நல்ல குடிநீர் வேண்டும், சாக்கடை பராமரிப்பு வேண்டும், துப்புரவு மேம்பட வேண்டும் என்று தின, மாத இதழ்களில் எழுதியும், அகில இந்திய அளவிலும், சென்னையிலும் மாநாடுகளை நடத்தியும், சட்டமன்றத்திலும் துப்புரவு குறித்த கோரிக்கைகளை வலியுறுத்தியும் வந்ததன் பொருட்டு, 1908இல் அரசு சுகாதாரத்தை மேம்படுத்த மூன்று மடங்கும், உள்ளாட்சி அமைப்புகள் இரண்டு பங்கும் துப்புரவிற்கான மானியத் தொகையை உயர்த்தின.
ஆகவே, இவைகளை மேம்படுத்த மாநகர, நகர, மாவட்ட மற்றும் உள்ளாட்சி நடைபெறும் இடங்களிலும் கொள்ளை நோய், பிறப்பு - இறப்பு ஆகியவைகளுக்கான சட்ட திட்டங்களும், காய்கறி சந்தை, மிருகங்கள் இறைச்சிக்காக வெட்டப்படும் இடம் ஆகியவைகளைக் கண்காணிக்கத் துப்புரவு பணியாளர்களுக்குப் பயிற்சியும் மற்றும் அம்மை குத்தவும், கொள்ளை நோயைத் தடுக்க பணியாளர்களும் நியமிக்க அல்லது பணியை மேம்படுத்த நினைத்தாலும் இதற்காக அரசு அளித்த நிதி போதுமானதாக இல்லை.
மேலும், நகரங்களிலும், சிறுநகரங்களிலும் துப்புரவுக்கான சட்ட திட்டங்களை அமல்படுத்த நடவடிக்கை எடுத்தாலும், அதிக சதவீத மக்களுக்குப் போதிய கல்வி அறிவு அற்ற நிலையில் சட்டத்தை மிக அரிதாகவே நிறைவேற்ற முடிந்தது. எடுத்துக்காட்டாகக் குடிநீர் குளத்தில் குளிப்பது, துவைப்பது, ஆற்றில் படுகையில் பிணத்தைப் புதைப்பது, எரிப்பது போன்றவைகளுடன் பிறப்பு - இறப்பைப் பதிவு செய்வது ஆகியவைகளைத் தவறாது செய்ய வேண்டும் என்று நிர்ப்பந்திக்க முடியவில்லை.
நிதிப் பற்றாக்குறை காரணமாகத் துப்புரவுக்கான பணி நகரத்தில் ஓரளவு மேற்கொண்ட அளவில் மிகக் குறைந்த அளவே கிராமப்புறங்களில் நிறைவேற்ற முடிந்தது. மேலும், இதற்காகத் துப்புரவுப் பணியாளர்கள் இங்கு நியமிக்கப்படவில்லை, மாவட்ட மருத்துவ அலுவலருக்கு நான்கு மாவட்டங்களில் மட்டுமே துப்புரவுப் பணிக்கான உதவியாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர்.
கிராமப்புற துப்புரவு
குடிநீர் வசதியும், தினம் தேவைப்படும் சாக்கடைப் பராமரிப்பும் 63 நகராட்சிகளில் 20 நகராட்சியில்தான் (1900) நடைபெற்று வந்தன. இதன் காரணமாகத் துப்புரவுக் கமிஷனரின் ஆண்டு அறிக்கையின்படி எங்கெல்லாம் நல்ல குடிநீரும், சாக்கடைப் பராமரிப்பும் நடைபெறுகிறதோ அங்கெல்லாம் காலராவினால் ஏற்படும் இறப்பும், தண்ணீரினால் பரவும் நோய்களும் மற்ற இடங்களைவிட மிகக் குறைவாகவே இருந்தன.
கிராமப்புற நிலை இப்படி இருக்க நகர்ப்புறங்களிலும் 1910-1990 வரை, உதக மண்டலத்தில் மட்டுமே மூடிய சாக்கடைத் திட்டம் அமலில் இருந்தது. இதே காலத்தில் மதராஸ், வேலூர், மதுரை போன்ற இடங்களில் மூடிய சாக்கடைத் திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.
ஆக, இவைகளை நோக்க வெள்ளையர்கள் தாங்கள் வாழும் மலைவாசஸ்தலத்தையே முதலில் தூய்மையாக்கிக் கொள்ள முனைந்துள்ளனர் என்பது தெரியவருகிறது.
சுதேசிகளிடமிருந்து தனித்து வசிக்கத் திட்டம்
வெள்ளையர்கள் மண், தண்ணீர், காற்று மற்றும் வசிப்பதில் உயரமான இடம் என்ற கொள்கையின் அடிப்படையில் தனித்து வாழும் கொள்கையில், “கண்டோன்மென்ட், சிவில் லைன்ஸ், சிவில் ஸ்டேஷன், ஹில் ஸ்டேஷன்” ஆகியவைகளைத் திட்டமிட்டு சட்டப்படி உருவாக்கினர்.
உடலளவிலும், உள்நாட்டு சமூகத்தினரை விட்டு விலகி இருக்க இத்திட்டம் வகை செய்தது.
ஆனாலும், அவர்களைச் சுற்றி வசிக்கும் அவர்களுக்கான தொழிலாளிகள் இருப்பிடம் புழுதி படிந்து, குப்பைக் கூளங்களுடனே காணப்பட்டன.
இத்தருணத்தில் பிளாரன்ஸ் நைட்டிங்கேலின் செய்தி, “துப்புரவு என்பது கலாச்சாரம்” என்றது. இது காலனி அரசு காதுகளில் பாய்ந்தது. ஆனாலும் 1921 சானிடரி கமிஷனர் 1871 - 1921 வரை இந்தியாவில் துப்புரவுப் பணி (50ஆண்டுகள்) பெரும் தோல்வியே என்று கருத்து தெரிவித்தார்.
திரு. கிளீன் (Clean) இதனை உறுதிப்படுத்தும் விதமாக இந்திய மருத்துவப் பணி இயக்கம் தடுப்புமுறை மருத்துவத்தை போலித் தன்மையுடன், பாசாங்குடன், குற்ற உணர்வால் ஏற்படும் புண்படும் நிலையிலேயே மேற்கொள்கிறது என்று சாடுகிறார். (Medicine and the Raj, P. 161)
துப்புரவு - அம்மை - காலரா
காலனி அரசு கொள்ளை நோய்களைத் தடுக்க சற்று கூடுதலான அக்கறை காட்டியது. இது மாகாண அரசு சுதேசி மக்களிடம் தடுப்பு முறைகளைக் கடைப்பிடிக்க வற்புறுத்தியதனால் ஆகும் 19ஆம் நூற்றாண்டின் கடைசிக் காலங்களில் நோயைத் தடுப்பதற்கு முக்கியம் தடுப்பு முறையே என்ற சித்தாந்தம் பாக்டீரியாக்களைக் கண்டுபிடித்த பிறகு, கடைப்பிடிக்கப்பட்டது. இதன் காரணமாக பெரியம்மைக்கான தடுப்பூசியை மக்களுக்குப் போட வேண்டிய முயற்சிகளை அரசு முன்னெடுத்தது. இதற்குப் பெரிய முட்டுக்கட்டை மாட்டிலிருந்து அம்மைப் பாலினால் அம்மை குத்துவது ஆகும், மேலும் இதை எல்லோரும் குத்திக் கொள்ள சில சட்டதிட்டங்களைப் போட வேண்டியதாயிற்று. ஆனாலும், தென் இந்தியாவில் அம்மை குத்திக் கொள்வதில் மக்களிடம் இருமனப் போக்கே இருந்தது. இவ்வூசி மனிதர்களிடமிருந்து தயாரித்த தடுப்பூசியைவிட சிறந்ததாகவே இருந்தது. இருப்பினும் மக்கள் குழந்தைகளை அம்மை குத்திக்கொள்ள அனுமதிக்கவில்லை. இதனால் பெரியம்மை ஒழிப்பில் ஆரம்ப காலங்களில் மிகுந்த மாற்றம் ஏற்படவில்லை.
அம்மை குத்துதல் மறுமுறை குத்தினால் இப்பாலில் தேவையான தடுப்பு ஆற்றல் உள்ளதா என ஐயப்பாடு இருந்தது. மற்றும் இவ்வம்மைப்பாலை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு இந்தியா முழுமையும் அதைக் கெடாது எடுத்துச் செல்ல தொழில்நுட்ப ரீதியாகக் கடினமாக இருந்தது, இதனைக் கணக்கில் கொண்டே, நல்ல அம்மைப் பாலைத் தயாரிக்க ஆய்வு நிறுவனங்களைத் தென்னாட்டில் நிறுவ அரசு நினைத்தது. மேலும் மேலை மருத்துவக் கண்டுபிடிப்பான அம்மைப் பாலை இந்திய மக்களுக்குப் போட்டு அதன் பயன்பாட்டை அறிய ஒரு சோதனைக் களமாகக் காலனி அரசு நினைத்தது எனக் கூறலாம். (V. Gayathri, Ph.D. thesis, p. 232).
தமிழகத்தில் அம்மைப்பால் குத்தியவர்கள், இந்தியாவில் சரியான படிப்பறிவு இல்லாதவர்களாகவே இருந்தனர். இத்தனைக் கஷ்டங்கள் இருப்பினும் அம்மை குத்துவதினால் பெரியம்மையினால் ஏற்படும் இழப்பு 1990க்குப் பிறகு குறைந்தது.
ஆனால், இதற்கு மாறாக காலரா இறப்பு குறையாது மிகையாகவே இருந்தது. இருப்பினும் துப்புரவினாலே காலராவை சுயமாக ஒழிக்க முடியும் என எண்ணப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் 1880க்குப் பிறகு தஞ்சாவூர் போன்ற கொள்ளை நோய்கள் ஏற்படும் இடங்களில் இறப்பு விகிதம் கூடிக் காணப்பட்டது. இதற்குக் காரணம் சாக்கடை, போதிய வெளிச்சம், காற்றோட்டமின்மை, மக்கள் நெரிசல் எனக் கூறப்பட்டு அதற்கான துப்புரவுத் திட்டங்கள் தீட்டப்பட்டன. ஆனாலும் இதற்கான காலரா ஊசியே முக்கிய தடுப்பு முறையாக அமைந்தது.
கிராமங்களில் காலரா கொள்ளை நோயாக வரும் காலத்தைக் கணித்து அதற்கான தடுப்பு முறைகள் மேற்கொள்ளப்பட்டன. நல்ல குடிநீர், குழாய், சாக்கடையைத் தகுந்த முறையில் அப்புறப்படுத்துதல், மற்றும் வாழ்க்கை முறையை சுத்தமாக வைத்துக்கொள்வது ஆகியவைகள் மேற்கொள்ளப்பட திட்டங்கள் தீட்டப்பட்டு நடைமுறைக்கு வந்தன. இது கொள்ளை நோயாக காலரா வரும் நிலையில் இறப்பைக் குறைக்காவிடினும் காலரா பரவுவதைத் தடுத்தது. அரசு நுண்ணுயிர் மேதைகளான ஹாப்கின்ஸ் மற்றும் ராபர்ட்காக் உதவிகளையும் பெற்றுக் கொண்டது.
ஆனாலும் இந்திய செஞ்சிலுவைச் சங்கம் கிராம மக்களைக் கொள்ளை நோய்களுக்கான தடுப்பு முறைகளையும் மருத்துவத்தையும் தெரிந்துகொள்ள அரும்பாடு பட்டதன் விளைவாக தென்னிந்திய காலனி அரசியல் இறப்பு சதவீதம் குறைந்தது. இந்த இறப்பு மேற்கூறியவைகளினால் இல்லை. இந்தியர்களின் வாழ்க்கைத் தரம் உயர்வு, இயற்கையான நோயெதிர்ப்புத் தன்மை, சத்துணவு உண்பது ஆகியவைகளினாலேயே என்று ராபின் ஜெப்ரே (Robin Jaffrey 1488) போன்றவர்கள் கூறுகிறார்கள். இருப்பினும் ரயில், குடிநீர் விநியோகம், பாதுகாப்புத் திட்டங்கள் போன்றவைகள் இந்திய சுதந்திரத்திற்குப் பின் மிகுந்த பயனளித்தன.
கொள்ளை நோய்களுக்கும் இறப்பு சதவீதத்திற்கும் உள்ள உறவைப் பார்க்கும் போது இது குடிநீர் மற்றும் பயன்படுத்திய நீரை வெளியேற்றுவது ஆகியவைகளினால் ஏற்படும் சிக்கல் (சாக்கடை) ஆகியவைகளேயாகும். 1880இல் அரசு துப்புரவிற்கான தன் செலவினத்தைக் குடிநீர், சாக்கடைத் திட்டங்களுக்கு ஒதுக்கியது. ஆனால், கிராமப்புறங்களுக்குத் தேவையான பண ஒதுக்கீடு தேவையான அளவு இன்றி மிகவும் பற்றாக்குறையாகவே இருந்தது. அதிலும் ஒதுக்கிய நிதியும் மற்ற செயல்பாட்டிற்குப் பயன்படுத்தப்பட்டதால், கிராமப்புறங்களுக்கு மிகக் குறைந்த அளவில் துப்புரவிற்கு நிதி கிடைத்தது.
ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது கொள்ளைநோய் வீரியமாக இருக்கும் நிலையைத் தவிர மற்ற காலங்களில் மிக வேகமாகத் தடுப்புமுறையை அரசு எடுத்துக் கொள்ளவில்லை. மலேரியாவைப் பொருத்தமட்டில் 1910ம் ஆண்டு தடுப்பு முறைக்கான முயற்சிகள் நிறுத்தப்பட்டது. (Medicine and Raj, p.208).
இதுபோல பொதுநல வாழ்வுக்கான செலவீடு 1880 இல் 25,42,070ஆக இருந்தது. 1930இல் இது 70,94,090 ஆகக்கூடியது. ஆனால் துப்புரவிற்கான செலவீடு 1912 -13இல் 11,64,319 ஆக இருந்தது. 1919-1920இல் 13,95,372 ஆக மிகக் குறைவாகவே செலவழிக்கப்பட்டது.
இதைச் சுதேச இதழ்கள் வன்மையாகக் கண்டித்ததன் பொருட்டு 20ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் துப்புரவிற்கான செலவினம், காலரா மற்றும் காய்ச்சல்களுக்காகவும் கூடியதால் இறப்பவர்கள் எண்ணிக்கை ஓரளவு குறைந்த அளவில் இருந்தது.