singaravellam 400சிந்தனைச்சிற்பி சிங்காரவேலர் பல செயற் பாடுகளில் முன்னோடியாக விளங்கியவர். இந்தி யாவின் முதல் கம்யூனிஸ்டாகவும், முதல் கம்யூனிஸ்ட் மாநாட்டிற்குத் தலைமை ஏற்றவராகவும், மே நன்னாளை முதன்முதலில் கொண்டாடியவராகவும், பொதுவுடைமை இயக்கம் இந்தியாவில் தோன்று வதற்கு முன்பாகவே, அத்தத்துவத் தெளிவோடு தொழிலாளி- விவசாயி கட்சியைத் தோற்றுவித்த வராகவும், தெளிவான வர்க்கப் பார்வையுடன் தொழிற்சங்கத்தை முதன்முதலில் வழிநடத்திய முன்னோடியாகவும் விளங்கினார் இவ்வாறு அரசியல் செயற்பாடுகளில் மட்டுமல்லாமல், பற்பல புதிய சிந்தனைகளை முதன்முதலில் பரப்பிய வராகவும் அவர் இருந்துள்ளார். இவை அவருக்குக் கூடுதலான சிறப்பையும் பெருமையையும் அளிப்பவை.

தமிழகத்தில் வரலாற்றுப் பொருள்முதல் வாதத்தையும், லாப்லசின் வானியல் கொள்கை யையும், ஈன்ஸ்டினின் கால இடக்கோட்பாட்டையும், ஃப்ராய்டின் உளவியல் கொள்கையையும், டார்வினின் உயிரியல் கொள்கையையும், அரசியல் - பொருளாதாரத்தையும், சுற்றுச்சூழலியலையும் இவை போன்ற பலவற்றைத் தமிழில் முதன்முதலாக அறிமுகம் செய்த முதல் முன்னோடி அவரே யாவார்.

சமூக - மத மூட நம்பிக்கைகளை விஞ்ஞான வெளிச்சத்தோடு முதன்முதலாகப் பற்பல கட்டுரை களை வரைந்து காட்டியதோடு, விஞ்ஞான நூல்களை முதன் முதலில் அறிமுகப்படுத்தியதுடன் அறிவியல் மனப்பான்மையை வளர்க்கத் திட்ட மிட்ட மூலவரும் அவரே; இவற்றில் பெரும் வியப்பு என்னவெனில், தனிச்சிறப்பு என்னவெனில், அவர் முன்னோடி இல்லாத முன்னோடி என்பதேயாகும். அதாவது அம்பேத்கர் என்ற முன்னோடிக்கு பூலே என்ற முன்னோடி இருந்தார். பாரதியாருக்கு வள்ளலார் என்ற முன்னோடி இருந்தார்.

லெனின் என்ற முன்னோடிக்கு மார்க்ஸ் என்ற முன்னோடி இருந்தார்; இவ்வாறு சிங்காரவேலருக்கு இந்தியாவில் யாரும் முன்னோடி இலர்; அப்படியெனில் அவர் என்ன சுத்த சுயம்புவா? இல்லை; இல்லை; எக் காலத்தில் இருந்த உலக அரசியல் சூழலும், விஞ்ஞான நூல்களின் அறிமுகமும், சோவியத்துப் புரட்சியுமே, முற்களமாக அமைந்து அவருக்கு முன்னோடியாக விளங்கின.

தமக்கு முன்பிருந்த மனிதர் யாரையும் முன்னோடியாகக் கொள்ளாமல், சமூகச் சூழலை முன்னோடியாக ஏற்பது மிக மிக அரிது அதற்கு இடையறாத தொடர்ந்த பரந்த வாசிப்பும் கூர்த்த மதியும், ஆழ்ந்த கவனிப்பும் (Deep Observation) தேவை; இவற்றையெல்லாம் ஒருங்கே கொண்டவர்தான், அவர். அதனாற்றான் அவர் முன்னோடி இல்லாத முன்னோடியாக விளங்கியுள்ளார். தகவல் தொழில்நுட்பம் வளர்ந்திராத அக்கால கட்டத்தில், அவர் அவ்வாறு விளங்கியிருப்பதைச் சாதாரணமாகக் கொள்ள முடியாது. அது வியப்பிற்குரியதே! இந்த வியப்பின் மேலீட்டான்தான் புரட்சிக்கவிஞர் பாரதிதாசனார்,

“நாடு விடுதலை பெற்றதும் அவனால்

நாத்திகக் கருத்தனல் கனன்றதும் அவனால்

பாடுபடுவோர்க்கு உரிமை உயிர்த்ததும் அவனால்

பழமையில் புதுமை மலர்ந்ததும் அவனால்

மூலதனத்தின் பொருள் புரிந்ததும் அவனால்

புதுவுலகக் கனா முளைத்ததும் அவனால்

கோலப் பொதுவுடைமை கிளைத்ததும் அவனால்

கூடின அரசியல்; அறிவியல் அவனால்

கடல்வான் ஆழ்அகலக் கல்வி கற்றவன்

கண்ணாய் உயிராய்த் தமிழர்க்கு உற்றவன்

போர்க்குணம் மிகுந்த செயல் முன்னோடி

பொதுவுடைமைக்கு ஏகுக அவன் பின்னோடி”

சிங்காரவேலரைப் போல் சிந்தனைச்சிற்பி

எங்கேனும் கண்ட துண்டா”

என்று போர்ப்பரணி பாடி நமக்குப் புரிய வைத்துள்ளார். பாரதிதாசனார் சிங்காரவேலரின் ஒவ்வொரு முன்னோடிப் பண்பையும் “அவனால் அவனால்” என்று அடுக்கிக் கொண்டே செல் வதால் நன்கு உணரலாம். பாரதிதாசனார் இவ்வாறு விரித்துப் பாடியும் நம்மக்கள் அவரைப் போது மானவரை அறியவில்லை என்பது தான் சோக மானது. அந்தச் சோகத்திற்கு விடிவு காண்பது தான் இக்கட்டுரையின் குறிக்கோள்.

சிங்காரவேலருக்கு எத்துணை ஆழ்ந்த தேடலும், எத்துணை அகன்ற தொலைநோக்குச் சிந்தனையும் இருந்துள்ளன என்பதற்குத் திரு.வி.க நடத்திய நவசக்தியில் 24-5-1921 அன்று வெளிவந்த சிங்கார வேலரின் கட்டுரை சிறந்த சான்றாகும். அக் கட்டுரை முதன்முதலில் இந்து ஆங்கில இதழில்  Open letter to mahathma Gandhi என்ற தலைப்பில் வெளிவந்தது. அடுத்து அவரால் மொழியாக்கம் செய்யப்பட்டு நவசக்தியில் வெளிவந்துள்ளது. அக்கட்டுரையில் முக்கியமாக இரு பொருள் களைப் பற்றி காந்தி அடிகளுக்குத் தெளிவுறுத்தி உள்ளார். அவை இன்றளவில் மிக முக்கியமும் பொருத்தப்பாடும் கொண்டன.

காந்தியடிகள் யங் இந்தியாவில், ஒத்துழை யாமை இயக்கத்தின்போது ஒரு கட்டுரை எழுதி யுள்ளார். அதில் அந்நிய ஆதிக்கத்தை எதிர்த்துப் பெரும் போராட்டம் செய்யவேண்டாமென்று விவசாயிகளுக்கு அறிக்கை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கை சிங்காரவேலருக்கு ஏமாற்றம் அளித் திருப்பதால், காந்தியடிகளுக்கு அவர் வெளிப் படையாகக் கடிதம் எழுதியுள்ளார். இதே தலைப்பில் 1918-இல் இருந்து பற்பல கட்டுரை களைப் பல ஆண்டுகளாக எழுதியுள்ளார். அவை யாவும் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை; அதாவது அவை காந்தி அடிகளின் முடிவுகளை கருத்துகளை மறுப்பதுடன் அவற்றிற்கான சரியான தீர்வு களையும், வழிகாட்டுதல்களையும் கொண்டு உள்ளன என்பதுதான் மிக முக்கியம் அவற்றை இக்கட்டுரையிலும் காணலாம்- விவசாயிகளைப் பெரிய போராட்டத்தில் ஈடுபட வேண்டா மென்று காந்தியடிகள் கூறியபோது சிங்கார வேலர் என்ன எழுதியுள்ளார் என்பதைக் கீழே காணலாம்.

“வணக்கத்திற்குரிய ஐயா அவர்களே, யங் இந்தியா (YOUNG INDIA)வின் கடைசி பக்கத்தில் விவசாயிகளுக்கு தாங்கள் அளித்த அறிவுரை எனக்கு ஆழ்ந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. அரசியலில் தன்னிஷ்டப்படியான அதிகாரத்தை (வெள்ளையர் ஆட்சி) எதிர்த்துப் பலாத்காரமற்ற ஒத்துழையாமையை நாம் பயன்படுத்த முடியும் போது முதலாளித்துவ ஆட்சியை நாம் ஏன் எதிர்க்கக்கூடாது என்பதை என்னால் நினைக்க முடியவில்லை. முதலாளித்துவ தனியதிகாரத்தை எதிர்த்துப் போராடாமல், அரசியல் தனியதி காரத்தை எதிர்த்துப் போராட முடியாது. ----------

நமக்கு வரவிருக்கும் சுயராஜ்யத்தில் நிலமும், இன்றியமையாத தொழிற்சாலைகளும் நாட்டின் நன்மைக்காகப் பொதுமைப்படுத்த (பொது வுடைமை) வேண்டுமென்றும், நாம் பயிரிடாத எந்தத் துக்காணி நிலத்தையும், நாம் வேலை செய்யாத எந்தத் தொழிற்சாலையையும், நாம் வசிக்காத எந்த வீட்டையும், நம்மில் ஒருவரும் வைத்துக் கொள்ளக்கூடாது என்றும் எளிய மொழியில் ஐயத்திற்கிடமின்றி அறிவிக்கவேண்டு மென்று தங்கள் முன் தாழ்ந்து பணிந்து வேண்டு கிறேன்.”

நவசக்தி 24. 5. 1921

இக்குறிப்பை நோக்கினால் சில உண்மை களை உணரலாம். அதாவது அக்காலத்தில் இந்தியத் தேசிய காங்கிரஸ் கட்சியின் சுதந்திரப் போராட்டம் பெரும்பாலும் அந்நிய ஆட்சியை விரட்டுவதாக மட்டும் இருந்ததேயன்றி, அந்த ஆட்சியின் பொருளாதாரச் சுரண்டலை, முதலாளித்துவப் போக்கை உணர்ந்து போராடும் வலிமையைக் கொண்டதாகக் காங்கிரஸ் கட்சி இல்லையென்பதே சிங்காரவேலரின் கவலை; வெள்ளையர் ஆட்சியின் முதலாளித்துவத்தைப் ஒழிக்கப் போராடும் நோக்கு நிலை காங்கிரஸ் கட்சிக்கு இருக்க வேண்டுமென அவர் விரும்பு கிறார். மேலும், நாட்டின் தொழிற்சாலைகளைப் பொதுவுடைமையாக்க வேண்டுமென்றும், நிலங் களை விவசாயிகளுக்கும், தொழிற்சாலைகளைத் தொழிலாளர்களுக்கும் ஒப்படைக்கும் நிலையை உருவாக்க வேண்டுமென்றும், அவற்றை வெளிப் படையாகக் காங்கிரஸ் கட்சி அறிவிக்க வேண்டு மென்றும், அவற்றிற்குக் காந்தியடிகள் உதவ வேண்டுமென்றும் அறிவித்துள்ளார். இதுபோன்ற அறிவிப்பை இதற்கு முன்பே அமிர்தசரஸ், நாக்பூர், பம்பாய், விஜயவாடா ஆகிய ஊர்களில் நடந்த காங்கிரஸ் மாநாடுகளுக்குத் தந்திமூலம் அவர் தெரிவித்துள்ளார்.

இது மிக முக்கியமானது. மற்றும் அக்கட்டுரையில் தொழிலாளி - விவசாயி களைச் சுதந்திரப் போராட்டத்தில் முழுமையாக ஈடுபடுத்த வேண்டுமென்றும், அதற்காக அவர் களின் எதிர்கால நலனில் காங்கிரஸ் கட்சி திட்டம் வகுக்க வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளார். தொழிலாளியும் விவசாயியுமே உற்பத்தியைப் பெருக்குபவர்கள்; அவர்கள் இல்லையெனில் உணவுப்பொருளும் கிடையா; மற்றப் பொருள் களும் கிடையா; இவை இல்லையெனின் மனிதச் சமுதாயம் உயிர்வாழாது; அச்சமுதாயத்திற்கு அவர்களே உயிர் போன்றவர்கள்; அதனால்தான் பண்டைய மணிமேகலை ஆசிரியர் சாத்தனார் “உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே; என்று மிக அருமையாகக் கூறிச் சென்றார். அந்த உயிர் கொடுத்தோரைப் புறக்கணிக்கக்கூடாது என்பதே அவர் கருத்து.

சிங்காரவேலர் மற்றொரு முக்கியக் கருத்தையும் குறிப்பிடுகிறார். அதாவது அந்நிய முதலாளித்துவத்தை எதிர்க்கும் நாம் தேசிய முதலாளித்துவத்தையும் எதிர்க்கும் நோக்குநிலை வேண்டுமென்றும் அறிவுறுத்துகிறார். சுதந்திரப் போராட்டக் காலத்திலேயே நமக்கு அந்தத் தெளிவு இருக்கவேண்டும் என்கிறார். இது குறித்து அவர் என்ன எழுதியுள்ளார் என்பதைக் கீழே காணலாம்.

“அயல்நாட்டு அதிகார வர்க்கத்தை மட்டு மன்றி எதிர்காலத்தில் நம் சொந்த மக்களின் அதிகார வர்க்கத்தையும் எதிர்த்து நாம் வெற்றி பெறும் வரையில், நமது நற்பேறற்ற மக்கள், சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் ஒருபோதும் இருக்க மாட்டார்களென்று நான் நம்புகிறேன். ஆதலால் கம்யூனிசம் மட்டுமே அதாவது நாட்டிலுள்ள எல்லாத் தொழிலாளர்களும் பொதுவாகப் பயன்படுத்தவும், நலம் பெறவும், நிலத்தையும் இன்றியமையாத தொழிற்சாலை களையும் பொதுவுடைமையாக்குவதே நம் மக்களுக்குச் சுதந்திரத்தையும் மனநிறைவையும் அளிக்கும் உண்மையான நடவடிக்கையாகும்.”

நவசக்தி 24. 5. 1921

அக்காலத்திலேயே அவர் எத்துணைத் தொலை நோக்கோடு சிந்தித்துள்ளார் என்பதற்கு இக்குறிப்பு நல்ல எடுத்துக்காட்டு. அயல்நாட்டு முதலாளித் துவமோ, தாய்நாட்டு முதலாளித்துவமோ வேறு வேறு அன்று; இரண்டும் சுரண்டலை அடிப் படையாகக் கொண்டதேயாகும். சுரண்டலில் மேல் கீழ் எனும் பாகுபாடு இல்லை. உள்நாடு வெளிநாடு எனும் வேறுபாடும் இல்லை. இரண்டிற்கும் ஒரே வர்க்கக்குணம்தான்; அதாவது அவை இரண்டும் சுரண்டலை அடிப்படையாகக் கொண்டவை என்கிறார். சிங்காரவேலர் இவ்வாறு நினைவுறுத்துவதற்கு அடிப்படை காரணம் உண்டு; அவர் இருபதுகளில் (1921) இவ்வாறு எழுதியிருப்பது மிக அசாதாரணமானது. காரணம் அப்போதுதான் (1918-லிருந்து) காந்தியடிகளின் தலைமையில் காங்கிரஸ் இயக்கம் வீறுகொண்டு பரவத் தொடங்கியது.

1928-க்குப் பின்னர் அதாவது மக்கள் எழுச்சிக்குப் பின்னர்தான் தேசிய முதலாளி களாகிய பஜாஜ், ஜெயின், பிர்லா போன்றவர்கள் காங்கிரஸ் இயக்கத்திற்கு ஆதரவளித்து உதவு கின்றனர். இவர்களில் சிலர் காந்தியடிகளுக்கு நெருக்கமாகின்றனர். அவர்களைப் போன்றவர்கள் தேசிய விடுதலைக்கு ஆதரவளித்ததற்குப் பெருங் காரணம், நாடு விடுதலை அடைந்தால், தேசிய அரசிடமிருந்து மிகுந்த சலுகைகள் பெறலாம் என்பதேயாகும். அவையும் சுதந்திரத்திற்குப் பின்னர் நன்றாகவே நிறைவேறின. இதில் வியப்பு என்னவெனில் இவற்றையெல்லாம் முன்கூட்டியே சிந்தித்து அவர், 1921-இல் எழுதியிருப்பது கவனிக்கத் தக்கது. ஒரு மார்க்சியவாதி அரசியல் போராட்டங்களை எவ்வாறு சிந்திக்கிறான், எவ்வாறு முடி வெடுக்கிறான் என்பதற்குச் சிங்காரவேலரின் கூற்று நல்ல சான்றாகும். வழிகாட்டுதலாகும்.

இங்கு மற்றொன்றும் சிந்திக்கத்தக்கது. அதாவது, சிங்காரவேலரின் இதுபோன்ற சிந்தனை களை இந்தியத் தலைவர்களில் வேறு எவரும் காந்தியடிகளுக்கு நானறிந்தவரை வலியுறுத்தி யதாகத் தெரியவில்லை. இதுதான் ஒரு மார்க்சிய வாதியின் தனிச்சிறப்பு; இந்தச் சிறப்பிற்குரியவர் தான் அப்பெருமகன். காங்கிரஸ் இயக்கத்தில் இதுபோன்ற சிந்தனையை வெளிப்படுத்தியவர் மேனாள் பிரதமர் நேரு அவர்கள் தான். அவர் 1928-இல் சோவியத்து யூனியன் சென்று திரும்பிய பிறகு அவர், பொதுவுடைமைக் கொள்கையில் மேலும் ஊக்கம் பெற்றார். அடுத்த ஆண்டுகளில் அச்சிந்தனையைப் பல இடங்களில் வெளிப்படுத்தி யுள்ளார். ஆனால், சிங்காரவேலர் கூறியதற்குப் பின், அதாவது 16-ஆண்டுகளுக்குப் பின்னர்தான் அவர் கூறியுள்ளார். அவர் லக்னோவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டின் தலைமையுரையில் (12.4.1936) கீழ்வருமாறு கூறியிருப்பது நம் சிந்தனைக் குரியது.

“உலகின் சிக்கலையும், இந்தியாவின் சிக்கல் களையும் தீர்க்கவல்ல ஒரே திறவுகோல் பொது வுடைமையே என்பதாக நான் கருதுகிறேன். இந்த வார்த்தையை நான் வெறும் மனிதாபிமான முறையில் கூறாமல் அறிவியல்சார் பொருளாதார நோக்கில் கூறுகிறேன்.

இந்தியாவின் மிகுதியான வேலை வாய்ப் பின்மையையும், ஏற்றத்தாழ்வையும், அடிமைத் தனத்தையும் ஒழிக்க, பொதுவுடைமையைத் தவிர வேறுவழி எனக்குத் தென்படவில்லை.

காங்கிரஸ் இயக்கம் சோசலிச இயக்கமாக மாறி, உலகத்தில் புதிய நாகரிகத்தைப் படைக்க விருக்கும் சக்திகளோடு இணைந்து செயலாற்ற விரும்புகிறேன்.”

(Selected works of Jawaharlal Nehru- Vol VII Page - 180 - 181 - Publication department - New Delhi 1987).

இவ்வாறு நம் மேனாள் பிரதமர் கூறியது, காங்கிரஸ் இயக்கத்தில் செவிடன் காதில் ஊதிய சங்குப் போன்றே வீணாகப் போனது. நேரு, தம் பரந்த வாசிப்பாலும், அரசியல் தெளிவாலும் நீண்ட அனுபவத்தாலும் இவ்வாறு கூறியுள்ளார். அவர் இவ்வாறு கூறுவதற்கு அப்போதைய அரசியல் சூழலும் காரணமாகும். இத்தகு அரசியல் சூழல் ஏற்படாத காலகட்டத்தில் சிங்காரவேலர் தொலை யுணர்வோடு குறிப்பிட்டிருப்பது சிந்திக்கத்தக்கது. நேரு அவர்கள் காங்கிரஸ் மாநாட்டில் எல்லோர்க்கும் அறிவிக்கும் வண்ணம் பேசியுள்ளார்.

சிங்கார வேலரோ, இவ்வாறு அறிவிப்பதற்குமுன் பம்பாய், நாக்பூர், அமிர்தசரஸ் போன்ற இடங்களில் நடத்த காங்கிரஸ் மாநாடுகளில் பொதுவுடைமையைக் குறித்து அனைவர்க்கும் புரிதல் ஏற்பட அடுத்தடுத்து தந்திகளை அனுப்பியுள்ளார். அவற்றிற்குப் பின்னரே காந்தியடிகளுக்கு நேரடியாகக் கடிதம் எழுதி யுள்ளார். அந்தக் கடிதத்தைக் காந்தியடிகளுக்கு அனுப்பிய பின்னர் அதனை இந்துவிலும் நவ சக்தியிலும் வெளியிட்டிருக்கிறார். இவற்றின் மூலம் ஓர் உண்மை புலப்படுகிறது. சோசலிசத்தின் உண்மையைக் காங்கிரஸ் தலைவர்களும், தொண்டர் களும் அறிய வேண்டுமென்பதற்காகவே அவர் பல முறை தந்திகளை அனுப்பியுள்ளார். அடுத்து, காங்கிரசை வழிநடத்தும் காந்தியடிகளுக்குப் புரிதல் ஏற்பட்டு, அவரது வழிகாட்டுதல்படி காங்கிரஸ் இயக்கம் சோசலிசத்தை நோக்கிச் செயல்படவேண்டும் என்பதற்காகவே “காந்தியடி களுக்கு ஓர் பகிங்கர கடிதம்” எனும் தலைப்பில் கட்டுரை எழுதியுள்ளார். இதிலிருந்து அவரது அரசியல் தந்திரத்தை (Political- Strategy) உணரலாம்.

அந்தக் கடிதக் கட்டுரையில் அவர் மற்றொன்றையும் வலியுறுத்துகிறார். அதுவும் மிக முக்கியத்துவம் வாய்ந்தது, வரலாற்றுச் சிறப்புக் கொண்டது. அதாவது நாம் அடைய இருக்கும் சுயராஜ்யம், வெறும் சுயராஜ்யமாக மட்டும்

அன்றி, ஏழை - எளிய - அனைத்து மக்களுக்கும், சமவுரிமையையும், தேவைகளையும் நிறைவு செய்யும் சோசலிச அரசாக மாறவேண்டுமென்று அவர் விரும்பியுள்ளார். இத்துடன் அவர் நின்று விடாமல் சுயராஜ்யத்தைப் பாதுகாப்பாகப் பேணு வதற்கும் அவர் வழிகாட்டியுள்ளார். வெள்ளையர் ஆதிக்கத்தை விரட்டி இந்தியர்களின் தேசிய ஆட்சியை அமைத்தப் பின்னர் நாம் செய்ய வேண்டியது என்னவென்பதைப் பற்றியும் அவர் சரியாகச் சிந்தித்துள்ளார்.

சுதந்திரம் அடைவதற்கு முன்னர் அதாவது சுதந்திரப் போராட்டத் தொடக்கக் காலத்தில் அவர் கூறியுள்ளதை மனத்தில் கொண்டு கீழுள்ள மேற்கோளைப் புரிந்து கொள்ள வேண்டும்.

“இன்று நம்நாட்டின் மீது ஆப்கன் படை யெடுப்புப் பற்றிப் பெரிதும் பேசப்படுவது ஒரு கட்டுக்கதையாக எனக்குத் தோன்றவில்லை. நம் நாட்டின் மீது ஜப்பான் அல்லது பிரான்ஸ் அல்லது இத்தாலி அல்லது அமெரிக்கா அல்லது எகிப்து படையெடுப்பதைப் போன்றே இதுவும் உண்மையாகும். நமது ஒத்துழைமையினாலோ உள்நாட்டுப் புரட்சியாலோ இன்றுள்ள நமது பாதுகாப்பற்ற நிலைமையில் நாம் ஆயுதமின்றியும் பாதுகாப்பின்றியும் இருக்கும் வரை பிரிட்டன் தனது தரைப்படையை, கப்பற்படையை அகற்றிய வுடன் நம்மீது நிச்சயமாகக் கையாளவுள்ள ஆசியா அல்லது ஐரோப்பாவைச் சார்ந்த படைக் கலம் தாங்கிய கும்பல்கள் ஆதிக்கம் செலுத்தும். ஆகையால் நம் வீடுகளையும், நம் சுதந்திரத்தையும் அந்நியப் படையெடுப்பாளனிடமிருந்து பாது காக்க நம்நாட்டுத் தொழிலாளர்களை ஆயுதப் பாணியாக்க வழியொன்று காணவேண்டும்.

நவசக்தி 24. 5. 1921

முத்து உலகப் போரின்போது ஆப்கன் அச்சு நாடுகளோடு இணைந்து இந்தியாவின்மீது படை யெடுக்கக்கூடிய சூழல் இருந்தது. அதுவொரு வதந்தியாக அக்காலத்தில் பரவியபோது அதனைப் பெரும்பாலோர் புறக்கணித்தனர். ஆனால் சிங்காரவேலர் அதனை வதந்தியாகக் கருதாமல், அது நிகழக்கூடிய வாய்ப்புள்ளதாகக் கருதி யுள்ளார். அப்படிக் கருதியதால்தான் மிகுந்த அக்கறையுடன் அதனைக் காந்தியடிகளுக்குத் தெரிவித்துள்ளார். சிங்காரவேலர் அப்படிக் கருதியது எத்துணை உண்மை என்பதைக் கட்டுரையின் இறுதியில் வரும் மேற்கோளில் பார்க்கலாம்.

இந்த வதந்தியைச் சிங்காரவேலர் நாளை நிகழக்கூடும் என்று கருதினார். முதலாளித்துவ சர்வாதிகார நாடுகளின் வர்க்கத் தன்மையை, அவற்றின் பேராசையை உள்ளவாறு உணர்ந் திருந்ததால்தான் அவர் அவ்வாறு கருதியுள்ளார், ஜெர்மனியும், இத்தாலியும் அக்கால கட்டத்தில் ஏதுமறியாத நாடுகளின் மீதெல்லாம் தங்களின் கைவரிசையைக் காட்டிக் கொண்டிருந்ததை யாரும் மறந்திருக்க முடியாது. “நண்டு கொழுத்தால் வலையில் தங்காது” என்பார்கள். இதனைத்தான் அப்போது ஏகாதிபத்திய நாடுகள் செய்து கொண் டிருந்தன. இப்போதும் செய்துகொண்டிருக்கின்றன.

அந்நாடுகளால் எந்நேரத்திலும் இந்தியாவுக்கு ஆபத்து ஏற்படுமென்று அவர் கருதியிருக்கிறார். இங்கு மற்றொரு ஆபத்தையும் அவர் சுட்டிக்காட்டி யுள்ளார். அதாவது, முதல் உலகப்போரின்போது, பிரிட்டன் கப்பற்படையையும், தரைப்படையையும் இந்தியாவில் வைத்திருந்தது. அந்தப் படைகள் வெளியேறி பிரிட்டனுக்குச் சென்றுவிட்டால், அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு அச்சு நாடுகள் இந்தியாவில் நுழையும் வாய்ப்புண்டு என்பதையும் அவர் எச்சரித்துள்ளார்.

அந்நேரத்தில் இந்திய நாடு கையறுநிலையில் இல்லாமல், திடிர் படையெடுப்பை எதிர்க்க நாம் மக்களைத் திரட்ட வேண்டும் என்கிறார். கப்பற்படையையும், தரைப் படையையும் இந்தியாவிலிருந்து வெளியேற்றிய பின்னர் இங்குள்ள வெள்ளை ஆட்சியினர் பொறுப் பில்லாமல் இருந்தால், ஆப்கனோ மற்ற நாடுகளோ படையெடுத்தால் இந்திய மக்களுக்குப் பேரிழப்பு ஏற்படக்கூடும் இதனால் இந்தியாவிலுள்ள பிரிட்டனின் ஆட்சியைவிட அவர்களின் ஆட்சி மேலும் மிக மோசமாக இருக்கும்; நாளடைவில் இந்தியாவை இழக்கும் சூழ்நிலையும் ஏற்படக் கூடும்; இவற்றையெல்லாம் முன்கூட்டியே சிந்தித்த தனால்தான் அவர் அவ்வாறு கூறியிருக்கிறார். ரஷியாவில் ஜார் ஆட்சியை எதிர்கொள்ள மாமேதை லெனின் மக்களைக் கொண்டு ஒரு படையை அமைத்ததுபோல் இந்தியாவிலும் அமைக்க வேண்டுமென்று அவர் விரும்பியுள்ளார்.

“நாட்டில் வன்முறையற்ற ஒத்துழையாமை யினால் புரட்சியைக் (விடுதலையை) கொண்டு வரலாம். ஆனால் அதே வழிகளால், அதனைப் பாதுகாக்க முடியுமா? என்பது குறித்து நான் பெரிதும் ஐயுறுகிறேன். ஆகையால் சுயராஜ்யத்தைப் பாதுகாக்க ஒரு மக்கள் படை இன்றியமையாதது”

நவசக்தி 24.6.1921.

ஒத்துழையாமையே அனைத்திற்கும் தீர்வாகும் என்றும், அதுவே எல்லாக் காலத்திற்கும் ஏற்ற தென்றும் நம்புகிற ஓரியக்கத்தில், புதிய வழி முறையான படைபலத்தை உருவாக்கும் மனப் பாங்கு உருவாகுவது மிகமிகக் கடினம். அந்தப் போதாமையை எண்ணித்தான் சிங்காரவேலர் மிகத் தெளிவாகக் கூறியுள்ளார். சிங்காரவேலர் நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னரே 11.2.1946-இல் காலமாகி விடுகிறார். அவரால் சுதந்திரக் காலத்தைக் காணமுடியவில்லை. எனினும் சுதந்திரம் அடைவோம் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது.

முன்பாகவே, அவர் சுதந்திரம் அடைத்துவிட்ட தாகவும், அந்தச் சுதந்திரத்தைப் பாதுகாக்க மக்களைக் கொண்டு தனிப்படையை அமைக்க வேண்டுமென்று விரும்புகிறார். ஒத்துழையாமைப் போராட்டம் சொந்த நாட்டிலுள்ள அரசாட்சியை எதிர்க்க ஓரளவு பயன்படலாம். ஆனால் அந்நிய நாடு நம் நாட்டின் மீது படையெடுக்கும்போது ஒத்துழையாமை சிறிதும் பயன்படாது. அதனால் தான் சுதந்திரத்தைப் பாதுகாக்க மக்கள்படை வேண்டும் என்கிறார். இது மிக முக்கியமான திட்டமாகும்.

இக்கட்டுரையின் தொடக்கத்தில் ஆப்கன் இந்தியாவில் படையெடுக்க இருக்கும் வதந்தியைப் பற்றிப் பார்த்தோம். ஆனால், அதனைச் சிங்கார வேலர் வதந்தியாகக் கருதாமல் உண்மையாக நிகழக் கூடுமென்றே கருதினார். அவர் கருதியது சரியா? தவறா? என்பதை இனி நோக்குவோம். இரண்டாம் உலகப் போரின் போது ஹிட்லருக்கு படைத்தளபதிகளில் ஒருவனாக இருந்த கர்னல் பிரான்ஸ் ஹாஸ்டர் என்பவன் 25.11.1939-இல் ஒரு குறிப்பை எழுதியிருந்தான். அக்குறிப்பில் ஹிட்லர் ஓர் ஆணை பிறப்பித்துள்ளதையும் எழுதியிருக் கிறான். அதில் ஹால்டிகி என்ற தளபதிக்கு ஆப்கனில் எந்தெந்த இடத்தில் ராணுவத் தளங்களை அமைக்க வேண்டுமென்றும் குறிப்பிட்டிருப்பதைத் தம் குறிப்பில் பிரான்ஸ் ஹாஸ்டர் குறித்து வைத்திருந்துள்ளான். இந்த ராணுவ தளங்களிலிருந்து இந்தி யாவை தாக்குவது குறித்த வரைபடம் இருந்துள்ளது.

1941- பிப்ரவரி மாதத்தில் ஹிட்லர் இந்தி யாவைத் தாக்க ஜெனரல் ஹால்டிக்கு மீண்டும் ஆணையிட்டுள்ளான். ஹால்டிக் இந்தியாவை ஆப்கன் உதவியுடன் ஆப்கன் வழியாக இந்தி யாவைத் தாக்க இருக்கும் அனைத்துத் திட்டங் களையும் காட்டி ஒப்புதல் பெற ஹிட்லருக்கு 7.4.1941-இல் கடிதம் அனுப்பியுள்ளான். இச் செய்தியை ஜனசக்தி 18-3-1984-இல் வெளியிட்டு உள்ளது. 1921-ஆம் ஆண்டிலேயே ஆப்கனுக்கு இந்தியாவைத் தாக்கும் எண்ணம் இருந்துள்ளது. அது எச்சூழலிலோ முடியாமல் போயிருக்கிறது. பின்னர் ஹிட்லர் மேற்கண்ட முடிவு எடுப்பதற்கு ஆப்கனும் காரணமாக இருந்திருக்கிறது என்பதை நம்மால் எண்ணமுடிகிறது. ஆப்கனுக்கு 1921-இல் இருந்த எண்ணத்தால் தான் ஹிட்லர் படை யெடுக்கத் துணிந்தபோது ஆப்கனும் இசைந் துள்ளது. இவற்றையெல்லாம் ஒருங்கே எண்ணிப் பார்த்தால் சிங்காரவேலர் தம் கட்டுரையில்,

“ஆப்கன் படையெடுப்புப் பற்றிப் பேசப் படுவது ஒரு கட்டுக்கதையாக எனக்குத் தோன்றவில்லை”

என்று எழுதியிருப்பது எத்துணைச் சரியாகவும், எத்துணை எதிர்காலச் சிந்தனையாகவும் உள்ள தென்பதை நன்கு உணரலாம். இந்தத் தொலை நோக்குச் சிந்தனையின் முற்போக்குச் சிந்தனையின் முழு அடையாளம்தான் அவர்.

Pin It