கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

மிருகவதை பற்றி...

1. மிருகவதை பற்றிப் பேசினால் யாரும் வீட்டுப் பிராணிகள் வளர்க்கக் கூடாது.

2. மிருகவதை என்று ஒரு பிரிவினையே சாத்தியமில்லாதது.

3. தொழில் பயன்பாடு, பொழுதுபோக்குப் பயன்பாடு, உணவுப் பயன்பாடு என்றே பிரிக்கமுடியும்.

4. இதில் பொழுதுபோக்குப் பயன்பாடு மட்டுமே தவிர்க்க முடியும்.

jallikattu 393

சாதியும் தேசியப் பண்பாடும்

5. ஜல்லிக்கட்டுக் காளைகள் இனப்பெருக்கம் மற்றும் தமிழர் பண்பாட்டு வாழ்வியலோடு தொடர்புடையதாக உள்ளது.

6. ஒருவர் பண்பாட்டு வாழ்வியல் இப்படி இருக்கக் கூடாது என்றும் இது விளையாட்டல்ல என்றும் கூட மாறுபட உரிமையுண்டு. ஆனால் தாம் மாறுபடுவதற்காகவே அதை தடைசெய்யச் சொல்வது ஏற்கவியலாதது.

7. சாதியம் இதில் நிலவுகிறது என்று சொன்னால் அது இருப்பது உண்மைதான். ஆனால் எதில் சாதி இல்லை, சாதியம் நிலவுவதற்காக தடைசெய்வது என்று சொன்னால் முதலில் உணவையே தடை செய்ய வேண்டியிருக்கும்.

8. இப்போது அரசு தலையிட்டு நடத்துவதன் பின்னணியில் தற்போது யாரும் காளையை இறக்கலாம்; யாரும் ஏறுதழுவலாம். மருத்துவப் பரிசோதனை மட்டுமே செய்யப்படுகிறது. மதுரை மாவட்டத்தில் சாதி கடந்து பல்வேறு சமுகத்து இளைஞர்களும் விளையாடுகிறார்கள். பள்ளர், பறையர் சமுகத்து இளைஞர்களும் விளையாடுகிறார்கள். இந்த வளர்ச்சியை நாம் அங்கீகரிக்க வேண்டும். தேசியப்பண்பாடாக அங்கீகரிக்க வேண்டும்.

அமெரிக்கா.. பீட்டாவும்..பார்ப்பனியமும்

9. உலகம் முழுக்க வேளாண்மைத்துறையை கைப்பற்றும் யுத்தம் நடந்து வருகிறது. புதிய காலனியமயமாக்கம் இதுவே. முதலில் விதைகள் கைப்பற்றப்பட்டன. இன்று தமிழகத்தில் 95 சதவீதம் அமெரிக்க மான்சாண்டோ பருத்தி விதைகளே விதைக்கப்படுகின்றன. மரபார்ந்த உரங்கள் ஒழிக்கப்பட்டு கம்பெனி உரங்களால் அவை கைப்பற்றப்பட்டன. கால்நடைகளும் கைப்பற்றப்பட்டுவிட்டன. இது போன்ற கம்பெனிகளுக்கு எதிர்கால அச்சுறுத்தலாக மாறக்கூடிய பண்பாட்டு எச்சங்கள் கூட திட்டமிட்டு அழிக்கப்படுகின்றன. என்ஜிஓக்களின் சதிபற்றி பேசுபவர்கள் கூட பீட்டா என்ற அமெரிக்க என்ஜிஓவின் சதிபற்றி பேசத் தவறுவது ஏன்? இது ஜல்லிக்கட்டு மட்டுமல்ல, ரேக்ளா உட்பட பல்வேறு மரபார்ந்த நிகழ்வுகளும் தடை செய்யப்படுவதை கவனத்தில் கொள்வோம்.

10. பீட்டா சைவ அரசியலை அமெரிக்காவில் பேசுகிறது. இது இந்தியாவில் மாமிச உணவு சாப்பிடும் மக்களைக் குறிவைக்கும் ஆர்எஸ்எஸ் கும்பலின் பார்ப்பன அரசியலோடும் கைகோர்க்கிறது. பொழுது போக்குக்காக செல்லப்பிராணி வளர்ப்பதை ஊக்குவிக்கும் இக்கும்பல் அதில் மிருகவதை பற்றிப் பேசுவதில்லை. அந்த பிராணிகளை வைத்து காசு பார்க்கிறது.

11. இது அமெரிக்க பால் மற்றும் கால்நடை மருத்துவ நிறுவனங்களின் உளவுப்படையாகவும் செயல்படுகிறது.

12. இதில் பிஜேபி உள்ளிட்ட பார்ப்பனிய வெறியர்கள் ஜல்லிக்கட்டு மற்றும் பொங்கல் ஆகிய உழைப்பார்ந்த பண்டிகையில் பார்ப்பனர்களுக்கு எந்தவித பாத்திரமோ தனிகவனிப்போ இல்லை என்பதுதான். உச்சநீதிமன்றத்தை மதிப்பது போல் நாடகம் ஆடுகிற இவர்கள், உச்சநீதிமன்ற ஆணையை மதிக்காமல் பாபர் மசூதியை இடித்த இவர்கள், ஜல்லிக்கட்டை காட்டிக் கொடுப்பதற்கு காரணம் பார்ப்பனிய வன்மமும் அமெரிக்க அடிமை சேவகம் செய்யும் மோடியின் அடிவருடித்தனமும் தான். அவர் ‘பாலையும் மாட்டையும் இறக்குமதி செய், பின் இந்தியாவில் தயாரி’ என்கிறார்.

13. தேசிய அரசியல்

எதிரி எதன் பெயரால் ஒதுக்குகிறானோ போராட்டம் அதன் பெயரால் வெடிக்கும். தமிழ் மக்களிடையே நிலவும் ஜல்லிக்கட்டு என்ற பண்பாட்டை காட்டுமிராண்டித்தனம் என்று சொல்லும் ஒரு கும்பலை எதிர்த்து இது தமிழரின் பெருமைமிகு கலாச்சாரம் என்று எதிர்ப்பு கிளம்பவே செய்யும்.

 தென்மாவட்டங்கள் சிலவற்றில் கொண்டாடப்படும் பண்பாடு எப்படி தமிழர் பண்பாடு ஆகும் என்று கேட்டால் பல உலகளாவிய பண்பாடுகள் உலகில் எங்கோ ஓர் ஓரத்தில் தோன்றியவைதான். காதலர் தினம், ஆங்கிலப் புத்தாண்டு. பெண்கள் தினம், மே தினம் என்று சொல்லிக் கொண்டே போகலாம். தென்மாவட்ட விளையாட்டாக இருந்தாலும், அதை எதாவது ஒரு பிரிவு மட்டும் சொந்தம் கொண்டாடவில்லை, முடியாது. அது தமிழ்த் தேசியப் பண்பாட்டு அடையாளமாக இந்தப் போராட்டத்தில் பிரகடனப்படுத்தப்பட்டு விட்டது.

நமது போராட்டத்தின் நண்பர்கள் & எதிரிகள்,

பீட்டா + பார்ப்பனிய மோடி + ஊழல் சசிகலா + ஓபிஎஸ்

\எதிர்\

 தமிழர்கள் ( அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்கள் + பார்ப்பனிய எதிர்ப்பாளர்கள் + ஊழல் எதிர்ப்பாளர்கள் + ஜனநாயக சக்திகள் அனைவரும்) என்ற எல்லையில் தான் இந்த அரசியல் போராட்டம் குவிக்கப்பட வேண்டும்.

இந்த போராட்டத்தின் ஊடான நமது ஒற்றுமையை காவிரி நீர் உரிமை மற்றும் விவசாயிகள் தற்கொலைப் போராட்டங்களோடு ஒருங்கிணைப்போம்.

புதிய காலனியாதிக்க எதிர்ப்பு, சோசலிசப் புரட்சி அரசியல், நண்பர்களிடையே பரிசுத்தம் தேடுவதில் வெற்றியடையப் போவதில்லை. எதிரியின் மீதான இலக்கை தவற விடாமல் குறிவைத்துக் கொண்டே நமது நண்பர்களுக்கு புத்தரசியலிட்டு உரமுட்டுவதில் தான் இருக்கிறது.

- தங்கப்பாண்டியன், சோசலிச மையம், தமிழ்நாடு