நாஸ்திகன்:- “பிரிட்டிஷாரிடமிருந்து இந்தியாவை விடுதலை செய்விக்க வேண்டும்” என்று பேசுகிற, பாடுபடுகிற தேசாபிமானிகள், தேசியவாதிகள், தேச பக்தர்கள் ஆகியவர்கள் ஆஸ்திகர்களா? நாஸ்திகர்களா?

ஆஸ்திகன்:- ஆஸ்திகர் என்றால் என்ன?periyar 3333நா:- சர்வ சக்தியும் சர்வ வியாபகமும் உள்ள சர்வேஸ்வரன் ஒருவன் உண்டு. உலகம் முழுமையும் உண்டாக்கி ஆண்டு வருகிறான். அவ(னது சித்தம்) னன்றி ஒரு அணுவும் அசையாது என்கின்ற முடிவை உடையவர்கள்.

ஆ:- நாஸ்திகர் என்றால் என்ன?

நா:- மேற்கண்ட முடிவை ஒப்புக் கொள்ளாதவர்கள். ஆகவே “பிரிட்டிஷ் ஆதிக்கத்தை ஒழிக்க வேண்டும்” என்ற தேச பக்தர்கள் முதலியவர்கள் ஆஸ்திகர்களா? நாஸ்திகர்களா?

ஆ:- பிரிட்டிஷ் ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்கின்றவர்களுக்கும் ஆஸ்திக நாஸ்திகத்துக்கும் என்ன சம்பந்தம்?

நா:- சர்வ சக்தி, சர்வ வியாபகம், சர்வஞ்ஞத்துவம் உள்ள கடவுளின் திருச்சித்தமில்லாமல் இந்தியாவுக்கு பிரிட்டிஷ் ஆதிக்கம் வந்திருக்க முடியுமா?

ஆ:- ஒரு நாளும் வந்திருக்க முடியாது.

நா:- அப்படிப்பட்ட கடவுளுக்கு பிரிட்டிஷ் ஆதிக்கம், இந்தியாவுக்கு மிக மிக இன்றியமையாத அவசியம் என்ற முடிவேற்படாமல் திருச்சித்தம் ஏற்பட்டிருக்குமா?

ஆ:- ஏற்பட்டிருக்காது.

நா:- அப்படியானால் சர்வ சக்தி, சர்வ வியாபகம், சர்வஞ்ஞத்துவம் உள்ள ஒரு கடவுளுடைய முடிவுக்கும் திருச்சித்தத்திற்கும் விரோதமாக இந்தியாவில் இருந்து பிரிட்டிஷாரின் ஆதிக்கம் ஒழிந்துவிட வேண்டுமென்று கருதுவதும் முயற்சிப்பதும் கடவுளுடைய சர்வசக்தி........... முதலியவைகளை நம்பாமலா அல்லது கடவுளின் அப்படிப்பட்ட சக்திகளுடன் எதிர்த்து போட்டி போட்டுப் பார்க்கவா?

ஆ:- கடவுளின் சர்வ சக்தியை நன்றாய் அறிந்து தினமும் கடவுளிடம் பேசும் மகாத்மா காந்திகூட இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியை ஒழிக்க வேண்டுமென்று தானே கருதுகிறார்.

நா:- அது வேறு சங்கதி. உம்மைக் கேட்டதற்கு நீர் பதில் சொல்லும்.

ஆ:- எனக்கு ஒன்றும் தோன்றவில்லை. காந்தியார் வரப் போகிறார். அவரைக் கேட்டு நான் பதில் சொல்லுகிறேன்.

நா:- உன் சங்கதியே அதாவது நீ நாஸ்திகனா? ஆஸ்திகனா? என்கின்ற சங்கதியே உனக்குத் தெரியாமல் திண்டாடுகிற நீ, சுயமரியாதைக்காரர்கள் நாஸ்திகர்கள் என்று சொல்லுவது மடத்தனமும் போக்கிரித்தனமுமான காரியமா இல்லையா? அல்லது இவ்விரண்டிலொன்றா இல்லையா? ஆதலால் இந்த சங்கதிக்கு சரியான பதில் தோழர் காந்தியிடமிருந்தோ அல்லது அவரது பாட்டனாரிடமிருந்தோ தெரிந்து வந்து எனக்குச் சொல்லுகின்ற வரையில் “சு.ம. காரர் நாஸ்திகர்” என்று எங்காவது, மூலை முடக்குகளிலாவது, சந்து பொந்துகளிலாவது பேசுவாயேயானால் உன்னைப்போல் அயோக்கியன், இழிதகமை உள்ள மனிதன் அற்பன், மக்களை ஏமாற்றி வயிறு வளர்க்கும் சோம்பேறிக் கூட்ட வஞ்சகன் வேறு யாரும் இல்லை என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்.

('சித்திரபுத்திரன்', புரட்சி - உரையாடல் - 17.12.1933)

Pin It