மரபுவழி மருத்துவம்

தமிழ் மருத்துவம் என்று போற்றப்படும் சித்த மருத்துவம் உள் உபயோக மருந்துகள் 32, வெளி உபயோக மருந்துகள் 32 என மொத்தமாகத் தொகுக்கப்பட்டதோடு, உடலுக்கு 30, உயிருக்கு 30, உணர்ச்சிகளுக்கு 36 என 96 தத்துவங்களை உள்ளடக்கி இருந்து, அகத்தியர் உள்ளிட்ட 18 சித்தர் களால் மேம்படுத்தப்பட்டது. இம்மருத்துவம், வாதம், பித்தம், கபம் என்ற திரிதோஷ அடிப் படையில் மணி, மந்திரம், மருந்து என்ற முறையில் தமிழ்நாட்டின் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ற ஒரு சீரான மருத்துவம் ஆகும். மேலும் இது இயற் கையின் பங்களிப்பான செடி, கொடிகள் எனத் தாவரங்களால் பெறப்படும் மருந்துகள், உலோக, அலோகப் பொருட்கள் விலங்கினங்களின் கழிவு, உருப்பு, வர்மக்கலை, வெளிப்பூச்சி மருந்து ஆகியவை களுடன் தழைந்திருந்தது.

இது போலவே ஆயுர்வேதத்திற்கு அதர்வண வேதமே உயிர் மூச்சு என்றாலும் இம்மருத்துவத்தின் வளர்ச்சி உயர்ந்த நிலைக்குச்சென்ற காலம் சரஹ சம்ஹிதா, சுசுருத சம்ஹிதா எழுதப்பட்ட காலம் (கி.மு 300). பின்னர் ஏழாம் நூற்றாண்டில் வாக்பட்டர் அஷ்டாங்க சங்க்ரஹா, அஷ்டாங்க ஹிருதயா என்னும் சிறந்த நூல்களும் வெளியிடப்பட்டன. சுசுருத சம்ஹிதாவில் 121 வகையான அறுவைச் சிகிச்சைக்கான கருவிகள் விளக்கப்பட்டுள்ளன. இதனுதவியால் தண்டனைக்காக வெட்டப்பட்ட மூக்கிற்குக் கூட ஒட்டறுவை சிகிச்சை (Plastic Surgery) செய்யப்பட்டுள்ளது. இது உலகின் ஒட்டறுவை சிகிச்சைகளின் முன்னோடி என்று சிறப்பாகக் கூறப்படுகிறது. இத்துடன் வீரசோழன் ஆதுலர் சாலை பற்றிய 11ஆம் நூற்றாண்டு திருமுக்கூடல் கல்வெட்டும், கி.பி 1257 ஆம் ஆண்டு திருவரங்க ஆதுலர் சாலை கல்வெட்டும், ஆயுர்வேத மருத்துவம் தமிழகத்தில் தழைத்திருந்ததை எடுத்துக் காட்டுகின்றன.

ஐரோப்பியர் வருகையும் மேலை மருத்துவத் தொடக்கமும்

operation theatreஇப்படிப்பட்ட சுதேசி மருத்துவங்கள் நடை முறையில் இருந்த காலத்தில் போர்ச்சுகீசியரான வாஸ்கோடகாமா கள்ளிக்கோட்டைக்கு 1497 இல் வந்தடைந்தாலும் கேப்டன் அல்பான்சோ டி அல்டிகுவர்குயூ (1504- 1515) கோவாவைப் பிடித்து போர்ச்சுகீசிய அரசிற்குத் தலைநகராக்கி அவர்கள் சிப்பாய்களுக்காக ஒரு மருத்துவமனையை அமைத்தார். இதுவே முதல் முதலில் இந்தியாவில் ஐரோப்பியர்களால் ஏற்படுத்தப்பட்ட மருத்துவ மனை. இது பிறகு ராயல் மருத்துவமனை எனப் பெயர் மாற்றப்பட்டு உலகில் சிறந்த மருத்துவ மனையாகத் திகழ்கிறது.

போர்ச்சுகீசியர்களைத் தொடர்ந்து டச்சுக் காரர்களும் பிரெஞ்சுக்காரர்களும் இந்தியாவில் வந்திறங்கி வாணிபம் செய்ததாலும் ஆங்கிலேயர் வணிக ரீதியாக சென்னையில் கால் ஊன்றி வாணிபம் செய்யத் தொடங்கிய பின் தங்கள் தொழிற்சாலை தொழிலாளர்களுக்கும், இராணுவ வீரர்களுக்கும் இந்தியாவில் முதன்முதலில் மருத்துவம் புரிய செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் ஒரு மருத்துவ மனையினை 16-11-1664 இல் நிறுவினர். இது தற்போது உள்ள இடத்திற்கு 1772 இல் நிலை கொண்டது. இதைத் தொடர்ந்து குருகுலப் பாரம்பரிய கல்வியே அளித்து வந்த சுதேசி மருத்துவங்களுக்குப் பொது வான பள்ளிகள் அற்ற நிலையில் 1822 இல் கல்கத்தாவில் ஆயுர்வேதப் பள்ளியை அரசு ஆரம் பித்தது. இதன் செயல்பாடுகளில் திருப்தி அடையாத காலனி அரசு 1833 இல் வகுப்புகளை மூடி மேலை மருத்துவப்பள்ளியைத் தொடங்கியது.

இதே போன்று சென்னையில் 1835 பிப்ரவரி 7-ஆம் தேதி மருத்துவப்பள்ளி இராணுவத் தினருக்காக ஆரம்பிக்கப்பட்டது. இப்பள்ளி 1857 இல் பல்கலைக்கழகத்துடன் இணைந்து எல் எம் & எஸ் என்ற பட்டம் வழங்கியது. இதில் பட்டம் பெற்றவர்கள் இந்திய அரசர், கிளைத் தொழிற்சாலை, சிறிய தொழிற்சாலை மற்றும் சிப்பாய் ஆகியோர்களுக்கு முறையே மருத்துவம் அளித்தனர்.

யாழ்ப்பாணத்தில் தமிழ்வழி மேலை மருத்துவம்

இக்காலகட்டத்தில் (1848) உள்நாட்டு மருத்துவ முறைகளுடன் மேலை மருத்துவத்தையும் இணைத்து அமெரிக்க மறைபோதகரான டாக்டர் சாமுவேல் ஃபிஷ் கிறீன் யாழ்ப்பாணத் தமிழர்கள் சாப்மன், டன்வதர், பவுல், நதானியேல் போன்றவர்களின் துணையுடன் 11 நூல்களைத் தமிழில் மொழி பெயர்த்தார். இவர்களில் யார் நூல் எழுதினாலும் அவை டாக்டர் கிறீனினால் பார்வையிடப்பட்டுத் திருத்தி வெளியிடப்பட்டன. இந்நூல்களின் துணை யுடன் 1864- 1873 வரை 33 இலங்கைத்தமிழர்கள் தமிழ்வழி மேலை மருத்துவம் கற்று மருத்துவர் ஆனார்கள். இதைக் குறித்து டாக்டர் கிறீன் “நான் மேற்கொண்டுள்ள இம் முயற்சியானது தமிழில் மேனாட்டு வைத்தியம் பரவ ஓர் அஸ்திவார மாகவும், ஆரம்பமாகவும் அமைதல் வேண்டுமென விரும்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழில் கற்பிக்க வேண்டும் என்று விரும்பி நிதியுதவி கோரி, டாக்டர் கிறீன் தேசாதிபதிக்கு ஒரு கடிதம் எழுதினார். இதற்குத் தேசாதிபதி “அமெரிக்க மிஷன் நடைமுறையில் மேற்கொண்டிருக்கும் ஆங்கிலம் தவிர்க்கும் கொள்கை பேராபத்தானதும் தற்கொலைக்கு ஒப்பானமாகும்” என்று கூறித் தமிழில் நூல் வெளியிடுவதற்கு எவ்வித உதவியும் அளிப்பதற்கு மறுத்து விட்டார். இருப்பினும் டாக்டர் கிறீன் மனம் தளராது நூல்களை வெளி யிட்டார். இக்காலக்கட்டம் ஆங்கிலம் அரசு மொழியாக இருந்த காலம், ஆங்கிலம் படித்தால் அரசு வேலை என்ற நிலை, அறிவியலைப்படிக்கக் கூடாது என்று சொல்லாத கட்டுப்பாட்டுடன் இந்துக்கள் வாழ்ந்த காலம். அறிவியல் கிறித்து வத்துடனும் கிறித்துவ மிஷினரிகளுடனும் தொடர்பு கொண்டுள்ளது என்று இப்பழமைவாதிகள் எண்ணிய காலத்தில்தான் டாக்டர் கிறீனின் வழியாகத் தமிழர்களுக்கு மேலை நாட்டு மருத்துவம் தமிழில் போதிக்கப்பட்டது.

மாணவர்கள் தமிழில் படிக்கத் தயக்கம்

இன்றைய நிலையைப் போலவே டாக்டர் கிறீன் மேலை மருத்துவத்தைத் தமிழில் படிக்க மாணவர்களை வேண்டியபோது இக்கல்வி பயின்றால் பயனுண்டா? என நிலைதடுமாறினர். இதுபற்றி டாக்டர் கிறீன் “எனது மாணவர்கள் ஆங்கிலத்திலிருந்து மாறித் தமிழில் கற்பது பற்றிச் சலனமடைந்துள்ளனர். அரசு சேவையில் ஈடுபட்டுச் சம்பளம் பெறும் வாய்ப்பு குன்றுமென அவர்கள் எண்ணுகிறார்கள். அது உண்மை. அல்லது வைத்தியர்களை அவரவர் கிராமத்தில் நிலை பெறச்செய்தலே என் எதிர்கால நோக்கமாகும். எனவே பத்து நாட்கள் ஓய்வு கொடுத்து வைத்தியக் கல்வியைத் தொடர்வார்களா? அன்றேல் வேறு தொழிலை நாடுவார்களா? எனத் தீர்மானிக்க அவர்களுக்கு அவகாசம் கொடுத்துள்ளேன்” என மனஉறுதியுடன் கூறி, தமிழ் வழிக்கல்வியை நடைமுறைப்படுத்தினார்.

தமிழ்நாட்டில் தமிழ்வழி மேலை மருத்துவம்

யாழ்ப்பாணத்தில் தமிழ்வழி மருத்துவப் படிப்பு நடைபெற்ற சமயம் தமிழ்நாட்டில் சென்னை மருத்துவக்கல்லூரியில் சுதேசி உதவியாளராகப் பணியாற்றி, திருவனந்தபுரத்தில் மெடிக்கல் கிளாசின் ஆசிரியர் என்று தன்னை அழைத்துக்கொள்ளும் மா.ஜகந்நாத நாயுடு 7 மருத்துவ நூல்களைத் தமிழில் எழுதினார். இதில் “சாரீர வினாவிடை” (1879) என்ற தன் முதல் நூலான உடல்கூறு நூலின் முன்னுரையில் “ஆங்கில மருத்துவம் பரவியதால் சுதேசி மருத்துவர்கள் தங்கள் இஷ்டப்படி செய்யும் மருத்துவங்களைத் தடுக்கவும், அரசு சுதேசி மருத்துவத்தின் மேல் நம்பிக் கையற்று உதவி செய்யாது இருக்கும் நிலையில் சுதேசி மருத்துவம் க்ஷீண திசையை அடைந்து வருவதையும் தவிர்க்க இந்திய நாட்டின் பல திசைகளுக்கும் சென்று சமஸ்கிருதத்தில் உள்ள ஆயுர்வேதச் செய்தி களைத் திரட்டி தமிழில் மொழிபெயர்த்து மேலை மருத்துவத்தை ஆயுர்வேதத் துடன் இணைத்து எழுதி யுள்ளேன்” என்று கூறியுள்ளார்.

ஆயுர்வேத மருத்துவமனை ஆரம்பம்

உள்ளூர் மொழிவழி மருத்துவ நூல்கள் வெளி வந்த பொழுது, குருகுலப் பாரம்பரிய கல்வி முறையில் போதித்து மருந் தளித்து வந்த ஆயுர்வேத மருத்துவத்திற்கு 1898 இல் சென்னையில் கல்யாணி பரமேஸ்வரி அறக்கட்டளை சார்பில் டாக்டர் கோபாலாச்சார்யலுவைக் கொண்டு இலவச மருத்துவமனை முதன் முதலில் தொடங்கப் பட்டது. இது, தொடர்ந்து இயங்க அரசிடம் மானியம் கேட்டுக் கொண்டதற்கிணங்க அரசு ரூபாய் 500 சில நிபந்தனைகளுடன் வழங்கியது. அதன்படி மருந்தகம் சர்ஜன் ஜெனரலால் நியமிக்கப் பட்ட அலுவலரால் கண்காணிக்கப்படும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டது. மருந்தகத்தைத் தொடர்ந்து, சென்னையில் தொடங்கப்பட்ட ஆயுர் வேதப்பள்ளிகளும் உதவித் தொகை கேட்டு விண்ணப்பித்த பொழுது சர்ஜன் ஜெனரல் பானர்மன் ஆயுர்வேதப்பள்ளி அறிக்கைகளைப் பார்வையிட்டபின் இம்முறையில் நோயை உறுதி செய்து, உடற்கூறு அறிந்து மருந்து கொடுக்கப் படவில்லை. ஆகவே எவ்வித உதவியும் இப்பள்ளிகளுக்கு அளிக்கக்கூடாது எனப் பரிந்துரைத்தார்.

இதற்கு மறுப்புத் தெரிவிக்கும் முகமாக 1914 நவம்பர் 23 இல் சென்னை சட்டசபையில் ஏ.எஸ். கிருஷ்ணராவ் என்ற உறுப்பினர் ஆயுர்வேதத்தை ஊக்குவிக்க அதன் நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க வேண்டும், எனவும் இப்பள்ளிகளுக்கும் இங்கு நடைபெறும் ஆய்வுகளுக்கும் உதவிப் பணம் கொடுத்து ஊக்குவித்து ஒரு சிறப்பு அலுவலரையும் நியமிக்க வேண்டும் எனவும் ஓர் தீர்மானத்தைக் கொண்டு வந்தார். இதனை ஆய்ந்த அரசு ஆயுர்வேத மருந்துகளைச் சோதித்து மேலை மருத்துவ நூல்களில் இணைக்க அனுமதி யளித்தது. இதன் காரணமாக சுதேசிப்பள்ளிகள் எப்படிச் செயல்படுகிறது? என்று ஆய்வு நடத்தி முடிவாக சென்னை மாகாண அரசு தன் அறிக் கையை மைய அரசிற்கு அளிக்கும் போது “பாரம் பரிய மருத்துவப் பயிற்சி உள் நாட்டில் முறையற்று அறிவு பூர்வமாக இல்லாததாகவே நடைபெற்று வருகின்றது” என்று தன் கருத்தைத் தெரி வித்தது. இக்கருத்தை ஏற்றுக் கொள்ளாத இந்துநேசன், திராவிடன், கேரள மஞ்சரி போன்ற உள்நாட்டு இதழ்கள் உள்நாட்டு மருத்துவத்தை வளர்த்தெடுக்காதது தவறு எனத் தொடர்ந்து எழுதின. இதற்கு இந்திய சுதந்திர ஆதரவாளர்கள் பெரும் பங்கு வகித்தனர். இச் சமயத்தில் மக்களுக்கு மருத்துவம் அளிக்கப் போதுமான ஆங்கில மருத்துவர்களும் கிடைக்க வில்லை. சட்டசபையிலும் பல சமயங்கள் சுதேசி மருத்துவ மேம்பாடு குறித்துப் பேசப்பட்டது.

சுதேசி மருத்துவத்தை ஆராய டாக்டர் கோமேன்

டாக்டர் கோமேனை 1918 ஜூலை 12-ஆம் தேதி சுதேசி மருத்துவ முறையை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க காலனி அரசு கேட்டுக் கொண்டது. இக்காலகட்டத்தில் சுதேசி மருத்துவங்களுக்கு உதவித்தொகை வழங்க கவர்னரிடம் அனுமதி கேட்கப்பட்டது. இதற்கு அரசு சுதேசி மருத்துவம் ஒரு முறையான மருத்துவம் அல்ல, மேலும் அது ஒரு தனிப்பட்ட மருத்துவத்துறை போன்றதாக இல்லை, ஒவ்வொரு மருத்துவரும் ஒவ்வொரு விதமாக எவ்விதிகளுக்கும் உட்படாது, எவ்வித பட்டப்படிப்பும் இன்றி மருத்துவம் அளிப்பதாகக் கூறி உதவிப்பணம் வழங்க மறுத்தது. இச்சமயம் டாக்டர் கோமேன் தன் அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தார். இதில் “உள்நாட்டு மருந்துகளை மேலை மருந்துகள் பட்டியலில் சேர்ப்பது சிறிதளவே பயன்படுமெனவும், இம் மருந்துகளைப் பல ஆய்வுகளைச் செய்து, சீர்மையடையச் செய்த பின்னரே உலகளவிற்குக் கொண்டு செல்ல முடியும்” என்றும் கூறப்பட்டிருந்தது.

இதற்கு “ஆயுர்வேதத்தைக் கற்றறியாத, சமஸ்கிருத மொழியை அறியாத, ஓர் ஆங்கில மருத்துவரின் அறிக்கை முற்றிலும் தவறானது” என்று சுதேசமித்திரன் இதழ் உட்பட பல இதழ்கள் கண்டனக்குரல்கள் எழுப்பின. இதுபோலவே வைத்திய மண்டலும் ஆயுர்வேத சபாவும் தம் எதிர்ப்பைத் தெரிவித்தன. இதனை அறிந்த கவர்னர் ஜெனரல் டாக்டர் கோமேன் அறிக்கையை நிராகரித்தார். தொடர்ந்து சுதேச மருத்துவத்தை ஆதரித்து தேவையான சோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என 1920 மார்ச் 21 ஆம் தேதி மீண்டும் ஒரு புதிய தீர்மானம் நிறைவேறியது.

உஸ்மான் கமிட்டி

யுனானி மருத்துவம் மற்றும் உருது அறிந்த முகமது உஸ்மான் தலைமையில், சமஸ்கிருதம் தெரிந்த, சட்டப்படிப்பைப் படித்த, மேலை மருத்துவம் கற்ற டாக்டர் ஜி.சீனிவாச மூர்த்தியைச் செயலாளராகக் கொண்டு ஒரு கமிட்டியை 1921 இல் அரசு அமைத்தது. இக்கமிட்டி நாடெங்கும் சென்று ஆயுர்வேதம், சித்தா, யுனானி மருத்து வர்கள், மருந்தகங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து செய்திகளைத் திரட்டி (The Science and the art of Indian System) 150 பக்க அறிக்கையை அரசிற்கு அளித்தது. இது இந்தியாவில் தயாரிக்கப் பட்ட அறிக்கைகளில் மிகச்சிறந்ததில் ஒன்று என்று பாராட்டப்பட்டது. இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள் தர்க்க ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் சிறப்பாக இருந்தது.

இவ்வறிக்கை சுதேசி மருத்துவத்தில் அறுவைச் சிகிச்சை முறை சிறப்பாக இல்லாவிடினும் மருந்து கொடுத்து குணமளிக்கும் மருத்துவம் சிறப்பானதாக உள்ளது, அது சிக்கனமானது, நமக்குப் போது மானது என்று கூறியது. சுதேசி மருத்துவத்தை ஊக்கப்படுத்தினால் கிராமப்புற மக்களின் மருத்துவத் தேவைகளைச் சுலபமாகத் தீர்க்க முடியும், ஆகவே அரசு முழு வீச்சில் சுதேசி மருத்துவத்தை ஊக்குவித்து அத்துடன் அறுவை சிகிச்சையையும் மேம்படுத்தவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டது.

இத்துடன் இந்திய மருத்துவக் கல்லூரியையும், அதற்கான மருத்துவமனையையும் சென்னையில் நிறுவக் கோரியதுடன், நடைபெற்றுக் கொண்டிருக்கும் மருத்துவக் கல்லூரிகளிலும் சுதேச மருத்துவ இருக்கைகளை உண்டாக்கி அதில் பயிலும் மேலை மருத்துவம் கற்கும் மாணவர் களுக்கும் சுதேசி மருத்துவங்களைக் கற்பிக்க வேண்டும் எனவும் கூறியது.

சுதேசி மருத்துவத்தை மேலை மருத்துவத்துடன் படிக்கும் மாணவர் களுக்கு உதவித்தொகை அளித்து, படிக்கச் செய்வதுடன் அவர்கட்கு வேலைவாய்ப்பையும் உத்திர வாதப்படுத்தப்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டது. மேலும் இம்மாணவர்கள் இந் நாட்டிற்கான பெரும் சொத்து எனக் கருதப் படுவார்கள் என்றும் அந்தந்த மருத்துவ முறை களைச் சார்ந்தவர்கள் தங்கள் முறையே சிறந்தது என்று எண்ணாது ஒருவருக்கொருவர் உதவி செய்து உடன் பிறந்தவர்கள் போன்று பாவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டது.

சுதேசி மருத்துவம் மேலை மருத்துவம் இணைப்புக்கு எதிர்ப்பு

உள்நாட்டு, மேலை நாட்டு மருத்துவங்களை இணைத்துப் படிப்பது கூடாது என்று ஆயுர்வேத மகாமண்டலத் துணைச்செயலாளர் கே.ஜி. நடேச சாஸ்திரி, ஆயுர்வேதம் தனித்து இயங்க வேண்டுமே ஒழிய மற்ற எந்த மருத்துவமுறையையும் இதில் கலக்கக்கூடாது அப்படிக் கலந்தால் அலோபதி மருத்துவம் சுதேச மருத்துவத்தை விழுங்விவிடும் எனக் கூறினார்.

இரண்டு முறைகளும் வெவ்வேறு அடிப்படைத் தத்துவங்களைக் கொண்டது என்றும் ஆகவே மொழி, இனம், நாடு இவைகளைக் கடந்து மேற்கையும், கிழக்கையும் இணைப்பது என்பது இவ்விரண்டு மருத்துவமுறைகளைப் பலப்படுத்தாது சிதைவுறவே செய்யும் என வாதாடினார். இது போன்றே பல மருத்துவர்களும் ஹக்கிம்களும் 3000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த சுதேச மருத்துவம் மேலைமருத்துவத்தின் கலப்பால் தனித்தத்துவத்தை இழந்துவிடும் என்று கூறினர்.

இதேபோல அலோபதி மருத்துவர்களும் சுதேச மருத்துவம் பழமையானதாக இருப்பினும் அறிவியல் ரீதியானதல்ல. ஆகவே நவீன மேலை மருத்துவத்துடன் உள்நாட்டு மருத்துவத்தை இணைப்பது கூடாது என்று வாதிட்டனர்.

இவ்வறிக்கைகளை ஆய்வு செய்த காலனி அரசு முடிவாக அறிக்கையின் பரிந்துரைப்படி சென்னையில் 1925 இல் ஆயுர்வேதம், சித்தா, யுனானி முறைகளோடு தேவையான மேலை மருத்துவத்தையும் இணைத்துக் கற்பிக்க, சென்னை மாகாண முதல்வராகப் பணியாற்றிய (1921-1926), டாக்டர் சீனிவாச மூர்த்தியை மருத்து வராகக் கொண்ட பனகல் அரசரால் விலையற்று கொடுக்கப்பட்ட இடத்தில் “இந்திய மருத்துவப் பள்ளி” என்ற பெயரில் தமிழக மருத்துவ வரலாற்றில் முதன்முறையாக உள்நாட்டு மருத்துவத்துடன் மேலை மருத்துவமும் கற்க ஓர் புதிய சகாப்தம் தொடங்கியது.

இதில் ஆயுர்வேதம், சித்தா, யுனானி ஆகிய மருத்துவ முறைகளுக்குத் தனித்தனியே வகுப்பு நடத்தப்பட்டன. அத்துடன் நவீன மருத்துவ மான உடல்கூறு, உடல் இயங்கியல், அறுவை சிகிச்சை, கண் மருத்துவம், மகளிர் மருத்துவம் ஆகியவையும் உள்நாட்டு மருத்துவத்துடன் கற்பிக்கப்பட்டன. இம்மாணவர்களுக்கு உள்நோயாளிகளையும் வெளிநோயாளிகளையும் பார்த்து மருத்துவம் பயில வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. ஆரம்ப காலத்தில் எல்.ஐ.எம் படிப்பு நான்கு ஆண்டுகள் படிப்பு. 1931 ஆம் ஆண்டிற்குப் பிறகு 5 ஆண்டு படிப்படியாக மாற்றியமைக்கப்பட்டது.

ஆயுர்வேதப்படிப்பு தமிழ், தெலுங்கு, சமஸ் கிருதம் ஆகிய மொழிகளிலும் சித்தாவும், யுனானியும் முறையே தமிழிலும் உருது மொழியிலும் கற்பிக்கப் பட்டன. இப்படிப்பில் சேர எஸ்.எஸ்.எல் சி தேறி யிருக்கவேண்டும். இத்துடன் மேலைமருத்துவம் படித்தவர்களுக்கு இந்திய மருத்துவம் உயர்படிப்பு (Fellow of Indian Medicine) போதிக்கப்பட்டது. இதில் 1925 முதல் எல்.ஐ.எம். (Diploma of Licentiate of Indian Medicine) என்ற பட்டப்படிப்பு ஆரம்பமானது.

மருத்துவப்பள்ளி கல்லூரி ஆனது

இப்பள்ளி நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது கல்லூரியாக (1947 College of in degenous Medicine) மலர்ந்தது. இக்கல்லூரியை சென்னைப் பல்கலைக் கழகத்துடன் இணைக்க நடந்த ஆய்வில் பல்கலைக்கழகம் பட்டம் வழங்க மறுத்தால் அரசே டிப்ளமோ படிப்பைத் தொடங்கி ஜி.சி.ஐ.எம் (Graduate of the college of Integrated Medicine) என்ற பட்டத்தை வழங்கியது. பின்னர் இக்கல்லூரி College of Integreated Medicine என (1955) பெயர் மாற்றப்பட்டது. இவர்கட்கு மேலை மருத்துவம் பட்டம் பெற்ற மருத்துவர்கள் பாடம் போதித்தனர்.

இதில் சித்தா பிரிவில் தமிழ் அறிந்த தமிழ் நாட்டினரும், ஆயுர்வேதப்பிரிவில் சமஸ்கிருதம் அறிந்த தமிழ்நாடு, கேரளம் கன்னடம், ஆந்திரா போன்ற பகுதிகளைச் சேர்ந்தவர்களும், யுனானியை உருது தெரிந்த இஸ்லாமியர்களும் படித்துப் பட்டம் பெற்றனர். கல்லூரியில் சேர பௌதீகம், வேதியியலைப் பாடமாக எடுத்துப் படித்து இண்டர்மீடியேட் தேறியிருக்க வேண்டும்.

 இக்கல்லூரியில் “பாலவாகடம்”, “குணபாடம்”, “நச்சு நூல்” ஆகிய பாடநூல்கள் வெளியிடப்பட்டன. இதற்காகக் கலைச்சொற்கள் பட்டியலுடன் நூல்கள் உள்நாட்டு மொழியில் எழுதப்பட்டன. மேலும் ஜி.சி.ஐ.எம் மேலைமருத்துவத்தை இராயப் பேட்டை பொது மருத்துவமனைக்குச் சென்று கற்று வந்தனர்.

இவர்கள் படித்துப் பட்டம்பெற்று வெளி யேறிய பிறகு ஆரம்பத்தில் அரசு வேலையில் சேர அனுமதிக்கப்படவில்லை. மேற்படிப்பு படிக்கவும் (MS., M.D.,) வழிசெய்யப்படவில்லை. இதில் படிக்கச் சேர்ந்தவர்கள் பலர் எம்.பி.பி.எஸ் படிக்க விண்ணப்பித்துக் கிடைக்காது ஜி.சி.ஐ.எம் என்ற பட்டவகுப்பில் சேர்ந்தனர் 5ரூ விழு.

இம்மாணவர்களின் போராட்டத்திற்குப் பிறகு அரசு வேலைவாய்ப்பை அளித்த பொழுது மேலை மருத்துவம் படித்தவர்கள் சீனியர் பதவி யிலும், ஜி.சி.ஐ.எம் படித்தவர்கள் ஜூனியர் பதவியிலும் பணிபுரிய வேண்டிய நிலை ஏற்பட்டது. சுதேசி மருத்துவம் போதித்த கல்லூரியை அங்கீகரித்து பட்டம் வழங்க டாக்டர் ஏ.எல் முதலியாரைத் துணைவேந்தராகக் கொண்ட சென்னைப் பல்கலைக் கழகம் மறுத்தது.

மேலும் மாணவர்கள் தங்களுக்கு மேலை மருத்துவங்களுக்கு ஒத்த ஊதியம் அளித்து அவர்களுக்கு இணையாக நடத்த வேண்டும் எனவும் போராடினர். அரசு ஜி.சி.ஐ.எம் படித்தவர்களை உள்ளூர் மருத்துவத்திலும் மேலை மருத்துவத்திலும் நோயாளிகளுக்கு ஆலோசனை வழங்க இசை வளித்தது என்றாலும் உள்நாட்டு மருந்துடன் மேலை மருத்துவத்தைப் படிக்க மாணவர்கள் ஆர்வம் காட்டவில்லை.

ஜி.சி.ஐ.எம் கல்லூரி மூடப்பட்டது

மாணவர்களின் ஆர்வமின்மையால் இந்திய மருத்துவக்கல்லூரி 1960இல் மூடப்பட்டது. இதில் எம்.பி.பி.எஸ் என்ற வேலை மருத்துவ இளநிலை மருத்துவப் பட்டப்படிப்பு தொடங்கப்பட்டது. இதுவே கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி ஆகும். இந்நிலையில் இந்திய மருத்துவக் கல்லூரியில் ஜி.சி.ஐ.எம் படித்துக் கொண்டிருந்த மாணவர்கள் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் எம்.பி.பி.எஸ் படிப்பைத் தொடரவும்; 3, 4, 5 ஆம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு டி.எம். & எஸ் படிப்பு படிக்கவும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. சுருங்கக் கூறின் ஜி.சி.ஐ.எம் மாணவர்கள் அலோபதி மருத்துவர்களாக மடை மாற்றமடைந்தனர்.

ஜி.சி.ஐ.எம் படிப்பு முடித்து வெளியேறியவர் களுக்குக் குறுகிய காலம் டிஎம் & எஸ் ஆறு மாதம் படிக்கவும், அதை முடித்தபின் தேவை யானவர்கள் செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் குறுகிய காலப் படிப்பு 18 மாதம் படிக்கவும் அரசு வாய்ப்பளித்தது. இதன்படி சுதேச, மேலை மருத்துவம் ஆகிய இரண்டிலும் நோயாளிகளுக்கு ஆலோசனை வழங்க தொடங்கப் பட்ட மருத்துவப் படிப்பு முடிவுற்று மாணவர்கள் மேலை மருத்துவம் மட்டும் படிக்க ஆரம்பித்தனர். இதன்படி உள்நாட்டு மருத்துவமுறையுடன் மேலை மருத்துவத்தை இணைத்துப் படிக்கும் வாய்ப்பைத் தமிழ்நாடு இழந்தது.

சில ஆண்டுகளுக்குப்பிறகு மதுரை சித்த வைத்திய சங்கத்தின் முயற்சியின் காரணமாக தேர்ந்தெடுக்கப் பட்ட அரசு மேத்தா கமிட்டியின் பரிந்துரைப்படி முழுமையான இந்திய மருத்துவம் (சித்தா, ஆயுர் வேதம், யுனானி) படிக்க விரும்புவோருக்குப் பாளையங்கோட்டையில் சென்னைப் பல்கலைக் கழகம் ஒப்புதல் பெற்ற பி.ஐ.எம் என்ற பட்டப் படிப்பு (1964) நவம்பர் 30ஆம் தேதி ஆரம்பிக்கப் பட்டது. இக்கல்லூரியில் மீண்டும் போராட்டம் தலைதூக்கியது.

 தங்களுக்கு மேலை மருத்துவர்களைப் போன்ற தகுதியைத் தரவேண்டும் என்று கூறி அதுவரை மேலை மருத்துவர்கள் மட்டுமே அணியும் வெள்ளைக் கோட்டு அணியவும், ஸ்டெஸ் தாஸ்கோப் நோயாளியைப் பரிசோதிக்க உப யோகிக்கவும் தகுதி பெற்றனர். இத்துடன் 4-ஆம் ஆண்டு சித்தா மருத்துவத்துடன் திருநெல்வேலி மருத்துவக்கல்லூரியில் ஆங்கில மருத்துவம் கற்கவும் வழி வகை செய்யப்பட்டது.

பி.ஐ.எம் என்று வழங்கிய இளநிலை பட்டப்படிப்பு பி.எஸ்.எம்.எஸ் எனப் பெயர் மாற்றமடைந்து இன்று வரை நீடிக்கிறது. இதுபோலவே எம்.டி என்ற முதுநிலை மேற் படிப்பும் சித்தா பிரிவில் நடைபெற்று வருகின்றது. அடுத்து பழனியில் ஆரம்பிக்கப்பட்ட கல்லூரி பின்னர் அது சென்னைக்கு மாற்றப்பட்டு நடை பெற்று வருகின்றது.

முடிவுரை

மரபுசார் மருத்துவத்தின் வரலாறு நீண்ட நெடியதாயினும், இம்மருத்துவத்தை, மேலை மருத்துவத்தோடு இணைக்க முயற்சித்துத் தோல்வி கண்டு மரபுசார் மருத்துவம் தனியான மருத்துவ வழிமுறைகளைக் கண்டது. தொழில்நுட்ப அடிப் படையில் மரபுசார் மருத்துவத்தை மாணவர்கள் விரும்பி ஏற்காதது வருந்தத்தக்கது. மேலை மருத்துவத் துறையோடு மரபுசார் மருத்துவம் இணைந்து தொடர்ந்து இருக்குமாயின் மருத்துவம் ஆய்வு நிலைக்கு உட்பட்டு அறிவியல் தன்மையோடு உள்நாட்டு மருத்துவம் வளர்ந்திருக்கக் கூடும்.

Pin It