தமிழ்த்தேசிய உணர்வுநிலையும் தமிழ் அடையாள உருவாக்கம் என்பதும் பிற இந்திய தேசிய இனங்களைப் போல் நவீனகாலச் செயல்பாடன்று. தமிழின் ஆதிநூலான தொல்காப்பியம் முதலே தமிழ் அடையாளம் உருவாகத் தொடங்கிவிட்டது. தொல்காப்பியத்தில் தமிழ் அடையாளம் என்பது நிலம், மொழி, அரசு சார்ந்து உருவாக்கப்பட்டு விட்டது. தொல்காப்பியத்தைத் தொடர்ந்து சங்க இலக்கியத்திலும் ‘தென்குமரி, வட பெருங்கல்’ என்ற நில வரையறுப்பும் மொழி, அரசு சார்ந்த அடையாளத்தையும் காணமுடிகின்றது. அத்துடன், தமிழ்க்குடிகள் என இன அடையாளமும் கூர்மை அடைகின்றது. ஆரியத்திற்கு எதிரான தமிழ்த்தேசிய உணர்வுநிலை சிலப்பதிகாரத்தில் கூர்மை பெறுகிறது. பக்தி இயக்கக் காலகட்டத்தில் இவற்றுடன் கூடுதலாகத் தமிழ் சமயஅடையாளங்களையும் பெறுகிறது. மொழி, இனம், நிலம், அரசு, சமயம் என்கிற அடிப்படைகளில் மட்டுமல்லாது, அறிவுமரபிலும் தமிழ் தனித்துவம் மிக்க தமிழாக அடையாளம் காணப்படுகின்றது.

thiruvalluvar 370இந்தியா மற்றும் உலகிலுள்ள பிற சமூகங்களுடன் தமிழர்கள் உறவும் ஊடாட்டமும் கொண்டிருந்தாலும், உலகப்பொது அறிவு மரபிலிருந்தும் இந்திய பொது அறிவு மரபிலிருந்தும் விலகிய சில தனித்த கூறுகள் தமிழர் அறிவு மரபில் துலக்கம் பெற்று விளங்குவதைக் காண முடிகின்றது. தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியத்திலும் இடம்பெற்றுள்ள திணையியம் தமிழரின் ஆதி மெய்யியலாக இன்று அடையாளப்படுவதைக் காணமுடிகின்றது (பாமயன்: திணையியம், தமிழரின் ஆதி மெய்யியல்: 2025). அதேபோன்று, திருக்குறளும் உலகப் பொது அறிவுமரபிலிருந்தும் இந்தியப் பொது அறிவு மரபிலிருந்தும் விலகிய சில தனித்த கூறுகளைப் பெற்றுத் தமிழின் தனிப்பெரும் அடையாளமாக விளங்குவதைக் காண முடிகின்றது. திருக்குறளை ஏனைய இந்திய, உலக நீதி நூல்களோடு ஒப்பிட்டு ஆராய்ந்த தனிநாயகம் அடிகளார், பேராசிரியர் க.த.திருநாவுக்கரசு ஆகியோரின் ஆய்வுகள் இதனை மெய்ப்பிக்கின்றன.

இறை : தனிநெறியும் பொதுநெறியும்

உலகிலுள்ள ஒவ்வொரு சமயமும் ஒரு குறிப்பிட்ட இறைவனைத் தலைமையாகவும் ஆதாரமாகவும் கொண்டு தமது சமயத்தைக் கட்டியெழுப்பியுள்ளன. இந்திய வைதீக மரபில் இந்திரன், பிரம்மன், சிவன், விஷ்ணு ஆகிய பெருந்தெய்வங்களின் அடிப்படையில் தனித்தனியான சமய நெறிகளும் மதங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. இவையல்லாது காணாபத்யம், சாக்தம் ஆகியவற்றை உட்படுத்தும் அறுவகை சமயமரபும் உள்ளது. தமிழ் மரபில் பக்திக் காலத்திற்கு முன்னர்வரை ஒரு குறிப்பிட்ட தெய்வத்தை உயர்த்திப் பிடிக்கும் சமய அரசியல் இல்லை. ஆயின், சமயத் தத்துவங்கள் சார்ந்த விவாதங்கள் நடைபெற்றுள்ளன. சங்க இலக்கியத்தில் நில அடிப்படை சார்ந்த தெய்வ வழிபாடுகள் மட்டுமின்றி, மரங்களையும் நடுகல்லையும் வழிபடுகின்ற கொற்றவை முதலான தாய்த்தெய்வங்களையும் வழிபடுகின்ற, இனக்குழு வழிபாட்டு முறையை - நாட்டார் தெய்வ நெறியைக் காண முடிகின்றது.

சங்க இலக்கியமான மதுரைக்காஞ்சி அருகக்கோட்டம், இந்திரக்கோட்டம், முருகனுக்குரிய வேற்கோட்டம், அந்தணர்களின் வேதம் ஓதும் வேள்விக்கூடங்கள், பௌத்தப்பள்ளிகள், சமணப்பள்ளிகள், சிவன், திருமால் வழிபாடுகள் மதுரைநகரில் நிறைந்திருப்பதைக் காட்டுகிறது. பல சமயங்களும் பல இறை வழிபாடும் கொண்ட பல்பண்பாட்டு நகரமாக சங்ககால மதுரை விளங்கியிருப்பதைக் காணமுடிகின்றது. எல்லா தெய்வங்களையும் போற்றுகின்ற பல்சமய நெறி/ சமயப்பொதுநெறி பழந்தமிழரிடத்தில் மேலோங்கியிருந்திருக்கிறது.

திருக்குறளிலும் இச் சமயப் பொதுநெறியையே காணமுடிகின்றது. திருக்குறளின் கடவுள் வாழ்த்து எந்தவொரு குறிப்பிட்ட தெய்வத்தையும் வாழ்த்தவில்லை. குறிப்பிட்ட சமய அடையாளம் கொண்ட கடவுள் பெயர்கள் அதில் இல்லை. அறவாழி அந்தணன், வாலறிவன், எண்குணத்தான், தாமரைக்கண்ணான், ஆதிபகவன், மலர்மிசை ஏகினான், பொறிவாயில் ஐந்தவித்தான் என இறைவனின் இயல்புகளே சுட்டப்பட்டுள்ளன. இந்த இயல்புகளைத் தத்தமது சமயங்களுக்குரிய கடவுளின் இயல்பாக விளக்கம் செய்வதற்கு இடமுண்டு. ஆனால், வள்ளுவர் சமயப் பொதுநெறியையே போற்றியுள்ளார். இளங்கோவடிகள் சமணர் என்றாலும் சிலப்பதிகாரத்தில் பல்சமய நெறிகள் போற்றப்படுகின்றன. இப்பொது நெறி தமிழ்மரபில் பின்னாளில் திருமூலரிடத்திலும், வள்ளலாரிடத்திலும் மேலும் செழித்து வளர்ந்துள்ளது.

சார்பியல் அறமும் பொதுஅறமும்

உலகிலுள்ள அறநூல்கள் யாவும் குறிப்பிட்ட சமயம், தத்துவம், நிலம் சார்ந்தே தமது அறக்கருத்துகளை முன்வைத்துள்ளன. ஆனால், வள்ளுவரோ எவ்வித சார்புமின்றி உலகப் பொதுநெறியைப் போற்றியுள்ளார். மனுதர்மம் சுவதர்ம (தன்னறம்), சனாதன தர்மா (பாலினம், சாதிய நிலைகள் சார்ந்தது), சாதாரண தர்மா என மூன்று தர்மங்களைப் பேசுகின்றது. மனுதர்மம் சூத்திரர்களுக்கும் பெண்களுக்கும் கல்வியையும் சமத்துவத்தையும் இல்லாமல் செய்தது. இவர்கள் வேதம் படிப்பது / கேட்பது தண்டனைக்குரிய குற்றம். “சூத்திரனுக்கு ஒருநீதி தண்டச் சோறுண்ணும் பார்ப்புக்கு ஒரு நீதி” என்று பாரதி சொன்னதற்கேற்ப மனுதர்மம் பார்ப்பனருக்கு விஷத்தையும் சூத்திரனுக்குத் தூக்கையும் தண்டனை முறைகளாக முன்மொழிந்தது. சாணக்கியருடைய அர்த்த சாஸ்திரம், ராஜ (அரச), பிரஜா (மக்கள்), ஆசிரம(பிரம்மச்சரியம் முதலானவை), வருண (சாதி) என கூறுபடுத்தப்பட்ட நான்கு தர்மங்களைப் பேசுகிறது. இலட்சிய நகர அரசுகளைக் கனவு கண்ட பிளாட்டோவும் அரிஸ்டாட்டிலும் காவலர்(பொன்), படைவீரர் (வெள்ளி), தொழிலாளர் (இரும்பு) என மூவகை வகுப்புகள் சார்ந்து ஒவ்வொரு வகுப்பினருக்கான தனிப்பட்ட அறத்தையும் ஒழுக்கத்தையும் பேசியுள்ளனர். மேலும், அடிமைமுறையை ஆதரித்த இவர்கள் பார்வையற்றவர்களையும் கூனர்களையும் குறைப்பிறவியினரையும் விலங்குகளுக்கு இரையாக்கும் வழக்கத்தை ஆதரித்தனர். ஆனால், வள்ளுவர் மேற்குறிப்பிட்டோரின் வருண/ வகுப்புப் பாகுபாடுகளை,

“மேலிருந்தும் மேலல்லார் மேலல்லார் கீழிருந்தும்

 கீழல்லார் கீழல் லவர்.” (973)

என்று நிராகரிக்கிறார்.

 “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” (972) என்கிறார். மேலும், “பொறியின்மை யார்க்கும் பழியன்று”(618)

என்கிறார்.

பிளாட்டோ , அரிஸ்டாட்டிலின் அறம் கிரேக்க அரசு சார்ந்தது. மனுதர்மம் பிராமணர்கள் வாழும் பிராமண மேலாதிக்கம் உள்ள ‘ஆரிய வர்க்கத்திற்கு’ மட்டும் உரியது. மட்டுமின்றி, “ஆரியர்கள் வாழ்வதற்குத் தகுதியற்ற இடம் திராவிட மக்கள் வாழும் நாடு எனவும் உண்மையான பிராமணன் யாரும் அங்கு வாழ மாட்டான் எனவும் மனுதர்ம சாத்திரம்” தெரிவிக்கின்றது. (மேற்கோள்: க.த.திருநாவுக்கரசு:2025 :ப.47) ஆனால், தமிழர் அறமோ இன, மொழி, நில எல்லைகளைக் கடந்தது. “யாதும் ஊரே யாவரும் கேளிர்”(புறம்.192) என்கிற சங்க மரபை அடியொற்றி “யாதானும் நாடாமால் ஊராமால்”(397) என வள்ளுவரும் உலகளாவிய பொதுநெறியை உலக மானுடர் அனைவரையும் உட்படுத்தும் நேச அரசியலை முன்வைக்கிறார். திருக்குறளை இந்திய அறவியல் நூல்களின் சிந்தனை மரபோடு ஒப்பிட்டுக் காட்டிய தனிநாயக அடிகளார் திருக்குறளின் தனித்தன்மையை - தமிழரின் அறத்தைப் பின்வருமாறு வேறுபடுத்திக் காட்டுகிறார்.

பகவத் கீதை – சமஸ்கிருதம் – இறையியல் தன்மை கொண்டது; பல மரபுகளை ஒன்றிணைத்தது.

தம்மபதம் – பாலி – புத்த துறவியலின் ஸ்மரண மரபு

திருக்குறள் – தமிழ் – மனிதநேயம் சார்ந்தது; கவிதை மரபைப் பிரதிநிதித்துவப்படுத்துவது.

கௌடில்யம், மனுதர்மம் முதலான வைதீக நூல்கள் ஒழுக்கத்தோடு தண்டனையும் இணைத்துப் பேச (வருணத்திற்கேற்ற தண்டனை) வள்ளுவர் பொது நீதியையே பேசுகின்றார். தண்டனை குறித்து எவ்விடத்திலும் பேசவில்லை.

மனித நேயமும் மனித சமத்துவமும்

எந்தப் படைப்பாளியும் தான் வாழும் காலச்சூழலுக்குக் கட்டுப்பட்டவனே. ஆனால், சிலர் மட்டும் காலத்தின் கட்டுகளை உடைத்து விஞ்சி நிற்கின்றனர். அந்த வரிசையில் வள்ளுவரும் நிற்கிறார். திருக்குறள் தோன்றிய தமிழ்ச்சூழலில் அவைதீக சமயங்களான சமண பௌத்தத்தின் கருத்துநிலைகள் செல்வாக்குப் பெற்றிருந்தன. இதனை வள்ளுவரின் ஊழ் பற்றிய கருத்து நிலையில் தெளிவாகக் காணலாம். ஆனால், “ஊழிற் பெருவலி யாவுள”(380) என்று கூறிய வள்ளுவரே ஆள்வினையுடைமை என்ற அதிகாரத்தில்,

“ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்

தாழாது உஞற்று பவர்” (620)

என்று அவைதீக சமயத்தின் வினைக்கோட்பாட்டை முறியடித்து மனித முயற்சியை முன்னிறுத்துகிறார்.

 வள்ளுவரின் அறக்கோட்பாட்டில் பகுத்துண்டு பசிப்பிணி போக்குதலும், ஈதலுமே முதன்மை பெறுகின்றன. இதன்மூலம் மனிதநேயத்தையும் மனித சமத்துவத்தையும் வலியுறுத்துகிறார். பிற உயிர்களின் துன்பத்தை அறிகின்றவனே மனிதனாகத் தகுதியுடையவன் என்கிறார். அறியாதவனைச் ‘செத்தவன்’ என்று அறிவிக்கிறார். இதனை, “ஒத்த தறிவான் உயிர்வாழ்வான்”(214), என்னும் குறளின் மூலம் உணரலாம். உயிரின் அடிப்படை உணர்வாக பிற உயிர்களை நேசிக்கும் அன்பை வள்ளுவர் முன்மொழிகிறார். ‘அன்பின் வழியது உயிர்நிலை’(80) என்பது வள்ளுவர் தத்துவம். இத்தகைய சக மனிதனை நேசிக்கும் மனிதநேயம் குறித்த பேச்சு மனுதர்மத்திலோ கௌடில்யத்திலோ இல்லை. அவை மனிதனின் கடமைகள், ஒழுக்கங்கள், நடத்தைமுறைகள் – விதிகள், உயர் வகுப்பினரின் உரிமைகள் ஆகியவற்றையே பேசுகின்றன.

வள்ளுவரின் மனிதநேயம் குறித்த கருத்துதான் இருபதாம் நூற்றாண்டில் வள்ளலாரிடத்தில் “எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும் தம்முயிர்போல் ஒத்துரிமையுடையவராய்” என்று ஜீவகாருண்ய ஒழுக்கமாய் –உயிர் நேயமாய்- சன்மார்க்கமாய் விரிவடைகிறது.

திருக்குறளில் வீடுக்கு இணையாக ஈகையும் பிற உயிரின் துன்பம்கண்டு அஞ்சுகிற தன்மையுமே வலியுறுத்தப்படுகின்றது.

“அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்

திறந்தெரிந்து தேறப் படும்” (501)

இக்குறளில் இடம்பெறும் உயிரச்சம் என்பதனை பிற உயிர்களின் துன்பம் கண்டு அஞ்சுவது, பிற உயிர்களுக்கு இரக்கம் காட்டுவது என்று பொருள் கொண்டால் பிழையில்லை.

வைதீகம் மற்றும் பிற சமயங்களில் ஈகை என்பது புண்ணியம் சேர்ப்பதற்கானது, மறுமையை நோக்கியது. ஆனால், தமிழ் மரபில் ஈகையும் பகிர்ந்துண்ணலும் பசிப்பிணி போக்குதலும் இயல்பான மனித நடவடிக்கை, மனிதநேயம் சார்ந்த உலகியலுக்கு உரியது; இனக்குழு வாழ்க்கைக்கு உரிய அறம். இதனை முடமோசியாரின் ஆய் பற்றிய பின்வரும் பாடலின்வழி உணரலாம்.

“இம்மைக்குச் செய்தது மறுமைக்கு ஆம் எனும்

அறவிலை வணிகன் ஆஅய் அலன்” ( புறம் .134)

இதே கருத்து பின்வரும் குறட்பாவிலும் எதிரொலிக்கிறது.

“நல்லாறு எனினும் கொளல்தீது மேல்உலகம்

இல்லெனினும் ஈதலே நன்று” (222)

முடிவுரை

சீனர்களின் நவீன ஒப்பிலக்கியக் கொள்கையான வேறுபாட்டுக் கொள்கை (Variation Theory) ஒப்பிலக்கிய ஆய்வில் இரண்டு படைப்புகளுக்கிடையில் காணப்படும் ஒற்றுமைகளைக் காட்டிலும் வேற்றுமைகளை உயர்த்திப் பிடிக்கச் சொல்கிறது. அதன்வழி குறிப்பிட்ட நாகரிகத்தின் தனித்துவத்தில் கருத்தூன்றச் சொல்கின்றது. தன்னை முன்னிறுத்தாது உலக மானுடப் பொதுமையில் கரைந்து விடுவதுதான் பழந்தமிழரின் மனோபாவத்தைத்தான் திருக்குறளும் காட்டுகிறது. திருக்குறளில் எந்த இடத்திலும் தமிழ் என்ற சொல் இல்லை. நூலாசிரியர் பெயரும் இடம்பெறவில்லை. திருக்குறள் இயல்பிலேயே உலக அறநூல்களிலிருந்து பல அடிப்படைகளில் வேறுபட்டுத் தமிழர் பண்பாட்டு மரபின் தனித்துவத்தை எடுத்துக்காட்டும் தனி அடையாளமாக விளங்குகிறது.

துணைநூற்பட்டியல்

1.      அமுதனடிகள் (தொ.ஆ.,), தனிநாயக அடிகளாரின் படைப்புகள், பூம்புகார் பதிப்பகம்.

2.      ஆனந்தகுமார். பா, தனிநாயக அடிகளாரின் ஒப்பிலக்கியச் சிந்தனைகள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.

3.      சாமிநாதையர்.உ.வே.,(உ.ஆ.,), புறநானூறு மூலமும் பழைய உரையும்,டாக்டர் உ.சே.சாமிநாதையர் நூல்நிலையம்.

4.      சிற்பி பாலசுப்ரமணியம் (உ.ஆ.,), திருக்குறள், தாமரை பப்ளிகேஷன்ஸ்.

5.      பரிமேலழகர் (உ.ஆ.,), திருக்குறள், பூம்புகார் பதிப்பகம்.

6.      பாமயன், திணையியம் தமிழரின் ஆதி மெய்யியல், சிவசங்கரி பதிப்பகம்,சிவகாசி, 2025

7.      திருநாவுக்கரசு. க.த., திருக்குறளும் இந்திய அறநூல்களும், மணியகம் வெளியீடு.

பா.ஆனந்தகுமார், தலைவர், தமிழ்த்துறை, காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.