கல்வி பெறுவதின் நோக்கமும் பயனும் படைப்பாற்றல் பெறுவதே.  ஒன்றை புதிதாக உருவாக்குவதே படைப்பாற்றல், குழந்தைகளிடம் படைப் பாற்றல் உருவாவதற்கு கற்பனையும் சிந்தனையும் தேவை. இயல்பாகவே குழந்தைகள் கற்பனையும் சிந்தனையும் உடையவர்களாகவே இருக்கின்றனர்.

என் பேத்திக்கு மூன்று வயதாகிறது.  கதைகள் கேட்பதில் ஆர்வம் உடையவள்.  ஒருநாள் அவள் பாட்டி வடை சுட்ட கதையை வேறு மாதிரி சொன்னாள்.  அவளுடைய கதையில் பாட்டி வடை சுடவில்லை.  காகம் வடை சுடுகிறது.  வடையை பாட்டி திருடிச் செல்கிறார்.  காகம் அழுது கொண் டிருக்கிறது.  அப்போது அங்கே ஒரு நரி வருகிறது.  பாட்டியிடமிருந்து வடையை வாங்கித் தருவதாக சொல்கிறது.  நரி பாட்டியிடம் சென்று ‘பாட்டி, பாட்டி நீ அழகா டான்ஸ் ஆடுவீயாமே! ஒரு டான்ஸ் ஆடு’ன்னு கேட்கிறது.  பாட்டி வடையை கீழே வச்சிட்டு கையைத் தூக்கி ஆடும்போது நரி வடையை தூக்கிக் கொண்டு வந்து காகத்திடம் கொடுக்கிறது.

பாத்திரங்களை மாற்றிய அவள் கற்பனை ஒரு புதிய கதையை உருவாக்கி விட்டது.

நான் ஒரு கட்டுரையில் வாசித்த செய்தி இது.

‘தோசையம்மா, தோசை’ பாட்டை வேறு மாதிரி மாற்றினாள் ஒரு சிறுமி.

தோசையை பங்கு வைப்பதில் ஒரு மாற்றத்தை அந்தச் சிறுமி செய்தாள்.

‘......................

அம்மாவுக்கு நாலு

அப்பாவுக்கு மூணு

 அண்ணனுக்கு இரண்டு

 பாப்பாவுக்கு ஒண்ணு.’

‘ஏன் அம்மாவுக்கு நாலு தோசை? என்று கேட்ட போது அவள் சொன்ன பதில் முக்கிய மானது.

‘அம்மா தானே எல்லா வேலையும் செய்றாங்க, அம்மாவுக்கு பலம் வேணுமில்லையா’ என்று விளக்கம் சொன்னாள்.

இதில் ஒரு சமூக மதிப்பீடு இருக்கிறது.  இந்த சிந்தனை அவளுக்கு எப்படி ஏற்பட்டது?

திருக்குறளைப் படிக்க மாட்டேன் என்று மறுத்த ஒரு மாணவியைப் பற்றி உங்களுக்குச் சொல்ல வேண்டும்.

‘ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன் மகனை

சான்றோன் எனக் கேட்ட தாய்’

என்பதுதான் அந்தக் குறள்.

‘ஏன் படிக்க மாட்டாய்?’ என்று ஆசிரியை கேட்டதற்கு, ‘அந்தக் குறளில் மகன் என்று தான் இருக்கிறது மகள் என்று இல்லை.  அதனால் படிக்க மாட்டேன்’ என்கிறாள் அந்த மாணவி.

பெண் சமத்துவம், பெண்ணுரிமை பற்றியெல்லாம் அந்த குழந்தைக்கு பெரிதாக ஒன்றும் தெரிய நியாயமில்லை.

குழந்தைகளிடம் சிந்தனை சமூகத்தின் தாக்கம் காரணமாக எப்படி ஏற்படுகிறது என்பதற்காக இதனைச் சொன்னேன்.  காற்றில் ஈரம் கலப்பதைப் போல், மண்ணின் ஈரத்தை வேர்கள் உறிஞ்சிக் கொள்வதைப் போல் இவை நிகழ்கின்றன.

குழந்தைகள் கற்பனை, சிந்தனை, படைப் பாற்றலோடு தான் பள்ளிக்கு வருகிறார்கள்.  அவர்களின் கற்பனையை, சிந்தனையை, மொழியை குழி தோண்டிப் புதைக்கும் வேலையை நம் கல்விமுறை செய்கிறது.

ஆசிரியர் கேள்வி கேட்கும் கல்வி முறை நம்முடையது.  இதை மனதில் வைத்துக் கொண்டு தான் அம்பேத்கர் ‘வகுப்பறையில் குழந்தையை ஒரு நாளைக்கி ஒரு கேள்வியாவது கேட்க அனுமதி யுங்கள்’ என்றார்.

குழந்தைகள் ஒடுக்கப்படும் போது கற்பனையை, சிந்தனையை இழக்கிறார்கள்.  சுதந்திரமாக வளரும் குழந்தை, கற்கும் குழந்தை படைப்பாற்றலைப் பெறுகிறது.

சோவியத் ரஷ்யாவில் தோழர் லெனின் அதிபராக இருந்தபோது நடந்த நிகழ்ச்சி இது.  இரண்டு பள்ளிக் குழந்தைகள் தங்கள் தலைமை யாசிரியரைப் பற்றி புகார் தெரிவிக்க லெனினை சந்திக்க வந்திருந்தனர்.  என்ன விஷயம்? என்று லெனின் கேட்டார்.  தங்களைப் பள்ளியிலிருந்து நீக்கிவிட்டதாகக் குழந்தைகள் கூறினர்.  நீங்கள் என்ன தவறு செய்தீர்கள்? என்று விசாரித்தார் லெனின்.  வகுப்பறைக்குச் செல்லாமல் பள்ளிக்கு வெளியே பெய்திருந்த பனிக்கட்டியில் வாகனங்கள் செய்து விளையாடிக் கொண்டிருந்தோம் என்று குழந்தைகள் பதிலளித்தனர்.  அவர்களைக் கடிந்து கொள்ளாமல் லெனின் தலைமையாசிரியரை வர வழைத்து குழந்தைகளை பள்ளியில் சேர்க்கக் கூறினார்.

இரண்டாம் உலக யுத்தத்தின் போது ஹிட்லரின் படையை சைபீரியாவில் முறியடிக்க அக்குழந்தை களின் கற்பனைதான் சோவியத் படைகளுக்கு உதவியது.  சைபீரியாவில் பெய்திருந்த பனிக்கட்டி களால் செய்யப்பட்ட பீரங்கிகளை உண்மை யானவை என்று நினைத்து அவைகளை அழிக்க நாஜிப் படைகள் சைபீரியாவிற்குள் நுழைந்து தாக்கியவுடன் அவர்கள் அழிந்தனர்.  இவ் அழிவு தான் சோவியத் வெற்றிக்கு வித்திட்ட வரலாறு.

குழந்தைகளை விளையாடுவதற்கும் இயல்பாக செயல்படுவதற்கும் அனுமதிக்க வேண்டும்.  நம் நாட்டுப்புறப் பாடல்களில் பல, விளையாட்டின் போது உருவானவை தான்.

‘சடுகுடு மலையில ரெண்டானெ

தவறி விழுந்தது கௌட்டானெ

தூக்கி விட்டது இளவட்டம்

இளவட்டம், இளவட்டம்’

‘ஓட்டப் பல்லு சங்கரா

ஒரு வீட்டுக்கும் போகாதெ

அப்பம் வாங்கி திங்காதெ

அடிபட்டுச் சாகாதெ’

‘ரோட்டு மேலே காரு

காருக்குள்ளே யாரு

எங்க மாமா நேரு’

இந்தப் பாடல்களெல்லாம் குழந்தைகளே உருவாக்கிப் பாடியவை.  இன்றும் நம் குழந்தைகள் படைப்பாற்றலுடன் இருக்கிறார்கள்.  என்னுடைய மூன்று வயது பேத்தி பாட்டு கட்டிப் பாடுகிறாள்.  எங்கள் தெருவில் ஒரு நாய் இருக்கிறது.  அதற்கு பெயர் ரிக்கி.  ஒரு காது அதற்கு.  அதனால் அந்த நாயின் மீது அவளுக்கு அனுதாபம்.

‘ஒத்த காது ரிக்கி

எங்கே இருக்கீங்க?

எங்கே இருந்தாலும்

இங்கே ஓடி வாங்க.

கிச்சா பொண்ணு

உன்னை தேடுறாங்க.

மிட்டாய் வச்சிருக்கேன்

இங்கே ஓடி வாங்க.’

பாட்டு கட்டும் திறமை குழந்தைகளுக்கு இருக் கிறது.  குழந்தைகளின் இந்த படைப்பாற்றலுக்கு பள்ளிகளில் வாய்ப்பளிக்க வேண்டும்.  குழந்தை களே பாடல்கள் பாட, எழுத பயிற்சிகள் மேலை நாடுகளில் தரப்படுகின்றன.  அதுபோல் நம் குழந்தை களுக்கும் தரப்பட வேண்டும்.  புகழ்பெற்ற ‘ட்விங்கிள், ட்விங்கிள், லிட்டில் ஸ்டார்’ என்ற பாடல் ஒரு குழந்தையின் படைப்பு என்பதை நாமறிவோம்!

ஒன்று முதல் 10-ஆம் வகுப்பு வரை உள்ள தமிழ்ப் பாடப் புத்தகங்களைப் பார்த்த போது ஓர் உண்மை விளங்கியது.

சங்க காலப் பாடல்கள், இதிகாசங்கள் சிற்றிலக்கியங்கள், சித்தர் பாடல்கள், கவிமணி, பாரதி, பாரதிதாசன், அழ.வள்ளியப்பா, தமிழ்ஒளி ஆகியோரின் குழந்தைப்பாடல்கள், சிறுவர் சிறுகதைகள், நாடகங்கள், நாட்டுப்புறக் கதைகள் வாழ்க்கை வரலாறு ஆகியவைதான் தமிழ்ப் பாடப் புத்தகங்களில் இடம் பெற்றிருக்கின்றன.

இவைகளை கற்பித்த பின்னும், கற்ற பின்னும் குழந்தைகளிடம் இலக்கிய ஆர்வம் பீறிடவில்லை.  புத்தகங்களை வாசிக்கும் ஆர்வம் கரை புரண்டு ஓடவில்லை? ஏன்?

சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்.  இலக்கிய ஆர்வமும் புத்தகங்களை வாசிக்கும் பழக்கமும் குழந்தைகளிடம் ஏன் தோன்றவில்லை என்ற கேள்விக்கு உங்களுக்கே விடை புரிந்திருக்கும்.

இலக்கிய ஆர்வம் இல்லாதவர்களை வாசிக்கும் பழக்கம் அற்றவர்களாக ஆசிரியர்கள் இருக் கிறார்கள்.  மேலும் பாடப் புத்தகங்கள் படிப்பது தேர்வு நோக்கில் அமைந்திருக்கிறது.  படைப் பாற்றலுக்கான களன் பள்ளிக்கு வெளியே இருக் கிறதோ என்ற ஐயம் தோன்றுகிறது.

புத்தக வாசிப்பு என்பது படைப்பாற்றலுக்கு அடிப்படை.  இது நம் பள்ளிகளிலோ, நூலகங் களிலோ நடைபெறவில்லை.  இது தொடர்பாக அமெரிக்க நூலகத்தில் நடைபெற்ற நிகழ்வை நான் உங்களுக்குச் சொல்ல வேண்டும்.

அந்த நிகழ்வுக்கு ‘YOUR CHILD READS WITH HELP’என்று பெயர்.  நூலகரோ அல்லது ஒரு சேவையாளரோ ஒரு குழந்தைக்கு வாசிப்பு பயிற்சியைத் தருகிறார்.

முதலில் அவர் குழந்தையின் வயதிற்கு ஏற்ற புத்தகத்தைத் தேர்வு செய்கிறார்.  (Right book with

the right child)

லெவல் (Level) 1 - என்பது வாசிப்பில் துவக்க நிலையில் உள்ள குழந்தைக்குரிய புத்தகமாகும்.  அப்புத்தகம் 4-7 வயதிற்குள் உள்ள குழந்தைகளுக் குரியது.  50 சொற்களுக்குள் எழுதப்பட்டது.  பெரிய படங்களுடன் பல வண்ணங்களில் அச்சிடப்பட்டது.

லெவல் 2 - என்பது வாசிக்க ஓரளவு திறன் கொண்ட குழந்தைகளுக்குரிய அப்புத்தகம் 5-8 வயது குழந்தைகளுக்குரிய 100 சொற்களுக்குள் எழுதப்பட்டது.  படங்கள் இருக்கும்.

லெவல் 3 - என்பது உதவியில்லாமல், தனியாக வாசிக்கத் திறன் கொண்ட குழந்தைகளுக்குரியது.  அப்புத்தகம் 6-9 வயதினருக்குரியது.  200 சொற் களுக்குள் எழுதப்பட்டது.

லெவல் 4 - என்பது 7-10 வயதினருக்குரியது.  500 சொற்களுக்குள் எழுதப்பட்டது.  இப்புத்தகங்கள் வாசிப்பில் தேர்ந்த திறனைப் பெற்றவர்களுக்குரியது.

துவக்க நிலையிலுள்ள ஒரு குழந்தைக்கு நூலகர் அல்லது சேவையாளர் வாசிப்புப் பயிற்சிக்கு கீழ்க்கண்டவாறு உதவுகிறார்.

முதலில் நூலின் தலைப்பை வாசிக்கச் சொல்லுகிறார்.  பிறகு அட்டையை கவனிக்கச் சொல்லுகிறார்.  ‘இந்தப் புத்தகத்தைப் பற்றி அட்டை என்ன கூறுகிறது?’ என்று ஒரு கேள்வியைக் கேட்கிறார்.

அடுத்து புத்தகத்தைத் திறக்கிறார்.  புத்தகத்தி லுள்ள படங்களைப் பார்க்கச் சொல்லுகிறார்.  படங்களின் மூலம் கதையைப் புரிந்துகொள்ளச் சொல்லுகிறார்.

குழந்தையை புத்தகத்தை வாசிக்கச் சொல்கிறார்.  தெரியாத வார்த்தைகளை படங்களின் உதவி கொண்டு அறியச் சொல்லுகிறார்.  திரும்பத் திரும்ப வரும் சொற்களை சுட்டிக்காட்டச் சொல்லு கிறார்.  கடினமான, புதிய வார்த்தைகளை வாசித்துக் காட்டுகிறார்.  நீளமான வாக்கியத்தைப் பிரித்து வாசிக்க உதவுகிறார்.  பொருளைப் புரிந்துகொள்ள வாக்கியங்களின் அமைப்பை விளக்குகிறார்.  முடிவாக, அப்புத்தகத்தைப் பற்றி அறிந்து கொண்டதை வினவுகிறார்.  வாசிப்பில் பயிற்சி பெற்ற குழந்தைகள் நாளடைவில் ‘வாசிப்பில் புலி’ என்று பட்டம் வாங்கி விடுகின்றன.  இது அமெரிக்க நூலகத்தில் நடைபெறுகிற ஒரு பணி.

நம் நூலகத்தின் நிலை என்ன? தமிழ்க் குழந்தை களை புத்தக வாசிப்பில் ஈடுபடுத்த பள்ளியிலும் நூலகத்திலும் நாம் என்ன பணிகளைச் செய்திருக்கிறோம்?

நூலகத்தில் நூலகர் புத்தகங்களை இரவல் கொடுத்து வாங்கி வைக்கும் பணியில் மட்டும் திருப்தி அடைந்து விட முடியாது என்று நான் நம்புகிறேன்.  புத்தகங்கள் வெறும் புத்தகங்களல்ல; ஆயிரம் முகங்கள் கொண்ட வாழ்க்கையின் பதிவுகள் அவை.  பதிவின் ரேகைகள் நூலகரின் விழிகளில் தெரிய வேண்டும்.  வருங்காலமாக திகழ்கிற குழந்தைகளுக்கு வழிகாட்ட வேண்டும்.

குழந்தைகளிடம் படைப்பாற்றல் முகிழ்ப் பதற்கு புத்தக வாசிப்பே துணை செய்கிறது.  சரியான புத்தகம்,  சரியான நூலகர், சரியான ஆசிரியர் என்று தமிழ்க் குழந்தை சமூகம் பயணிக்க வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது என்று சொல்லத் தோன்றுகிறது.

Pin It