“தனக்கு நேர்ந்த இன்னல்களுக்காக நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்று அம்பேத்கர் செல்லவில்லை.”

“அவமானங்களையும், இனப்பாகுபாடுகளையும் அம்பேத்கர் -தன் வாழ்நாளில் ஏராளமான சந்தர்ப்பங்களில் சந்தித்தார்.”

ambedkar 452 இவ்வாண்டின் நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளில் இவ்வாறு சொல்லியிருக்கிறார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்.

அவர் எதைக் குறிப்பிட்டுச் சொல்ல வருகிறார் என்பது புரிகிறது.

டாக்டர் அம்பேத்கர் இந்திய நாடு முழுமைக்கும் உரிமையானவர். வால்கா பள்ளத்தாக்குப் பகுதிகளிலிருந்து, ஆப்கானிஸ்தான் வழியாக கள்ளத்தனமாக இங்கு குடியேறியவர் அல்லர், அவர்.

இதைத்தான் மல்லிகா அர்ஜுன கார்க்கே ‘ஆரியர்களான நீங்கள்தான் வெளியிலிருந்து வந்துள்ளீர்கள்’ என்று நேருக்குநேர் பதில் செல்லியிருக்கிறார்.

நாட்டைவிட்டு வெளியேறுவதாகச் சொல்லாத அம்பேத்கர் அவர்கள், அப்படிச் செல்லாததனால் அவரை அவமானப்படுத்துகிறாரா, அல்லது அவர் நாட்டைவிட்டு வெளியேறவில்லையே என்று வருத்தப்படுகிறாரா ராஜ்நாத் சிங் என்பதுதான் புரியவில்லை.

இரண்டாவது இனவேறுபாடுகள், அதனால் அவமானங்கள், இன்னல்களால் பாதிப்புகளுக்கு ஆளாகியிருக்கிறார் அம்பேத்கர் என்று அமைச்சர் சொல்வது உண்மை.

அதற்காக அம்பேத்கர் தலைகுனியவில்லை. எதிர்த் தாக்குதல்கள் நடத்தினார், அறிவாயுதங்களால்.

இந்நாட்டில் இனவேறுபாடுகள் யாரால் ஏற்படுத்தப்பட்டது. யாருடைய ‘வேத’ நூல்கள் நால்வருனங்களைச் சொன்னது, சாதிகளைச் சொன்னது, தீண்டாமையைச் சொன்னது.

ரிக் என்ற நூலும், பகவத்கீதை என்ற நூலும், மனுஸ்மிருதி என்ற நூலும் சொன்ன கொடுமைகள்தானே ராஜ்நாத் சிங் சொல்லும் இனப்பாகுபாடுகள். அவைதானே அம்பேத்கர் அவர்களை அவமானப்படுத்தியவை.

அம்பேத்கர் தனிமனிதர் அல்லர். ஒடுக்கப்பட்ட, தீண்டாமைக்கு உள்ளாக்கப்பட்ட ஒட்டுமொத்த மக்களின் பிரதிநிதி அவர்.

சாதியத்தால் சிதறுண்டு போன மக்களை, சாதியத்திற்கு எதிராக அணிதிரட்டியவர்.

சாதியத்தின் ஊற்றுக்கண் இந்து மதம் என்று உலகறியச் செய்து அதை இறுதி வரை எதிர்த்துப் போராடியவர்.

இந்துவாகப் பிறந்தேன். ஆனால் இந்துவாகச் சாகமாட்டேன் என்று சொன்னவர்.

சொன்னபடியே இந்துமதத்தை விட்டு வெளியேறி பவு-த்தத்தை ஏற்றவர்.

ஆரியர்களை வந்தேறிகள் என்றும், இந்நாட்டு மண்ணின் மைந்தர்களை நாகர் இன மரபின் வழித் திராவிடர் என்றும் அழுத்தமாகச் சொன்னவர்.

இப்படிப்பட்ட தலைவரை இன்றும் கூடக் கருத்தால் எதிர்க்க முடியாமல், அரவணைத்து அழிக்கப் பார்க்கும் முயற்சியே, பா.ஜ.க இன்று டாக்டர் அம்பேத்கர் மீது காட்டும் பரிவு.

எப்படியோ உண்மையை உலகறிய நாடளுமன்றத்தில் ஒப்புக்கொண்டார் ராஜ்நாத் சிங், இனவேறுபாடுகளின் மூலம் இந்து மதம்தான் என்று.

அம்பேத்கர் ஒரு கலகக்காரர், போராளி போராடுவார்.

நாட்டைவிட்டு வெளியேறி சுற்றித்திரிய அவர் ஒன்றும் பள்ளத்தாக்குகளில் பிறக்கவில்லை.

இந்த மண்ணின் மைந்தர் நாட்டின் சொத்து அவர்.

Pin It