‘ஆண்டாள் முதல் சங்கராச்சாரி வரை... தமிழை மறுக்கும் வேதமரபுகள்’ என்ற தலைப்பில் ஜன.30, 2018 அன்று சென்னை இராயப்பேட்டை ஆனந்த் அரங்கில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய கருத்தரங்கில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் நிகழ்த்திய உரையிலிருந்து... (கடந்த வார தொடர்ச்சி)

வைதீக மரபு என்ற பார்ப்பன மரபு தமிழை எப்படி ஊடுருவி அழித்தது என்பதற்கு ஒரு சான்றாக ‘நாலாயிர திவ்ய பிரபந்தத்தை’ சுட்டிக் காட்ட முடியும். தமிழ் ஆழ்வார்களால் பாடப்பட்ட நான்காயிரம் பக்திப் பாடல்களின் தொகுப்பு இது. திவ்யம் என்றால் ‘தூய்மை’ என்று பொருள். ப்ரபந்தம் என்றால் ‘திரட்டு’ என்பது பொருள். ‘ஆழ்வார்களின் நாலாயிர அருளிச் செயல்’ என்பதுதான் இந்த நூலுக்கான தமிழ்ப் பெயர். ஆனால் இது ‘நாலாயிர திவ்ய பிரபந்தம்’ என்ற சமஸ்கிருதப் பெயருக்கு மாற்றப்பட்டது. இன்று வரை ‘நாலாயிர திவ்ய பிரபந்தம்’ என்ற சமஸ்கிருத பெயரையே தமிழில் எழுதப்பட்ட நான்காயிரம் பாடல் தொகுப்பும் தாங்கி நிற்கிறது.

இது குறித்து, அக்னிஹோத்திரம் இராமானுஜ தாத்தாச்சாரியாரே விரிவாக விளக்கியிருக்கிறார். தாத்தாச்சாரியார் இறந்துபோன மூத்த சங்கராச்சாரியான சந்திசேகரேந்திர சரசுவதியின் நம்பிக்கைக்குரியவர். அவரின் உதவியாளராக இருந்தவர்; நெருக்கமாகப் பழகியவர்; வாழ்வின் இறுதிக் கட்டத்தில் மனம் திறந்து பார்ப்பனர்கள் வேதத்தை வடமொழியை சூழ்ச்சியாக எப்படிப் பயன்படுத்தினார்கள் என்ற உண்மையைப் பதிவு செய்துவிட்டு இறந்தார்.

வேதம் - தமிழர்களிடையே கோயில்களில் எப்படி ஊடுருவியது என்பதை தாத்தாச்சாரி விளக்கியிருப்பதை அப்படியே படித்துக் காட்டுகிறேன்.

“அந்த காலத்தில்.... வேதம் தமிழ் தேசத்தையே ஆக்கிரமித்தது.... எங்கும் வேதம்... எதிலும் வேதம் அதாவது இங்கே உள்ள சிலைகள், நுட்பமான சிற்பங்களை பார்த்த பிராமணர்கள்...

“இந்த சிலைக்கு ஏன் வெறும் பூ போட்டுக் கொண்டிருக்கிறீர்கள்? இந்த சிலையில் வேதம் சொன்ன தேவதைகளை நாங்கள் வர வைத்துக் காட்டுகிறோம்.

அவர்கள் கண்ணுக்கு தெரியாத தேவதைகள், அஸரீரிகளாக இருப்பார்கள். அவர்களின் காதில் விழுமாறு வேத மந்த்ரங்களை நாம் உரத்து உச்சரித்தால் இந்த சிலைக்குள் எங்கள் வேதத்தின் தேவதை வரும்...” என்றார்கள்.

தமிழன் முதலில் சிலைக்கு பூ தான் போட்டுக் கொண்டிருந்தான். இதுதான் தமிழர் வழிபாடு என்று முன்பே நான் சொல்லியிருந்தேன்.

நம்மாழ்வாரின் திருவாய்மொழி (2940) தமிழ்ச் செய்யுளைப் பாருங்கள்.

அதாவது... இறைவனிடம் தனது எண்ணத்தை தெரிவிக்கும்படி... நாரைகள், அன்னங்கள், குயில்கள், மகன்றில்கள் (மரங்கொத்தி இனத்தைச் சேர்ந்த வளைந்த மூக்குடைய கடற்கரை பறவை), சிறிய குருகுகள் (கொக்குகள்), வரி வண்டுகள், இளங் கிளிகள், நாகணவாய் பறவைகள் ஆகியவற்றிடம் தூது செல்ல கேட்டுக் கொண்டே வரும் ஆழ்வார் பாடல்கள்.

அடுத்து தூதாய் அனுப்ப பனிக்காற்றை தேர்ந்தெடுக்கிறார். வாடைக் காற்று வீசும் வேளையில்... அவ்வாடையிடம் வேண்டுகோள் வைக்கிறார்.

அந்த பனிக்காற்று இன்றும் வீசிக் கொண்டிருக் கிறது. இந்த பாடல் மூலம் நமக்கு அந்த காற்று என்ன சொல்கிறது?

“பூக்களைப் பறித்து தினமும் பூ+செய் பூசை செய்வது தான் தமிழர் பண்பாடு” என்று சொல்கிறது.

இந்தப் பண்பாட்டில்தான் குறுக்கே வந்தார்கள் பிராமணர்கள்.

‘முதலில் நீ பூ போட்டுக் கொண்டே இரு... நான் வேதம் சொல்கிறேன்...’ என்று வெளியே நின்றார்கள்.

காரணம்... நீ பகவான் பக்கத்தில் நின்று ஏதாவது சொன்னால், அவன் மேல் எச்சில் தெறிக்கும். அதனால் நீ பூ போட்டபடியே இரு. நான் சத்தம் போட்டபடியே இருக்கிறேன்.”

இவருக்குப் பெயர் அத்யயன பட்டர்.

கொஞ்ச நாள் ஆனது. அத்யயன பட்டரே உள்ளே வந்து விட்டார். உள்ளே என்றால்? கர்ப்ப கிரகத்துக்குள்.

இனி நான் பார்த்துக் கொள்கிறேன்; நீ வெளி வேலைகளைப் பார்.

அடுத்து ஆகமக்காரர்களின் ஆதிக்கம். அவர்கள் முழு முதல் சமஸ்கிருதக்காரர்கள் ஆனதால்.

தமிழன் வெளியே நிறுத்தப்பட்டான். சமஸ் கிருதர்கள் உள்ளே சென்றார்கள். தமிழ்ப் பூக்களைத் தூவி சமஸ்கிருத அர்ச்சனை நடத்தினார்கள்” - என்கிறார் தாத்தாச்சாரி

பூவை கடவுளுக்கு, பக்தர்கள் நேரடியாகச் சொரிந்து வழிபாடு நடத்துவதே தமிழர் மரபாக இருந்த காரணத்தால் தான் அதற்கு ‘பூசை’ என்றே பெயர் வந்தது என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். ஆனால் தமிழரின் வழிபாட்டு மரபை வேத மரபு கைப்பற்றி தமிழையும் தமிழர்களையும் சூழ்ச்சிகரமாக அடிமைப்படுத்தியதோடு, அதுவே புனிதமான வழிபாட்டு முறை என்று தமிழர்களின் பொதுப் புத்தியிலும் திணித்தார்கள். இதை பெரியார்தான் கேள்விக்கு உட்படுத்தினார்.

கர்ப்பகிரகத்துக்குள் பூசை செய்யும் உரிமை பார்ப்பனர்களுக்கு மட்டுமே உண்டு என்பதும், அதன் மூலம் ஏனைய பார்ப்பனரல்லாத மக்கள் கர்ப்பகிரகத்துக்குள் ‘தீண்டப்படாதவர்களாக’ சூத்திரர்களாக்கப்படுவதையும் கேள்விகேட்டதோடு, போராட்டக் களமும் அமைத்தவர் பெரியார். ஆனால் பெரியார், தமிழருக்கும் தமிழுக்கும் துரோகம் இழைத்தவர் என்று பார்ப்பனர்களும் பேசுகிறார்கள். “தூய தமிழர்கள் நாங்கள்தான்; அதற்கான குருதிச் சான்றிதழ் எங்களிடம் இருக்கிறது” என்று கூறிக் கொண்டிருப்பவர்களும் பார்ப்பனர்களோடு சேர்ந்து கொண்டு பெரியாரை தமிழர் எதிரி; தமிழ் எதிரி என்று வாய்க் கூசாமல் பேசுகிறார்கள்.

அதேபோல இப்போது கோயில்களில் சுப்ரபாதம் என்ற பாடல் பாடப்படுகிறது. சில தமிழ் தொலைக்காட்சிகள்கூட ஒவ்வொரு நாளும் இந்த ‘சுப்ர பாதப் பாடல்களோடு’ நிகழ்ச்சிகளைத் தொடங்குகின்றன. ‘சுப்ரபாதம்’ என்பது தமிழ்ச் சொல்லா? இல்லை. அது சமஸ்கிருதச் சொல். ‘இப்பொழுது நற்பொழுதாகட்டும்’ என்பது அதன் அர்த்தம். விடியற்காலைப் பொழுதில் ஒலிபெருக்கிப் போட்டு ஒலிக்கிறார்களே, இது எப்படி வந்தது? ‘சுப்ரபாதத்துக்கு’600 ஆண்டுகளுக்கு முன்பே தமிழில், ‘திருப்பள்ளியெழுச்சி’ என்கிற பாடலை, தொண்டரடிப் பொடியாழ்வார் எழுதியிருக்கிறார். கடவுளைக்கூட தூக்கத்திலிருந்து எழுப்பி, அவரை வேலை செய்ய வைக்க வேண்டியிருக்கிறது, பாருங்கள்!

‘திருப்பள்ளியெழுச்சியை’ ஒழித்துவிட்டு ‘சுப்ரபாதம்’ நுழைந்த வரலாற்றை இராமானுஜ தாத்தாச்சாரியே விளக்குகிறார். அவர் மொழியிலேயே நாம் கேட்போம்:

“சுப்ரபாதம் என்றால் என்ன அர்த்தம்? இது ஒரு வடமொழிப் பெயர். அதாவது இப்பொழுது நற்பொழுதாகட்டும் என்று அர்த்தம். இன்னும் உங்களுக்கு மாடர்ன் ஆக சொல்ல வேண்டுமென்றால் கடவுளுக்கு காலை வணக்கம் செலுத்தி அவரை எழுப்புவதுதான் சுப்ரபாதம். கடவுள் தூங்கலாமா? என்பது வேறு விஷயம்!

அதாவது, “Good morning to God and wake up him.....”

இந்த சுப்ரபாதத்தை இயற்றியவர் ப்ரதிவாதி பயங்கரம் அண்ணா. (மத விஷயங்களில் தன்னோடு வாதம் பண்ண வருபவர்கள் யாராக இருந்தாலும், தன்னுடைய பயங்கரமான பிரதிவாதம் மூலம் அவர்களை தோற்கடித்து விடுவார் அண்ணா. அதனால்தான் ப்ரதிவாதி பயங்கரம் அண்ணா என பெயர் பெற்றார்) இவர் மணவாள மாமுனிகளின் சிஷ்யர்.

‘ஆழ்வார்கள் வாழி அருளிச் செயல் வாழி’ என்று வாழ்த்தினாரே அதே மணவாள மாமுனிகளின் சிஷ்யர்தான் அண்ணா.

“கௌசல்யா சுப்ரஜா ராமா

 பூர்வா சந்த்யா ப்ரவத்ததது...”

என்ற சுப்ரபாதத்தின் இந்த முதல் வரிகள் வால்மீகி இராமாயணத் திலிருந்து உருவப்பட்டது. அதாவது... விஸ்வாமித்ரர் இராமனை எழுப்புகிறார். “கௌசல்யை புண்ணியம் செய்து பெற்ற ராமா... அங்கே காட்டுப் பக்கம் அரக்கர்கள் அடாவடி செய்து தவ முனிவர்களுக்கு இடைஞ்சல் செய்கிறார்கள். நீ வந்து அவர்களை வீழ்த்து...” என இராமனை எழுப்பி அழைக்கிறார் விஸ்வாமித்ரர்.

இதை முதல் வரியாகப் போட்டு, வெங்கடேச சுப்ரபாதத்தை இயற்றியிருக்கிறார் ப்ரதிவாதி பயங்கரம் அண்ணா. இவர் இந்த சுப்ரபாதத்தை 14ஆம் நூற்றாண்டில் இயற்றினார் என்கிறார்கள்.

ஆனால்... இதே போன்ற சுப்ரபாத வடிவத்தை நாம் இப்போது கேட்கிற சுப்ரபாதம் இயற்றப்பட்டதற்கு அறுநூறு வருஷங்கள் முன்னதாகவே அற்புதமாக இயற்றியிருக்கிறார் தொண்டரடிப் பொடியாழ்வார் தமிழில்.

இனிய தமிழில் ‘திருப்பள்ளியெழுச்சி’ என்றும் பெயர் கொண்ட அந்த பத்து முத்தான பாடல்களை (ஆழ்வார்கள் அருளிச் செயல் புத்தகத்தில் 917 முதல் 926 வரையிலான பாடல்கள்) சிலவற்றை மட்டும் உங்களுக்கு சொல்கிறேன்.

தொண்டரடிப் பொடியாழ்வார் காவேரிக் கரையில் படுத்திருக்கும் திருவரங்க பெருமாள் அரங்கநாதனை எழுப்புவதாக இந்தப் பாடல்களை இயற்றியிருக்கிறார்.

கதிரவன் கிழக்கின் மேலே முளைத்து விட்டான். இரவின் இருள் அகன்றது. காலைப் பொழுது மலர்கள் பூத்து தேன் சொரிகின்றன. வானத்து தேவர்களும், பூமியின் மன்னர்களும், பக்த கோடிகளும் நீ பார்க்க தெற்குப் பக்கம் திரண்டிருக்கிறார்கள்.

அவர்கள் வந்த யானைத் திரள்கள் எழுப்பும் பிளிற்று ஓசையும்.. யானைப் படையின் முரசு ஒலியும் எல்லா திசைகளிலும் எதிரொலிக்கிறதே அரங்கா... திருப்பள்ளியை விட்டு எழுக, அவர்களுக்கு காட்சி தருக...”

இன்னும் ஒரு தமிழ் திருப்பள்ளியெழுச்சி கேளுங்கள்.

சுற்றிலும் காவிரி நதி சூழ்ந்த அரங்கா, கடலிலே கதிரவன் தோன்ற... குளங்களில் தாமரைப் பூக்கள் சிரித்து மலர்ந்து மணக்கின்றன.

சின்னச் சின்ன இடுப்புகளைபெற்ற பெண்கள் காவிரியில் குளித்து... தங்களின் நனைந்த கூந்தலை ஈரப்பதம் இல்லாமல் உலர்த்தி உதறி... தத்தம் ஆடைகளை உடுத்தி கரையேறுகிறார்கள்.

இப்படிப்பட்ட இளங்காலைப் பொழுதில் தொண்டரடிப் பொடியென்னும் நான் திருத்துழாய் (துளசி) மாலையும், பூக்குடலையும் தாங்கி காத்திருக் கிறேன். இந்த அன்பனை ஏற்ற அருளி ஆளாக்க வேண்டும்.

இந்த தமிழ்பாடலுக்கு என்ன குறைச்சல்?” என்று கேட்கிறார் தாத்தாச்சாரி.

வால்மீகி இராமாயணத்திலிருந்து வரிகளைத் திருடி யிருக்கிறார், ‘வேத விற்பன்னர்’ ப்ரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சியார். திருப்பதி ஏழுமலையானை தூக்ககத்திலிருந்து எழுப்ப உருவாக்கப்பட்ட பாடல், இப்போது கிராமங்களில்கூட உழைக்கும் மக்களை தூங்கவிடாமல் அதிகாலை நேரங்களில் ஒலிபெருக்கியில் அலறிக் கொண்டிருக்கிறது.

திருவரங்கத்திலுள்ள ரெங்கநாதனுக்கு திருப்பள்ளி யெழுச்சிப் பாடுவதற்குக்கூட அர்த்தம் உண்டு. ஏழுமலையானுக்கு ஏன் சுப்ரபாதம் என்ற பகுத்தறிவு கேள்வியையும் தாத்தாச்சாரி கேட்கிறார். அவர் கூறுகிறார்:

“சுப்ரபாதத்தில் இன்னொரு லாஜிக்கும் இருக்ககிறது. அதிலும் தமிழ்தான் வெற்றி பெறுகிறது. திருப்பதி வெங்கடாஜலபதி நின்று கொண்டிருக்கிறார். அவரை எழுப்புவது சரியாக இருக்குமா? இங்கே திருவரங்கத்தில் அரங்கன் படுத்துக் கொண்டிருக் கிறார். இவரை எழுப்புவது சரியாக இருக்குமா? படுத்துக் கொண்டிருப்பவரை எழுப்பும் வேலையை தமிழில் செய்தார் - தொண்டரடிப் பொடியாழ்வார். நின்று கொண்டிருப்பவரை எழுப்பும் வேலையை சமஸ்கிருதத்தில் செய்தார் ப்ரதிவாதி பயங்கரம் அண்ணா”

- என்று நறுக்கென்று ‘குட்டு’கிறார் தாத்தாச்சாரி. இதே கேள்வியை நாம் கேட்டால், ‘இந்து விரோதி’, ‘தேச விரோதி’ என்று ஒரு கூட்டம் கிளம்பும். கேட்பது தாத்தாச்சாரி. இதற்கு என்ன பதில் கூறப் போகிறீர்கள்?

இதிலே இன்னொரு செய்தியையும் சுட்டிக்காட்ட வேண்டும். வைணவக் கோயில்களில் வைகுண்ட ஏகாதசியின்போது ஆழ்வார்கள் எழுதிய தமிழ்ப் பாடலான ‘நாலாயிர திவ்ய பிரபஞ்சத்தை’ அதாவது நாலாயிரம் அருளிச் செயலை இருபது நாட்கள் ‘ஏதாதசி’க்கு முன்பும் பின்பும் பாடுவதை ஒரு வழக்கமாக வைத்திருக்கிறார்கள். ஆனால் கோயில் கர்ப்பகிரகத்துக்குள் பாடுவது இல்லை. ஸ்ரீரங்கத்தில் படுத்த நிலையில் உள்ள ரெங்கநாதன் மூல விக்ரகத்தை அப்படியே கர்ப்பகிரகத்துக்குள் வைத்துவிட்டு வீதி உலாக்களுக்காக உருவாக்கப்பட்ட ‘உற்சவ மூர்த்தி’ விக்ரகத்தை கோயிலுக்கு வெளியே ஒரு மண்டபத்தில் தூக்கிக் கொண்டு வைத்து, அங்கேதான் தமிழ்ப் பாடல்களைப் பாடுவார்கள். பாடல் பாடி முடிந்த பிறகு மீண்டும் உற்சவ மூர்த்தியை உள்ளே தூக்கிக் கொண்டு போய்விடுவார்கள். இதற்கு ‘அரயர் சேவை’ என்று பெயர். இப்படி ஒரு ‘அவமானம்’, ‘அவமதிப்பு’ தமிழுக்கு தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது.

சரி; சைவத்தின் கதை என்ன? சிவனை தென்னாட்டுக் கடவுளா க்கினார்கள்.

“தென்னாடுடைய சிவனே போற்றி

என்னாட்டவருக்கும் இறைவா போற்றி”

என்று சிவன் தென்னாட்டுக்காரன். தமிழ்க் கடவுள். ஆனால், பரந்த மனப் பான்மையோடு ‘தேசிய ஒருமைப்பபாடு’ கருதி எல்லா நாடுகளுக்கும் அருள் செய்வான் என்று கூறினார்கள்.

இன்றைய வேதாரண்யம் அன்றைய திருமறைக்காட்டிலுள்ள சிவன் கோயிலை வேத புரோகிதர்கள் வேதங்கள் ஓதி. பூஜித்து கதவை வேத சக்தியால் திறக்கவே முடியாமல் செய்து விட்டார்களாம். சிவ பக்தர்கள் ஏங்கித் தவித்தபோது, சைவ மதப் பரப்புரையாளர்களான திருஞான சம்பந்தனும், திருநாவுக்கரசரும் கதவைத் திறக்க முடிவு செய்து, கோயிலுக்குப் போனார்களாம். திருநாவுக்கரசர், கோயில் கதவுக்கு முன்னால் போய் நின்று, வேத மொழியால், உனது கதவை மூடி களங்கப்படுத்தி விட்டார்களே; உன்னைக் காண வந்திருக்கிறேன், கதவைத் திற என்ற பொருளில் பதிகம் பாடினாராம்.

“பண்ணினேர் மொழியாள் உமைபங்கரோ

 மண்ணினார் வலஞ் செய்ம்மறை காடரோ

 கண்ணினால் உமைக் காணக் கதவினை

 திண்ணமாகத் திறந்தருள் செய்ம்மினே”

- நாவுக்கரசரின் இந்தப் பாட்டுக்குப் பிறகும் கதவு திறக்கவில்லையாம். பிறகு இரண்டாவது ஒரு பதிகம் பாடுகிறார். இரக்கம் காட்டாமல் கதவைத் திறக்க மறுக்கிறீர்களே என்ற பொருளில்,

“அரக்கனை விரலால் அடர்த்திட்ட நீர்

 இரக்க மொன்றிலீர் எம்பெருமானரே”

என்று பாடிய பிறகு கதவு திறந்ததாம்.

கருநாடகம் தடுத்து வைத்திருக்கிற காவிரி நீரை - கருநாடக அணைகளின் மதகுகளைத் திறந்து விட்டு தமிழகத்துக்கு தண்ணீர் கொண்டுவர சம்பந்தரும், திருநாவுக்கரசர் பதிகம் பாட இல்லாமல் போய் விட்டார்களே என்று கேட்டு விடாதீர்கள். இப்படித்தான் இருக்கும் பக்தி இலக்கியம். சரி; கதவு திறந்தாகிவிட்டது. பிறகு, இரவு கதவை மூட வேண்டுமே; அதற்கு ஞானசம்பந்தன், ‘சதுர மறைதான்’ என்று பதிகம் பாடினானாம். கதவு மூடியது. அன்றி லிருந்துதான் அந்தக் கோயிலின் கதவு - திறந்து சாத்தும் முறையே வந்தது என்கிறார்கள்.

கதைகள் இருக்கட்டும்; வேத புரோகிதர்கள் மந்திரம் ஓதி பூட்டிய கோயில் கதவை தமிழ்ப் பதிகம் பாடி திறந்து வைத்தார்கள் என்பதுதான் இதில் அடங்கியுள்ள கருத்து. இப்போது என்ன நடக்கிறது? சிவாச்சாரியார் சமஸ் கிருதத்தில் தான் பூஜை நடத்துகிறார்.

திருவாசகம், திருவிசைப்பா, பெரிய புராணம் போன்றதமிழ் பக்திப் பாடல்களைப் பாடுவதற்கு ‘ஓதுவார்கள்’ என்று ‘சூத்திரர்கள்’ இருக்கிறார்கள். தமிழ்ப் பாடல்கள் சிவன் காதுகளில் விழுந்து விடக் கூடாது என்று வெளியே ஓரமாக நின்றுதான் இவர்கள் பாடுகிறார்கள். இதுதான் தமிழன் நிலை!

(தொடரும்)

Pin It