மனித இனம் தோற்றம் பெற்றது முதலே தான் எதற்கெல்லாம் பயந்தானோ அதனை வணங்கும் நிலைக்கு ஆட்பட்டுள்ளான். இயற்கையாக நிகழும் இடி, மின்னல், மழை, புயல், காற்று ஆகிய அச்சம் தரும் ஆற்றலிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளத் துவங்கிய கால முதலே நம்பிக்கை சார்ந்த மரபுகள் இழையோடிள்ளன. மனித இனத்தவரிடையே சமயம் பற்றிய நம்பிக்கை முதன் முதலில் ஏற்பட்டிருக்குமாயின் அது இயற்கைப் பொருள்களின் ஆற்றலில் நம்பிக்கை கொண்டு, அப்பொருள்களை வழிபட்டதன் மூலமே ஏற்பட்டது என்கிறார் ஜெர்மானிய அறிஞர் மாக்ஸ்முல்லர். (பக்தவத்சல பாரதி : 2005: 263)
புராதன கால மனித சிந்தனைகளின் மாறுவேடங்களாகத் தொன்மக் கதைகள் விளங்குகின்றன. புராதன கால மனிதர்கள் இயற்கை ஆற்றல்களான மழை, காற்று போன்றவற்றைப் பற்றிய தங்கள் புரிதல்களைச் சடங்குகளாக வெளிப்படுத்தினர். இச்சடங்கிற்குத் துணை செய்யும் பேச்சுக்களே தொன்மக் கதைகள் என்று ஜார்ஜ் தாம்சனின் கருத்தை எடுத்தாளும் முத்தையா சடங்குகளிலிருந்தே பெருஞ்சமய நெறி உருப் பெற்றதாகக் கருதுகிறார். (முத்தையா: 2013: 77)
தொன்மைச் சமயமானது ஆவி வழிபாட்டிலிருந்தே உருவானது என்கின்றனர் மானிடவியலாளர்கள். ஆவிகளின்பால் ஏற்பட்ட நம்பிக்கையிலிருந்து சமயம் தோன்றியது என்கிறார் டைலர். (பக்தவத்சல பாரதி : 2005: 253) இன்றுள்ள பெருஞ்சமயங்கள் அனைத்தும் ஆவியுலக நம்பிக்கை என்னும் நிலையைக் கடந்தே வளர்ச்சி பெற்று வந்துள்ளன.... ஆவி வழிபாடு என்ற அடிநிலையில் தோன்றிய சமய நம்பிக்கை, அதன் படிமலர்ச்சி நிகழ்வில் இறுதியாக ஒரு கடவுள் வழிபாடு என்ற நிலையை அடைந்தது. (பாரதி: 256: 257)சமயத்தைப் பற்றிப் பேச வந்த துர்க்ஹைம், சமயமானது சமூகம் சார்ந்தது என்றும் சமயத்திற்கான நடத்தை முறைகள், வழிபாட்டு முறைகள், சடங்குகளை, உணர்வுகளை மக்கள் சமூக வாழ்க்கையிலிருந்தே பெற்றார்கள் என்கிறார். (பாரதி : 2005: 264) தமிழர்களின் சமய நம்பிக்கை இன்றும் இடைப்பட்ட நிலையிலேயே உள்ளது. சமயம் என்று தோன்றியது குறித்த ஆராய்ச்சிகளும் முடிந்த முடிபுக்கு வரவில்லை. எனினும், தொல்லியலாளர்களின் முடிவின்படி 70,000 - 10,000 ஆண்டுகளுக்கு முன்னரே இந்நம்பிக்கை வேர்விட்டுள்ளது என்கின்றனர். (பாரதி : 2005: 251)
தமிழகத்தில் மட்டுமல்லாமல் உலகின் பல இடங்களிலும் ஆவி வழிபாடு - பல கடவுள் வழிபாடு - ஒரு கடவுள் வழிபாடு என்ற மூன்று பருவ நிலையிலான படிமலர்ச்சியில் கடவுள் வழிபாட்டினைக் கொண்டுள்ளார்கள். மேலும், இதில் இரண்டு அடிப்படையான போக்குகள் உண்டு. ஒன்று வைதிக நெறி. மற்றொன்று நாட்டார் நெறி. வெகுசன மக்களின் சமய நம்பிக்கையில் தாந்திரீகம் ஒரு முக்கியக் கூறாக உள்ளது. தாந்திரீகத்தில் மதுவும் பெண் தெய்வங்களும் சடங்குகளும் இன்றியமையாதன. வைதிக நெறியின் செல்வாக்கின் காரணமாக சமஸ்கிருத வயமாக்கல் ஏற்பட்டு மதுவுக்குப் பதிலாகப் பால் அந்த இடத்தைப் பெற்றுள்ளது. மதுவின் எச்சமாகவே பால் இடம்பெறுகிறது. மந்திரத்தின் தன்மைகளை அறிவதற்குச் சடங்குகளை நோக்க வேண்டும். பெரும்பாலும் சடங்குகள் வாயிலாகவே மந்திரம் செயல்படுகிறது. (பாரதி: 2005 :250) இந்தப் புரிதலை அந்தந்தப் பகுதிகளில் நிலவிய பூர்வகுடி மக்களிடமிருந்தே பெருஞ்சமயங்கள் உறிஞ்சியுள்ளது.
விவசாயப் பெருக்கத்தின் காரணமாகத்தான் நம்மிடையே பலதரப்பட்ட வழிபாட்டு மரபுகள் உருப்பெற்றன. புராதன சமுதாயத்தில் மண் வெட்டி உழுகின்ற பணியானது பெண்களுக்கே உரித்தானதாக இருந்துள்ளது. அங்கிருந்தே வழிபாட்டு மரபுகள் உருப்பெற்றன என்று அறிந்த வேளையில் மேய்ச்சல் பகுதியிலிருந்தே கடவுள் கோட்பாடு உருவாகியதையும் உணர முடிகிறது. (கோசாம்பி: 2011:101) இந்தப் படிநிலை வளர்ச்சியிலேதான் உருவ வழிபாடு தோற்றம் பெற்றுள்ளது. இப்படி உருவான தொல்தெய்வ மரபில் நிறுவன சமயமான வைணவப் பெருஞ்சமயத்தில் பல நாட்டார் மரபுகள் கரைந்துள்ளதைச் சுட்டிக் காட்டுவதாக அமைகிறது இக்கட்டுரை.
சிந்துவெளி நாகரிகத்திலும் பெண் தெய்வக் கோட்பாடு மேலோங்கியுள்ளன. தந்தை வழிச் சமுதாயத்தைப் பிரதிபலிக்கும் வேதங்களில்கூட உஷை, மேனகை, அப்சரசுக்கள் (தேவ மாதர்) உள்ளிட்ட மரபுகள் இருந்துள்ளன. அடிப்படையில் அதிகமான மக்களால் வழிபடப்படுகின்ற தெய்வமாகப் பெண் தெய்வங்கள் இருந்துள்ளன. முதலாம் இராசராசனின் காலத்திலேயே தஞ்சாவூர்ப் பகுதியில் காணப்பட்ட பல பெண் தெய்வங்கள் சிவனோடு தொடர்புபடுத்தப் பட்டதோடு, இராசேந்திரன் காலத்தில் வட்டாரத் தெய்வங்கள் அம்மன் தெய்வங்களாக மாற்றப்பட்டன. அம்மன் கோயில்களில் சிவன் புகுத்தப்பட்டது. (முத்தையா: 2013: 194, 50) சைவ, வைணவ சமயங்கள் இறைச்சி உண்கின்ற தெய்வங்களை உண்ணாதிருக்கும் முயற்சி மேற்கொள்கையில் நாட்டார் சமயம் வைதிகச் சமயத்தைப் பலி கேட்கிற, இறைச்சி உண்கிற சுடுகாட்டில் பிணம் தின்னும் தெய்வமாகக் காபாலிக மரபாகச் சிவனை மாற்றியது. அங்கு வழங்கப் படுகின்ற திருநீறு நாட்டார் மரபில் எல்லாத் தெய்வ வழிபாட்டிலும் இடம் பெறுகிறது என்கிறார் தொ. பரமசிவன். மும்மூர்த்திகளில் ஒருவனான பிரம்மாவை விருமாண்டியாக மதுரை மாவட்ட மக்கள் வழிபடுகின்றனர்.
குலக்குறிகள்
குலக்குறி பற்றிய நம்பிக்கை பெரும்பாலும் பழங்குடிச் சமுதாயங்களில் அதன் முழுத் தன்மையுடன் காணப்படுகிறது. பழங்குடியல்லாத சமூகங்களில் இத்தன்மை முழுமையானதாகவோ எச்சங்களாகவோ காணப்படுகிறது. (பாரதி.265) இங்கு குலக்குறியானது தாவரமாகவோ, விலங்காகவோ, இயற்கைப் பொருளாகவோ அமைந்துள்ளது. தன்னைச் சுற்றியிருக்கும் அஃறிணை உயிர்களையும் தெய்வமாக, தன்னைக் காக்கும் சக்தி பெற்றதாக நம்பியுள்ளான். இது தமிழகத்தின் தொல்குடி மரபான வேளிர் குடிகளுக்கும் பொருந்துவதாக உள்ளது. முல்லைக்குத் தேர் கொடுத்ததும் மயிலுக்குப் போர்வை அளித்ததுமான செயல்பாடுகளை நோக்கும்பொழுது அவை அனைத்தும் அவர்களின் குலத் தெய்வமாக இருந்துள்ளன. முல்லை, மயில், நெல்லி ஆகியவை இனக்குழு மரபினரால் வணக்கத்திற்குரியவையாக இருந்துள்ளன என்கிறார் பேரா. தோதாத்ரி. (2010: 4) இயற்கைப் பொருளை வணங்கியதிலிருந்து குலக்குறி தோன்றியுள்ளது. (பாரதி: 267) துர்க்ஹைமின் என்ற மானிடவியலாளர் சமய வாழ்வின் தொடக்க நிலைகள் என்னும் நூலில் (The Elementary Forms pf Religious Life) சமயத்தைப் பற்றிக் கூறும்போது, ‘இன்றுள்ள சமய நம்பிக்கைகள் அனைத்தும் குலக்குறி (Totem) நம்பிக்கையிலிருந்து வளர்ச்சி பெற்றவையாகும்’ என்கிறார். (பாரதி: 264)
திருமாலுக்குப் பாம்பு படுக்கையாக உள்ளது. இது ஓர் இனக்குழுவினரின் அடையாளமாக உள்ளது. ஆடு மாடுகளை வளர்த்து, திருமாலை வழிபடு தெய்வமாகக் கொண்ட மக்கள் நாகத்தை வழிபடும் மக்களை வெற்றி கொண்டதைக் காட்டுகிறது. (வானமாமலை: 2020: 90) பாம்பு வணக்கம் எனப்பட்ட நாக வழிபாடு பழங்காலம் முதலே உலகம் முழுவதிலும் காணப்படுகிறது. நாகம் அச்சுறுத்துவதாகவும் செழிப்புத் தெய்வமாகவும் வழிபடப்பட்டுள்ளது. காலனியாதிக்க சமயமான பௌத்த சமயத்தில் புத்தர் நாகர் பழங்குடிகளைத் தன்னுடைய மதங்களுக்குள் இழுத்துள்ளார். (கோசாம்பி: 2008: 258) வேதகாலத்தில் நாக வணக்கம் திராவிடரிடையே இருந்தது என்பதை கில்பர்ட் ஸ்லேட்டரும் சுட்டுகிறார். (1976: 70)
குலக்குறிகளின் தேவை
பேராசிரியர் வேலுப்பிள்ளையின் கருத்துப்படி குறிப்பிடுவோமானால் இயற்கை நெறிக் காலத்தில் வாழ்ந்த மனிதன் ஒரு விலங்கின் ஆற்றல் தனக்கும் கிடைத்திட வேண்டும் என்ற இயல்பான எண்ணத்திலேயே இருந்திருப்பான். எனவே, அந்த அடிப்படையிலே அதனைக் குலக்குறியாக ஏற்றுக் கொண்டிருப்பான். மற்றொன்று குலத்தில் ஒற்றுமை ஏற்படுத்துவது. மீனைப் போல தங்கள் குலம் பெருக வேண்டும் என்பதற்காக மீனை வழிபட்டார்கள். உலக முழுவதிலும் நம்பிக்கை சார்ந்து இயங்கிய வேட்டைச் சமூகத்திலும் பயிர்த் தொழிலில் ஈடுபட்டோரிடமிருந்தும் குலக்குறிகள் வளர்ந்துள்ளன. மிகுதியான ஆற்றலும் விருப்பமுமே குலக்குறியின் தன்மைகளாக அமைகின்றன. முல்லை நிலத்தை மையமாகக் கொண்டியங்கிய இனக்குழு மக்கள் மாட்டையும் பசுவையும் குலக்குறியாகக் கொண்டுள்ளனர். பசவ வணக்கம் மைசூரில் உள்ளது. காளைக்குத் தனிக்கோயில்களும் உள்ளன. (வானமாமலை: 2020: 54)
சிலப்பதிகாரம் எனும் பேரிலக்கியமே பல தொல்தெய்வ வழிபாட்டைப் பறைசாற்றுவதாக அமைந்துள்ளது. ஆய்ச்சியர் குரவை திருமாலின் கூத்து மரபுகளை வெளிப்படுத்துவதைக் காணும்பொழுது அங்கிருக்கிற காடுவாழ் மக்களின் பண்பாட்டியலை உள்வாங்கியவதாகப் புரிந்துகொள்ள முடிகிறது. மக்களின் வழக்காறுகளிலிருந்தே தெய்வப் படிமங்கள் உருப்பெற்று பின்னாளில் பௌராணிக மரபாக ஆக்கப்பெறுவதையும் உற்றுநோக்கமுடிகிறது. சங்க காலத்திலேயே வைதிக, சமண, பௌத்த சமயங்கள் ஆளுமை செலுத்திய கட்டமாகத் திகழ்ந்துள்ளது என்கிறார் மாதையன். (2017: 24)
அவதாரங்களின் ஆக்கம்
திருமாலின் பத்து அவதாரங்களுமே பத்து நாட்டார் மரபை உள்வாங்கிய, பழங்குடி மரபினரிடமிருந்து பெற்ற வழிபாடாகவே அறியப்படுகிறது. அடிப்படையில், வைணவ சமயம் என்பது முல்லை நில இனக்குழுத் தலைவன் மாயோனான கண்ணனையும் நீர்மேல் உறங்குகின்ற நீர்த்தெய்வமான நாராயணனையும் விண்ணுலக அதிபதி விட்டுணுவையும் வேளாண் கடவுள் பலராமனைக் கொண்டியங்கிய மரபாகத் திகழ்கிறது. பஞ்ச பூத சக்திகளில் நீராகவே விஷ்ணு கருதப்படுகிறார். பழங்குடித் தெய்வங்களும் அவற்றிற்கான வழிபாட்டு முறைகள், சடங்குகள், நம்பிக்கைகள் உள்ளிட்டவை சமூக வளர்ச்சிப் போக்கில் ஒன்று கலந்துள்ளன. இப்படியான நிலைகளில் இயங்கிய பழங்குடி சமூகம் அரசுகளாக உருவானபோது அவர்களிடம் காணப்பட்ட வழிபாடுகளும் பெருஞ்சமய நெறிக்குள் வந்துள்ளன. (சசிகலா: 2021: 115) சைவ, வைணவ, உள்ளிட்ட பெருஞ்சமய நெறிகள் வளர்ந்தபோது ஆங்காங்கு நிலவுகிற பழங்குடிகளின் வழிபாட்டை உள்ளிழுத்துக் கொண்டன. இதற்கு சமண, பௌத்த சமயங்களும் விலக்கல்ல.
பாகவதத்தில் இணைந்த அடையாளங்கள்
கண்ணனின் கதையை விவரிக்கக்கூடிய பாகவதம் திருமால் பத்து அவதாரங்கள் எடுத்தார் என்கிறது. இந்த அவதாரங்கள் பழம்பண்பாட்டில் நிலவியிருந்த பலவித வழிபாட்டு மரபையும் இனக்குழுக்களின் குலக்குறிகளையும் நம்பிக்கைகளையும் இணைத்து உருவாக்கப்பட்டது. தசாவதாரம் என்ற சட்டகத்தை உருவாக்கி திருமாலோடு இணைத்தது வால்மீகி இராமாயணத்திற்கு பிறகு என்று அறிய முடிகிறது. (வானமாமலை: 2020: 57) பழங்குடிகளின் குறியீடுகளான மீன், ஆமை, வராகம்(பன்றி), சிம்மம் போன்றவை வைணவ வழிபாட்டில் இணைத்து விஷ்ணு என்கிற பெருந்தெய்வமாக உருவாக்கப் பெற்றது. யது வம்சத்தில் பிறந்த கிருஷ்ணன் பல இனக்குழுக்களை வென்றதால்தான் பாகவதக் கதைகள் எழுதப்பட்டன என்கிறார் வானமாமலை (2020: 57) எனினும், ஆமை, மீன் ஆகியவற்றிற்குத் தனிக்கோயில்கள் இல்லை. ஆனால், பழங் காலத்திலேயே வராகத்திற்கும் மிகப் பிற்பட்ட காலத்திலேயே நரசிம்ம மூர்த்திக்கும் கோயில் ஏற்படுத்தப்பட்டன. பல்லவ மன்னன் நரசிம்மவர்மன் காலத்தில் வராகப் பெருமாளுக்கு திருவுருவங்கள் புடைப்புச் சிற்பங்களாக அமைக்கப்பட்டன. (வேங்கடசாமி: 2014: 10) இந்த வராகம் பூமியைத் தோண்டும் இயல்புடையது என்றும் வராகத்திடமிருந்தே ஆதிமனிதன் வேளாண்மையைக் கற்றிருக்கிறான் என்பதையும் அறிய முடிகிறது. (சசிகலா: 2021: 115)
கானமர்செல்வி, காடுகிழாள், பழையோள் என்ற அறியப்பட்ட எயினர்கள் வழிபட்ட கொற்றவை சிலப்பதிகாரக் காலத்தில் வடநாட்டு துர்க்கையின் மரபோடு கலந்துள்ளது. சமணர்கள் கொற்றவையை இசக்கி வடிவமாக மாற்றினர். சப்த கன்னிமார்களில் ஒருத்தியான பிராமியையும் சமணம் இழுத்துள்ளது.(சசிகலா: 92)
பௌத்த மரபிலும் சிந்தாதேவி, தாராதேவி, மங்களாதேவி போன்ற தெய்வங்கள் வழிபடப் பெறுகின்றன. உருவ வழிபாட்டை வெறுத்த பௌத்தர்கள் திருவடியையும் தரும சக்கரத்தையும் அடையாளமாகக் கொண்டியங்கினர். பின்னாளில், இந்து சமயத்தைப் பின்பற்றிப் பல பல இனக்குழுக்களுக்குத் தெய்வ வரிசையில் இடங்கொடுத்துள்ளனர். (வானமாமலை : 57)
சங்கப் பிரதிகள் உருப்பெறுவதற்கு முன்பாகவே ஆரிய மயமாதலும் யக்ஞங்களும் தமிழ்ப் பண்பாட்டில் கலந்து விட்டன. இதிலிருந்து தமிழர்களின் பூர்வீக வழிபாட்டைத் தேடுவது என்பது அவ்வளவு எளிதானதல்ல. தமிழ்த் தேசியம் பேசுபவர்களும் அவைதிக மரபைக் கொண்டு ஆய்வு செய்பவர்களும் அவரவர்களுக்கான முன்னெடுப்பை முதன்மையாகக் கொண்டு சான்று பகர்கின்றனர். தமிழர்களின் வழிபாடு தாய்த்தெய்வ வழிபாடே என்று நிலை நிறுத்தினாலும் தொல்லிலக்கணப் பிரதியான தொல்காப்பியமும் ஆண் தெய்வங்களை முதன்மையாகக் குறிப்பிடுகிறது. கொற்றவைநிலை அவ்வளவாகக் கண்டு கொள்ளப்படவில்லை. தொல்காப்பியர் காலத்திலேயே தந்தைவழிச் சமூகம் முதன்மைபெறத் தொடங்கி விட்டது. திணை மரபைப் பலமாகக் கொண்ட செய்யுள்களும் வழிபாட்டு மரபைப் பெரிதாகக் குறிப்பிடவில்லை. மாலிய சிவனிய நெறிகளைக் கலித்தொகை, பரிபாடல் உள்ளிட்டவையே பரக்கக் குறிப்பிடுகின்றன. மேற்குறிப்பிட்ட இப்பிரதிகளின் காலத்தில் ஆரிய மயமாதலோடு சமய நிறுவனமாகச் செயல்படத் துவங்கிய காலமாக நிலை பெற்று விட்டன. இக்காலத்தில்தான் விஷ்ணு என்கிற ஆரியத் தெய்வம் தமிழில் திருமால் என்றே அழைக்கப்பட்டார். விஷ்ணுவை மழைத்தெய்வமாகவே வர்ணித்து மேகம், மழை, அருவி, கடல் போன்றவற்றோடு ஒப்புமைபடுத்தி தமிழ்ப் புலவர்கள் பாடியுள்ளனர். திருமாலின் நின்ற கோலம் மேகம்போல இருப்பதாகச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. (சிலம்பு. காடுகாண் காதை. 13-21)
வேதகால விலங்குப் பலி மறைவுற்ற காலத்தில் ஆரியரல்லாத தொல்குடி மக்களினின்றும் புதியதொரு குருதிப் பலிமுறை இடைக்காலத்தில் பரவியது என்றும் அதனை வைணவ சமயத்தினரும் ஆற்றினர் என்கிறார் பசாம். (2016: 459)
தமிழகத் தொல்குடி மக்களின் வளத்தெய்வமாய் இருந்த கண்ணன் வழிபாடானது நாடோடி இடையர் தெற்கிலிருந்து வட நாட்டுக்குச் சென்றபோது கண்ணன் கதை பரவியிருக்கிறது என்ற கருத்து பலமாகவே உள்ளது. (பசாம்: 2016: 459)
தந்தை வழிச் சமுதாயத்தை உணர்த்தும் ரிக் வேதத்திலேயே உஷை, ஊர்வசி, ரோதஸீ உள்ளிட்ட தாய்த் தெய்வங்கள் காணப்படுகின்றன. ஆங்காங்கு நிலவுகிற பெண் தெய்வங்கள் ஆண் தெய்வத்தால் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு மணமுடிக்கிற வேலையும் நடந்துள்ளது. திருமாலும் சிவனும்கூட இந்த வேலையைச் செய்துள்ளனர். தேவாரப் பதிகங்களில் அதற்கான பல தரவுகள் இருப்பதாகத் தொல்லியல் அறிஞர் பூங்குன்றன் குறிப்பிடுகிறார்.
கிருஷ்ணனும் தொல் பெண் தெய்வங்களும்
கிருஷ்ணன் மணந்த பெண்மணிகள் அனைவரும் ஆங்காங்கு நிலவிய தாய்த் தெய்வங்களே என்ற கோசாம்பியின் கருத்து (2011: 83) நோக்கத் தக்கது. தன் கணவனையே பலிகொடுக்கும் தேவதைகளும் இருந்துள்ளன என்பது வியப்பாகவே உள்ளது. கோசாம்பியும் பூங்குன்றனும் இதனைத் தெளிவாகக் குறிப்பிடுகின்றனர். (கோசாம்பி: 2011: 179)
காஞ்சிப் புராணம் பார்வதி சிவனைக் கொல்வது பற்றிக் குறிப்பிடுகிறது என்றும் திருவாலங்காட்டில் கணவனைக் கொல்லும் நிகழ்வு நடைபெற்றதைத் தேவாரப் பதிகங்கள் சுட்டுவதாகப் பூங்குன்றன் குறிப்பிடுகிறார். (ரவி வைத்தீஸ்வரன் : 294) இவ்வாறு இந்தியாவில் பரவலாக அறியப்படும் பெண் தெய்வங்கள் அனைத்தும் பல்வேறுபட்ட புராதன நாடோடி மரபுகளிலிருந்து வந்தவை என்பதை அறிய முடிகிறது. ஆரியர்களுக்கு முன்பாகவே அதாவது சிந்துவெளி வாழ்விடங்களை ஆய்வு செய்த சர் ஜான் மார்ஷல் அங்கு தாய்த் தெய்வங்கள் வணங்கப்பட்டு வந்ததற்கான ஆதாரங்களும் உள்ளன என்கிறார். (2011: 83)
திருமகளும் லட்சுமியும்
விஷ்ணுவின் மனைவியான லட்சுமி கடலில் பிறந்தவள். அவளுக்கு ரமா, மா (தாய்-லோகமாதா) என்றெல்லாம் பெயர்கள் உண்டு. இவளின் சகோதரன் ஜாலந்தர். ஜாலந்தரின் மனைவி துளசி பிருந்தா. கிருஷ்ணன் பிருந்தாவை மணப்பது பின்னர் வந்த முறையாகும். கால்நடை மேய்ப்பவர்கால தெய்வத்துடன் பெண் தெய்வக் காலத்தை இணைக்கும் ஒரு வழியாக இருக்கலாம் என்கிறார் கோசாம்பி. (2011: 83) கந்தன் தாரகாசூரனை அழிக்கும்போது தேவையான வீரர்களைப் பூத கணங்களிலிருந்து தேர்வு செய்தான். கந்தனுடன் 192 தாய்மார்கள் அப்போரில் கலந்து கொண்டனர். அவர்களில் ஒருத்தி பூதனை. கிருஷ்ணன் அவளுக்கு விஷப்பால் கொடுக்கும்போது கொன்றதாகக் கூறப்படுகிறது. இந்தப் பூதனை அப்பகுதி மக்களால் வழிபடப்பட்ட பெண் தெய்வம் என்று அறிய முடிகிறது. (கோசாம்பி: 2011: 99) ஜாம்பவதி என்பவள் கரடி குலத் தலைவனின் மகளாவாள். போஜர் குலத்திலிருந்து வந்தவள் ருக்மணி. இவ்விருவருமே பழங்குடி சமூகங் களிலிருந்து வந்தவர்கள் (கோசாம்பி: 2018: 203) மாசோபன் என்கிற மகிஷாசுரன் என்ற எருமை அரக்கன் துர்கா பார்வதியால் கொல்லப்பட்டான். (கோசாம்பி: 2018: 102)
ஆரிய தெய்வமான இந்திரனுக்கு எதிராக, மாற்றாகக் கருப்புத் தெய்வமான கிருஷ்ணனைத் திராவிட மரபு முன்னிறுத்தியது. வேதத்தில் இந்திரனுக்குப் பகைவனாக கிருஷ்ணன் கருதப்படுகிறான். பாணினியின் கூற்றுப்படி ஆரியருக்கு முந்தைய இனத்திலிருந்து தோன்றியவன் கிருஷ்ணன் என்று அறிய முடிகிறது. (கோசாம்பி: 2018: 39) கண்ணன் என்ற பிராகிருதச் சொல்லே வடமொழியில் கிருஷ்ணன் என்று அழைக்கப்பட்டதாக வையாபுரிப்பிள்ளை குறிப்பிடுகிறார். (1993: 127) இந்தக் கண்ணன் சரித்திரத்தில் பல பகுதிகளையும் தங்களுக்கு உரியனவாகக் கொண்டு கிருஷ்ணனை ஜைன முனிவனாகவும் அரசனாகவும் ஆக்கினர் என்கிறார்.(1993.133) ஆநிரைகளைக் காத்து மேய்ச்சல் நிலத் தலைவனாகக் கருதப்படுபவன் கிருஷ்ணன். சங்க இலக்கியப் பிரதிகள் ஆநிரைகளைக் காக்கும் போரில் ஈடுபட்டு உயிர் துறந்தவனுக்கு நடுகல் எழுப்பும் மரபையும் குறிப்பிடுகிறது. (பூங்குன்றன், ராஜ் கௌதமன்) எனவே, நடுகல் வழிபாடும் வைணவத்தோடு தொடர்புடையதாக உள்ளது. திருவண்ணாமலை ஈஸ்வரன் கோயில் நடுகல் வழிபாடே என்கிறார் பூங்குன்றன். (ரவி வைத்தீஸ்வரன்: 283) அசோகர் காலந்தொட்டே தூணை வழிபடுகின்ற மரபு இருந்துள்ளது. பழங்குடி மக்கள் வானத்திற்கும் பூமிக்குமான வழியென்று நம்பியுள்ளனர். வேள்வித்தூணும் யூபத்தூணும் வைணவ நெறியில் மட்டுமே உண்டு. இங்கிருந்தே நரசிம்ம வழிபாடு உருவானது. (சசிகலா: 116) ஆந்திரப் பழங்குடிகள் வழிபட்ட தெய்வமே நரசிம்மர் எனவும் அறியப்படுகிறது. (செந்தீ நடராசன்:55)
கோயில் எழுப்புவதற்கு முன்பாக மரத்தை வழிபட்டனர். அதனால் ஒவ்வொரு கோயிலும் மரங்களை ஒட்டியே எழுந்ததால் அங்கு ஸ்தல விருட்சங்கள் முக்கியமானதாகப் படுகிறது. மரங்களில் நான் அரச மரம் என்று பகவத் கீதையில் கண்ணன் குறிப்பிடுவதால் அரச மரம் வைணவத்தில் போற்றப்படுகிறது.
திருமகள் வழிபாடு
திருமாலின் வலது மார்பில் உறைபவளாக இலக்குமி என்ற திருமகள் கருதப்படுகிறாள். அதனால் திருமால் திருவுறை மார்பன் என்றும் ஸ்ரீ வாசம் புரிவதால் ஸ்ரீநிவாசன் என்றும் ஸ்ரீபதியான எம்பெருமான், திருமகள் கேள்வன் என்றெல்லாம் அழைக்கப்படுகிறார். ஆழ்வார்களே திருமகளைப் பாசுரங்களால் போற்றியுள்ளனர். பல்லவர் காலத்திலேயே தாமரைப் பூவில் திருமகள் அமர்ந்திருப்பது போல வராக மண்டபத்தில் சிற்பம் அமைத்துள்ளனர். குப்தர் காலத்திலேயே விஷ்ணுவோடு இலக்குமி இணைக்கப்பட்டதற்கான அடையாளங்கள் உள்ளன. (இராமானுஜ தாதாத்சாரியர்: 226) அடிப்படையில் வளமையின் குறியீடாக, பூமியின் செழிப்புக்குரிய தெய்வமாகவே இலக்குமி ஸ்ரீசூக்தத்தில் குறிப்பிடப்படுகிறாள். ஆங்காங்கு வழிபடப்பட்டுவந்த தெய்வங்கள் இலக்குமி என்ற அடையாளத்துடன் இணைந்து அஷ்டலட்சுமியாக மாற்றப் பட்டிருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. மகிஷாசுரமர்த்தினி, மகாகாளி, ரோகிணி, துர்க்கா, பீமா ஆகியவை இலக்குமியின் அவதாரங்களாகவே திகழ்கின்றன. வேறு வேறு உருவத்திலுள்ள பெண் தெய்வங்கள் இலக்குமியின் அம்சமே என்பது பழைய கருத்தாக நிலவி வருகிறது. அஷ்ட லட்சுமி என்ற தத்துவத்தை இது உருவாக்கியது. மத்தியப் பிரதேசத்தில் இலக்குமியையும் துர்க்கையையும் ஒருவராகவே வைத்து வழிபடுகின்றனர். புத்த ஜாதகக் கதைகளில்கூட இவளை வழிபட்ட செய்தியைக் காணமுடிகிறது. வேதக் கருத்துகளோடு பல்வேறுபட்ட வழிபாட்டு மரபுகள் கலந்ததால் உருவம், ஆயுதங்கள், வாகனங்கள் முதலியன சொல்லப்பட்டுப் பெருந்தெய்வ நெறியான மும்மூர்த்திகளோடு இணைந்து பிரம்மாவின் சக்தி சரஸ்வதி, விஷ்ணுவின் சக்தி இலக்குமி, சிவனின் சக்தி பார்வதி என்று கலந்தன. மொத்தத்தில் பெண் தெய்வ வழிபாடுகள் நிறுவன சமய நெறிக்குள் வந்ததைக் காட்டுகிறது. தற்போது அது வைணவத்தோடு இணைந்த தத்துவமாக மாறியுள்ளது.
பதிற்றுப்பத்து தொடக்கமான இலக்கியம் முதலே திருமகள் திருமாலோடு இணைத்துக் கூறப்பட்டுள்ளாள். களங்காய்கண்ணி நார்முடிச் சேரலுக்கு முற்பட்ட காலத்தில் திருமகள் தனித்தெய்வமாய் இருந்ததற்குச் சான்றுகள் உள்ளன என்கிறர் மாதையன். இந்திய மரபில் ஸ்ரீ தனித் தெய்வமாகவும் பின்னர் சோமன், கந்தன், குபேரன், இந்திரன், பலி, தருமன் போன்ற தெய்வங்களுடன் இணைத்தும் இறுதியில் விஷ்ணுவுடன் ஐக்கியமானாள் என்ற டேவிட் கின்ஸ்லேவின் கருத்து இங்கு எண்ணத்தக்கது. (ஆரோக்கியசாமி: 2019: 44)
திராவிட மரபில் தாயார் சன்னிதி
வைணவம் பெண் தெய்வத்தைத் தாயார் சன்னிதி என்று அழைக்கிறது. திருமகளை மார்பில் கொண்ட சோழர் காலத்துச் செப்புப் படிமங்கள் காணப்படுகின்றன. படிமங்களில் 108 வைணவத் தலங்களிலும் அன்னைக்கு முதன்மை கொடுத்து கோயில்களில் வழிபடும் மரபானது பெரிதாகவே உள்ளது. இராமானுசரின் விசிட்டாத்துவிதத் தத்துவத்தில் ஸ்ரீ என்ற அன்னைத் தத்துவம் உள்ளது. அவர்களை ஸ்ரீவைஷ்ணவர் என்றே அழைக்கின்றனர். அன்னை தத்துவத்தைத் தாயார் என்றே வைணவர்கள் அழைத்து வருகின்றனர். அனைத்து வைணவக் கோயில்களிலும் இருக்கும் பெண் தெய்வங்களைப் பெயர் குறிப்பிட்டு அழைக்காமல் தாயார் சன்னிதி என்றே அழைக்கின்றனர். அனபாயினி என்று திருமகளை இராமானுசர் அழைத்துள்ளார். (சசிகலா: 121) அன்னையின் அருளில்லாமல் ஆண் கடவுளிடம் செலுத்தும் வேண்டுதல் செல்லாது என்றும் திருமகள் வழியாகத் திருமாலிடம் சென்றால் கோரிக்கை நிறைவேறும் என்ற நம்பிக்கை பலமாகவே உள்ளது. இதிலிருந்து திருமாலுக்கு இணையாகப் பெண் தெய்வத்தை வணங்கும் மரபு இருக்கிறது. இன்றும் வைணவக் கோயில்களில் ஆசாரியன், தாயார் ஆகியோரை வழிபட்டபிறகே மூலவரான திருமாலைத் தொழுகின்ற மரபு தொடர்கிறது. பெண்கள் பஞ்ச சமஸ்கார என்ற வைணவ தீட்சையின்போது திருமகளின் பெயர்களில் ஒன்றை சூட்டிக் கொள்கின்றனர். ஏழு கன்னிமார்களில் ஒருத்தியாக வைணவி என்ற தெய்வமும் உண்டு. இன்றும் அழகர் கோயில் போன்ற வைணவ ஆலயங்களில் நாட்டார் மரபிற்கான பூசை முறைகள் நடைபெறுகின்றன என்கிறார் தொ. பரமசிவன். சிலப்பதிகாரம்கூட திருமாலின் நின்ற கோலத்தை மேகம் நின்றிருப்பது போன்றதாக உள்ளது என்கிறது. (காடுகாண் காதை 13-21) அழகர் கோயில் மண்டபத்தில் கருட வாகனத்தில் காணப்படும் திருமால் உருவச்சிலை மழையின் குறியீடாக உள்ளது. (முத்தையா: 72) ஆண்டாளும் திருமாலை மேகத்திற்கு உவமைப்படுத்தி வளத்தெய்மாகவே பாடுகிறார். சூரிய நாராயணன் என்று மக்கள் போற்றி வழிபடுவதைக் காணும்போது சூரியனாகத் திருமால் அறியப்படுகிறார்.
வளர்ந்து வந்த குப்தப் பேரரசு சிற்றரசர்களை வென்று பேரரசாக வளர்ந்தபோது விஷ்ணுவோடு கிருஷ்ணன், நாராயணன் ஆகிய தெய்வங்களை இணைத்தனர். பின்னாளில் விஷ்ணு புராணமும் பாகவத புராணமும் எழுதப்பட்டன. சமுதாய இயக்கத்தின் திசை வழி இனக்குழுக்கள் பல இணைந்து நிலத்தில் நிலையான வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முயன்றன. ஆற்றோரங்களில் பெருமளவில் நிலங்களில் நீர்பாய்ச்சி உழவுத் தொழில் நடந்தது. மன்னர்களும் படைத்தலைவர்களும் நிலத்தைக் கைப்பற்றிக் கொண்டு தனி நிலவுடைமை முறையை உருவாக்கினர். பலவிடங்களில் தனியரசுகள் தோன்றின. இப்படியான மரபுகளிலிருந்து உருவானபோது அவர்களின் பண்பாட்டுக் கூறுகள் ஒற்றை அடையாளத்தோடு இணைந்தன என்ற வானமாமலையின் கருத்து நினைக்கத் தகுந்ததாக உள்ளது. (2020: 22)
துணை நின்றவை
1. ஆரோக்கியசாமி, சி. 2019. தமிழர் மரபில் தாய்த் தெய்வ வழிபாடும் பெரியாரும், கோவை: விடியல் பதிப்பகம்.
2. இராகவன், அ. சாத்தன்குளம். 2014. தமிழர் பண்பாட்டில் தாமரை, சென்னை: சந்தியா பதிப்பகம்.
3. கில்பர்ட் ஸ்லேட்டர். 1976. இந்திய நாகரிகத்தில் திராவிடப் பண்பு, சென்னை: கழக வெளியீடு.
4. கோசாம்பி, டி. டி. 2011. மாயையும் யதார்த்தமும், சென்னை: அலைகள் வெளியீட்டகம்.
5. ................... 2008. பண்டைய இந்தியா, சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.
6. சசிகலா, கோ. 2021. தாய்வழிச் சமூகம்: வாழ்வும் வழிபாடும், சென்னை: தடாகம்.
7. சண்முகம் பிள்ளை, மு. 1996. சங்கத் தமிழர் வாழ்வும் வழிபாடும், சென்னை: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
8. தனஞ்செயன், ஆ. 2012. குலக்குறியியலும் மீனவர் வழக்காறுகளும், சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.
9. தோதாத்ரி, எஸ். 2010. வைணவம் மார்க்சியப் பார்வை, சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.
10. நிர்மலா, பெ. 2012. தமிழகச் சிற்பங்களில் பெண் தொன்மம், சென்னை: அலைகள் வெளியீட்டகம்.
11. பசாம், ஏ. எல். 2016. வியத்தகு இந்தியா, கோவை: விடியல் பதிப்பகம்.
12. பரமசிவன், தொ. 2018. தெய்வம் என்பதோர், நாகர்கோவில்: காலச்சுவடு பதிப்பகம்.
13. பாண்டுரங்கன், அ. 2018. சங்க இலக்கியம் (சமயம், வழிபாடு, அரசு, சமூகம்), சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.
14. பாலுசாமி, சா. 2013. நாயக்கர்காலக் கலைக் கோட்பாடுகள், நாகர்கோவில்: காலச்சுவடு பதிப்பகம்.
15. நடராசன், செந்தீ. சிற்பம் தொன்மம், சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.
16. பாரதி, பக்தவத்சல. 2005. மானிடவியல் கோட்பாடுகள், புதுவை: வல்லினம்.
17. பூங்குன்றன், ர. 2009. தொல்குடி வேளிர் வேந்தர் சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.
18. .................... 2022. வேளிர் வரலாறு, சென்னை: தடாகம்.
19. மாதையன், பெ. புதிய ஆராய்ச்சி, சூலை 2017
20. முத்தையா, இ. 2013. அடித்தள மக்களின் குறியீட்டுப் பயண வெளிகள், சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.
21. ரவி வைத்தீஸ்வரன், ஸ்தனிஸ்ஸாஸ். (தொகுப்பு) 2016. தமிழ்ச் சமூகத்தில் சமயம், சாதி கோட்பாடு. சென்னை: மேன்மை வெளியீடு.
22. ராமாநுஜ தாதாசாரியார், 1973. வரலாற்றில் பிறந்த வைணவம், கும்பகோணம்: சார்ங்கபாணி சுவாமி தேவஸ்தானம்.
23. ராஜ்கௌதமன். 2018. ஆகோள் பூசலும் பெருங்கற்கால நாகரிகமும், சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.
24. வானமாமலை, நா. 2020. தமிழர் பண்பாடும் தத்துவமும், சென்னை: அலைகள் வெளியீட்டகம்.
25. வையாபுரிப்பிள்ளை ,எஸ். 1993. தமிழர் பண்பாடு கம்பன் காவியம். சென்னை: வையாபுரிப்பிள்ளை நினைவு மன்றம்.
26. வேங்கடசாமி, மயிலை. சீனி. 2014. ஆய்வுக் களஞ்சியம் - தொகுதி 12. சென்னை: இளங்கணிப் பதிப்பகம்.
- த.குணாநிதி, தமிழ் உதவிப் பேராசிரியர், தருமமூர்த்தி இராவ்பகதூர் கலவல கண்ணன் செட்டி இந்துக் கல்லூரி. சென்னை.