முன்னுரை:
இருபத்தோராம் நூற்றாண்டு, இயந்திரத்தனமான வாழ்க்கையை நமக்கு அளித்துள்ளது. ஒவ்வொருவரும் ஒவ்வொருவரிடமிருந்தும், ஒவ்வொரு பொருளிடமிருந்தும் அந்நியப்பட்டிருக்கின்றோம். நவீன வாழ்க்கையை உருவாக்கக் கூடிய முயற்சியில் இலக்கியத்தில் குறிப்பாகக் கலைப்படைப்பின் பங்களிப்பு இன்றியமையாதது. முனைவர் க.இராமச்சந்திரன், "கலைக்கும் கவிஞனுக்கும் அதிக மதிப்பளிப்பதே அழகியல் தான். தமிழில் அழகியலைத் திரு.வி.க 'முருகன் அல்லது அழகு' என்ற நூலில் 'முருகு' என்பதற்கு 'அழகு' என்றொரு பொருள் உணர்த்துவதை புதுக் கவிதைகளில் பன்முகப் பார்வை என்னும் நூலில் குறிப்பிடுகிறார்" கவிஞர் ஜெ.பிரான்சிஸ் கிருபா கவிதைகளில் அழகியல் சிந்தனைகளை விளக்குகிறது இக்கட்டுரை.
அழகியல்:
அழகியல் என்பது அழகின் தன்மையை ஆராய்வதும், கலைப்படைப்புக்களில் அழகை இனம் கண்டு இரசிப்பதும், சுவையுடன் படைப்புகளைப் படைப்பதும் பற்றிய இயலாகும். நவீன தமிழ் புதுக்கவிதை மரபில் கவிஞர் ஜெ.பிரான்சிஸ் கிருபா, அலங்காரமற்ற எளிய மொழியின் வழியே ஆழமான அழகியல் சிந்தனைகளை உருவாக்கும் கவிஞராக விளங்குகிறார்.
கவிஞரின் பிறப்பும் வாழ்வும்:
கவிஞர் ஜெ.பிரான்சிஸ் கிருபா, திருநெல்வேலி மாவட்டம். நாங்குநேரி தாலுக்கா, பத்தினிப்பாறை என்ற கிராமத்தில் 1974 ஆம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தை ஜெபஸ்டியான், தாயார் ஆரோக்கியம். இதுவரை தமிழ் எழுத்துலகிற்கு எட்டு கவிதை நூல்களையும், 'கன்னி' என்ற ஒரு நாவலையும் தந்து சிறப்பித்திருக்கிறார். இதற்காக ஜெரிமேரி விருது, கவிஞர் மீரா விருது, கவிஞர் தேவமகள் அறக்கட்டளை விருது, சுந்தர ராமசாமி விருது. ஆனந்த விகடன் விருது எனப் பல விருதுகள் இவரை அங்கீகாரம் செய்திருக்கின்றன. 16.09.2021 தன் வாழ்க்கைப் பயணத்தை நிறுத்திக் கொண்டு இயற்கை எய்தினார்.
இயற்கை அழகியல்:
"தேனில் ஊறிய செந்தமிழின் சுவையும்,
இயற்கையின் அழகும் ஒன்றே"
என்கிறார் பாவேந்தர் பாரதிதாசன்.
கவிஞன் இயற்கைக் காட்சியைக் காணும்போது, அக்காட்சிகள் அவன் உள்ளத்தில் ஓவியங்களாகப் பதிகின்றன.
"நள்ளிரவில் அறுத்தோம்
நித்திரை பிரியாமல்
பெரும் சப்தத்தோடு அது
சரிந்து விழுந்தது மற்றொரு உறக்கத்தில்
காலையில் கண் விழித்த
இலைகளெல்லாம் கண்டன.
ஒரு கனவுபோல
காணாமல் போன மரத்தை" (சாந்தாகுரூஸ் -ஜெ.பி.கி.க – ப – 158)
அனைவரும் தூங்கிக்கொண்டிருக்கும் போது இருட்டில் பெரும் சத்தத்தோடு மரம் வெட்டி சாய்க்கப்படுகிறது. மரம் விழுவது தெரியாமல் மனிதர்கள் தூங்குகின்றனர். பின்னர் இலைகளெல்லாம் கண்விழித்த போது, மரம் வெட்டப்பட்டது ஒரு கனவு போல உள்ளது என்று இக்கவிதை காட்டுகிறது. முதலில் இது மனித சமூகம் இயற்கை அழிவை உணராமல் இருக்கும் அலட்சியத்தைச் சுட்டுகிறது. இயற்கை அழிவின் வலி பெரிதாக இருந்தும், மனித மனம் அமைதி கொள்கிறது. இது வெறும் தூக்கம் இல்லை, சுற்றுச்சூழலின் உறக்கம்.
மேலும் இலைகள் விழித்தது என்று இயற்கைக்கும் ஒரு விழிப்பு உண்டு என்பதைக் காட்டுகிறது. இறுதியாக, இயற்கை இழப்பு மனித வாழ்வில் மிக எளிதாக மறக்கப்படுகிறது என்பதை உணர்த்துகிறது. இக்கவிதையில் மரம் அழகுப் பொருள் மட்டுமல்ல, உணர்வுள்ள உயிராகக் காணும் அழகியலாகும்.
"மழைக்குத் தெரியாமல்.
குடைக்குள் புன்னகைக்கிறாய்.
கண்ணடித்து மன்னிக்கிறது மின்னல்" (சாந்தாகுரூஸ் ஜெ.பி.கி.க – ப – 204)
வெளிப்படையாகச் சொல்லாத, உள்ளார்ந்த அன்போடு இருக்கும் நிலையை, குடை எனும் பாதுகாப்பின் சின்னத்தோடு ஒப்பிட்டு தனது உள்ளத்தின் மகிழ்ச்சியை வெளிக்காட்டாமல் அமைதியாகப் புன்னகைக்கிறாள். மின்னல் போன்ற கடுமையான இயற்கை சக்தி அவளது அழகை ஆராதனை செய்கிறது. அழகுக்கும் மென்மைக்கும் முன்பு மன்னிப்பது போல காட்டுகிறது. அன்பும்,அழகியலும் கலந்து எழுதப்பட்ட ஒரு நுண்மையான கவிதையாக்கியிருக்கிறார் கவிஞர்.
அன்றாட வாழ்வின் அழகியல்:
மனிதன் சாதாரணமானவற்றில், அசாதாரணமான அழகைக் கண்டறிந்து, இயற்கையையும் மனித உணர்வுகளையும் ரசிக்கிறான். இது நாம் அன்றாடம் பயன்படுத்தும் இயற்கைப் பொருட்களின் வடிவங்களில் வெளிப்படுகிறது.
"தூவானம் தெறிக்கும்
ஜன்னல் கதவுகளை
சாற்றத் தோணாமல்
சமையலறையில்
மழையை ரசித்தபடி
தன்னையே சமைத்துக் கொண்டிருக்கிறாள்
வாணலியில்
வானவில் பொறியல்!" (சம்மனசுக்காடு, பக் - 42)
நவீன உருவகப் பொருண்மையில் அமையப் பெற்ற கவிதையில் அன்றாடப் பொருட்களும், நிகழ்வுகளும் அழகியல் பொருள்களாக மாறுகின்றன. மென்மையான உணர்ச்சிகளை மூடி மறைக்காமல், ஓடி ஒளியாமல் அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும் மனநிலையோடு, பெண்ணின் உணர்வுபூர்வமான இடமான சமையலறையில் பெரும் பொறுப்புகளுக்கிடையில் சிறு மகிழ்ச்சியான மழையை ரசிக்கிறாள். தன் முதிர்ச்சியால் தானே அனுபவங்களாக மாற்றிக் கொள்கிறாள். வாழ்க்கையில் ஏற்படும் பல்வேறு சிரமங்களுக்கிடையே சாதாரண வாழ்க்கைச் சூழலில் உருவாகும் அசாதாரண அழகு என அன்றாட வாழ்வின் அழகியலை வெளிக்காட்டுகிறார்.
"விழித்திருந்து
விழித்திருந்து
சலித்துப்போன பகல்
ஒரு நாளேனும்
இரவாக வேண்டுமென்று
தன்
ஏக்கத்தை
கட்டுச்சோறு போல
கட்டிக்கொண்டு வந்து
என்னிடம் ஒப்படைத்தது
ஒரு கனவில்" (ஓ.சு.உ.இ, ப - 103)
அன்றாடத்தின் எளிமையில் அழகு இருக்கிறது என்கிறார் கவிஞர். அன்றாட வாழ்வை உணர்ந்து அனுபவிக்கும் உளவிழிப்பு எப்போதும் இருக்கவேண்டும். சாதாரணமாகக் கருதப்படும் தினசரி வாழ்க்கையில் ஏற்படும் ஆசைகள், சலிப்பு போன்ற மனக்குழப்பங்களால் வரும் நல்லது - கெட்டது, இன்பம் - துன்பம் அனைத்தும் கலந்த அன்றாட அனுபவக் கலவையாகக் கருத வேண்டும். வாழ்க்கையின் அழகு, அசாதாரணத்தில் இல்லை. அன்றாடத்தின் எளிமையில் இருக்கிறது என்பதே இக்கவிதையின் மைய அழகியல் ஆகும்.
பெண்ணிய அழகியல்:
"மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல
மாதவம் செய்திடல் வேண்டும்"
என்பார் கவிமணி.
இப்பூமியில் பெண்ணாய்ப் பிறப்பதற்குப் பெருந்தவம் செய்திருக்க வேண்டும். பெண்மை என்பது உடல் சார்ந்த அழகு மட்டுமல்ல, மன வலிமை, அன்பு மற்றும் ஆளுமையின் கலவையாகும். ஜெ.பிரான்சிஸ் கிருபா கவிதைகள் பெண்ணைப் பாராட்டுவதில்லை, மாறாக பெண்மையைப் புரிந்து கொள்கின்றன என்பதே இவரது அழகியல் தனிச்சிறப்பைக் காட்டுகிறது.
"பெண்ணைக் கண்டு
பேரிரைச்சலிடுகிறாயே மனமே...
பெண் யார்? பெற்றுக்கொண்டால் மகள்,
பெறாத வரையில்
பிரகாசமான இருள்
வேறொன்றுமில்லை" (சாந்தாகுரூஸ் - ஜெ.பி.கி.க. ப - 96)
இயல்பாக பெண்ணைப் பார்த்தவுடன் மனித மனம் பரிதாபப்படுகிறது. ஏனென்றால் ஆசை, பயம், அதிகார உணர்வு, சந்தேகம், மதிப்பீடு எனப் பல்வேறு உணர்ச்சிகள் ஒரு சேர எழுகின்றன. அந்த மனநிலையையே கவிஞர் சாடுகிறார். "பெண் யார்?" என்பது சாதாரண கேள்வி அல்ல. இச்சமூகம் பெண்ணை எப்படி வரையறுக்கிறது? அவளை ஒரு மனிதராகப் பார்க்கிறதா, இல்லையா? என்ற கேள்வியை முன்வைக்கிறது. மேலும் பெண்ணின் அடையாளம் சமூகத்தில் பெரும்பாலும் உறவின் அடிப்படையில் தான் நிர்ணயிக்கப்படுகிறது. அது மகள், மனைவி, தாய் இவைகளுக்குள் மட்டுமே அவள் சுருக்கப்படுகிறாள். ஒருவேளை பெண் பெற்றெடுக்கவில்லையென்றால் அவள் ஒரு உயிரை சுமக்கும் மர்மமான ஒளி நிறைந்த இருள் தான். எனவே பெண்ணைப் பற்றி இச்சமூகம் கட்டியெழுப்பிய கற்பனைகள் பயங்கள், கட்டுப்பாடுகள் தேவையற்றவையே. பெண்ணைப் பற்றிய சமூக மனநிலையைத் திறந்த வெளியில் கேள்விக்குள்ளாக்கும் ஒரு தீவிரமான சிந்தனையைத் தூண்டுகிறது இக்கவிதை.
"…………………………………………
வளைந்து கிடக்கும் வானவில்லை நேராக்கு
அதன் வர்ணங்களின் தோலை உரித்து வீசு
வெற்றி வெற்றியெனக் கூச்சலிடு
பைத்தியமாகு
பதற்றத்தோடு சிரி
படபடப்பாய் அழு
வெட்கத்தில் விம்மு
விக்கலை மென்று விழுங்கு
ஒரு வில்லின் சடலம்
உன்னிடம் வேண்டுவதெல்லாம்
வேறொன்றுமில்லை" (ஜெ.பி.கி.க, - டிஸ்கவரி பப்ளிகேசன் - ப - 299)
என்கிறார் கவிஞர்.
பல்வகைத் தன்மையில் ஏழு வகையான சின்னங்களோடு பயணிக்கூடிய பெண், ஒரு சாதாரணப் பயணி அல்ல, வரலாற்றை நகர்த்தும் சக்தி. பெண் தாழ்ந்த நிலையை ஏற்க மறுத்து, தன்னம்பிக்கையுடன் தனது பயணத்தை மேற்கொள்ளும் போராட்டம், வெறும் "வெற்றிக் கதை" அல்ல, அது வெற்றி பெற வேண்டிய அவசியத்தால் உருவான துயரச் சூழல். இதன் மூலம் ஒவ்வொரு வெற்றியின் பின்னால் இருக்கும் துயரம் இங்கு வெளிப்படுகிறது. அப்போது புதிய பாதையை மாற்றுவது மட்டுமல்லாமல், பாதை அமைக்கும் முறையையே உடைத்து, தன்னுடைய விதியைத் தானே மாற்றிக் கொள்கிறாள். வாழ்க்கையின் அழகு இயல்பாக வளைந்தே இருக்கும். ஆனால் சமூகம் அதை நேராக பார்க்க விரும்புகிறது. வளைவுகளையும், போராட்டங்களையும் நேராக்கி நியாயப்படுத்த வேண்டிய கட்டாயம் பெண்ணுக்கு இருக்கிறது என்கிறார் கவிஞர். மேலும் வெற்றியின் வெளிப்புற அலங்காரங்களை அகற்றிவிட்டு, உண்மைத் தோற்றத்தோடு "வெற்றி" என்று கூச்சலிட சொல்லியிருக்கிறார். மனிதன் அனுபவிக்கும் அனைத்து முரண்பட்ட உணர்வுகளும் அமைதியான நிலை இல்லை. அது ஓர் உளவியல் யுத்தமாகும். எனவே கடந்த காலத்தின் ஆயுதங்களை தைரியத்தோடு விட்டுச் செல்ல வேண்டும். பெண்களை வீரச்சிலையாக அல்ல, உடைந்து மீளும் உயிராக இக்கவிதை எடுத்துக்காட்டுகிறது.
முடிவுரை:
ஜெ.பிரான்சிஸ் கிருபா கவிதைகளில் அழகியல் என்பது அலங்காரமல்ல, அது வாழ்க்கையை உணரும் முறை. எளிமை, வலி, மௌனம் பெண் மனம், அன்றாட வாழ்வு ஆகியவற்றின் ஒருங்கிணைப்பே அவரது அழகியல் சிந்தனைகளின் மையம். இதனால் அவரது கவிதைகள் வாசிப்பதற்காக மட்டுமல்ல, அனுபவிப்பதற்காகவும் உருவாகின்றன. அழகியல் என்பது ரசனைக்கான அனுபவமாக மட்டுமல்லாது, வாழ்வை புரிந்து கொள்ளும் அறிவியல் உணர்ச்சி இணைவு என இவ்வாய்வு உறுதிப்படுத்துகிறது.
துணை நூற்பட்டியல்:
1. முனைவர் க.இராமச்சந்திரன் - புதுக்கவிதைகளில் பன்முகப் பார்வை. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.
2. புலவர் சுந்தர சண்முகனார் - தமிழ்நூல் தொகுப்புக்கலை, பாரி நிலையம்.
3. ஜெ.பிரான்சிஸ் கிருபா - சம்மனசுக்காடு, சந்தியா பதிப்பகம்.
4. சாந்தா குருஸ் - ஜெ.பிரான்சிஸ் கிருபா கவிதைகள், தமிழரணி.
5. ஜெ.பிரான்சிஸ் கிருபா கவிதைகள், டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ்.
6. ஜெ.பிரான்சில் கிருபா - ஓலங்கள் சுழலும் உடைந்த இசைத்தட்டு, படைப்பு பதிப்பகம்.
கட்டுரையாளர்கள்:
ஆய்வாளர்: ம.அருண்குமார்
முனைவர் பட்ட ஆய்வாளர் (பகுதி நேரம்)
செந்தமிழ்க் கல்லூரி, தமிழ் உயராய்வு மையம், மதுரை – 625 001.
ஆய்வு நெறியாளர்: முனைவர் மு.செந்தில்குமார்
உதவிப்பேராசிரியர், செந்தமிழ்க் கல்லூரி,
தமிழ் உயராய்வு மையம், மதுரை – 625 001.