jeeva at kamban vizha

‘ஜீவா எனும் மனிதர் இரத்தமும் சதையுமாய் நடமாடிய இடம் தமிழகம் என்றால், அவர்க்கான கலை, இலக்கிய, அரசியல் களமாகவும், விருப்பிற்குரிய தலைமைக்கேந்திரமாகவும் திகழ்ந்தது காரைக்குடி. பிறந்தது நாஞ்சில் நாட்டில் என்றாலும் சிறந்தது செட்டிநாட்டில் எனும்படிக்குப் பல்வேறு அனுபவங்களைப் பெற்றதும் அரிய பணிகள் பல ஆற்றியதும் இந்த சிவகங்கைச் சீமையில் தான்.

நாஞ்சில் நாட்டுப் பூதப்பாண்டியில் தொடங்கி, சென்னை மாநகரத்து அரசுப் பொதுமருத்துவமனையில் முடிவுற்றது ஜீவாவின் வாழ்க்கைப் பயணம். இடைப்பட்ட காலத்தில் அவர் பெரும்பகுதி தங்கியிருந்து தமிழ் வளர்த்த பெருமைக்குரியது சிவகங்கைச்சீமை.

அதிலும் செட்டிநாட்டின் முக்கிய நகரமான காரைக்குடியிலும் காரைக்குடி சார்ந்த ஊர்களிலும் அவர் செய்த தொண்டுகள், பேசிய பேச்சுகள், மக்களோடு கலந்து பழகிய நிகழ்வுகள் வரலாற்றுச் சிறப்புடையவை.

காரைக்குடியில் ஜீவா

தேசபக்தியும், தெய்வபக்தியும் கலந்தெழுந்த தமிழகச் சூழலில் அரசியல் விழிப்புணர்வுக்கும் அடித்தளமிட்ட நகர்களுள் ஒன்று காரைக்குடி. இந்நகர், கலை, இலக்கிய, அரசியல், ஆன்மிகத் தலைநகராகத் திகழுதற்குப் பல காரணங்கள் உண்டு. சமயநிலையில், குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம், கோயிலூர் ஆதீனம் மற்றும் பாதரக்குடி உள்ளிட்ட நகரத்தார் மடங்கள் செட்டி நாட்டுப் பகுதியைச் சிறப்புக்குள்ளாக்கின. பின்னர், இராம கிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தர் ஆகியோரின் சிறப்புகளை நினைவுபடுத்தி, விவேகானந்த புத்தகசாலையும், ஹிந்துமதாபிமான சங்கமும் (1917) இராமகிருஷ்ண கலாசாலையும்(1918) தோற்றம் பெற்றன.

தமிழகத்தின் தலைசிறந்த பேரறிஞர்கள் எல்லாரும் சிறப்புடன் செட்டிநாட்டிற்கு வரவேற்கப்பெற்றனர். செல்வவளமும் கொடை மனமும் கொண்ட தனவந்தர்கள் தமிழையும், தமிழறிஞர்களையும் பேணிக் காப்பதைப் பெரும்பேறு எனக் கருதினர். அதன் அடிப்படையில், கடையத்தில் இருந்து மகாகவி பாரதியார் வரவழைக்கப் பெற்றார். தொடர்ந்து வ.உ.சி., சுப்பிரமணியசிவா, வ.வே.சு.ஐயர், ஞானியார் சுவாமிகள், விபுலானந்த சுவாமிகள், வீர.சுப்பையா சுவாமிகள், ந.மு.வேங்கடசாமி நாட்டார், திரு.வி.க. உள்ளிட்ட பல்வேறு அறிஞர்கள் வருகை தந்து காரைக்குடியை, வரலாற்றுச் சிறப்புமிக்க கலைநகராக்கினர்.

இவர்களுள், காரைக்குடியின் தேசிய எழுச்சிக்கு வித்திட்டவர் சுப்பிரமணிய சிவா என்பது கம்பனடிப் பொடி சா.கணேசனின் கருத்து. பின்னர், மகாத்மாகாந்தி, சர்தார் வல்லபபாய் படேல், தந்தை பெரியார் உள்ளிட்ட தேசியத் தலைவர்கள் பலரும் வருகை புரிந்தனர். இந்தப் பெருமைக்கெல்லாம் காரணர்களாகக் களம் இறங்கியவர்கள் பலராவர். அவர்களுள் சொ.முருகப்பா, கானாடுகாத்தான் வயி.சு. சண்முகஞ் செட்டியார், ராய.சொ., காந்தி மெய்யப்பர் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

அவர்களது முயற்சியால், ‘தனவைசிய ஊழியர் சங்கம்’ (1919) தோற்றுவிக்கப் பெற்றது. அதற்கென, ‘தனவைசிய ஊழியன்’ (1820) வார இதழும் தோற்றம் கொண்டது. இதன் ஆசிரியராக, சொ.முருகப்பா பணியாற்றினார். பின்னர். ‘குமரன்’ (1923) மாத இதழும் அவரால் தொடங்கப் பெற்றது. பி.ஸ்ரீ. ஆசிரியராக இருந்து அதனைச் சிறப்புறக் கொணர்ந்தார். காங்கிரஸ் கூட்டம், ஜீவகாருண்யப் பிரச்சாரம், சுயமரியாதை இயக்கக்கூட்டம், தமிழிசை இயக்கம் எனப் பல்வேறு களங்களில், பணிகளை எடுத்துக் கொண்டு வளர்ந்த செட்டிநாட்டுப் பகுதியில் கம்பனுக் கென்றொரு கழகமும் தோற்றம் பெற்றது, 1939-இல்.

இந்தக் காரைக்குடிதான் ஜீவாவையும் தன்வயப் படுத்தி மகிழ்ந்தது.

வ.வே.சு.ஐயரால் உருவாக்கப்பட்ட சேரன்மாதேவி குருகுலம் மூடப்பட்ட பிறகு, காரைக்குடியை அடுத்த சிராவயலில் வந்து குடிபுகுகிறார் ஜீவா. காந்திபெயரில் ஆசிரமம் ஒன்று உருவாகிறது. அங்கேதான், காந்தி, வ.உ.சி. பெரியார், ராய.சொ., சா.கணேசன் உள்ளிட்ட பலரும் வந்து ஜீவாவுடன் கருத்துரையாடி மகிழ் கிறார்கள். தனித்தமிழ் இயக்கத்திலும் பெருமுனைப்புக் கொண்டதும் இந்தக் காலத்தில்தான்.

 காந்தியைத் தலைவராகக் கருதிக் களம்புகுந்த சொரிமுத்து, சிராவயலில் காந்தியாகவே வாழ்ந்தார். நூல் நூற்றல், நூல் பல கற்றல், கற்பித்தல் என்கிற நிலையில் வளர்கிறது அவர்தம் வாழ்வு. முறைப்படி தமிழ் கற்று, முழுமையாகத் தன்னைத் தமிழுக்கு அர்ப்பணித்துக் கொண்டு உயிர் இன்பன் ஆகிறார். மறைமலையடிகளின் தனித்தமிழ் இயக்கத்தால் ஈர்ப்புண்டு, தன் பெயரொடு தன் பள்ளியில் வதிந்த, தன்னோடு பணி செய்த பலரது பெயர்களையும் தமிழ்ப்பெயர் சூட்டி மகிழ்ந்தார்.

தொடக்கத்தில், சமயநெறிகளை ஓரளவு ஏற்ற ஜீவா, சமயமானது சாதியக்கட்டுமானங்களை இறுக்கிப் பிடித்து வளர்க்கிற கோட்டையாகத் திகழ்வது கண்டு நாத்திகம் சார்ந்தார். சுயமரியாதை இயக்கத்தினரோடு பயணம் செய்தார். சீர்திருத்தக் கருத்துக்களைப் பிரச்சாரம் செய்வதும் செயல்வடிவில் நடைமுறைப்படுத்துவதும் அவரது இன்றியமையாக் குறிக்கோள்களாயின. அதனால் பல்வேறு தாக்குதல்களுக்கும் தண்டனை களுக்கும் உள்ளானார். எனினும் எவரையும் அவர் எதிர்த்துத் தாக்கியதாகவோ, அவர்களை இன்சொல் கூறி இழிவுபடுத்தியதாகவோ எந்தத் தகவலும் இல்லை என்பது அவர்தம் மேன்மையைச் சொல்லாமல் சொல்லி நிற்கின்றன என்றே கொள்ளலாம்.

அதே சமயம் ஏற்பில்லாத எந்தக் கருத்தாயினும் அதனைத் துணிந்து எதிர்க்கிறவராக ஜீவா திகழ்ந்திருக் கிறார் என்பதற்குக் காந்தி- ஜீவா, வ.உ.சி.-ஜீவா போன்ற சந்திப்புகள் உறுதிப்படுத்துகின்றன. ஏற்றதொரு கருத் தென்றால் எதுகுறித்தும் எவர் பற்றியும் கவலைப்படாது துணிந்து எடுத்துரைப்பதில் சிறந்து விளங்கியிருக்கிறார் என்பதற்கு, திரு.வி.க. தலைமையில் அவர் பேசிய உரை சிறந்த சான்றாகிறது.

இதுபோல், அவர் சிவகங்கைச் சீமையில் பேசிய பொழிவுகள் எத்தனை எத்தனையோ?

இவ்வாறாக, பள்ளி ஆசிரியராகப் பணிதொடங்கி, காந்தியப்பண்புகளைக் கற்றுக்கொடுத்த ஜீவா, காலச்சூழலுக்கேற்ப சீர்திருத்தப் பணிகளைத் தந்தை பெரியாருடன் இணைந்து ஆற்றிவரும் வேளையில். சிராவயல் ஆசிரமம் மூடப்பட்டு, நாச்சியார்புரம் உண்மைவிளக்க நிலையம் திறக்கப்பட்டது. ஊர்கள் தோறும் கைவிளக்கேந்தி, அறிவொளி புகட்டி வந்தார் ஜீவா. சிவகங்கை மாவட்டத்தில் ஒடுக்கப்பட்டோர் வாழ்வில் முதன்முதலாகக் கல்விஒளி ஏற்றி வைத்த தலைவர் ஆக ஜீவா ஒளிர்ந்தார்.

பின்னர் கோட்டையூருக்குப் பள்ளி இடம்பெயர, அரசியல் உலகில் முதல் தடம் பதித்த ஜீவா. தடையை மீறிப் போராடியதற்காகச் சிறைபுகுந்தார். காந்திய வாதியாகவும் சுயமரியாதைக்காரராகவும் சிறைபுகுந்த ஜீவா, கம்யூனிஸ்ட்டாக வெளியே வந்தார்.

தமிழகமெங்கும் அவர் பணி பரந்து விரிய. எழுத்து, பேச்சு, இயக்கம், வாழ்வு அனைத்திலும் மக்கள் நலம்பேணும் பொதுவுடைமைவாதியாகவே ஜீவா திகழ்ந்தார்; தேசியத் தலைவராகவும் மிளிர்ந்தார்.

காரைக்குடியில் ஜீவாவின் கம்ப முழக்கம்

எங்கு போனாலும் ஜீவா அடிக்கடி வந்து தங்கும் ஊர்களில் காரைக்குடி முக்கிய இடத்தைப் பெற்று விடுகிறது. கலை, இலக்கிய, அரசியல் கூட்டங்களில் பங்கேற்க காரைக்குடிக்குப் பலமுறை வந்திருக்கிறார் ஜீவா. அப்போதுதான் காரைக்குடி கம்பன் திருநாள் நிகழ்வில் பங்கேற்று வரலாற்றுச் சிறப்புமிக்க பேருரை நிகழ்த்தியிருக்கிறார்.

1938ல் ரசிகமணி டி.கே.சி.யைச் சந்தித்ததும், 1939ல் தேரழந்தூரில் நடைபெற்ற கம்பர்விழாவில் பங்கேற்றதும் காரணங்களாக, கம்பன் சமாதி அமைந்த நாட்டரசன்கோட்டைக்கு அருகில் உள்ள நகரமான காரைக்குடியில் சா.க. அவர்களால், கம்பன் கழகம் தோற்றுவிக்கப்பெற்றது.

இந்த அமைப்பில்தான் தமிழகத்தின் பல்வேறு அறிஞர்களும் வந்து பங்கேற்றுப் பேசியிருக்கிறார்கள்; இன்னும் பேசி வருகிறார்கள்; தோழர் ஜீவாவும் நின்று கம்ப முழக்கம் செய்தார். காற்றினும் கடிய வேகத்தோடு மக்களிடைப் பரவி, பெருங்கூட்டத்தை அரங்கிற்குக் கொண்டு வந்து சேர்த்தது ஜீவா பேசும் செய்தி.

தோழர் ஜீவா, கம்பன் அரங்கில் நின்று முழங்குதற்குக் காரணமான சூழல் மிகவும் சுவாரசிய மானது. அதன் பின்புலத்தைப் பின்வருமாறு விவரித்து உரைக்கிறார் தோழர் தா.பாண்டியன்.

காரைக்குடிக் கம்பன் கழகத்தின் தனித்தன்மை

“காரைக்குடியில் நடந்துவந்த கம்பன் விழா, இங்கிலாந்தில். உலகப்புகழ் பெற்ற நாடக ஆசியரினும், கவிஞனுமான சேக்ஸ்பியருக்கு ஆண்டுதோறும் அவர் பிறந்த ஊரான ஸ்ட்ரா போர்டு - அன் - அன் என்ற ஊரில் விழா நடந்து வருவதைப் போன்று, அதே தரத்தில் கவிச்சக்கரவர்த்தி கம்பனுக்கு காரைக்குடியில் நடப்பதாகக் கருதப்பட்டது. கம்பன் விழாவில் ஒருவர் கலந்து கொண்டால், பேசினால், அவருக்குத் தமிழறிந்த மனிதன் என்ற முத்திரை வந்து சேர்ந்துவிடும். மதுரை தமிழ்ச்சங்கத்தில் கவிதைகள் அரங்கேறியது மாதிரி, கம்பன் விழா மேடை கருதப்பட்டது. இந்த இலக்கியப் புலமை மிக்க ஆர்வலர்கள் மத்தியில் நம்மவர்களும் இருக்க வேண்டும் என்ற ஆவல், வேட்கை எங்களுக்கு எழுந்ததும் ஒரு காரணம்.”

ஜீவ முழக்கம் சாத்தியமான வரலாறு

காரைக்குடியைச் சேர்ந்த சித.பழனியப்பன், எஸ்.நாராயணன், கூத்தகுடி சண்முகம் ஆகியோர், கம்பன் அடிப்பொடி சா.கணேசனிடம், ஜீவாவைப் பேச அழைக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கின்றனர். பொதுவாக, இராமன்மீது பக்தி கொண்டவர்கள், ராஜாஜி, இரசிகமணி டி.கே.சி., அ.சீனிவாசராகவன், போன்ற மரபார்ந்த பேச்சாளர்கள் பேசிய அரங்கில், ஒரு கம்யூனிஸ்ட் தலைவர் பேசுவது எவ்வாறிருக்கும் என்று தயக்கம்.

ஆயினும் அந்த நிகழ்வில் தொ.மு.சி.ரகுநாதன் சிற்றம்பலக் கவிராயராகப் பல்லாண்டுகள் கவி பாடியிருக் கிறார். அவரும் ஜீவா வந்து பங்கேற்பது குறித்து உற்சாகமான அக்கறை செலுத்தவில்லை. காரணம் கட்சிக் கட்டுப்பாடு.

“முதலில் கட்சியில் அனுமதிப்பார்களா? என்பதைக் கேட்டுப் பாருங்கள். ஏற்கெனவே, பாரதி பற்றிப் பேசி வருவதற்கே, ‘பட்டம்மாள் பாட, ஜீவா ஆடுகிறார்’ எனச் சில புரட்சிவீரர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இப்பொழுது கம்பராமாயணம் என்றவுடன், ராமன் எந்த வர்க்கம், ராவணன் ஏகாதிபத்தியப் பிரதிநிதியா? எனப் பிளக்கும் வாதங்களில் இறங்கி முடிவு எடுப்பதற்குள் இங்கே யுத்தகாண்டமே முடிந்துவிடும்” என்றார் தொ.மு.சி.

 அதுமட்டுமன்றி, அக்கால கலை, இலக்கிய அரசியல் போக்குகள் கம்பனை வேறுவிதமாக அணுக வைத்திருந்தன. அறிஞர் அண்ணா எழுதிய ‘கம்பரசம்’ பரபரப்பாகப் பேசப்பட்டது. ‘ஆரியதிராவிடப் போராட்டமே கம்பராமாயணம்’ என்றும், ‘அது ஆபாசக்களஞ்சியம்’ என்றும் கருதப்படுகிற நிலை வளர்ந்தது. கல்வி நிறுவனங்களில் கம்பனைக் கற்பிப்பவர்கள்கூட, கிண்டல் செய்தபடியே நடத்துகிற நிலை. கூடவே, ஆத்திக நாத்திகவாதத்திற்கு மத்தியில் கம்பன் சிக்கிக் கொண்டிருந்தான்.

“ஒரு பக்கம் ராமபக்தி பஜனையாக கம்பனை வியாக்கியானம் செய்தவர்கள் நின்றனர். மறுபக்கம் வேறு ஒரு இயக்கத்தார் தங்களது இன்றைய அரசியல் நிலைகட்கு ஏற்ப, பல நூறு ஆண்டுகட்கு முன் தமிழைச் செழிக்கச்செய்த, காப்பியம் தந்த கவிஞனைக் கழுவிலேற்றப் பார்த்தார்கள். கம்பனிலும் அரசியல் மனிதநேயம் இருக்கிறது. நெறி முறைகள் காட்டப் படுகிறது. அன்றைய சமுதாயச் சிந்தனைகளையும் தெரிந்துகொள்ள முடிகிறது. இதைச் சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லக்கூடிய ஒருவரைச் சொல்ல வைக்க வேண்டும் என்ற எங்களது வேட்கை நியாயமானது என்பதை இப்போது பலரும் ஒப்புக்கொள்ளக் கூடும். ஆகக் கடைசியாக, கம்பன் விழாவில் பேச ஜீவாவுக்கு அழைப்புப் போயிற்று. தேடிப் பார்த்து, ராமனைத் தொடாத ஒரு பொருளாகப் பார்த்து, ‘கம்பன் கண்ட தமிழகம்’ எனக் கொடுத்திருந்தனர். சோதனை முயற்சிதானே.” என்கிறார் தா.பாண்டியன்.

இந்த இடத்தில் கம்பன் கழக நிகழ்ச்சி நடை முறையையும் கவனத்தில் கொள்ளவேண்டியது இன்றியமையாதது.

காலத்தை வென்ற கம்பீர முழக்கம்

காலமும், கருத்தும், நேரமும், அதனை நடத்தும் நேர்மையும் கம்பனடிப்பொடி. சா.க.வின் தனிமுத்திரை.

“நேர்மை, நேரந்தவறாமை இரண்டும் அவருக்குப் பக்க பலம். இதில் எல்லாம் கண்டிப்பும் கராருமாய் இருப்பார். வள்ளல் அழகப்பச்செட்டியாராக இருந் தாலும் சரி, கவியரசு கண்ணதாசனாகவே இருந்தாலும் சரி, உரிய நேரத்தில் கம்பன் விழா மேடைக்கு வர வில்லை என்றால், காத்திருக்க மாட்டார். தாட்சண்யம் காட்டாமல், “கம்பன் வாழ்க!”என்று முழங்கி, உரிய நேரத்தில் ஆரம்பித்துவிடுவார். இதற்குப் பயந்தே, எல்லோரும் உரிய நேரத்தில் மேடை ஏறிவிடுவார்கள்” என்ற இராஜேஸ்வரி நடராஜனின் அனுபவ வாக்கு இதற்கு அணி சேர்க்கும்.

‘தாமதமே எனது மதம்’ என்று தைரியமாகச் சொல்லும் கண்ணதாசன் கூட, கம்பன் மேடைக்குக் கட்டுப்பட்டு உரிய காலத்தில் வந்துவிடுவார். அந்த அரங்கில் இருந்து அவரே பாடிய ஒரு பாடல் அதற்குச் சான்றாகும்.

கடிகாரம் பார்த்தேதான் காரியங்கள் செய்வதெனப்

பிடிவாதம் பிடிக்கின்ற பேரவையின் தலைவர்களே

கடிகாரம் என்பகைவன் கணேசர் பயத்தினிலே

காலத்தை நானறிந்து கடுகியிங்கே ஓடிவந்தேன்

என்பது அவர் பட்ட பாட்டின் அடையாளப்பாட்டு.

தொடங்குதற்கு மட்டுமன்று; பேச்சை நிறைவு படுத்துவதற்கும் அத்தகைய நேரக்கட்டுப்பாடு உண்டு. எப்பேர்ப்பட்ட பேச்சாளராயினும் ஒதுக்கப்பெற்ற பொழுதுக்குள் பேசிமுடித்தே தீர வேண்டும். காலம் காட்ட பேச்சுமேடையின் மீது எச்சரிக்கை விளக்கு பொருத்தப்பெற்றிருக்கும். அச்சிவப்புநிற விளக்கு எரியும் போது நிறுத்தியே தீர வேண்டும். இது காரைக்குடிக் கம்பன் கழக வாடிக்கை.

‘இந்த மேடையில் தான் ஜீவா நின்று பேசப் போகிறார்; கம்பன் கண்ட தமிழகத்தைத் தன் கம்பீரக் குரலில் காட்டப் போகிறார். ஒரு கம்யூனிஸ்டு கம்பன் விழாவில் பேசுகிறாராம்’ என்பது கிளப்பிய பரபரப்பால், அரங்கம் நிரம்பி வழிந்தது. சாலைகளிலும், கைப்பிடிச்சுவர் களைத் தாண்டியும் கூட்டம் திரண்டு இருந்தது.

நடந்தது கதையன்று, வரலாறு

ஜீவா பேசுவதற்கு முன், தமக்கு அடுத்துப் பேச விருந்த, சுப்பிரமணியபிள்ளையிடம் அவருக்கு ஒதுக்கப் பட்ட நேரத்தில், பத்து நிமிடத்தைத் தாம் எடுத்துக் கொள்வதாக, ஜீவா சொன்னார். சுப்பிரமணிய பிள்ளையும் ஜீவாவின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டார்.

ஜீவா பேசத்தொடங்கினார். கம்பன் கண்ட தமிழகம் காட்சிகளாய் விரியத்தொடங்கியது. காலம் மறந்து அவை செவிகளே கண்களாய்க் கண்டு மகிழ்ந்தது.

முப்பந்தைந்து நிமிடம் முடிந்தது. சா.கணேசன் சுவிட்சை அழுத்த, சிவப்பு விளக்கும் எரிந்தது. இருப்பினும், ஜீவா பேசினார்... நாற்பது நிமிடமும் முடிந்தது. ஜீவாவின் பேச்சு முடிந்தபாடில்லை. சுப்பிரமணிய பிள்ளை கடன்கொடுத்த பத்து நிமிடமும் முடிந்தது. சிவப்புவிளக்கையும் காலத்தையும் கடந்து எழுபது நிமிடம் தானே சிவப்பாய்ச் சிலிர்த்தெழுந்து முழங்கியது அந்தப் பொதுவுடைமைச்சிங்கம். இவ்வளவு நேரம் கம்பன் கழகத்தில் பேசியது ஜீவா ஒருவர்தாம்.

 ஜீவா பேசி முடித்ததும், தலைமை வகித்தவர் அ.சரவண முதலியார். (இவர் அ.ச.ஞானசம்பந்தனின் தந்தையார்) அவர் சொன்னார்: “நான் சென்னையி லிருந்து புறப்படும்போது அழைப்பிதழைப் பார்த்து, கம்யூனிஸ்ட் கட்சியில் ஜீவானந்தம் என்று ஒருவர் இருக்கிறார். அவர் இலக்கியம் பற்றி என்ன பேசப் போகிறார்? இவர் வேறு ஜீவானந்தமாக இருக்கும் என்று எண்ணினேன்.

ஆனால், இங்கு வந்த பின்புதான் கம்யூனிஸ்ட் ஜீவானந்தம் என்பதை அறிந்தேன். அவரைப் பார்த்த பின்பும் இலக்கியத்தைப்பற்றிப் புதிதாக இவர் என்ன பேசிவிடப் போகிறார்? என்ற எனது எண்ணம் மாறிவிடவில்லை. இவர் பேசுவதற்கு முன் எனக்கு இருந்த எண்ணம் வேறு. இவர் பேசிய பிறகு எனக்கு இருந்த எண்ணம் வேறு. இவர் சொற் பொழிவைக் கேட்டபின்பு நான் ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன். கம்யூனிஸ்டுகள் ஜீவாவைப் போன்று தமிழைப் பயன்படுத்தினால் தமிழ் நிச்சயம் வளரும்.”

ஜீவாவுக்குப் பின், ‘மேதையும் பேதையும்’ என்ற தலைப்பில் பேச வந்த சுப்பிரமணியபிள்ளை, “ஜீவா பேசுவதற்கு முன், நான் பேசுவதற்குண்டான நேரத்தில், பத்து நிமிடத்தைத் தாம் பயன்படுத்திக் கொள்வதாக என்னிடம் கேட்டார். அதற்கு நானும் அனுமதித்தேன். பத்து நிமிடத்தையும் எடுத்துக்கொள்ள என்னிடம் அனுமதி கேட்ட ஜீவா, என்னுடைய மொத்த நேரத் தையும் எடுத்துக் கொண்டுவிட்டார்.

இனிப்பேசுவதற்கு எனக்கு நேரமில்லை. இருப்பினும், ஒரு கருத்தை மட்டும் சொல்லிவிட்டு, இங்கிருந்து விடைபெற்றுக் கொள்கிறேன். ஜீவானந்தத்தின் இன்றைய பேச்சைக் கேட்டவர்கள் எல்லோரும் மேதைகள். இன்றைய பேச்சைக் கேட்காதவர்கள் எல்லோரும் பேதைகள்” என்று குறிப்பிட்டுவிட்டு, சுப்பிரமணிய பிள்ளை தமது பேச்சை முடித்துக் கொண்டார்.

மரபுக்கு மாறாக, அன்றைக்கு மட்டும் நன்றியுரை வழங்கினார் சா.கணேசன். ‘ஆண்டுதோறும் கம்பன் விழாவுக்கு ஜீவா வர வேண்டும்’ என்று அழைப்பும் விடுத்தார். ‘அழைத்தால் வருவேன்’ என ஜீவா சொல்ல, ‘மேளதாளத்துடன் வரவேற்போம்’ என சா.கணேசன் சொல்ல, கம்பன் கழகத்தில் நிரந்தரப் புலவராக அங்கம் பெற்றுவிட்டார் ஜீவா.

இதற்குப் பிறகு, தி.மு.க. ஏடு ஒன்று Ôஜீவா படத்தைக் கேலிச் சித்திரமாகத் தீட்டி, கை, கால், நெற்றி, நெஞ்சு பூராவிலும் திருநீறு பூசி இரு கைகளிலும், சப்பளாக் கட்டை பிடித்து, ராமா, ராமா, கோவிந்தா எனக் கூத்தாடுவது மாதிரிப் போட்டு இருந்தது. கட்சிக்குள்ளும் சிலர் இதை வெட்டி வேலை என்று கருதினர். பேசினர்... ஆனால், பின்னர் என்ன நடந்தது என்பதை நாடறியும். அதனைத்தொடர்ந்து அவர்தம் இறுதிக்காலம் வரைக்கும் கம்பன் கழக நிகழ்வுகளில் கலந்து கொள்ளாமல் இருந்ததே இல்லை” என்று எழுதுகிறார் தா.பாண்டியன்.

இவ்வாறு தோழர் ஜீவா அவர்கள் 1954ல் தொடங்கிய கம்பன் கழக நிகழ்வுப் பங்கேற்பு, அவர் அமரராகும் வரை, 1962 வரை தொடர்கிறது. தனியுரை, ஆய்வுரை இவற்றோடு பட்டிமண்டபங்களிலும் பங்கேற்று வாதிடுகிறார் ஜீவா.

காரைக்குடி கம்பன் திருநாளில் ஜீவா பங்கேற்ற ஆண்டுகள்

1955 தொடங்கி, 1956 முதல், 1962 வரை, (அதாவது, 1956, 1957, 1958, 1959, 1962 வரை) 1961 ஆண்டு நீங்கலாக, ஐந்து ஆண்டுகள் கம்பன் திருநாளில் பங்கேற்று, ஒன்பது தலைப்புகளில் சொற்பொழிவுகள் நிகழ்த்தியிருக்கிறார் ஜீவா.

அத்துடன், அவர் பட்டிமண்டபங்களிலும் பங்கேற்றுச் சொற்போர் நிகழ்த்தியிருக்கிறார். பங்கேற் போர் பெயர்ப்பட்டியல் இல்லாத, 1957 ஆண்டு போக, 1958, 1959, 1960, 1962 ஆகிய ஆண்டுகளில் காரைக் குடியில் நிகழ்வுற்ற நான்கு பட்டிமண்டபங்களில் தோழர் ஜீவா பங்கேற்று வாதிட்டிருக்கிறார். அதன் விவரம் பின்னிணைப்பில் காணலாம்.

காரைக்குடி மீனாட்சி பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் ஜீவா உரையாற்றிய நிழற்படம் முதன்முதலாக எனது ‘காரைக்குடியில் ஜீவா’ நூல் வழி உலகு காண்கிறது.

நாட்டரசன் கோட்டையில் ஜீவா

கம்பன் பள்ளிப்படை கோயில் கொண்ட நாட்டரசன் கோட்டையில்தான் கம்பன் திருநாள் விழா நிறைவுபெறும். கம்பன் தன் காவியத்தை அரங்கேற்றிய நாளைக் கணக்கிட்டு, அது பங்குனி அத்தத் திருநாள் என வருவதால், ஆண்டுதோறும் பங்குனி அத்தத் திருநாளன்று, நாட்டரசன்கோட்டை, கம்பன் சமாதிக்கோயிலில், அருட்கவி ஐந்து பாடி, மலர் வணக்கம் செலுத்திய பின்னர், அறிஞர்பெருமக்கள் உரையாற்றுவர். அந்த விழாவிலும் தோழர் ஜீவா உரை நிகழ்த்தி இருக்கிறார்.

07.04.1955 அன்று கோவைகிழார் திரு. சி.எம். இராமச்சந்திரன் செட்டியார் அவர்கள் தலைமையில் கம்பனும் பாரதியும் என்ற தலைப்பில் முதல் உரை யாற்றினார் ஜீவா.

அதனைத்தொடர்ந்து, 11.04.1960 அன்று தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான் தலைமையில், தம்பியர் உலகம் என்ற பொதுப் பொருண்மையின்கீழ், ‘இராவணன் தம்பி’ என்ற உரையினையும், 22.03.1962 அன்று ராய.சொ. தலைமையில் ‘கானாடு’ என்ற பொருண்மையில் ‘பேரறிவாளன்’ என்ற தலைப்பிலும் ஜீவா உரையாற்றியிருக்கிறார்.

அவற்றுள் சில கம்யூனிஸ்ட் கட்சி வெளியீடாகவும், ஜனசக்திக் குறிப்புகளாகவும், தாமரை இதழ்க் கட்டுரை களாகவும் அச்சேறியுள்ளன. இன்னும் சில குறிப்புகளை நேரில் கேட்டவர்கள் நினைவுகூர்கிறார்கள். நினைவுக் குறிப்புகள் என்பதால் அவற்றுள் சில புனைவுகளும் அதீதப்பாங்கும், காலம்- இடம் பற்றிய பிழைபாடுகளும் நேர்ந்துவிட்டிருக்கின்றன. அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் ஜீவாவின் உரைவளம் உயிர்ப்பெய்தியிருக்கிறது என்பதை இவையாவும் உணர்த்துகின்றன என்றே கருதலாம்.

பாரதியப் பதாகை ஏந்தி...

பாரதி வாழ்ந்த காலத்தில் ஜீவா பிறந்திருந்த போதிலும், அவரைப் பார்க்க முடியாத ஏக்கம் நிறைய கொண்டிருக்கிறார். எனினும் அவரை, அவர்தம் எழுத்துக்களின் வாயிலாக உள்வாங்கிக் கொண்டு, ஜீவா, பாரதியாகவே வாழ்ந்திருக்கிறார்; மீண்டும் ஒருமுறை பாரதியை வாழ்வித்திருக்கிறார்.

பாரதி வந்து பேசிய காரைக்குடி இந்துமதாபிமான சங்கத்தில் பாரதி குறித்துப் பாரதியேபோல் உரைகளும் நிகழ்த்தியிருக்கிறார்.

பாரதி பட்டியலிட்ட புலவர்களின் வரிசையைத் தமக்குரிய பாடத்திட்டமாகக் கொண்டு தேடித்தேடிப் பயின்றார். தன்னொத்தவர்களுக்குப் பயிற்றுவித்தார். இலக்கியத்தைப் பொருத்தவரையில் அவர் இறுதி வரைக்கும் எல்லாருக்கும் கற்றுத்தருகிற பேராசானாகவே திகழ்ந்தார்.

பட்டிதொட்டியெங்கும் பாரதியை, கம்பனை, இளங்கோவடிகளை, தாகூரை, ஷேக்ஸ்பியரை, தாந்தேயை, மாயகோவ்ஸ்கியை, லெனினை, மார்க்ஸை, சொற்களின் வாயிலாகக் கொண்டுபோய் நிறுத்திப் பாமர மக்களையும் படிப்பித்த பல்கலைக் கழகம் அவர்.

பாரதி மறைவுக்குப் பிறகு தோன்றிய காரைக்குடி கம்பன் கழகத்தில் ஜீவா ஆற்றிய முதல் உரை, அவ்வரலாற்றில் முதன்மை உரையானதைப் பலரும் பலகோணங்களில் பதிவு செய்திருப்பதைப் பார்க்க முடிகிறது.

அதைத் தொடர்ந்து எல்லா இடங்களிலும் கம்பனைச் சிறப்புறப் பதிவு செய்திருக்கிறார். கம்பன் குறித்த அவர்தம் பார்வை தனித்துவமிக்கப் பார்வை.

திராவிட இயக்கச் சிந்தனையாளர்களோடு இணைந்து சீர்திருத்தப்பணிகள் ஆற்றிய ஜீவா, பாரதம்இராமன்நூல் ஆரியர் கோட்டை என்று கருதிய ஜீவா, அவ்வண்ணமே பிள்ளைகளுக்குச் சொல்லியும் கொடுத்தவர், அக்கோட்டைக்குள் புகுந்து அதனை மக்கள் கோட்டையாக மாற்றியிருக்கிறார் என்பது வரலாறு.

கட்சிக்கு உள்ளும் புறத்தும் எத்தனை எதிர்ப்பு வந்தபோதிலும் அவற்றை, ஜனநாயகத்தன்மையோடு ஏற்று, அதற்கான பதில்களை அடுத்தடுத்த பணிகளால் தந்து வென்றவர், தமிழாகி நின்றவர் ஜீவா.

எல்லாரையும்போல, வழிபாட்டுநிலையில் பார்க்காமல், வழிகாட்டும் பான்மையிலேயே அவர் எல்லாப் படைப்பாளிகளையும் பார்த்தார். பாரதியை, வள்ளுவரை, கம்பனை, இளங்கோவை, வள்ளலாரை, சங்கரதாஸ் சுவாமிகளை, சங்கப்புலவர்களை, தொல்காப்பியரைப் பார்த்தார். ஏற்றமிகு கருத்துக்களைக் கொண்டாடினார். மாற்றவேண்டிய கருத்துக்களை மனந்திறந்து விமர்சித்தார். பண்டிதர்களின், பேராசிரியர் களின் பார்வைகளிலும் விசாலத்தன்மையை உருவாக்கிக் கொடுத்தது ஜீவாவின் தனித்தன்மைமிக்க தமிழ்.

அதனை, கி.வா.ஜ. மிகச்சிறப்பாக உறுதி செய்கிறார். ராய.சொ. தமக்கேயுரிய பாணியில் சொல்லிக் காட்டுகிறார். குன்றக்குடி அடிகளார் குறிப்பிடுகிறார்.

எஸ்.இராமகிருஷ்ணன், தா.பாண்டியன் போன் றோரை இலக்கிய இயக்கங்களாகச் செயல்பட வைத்த ஜீவா, கலை, இலக்கியத்திற்கென்றே தனி அமைப்பைத் தொடங்கக் காரணமானதும் இந்தக் காரைக்குடிதான். அதன்பின்னரே, பெரும்பாலும், அனைத்துக் கட்சிகளும் இலக்கியப் பிரிவை ஏற்படுத்திக் கொண்டன என்று கருதலாம்.

ஆயினும், மக்கள் இலக்கியத்திற்கு வழிவகுத்ததும், மற்ற இலக்கியங்களை மக்கள் மத்தியில் கொண்டு செலுத்தியதும் அவர் இருந்து இயக்கிய, கலை இலக்கியப் பெருமன்றமே என்பதில் இருவேறு கருத்திற்கு இடமில்லை.

இன்றளவும், எழுத்தால், பேச்சால், இயக்கத்தால், அவரை ஒத்திருக்க விரும்புகிறவர்கள் இருக்கிறார்கள், இன்னும் வருகிறார்கள், வளர்கிறார்கள் என்பதற்கு அவர்தம் வாழ்வு ஒரு முதன்மைச் சான்று.

சிவகங்கைச் சீமையில் பள்ளி ஆசிரியராகப் பணிதொடர்ந்த ஜீவா,

காந்தியத் தொண்டராக, சீர்திருத்தப் பணியாளராக, தனித்தமிழ் இயக்கப்பற்றாளராக, தேசிய இயக்கவாதியாக, பொதுவுடைமையாளராக, சிறந்த சொற்பொழிவாளராக, பட்டிமண்டபப் பேச்சாளராக, பாடலாசிரியராக, கதாசிரியராக, இதழாளராக,

இவையாவற்றினும் மேன்மைகொண்ட மனிதராகப் பரிணாமம் பெற்ற பண்பாளராக நம்மிடை வாழ்ந்து நம்மையும் வாழ்வித்திருக்கிறார் என்பது காலம் நமக்குத் தந்த கருணைக் கொடை.

அந்த வகையில் அவரை அவ்வண்ணம் ஆக்கிக் கொள்ளத் தன்னுள் இடமளித்துத் தாங்கிய புண்ணி யத்தைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது காரைக்குடி.

அங்கு அவருக்கென்று நினைவில்லமோ, சிலையோ அமைப்பதைவிடவும், அவர் இருந்து பள்ளிகள் நடத்திய சிராவயலில், நாச்சியார்புரத்தில், மருதங்குடி, கம்பனூர் ஆகிய கிராமங்களில் அவர் நினைவைப் போற்றும் வண்ணம் ஏதேனும் செய்வது நல்லது.

காரைக்குடி மக்களோடு இணைந்து கலை இலக்கியப் பெருமன்றம் களமிறங்கினால் காலகாலத்திற்கும் நிலைக்கும் வண்ணம், அந்தக் காவிய நாயகனை மீண்டும் நினைவுபடுத்த ஏதுவாகும் என்பது நம்பிக்கை.

துணைநின்ற நூல்கள்

1)அரசு.வீ, (ப.ஆ) ப.ஜீவானந்தம் ஆக்கங்கள், இரு தொகுதிகள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, மு.ப.2007.

2)கண்ணதாசன் கவிஞர், கண்ணதாசன் கவிதைகள், 6ஆவது தொகுதி, வானதிபதிப்பகம், சென்னை, 4ஆம் பதிப்பு, 1990.

3)சேதுபதி.சொ.,முனைவர், காலத்தின் சாட்சியம் கம்பன் அடிப்பொடி, பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை, மு.ப.2014.

4)சேதுபதி., காரைக்குடியில் ஜீவா, நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, மு.ப.2016.

5)சோமலெ., செட்டிநாடும் செந்தமிழும், வானதி பதிப்பகம், சென்னை, 2ஆம் பதிப்பு, 1999.

6)பழனியப்பன்.பழ, கம்பன்அடிசூடி, (தொ.ஆ), கம்பன் அடிப்பொடி கலைக்களஞ்சியம், உமா பதிப்பகம், சென்னை, மு.ப.2009.

7)பாண்டியன்.தா., ஜீவாவும் நானும், விஜயா பதிப்பகம், கோவை, மு.ப.2002.

8)பொன்னீலன், ஜீவா என்றொரு மானுடன், நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 2ஆம் பதிப்பு, 2003.

9)பொன்னீலன், தவத்திரு குன்றக்குடி அடிகளார் தமிழகத்தின் ஆன்மிக வழிகாட்டி, நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, மு.ப. 2002.

10)பொன்னீலன், ஜீவாவின் பன்முகம், நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, மு.ப.,2007.

11)பொன்னீலன், ஒரு ஜீவநதி, நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, மு.ப.2003.

12)ஜீவபாரதி.கே., (தொ.ஆ), தேசத்தின் சொத்து ஜீவா, ராஜேஸ்வரி புத்தகநிலையம், சென்னை, மு.ப.2001.

13)ஜீவபாரதி.கே., (தொ.ஆ), சட்டப்பேரவையில் ஜீவா, நியூ செஞ்சுரி புக்ஹவுஸ், சென்னை, மு.ப.2012.

14)ஜீவபாரதி.கே., (தொ.ஆ), ஜீவன் பிரிந்தபோதும் சிலையாக எழுந்தபோதும், நியூ செஞ்சுரி புக்ஹவுஸ், சென்னை, மு.ப.2012.

15)............உறவினர் நண்பர்களின் பார்வையில் ஜீவா, பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை, மு.ப.2007.

•             ............நாடக சினிமாத்துறைக்கு வழிகாட்டி ஜீவா, பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை, மு.ப.2007.

16)............சோஷலிச யதார்த்தவாதம் பற்றி ஜீவா, பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை, மு.ப.2007.

17)............ஜீவா நினைவின் அலைகள், பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை, மு.ப.2007.

நன்றி: திரு.கம்பன் அடிசூடி பழ.பழனியப்பன், செயலாளர், கம்பன் கழகம், காரைக்குடி மற்றும் புகைப்படக்கலைஞர் திரு. சுப்பிரமணியன், சுந்தரம் ஸ்டுடியோ, காரைக்குடி.

Pin It