garudaஎங்கள் ஊர் சங்கம்பாண்டி காப்பிக்கடையின் ரசவடை, பக்கடா, சுக்கு காப்பி வகையறாக் களுக்குப் பக்கத்து ஊர்களிலும் மரியாதை உண்டு. சுடுகாட்டு எல்லையில் அவரது கடையிருந்தது. பிணமானவர்கள் எல்லோரும் அவரின் கடையைத் தாண்டித்தான் போக வேண்டும்.

சங்கம்பாண்டி கடை பக்கடாவின் மணம் பாடையிலிருக்கும் பிணத்தை எழுப்பிவிடும்; அதனால் வேகமாகப் போய்விடுங்கள் என்று பாடை தூக்குபவர்களைப் பார்த்து ஊர் மொறையாள் பிள்ளை (ஊர்க்குற்றேவல்காரர்) சொல்லுவார் என்ற கிண்டலான வழக்காறு உண்டு.

சங்கம்பாண்டி எப்போதுமே தன்னைக் காப்பிக்கடைக்காரராக அடையாளப் படுத்தமாட்டார். காவடிக்காரர், காவடி தூக்குபவர் என்றுதான் சொல்லுவார். திருச்செந்தூர், குமாரகோவில் மருங்கூர் என முருகன் கோவில்களுக்கு காவடி எடுப்பவர்கள் முக்கியமாக நேர்ச்சைக் காவடி எடுப்பவர் சங்கம்பாண்டியிடம் தேதி வாங்கிக் கொள்வார்கள்; முன் பணம் கொடுப்பார்கள்.

அலங்கரிக்கப்பட்ட காவடியைச் சுமந்து ஊரைச் சுற்றி வருவது, முருகன் கோவில்களுக்கு நடந்தேபோவது எல்லாம் அவருக்கு அத்துபடி. நான் ஊரை விட்டுக் குடிபெயர்ந்தபின் எல்லாம் கனவாகிவிட்டது. ஒருநாள் சங்கம்பாண்டி என் வீடு தேடி வந்தார். அப்போது எண்பதைத் தாண்டிவிட்டார்.

எனக்கு அவரை அடையாளம் தெரியவில்லை. அவரே என் அப்பாவின் பெயரைச் சொல்லி என்னை அழைத்தார். அவருக்குத் துணையாக 17 வயதுப் பேர்த்தி வந்திருந்தாள். அவளுக்கு என் கல்லூரியில் சேரவேண்டும். வந்த விஷயத்தைப் பேசிமுடித்துவிட்டு அவர் வீட்டிலிருந்து விடைபெறும்போது வள்ளியூரில் இன்னொரு பேத்தி வீட்டிலிருக்கிறேன் வாருங்கள் என்றார்.

நான் அவரை மறுபடியும் திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் சந்திப்பேன் என்று நினைக்கவில்லை. ‘ஐவர் ராசாக்கதை’யின் நாயகனான குலசேகரப்பாண்டியன் கோட்டை கட்டி வாழ்ந்த இடம் வள்ளியூர். அந்தக் கதைப்பாடல் தொடர்பான செய்திகளைச் சேகரிக்கப் போனபோது வருவாய்த்துறை காவலர், பண்டாரம் சாதி ஆள் ஒருவரைச் சந்தித்தேன். அவர் வீட்டில் சங்கம்பாண்டியைப் பார்த்தேன்.

தமிழக வரலாற்றில் பிற்காலப் பாண்டியர்கள் 15ஆம் நூற்றாண்டிற்குப் பின் திருநெல்வேலி மாவட்டத்தில் தென்காசி, கயத்தாறு, வள்ளியூர் என சில ஊர்களுக்குக் குடி பெயர்ந்தார்கள் எனப் பொதுவாகச் சொல்வது மரபு. ஆனால் இது பற்றிய விரிவான வரலாறு வரவில்லை. தென்காசிப் பாண்டியர்கள் பற்றிய நூலை மு. அருணாசலம் எழுதியிருக்கிறார்.

வள்ளியூரில் பாண்டியர்கள் இருந்தனர் என்பதற்குக் கதைப் பாடல்களில் சான்று உண்டு. குலசேகரப் பாண்டியன் என்பவன் வள்ளியூரில் கோட்டை கட்டினான்; அவனுக்குத் திருமணம் செய்து வைக்க ஆசைப்பட்டாள் அவனது அம்மா. அதற்காக பண்டாரங்கள் சிலபேரின் உதவியை நாடினாள்.

நல்ல ஓவியனின் உதவியால் குலசேகரனின் படத்தை வரையச் செய்தாள். பண்டாரங்கள் சிலரை அழைத்து இந்த ஓவியத்தை தேசமெங்கும் கொண்டு செல்லுங்கள் என்றாள்.

அவர்கள்

தென்றிசைக்கும் மண்டலமும் தொட்டார் வளநாடுமிட்டு

சோழமண்டலமும் சென்று சிறந்த புகழ்நாடுமிட்டு

மன்னர்கள் வடிவை எல்லாம் வையாகாமல் பாடிவிட்டு

இரவினிலே ஊரார்முன் கூடிநின்று கதைபேசி

. . . . . . . செல்லுகிறார்கள்.

நான் இந்தப் பகுதியில் பண்டாரங்கள் படம் கொண்டு சென்ற நிகழ்ச்சி பற்றிக் கேட்டபோதுதான், வருவாய்த் துறைக் காவலர், எங்க சாதிக்கு அதுதானே தொழில். காவடியில் படம் தூக்கிப் பழக்கம்; மாமாவிடம் கேட்டால் விரிவாகச் சொல்லுவார் என்றார்.

எனக்கு அவர் ‘மாமா’ என்றது சங்கம்பாண்டியை என்பது தெரியாது. மாமாவைப் பார்க்கலாமா என்றேன், இங்கேதான் இருக்கிறார்கள் என்றார். அழைத்தார். சங்கம்பாண்டி வந்தார். என்னைப் பார்த்ததில் அவருக்கு சந்தோஷம். அவரது பேத்தியின் வீடு அது என்று தெரியாமலேயே நான் போயிருக்கிறேன்.

சங்கம்பாண்டியிடம் நான் எதிர்பார்க்காத தகவல்கள் கிடைத்தன. களஆய்வில் எதையோ தேடிப்போக வேறொன்று கிடைப்பதை பலமுறை அனுபவத்தில் கண்டிருக்கிறேன்.

நாஞ்சில் நாட்டில் படக்காரனின் வரவு 19ஆம் நூற்றாண்டின் கடைசியில் நின்றுவிட்டது. முதல் உலகப் போரின்போது ஒன்றுரெண்டுபேர் நடமாடியிருக்கிறார்கள். நான் பரமசிவராவின் அப்பா கோபாலராவை முதலிலும் கடைசியுமாகச் சந்தித்தபோது படக்காரர்கள், இயற்கைச் சாயத்தைத் தயாரிக்க எங்களிடம் சேட்டுக் கொள்ளுவார்கள் என்றார். அதை விரிவாகத் தெரிந்துகொள்ள கேட்பதற்கு என்னிடம் அப்போது கேள்விகள் இல்லை

இதன் பிறகு படக்காரரைப் பற்றி மறந்து விட்டேன். தமிழறிஞர் கே. என். சிவராஜபிள்ளையின் மொத்த புத்தகங்களைத் தேடியபோது நாஞ்சில் வெண்பா என்ற சிறுநூல் கிடைத்தது. கே. என். எஸ். தன் சமகாலத்திலோ அதற்கு முன்போ தான் பார்த்த விஷயங்களை வெண்பாவில் எழுதியிருந்தார். அதில் படக்காரனைப் பற்றிய பாட்டும் உண்டு.

சங்கம்பாண்டிக்கு தலைகால் புரியவில்லை, என்னைப் பார்த்ததும் மகிழ்ச்சி கரைபுரண்டது. பழைய விஷயங்களைப் பேச ஆரம்பித்தார். நான் கொஞ்சம் கேட்டுவிட்டு மெல்ல படக்காரனுக்குத் திருப்பினேன்.

சரி சரி என் தாத்தா சிந்தாமணிப்பண்டாரம் சொல்லியிருக்கிறார். படக்காரர்களும் பண்டாரம் தான். சங்கூத்துப் பண்டாரம் இன்னொரு வகை, அவர்களெல்லாம் நாடோடியாகவே காலத்தைக் கழிச்சிட்டாங்க. இப்போதான் சாதி எல்லாம் கலந்தாச்சே என்றார் அலுப்புடன். மறுபடியும் நான் திருப்பினேன். அவர் பேச ஆரம்பித்தார்.

படக்காரன் காவி உடுத்திருப்பார். கழுத்தில் பெரிய காவடி இருக்கும். அதைப் பார்த்தால் அதிக எடையுள்ளது போல் தோன்றும். உண்மையில் அது கனம் குறைந்தது. காவடியின் உள்ளேயும் வெளியேயும் நிறைய படங்கள் இருக்கும்.

இந்த ஓவியங்கள் துணியில் வரையப்பட்டவை; இயற்கையாகக் கிடைத்த பொருட்களாலும் மூலிகைச் சாறுகளாலும் வரையப்பட்டவை. ஒவ்வொரு படத்தின் கீழும் படத்தின் பெயர் இருக்கும். எல்லா படங்களுமே நரகத்தின் காட்சிகள்தாம். அதர்மம் செய்பவர்கள் நரகத்தில் படும் அவலக்காட்சிகளே படங்களின் மையம்.

படக்காரனின் காவடி, பார்ப்பதற்கு பிரமாண்டமாய் எடை கூடியதாய் தோற்றமளித்தாலும் உண்மையில் எளிதாய் தூக்க முடியுமாம். படக்காரனின் இடது தோளில் லாவகமாய் அது நிற்கும். ஒரு ஊரில் 7 முதல் 10 நாட்கள் வரை படக்காரன் இருப்பான். அந்த ஊரில் பாழடைந்த மண்டபம், பொது மண்டபம், சத்திரம் எதாவது ஒரு இடத்தை தேர்ந்தெடுப்பார். அந்த இடத்தில் சோறு பொங்குவதற்குரிய ஏற்பாடுகளைச் செய்து கொள்ளுவார். ஊர் எல்லையில் உள்ள நாட்டார் தெய்வக் கோவிலில் அவர் தங்குவதற்கு யாரும் மறுப்பு சொல்ல மாட்டார்கள்.

நாஞ்சில் நாட்டுக் கிராமங்களுக்கு ஒரு வருஷத்தில் இரண்டோ மூன்றோ முறைதான் படக்காரர் வருவார். ஒருவர் செல்லும் கிராமத்துக்கு இன்னொரு படக்காரர் போக மாட்டார். சில சமயம் நான்காம் முறை வரலாம். கன்னிப் பூ, கும்பப் பூ என்றும் இரண்டு அறுவடைக் காலங்களில் வரும். சித்தோசி, ராப்பாடி போன்ற யாசகர்களைப் போலல்லர் படக்காரர். இவருக்கென்று பருவமோ, காலமோ கிடையாது.

படக்காரர் ஊரின் முச்சந்திகளில் கடைவீதியில் சந்தையில் மக்கள் கூடும் இடங்களில் காவடியை சுமந்துகொண்டே பாடுவார். இவர் பாடுவதைக் கேட்க என்றே கூட்டம் கூடும். பெரும்பாலும் வயதானவர்கள் இவரின் பாட்டுகளை நின்று கேட்பார்கள். சித்தர் பாடல்களில் பாம்பாட்டிச் சித்தரையும் சிவவாக்கியரையும் ராகத்துடன் பாடுவார்கள். சித்திர புத்திரநைனார் அம்மானை நூலில் பின் இணைப்பாக உள்ள அமராவதிச் செட்டிச்சியின் கதையில் சில பகுதியையும் பாடுவார். அமராவதியை கிங்கிலியர் செக்கில் இட்டு துன்புறுத்தும் பகுதியைத் திரும்பத் திரும்பப் பாடுவார். இடையிடையே சில வாய்மொழிப் பாடல்கள்; அவை நிலையாமை, நரகம் பற்றிப் பேசுவனவாய் இருக்கும்.

படக்காரர் காவடியுடன் தெருவில் பாடிச் செல்லும்போது யாசிப்பதில்லை. ஒரு தெருவில் பாடி முடித்துவிட்டு அடுத்த தெருவின் ஆரம்பத்தில் நின்றுகொண்டு பாடுவார்; இதற்குள் நடுப்பகல் ஆரம்பித்து விட்டால் காவடியுடன் தான் வசிக்கும் இடத்திற்குப் போய் விடுவார்; பொழுது சாய்ந்ததும் யாசகத்துக்கு வருவார். துணிப்பையில் யாசகப் பொருட்களை வாங்கிக் கொள்ளுவார்.

படக்காரர் யாசகமாகப் பெறுவது அரிசியும் தேங்காயும் தான். சில சமயம் நாட்டுக் காய்கறியும் பணமும் கிடைக்கும். பண்டாரம் சுத்த சைவம்; அவரே சமைப்பார். யார் வீட்டிலும் சமைத்த உணவை யாசகமாக வாங்க மாட்டார்; கொடுப்பதும் இல்லை. இவர் பிராமணர் வீதிகளுக்கு யாசிக்கச் செல்லமாட்டார்.

படக்கார சங்கம்பாண்டிப் பண்டாரம் இரண்டு வேளைதான் சாப்பிடுவார். முந்தியநாள் பொங்கிய சாப்பாட்டை தண்ணீர் விட்டு பழைய சாதமாக்கிக் காலையில் சாப்பிடுவார். பின் மாலை குழம்பு துணைக்கறிகளுடன் இரவு 7 மணிக்குச் சாப்பாடு. படக்காரர் இரவு சாப்பாட்டை முடித்துவிட்டு எட்டுமணிக்கு ஊர்க்கோவிலின் முன் வாசலுக்கு வருவார்.

பெரும்பாலும் வயதானவர்கள் ஊர்க்கோவில் வாசலில் கூடியிருப்பர். படக்காரர் தன் பயண அனுபவத்தை, கதையாகச் சொல்லுவார். முக்கியமாக தான் சென்ற ஊரில் நடந்த விழா, பிரமுகரின் இறப்பு, பிறப்பு, இயற்கை அழிவு, பயிர்களைத் தாக்கிய நோய் விபரம் எனப் பல விஷயங்களைச் சொல்லுவார். அந்த ஊர் விஷயங்களையும் கேட்டுத் தெரிந்து கொள்ளுவார்.

படக்காரன் ஊர் விவகாரங்களைப் பற்றி பேசும்போதே கருடபுராணக் கதையையும் கலந்து சொல்லுவார். படக்காரரின் காவடியில் இருக்கும் படங்களும் கருடபுராணத்தில் சொல்லப்படும் நரகங்களின் படம்தான். கருடபுராணச் செல்வாக்கு நாட்டார் வழக்காற்றில் தத்துவார்த்த ரீதியாகப் பரவிக் கிடந்தது என்பதற்கு படக்காரனின் காவடி ஒரு சான்று.

சித்திரை மாத முழுநிலவில் சித்திரைகுப்தன் அம்மானையைப் படிப்பது; விரதம் இருப்பது என்னும் வழக்கம் இப்போதும் நடைமுறையில் உள்ளது. சித்திரகுப்தன் உயிர்களின் பாவ புண்ணியங்களைப் பதிவு செய்பவன். இந்திரனின் மகன். இவனைப் பற்றிய அம்மானை புகழேந்திப் புலவரின் பெயரில் உள்ளது.

சித்திரகுப்தன் அம்மானை கருடபுராணச் செல்வாக்குடையது. மார்க்கண்டன் தவசு வில்லுப்பாட்டிலும் சித்திரகுப்தன் வருவான். மரணப் படுக்கையில் வைகுந்தம் அம்மானை படிப்பது, பதினாறாம் நாள் இறப்புச் சடங்கில் கர்ணமோட்சம் கதை படிப்பது அல்லது தெருக்கூத்து பார்ப்பது என்னும் நாட்டார் மரபு கருடபுராணச் செல்வாக்குடையவைதாம்.

சித்திரகுப்தன் பற்றிய அம்மானையின் பின்னிணைப்பாக அமராவதி அம்மானை உள்ளது. அமராவதி என்னும் செட்டிச்சி தான தர்மங்கள் செய்தவள்; ஆனால் சித்திரபுத்திரரின் நோன்பை உதாசீனம் செய்தாள். அதனால் நரகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டாள். கொடுமைப்படுத்தப்பட்டாள். ஆனால் நரகத்தின் கொடுமையோ கஷ்டமோ அவளைப் பாதிக்கவில்லை. வேறுவழியில்லாமல் அவள் விடுவிக்கப்பட்டு அடுத்த பிறவியில் நயினார் நோன்பு நோற்க அறிவுறுத்தப்படுகிறாள்.

இந்தக் கதைகள் எல்லாவற்றிலும் கருடபுராணச் செல்வாக்கு உள்ளது. கருடபுராணம் வடமொழியில் அமைந்த 18 புராணங்களில் 17ஆம் புராணமாகக் கருதப்படுவது. இது இரண்டு காண்டங்களும் 19000 பாடல்களும் கொண்டது.

முதல்காண்டம் பூர்வ கந்த காண்டம், இதில் வானியல், மருத்துவம், இலக்கணம் நவரத்தின சோதனை எனப் பல விஷயங்கள் சொல்லப்படுகின்றன. இரண்டாம் காண்டம் உத்திர காண்டம். இதில் இறப்பிற்குப் பின்னர் உள்ள நிகழ்வுகள் வருகின்றன. விஷ்ணு ஒருமுறை கருடனின் மேல் உலகைச் சுற்றி வருகிறார். அப்போது கருடன் இறப்பிற்குப் பின்னர் மனிதன் என்ன ஆகிறான் என்று கேட்கிறான். அதற்கு விஷ்ணு விரிவாகப் பதில் சொல்லுகிறார். இது உத்திரகாண்டச் செய்தி.

விஷ்ணு - கருடன் உரையாடலே கருடபுராண உத்திர காண்டச் செய்தி. நரகங்கள் 4 லட்சம் உண்டென்றாலும் முக்கியமானவை 28 என்றும் செய்த பாவத்திற்கு ஏற்ப நரகத்தின் தன்மை அமைந்திருக்கும் என்றும் கருடபுராணம் கூறும்.

கருடன் விஷ்ணுவிடம் ஒருவன் இறந்தபின் என்ன வடிவத்தில் இருக்கிறான் எனக் கேட்கிறான். விஷ்ணு இதற்கு விரிவாகப் பதில் சொல்லுகிறார். இறந்தபின் அடைவது பிரேத வடிவம் (இது பிணம் அல்ல; ஆவி) இறந்தவர் ஆவியாக வடிவம் மாறுவர். இதுவும் செய்த வினைக்கேற்ப இருக்கும்.

பூமியில் வாழும்பொழுது நல்ல காரியங்கள் செய்பவர் வெள்ளைநிறப் புகை வடிவில் ஆவி உருவத்தில் இருப்பர். தீய செயல் செய்து வாழ்ந்தவர்கள் கறுப்பு ஆவியாக அலைவர்; ஆன்மிகவாதிகள் இளம் சிவப்பு ஆவியாக (ஆரஞ்ச் நிறம்) அலைவர். இறந்தவர் உடனே யமலோகம் செல்வர்; 12 நாட்கள் கழித்து இறந்த இடத்திற்கு வருவார்.

இந்தக் கருடபுராணச் செய்திகள் கிராமங்களில் பல்வேறு வடிவங்களில் வழங்குகின்றன. இவற்றிற்குப் படக்காரன், வில்லுப்பாட்டுக் கலைஞன், கணியாள் ஆட்டக் கலைஞன் ஆகியோருக்கும் பங்கு உண்டு. முக்கியமாகப் படக்காரன் நரகம் பற்றிய செய்திகளைச் சுவையாக பாடியிருக்கிறான்; கதைசொல்லியாகச் சொல்லி இருக்கிறான்.

படக்காரன் ஊர் விஷயங்களைப் பேசினாலும் மையம் கருடபுராணமே. இதை வேறுவேறு வடிவங்களில் அவர் சொல்லுவார். இவர்களின் சம்பாஷனை 11 மணி வரை நீடிக்கும். இப்படியான உரையாடல், படக்காரனை யாசகர் என்ற நிலையிலிருந்து அன்னியமாக்கி விடும். படக்காரரும் ஊர்ப் பெரியவர்களை பெரியவரே என்றும் பெண்களை அம்மா என்றும் அழைப்பார்.

படக்காரர் ஊர் மக்களின் உரையாடலின் போது தன் அடுத்த பயணத்தைப் பற்றியும் பேசுவார். அப்போது, அவர் செல்லப்போகும் ஊரில் வசிக்கும் உறவினர்களை விசாரித்ததாகவும் சிலர் சொல்வார்கள். ஒருவகையில் அன்றைய தபால்காரர் மாதிரியும் செயல்பட்டிருக்கிறார்.

ஊர்ப் புறங்களில் படக்காரரின் வரவு 20ஆம் நூற்றாண்டு ஆரம்பத்திலேயே நின்றுவிட்டது. 50களில் வட நாஞ்சில் நாட்டு கிராமங்களுக்கு சித்தோசி, சங்கரன்கானைக்காரர், சாட்டையடிக்காரர், கழைக்கூத்துக்காரர், ராப்பாடி என்னும் கலைஞர்களும் யாசகர்களும் வந்தார்கள். ஆனால் படக்காரர்கள் வரவில்லை.

படக்காரர்களின் வரவு நின்றதற்கு அவர்கள் வேறு சாதியினருடன் மணஉறவு வைத்துக் கொண்டதும் ஒரு காரணம் என்றார் சங்கம்பாண்டி. சிலர் சிறுவியாபாரம், தொழில் எனச் சென்று விட்டனர். சங்கம்பாண்டி தன் தாத்தா சிந்தாமணிப் பண்டாரம் சொன்ன பல விஷயங்களைச் சொன்னார். அவர் சொன்ன பல விஷயங்களில் கருடபுராணம் நாட்டார் வழக்காற்றில் கலந்துள்ளது என்பதும் ஒன்று.

தமிழறிஞர் கே. என். சிவராஜபிள்ளையின் நாஞ்சில் வெண்பாவில் உள்ள பாடல் வருமாறு.

பாதகம் செய்வார் பின்படும்

பாட்டின் பாவனையை

சாதகமாய் ஓர் படத்தில் தாதித்து காதகரை

செக்கிலிட்டு ஆட்டி கூர்செங்கழுவில் மாட்டி தீ

வக்கிலிட வைப்பான் மதித்து

சங்கம்பாண்டி தன் தாத்தா சொன்ன விஷயங்கள் மட்டுமல்ல சில பாடல்களையும் பாடினார்; அவற்றை முழுதும் பதிவு செய்யவில்லை.

பின்இணைப்பு

கருடபுராணம் கூறும் நரகங்களின் பெயர்கள். இந்த 28 நரகங்களில் நடக்கும் செயல்பாடுகள் படக்காரனின் காவடியில் இருக்கும்.

 1. தாமிஸ்ர நரகம்: பிறர் மனைவி விரும்புபவர்; கொள்ளையடிப்பவர் செல்லும் நரகம்.
 2. அந்த தாமிஸ்ரம்: கணவன் அல்லது மனைவியை வஞ்சிப்பவர் செல்லும் நரகம்.
 3. ரௌரவம்: அடுத்தவர் குடும்பத்தை வஞ்சிப்பவன் செல்லும் நரகம்
 4. மகா ரௌரவம்: கொடும்பாவம் செய்பவன் செல்லும் நரகம்
 5. கும்பிபாகம்: உயிர்களை வதைப்பவன் செல்லும் நரகம்.
 6. காலசூத்திரம்: வெறிபிடித்தவன் அலையும் நரகம்
 7. அசிபத்திரம்: அதர்மம் செய்பவன் செல்லும் நரகம்
 8. பன்றிமுகம்: அநியாயமாய் பிறரைத் தண்டிப்பவன் செல்லும் நரகம்
 9. அந்தகூபம்: சித்திரவதை செய்பவன் அடையும் நரகம்
 10. கிருமிபோஜனம்: கிருமிபோல் பிறரைத் துளைத்துப் பாவம் செய்தவன் செல்லும் நரகம்.
 11. அக்கினிகுண்டம்: பலாத்காரத்தால் பிறருடைய சொத்துக்களை பறிப்பவன் செல்லும் நரகம்.
 12. வஜ்ர கண்டகம்: காமவெறி பிடித்து அலைபவர் அடையும் நரகம்.
 13. சான்மலி: உயர்வு தாழ்வு பாராமல் தரங் கெட்டவர்களுடன் கூடியவன் அடையும் நரகம்.
 14. வைதரணி: மிருகம்போல் தகாத உறவுகொள்ள கட்டாயப்படுத்துபவன் அடையும் நரகம்.
 15. பூயோதம்: நல்வழி அன்றி எப்போதும் தீயவழி நடப்பன் செல்லும் நரகம்.
 16. பிராணரோதம்: பிராணிகளைத் துன்புறுத்துபவன் செல்லும் நரகம்.
 17. விசஸனம்: பசுவதை புரிபவன் செல்லும் நரகம்.
 18. லாலாபட்சம்: மனைவியை வற்புறுத்தி மோக இச்சைக்கு அழைப்பவன் செல்லும் நரகம்.
 19. காரமேயாதனம்: கூட்டமாய் குடிமக்களை கொல்லக் காரணமாயிருப்பவன் செல்லும் நரகம்.
 20. அவீசி: பொய்சாட்சி சொல்லுபவன் செல்லும் நரகம்.
 21. பரிபாதனம்: குடிக்கத் தூண்டி கொடுஞ் செயல் புரிபவன் செல்லும் நரகம்.
 22. காரகர்த்தமம்: பெரியோரையும் தீயோரையும் அவமதிப்பவன் செல்லும் நரகம்.
 23. ரசோணம்: சாதுவான பிராணிகளை வதைத் கின்றவன் செல்லும் நரகம்.
 24. ஆலரோதம்: நம்பிக்கை துரோகம் செய்பவன் செல்லும் நரகம்.
 25. தந்தஆகம்: துரோகம் செய்பவன் செல்லும் நரகம்.
 26. வடரோதம்: பிராணிகளை வேட்டையாடுபவன் செல்லும் நரகம்.
 27. பர்யாவர்த்தனகம்: விருந்தினரை உபசரிக்காதவன் செல்லும் நரகம்.
 28. ஆசிமுகம்: அநியாயமாய் சம்பாதிப்பவன் செல்லும் நரகம்.

அமராவதி கதை

அமராவதி கதை 647 வரிகளைக் கொண்ட அம்மானை, சித்திரபுத்திர நயினார் கதை நூலின் பின்னிணைப்பாக உள்ளது. இந்த அம்மானையில் நரகத்தின் கொடுமைத் தன்மை சுவையாக வருணிக்கப்படுகிறது.

முந்நூறு காதம் அகலமுள்ள காட்டூடே

கல்லுங் கறகுங் கார்முள்ளுதான் படவே

கட்டி இழுத்தார்கள் கண்விழிகள் பிதுங்க

செப்புத்தூளோடு சேர்த்துக் கட்டி வைத்தார்

கண்கள் தெறித்துவிழ கன்னத்தில் போட்டான்

அட்டைக்குளத்தில் அழுத்தவே தள்ளிவிட்டார்.

(இப்படியாக நரக வர்ணனை போகும்) இதை முழுவதும் படக்காரன் பாடியிருக்கிறான்.

- அ.கா.பெருமாள்

Pin It