காலத்தின் தேவைகளுக்குத் தகுந்த கற்பனைகளை வடிவமைப்பது மேல்தள மக்களின் இயல்பு. அந்தக் கற்பனைகளுக்கு வியக்கத்தகுந்த எதார்த்தமான வார்ப்புகளை உருவாக்குவது அடித்தள மக்களின் வாழ்க்கையில் நிலைநிற்கும் உழைப்பு. காணும் பொருள்களின் பின்னணியில் கடுமையான உழைப்பு மறைந்து கிடக்கிறது.

varumai 500ஆனால், மேல்தள மக்களுக்கு மட்டும் வரலாறு பதிவு செய்யப்படுகிறது. அடித்தள மக்களின் வாழ்க்கை வாய்மொழியில் நிறைந்து கிடக்கிறது. அந்த வாழ்க்கை வரலாற்றில் நீண்டகாலம் வரை பதிவு செய்யப்படாமலே வாழ்மொழி வடிவில் தொடர்ந்து நிலைநின்று வருகிறது. உழைக்கும் அடித்தள மக்களின் வாழ்க்கை கடந்த சில நூற்றாண்டுகளாகத்தான் பதிவு செய்யப்படுகிறது.

அந்த வகையில், மாறுபட்ட கண்ணோட்டத்தில் ‘அடித்தள மக்களின் வரலாறு’ ஆய்வு முறையில் பதிவு செய்யப்பட்டு புத்தக வடிவில் ஓர் ஆவணமாக வெளியாகியுள்ளது. இதை வடிவமைத்த ஆ.சிவசுப்பிரமணியன் தமிழகத்தில் நன்கு அறியப்பட்ட ஒரு மார்க்சியவாதி. ஆழ்ந்த அக்கறையும் தோய்ந்த ஈடுபாடும் உள்ள இவர் இந்த வரலாற்றை ஓர் ஆவணமாக வடிவமைத்துள்ளார்.

நாட்டார் வழக்காற்றியலில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டுள்ள இவர் இதுவரை அறியப்படாத பல உண்மைகளை வெளிக்கொண்டு வந்துள்ளார். அதே சமயத்தில் மக்கள் இயக்கங்களின் செயல்பாடுகளையும் சாதிகளையும் இனம் கண்டுபிடிப்பவர் அடித்தள மக்களாகிய உழைப்பாளர்களுக்கென தனிப்பட்ட வாழ்க்கை அவர்களுடைய கலை, கலாச்சாரப் பண்பாட்டு அம்சங்களுடன் ஆய்வு செய்யப்பட்டுள்ளதை இது புலப்படுத்துகிறது. இடந்த வரலாற்று ஆய்வு நூலை எழுதத் தேவைப்பட்ட சூழலை இவர் முன்வைத்து அதன் முக்கியத்துவத்தை நூல்முழுவதும் குறிப்பிட்டு விளக்குகிறார்.

“கடல் விழுங்கிய இரவில் மரணத்தின் 

பிடியிலிருந்தோர் 

அடிமைகளின் உதவியை நாடி 

கூக்குரல் இடவில்லையா”

என்ற கவிதை வரிகளை நினைவுபடுத்தும் வகையில் அடித்தள மக்களின், முதன்மையைக் குறிப்பிடும் கவிதையை முன்னுரையாக இவர் பயன்படுத்துகிறார். “படிப்பறிவுள்ள பாட்டாளியின் கேள்விகள்” என்ற தலைப்பில் ஜெர்மானிய நாட்டு நாடகாசிரியரும், கவிஞருமான பெர்ட்டோல்ட் பிரஸ்ட் எழுதிய கவிதை வரிகளின் உள்ளடக்கத்தை இந்த நூல் விளக்குவது போல வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

“சாதிய மேலாண்மையும், ஒடுக்கு முறையும் மேலோங்கியிருந்த இருக்கும் தமிழக மற்றும் இந்திய வரலாற்றைப் படிக்கும்போது பிரஷ்டின் கேள்விகளைப்போல் நம்மிடமும் கேள்விகள் எழவேண்டும். ஆனால், நமது மரபுவழி வரலாற்றாசிரியர்கள் இக்கேள்விகள் எழும்போதே தவிர்த்துவிட்டனர். எனவேதான் ஒரு மாற்று வரலாற்றைத் தேட வேண்டிய கட்டாயம் நமக்கு உள்ளது.”

“சமூகவியல் - மானிடவியல், பொருளாதாரம் உளவியல் போன்ற அறிவுத் துறைகளின் துணையுடன் வரலாற்றைக் காணத் தொடங்கிய பிரெஞ்சு அனல்ஸ் பள்ளியின் புதிய வரலாறும், இந்திய வரலாற்று வரைவில் புதிய அணுகுமுறையையும் சிந்தனையையும் ஏற்படுத்தியுள்ளன. எனவே ‘மாற்று வரலாறு’ என்று இங்கு குறிப்பிடும்போது அடித்தள மக்கள் வரலாறு புதிய வரலாறு என்று இரண்டு புதிய வரலாற்றுப் பள்ளிகளுக்கும் முக்கிய இடமுண்டு.

மேலும் சுமித் சர்க்கார், இந்திய வரலாறு எழுதப்பட்டுள்ள முறை, சமூகத்தின் வளர்ச்சிப் போக்கையும் அதில் நிலவிய, நிலவும் முரண்பாடுகளையும், வெளிப்படுத்துவதில் கவனம் செலுத்தாது கலை இலக்கியம், சமயம் சார்ந்த செய்திகளை மேலெழுந்த வாரியாகத் தொகுத்துக் கூறும் தன்மையிலேயே நமது சமூக வரலாறு எழுதப்படுகிறது என்று தெரிவித்த கருத்தை இவர் குறிப்பிடுகிறார். அதைப் போலவே சமூக அறிவியல் கண்ணோட்ட அடிப்படையிலான வரலாற்றை எப்படி எழுத வேண்டுமென்று அடையாளப்படுத்தும் இங்கிலாந்து சமூக வரலாற்றறிஞரின் கருத்தையும் விளக்குகிறார்.

“வாய்மொழியாக வழங்கும் வழக்காறுகள் மட்டுமின்றி சடங்குகளும் கூட வரலாற்றிற்குத் துணைபுரியும் தன்மையின” என்றும் தனது கருத்தை இவர் முன்வைக்கிறார். அவற்றுக்குரிய எடுத்துக்காட்டுக்களையும் முன்வைத்துக் கருத்துக்களை உணர வைக்கிறார்.

தமிழ்நாட்டில் பரவலாக வழக்கிலிருந்து சமணம் சைவத்துடன் நிகழ்த்திய மோதலில் தேய்ந்து மறைந்தது. மதுரையில் எண்ணாயிரம் சமண முனிவர்களைப் பாண்டிய மன்னன் கழுவேற்றியதாகத் திருத்தொண்டர் புராணம் குறிப்பிடுகிறது. அந்த நிகழ்வை உறுதிப்படுத்துவதுபோல மதுரை, திருநெல்வேலி, சீர்காழி ஆகிய திருத்தலங்களில் உள்ள கோவில்களில் “கழுவேற்று உற்சவம்” நவீட்பெறுவது சான்றாகும்.

கிழக்கிந்தியக் கம்பெனியார் நம்மை ஆளத்தொடங்கியபோது அவர்களை எதிர்த்துப் போராடிய பாளையக்காரர்களில் ஒருவர் வீரபாண்டியக் கட்டபொம்மன். அவன் நட்டாத்தி குரும்பூர் பகுதியில் வாழ்ந்த நாடார் சாதியினரிடமும் ஆழ்வார் திருநகரி பிராமணர் மற்றும் கோனார் சாதியினரிடமும் வழங்கும் வாய்மொழிக் கதைகள் வழக்கமான குறுநில மன்னர்களின் நடைமுறைகளிலிருந்து கட்டபொம்மன் மாறுபடவில்லை என்பதை உணர்த்துகின்றன.

தொடர்ந்து வெள்ளையர் ஆட்சி உருவாக்கிய சட்ட மன்றங்கள், மருத்துவ மனைகள், காவல்துறை நீதிமன்றங்கள் ஆகியவை குறித்து இந்தியாவின் பல்வேறு மொழிகளில் வழங்கிய பாடல்களும் கதைகளும் மக்களின் எதிர்ப்புணர்வை வெளிப்படுத்தி நிற்கின்றன.

இவ்வாறு மாற்று வரலாற்றுக்கான தரவுகளாக வாய் மொழிகளும்,வ ழக்காறுகளும், சடங்குகளும் அமைகின்றன. இவற்றை அப்படியே வரலாற்றில் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதில் ஐயமில்லை. மரபு வழி வரலாற்றுக்கான தரவுகளை எவ்வாறு ஏனைய தரவுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்து ஒரு முடிவுக்கு வருகிறோமோ அதே போல இத்தரவுகளையும் பயன்படுத்தி உண்மையைக் கண்டறியலாம்.

வாய்மொழியாகக் கூறப்படும் மற்றும் வாய்மொழியாகப் பரவும் வழக்காறுகளே வாய்மொழி வழக்காறுகள் என்று இவர் அடையாளப்படுத்துகிறார். நாட்டார் பாடல்கள், நாட்டார் கதைப் பாடல்கள், பழமொழிகள், விடுகதைகள், வாய் மொழிக் கதைகள் போன்றவை அவற்றின் முக்கியமான வகைமைகள் அவைகளின் சான்றுகளாக, கண்ணால் கண்டவர் கூற்று, வாய்மொழிமரபு, வதந்தி என்று ஜான் வான்சினா கூறுவதை இவர் தன்னுடைய ஆய்வுக்கு எடுத்துக் கொள்கிறார். தனித்தனியாக அவைகளை ஆய்வு செய்து அவைகளின் தனித்தன்மைகளை வகைப்படுத்துகிறார். இதைப்போலவே பல்வேறு வகையான வரலாற்று ஆய்வாளர்களின் கருத்துக்களைக் குறிப்பிட்டு விளக்குகிறார் இவர்.

இவர், தனது வரலாற்று ஆய்வுக் கண்ணோட்டத்தைக் குறித்த கருத்துக்களை முன்வைத்துத் தனது மதிப்பீடுகளை உறுதிப்படுத்துகிறார். “மேட்டிமையோரால் உருவாக்கப்பட்ட கல்வெட்டுக்கள், பட்டயங்கள், நாணயங்கள், இலக்கியங்கள் ஆகியவற்றில் விளிம்பு நிலையினர் அல்லது அடித்தள மக்களைக் குறித்த செய்திகளைக் குறிப்பிடத்தக்க வகையில் கண்டறிய முடியாது.

கடந்த காலங்களில் ஆட்சி புரிந்த அரசர்கள் குறுநில மன்னர்கள், ஜமீன்தார்கள், அவர்களைச் சுற்றியிருந்த அமைச்சர்கள், தளபதிகள் மற்றும் இவர்களைச் சார்ந்திருந்த கவிஞர்கள், மதகுருக்கள் கலைஞர்கள் ஆகியோரை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட மரபு வழி வரலாறு இன்னும் காலம் கடந்துவிட்டது. மையத்தைவிட்டு விலகி விளிம்பு நிலையினரைக் குறித்து எழுதப்படும் வரலாறு இன்று உருப்பெற்றுள்ளது. எனவே மக்களிடமிருந்தே மக்கள் வரலாற்றுக்கான சான்றுகளைத் திரட்ட வேண்டும். ஓலைச்சுவடிகள், ஆவணக் காப்பகத்தில் உள்ள ஒரு துண்டுக் கடிதம் ஆகியவை வரலாற்று ஆவணமாக ஏற்கப்படுவதைப் போல, கர்ணபரம்பரையாகக் கூறப்படும் கதை, பழமொழி பாடல் ஆகியவையும் வரலாற்று ஆவணமாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்ற தனது கருத்தைக் கூர்மையாகவும் தெளிவாகவும் இவர் குறிப்பிடுகிறார்.

தொடர்ந்து, உள்ளூர் வீரர்கள் பற்றிய தனது ஆய்வுகளையும் முடிவுகளையும் முன்வைக்கிறார் இவர் “தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட மற்றும் பின் தங்கியச் சாதியைச் சேர்ந்தவர்கள், ஆதிக்க சக்திகளுக்கும், அவர்கள் உருவாக்கிய சமூக மரபுகளுக்கும் எதிராகச் செயல்பட்டுள்ளார்கள். இதன் விளைவாக அவர்களின் ஆத்திரத்திற்கு ஆளாகிக் கொலை செய்யப்பட்டுள்ளார்கள். இவர்களில் பெரும்பாலோர் தெய்வமாக வணங்கப் படுகிறார்கள். இவர்களை உள்ளூர் வீரர்கள் என்று அழைக்கலாம். இவர்களைக் குறித்து பழமரபுக் கதைகள் அவ்வப்பகுதியில் வழங்கி வருகின்றன. சில இடங்களில் இவர்களை மையமாக வைத்துக் கதைப் பாடல்களும் உருவாகியுள்ளன. பரந்துபட்ட எல்லைக்குள் மேட்டிமையோரால் நிகழ்த்தப்படும் மாபெரும் நிகழ்ச்சிகளே வரலாறு என்ற கண்ணோட்டம் நம்மிடையே நிலைபெற்றுள்ளது.

“எனவே, உள்ளூர் அளவிலான மக்கள் வீரர்களைக் குறித்து நாம் கண்டு கொள்வதில்லை. ஆனால், அடித்தள மக்கள் வரலாற்று ஆய்வில் இவ்வீரர்களுக்கும் அவர்களது செயல்பாடுகளுக்கும் முக்கிய இடமுண்டு. இந்திய மக்கள் சகிப்புத் தன்மை கொண்டவர்கள்; பொறுமைசாலிகள்; அகிம்சைவாதிகள் என்று நம் மனத்தில் பதிய வைக்கப்பட்டுள்ள கருத்து எவ்வளவு போலியானது என்பது வட்டார வீரர்களின் வரலாறு நமக்கு உணர்த்தும்.”

“இக்கதைகளை மட்டுமின்றி, இக்கதைகளுடன் தொடர்புடைய வீரர்வழிபாடு, வழிபாட்டுச் சடங்குகள் நம்பிக்கைகள் போன்றவற்றையும் சேகரித்து ஆய்வு நிகழ்த்தும் பொழுது பல புதிய வரலாற்று வீரர்களை இனம் காணமுடியும்.

சமுதாயப் போராட்டங்களையும், அவற்றின் விளைவுகளையும் குறிப்பிடும் நொடிக்கதைகள் மக்களிடையே காணப்பட்டதை இவர் குறிப்பிடுகிறார். “திருவாங்கூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாகக் குமரி மாவட்டம் இருந்தபோது மிகவும் இழிவான பண்பாட்டு ஒடுக்கு முறைகள் அங்கு நிலவின. அவற்றுள் ஒன்றாகப் பல்வேறு சாதிகளைச் சார்ந்த பெண்கள் மார்பை மறைக்கும் உரிமை இல்லாதிருந்தனர். அரை நிர்வாணக் கோணத்திலேயே இப்பெண்கள் பொது இடங்களில் நடக்க வேண்டிய அவலம் நிலவியது. ஆதிக்கச் சக்திகளாக அன்று விளங்கிய நாயர்களும், வெள்ளாளர்களும் இவ்விதி முறையைக் கடைப்பிடிக்கும்படி உறுதியாகப் பார்த்துக் கொண்டார்கள்.”

“இக்கொடுமையை எதிர்த்து கி.பி. 1822, கி.பி.1828-1829, 1858 என்ற மூன்று கட்டங்களில் தென் திருவிதாங்கூர்ப் பகுதி நாடார் சமூகத்தின் கிறிஸ்தவ மிஷனரிகளின் ஆதரவோடு போராட்டம் நடத்தி வெற்றி பெற்றனர். அதன் பின்னர் இக்கொடுமை ஒழிந்தது. இது ‘தோள்ச் சீலைப் போராட்டம்’ என்று அழைக்கப்படுகிறது.”

அடுத்து, இவர் பண்பாட்டு அடையாளம் போராட்டங்களைக் குறித்து விரிவாக விளக்குகிறார். “உண்மையான சமூக வரலாறு என்பது பண்பாட்டு ஒடுக்கு முறைகளையும், அவற்றிற்கு எதிராக நிகழ்ந்த போராட்டங்களையும் உள்ளடக்கியதாகும். எனவே, இத்தகைய போராட்டங்களைக் குறித்து விரிவாக அறிந்துகொள்வது சமூக வரலாற்றில் முக்கிய இடத்தைப் பெறுகிறது.”

தொடர்ந்து, பண்பாட்டு அடையங்களை வகைப்படுத்தி விளக்கம் அளிக்கிறார் “மொத்தத்தில் சமயம் - சாதி - மொழி - வழிபாடு - ஆடை அணிகலன்கள் - உணவு - உண்ணும் முறை - மக்கள் பெயர் இவையெல்லாம் பண்பாட்டு அடையங்களாகும். இப்படி பண்பாட்டு அடையாளங்கள் வெறும் அடையாளங்களாக மட்டுமின்றி அதிகாரம் குறித்த கருத்துருவாக்கமாகவும் அமைகிறது.

அடுத்து, மேட்டிமையோர் மற்றும் மேட்டிமைக் குழுக்களைக்குறித்து இத்தாலிய நாட்டு கிராம்ஸ்கி, இங்கிலாந்து எங்கெல்ஸ் போன்றவர்களின் கருத்துக்களை முன்வைத்து உண்மை நிலையை அடையாளப்படுத்துகிறார் தொடர்ந்து அவர் குறிப்பிடும்பொழுது ஒரு கருத்தைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் புலப்படுத்துகிறார். சமூகத்தின் அடித்தளமக்கள் கடுமையாக உழைத்து உழன்றாலும் அவர்களுக்குக் கிடைப்பதென்னவோ ஏளனமும் அவமதிப்பும்தான். “விளக்குத் தண்டைப்போன்று நாகரிக விளக்கினைத் தலையால் சுமந்துகொண்டு இக்கூட்டம் இருக்கிறது. விளக்கிலிருந்து கசிகின்ற எண்ணெயானது விளக்கைச் சுமப்பவர் மீது கசிந்து கொண்டிருக்க மேல்நிலை மக்கள் விளக்கின் ஒளியைப் பெறுகின்றனர் என்று தாகூர் குறிப்பிடுவார் என்று ஓர் எடுத்துக்காட்டை இவர் முன்வைக்கிறார்.

“அடித்தள மக்கள் யார் என்பதையும் தன்னுடைய வரையறை மூலமாகப் புலப்படுத்துகிறார்: மேட்டிமைக் குழுவிற்கு நேர்மாறாக எண்ணிக்கையில் அதிகமானவர்களாகவும், சமுதாயத்தின் வளங்களில் உரிய பங்கு பெற முடியாதவர்களாகவும், குறைந்த அளவு உணவு, குறைந்த அளவு உடை, குறைந்த கல்வி பெற்று வாழும் மக்கள் பிரிவினரே அடித்தள மக்கள் எனப்படுகின்றனர். இந்தச் சூழலில் அடித்தள மக்கள் என்பதற்கு, சாதி, செய்யும் தொழில், அரசியல் ஆதிக்கம் பாலியல் நிலை, பொருளாதார நிலை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் அல்லது அனைத்து நிலைகளிலும் தாழ்ந்திருக்கும் மக்கள் என ஓர் எளிய வரையறை செய்யலாம்.”

sivasubramanian book 450 copyஅடித்தள மக்களின் பண்பாட்டு அடையாளங்களை இழிவுபடுத்தும் தன்மைகளையும் அவைகளை மாற்றியமைக்கும் நடைமுறைகளையும் இவர் விளக்குகிறார் மேலும் வர்க்கப் போராட்டத்தில் அடித்தள மக்களின் நிலைமைகளைப் பற்றியும் இவர் தன் ஆய்வை முன் வைக்கிறார். “வர்க்கப் போராட்டம் என்பது உடைமையாளர்களான முதலாளிகளுக்கும், உற்பத்தியில் ஈடுபடும் பாட்டாளிகளுக்கும் இடையே வேலைத்தளத்தில் நிகழும் யுத்தம் மட்டுமல்ல. அது பண்பாட்டிலும் சமயத்திலும் கூட வெளிப்படும்.

பண்பாடு, சமயம் தொடர்பான கண்ணோட்டம், தகவு, நம்பிக்கை போன்றவற்றில் சிக்கலைத் தோற்றுவித்து, மக்களின் சிந்தனையிலும் நடத்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கருத்தையும் தெரிவிக்கிறார். இது, ‘பொருளாதாரம் அல்லாத சுரண்டல் முறை’ என்று மார்க்ஸ் குறிப்பிடுவதை மனதிற் கொண்டு ஒடுக்குமுறை மற்றும் சுரண்டலுக்கு எதிராக வர்க்கப் போராட்டக் களத்தை விரிவுபடுத்தும் கிராம்ஸ்கியின் மதிப்பீட்டை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

எனவே பண்பாட்டு அடையாளங்களைப் புறக்கணித்துவிட்டு முழுமையான சமூக மாறுதலை உருவாக்க முடியாது. அரசியல் மற்றும் பொருளாதாரப் போராட்டங்களோடு பண்பாட்டு அடையாளப் போராட்டங்களையும் இணைத்துக் கொள்வது மிகவும் அவசியமான ஒன்றாகும் என்கிறார் இவர்.

தமிழர்களுடைய சமுதாய வாழ்க்கையில் நிலவுடைமை தோன்றிய பின்னணியையும், மாற்றங்களையும், வளர்ச்சியையும் தகுந்த ஆவணங்களைக் கொண்டு நிலைப்படுத்துகிறார். தொழில்களின் அடிப்படையில் சாதிகள் தோன்றி வளர்ந்து பிளவுபட்டு ஏற்றத் தாழ்வுகள் உருவான நடைமுறைகளையும் விளக்குகிறார். கணக்கன் வரலாற்றையும் மாறுபட்ட அரசுகளின் தோற்றங்களையும் வேறுபாடுகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டு வரலாற்று மாற்றத்தையும், வளர்ச்சியையும் அறிவியல் கண்ணோட்ட அடிப்படையில் மதிப்பீடுகளைக் கண்டறிகிறார். அவற்றிற்குப் பொருத்தமான வகையில் தகுந்த ஆதாரங்களை கணக்கன் வழக்காறுகளை முதன்மைப்படுத்தி விளக்கம் அளிக்கிறார்.

ஆங்கில ஆட்சியால் இந்திய சமூகத்திற்கு நேர்ந்த கொடிய விளைவுகளுள் ஒன்று இங்கு அடிக்கடி நிகழ்ந்த கடும் பஞ்சங்கள். அதைத் தாது வருடப்பஞ்சம் என்று குறிப்பிட்டு அடித்தள மக்கள் அனுபவித்த துன்பதுயரங்களைத் தகுந்த புள்ளிவிவரங்களோடு இவர் அடையாளப்படுத்துகிறார்.

தொடர்ந்து சமூகம் சார் கொள்ளையரின் தோற்றமும் தாக்கங்களும் நாட்டார் வழக்காறுகளிலிருந்து கண்டறிந்து அவற்றை எடுத்துக்காட்டாக முன்வைத்துத் தனது முடிவுகளை நிறுவுகிறார். அவைகள் நாட்டார் பாடல்கள், கதைகள். வாய்மொழிகள் போன்றவற்றில் நிறைந்து கிடப்பதைத் தகுந்த ஆவணங்களை ஆதாரமாக்கி விருப்பு வெறுப்புக்களுக்கு இடமளிக்காமல் நேர்மையோடு இனம் காண்கிறார்.

மேலும், பரதவர்களின் ‘மேசை எதிர்ப்புப் போராட்டம்’ துவிக் குத்தகைப் போராட்டம் போன்ற வரலாற்று நிகழ்வுகளைத் தகுந்த பின்னணிகளோடு விளக்குகிறார்.

தமிழில் குறுநூல்கள் தோன்றிய பின்னணியையும், வளர்ச்சியையும், வகையினங்களையும் காலவரிசைப்படி அடையாளப்படுத்தி, இன்றைய ஊடகங்களின் உயர்ந்த கட்ட வளர்ச்சியையும் குறிப்பிடுகிறார்.

அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியின் விளைவாகப் பழைய தானியங்கள் மறைந்து புதிய பயிர் வளர்ப்புக்கு உகந்த நவீன தானியங்களைப் பட்டியலிடுவதோடு, புதிய உற்பத்தி முறையில் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையில் நிகழும் மாற்றங்களையும் இனம் காண்கிறார் இவர்.

மக்களைக் கூடி வாழச் செய்யும் முறையில் நிகழ்ந்து வரும் பூப்புச் சடங்குகளைப் பற்றியும், நம்பிக்கைகளைப் பற்றியும் தெளிவான பார்வையை முன்வைத்து அவற்றிற்கே உரிய தனிச் சிறப்புக்களையும் குறிப்பிடுகிறார்.

“ஆப்பிரிக்காவிலும், ஆசியாவிலும் கீழ் நிலையிலுள்ள ஆண்களோ, பெண்களோ தங்கள் எதிர்க் குரலைச் சாமியாட்டத்தின் வாயிலாகவே வெளிப்படுத்துகின்றனர். என்ற லெனின் கருத்துக்குப் பொருத்தமான வகையில் அடித்தள மக்களிடையே காணப்படும் சாமியாடும் தந்திரச் செயலைப் பல கோணங்களிலிருந்து கண்டறிந்து துல்லியமாகவும், தெளிவாகவும் விளக்குகிறார்.

தொடர்ந்து இந்தியாவில் பெரும்பாலான சமுதாயங்களில் தொடர்ந்து நிலவி வந்த உடன்கட்டை ஏறும் வழக்கத்தைத் தகுந்த ஆவணங்களின் அடிப்படையில் உறுதிப்படுத்துகிறார். மேலும், நாட்டார் வழக்காறுகளில் பரவலாகக் காணப்படும் பாலியல் வன்முறையைப் பற்றியும் தகுந்த சான்றுகளுடன் விளக்கிக் காட்டுகிறார். இவை அனைத்தும் அடித்தள மக்களின் வாழ்க்கையை முன்நிறுத்தி மதிப்பீடு செய்யப்பட்டவை என்பது தெளிவாகிறது.

கடந்த காலங்களில் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையில் நிகழ்ந்த பல வகையான நிகழ்வுகளை அவர்களுடைய வழக்காறுகளிலிருந்து கண்டறிந்து வியக்கத் தகுந்த வகையில் ஒரு மாற்று வகையாக இதை வடிவமைத்திருக்கிறார். இவர். வாசிப்பதற்கு உகந்த விதத்தில் எளிய நடையில் தெளிவாகவும், துல்லியமாகவும் ‘அடித்தள மக்கள் வரலாறு’ வடிவம் பெற்றுள்ளது. இதுவரை அறியப்படாத பலவகையான உண்மைகளை இது புலப்படுத்துகிறது.

 அடித்தள மக்கள் வரலாறு
ஆ. சிவசுப்பிரமணியன்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்,
சென்னை - 50.விலை ரூ.250/-
தொலைபேசி: 044 26251968.

Pin It