maruthenai 450பேராசிரியர் மீனாசுந்தர் ஆய்வுக் கட்டுரை களைப் பல்கலைக் கழகக் கருத்தரங்குகளில் வாசித்துக் கற்றவர்களின் ஒருமித்த பாராட்டைப் பெற்று வருபவர்; ஆய்வு இதழ்களில் கூர்மையான - சிந்திக்கத்தக்க- புதிய புதிய கோணங்களில் ஆய்வுக் கட்டுரைகளைத் தீட்டி வருபவர்; பல்வேறு தளங் களில் பல பாராட்டும் பல பரிசுகளையும் விருது களையும் பெற்றுக் குவித்துள்ளவர்; கவிதைகள் குறித்து ஆய்ந்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

இதுகாறும் மூன்று கவிதை நூல்களையும் ஒரு சிறுகதைத் தொகுப்பையும் தந்து தமிழுக்கு வளம் சேர்த்து வருகிறார்.

இப்போது அவர் வெளியிட்டுள்ள மருதத் திணை எனும் கவிதை நூல் தமிழில் வந்துள்ள கவிதை நூல்களிலிருந்து வேறுபட்ட புதுமைப் படைப்பாகத் திகழ்கிறது.

நன்செயும் புன்செயும் கொஞ்சிக் குலாவிய (ஒரு காலத்தில்) திருவாரூர் மாவட்டத்தில் வண்டல் மணம் கமழும் மன்னார்குடி பகுதியைச் சேர்ந்த கவிஞர் உழுதுண்டு, வாழும் உழவர்குடியில் பிறந்த மையால் இயற்கையாகவே உழவுத் தொழில் பற்றிய அனைத்து விவரங்களையும் கண்ணாரக் கண்டும் காதாரக் கேட்டும் உழவோடு உறவாடி வளர்ந்து வந்தவர். 

இன்று கல்லூரியில் பணிபுரிந் தாலும் தான் பிறந்து வளர்ந்த வண்டல் மண்ணை மனைகளாக்கும் கொடுமைக்கு எதிர்ப்புக் குரல் கொடுக்கிறார் தன் நூலில்.

நங்கைக்கு நகை அழகு செய்வது போலவும் கால்வாய்க்குக் கரை அழகு சேர்ப்பது போலவும் கவிதைக்கு வர்ணனைகள் அழகு சேர்க்கும் என்பர் கற்றோர். 

இவருடைய கவிதைகளில் பொன் குடத்துக்குப் பொட்டு இட்டது போல வருணனை களை மிகச் சிறப்பாக அமைத்துச் செல்கிறார்.

கோடைக் காலங்களில் கிராமத்துக் குளம் குட்டைகளில் நீர் குறைந்து காணப்படும்.  ஆனால் இப்போதெல்லாம் தமிழகத்தைச் சுற்றியுள்ள மாநிலத்தவரின் வஞ்சகத் தன்மையால் காலத்தில் முறையாக வரவேண்டிய தண்ணீர் கூட வருவது நின்றுவிட்டது. 

நீதிமன்றத் தீர்ப்பையும் கண்டு கொள்வதில்லை.  வாக்கு வங்கி அரசியல் நடத்தும் கட்சிகளும் நீரைப் பகிர்ந்து கொள்ள முன்வருவ தில்லை.  இதனால் வண்டல் பூமி வறண்ட பூமியாக மாறிவிட்டதைக் கண்டு மனம் நொந்து கவிஞர் வர்ணிப்பதைப் பார்க்கலாம்.

 

‘நீர் ஆடையின்றி

அம்மணமாய்க் கிடக்கும்

ஆறுகுளம் வாய்க்கால்களில்

நீராட வழியின்றி

வெக்கை கக்க

கானலில் மினுக்குமெங்கள்

வயலும் வாழ்வும்’

அம்மணமாய்க் கிடக்கும் ஆறு, குளம் வாய்க் கால் எனும் வரியும், நீர் ஆடை எனும் உருவகமும் அவலம் நிறைந்து படிப்போர் கண்களில் நீர் கசியச் செய்கிறது.

நந்தனார் புராணத்தில் (திருநாளைப் போவார்) சேக்கிழார், அவர் பிறந்த ஆதனூர் சேரியை இப்படி வர்ணிப்பார்.

கழனிகள் நிறைந்த பகுதிக்கு அப்பால் புலையர்கள் வாழும் புலைச்சேரி இருந்தது.  அப்பகுதியில் உழுதுண்டு வாழும் உழவர்கள் தம் சுற்றத்தோடு வாழ்ந்தனர்.  அவர்கள் வாழ்ந்த குடிசைகள் விழல் வேய்ந்தவை.  அக்குடிசைகளின் மேல் சுரைக் கொடிகள் படர்ந்து இருந்தன.

‘சுற்றம் விரும்பிய கிழமை தொழில்

   உழவர் கிளை துவன்றிப்

பற்றியபைங் கொடிச்சுரை மேல்படர்ந்த

  பழம் கூரை உடைப்

புல்குரம்பைச் சிற்றில்பட நிறைந்து

  உளதுஓர் புலைப்பாடி’

(பெரிய புராணம் 1051)

கவிஞர் மீனாசுந்தர் வித்தியாசமான காட்சி யாக உழத்தியர்கள் சுரைக்கொடி படரவிட்ட மைக்கு ஒரு காரணமும் கூறுகிறார்.

கவிஞர் கூறும் காரணம் யதார்த்தமாகவும் நயஞ்செறிந்ததாகவும் இருக்கிறது.

‘வருடந் தவறாமல்

சித்திரைப் பட்டத்தில்

சுரைக்கொடி விதைபோட்டு

கூரைமேல்

ஏற்றி விடுவாள் அம்மா

காய்ப்பது ஒருபுறம்

பொட்டுப் பொட்டாய் நடுவீட்டில்

சூரியத் துளிகள்

ஒழுகி விழுவதைத்

தடுக்குமென்கிற தந்திரமும்கூட’

கூரைவீட்டு ஓட்டையில் மழைத்துளிகள் ஒழுகும் போது அந்த இடத்தில் பாத்திரங்களை வைப்பது வழக்கம்.  ஆனால் கவிஞர் சூரிய ஒளியையே சூரியத்துளிகள் என்பதும் ஓட்டையில் விழுவதை ஒழுகுகிறது என்பதும் புதிய சிந்தனையாகப்படுகிறது.

கிராமப்புறங்களில் குறைந்தது இரு போகம் விளைந்த வண்டல் நிலங்கள் இன்று தரிசாக்கப் பட்டு வீட்டு மனைகள் ஆகி வருவது பாடுபடும் பாட்டாளி மக்களைக் கண்ணீர் சிந்த வைத்துள்ளது.  இக்காட்சியைக் கவிஞர் தத்ரூபமாகக் காட்டு கிறார்.

‘உழவுக்கும் தொழிலுக்கும்

வந்தனை செய்வோம்

அன்றி

வீட்டு மனையாக்குவோரை

நிந்தனை செய்வோம்’

பாதகம் செய்பவரைக் கண்டு பயம் கொள் ளாமல் வீறுடன் எழுந்து மோதி மிதிக்கும்படி நம்மையெல்லாம் தூண்டுவது போல் இருக்கிறது.

நஞ்சை புஞ்சையை மனைகளாக்கி விற்றுக் கொழுத்தவனுக்குக் கவிஞர் சாபம் கொடுப்பது நன்றாக இருக்கிறது.

‘ஆடைக்கும் கோடைக்கும்

நஞ்சை புஞ்சையாய்ச் செழித்த

விளைநில மனையில்

வீடு கட்டியவன்

எதிலும் நிறைவற்றுத் தவித்தான்

விடுமா என்ன

பயிர்களின் சாபம்’

மனிதர்கள் சாபம் இடுவதையும் கல்லறையில் சபதம் எடுப்பதையும் கண்டும் கேட்டும் ரசிக்கிறோம்.  ஆனால் இங்குப் பயிர்களே சாபம் இடுவது நெஞ்சைப் பிழிகிறது.

உழுதவன் கணக்குப் பார்த்தால் உழவுக்குக் கூட மிஞ்சாது என்பது உழவன் தன் பட்டறிவில் பகர்ந்த பழமொழி.

இன்று முப்போகம் விளைவித்த விவசாயி களுக்கு ஒரு போகத்திற்கும் வக்கில்லாமல் போயிற்று.  ஆற்று நீரும், மழை நீரும் அவனை வஞ்சித்து விட்டன.  ஒன்று போனால் ஒன்று கிடைக்கும் என நம்பியவனை இயற்கையும் சுயநலம் கொண் டோரும் இழைத்த கொடுமையால் தற்கொலைக்கு ஆளாக வேண்டிய அவலநிலை அவனுக்கு.  அவனது நம்பிக்கையை இப்படிப் படம் பிடிக்கிறார் கவிஞர்.

‘குறுவையில் இழந்ததைத்

தாளடியிலும்

தாளடியில் இழந்ததைச்

சம்பாவிலும்

சம்பாவில் இழந்ததை

உளுந்துப் பயிரிலும்

சரி செய்யலாமென நம்பி

பருவம் தவறாமல்

மோசம் போகும் ஏமாளிகளுக்குத்

தமிழகத்தில்

விவசாயிகள் என்று பெயர்’

நல்ல கவிஞருக்கு அழகு புதுமையான கற்பனை களையும் உவமைகளையும் படைத்துக் காட்டுதல் ஆகும்.  இவரும் ஒரு நல்ல உவமையைப் படைத் துள்ளார்.

கலப்பையால் உழுது வயலைக் கீறினான் உழவன்; மண்ணைப் புழுதி ஆக்கினான்.  நீர் பாய்ச்சி அண்டை போட்டுச் சேறாக்கப்பட்ட நாற்றங்கால் குளித்தெழுந்த பருவப்பெண் போல் தெரிகிறதாம்.

குளித்தெழுந்த பருவப் பெண்ணின்

பேரழகாய் மிளிரும் நாற்றங்கால்

இந்த இடத்தில் இன்னொரு திரைப்பாடல் நினைவுக்கு வருகிறது.

வளர்ந்துவிட்ட பருவப் பெண்போல்

உனக்கு வெட்கமா

தலையை வளைச்சு நீயும் பாக்குறியே

 தரையின் பக்கமா

வளர்ந்து கொஞ்சம் தலைசாய்ந்து நிற்கும் கதிரைப் பருவப் பெண்ணாக கவிஞர் வருணிக்கும் அழகையும், நாற்றங்காலைப் பருவப் பெண்ணாகக் கூறும் அழகையும் ஒப்பிட்டு மகிழலாம்.

உழவன் இன்று படும் துயரங்களை அடுக்கிக் காட்டிய கவிஞர் அவனுக்கு விடிவுகாலம் வர வேண்டுமென நாட்டு நலம் நாடுவோரையும் ஆளுவோரையும் சிந்திக்க வைக்கிறார் தம் கவிதைகள் மூலம்.  மக்கள் நலம் நாடும் கவிஞரின் படைப்பு பலரது கவனத்தை ஈர்க்கப் போகும் படைப்பாக இருக்கும் என்பதில் ஐயமே இல்லை.

மருதத்திணை

ஆசிரியர்: மீனா சுந்தர்

வெளியீடு: 117, திருவல்லிக்கேணி நெஞ்சாலை,

சென்னை - 600 005

கைப்பேசி : 9962376282

விலை: ` 85.00

Pin It