவாக்குதல், பொருளாதாரத்தின் உற்பத்தித் தளத்தை விரிவுபடுத்தி வலுப்படுத்துதல், புதிய நிதி நிறுவனங்களை அமைத்தல், பொருளாதார நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துதல் மற்றும் ஒருங்கிணைத்தல் ஆகியவற்றில் அரசே முக்கிய பங்களிப்பு தரும் பொறுப்பை ஏற்றுக் கொண்டது.
பெருமூலதனம் சுதந்திர இந்திய அரசால் பெற்ற ஆதாயத்தை, முதன்மை மூலதனத் திரட்டலுக்கான தளமாக அறுவடை செய்வதற்கான அரசியல் நிலையைக் கொண்டிருந்தது. பெரும் முற்றுரிமைக் குழுக்கள் பாதுகாப்புக்கும், அபாயமின்மைக்கும், வளர்ச்சிக்குமான ஒரு வழியாக அரசுத் தலைமையிலான முதலாளித்துவத்தை ஏற்றுக் கொள்ள ஒருமித்த கருத்தை அடைந்தன.
இந்த வளரும் முதலாளித்துவ வர்க்கத்திற்கு அரசியல் அதிகாரம் இருந்த போதிலும், இந்த வளர்ச்சியை ஆதரிக்கும் தனியார் தொழில் முனைவோர் தளமும் அதில் உள்ளவர்களின் எண்ணிக்கையும் மிகக் குறைவாக இருந்ததன. ‘அரசு தலைமையிலான முதலாளித்துவ’ வளர்ச்சியின் பரந்த நோக்கம் என்னவென்றால், சுதந்திர இந்திய அரசைக்கொண்டு முதலாளித்துவப் பொருளாதாரத்திற்கு உகந்த ஒரு பொருளாதாரக் கட்டமைப்பை உருவாக்குவதாகும், அதில் முதலாளித்துவ வர்க்கத்தினரின் மக்கள்தொகை விரிவாக்கத்திற்கு இடமளிக்க வேண்டும்.
உள்ளூர் ஆதிக்க வர்க்கங்கள் காலனியாதிக்கத்தில் முன்னர் பயன்படுத்தப்பட்ட சாதி, சமூகம், மதம் ஆகியவற்றின் அடிப்படையிலான சமூக உறவுகளை முறியடிக்கத் தயக்கம் காட்டின. வளர்ந்து வரும் இந்திய முதலாளித்துவ வர்க்கம் ஏகாதிபத்தியத்தை அதிகம் நம்பியிருந்தது மட்டுமல்லாமல், நவீனமயமாக்கத்திற்கு வெகுதொலைவிலிருந்த பிற்போக்குச் சித்தாந்தங்களையும் ஆதரித்தது.
அவர்கள் சமூக மற்றும் மத விஷயங்களில் மரபுவழியைப் பின்பற்றினர். குடும்ப நிறுவனங்களே வணிக அலகுகளாகச் செயல்பட்டன. சாதி, இன-மொழியியல் பிணைப்புடன் கூடிய கூட்டுக் குடும்ப அமைப்புகள் வணிக அமைப்பாக்கத்திற்கும், விரிவாக்கத்திற்கும் இன்றியமையாதவையாக இருந்தன,
ஒட்டுமொத்தமாக இந்திய முதலாளித்துவ வர்க்கம் காலனியாதிக்கக் காலத்தின் பிற்பகுதியில் ஏகாதிபத்திய ஆதரவாளராகவே இருந்தது, ஆனால் பம்பாய், அகமதாபாத்தின் ஆலை உரிமையாளர்கள் பலரும் காந்தியின் ஆதரவாளர்களாகவும் இருந்தனர்.
தேசிய விடுதலைப் போராட்டத்தின் வேகம் அதிகரித்தபின், சொத்துகளின் இறையாண்மைக்குக் காங்கிரஸ் தலைமை உறுதியளித்த போது மட்டுமே, ஒரு பழமைவாத சமூகப் பொருளாதார தேசியவாதத்தை அடிப்படையாகக் கொண்டு அரசின் தலைமையில் முதலாளித்துவத்தை வளர்ப்பதற்கான ஆதரவாக இந்த அணுகுமுறை மாறியது.
பாலின ஒடுக்குமுறை, தீண்டாமைக்கு எதிரான திட்டங்கள் காந்திய நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாக இருந்த போதிலும் சாதிக் கட்டமைப்பை, மாற்றியமைப்பதற்கான செயல்பாடுகளில் இந்திய முதலாளித்துவம் ஈடுபடவில்லை என்பதில் சமூகப் பழமைவாதம் பிரதிபலித்தது.
சுதந்திரத்திற்குப் பிறகு ஆதிக்கம் செலுத்திய வர்க்கங்கள் இந்தச் சமூக உறவுகள் எந்த வகையிலும் பாதிக்கப்படுவதை விரும்பவில்லை. ஆகவே, புதுமையும் பழமையும் கலந்த முரண்பாடான கருத்தியல் பண்புகளுடைய சமூக உறவுகளைக் கொண்டதாக குடிமைச் சமூகம் இருந்தது.
அதில் காங்கிரஸ் தலைமையிலான அரசு ‘வளர்ச்சியின் இயந்திரங்களை’ ஒருங்கமைத்து வழிநடத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. தனியார் சொத்துகளின் இறையாண்மையையும், மூலதனத் திரட்டலுக்கான சமூகக் களங்களையும் உறுதி செய்யும் அரசு-சமூக உறவுகளின் பரிணாமக் கட்டமைப்பிற்குள் மட்டுமே மூலதனப் பெருக்கத்தை விரிவாக்கம் செய்ய முடியும்.
முதல் கேள்வி என்னவென்றால், முதலாளித்துவத்திற்கு முந்தைய சமூக உறவுகளை பாதுகாத்துக் கொண்டே இந்தியாவில் முதலாளித்துவத்தை விரிவாக்கம் செய்யும். இந்த முரண்பாட்டிற்கு வழிவகுத்த நிறுவன அமைப்பை சுதந்திர இந்திய அரசு எவ்வாறு நிறுவியது?. இரண்டாவதாக, இந்த நிறுவன அமைப்பு காலனியாதிக்க கடந்த காலத்தின் காரணமாக இந்திய முதலாளித்துவம் எதிர்கொண்ட நான்கு தடைகளில் (விவசாயம், மூலதனம், தொழில்நுட்பம், நிதி) ஏதேனும் மாற்றத்தையும் கொண்டு வந்ததா என்பதுதான்.
விவசாய வர்க்க அடிப்படையில் சாதி, ஆணாதிக்கக் கட்டுப்பாடு:
இந்திய நிலவுடைமை வகுப்புகள் தேசியவாத இயக்கத்தின் பலவீனமான அங்கமாக இருந்தன. ஆங்கிலேயர்கள் மூன்று வகையான நில வருவாய் முறைகளைக் கொண்டிருந்தனர்: நில உரிமையாளர் அடிப்படையிலான அமைப்புகள் (ஜமீன்தாரி, மால்குசாரி என்றும் அழைக்கப்படுகின்றன), தனி சாகுபடி அடிப்படையிலான அமைப்புகள் (ரயத்வாரி) அல்லது கிராம அடிப்படையிலான அமைப்புகள் (மகல்வாரி).
இந்த அமைப்புகள் முக்கியமாகக் காலனி அரசுக்கு நில வரி செலுத்துவதற்கான பொறுப்பு யார் என்பதையும், நிலத்தில் இயல்பாக ‘சொத்துரிமை’ வைத்திருப்பவர்கள் யார் என்பதையும் வரையறுக்கின்றன.
பிரிட்டிஷ் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு வகையான நிலக் குடியேற்றங்களால் வேறுபாடுகளைக் கொண்டிருந்த போதிலும், இவ்வமைப்புகள் அதிக வருவாய், நில வருவாய்களுக்கு பதிலாக ஜமீன்தார்கள், ராயத்துகளுக்குச் சொத்துரிமைகளை நிறுவனமயமாக்கின. நிலமுடையோர் நிலத்திற்கான வருவாய் நிலுவைத் தொகையைச் செலுத்தத் தவறினால், அது அரசால் கையகப்படுத்தப்பட்டு அதிக விலை தரும் ஏலதாரருக்கு விற்கப்பட்டது.
நில வருவாயின் சுமையும், பணப் பயிர் உற்பத்தியைத் திணித்த பணக்காரர்கள், பண வணிகர்கள், வர்த்தகர்களின் பிடியும், பண்ணைகள், நிலங்களைச் சொத்துடைமை வகுப்பிற்கு மாற்ற வழிவகுத்தது. அதிக நிலவாடகையால் சிறு, குறு, நிலமற்ற விவசாயிகள் பரவலாக மோசடி செய்யப்பட்டனர்.
ஆரம்பத்தில் நிலத்தின் மீது தனியுரிமைக் கட்டுப்பாட்டை நிறுவுவதை நோக்கமாகக் கொண்ட இந்த நிலக் குடியேற்றங்கள் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் பழைய நிலக்கிழாரிய மேலடுக்கை பலவீனப் படுத்தின.
வணிகர்கள், பணக்காரர்கள் கிராமப்புற சமுதாயத்தில் ஊடுருவி, வீழ்ச்சியடைந்த நில உரிமையாளர்களுக்கும் வறிய குத்தகைதாரர்களுக்கும் கடன் ஆதாரங்களாக மாறினர். விவசாயிகள், வர்த்தகர்கள் மற்றும் வணிகர்கள் வயல்களிலிருந்து பொருட்களைப் வட்டார சந்தைப்படுத்தும் மையங்களுக்கு மாற்றும் பரிவர்த்தனைகளில் பங்கேற்றனர்.
பிரிட்டிஷ் இந்தியாவில் நிலத்தைச் சரக்காக்குவது ஒரேசீரான பண்பாக எங்கும் காணப்படவில்லை. ஆனால் எல்லா இடங்களிலும் அதிக வாடகை பெறப்பட்டது. எவ்வாறாயினும், முதலாளித்துவச் சமூக உறவுகளுக்கு அவசியமில்லை. விவசாயிகளின் பெரும் பகுதியினர் சாதி, ஆணாதிக்கம் என்ற இரட்டை அமைப்பின் அடிப்படையில் கட்டாய உழைப்பு, அடிமைத்தனம், பரம்பரைத் தொண்டூழியம் ஆகியவற்றால் கட்டுண்ட குத்தகையாளர்களாக, கடன்பட்டவர்களாக இருந்தனர்.
முகாலாய ஆட்சிக் காலத்தில் நிலமற்றிருப்பதே உழைப்பாளர் சந்தை உருவாவதற்கும் அவர்களின் பெருமளவிலான இடப்பெயர்வுக்கும் காரணமாக அமைந்தது.
ஜமீன்தார்கள், பெரும் விவசாயிகள் தங்கள் பண்ணைகளில் கூலியாட்களைக் கொண்டு பயிரிட்டனர், அவர்களுக்குக் கூலி பணமாகவும், தானியமாகவும் அளிக்கப்பட்டது. சில பகுதிகளில் அரையடிமைத்தன நிலைமைகள் காணப்பட்டன. காலனியாதிக்க அரசின் நில உரிமைகள், வாடகை முறைகள் பிரித்தானிய இந்தியா முழுவதிலும் பெருமளவில் மறுசீரமைக்கப்பட்டதால் பொருளாதாரம்சாரா அடக்குமுறை, வறுமை, பசி, பஞ்சத்தால் பெருமளவில் வெளியேற்றப்பட்ட மக்களால் உடைமையற்ற வர்க்கத்தின் வளர்ச்சி தீவிரமடைந்தது.
பதவியிலிருந்து அகற்றப்பட்ட சில இளவரசர்கள், ஜமீன்தார்கள், நிலமிழந்த பெரும் நிலக்கிழார்கள், சாதி மத நிறுவனங்களின் தலைவர்கள், பிரித்தானிய ஆட்சியாளர்களால் கொண்டுவரப்பட்ட காலனிய மாற்றம் தங்கள் ஆட்சி அதிகாரம் தொடர்வதற்கு அச்சுறுத்தலாக இருக்கக் கண்டனர்.
சிலர் காலனிய ஆட்சியாளர்களுடன் ஒத்துழைத்தாலும், அவர்களில் பலர் வெளிநாட்டினர் ஆட்சியை எதிர்ப்பதில் சமரசமின்றிச் செயல்பட்டனர். இதுவே 1857இல் நடந்த முதல் சுதந்திரப் போருக்கான பின்னணியாக அமைந்தது.
பிரித்தானியக் காலனியாதிக்கத்திற்கு எதிரான போராட்டத்தின் இந்த ஆரம்பக் கட்டங்களில் போர்க்குணமிக்க தேசியவாதம் முகலாய சாம்ராஜ்யத்தை மீட்டெடுப்பதன் மூலம் அந்நிய நுகத்தடியிலிருந்து விடுதலை பெற முடியும் என்ற அடிப்படையையும், வர்ணாசிரம, சாதி, ‘இந்து’ மரபையும் கொண்டிருந்தது.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து, குறிப்பாக 1857 எழுச்சியின் அடிபணியலுக்குப் பின்னர் மறுமலர்ச்சி என்பது மட்டும் மெதுவாக வீழ்ந்து வரும் பழைய ஆளும் வர்க்கத்திற்குப் பாதுகாப்பாக இருக்கவில்லை, பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி மற்றும் இருபதாம் நூற்றாண்டின் அதன் மாறிய வடிவங்களாக வளர்ந்து வந்த முதலாளித்துவ அறிவுஜீவிகள் சாதியையும், ஆணாதிக்கத்தையும் நியாயப்படுத்தினார்.
சாதி, ஆணாதிக்க, நிலக்கிழாரிய அடிமைத்தனம், அடிமைத்தனத்தில் வேறுபட்ட வகைகளைக் கொண்ட விவசாய உறவுகள் மற்றும் காலனிய முதலாளித்துவ உறவுகளின் விசித்திரமான கலவையே வர்க்க உருவாக்கத்தின் அடிப்படையாக அமைந்தது.
1857க்குப் பிறகு, பிரித்தானிய அரசு இளவரசர்கள், ஜமீன்தார்களுடனான தொடர்புகளைப் புதுப்பித்து வலுப்படுத்தும் கொள்கையைப் பின்பற்றியது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து தேசியவாத அரசியல் எழுச்சியின் போது, காலனியாதிக்கத்துடனான தன் உறவுகளை நிலக்கிழாரியம் புதுப்பித்துக் கொண்டது.
காலனியாதிக்கத்தை எதிர்க்கும் கிளர்ச்சிகள் ஆதிக்க வர்க்கங்களின் பாதுகாப்பிற்காக மட்டும் செய்யப்படவில்லை. இந்தியாவில் ஆங்கிலேயருக்கு எதிராகக் ’கீழ் வகுப்பு' விவசாயிகள் மேற்கொண்ட எழுபத்தேழு கிளர்ச்சிகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
அவை 'சீர்திருத்தம்' மற்றும் 'மறுமலர்ச்சி’க்கான கூறுகளைக் கொண்டிருந்தன, இக்கிளர்ச்சிகள் நில உரிமை, வருவாய் அமைப்புகளையும் கடுமையாக எதிர்த்தன. ஜோதிபா புலே தலைமையிலான சத்யாசோதக் இயக்கம் போன்ற சாதி எதிர்ப்பு இயக்கங்கள் சுயமரியாதை, சமூக நீதிக்கான போராட்டத்துடன் அதிக நிலவாடகை, கந்துவட்டி ஆகியற்றிற்கு எதிரான போராட்டத்தையும் இணைத்தன.
கம்யூனிஸ்ட் தலைமையிலான விவசாய இயக்கங்களான தெபாகா, தெலங்கானா எழுச்சிகளும், நிலக்கிழார்கள், குத்தகைப் பண்ணையார்கள் அடக்குமுறைக்கு எதிராகவும், நிலம் மற்றும் பயிர்கள் மீதான சொத்துரிமைக்கு எதிராகவும் போராட்டத்தில் ஈடுபட்டன.
நிலம்சார் சொத்துரிமைகளும், அதன் நடைமுறைகளும் மிகவும் விவாதத்திற்குரிய களமாக இருந்தன. இது தொடர்பாக ஏற்பட்ட பல எழுச்சிகளும், அவற்றின் போர்க்குணமும் தேசியத் திட்டமிடல் குழுவிலும், அரசியலமைப்பு சபையிலும் தனிச் சொத்துரிமைகள் பற்றி விவாதிக்கும் சூழலை உருவாக்கின.
1950 வரை, சுதந்திர இந்திய அரசு, அரசியலமைப்பு ஏற்பாடுகள் குறித்துத் தொடர்ச்சியான முக்கிய முடிவுகளை எடுத்த போது, ஏற்கெனவே இருக்கும் தனிச்சொத்துறவுகளை ஒருபோதும் மீற முடியாத வகையில் சமூக, பொருளாதாரச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த மையத்திற்குள்ள அதிகாரத்திற்கு மிகக் குறுகிய வரம்புகள் நிர்ணயிக்கப்பட்டன.
ஆகவே, 1948இல் தெலங்கானா விவசாயிகள் எழுச்சி மற்றும் 1946இல் வங்காளத்தில் உள்ள தெபாகா இயக்கம் ஆகியவற்றின் அரசியல் தாக்கம் இருந்தபோதிலும், நிலக்கிழாரின்பயிர் பங்குகள்மீதானஉரிமையைகட்டுப்படுத்தும் பர்காதார் சட்டம் நிறைவேற்றப்பட்ட போதிலும், 'ஜமீன்தாரி முறையை ஒழிப்பதை'த் தாண்டி விரிவான நிலச் சீர்திருத்தத்தை ஏற்படுத்தாமல் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. 1947-1956 முதல் பத்தாண்டுகளில், போட்டியிடும் கூறுகளின் நுட்பமான சமூகச் சமநிலையைச் சீர்குலைக்கும் என்று அஞ்சி சமூக உறவுகளில் அரசு தலையிடாக் கொள்கையைப் பின்பற்றியது.
ஒட்டுமொத்தமாக முதலாளி வர்க்கத்தினர், 1939இல் திரிபுரி காங்கிரசில் அவர்களுக்கு அரசியல் தோல்வி ஏற்பட்ட பின்னரும், காங்கிரசுக்கு எதிர்தரப்பினரில் பெரும்பாலாக உள்ள கம்யூனிஸ்டுகள், சோசலிஸ்டுகளால் பழைய சமூக ஒழுங்கு சீர்குலைக்கப்படும் என்பதில் மிகவும் எச்சரிக்கையாக இருந்தனர். அப்போதிருந்த பொருளாதாரக் கட்டமைப்புகளே குறிப்பாக விவசாயத்தில். சுதந்திரத்திற்குப் பிறகு கிட்டத்தட்ட முழுமையாக ஏற்றுக் கொள்ளப்பட்டன.
இந்தியாவின் விவசாய உற்பத்தி உறவுகளை அடியோடு மாற்றுவதில் புதிய ஆட்சியாளர்களின் விருப்பமின்மை, இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில், போர்க்குணமிக்க விவசாயிகள், இடதுசாரி அரசியல் இயக்கங்களைக் கொண்ட பகுதிகளைத் தவிரப் பிற பகுதிகளில் குத்தகைச் சீர்திருத்தம், நில உச்சவரம்புச் சட்டங்கள் கூட நீர்த்துப் போகச் செய்தது. ஜமீன்தாரி, ஜாகிர்தாரி முறையை ஒழித்ததன் மூலம் அரசிற்கும் விவசாயிகளுக்கும் இடையிலான இடைத்தரகர்களின் குறைந்தபட்ச ஒழிப்பைத் தாண்டி வேறு எதுவுமே செயல்படுத்தப்படவில்லை.
இந்த இரண்டு முறைகளும் ஏற்கனவே வழக் கொழிந்திருந்தன. இந்த ஒழிப்பு முறை கூட ஜமீன்தார்களுக்கு இழப்பீட்டு வடிவங்களுடனும், உடைமையாளர் பயிரிட்ட நிலத்தைத் தக்கவைத்துக் கொள்ளும் உரிமையுடனும் வந்தது. இது பலவிதமான வழிமுறைகளால் ’உடைமையாளர் பயிரிட்டது’ என்று ஏட்டில் காட்டப்பட்டு பினாமி மூலம் பெரும் நிலவுடைமைகளைத் தக்கவைத்துக் கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது.
ஆகவே, சுதந்திரத்திற்குப் பிறகு இடைத்தரகர்களை ஒழிப்பதற்கான குறைந்தபட்ச நிலச் சீர்திருத்தங்கள் மிகவும் போதாக்குறையானவை. ஆயினும் கூட, இது ஜமீன்தாரி பகுதிகளில் உள்ள இடைப்பட்ட சாதிக் குத்தகைதாரர்களில் பெரும் பகுதியினரை உடைமையாளர்களாக மாற்றியது. எனவே, ஜமீன்தாரி ஒழிப்பு என்பதும் ஜமீன்தார்களின் பெயரளவிலான வருவாய் சேகரிக்கும் உரிமைகளை அகற்றுவதாகவே இருந்தது. நிலத்தின் மீதான அவர்களின் உண்மையான கட்டுப்பாடு நீண்ட காலத்திற்கு முன்பே மறைந்து விட்டது. எனவே ஜமீன்தாரி முறை ஒழிப்பின் முக்கியத்துவம் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் மிகக் குறைவானதாகவும், வெறும் அடையாளமாகவுமே இருந்தது.
வேளாண் உறவுகளில் பெருமளவில் தடையற்ற சந்தை, விவசாய உயரடுக்கின் மீது நேரடி வரிவிதிப்பு இல்லாத கொள்கையுடன் இணைந்து ஒரு நிறுவனக் கட்டமைப்பை உருவாக்கியது, அதில் நிலம் ஒரு சரக்காகமாறியது, பயிர்கள் சக்திவாய்ந்த இடைத்தரகர்கள் மூலமாகவும், பணஆற்றல்மிக்கவலுவான உரிமையாளர்கள் வர்க்கத்தின் மூலமாகவும் சந்தைக்கு கொண்டுவரப்பட்டன. இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் பண ஆற்றல் மிக்க உரிமையாளர் வர்க்கம் உருவானது.
இந்த வர்க்க இடைநிலை, உயர் சாதிப் பெரும் விவசாயிகள், நிலக்கிழார்களின் ஒருங்கிணைந்த ஆதரவு முதலாளித்துவமல்லாத உபரி அபகரித்தலின் கட்டமைப்புகளிலும், சுதந்திர இந்திய அரசின் மாற்றத்திற்கான கட்டமைப்புகளிலும் வேரூன்றியுள்ளது. விவசாய வர்க்க உறவுகள் சாதி,பாலினத்தில் பொதிந்துள்ளன.
ஒரு நபருக்கு நிலம் சொந்தமானதா, அவரால் கட்டுப்படுத்தப்படுகிறதா என்பது அந்த நபரின் சாதிநிலையால் நிர்ணயிக்கப்படுகிறது. சாதியும் வர்க்கமும் இவ்வாறு மிக நெருக்கமாகத் தொடர்புடையவையாக இருந்தன, ஒன்று மற்றொன்றை வலுப்படுத்தியுள்ளது. பயிரிடப்பட்ட நிலத்தின் பத்திரங்கள் மீது பெண்களுக்கு உரிமை இல்லை, எனவே பெண் தொழிலாளர் சக்தியின் பெரும் பகுதி விவசாயத்திற்காக அர்ப்பணிக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் விவசாயிகளாக அங்கீகரிக்கப்படவில்லை.
கொள்கை வகுப்பாளர்கள் விவசாய சீர்திருத்தங்கள் மேலும் தேவையில்லை என்று நம்பி தங்களை ஆறுதல் படுத்திக் கொண்டனர். இவ்வாறு விவசாயக் கட்டமைப்பிலும், அரசின் கட்டமைப்புகளிலும் நிலக்கிழார்களின் ஆதிக்கம் உறுதி செய்யப்பட்டது, உபரி அபகரிப்பின் அரை நிலப்பிரபுத்துவக் கட்டமைப்புகளில் அவர்களின் இருப்பு வேரூன்றியுள்ளது.
கூட்டாக அவர்கள், விவசாய உறவுகளை மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட எந்தவொரு நடவடிக்கையையும் எதிர்க்கும் / மீறும் திறன் கொண்ட குறிப்பிடத்தக்க அரசியல் அதிகார மையத்தை உருவாக்கினர். இது இந்தியாவில் மூலதனத் திரட்டலின் ஆட்சியில் முதல் முரண்பாட்டிற்கான அடிப்படையாக அமைந்தது, சொத்துரிமைகளின் நிறுவன ஏற்பாடு இன்றைய காலம் வரை கொள்கை ஆட்சிகளில் விவசாயத் தடைகளை (போதாமை) பெருக்க வழிவகுத்தது.
இது நான்கு பரிமாணங்களைக் கொண்டுள்ளது: முதலாவதாக, இது பொருளாதாரத்தில் வேண்டலுக்கான கட்டுப்பாட்டை வரையறுத்து, காலனிய காலத்திலிருந்து பெறப்பட்ட பெரும் தொழிலாளர் இருப்புக்களை நிலைநிறுத்தியது.
இரண்டாவதாக, ஒரு விவசாய வேளாண் உபரியின் மூலம் தொழில்துறை வளர்ச்சி ஏற்படுத்துவதை நிராகரித்ததன் மூலம் ஒரு வழக்கமான முதலாளித்துவ மாற்றத்தை அது மறுதலித்தது. மூன்றாவதாக, சொத்துரிமைகளின் படிநிலைகளின் வரையறையில் சாதி, பாலினம், சொத்துறவுகள் ஆகியவற்றுக்கு இடையேயான வலுவான பிணைப்புகள் தொடர்வதைப் பாதுகாத்தது. நான்காவதாக, பொருளாதாரமல்லா வற்புறுத்தலின் அடிப்படையில் உழைப்புச் சுரண்டல் நிலைத்திருப்பதை இது உறுதி செய்தது.
மூலதனம், உழைப்பு, அரசு: ஊதியக் குறைப்பை நிறுவனமயமாக்குதல்:
இந்திய முதலாளித்துவ வர்க்கம் பொருளாதாரத்தைப் பல்வகைப்படுத்தும் செயல்முறையில் பின்பற்றிய ‘அரசு-தலையீட்டின்’ குறிப்பிட்ட கட்டமைப்பானது முரண்பாடுகள் நிறைந்த ஒன்றாக இருந்தது. இது தாமதமாகத் தொழில்மயப்படுத்தப்பட்ட நாடுகளின் குறிப்பிடத்தக்க பண்பாகும்.
இதற்குத் திட்டமிடல் செயல்முறையோ, இறக்குமதி பதிலீட்டுத் தொழில்மயமோ காரணமல்ல. மாறாக தொழிலாளர் உடனான மூலதனத்தின் உறவு, முதலாளித்துவத்திற்கு விரோதமான ஒரு கருத்தியல் சூழலில் வரையறுக்கப்பட்டுள்ளது. இதுவே முதலாளித்துவ வர்க்கத்துடனான அரசின் உறவை வரையறுத்தது.
உற்பத்தித் திறனை மேம்படுத்துவதன் மூலம் லாபத்தை அதிகரிக்கும் கொள்கைகளை வெற்றிகரமாகச் செயல்படுத்த அரசு தவறியதால், உழைப்பு மீதான ஒழுங்குமுறையின் மூலமே லாபத்தை பராமரிப்பது அதிக முக்கியத்துவத்தைப் பெற்றது. எனவே, 'உற்பத்தித் திறன் அதிகரிப்பு' என்பதை விட லாபத்தையே நோக்கமாகக் கொண்ட, திட்டமிடல், இறக்குமதி பதிலீட்டுத் தொழில்மயம் ஆகியவை அரசிற்கும் மூலதனத்திற்கும் இடையிலான உறவில் முக்கியமானவை, ஆனால் முதலாளி வர்க்கத்துடனான அமைப்பாக்கப்பட்ட உழைப்பாளர்களின் உறவே அரசு சார்ந்த முதலாளித்துவ வர்க்கத்தின் உறவுக்கு அடிப்படையாக அமைந்தது.
புதுச்செவ்வியல் வாதங்கள் இந்தக் காலகட்டத்தில் அரசு, தொழிலாளர்களுக்கு ஆதரவாய் இருந்ததாகக் குறிப்பிடுகின்றன. வலிமையான இந்தியத் தொழிலாளர் சட்டங்கள் இந்திய மூலதனத்தின் போட்டியிடும் திறனுக்கு ஒரு தடையாக இருப்பதாக வாதிடப்படுகிறது.
இது ஒரு நம்பிக்கை அடிப்படையிலான கூற்று என்றும், வரலாற்று ஆய்வு இதற்கு துணை நிற்காது என்றுமே இங்கு நாங்கள் வாதிடுவோம், இங்கு பரிசீலிக்கப்பட்ட காலகட்டத்தில் தொழிற்சங்கங்களின் அமைப்பாக்கப்பட்ட ஆற்றல்தான் அமைப்புசார் துறையில் அடிப்படை வேலை நிலைமைகள் குறித்து முத்தரப்பிலான தீர்வைப் பெற வேண்டும் என்றும், அதற்கு ’முறையான' வடிவம் கொடுக்க வேண்டும் என்றும் அரசை வற்புறுத்தியது.
இத்தகைய ஏற்பாடு இருந்த போதிலும், இந்தியாவில் தொழிலாளர் சட்டங்கள் பொருந்தக் கூடியதாகக் கருதப்படும் அமைப்புசார் தொழில்துறையில், தொடர்ச்சியான உழைப்பை மலிவாக்கும் செயல்முறையே உபரி உருவாக்கத்திற்கும், இலாபத்தை உருவாக்குவதற்குமான முக்கிய வழியாக இருந்தது. எனவே, தொடர்ந்து உழைப்பை மலிவாக்குவதன் மூலமே இந்தியாவில் முதலாளித்துவம் தொடர்ந்து முன்னேறியுள்ளது. ஒன்றோடொன்று தொடர்புடைய நான்கு வழிமுறைகள் மூலம் உழைப்பு மலிவாக்கப்பட்டது.
வர்க்கம், சாதி, பாலினம், மற்றும் மதம் ஆகியவற்றின் அடிப்படையில் தொழிலாளர் படிநிலை ஏற்படுத்தி, பாகுபடுத்தி, ஊதியக் குறைப்புச் செய்தல்; ஊதியமற்ற உழைப்பின் சுரண்டல் (பெரும்பாலும் பெண்கள், ஆனால் உற்பத்தி மற்றும் மறுவுற்பத்தியில் ஆண்களும் கூட); ஆணாதிக்கம், காலனிய மரபுரிமையாகப் பெற்ற சேமப் பட்டாளம் ஆகியவற்றின் அடிப்படையில் நிறுவனமயமாக்கப்பட்ட அரை நிலப்பிரபுத்துவ உழைப்புச் சுரண்டலின் நீடிப்பு; வர்க்கம், சாதி மற்றும் ஆணாதிக்கத்திற்கு இடையிலான நிறுவனமயமாக்கப்பட்ட பிணைப்பைச் சார்ந்து இந்தியாவின் முதலாளித்துவ வர்க்கத்தின் வணிகமுதல்வாதத் தன்மை நிலைநிறுத்தப்பட்டது. சாதி மற்றும் சொத்துறவுகளைக் கட்டமைப்பதில் விவசாயத் தடை நிலைநிறுத்தப்பட்டது.
மேலும் சாதி மற்றும் ஆணாதிக்கத்தின் கலவையே இந்தியாவில் சாதி இந்து ஆணின் சொத்துரிமைகளுக்குச் சலுகை வழங்குவதில் தனிநபர் வரியையும், பெருநிறுவன ஆளுகைச் சட்டங்களையும் ஒருங்கிணைப்பதை வரையறுக்கிறது.
இந்தியாவில் புதிய தொழிலாளர் வர்க்கம் 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வளர்ந்தது. இதுமிகவும் சிறியதே. 1911ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி அமைப்புசார் தொழிலில் பணியாற்றும் மொத்த மக்கள்தொகையின் பங்கு 0.69 விழுக்காடாகும்.
இருப்பினும், இந்தியாவில் தேயிலைத் தோட்டங்களின் ஒப்பந்தத் தொழிலாளர்களும் சுரங்கங்கள், தொழிற்சாலைகளின் தொழிலாள வர்க்கத்துடன் சேர்ந்து ‘நவீன’ பொருளாதாரத்தின் ஒரு பகுதியாக இருந்தனர். அவர்கள் ஒருங்கிணைந்து, கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் புதிய இந்தியத் தொழிலாள வர்க்கத்தை அமைத்தனர்.
சிறிய முதலாளித்துவ உறைவிடங்களின் பெருக்கத்தோடு, தொழில்துறை தொழிலாள வர்க்கமும் எண்ணிக்கையில் வளர்ந்தது, ஆனால் மக்கள்தொகையில் வெறும் 6 விழுக்காட்டினர் மட்டுமே தொழிற்சாலைகளில் பணிபுரிந்தனர், மேலும் அவர்களையே அமைப்புசார் வேலைவாய்ப்பு பெற்றவர்கள் என்ற நிலையில் கருத முடியும். இவர்களில் பெரும்பாலானோர் ஆண்களாகவே இருந்தனர். பெரும்பான்மையான ஆண்கள், பெண்களின் வாழ்வாதாரமானது அமைப்புசாராத் துறையைச் சார்ந்தே இருந்தது.
இவ்வாறு, ஒரு பெரிய அமைப்புசாராப் பொருளாதாரம் காலனிய காலத்திலிருந்து இந்தியப் பொருளாதாரத்தை வகைப்படுத்தியது. காலனிய முதலாளி-தொழிலாளர் உறவுகள் ரயில்வே, தொழிற்சாலைகளில், கட்டுமானப் பணிகளில் ‘கூலி கும்பல்களை’ அடிப்படையாகக் கொண்ட ஒரு கருவியாகவும், தேயிலை, ரப்பர் மற்றும் காபித் தோட்டங்களில் ‘தற்காலிக உழைப்பு’ ஆகவும் அமைப்புசாரா முறைகளைப் பயன்படுத்தியது. காலனிய ஆட்சியின் கீழ் விவசாய வளர்ச்சியிலான கட்டுப்பாட்டைத் தீவிரப்படுத்தியதன் விளைவாக இந்தத் தொழிலாள வர்க்கம் தோற்றம் கொண்டது.
இந்தத் தொழிலாள வர்க்கம் அதன் இருப்பிடத்தின் அடிப்படையில் நிலக்கிழாரிய நில உறவுகளின் கட்டுண்ட தன்மை, அடிமைத்தனம் மற்றும் முதலாளித்துவ உற்பத்தி வளர்ந்து வரும் இடங்களில் உழைப்பு மதிப்புகளை உருவாக்குபவர்கள் என அதன் இரட்டைப் பண்புகளைத் தக்க வைத்துக் கொண்டது. ஆகவே, இந்தியப் பாட்டாளி வர்க்கத்தில் முறிவுகளையும், பிளவுகளையும் உருவாக்குவதில் சாதியும் ஆணாதிக்கமும் முக்கிய பங்கு வகித்தன.
இருந்த போதும், முதலாம் உலகப் போரின் முடிவில் தொழிலாளர்கள்வர்க்க அடிப்படையில் தொழிற்சங்கமயமாக்கப்பட்டு அரசியல் மற்றும் பொருளாதார கோரிக்கைகளின் மூலம்ஒழுங்கமைந்தஎதிர்ப்பைவெளிப்படுத்தத் தொடங்கினர்.
1918 மற்றும் 1920 க்கு இடையில் வங்கம் பரவலான தொழில்துறை வேலைநிறுத்தங்களைக் கண்டது இது கிலாபத் ஒத்துழையாமை இயக்கத்தை ஒழுங்கமைப்பதை மேலும் விரைவுபடுத்தியது. சணல் ஆலைத் தொழிலாளர்களுடனான தொடர்புகளை வளர்ப்பதிலும், அவர்களின் ஆதரவைப் பெறுவதிலும் உள்ள நன்மைகளை அரசியல் கட்சிகள் இப்போது காணத் தொடங்கின.
1930களில், தொழிற்சங்கங்கள் வங்காளம், பம்பாய் மாகாணங்களில் விரைவாக ஒரு அரசியல் சக்தியாக மாறிக்கொண்டிருந்தன, மேலும் அமைப்புசார் தொழிலாள வர்க்கம் போர்க்குணமிக்க வேலைநிறுத்தங்கள் மூலம் அதன் இருப்பை உணர்த்தியது.
அமைப்புசார் துறையில் உள்ள தொழிலாளர்கள் இந்திய அரசியலில் வர்க்க அடிப்படையிலான அமைப்பின் மிகவும் முற்போக்கான குரல்களாக மாறினர். 1951 மற்றும் 1961 க்கு இடையில் தொழிலாளர் கட்டமைப்பில் ஓரளவு மாற்றம் மட்டுமே ஏற்பட்டது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். 1951 ஆம் ஆண்டில், தொழிற்சாலை தொழிலாளர்கள் சுமார் 10 மில்லியனாக இருந்தனர். மொத்த தொழிலாளர்களில் 6 விழுக்காடாகவும், வேளாண் அல்லாத துறையில் 17 விழுக்காடாகவும் இருந்தனர்.
மொத்த உழைப்புச்சக்தியில் தொழிற்சாலை தொழிலாளர்களின் பங்கு 1951 ல் 9.49 விழுக்காடாகவும், 1961 இல் 9.95 விழுக்காடாகவும், 1971 ல் 9.98 விழுக்காடாகவும் இருந்தது. இருப்பினும், தொழிற்சாலை வேலைவாய்ப்பின் கூட்டு ஆண்டு வளர்ச்சி விகிதம் முதல் திட்ட காலத்தில் 1.7 விழுக்காட்டிலிருந்து மூன்றாம் திட்ட காலத்தில் 5.7 சதவீதமாக அதிகரித்தது.
1966 மற்றும் 1977 க்கு இடையில் சுரங்கங்கள், தொழிற்சாலைகளில் தனியார் மற்றும் பொதுத்துறையில் மொத்த வேலைவாய்ப்பு சராசரியாக 1.7 விழுக்காடுமட்டுமே அதிகரித்துள்ளது. ஆகவே, அமைப்புசார் துறையில் வாழ் வாதாரங்களிலான அதிகபட்ச வளர்ச்சி முதல் மூன்று திட்டங்களின் காலத்துடன் ஒத்துப்போகிறது.
1968 மற்றும் 1984 வரையிலான காலகட்டம் உழைப்புச் சக்தியில்தேவைக்கேற்பமாற்றத்தக்கதாகஅதிக நெகிழ்வுத்தன்மை ஏற்படுத்தப்பட்டது, இது 1990களில் மேலும் அதிகரிக்கப்பட்டது.
சுதந்திரத்திற்குப் பிறகு, முதலாளி வர்க்கம்,1920 களில் இருந்தே தொழிற்சங்க அமைப்பின் பன்முகத்தன்மையின் மூலம் சட்டபூர்வமான தன்மையையும் அதிகாரத்தையும் வளர்த்த ‘தொழிலாளர் வர்க்கத்தை ஒழுங்குமுறைக்குட்படுத்த’ அரசையே சார்ந்திருந்தது. இது இந்தியாவுக்கு பிரத்யேகமான ஒரு பிரச்சினை அல்ல. சமூக ரீதியாக நியாயமான காரணத்தாலேதொழிலாளர்களின் கூட்டு உரிமைகள்பெறப்பட்டன.
சுரங்கங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் உள்ள மொத்த தொழிலாளர் எண்ணிக்கையில், ஒரு பகுதியே தொழிற்சங்கப்படுத்தப்பட்டது. இந்த காலகட்டத்திற்கான தொழிற்சங்க உறுப்பினர் குறித்த புள்ளிவிவரங்கள் அரிது என்பதால் மதிப்பிடுவது கடினம்.
தொழிற்சங்கங்கள் தாக்கல் செய்யும் தகவல்களின் அடிப்படையில் சில அலுவல்சார் புள்ளிவிவரங்களைத் தொழிலாளர் அமைச்சகத்தின் பதிவுகள் வழங்குகின்றன. இந்தப் புள்ளிவிவரங்கள் தொழிற்சங்கங்களின் எண்ணிக்கையைக் குறைத்து மதிப்பிடுகின்றன, ஏனெனில் வருவாய் கணக்கு தாக்கல் செய்யாத தொழிற்சங்கங்கள் இதில் சேர்க்கப்படவில்லை.
இரண்டாவது தேசியத் தொழிலாளர் ஆணைய அறிக்கை (இந்திய அரசு, 2002) மேற்கோள் காட்டிய இந்த தரவுகளின்படி, தொழிற்சங்கங்களின் எண்ணிக்கை 1951இல் 2002ஆக இருந்தது 1961இல் 6,813ஆக உயர்ந்துள்ளது. உறுப்பினர் எண்ணிக்கை 1.76 மில்லியன் 4.01 மில்லியனிலிருந்து அதிகரித்துள்ளது. தொழிற்சங்க இயக்கத்தின் வலிமை அதன் எண்ணிக்கையில் இல்லை, மாறாக அதன் போர்க்குணத்திலும் அரசியல்மயமாக்கத்திலும் உள்ளது.
இந்தியத் தொழிற்சங்க இயக்கம் விடுதலை நோக்கிய முற்போக்கான பங்கைக் கொண்டுள்ளது. பொருளாதாரத்தில் பெரும்பான்மையான தொழிலாளர்கள் தொழிற்சங்க இயக்கத்தின் வெளியே இருந்த போதிலும், காங்கிரஸின் சட்டபூர்வமான தன்மைக்காக அதன் தொழிற்சங்க பிரிவைச் சார்ந்திருப்பதும், போட்டி அரசியல் தொழிற்சங்கங்களின் வளர்ச்சியும் (குறிப்பாக இடதுசாரிகளுடையவை) அமைப்புசார் தொழிலாளர்களுக்கு ஒரு புதிய முக்கியத்துவத்தை அளித்தது (இந்திய அரசு, 2002).
எனவே, மூலதன-தொழிலாளர் உறவுகளின் களத்தில், முதலாளிகள், தொழிலாளர்களின் அமைப்பாக்கப்பட்ட தளங்கள் அரசின் ஒப்பீட்டு சுயாட்சியில் மாற்றத்தைத் தீர்மானிப்பதில் பங்கு வகித்தன. அக்டோபர் 24, 1953 அன்று, தொழில்துறை தகராறு (திருத்தம்) அவசரசட்டம் பணிநீக்கம் மற்றும் பணிநீக்க இழப்பீடு ஆகியவற்றை ஒழுங்குபடுத்துவதற்காகக் கொண்டுவரப்பட்டது.
இது ஜவுளி ஆலைகளில் சரக்குகள் குவிந்து வருவதாலும், அதன் விளைவாக ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஆலைகள் மூடுவதாக அச்சுறுத்தியதாலும் ஏற்பட்ட நெருக்கடிக்கு பதிலாகஅமைந்தது. இந்த செயல்முறையில் ஏராளமான தொழிலாளர்களை இடைநீக்கம் செய்தல், பணிநீக்கம் செய்தல் ஆகியவை அடங்கும். இந்த சட்டத்ததால் முதலாளிகள் அதிருப்தி அடைந்தனர். அலகுகள் திறந்த நிலையில் இருக்க வேண்டும் என்று வலியுறுத்துவதற்கு பதில், குவிந்திருக்கும் சரக்குகளில் உள்ள சிக்கலை வேறு வழிகளில் தீர்க்க முடியும் என்று அவர்கள் உணர்ந்தனர்.
தீர்ப்பளிக்கும் செயல்பாட்டில் அரசின் பங்கை அவர்கள் எதிர்த்தனர். அரசு நடுவராகச் செயல்பட வேண்டும் என்ற தொழிற்சங்கக் கோரிக்கைகளுக்கு எதிராக 1954ஆம் ஆண்டில் அகில இந்திய தொழில்துறை முதலாளிகளின் அமைப்பின் (AIOIE) தலைவர் எம்.எல் ஷா, தொழிற்சங்க கோரிக்கைகளுக்கு எதிராக, தொழிலாளர் தகராறுகளை தீர்ப்பதில் அரசு இயந்திரம் சம்பந்தப்பட்ட தீர்ப்பு நடைமுறைகளைக் காட்டிலும் கூட்டு பேரம், பேச்சுவார்த்தை மூலமான நல்லிணக்கச் செயல்முறையே விரும்பத்தக்கது என்று வாதிட்டார்.
1956இல், தொழிற்சங்கங்களின் அரசியல் பலத்திலிருந்து தீர்ப்புப் பொறிமுறை ஏதோவொரு வகையில் அரசையும் உள்ளடக்கும் என்பது தெளிவாகியது. எனவே, அகில இந்தியத் தொழிற்சாலை முதலாளிகள் அமைப்பின் (AIOIE) உறுப்பினர்கள் தீர்ப்பாயங்கள் உயர் நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றத்தால் அங்கீகரிக்க வேண்டுமேதவிர, அரசாங்கத்தால் அல்ல என்றுகுரல்கொடுத்தனர்(AIOIE, 1956).
இந்திய வர்த்தக, தொழில்துறை அவைகளின் கூட்டமைப்பில் மூலதனத்தின் முன்னணி குரலான ஜி. டி. சோமானி, தேவைப்பட்டால் தொழிலாளர் தகராறுகளை கையாள நீதித்துறைக்குள் ஒரு தனி அமைப்பை உருவாக்க வேண்டும் என்று வாதிட்டார்.
தீர்ப்பாயங்கள் மற்றும் தொழிலாளர் நீதிமன்றங்கள் வடிவில் தீர்ப்பளிக்கும் செயல்முறையை நிறுவனமயமாக்கிய பின்னர், முதலாளி வர்க்கம் தீர்ப்பளிக்கும் செயல்முறை குறித்துஎச்சரிக்கையாக இருந்தது. இந்தியமுதலாளிகள், வெளிநாட்டு முதலாளிகளின் கருத்துக்கள் இந்த பிரச்சினையில் ஒன்றிணைந்தன.
கூட்டு பேரம் பேசுவதை ஊக்குவிக்க வேண்டும் , தீர்ப்புசெயல்முறையின் பங்கு குறைவாக இருக்க வேண்டும் என்று கருதினர் (FICCI, 1960). தீர்ப்பு முறைகள் மட்டும்ஆபத்தில் இல்லை, ஒரு தொழிலாளி என்பவர்யார், பணியிடம் என்றால் என்ன? என்பது விவாதத்தில் முக்கியமான விசயமாக இருந்தது.
தொழிலாளர் உரிமைகள், தீர்ப்புசெயல்முறை உரிமைகளுக்கான களத்தை வரையறுப்பதில் இந்த இரண்டு கேள்விகளும் முக்கியமானவை. தொழில்துறை தகராறு சட்டம் 1947 ஒரு நபரின் வேலை வகை, முதலாளியின் வளங்கள். அவரது வணிக வருவாய் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் ஒரு நபர் மற்றொருவரால் பணியமர்த்தப்பட்ட அனைத்து வழக்குகளுக்கும் பொருந்தக் கூடியதாக இருந்தது.
1946க்கும் 1955க்கும் இடையிலான தாராளமயத்தின் காலகட்டத்தில், இந்தியாவில் உள்ள அனைத்து முதலாளர்-பணியாளர் உறவுகளையும் குறைந்தபட்சம் காகிதத்திலாவது முறைப்படுத்த ஒரு சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்திய முதலாளிகள் இதை மாற்ற வேண்டும் என்று விரும்பினர், தொழிற்சாலை மிகவும் பிரத்யேகமாக வரையறுக்கப்பட வேண்டும் என்று விரும்பினர்.
தொழில்துறை உயர்மட்டத்தினரின் அமைப்பாக்கப்பட்ட பிரிவுகளின் அழுத்தம் இருந்த போதிலும், 1953 திருத்தத்தில் தொழிலாளர் பணியிடம் குறித்த வரையறையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை (FICCI, 1954). மாறாக, முன்னணித் தொழிற்சங்கங்களின் அழுத்தம் காரணமாக, இந்தச் சட்டம் ‘தொழிலாளர்கள்’ என்ற வரையறையை விரிவுபடுத்தியது, மாதத்திற்கு ரூ.500 வரை ஈட்டுகிற மேற்பார்வைப் பணியாளர்களும் இதில் சேர்க்கப்பட்டனர்.
தொழிற்சங்க உரிமைகள், தீர்ப்புச் செயல்முறையின் களத்தைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் பணியிடத்தின் வரையறையை மாற்றுவதில் முதலாளர் வர்க்கம் அதிக அக்கறை செலுத்தியது. தீர்ப்புச் செயல்முறை, தொழிற்சங்க உருவாக்கம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்த இந்திய வர்த்தக, தொழில்துறை அவைகளின் கூட்டமைப்பு (FICCI ) ஒரு முழு அளவிலான போரைத் தொடங்கியது.
பல்கலைக்கழகம், மருத்துவமனை, உணவகம், வீடு, கடை, சர்க்கஸ், திரையரங்கம், ஒரு மிருகக்காட்சி சாலை, தொண்டு நிறுவனம் மற்றும் கல்வி நிறுவனம் கூட அதன் எல்லைக்குள் வந்தன. வரையறைக்கு தாராளவாத விளக்கம் வழங்கப்பட்டால், அதில் தேவாலயம், கோயில், மசூதி அல்லது பிற வழிபாட்டுத் தலங்கள், தனியார் குடியிருப்பு வீடு ஆகியவையும் பணியிடம் குறித்த சட்டவரையறையில் அடங்கும் என உணரப்பட்டது.
ஆகவே, தொழில்துறை தகராறு சட்டத்தின் ஆரம்ப நெறிகள் வீட்டுப் பணியாளர் உட்பட இந்தியாவில் அனைத்து முதலாளர் - பணியாளர் உறவுகளையும் முறைப்படுத்தியிருக்கும். 1953 வரை, இது உண்மையில் சாத்தியமாக இருந்தது, ஏனெனில் இந்தச் சட்டம் வேலை செய்யும் இடத்தை வரையறுக்கவில்லை.
இந்திய வர்த்தக, தொழில் துறை அவைகளின் கூட்டமைப்பில் (FICCI) இணைந்த முதலாளர்கள் (குறிப்பாக நடுத்தர, சிறிய அலகுகள்) நிர்வாகத்திற்கு ஏற்படும் கடுமையான இடர்ப்பாடுகளை சுட்டிக்காட்டினர்.
அமெரிக்கா, கனடா உள்ளிட்ட கிட்டத்தட்ட அனைத்து முன்னேறிய நாடுகளிலும் தொழில்துறைத் தகராறு சட்டம் மேற்பார்வையாளர்களைப் பணியாளர்களாகக் கொள்வதில்லை என்று அவர்கள் வாதிட்டனர். அமெரிக்காவில், ‘பணியாளர்’ என்ற வரையறையில் மேற்பார்வையாளர்கள் சேர்க்கப்படவில்லை.
கனடாவில், மேற்பார்வை அதிகாரங்களைக் கொண்டவர், பொறுப்புமிக்க பணிகளில் ஈடுபடும் எந்தவொரு நபரையும் இச்சட்டம் விலக்குகிறது (FICCI, 1956). 1956ல் இந்திய வர்த்தக, தொழில்துறை அவைகளின் கூட்டமைப்பு (FICCI) மேற்பார்வையாளர்கள் தொழிலாளர் சங்கத்தில் சேராமல் தாங்களே சொந்தமாகத் தொழிற்சங்கங்களை அமைக்கும் உரிமை பெற வேண்டும் என்று கருதியது.
1956இல், தொழிலாளர்களின் போர்க்குணம் உச்சக்கட்டத்தை எட்டியது, ஜவுளித் துறையில் மட்டுமல்ல, பல தொழில்துறைகளிலும். தொழிற்சங்க இயக்கத்தின் எழுச்சிக்கு முகங்கொடுத்த முதலாளிகள், தொழில்துறைத் தகராறு சட்டம் சர்ச்சைகளுக்கு ‘முடிவற்ற வாய்ப்புகளை’ வழங்குவதாக உணர்ந்தனர்.
1956இல், தொழிற்சாலை மோதலைத் தீர்ப்பதற்கு ஒரு தொழிலாளர் அல்லது ஒரு முதலாளர் ஒரு விண்ணப்பத்தைத் தாக்கல் செய்வதற்கான கால வரம்புகளை நிர்ணயிக்கத் திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர் (AIOIE, 1956). இருப்பினும், தொழிற்சங்கங்கள் மீண்டும் கால வரம்பு கொண்டு வரப்படுவதை எதிர்த்தன.
தொழில்துறைத் தகராறு சட்டத்தின் 1956 இறுதி வடிவம் பணியிடங்களைக் குறுகியதாக வரையறுக்க வேண்டும் என்ற முதலாளர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டது. எனவே, தீர்ப்புச் செயல்முறையின் எல்லை மட்டுமல்லாது, தொழிற்சங்க உருவாக்கம் உள்ளிட்ட தொழிலாளர்களின் சட்ட உரிமைகளும் தொழிற்சங்கச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ‘தொழிற்சாலை’ பற்றிய முறையான வரையறையால் மட்டுப்படுத்தப்பட்டன.
இதுவே இந்தியாவில் அமைப்புசாரா வேலைவாய்ப்புகளுக்கு அடித்தளமிட்டு ஊக்கம் அளித்தது, தொழிலாளர் சட்டங்களின் பொருத்தப்பாட்டைக் குறைத்தது. எவ்வாறாயினும், 1932ஆம் ஆண்டின் தொழிற்சங்கச் சட்டத்துடன் இணைந்து இந்தச் சட்டம், தொழிற்சாலையின் பல்வேறு வகைத் தொழிலாளர்களுக்கும் தீர்ப்புச் செயல்முறையில் பங்கெடுத்துத் தொழிற்சங்கங்களை உருவாக்கவும் வழிவகுத்தது.
1956இல், தொழிற்சாலைத் துறையில் இறுதியான சட்டங்களை அரசு அறிமுகப்படுத்தியதுடன், வேறு எந்த நெறிகளோ, சட்டங்களோ அறிமுகப்படுத்தப்பட மாட்டாது என்று ‘தொழில்துறை - வணிகப் பிரதிநிதிகளுக்கு’ உறுதியளித்தது.
ஆனபோதும், தீர்ப்பளிக்கும் செயல்முறை முதலாளித்துவத்திற்கு ஆதரவாகச் செயல்படவில்லை. ஊதியம், தொழிலாளர்களின் பாதுகாப்பிற்கான உரிமைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பான கேள்விக்கு நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்களின் முடிவுகளில் நீதித்துறையின் ஒப்பளவிலான சுயாட்சி பிரதிபலித்தது.
தீர்ப்பாயங்கள், உச்ச நீதிமன்றத்தின் முடிவுகள் தொடர்ந்து தொழில்துறையின் மீதான ‘சுமையை’ அதிகரித்தன. 1952இல் அப்போதைய தொழிலாளர் துறை அமைச்சர் ஸ்ரீ ஜக்ஜீவன் ராம் வருங்கால வைப்பு நிதி அறிமுகப் படுத்தப்பட்ட போது முதலாளர்கள் பணிக்கொடை அளிக்க வேண்டியதில்லை என உத்தரவாதம் அளித்திருந்தார் (FICCI, 1952). ஆனபோதும் 1960இல், நீதித்துறை வருங்கால வைப்புத் திட்டத்தின் கீழ் கொடுப்பனவுகளுடன், பணிக்கொடையும் வழங்குமாறு பணித்தது.
தனிநபர் வழக்குகள், இந்திய வர்த்தக, தொழில்துறை அவைகளின் கூட்டமைப்பு (FICCI) மூலமாக முதலாளர்கள், வருங்கால வைப்பு நிதி பணிக்கொடைக்கு மாற்றாகக் கருதப்பட வேண்டும் என்றும் இரு திட்டங்களையும் ஒரேநேரத்தில் செயல்படுத்தக் கூடாது என்றும் வாதிட்டனர். இருப்பினும், தொழிற்சங்க இயக்கத்தின் வலிமையானது அமைப்புசார் தொழிற்சாலைத் துறையில் ஊதியத் தரப்படுத்தல் நோக்கிய நகர்வுகளில் பிரதிபலித்தது.
1960களில், பருத்தி ஜவுளி, சிமெண்ட், சர்க்கரைத் தொழிற்சாலைகளுக்கான கூலி வாரியங்கள் பொருத்தமான ஊதியக் கட்டமைப்பை ஏற்படுத்த இந்தத் தொழில்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கைகளை வெளியிட்டன.
1954இல் தொழில்துறை முதலாளர்களின் அகில இந்திய அமைப்பின் தலைவரான ஷா தொழிற்சங்கங்களின் பெருக்கம் தொழில்துறை உறவுகளை சீர்செய்வதற்கு மிகப்பெரும் தடையாகும் என வாதிட்டார்:. எந்தவொரு 7 நபர்களும் ஒன்றிணைந்து தங்களை ஒரு தொழிற்சங்கமாகப் பதிவு செய்ய முடியும். எனவே பல அரசியல் கட்சிகள் இருப்பதைப் போல பல தொழிற்சங்கங்கள் உள்ளன.
ஒரு தொழிற்சங்கத்துடன் ஒரு சர்ச்சையை முதலாளர் தீர்த்துக் கொண்டவுடன், மற்றொரு தொழிற்சங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் புதிய கோரிக்கைகளை முன்வைக்கிறார்கள், இந்தக் கோரிக்கைகள் இயல்பாகவே ஏற்கெனவே ஒப்புக்கொண்டதை விடக் கூடுதலானவை (AIOIE, 1954: 7) என்றார்.
ஆகவே, தொழிற்சங்க உருவாக்கம் தொடர்பான உரிமையை எதிர்ப்பதை நியாயப்படுத்தவதற்கு முன்வைக்கப்பட்ட வாதங்கள் தொழிற்சங்க உரிமையை ஏற்படுத்துவதற்காக முன்வைக்கப்பட்ட வாதங்களைப் போலவே பழமையானவை.
‘தொழிற்சங்கப் போட்டி, கல்வியறிவின்மை, அரசியல் செல்வாக்கு ஆகியவற்றால் அதிகரித்துள்ள தொழிலாளர்களின் ஒழுங்கீனமே தொழில்துறை உறவுகள் மோசமடைவதற்குக் காரணம் என அகில இந்திய முதலாளர் அமைப்பின் பல அறிக்கைகள் குறிப்பிட்டன.
காங்கிரஸ் தலைமையிலான தொழிற்சங்கத்தின் (ஐ.என்.டி.யூ.சி) தலைவர் தங்கள் தொழிற்சங்கம் அரசியல் தாக்கங்களிலிருந்து சுதந்திரமாகச் செயல்படும் என இந்திய வர்த்தக, தொழில்துறை அவைகளின் கூட்டமைப்புக்கு (FICCI) உறுதியளித்தார்.
இத்தகைய வாக்குறுதிகள் இருந்த போதிலும், 1957களில், தொழிற்சங்கங்கள் தாக்குநிலை எடுத்தன. இத்தகைய அரசியல் சூழலில் அரசியல் கட்சிகளையோ, தொழிற்சங்கங்களையோ தடை செய்யுமாறு அழைப்பு விடுக்க முதலாளர்களால் இயலவில்லை.
இடதுசாரிகளின் போர்க்குணமிக்க தொழிற்சங்கங்களைக் கட்டுக்குள் வைக்க, காங்கிரஸ் கட்சியின் தொழிற்சங்கமான ஐ.என்.டி.யு.சியை முதலாளர்கள் நம்பியிருந்தனர் (FICCI, 1960). 1950க்கும் 1963க்கும் இடையில் தொழிற்சாலை வேலைவாய்ப்பு 59.9 விழுக்காடு அதிகரித்தது. மின்சார இயந்திரங்கள், எந்திரங்கள், சாதனங்களின் உற்பத்தித் துறையில் மிகப்பெரும் உயர்வு ஏற்பட்டது.
மிகப் பெரிய, பழமையான தொழில்துறையான ஜவுளித் துறையில் வேலைவாய்ப்பு மிகக் குறைந்த வளர்ச்சியைக் காட்டியது. 1956இல் நாட்டின் மொத்தத் தொழிலாளர் எண்ணிக்கை 154 மில்லியன், அதில் தொழிற்சாலைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 7 மில்லியனாக இருந்தது.
1957ஆம் ஆண்டில் தொழிற்சாலைகளில் பெரும் வேலைநிறுத்தங்கள் செய்யப்பட்டன. அவற்றின் சுருக்கம் பின்வருமாறு: ஜாம்ஷெட்பூர் (14 நாட்கள், 45,000 டன் எஃகு உற்பத்தி இழப்பு), பிரீமியர் ஆட்டோமொபைல்கள் (110 நாட்கள்), அனைத்து முக்கியத் துறைமுகங்களிலும் கப்பல்துறைத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் (16 நாட்கள் - பொருளாதாரத்தை சீர்குலைத்தது, பிரதமரின் தலையீட்டின் பின்னர் நிறுத்தப்பட்டது), கல்கத்தா டிராம்வே (42 நாட்கள்) வேலைநிறுத்தம், கேரளத் தோட்டங்களில் வேலைநிறுத்தங்கள் (பல தொழிற்சங்கங்களின் பங்களிப்புடன்) (FICCI, 1957; AITUC, 1957).
மூன்றாம் திட்ட காலத்தின் கடைசி மூன்று ஆண்டுகளில், தொழில்துறை நிறுவனங்கள் தன்னார்வ அடிப்படையில் நிர்வாக்க் கூட்டுக் குழுக்களை முறையாக அமைப்பதற்கு ஒப்புக் கொண்டன. ’தொழிலாளர்கள் ஒழுங்குமுறையைக் கடைப்பிடிக்க வைக்க வேண்டும்’ என்ற முதலாளர் வர்க்கத்தின் கோரிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக அரசு (அந்த ஒரு வர்க்கத்தை மட்டுமே ஒழுங்குபடுத்த வேண்டும் என்ற கருத்தில்!) ‘தொழிலாளரை ஒழுங்குபடுத்தும்’ ஒழுக்க நெறியை உருவாக்கியது.
மூலதனத்திற்கும் உழைப்பிற்கும் இடையிலான உறவுகளின் வரலாற்றில் இந்தக் காலகட்டம் ஒரு குறிப்பிடத்தக்க அடையாளமாக இருந்தது, ஏனெனில் தனியார் துறையில் மட்டுமல்ல, அரசுத் துறையிலும் தொழிலாளர் போர்க்குணத்தை அடக்க வேண்டியதன் அவசியத்தை அறிவிப்பதில் முதலாளர் வர்க்கத்துடன் அரசு பக்கபலமாக நின்றது. இந்த நெறிமுறை 1958 ஜூன் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது.
போபாலில் கனரக மின்னணுப் பொருட்கள் நிறுவனத்தில் நடந்த வேலைநிறுத்தத்தை ‘தேசத்தின் முதுகில் விட்ட குத்து’ என்று நேரு கண்டனம் செய்த போது, அவர் தனியார் துறை முதலாளர்களின் உணர்வையே பிரதிபலித்தார்.
முதன்முறையாக, அரசும் தனியார் முதலாளித்துவத் துறையும் ‘ஒழுங்குமுறையைப் பராமரிப்பது குறித்து அந்த நெறிமுறையில் பொதிந்துள்ள ஒரு பொதுவான ‘மனநிலையையும், நோக்கத்தையும்’ பகிர்ந்து கொண்டன. இது உழைப்பாளர்களுடன் திறந்த போர் என்பதை முதலாளித்துவ வர்க்கம் அங்கீகரித்தது.
முதலாளர்கள், தொழிலாளர் முன்னணியின் தினசரி நடவடிக்கைகள் குறித்து ‘உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டியது அவசியம்’ (FICCI, 1962) எனக் கருதினர். தங்கள் சொந்த அமைப்புகளிலும், சங்கங்களிலும் உறுப்பினர்களை அதிகமாக்குவதன் மூலமும், ‘செயல்பாட்டு ஆதரவை விரிவாக்குவதன் மூலமும்’ தங்களை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர்கள் அழைப்பு விடுத்தனர்.
இரண்டாவது பொதுத் தேர்தலுக்குப் பிந்தைய காலகட்டத்தில், தொழிலாளர் இயக்கத்தின் தாக்கம் மூலதன - தொழிலாளர் உறவுகள் தொடர்பான முத்தரப்புச் செயல்முறைகளின் நடைமுறையில் வெளிப்பட்டது. தொழிலாளர் தொடர்பான 20 சட்டங்கள் இரண்டாவது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன..
அவற்றில் தொழில்துறை தகராறுகள் குறித்த மூன்று சட்டங்களும், ஊதியங்கள் குறித்த நான்கு சட்டங்களும், ஊழியர் வருங்கால வைப்பு நிதியம் குறித்த இரண்டு சட்டங்களும் அடங்கும். தொழிலாளர் விருதுகள், மற்றும் நிர்வாக கட்டளைகளின் அழுத்தங்கள், ஒரு நாள் வேலைச் சூழ்நிலைகள் ஆகியவற்றைச் சேர்த்துக் கொள்ள வேண்டியிருந்தது.
ஊதியத் தரநிலைப்படுத்தல், சமூக நலன்கள் பெறுவதற்கான தொழிலாளர் கோரிக்கைகளை நிறைவு செய்வதில் முதலாளர்களிடமிருந்து மிகப் பெரிய எதிர்ப்பு வந்தது. அகில இந்தியத் தொழிற்சாலை முதலாளர்களின் அமைப்பின் தலைவரான சிங்கானியா போன்ற தொழில்துறைச் செய்தித் தொடர்பாளர்கள், 'கடந்த பத்தாண்டு காலத் திட்டத்தில், நாங்கள் சில முன்னேற்றங்களை அடைந்துள்ளோம்.
ஆனால் மேம்பட்ட தொழில்மயமான நாடுகளில் புரிந்து கொள்ளப்பட்ட, விரிவாக்கப்பட்ட சமூக நன்மைக்கான பெரிய அளவிலான திட்டங்களைத் தொடங்குவது மட்டும் போதாது' என வாதிட்டார் (FICCI, 1962). இரண்டாவது திட்டத்தின் ‘உற்பத்தி மிகையூதியம்’, குறைந்தபட்ச ஊதியத்திற்கு மாற்றாக இருந்ததென பிர்லா குறிப்பிட்டிருந்தார் (FICCI, 1960).
அகில இந்தியத் தொழிற்சாலை முதலாளர் அமைப்பின் தலைவரான ஹூட்சீயிங், ‘தொழிலாளி கூலிக்கு தகுதியானவராக இருக்க வேண்டும்’ என்று வாதிட்டார். அவர்களின் உயர்நிலைப் பள்ளி படிப்பு முடிந்தவுடன் மாணவர்களுக்கான அடிப்படைத் தொழில்நுட்பப் பயிற்சி வழங்க வேண்டும், உற்பத்தித் திறனை உயர்த்துவதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றார்.
வரலாற்றின் இந்தக் கட்டத்திலிருந்து, கல்விக்கும் உற்பத்தித் திறனுக்கும் இடையிலான தொடர்பு என்பது ஊதியங்களைத் தரப்படுத்துவதற்கும் முதலாளித்துவத் துறையில் உள்ள தொழிலாளர்களுக்கு சமூக நலன்களை வழங்குவதற்கும் எதிரான வலுவான வாதமாக மாறியது.
தொழில்துறை நீதிமன்றங்கள், ஊதிய வாரியங்களால் பரிந்துரைக்கப்பட்ட ஊதிய உயர்வை எதிர்த்துப் போட்டியிட, உற்பத்தித் திறனை அளவிடுவதற்கான கோரிக்கைகள் முதலாளர்களின் அமைப்புகளால் முன்வைக்கப்பட்டன, ஏனெனில் வருவாய்க்கும் வேலை உற்பத்தித் திறனுக்கும் இடையே முரண்பாடுகள் இருப்பதாக அவர்கள் வாதிட்டனர்.
ஒரு தேசிய உற்பத்தித் திறன் மையத்தை அமைப்பதற்கான இந்திய அரசின் முன்மொழிவுக்கு ஆதரவளித்தனர், ஆனால் இது தொழிலாளரின் கோரிக்கைகளைப் பிரதிபலிக்காததால் சர்வதேசத் தொழிலாளர் சம்மேளத்தின் தொழிலாளர் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
முதல் ஐந்தாண்டுத் திட்டத்தில், ஊதியங்களின் திடீர் அதிகரிப்பு நாட்டின் பொருளாதார நிலைத் தன்மைக்குத் தீங்கு விளைவிக்கும், ஏனெனில் அது உற்பத்திச் செலவுகளை அதிகரித்து அதன் விளைவாகப் பொருட்களில் விலையுயர்வை ஏற்படுத்தும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இரண்டாம் திட்ட காலத்திலிருந்து, ஊதியங்கள் தொழில்துறைத் தீர்ப்பாயங்களால் தீர்மானிக்கப்பட்டன, அதன் அணுகுமுறை தொழிலாளர் இயக்கத்தின் வளர்ந்து வரும் வலிமையைப் பிரதிபலித்தது. ஆகையால், 1960இல், தொழில்துறையின் மூத்தவர்கள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களிடம் தற்போதைய சட்டங்கள், ஒழுங்குமுறைகளைத் தங்களுக்குச் சார்பாக மறுஆய்வு செய்வதற்கு அரசியல் ஆற்றலைப் பயன்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்தனர் (FICCI, 1960).
தொழில்துறை நிறுவனங்கள் லாபத்தின் அடிப்படையில் தொழிலாளர்களுக்குக் கிடைக்கும் மிகையூதியம் அளிக்கப் படுவதை கவனிப்பதற்கு மிகையூதிய ஆணையம் 1961இல் அமைக்கப்பட்டது. தொழில்துறைகளின் சூழல்களும், நடைமுறைகளும் பல்வேறாக இருக்கும் போது அனைத்துத் தொழில்களுக்கும் பொருந்தக் கூடிய ஒரேசீரான சூத்திரத்தை வைத்திருப்பது தவறானது என்று பல்வேறு முதலாளித்துவ அமைப்புகள் வாதிட்டன.
ஒரு குறிப்பிட்ட நிறுவனம் அல்லது தொழில்துறையில் உள்ள ஊதியங்கள் நாட்டில் நடைமுறையில் உள்ள தரங்களிலிருந்து பெரிதும் விலகிச் செல்லக் கூடாது என்றும் அவர்கள் உணர்ந்தனர். லூயிஸ் மாதிரியின் அடிப்படையில் தொழில்துறைத் தொழிலாளியின் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், பண்ணைகள், சமூகத்தின் பிற பிரிவுகளின் தொழிலாளர் சக்தியையும் பொதுக் கொள்கை கருத்தில் கொள்ள வேண்டும் என அவர்கள் வாதிட்டனர் (FICCI, 1961).
ஆணையத்தின் ஒருமித்த பரிந்துரைகள் மட்டுமே செயல்படுத்தப்படும் என்று தொழிலாளர் அமைச்சர் குல்சரிலால் நந்தா உறுதியளித்தார். இவற்றின் நிகர விளைவாக, தொழிலாளர்களை ஒழுங்குபடுத்துவதற்காக மட்டுமல்லாமல், அரசே அமைப்புகளின் உரிமைகளையும், பிரதிநிதித்துவத்தையும், தொழில்மய உறவுகளையும் உருவாக்கும் வகையில் நிறுவனங்களின் வரையறைகளில் ஒரு 'ஜனநாயகக் கட்டமைப்பை' ஏற்படுத்துவதிலும், அரசின் மீதான முதலாளித்துவச் சார்பு வலுப்படுத்தப்பட்டது.
இந்தியாவில் மூலதனத்திற்கும் உழைப்புக்கும் இடையிலான போராட்டம் மற்ற நாடுகளில் இருந்ததைவிட மிகவும் வேறுபட்டதாக இல்லை. ஐரோப்பாவில் முதல் முதலாளித்துவ மாற்றத்தில் பணி நிலைமைகளை ஒழுங்குபடுத்துவது எப்படி நிறுவனக் கட்டமைப்பின் இன்றியமையாப் பகுதியாக இருந்தது என்பதை மூலதனத்தின் முதல் தொகுதியில் மார்க்ஸ் விவரிக்கிறார். உழைப்பாளிகள்மீது அரசு தயவுகாட்டியது, சலுகைகளை வழங்கியது என்ற கட்டுக்கதையை மேலே குறிப்பிட்டுள்ள முக்கியமான உண்மைகள் தகர்த்துள்ளன.
(தொடரும்)
ஆசிரியர்: சிரஸ்ரீதாஸ்குப்தா