தொண்டைமான் இளந்திரையனிடம் பரிசில் பெற்று மீண்ட பாணன் ஒருவன், வறுமை காரணமாக வள்ளல்களை நாடிச் செல்லும் மற்றொரு பாணனை வழியிடைக் கண்டான். கண்ட அவன் - பரிசில் பெறச் செல்லும் பாணனை இளந்திரையனிடம் ஆற்றுப்படுத்தினான். அங்ஙனம் ஆற்றுப்படுத்திய பொழுது, அவன் செல்ல வேண்டிய நாடுகள், மலைகள்,அருவிகள், ஆறுகள், சோலைகள், வனங்கள், ஊர்கள், மக்கள் முதலியவற்றைப் பற்றியெல்லாம் விரிவாகவும் விளக்கமாகவும் கூறினான்.
‘பகல் பெயன்
மழை வீழ்ந்தன்ன மாத்தாட் கமுகின்
புடை சூழ் தெங்கின் முப்புடைத் திரள்காய்
ஆறுசெல்வம்பலர் காய் பசி தீரச்
சோறடு குழிசி இளக விழூஉம்
வீயா யாணர் வளங் கெழு பாக்கத்துப்
பன்மர நீளிடைப் போகி நன்னகர்
விண்டோய் மாடத்து விளங்கு சுவருடுத்த
வாடா வள்ளியின் வளம்பல தரூஉம்
நாடு பல கழிந்த பின்றை”
(பகற் பொழுதிலே பெய்தலையுடைய மழை கால் விழுந்தாலொத்த பெரிய தண்டினையுடைய கமுகுகளின் பக்கத்தே சூழ்ந்த தெங்கினுடைய மூன்று புடைப் பினையுடைய காய், வழிச் செல்கின்ற புதியோர் தமது மிக்க பசி தீரும்படி சோற்றை ஆக்குகின்ற பானை அடுப்பினின்றும் அசைந்து விழும்படி, நிலத்தே விழும், குறையாத புது வருவாயினையுடைய செல்வம் பொருந்தின பாக்கத்திடத்துப் பல மரங்கள் வளர்ந்த இடத்திலே போய், விளங்குகின்ற மதில் சூழ்ந்த விண்ணைத் தீண்டும் மாடங்களையுடைய நன்றாகிய ஊர்களிலே, வாடுங் கொடியினையுடைய வள்ளியல்லாத வள்ளிக் கூத்தின் வளப்பம்பலவற்றையும் தருதற்குக் காரணமாகிய புறநாடுகள் பலவற்றையும் போன பின்பு) என்று, ஆற்றுப் படுத்திய பாணன் கூறியதாகப் புலவர்கடியலூர் உருத்திரங்கண்ணனார் பெரும்பாணாற்றுப்படை (3612- 71) யில் கூறியுள்ளார்.
உழைக்கும் மக்களான அடிமைகள் வாழ்கின்ற ஊர்ப் பகுதிகளைப் பாணர்கள் கடந்து செல்ல நேர்ந்த போது, அவ்வூர் பற்றியும் அங்கு வாழும் மக்களைப் பற்றியும் எதுவும் கூறாமல் நாடு என்னும் ஒற்றைச் சொல்லால் தொகுத்துக் கூறினார். பாணன் விரித்துக் கூறாமல் அவ்வாறு ஒற்றைச் சொல்லாமல் தொகுத்து கூறியதாகப் புலவர் பாடியுள்ளதற்கு உரையாசிரியர் நச்சினார்க்கினியர் கூறும் காரணம் வேதனைக்குரிய தாகும்.
அம்மக்களைப் பற்றியும் அவர்கள் வாழும் ஊர்பற்றியும் பாடுவதற்கு எத்தனையோ விஷயங்கள் இருந்திருக்கலாம். அம்மக்களின் அடிமை நிலையின் அவலம் குறித்துப் பாடலாம். அவர்களது துன்ப துயரம் குறித்துப் பாடலாம். ஆண்டைகளின் அடக்குமுறை குறித்துக் கூறலாம். அடிமைகளின் வறுமை குறித்தும் அல்லல் குறித்தும் பாடலாம்;. ஆனால் புலவர் உருத்திரங்கண்ணனார். அவற்றையெல்லாம் கண்டு கொள்ளாமல் ‘வாடாவள்ளியின் வளம்பல தரூஉம் நாடு ‘ (வாடுங் கொடியினையுடைய வள்ளியல்லாத வள்ளிக் கூத்தின் வளப்பம் பலவற்றையும் தருதற்குக் காரணமாகிய புறநாடு) என்று, அம்மக்கள் காணும் வள்ளிக் கூத்து பற்றி மட்டும் கூறுவதற்கான காரணத்தை உரையாசிரியர் நச்சினார்க்கினியர் வெளிப்படையாகவே கூறுகிறார். ‘சிறப்புடைய நாடுகளைப் பாடி தாழ்ச்சி பெற்ற இழிகுலத்தோர் உறையும் நாடுகளைப் பாடாமல் தொகுக்கிறார். அவை புறநாடென்பது தோன்ற அவர்கள் காண்டற்குரிய வள்ளிக் கூத்தினையும் கூறி அதனை வெளிப்படுத்தினார்” என்பது உரையாசிரியர் கூறும் காரணமும் விளக்கமும் ஆகும். அம் மக்கள் ‘தாழ்ச்சிபெற்ற இழிகுலத்தோர்” என்பதை உணர்த்துவதற்காகவே அவர்கள் காணும் வள்ளிக் கூத்து பற்றிக் கூறினார். இங்கு, ‘வள்ளி, வாடுங் கொடியல்லாத வள்ளிக் கூத்து, அ‡து இழிகுலத்தார் காணும் கூத்து” என்று பிற உரையாசிரியர்கள் கூறியிருப்பதும் நம் கவனத்துக்கு உரியதாகிறது.
மேன்மக்கள் வாழும் நாடுகளையும் ஊர்களையும் விரிவாகவும் விளக்கமாகவும் புகழ்ந்து பாடிய புலவர் அடிமைகளான உழைக்கும் மக்கள் வாழும் பகுதிகளை ‘நாடு” என்னும் ஒற்றைச் சொல்லால் குறித்துச் சென்றார். அம்மக்கள் தாழ்ச்சி பெற்ற இழிகுலத்தார் என்பதால், அவர்கள் வாழும்பகுதியை விரித்துப்பாடாமல் நாடு என்னும் ஒற்றைச் சொல்லால் தொகுத்துக் கூறினார்.
மக்கள் சேர்ந்து வாழும் பகுதி சேரி எனப்பட்டது. பார்ப்பனச்சேரி என்பன போன்ற சொற்கள் இதனை உணர்த்தும். ஆனால், தாழ்ச்சி பெற்ற இழிகுலத்தார் உறையும் பகுதிகளைக் குறிக்கும் போது புறம் என்னும் அடைமொழியும் சேர்த்து’புறச்சேரி” ‘புறநாடு” என்று குறித்தனர். உழைக்கும் மக்களான அடிமைகள் வாழும் பகுதியாகையால் அவை அவ்வாறு கூறப்பட்டன. அப்பகுதிகளில் வாழ்வோர், தாழ்ச்சி பெற்ற இழிகுலத்தோர் என்பதை உணர்த்துவதற்காக, ஒதுக்கப்பட்டவர் என்ற பொருளில் அவை ‘புறச்சேரி புறநாடு” என்று வழங்கப்பட்டன. சேரி நாடு என்னும் சொற்கள் புறம் என்னும் அடைமொழி பெறாவாயின் அடிமை எஜமானர்களான மேன் மக்கள் உறையும் பகுதிகளைக்குறித்தன. அப்பகுதிகளைப் புலவர்கள் புகழ்ந்து பாடினர்.
உழைக்கும் வர்க்கத்தாரை ‘தாழ்ச்சி பெற்ற இழிகுலத்தார்” என்றும் ‘அவர்களைப் பற்றியும் அவர்கள் வாழும் பகுதிகளைப் பற்றியும் பாடுதல் கூடாது” என்றும் புலவர்கள் கருதியது, உழைக்கும் மக்கள் பால் அவர்கள் கடைப்பிடித்த தீண்டாமை உணர்வின் வெளிப்பாடேயாகும் எனலாம்.
தாழ்ந்த சாதியாரைத் தொடுவது மட்டுமல்ல, அவர்களைக் காண்பதும் தீட்டு, பேசுவதைக் கேட்பதும் தீட்டு என்று கருதும் வழக்கமும் உயர்சாதியாரிடம் இருந்தது. அவ்வழக்கம் இன்றும் சில இடங்களில் நடைமுறையில் உள்ளது. இதனை கண்டுமுட்டு கேட்டுமுட்டு என்பர்.
பார்ப்பார் வாழும் தெருக்களில் தாழ்த்தப்பட்டோர் நடந்து செல்லத் தடை விதிக்கப்பட்டிருந்ததை வைக்கம் நிகழ்வுகள் நமக்குக் காட்டுகின்றன. இது அண்மைக்கால வரலாறு நமக்குக் கூறும் செய்தியாகும். தில்லையில் பார்ப்பர் வாழும் தெரு வழியாக நடந்து சென்று நடராசர் கோயில் வாசலை அடைந்ததற்காக நந்தன் கோயில் வாசலிலேயே தீயிட்டுக் கொளுத்தப்பட்டான். நந்தனுக்குப் பார்ப்பர் இழைத்த இக்கொடுமையை விட, இலக்கியத்தில் புலவர் உழைக்கும் மக்கள் பால் கடைப்பிடித்த இந்த இலக்கியத்தீண்டாமை மிகப் பெரிய கொடுமை எனல் மிகையன்று, இத்தீண்டாமையை இலக்கியத்தீட்டு எனல் சரியேயாகும்.
இங்கு கூறப்பட்ட இச்செய்திகள் சங்க காலத்தில் அடிமைச் சமூகத்திலும் நிலப்பிரபுத்துவ சமூகத்திலும் தீண்டாமை உணர்வு மேற்குலத்தார் உள்ளத்தில் எந்த அளவுக்கு ஆழமாக வேரூன்றியிருந்தது என்பதைத் தெளிவாக உணர்த்துகிறது.
கள் கொண்டிக் குடிப்பாக்கம்
‘கள் கொண்டிக் குடிப்பாக்கம்” என்பது மதுரைக் காஞ்சி (137) யில் பயிலும் ஓர் அடி ‘. கள்ளாகிய உணவினையுடைய இழிந்த குடிகளையுடைய சீறூர்” என்பது நச்சினார்க்கினியர் இவ்வடிக்குக் கூறும் உரை ஆகும். உழைக்கும் மக்களான களமரும் உழவரும் தம் வேலைக் களைப்பை மறத்தற் பொருட்டுக் கள் உண்டனர். இது குறித்துச்சங்க இலக்கியங்கள் விரிவாகக் கூறுகின்றன. கள் உண்ணும் களமர்களை இழிந்த குடிகள் என்று இகழ்வதும் அவர்கள் வாழ்ந்த பகுதிகளைத் தனியாக ஒதுக்கி வைப்பதும் ஆகிய செயல்கள் சங்க காலத்தில் நிகழ்ந்ததனைச் சங்க இலக்கியங்கள் தெளிவாகக் காட்டுகின்றன.
இங்கு நாம் மற்றொரு செய்தியையும் நினைவில் கொள்ள வேண்டும் .பூக்கமழ்தேறல், தண்கமழ் தேறல், என்று புலவர்கள் புகழ்ந்து பேசும் மதுவகை களைப்பொற்கலங்களில் பெய்து இளமகளிர் எடுத்து உண்பிக்க, ஊனும் நறவும் உண்டு களித்த செல்வர்கள் ஆடிய காமக் களியாட்டங்களைப் புலவர்கள் புகழ்ந்து பாடினர். ஆனால் நாளெல்லாம் வயல்களிலும் வைக்கோற் போர்களிலும் உழைத்துக்களைத்த உழவர்கள் தம் வேலைக் களைப்பை மறத்தற் பொருட்கள் உண்டனர். அங்ஙனம் உண்டாரை ‘இழிந்தகுடிகள்” என்றும் அவர்கள் வாழ்ந்த ஊர்ப் பகுதிகளை ‘கள் கொண்டிக்குடிப்பாக்கம் ‘ என்றும் புலவர்கள் இழித்தும் பழித்தும் பேசினர். இம் முரண்பாட்டையும் சங்க இலக்கியங்கள் நமக்குக் காட்டுகின்றன.
புறச்சேரி என்னும் தொடர், உழைக்கும் மக்களாகிய அடிமைகள் ஊருக்கு வெளியில் குடிசைகள் அமைத்துக் தங்கும்படி நிர்பந்திக்கப்பட்டனர் என்ற செய்தியைத் தெளிவாக உணர்த்துகிறது. ஆண்டைகள் அடிமைகள் பால் கடைப்பிடித்த தீண்டாமையின் விளைவே இது எனல் சரியான கூற்றேயாகும். அடிமைச் சமூகம் கால் கொள்ளத் தொடங்கிய காலகட்டத்திலேயே தீண்டாமையும் கால் கொண்டு விட்டது. தமிழ் மரபுக்கும் தமிழர் நலனுக்கும் புறம்பான தீண்டாமையும் நால் வருணப்பாகுபாடும் சங்க காலத்தில் தமிழகத்தில் அடிமை எஜமானர்களால் தீவிரமாகக் கடைப்பிடிக்கப்பட்டன என்பதைச் சங்க இலக்கியங்கள் தெளிவாகக்காட்டுகின்றன.
‘வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும்
கீழ்ப்பாலொருவன் கற்பின்
மேற்பாலவனும் அவன் கட்படுமே’ என்று, புறநானூறு (183) நால்வருணப் பாகுபாடும் மேற்குலம் கீழ்க்குலம் என்ற பேதமும் தமிழகத்தில் தீவிரமாக நிலவியது பற்றிக் கூறுகிறது. சங்க காலத்தில் தமிழகத்தில் நிலவிய சாதி ஏற்றத்தாழ்வுகள் பற்றி வள்ளுவரும் விரிவாகவே கூறியுள்ளார்.
‘மேற்பிறந்தாராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
கற்றார் அனைத்திலர்பாடு”
‘மேலிருந்தும் மேலல்லர் மேலல்லர் கீழிருந்தும்
கீழல்லர் கீழல்லவர்”
என்னும் குறட்பாக்கள் சாதி ஏற்றத்தாழ்வும் தீண்டாமையும் சங்க காலத்தில் தமிழகத்தில் நிலவியிருந்தது குறித்துக் கூறுகின்றன. திருவள்ளுவர் கணியன் பூங்குன்றனார் முதலிய சான்றோர்கள் அத்தீமைகளை எதிர்த்துக் குரல் கொடுத்ததையும் சங்க இலங்கியங்கள் பதிவு செய்துள்ளன. தமிழகத்தில் நால்வருணப்பாகுபாடும் சாதி ஏற்றத் தாழ்வும் பரவுவதற்கு ஆரியப்பார்ப்பார் எந்த அளவுக்குக் காரணராக இருந்தனரோ அந்த அளவுக்குத் தமிழ் மன்னர்களும் காரணமாக இருந்தனர் என்பது வரலாறு காட்டும் உண்மையாகும்.
அடிமைகள் பன்றி வளர்த்தல்
அடிமைச் சமூகத்தில் உணவு உடை முதலியவற்றைப் போலவே அடிமைகளின் உறைவிடமும் எளிய குடிசைகளாகவே இருந்தன. வைக்கோலும் புல்லும் வேய்ந்த சிறு குடிசைகளே அவர்களின் உறைவிடமாயின. ‘வரம்பிற்புது வை வேய்ந்த கவி குடில்’ ( வரம்பிடத்துப் புதிய வைக்கோலாலே வேய்ந்த கவிந்த குடில் ) என்று பெரும்பாணாற்றுப்படை கூறுகிறது. ‘ குடில்கள் பன்றி முதலியவற்றைக் காத்தற்குக் கட்டினவை” என்று அடிமைகள் வாழ்ந்த குடிசைகள் பன்றிக் குடிசைகளோடு சேர இருந்ததற்கு உரையாசிரியர் நச்சினார்க்கினியர் சான்றளிக்கிறார்.
ஆனால் அடிமைகள் இக்குடிசைகளை ஊருக்குள் அமைத்துத்தங்கிட அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் ஊருக்குப் புறத்தே ஓதுக்கிடங்களில் தான் குடிசைஅமைத்துத் தங்கும்படி ஆண்டைகளால் வற்புறுத்தப்பட்டனர். இதனை
‘பறழ்பன்றிப் பல கோழி
உறை கிணற்றுப் புறச்சேரி”
(குட்டிகளையுடைய பன்றிகளையும் பலசாதியாகிய கோழிகளையும் உறை வைத்த கிணறுகளையும் உடைய இழிகுலத்தோர் இருக்கும் தெருவுகள் ) என்று பட்டினப்பாலை ( 75-76) கூறுகிறது. சேரிகளில் வாழ்ந்த அடிமைகள் பன்றிகளையும் கோழிகளையும் வளர்த்தனர். அடிமைகள் பன்றி வளர்த்தனர் என்ற இச்செய்தியே, உழைக்கும் மக்கள் எந்த அளவுக்கு அடிமைச் சேற்றில் ஆழமாகப் புதைக்கப்பட்டனர் என்பதைத் தெளிவாக உணர்த்துகிறது.
அடிமைகள் பன்றி வளர்த்ததால் தான் அவர்கள் ஊருக்குள் குடிசையமைத்து வாழ்;ந்திட அனுமதிக்கப்படவில்லை என்ற கூற்றும் ஏற்கத்தக்கதன்று, ஏனெனில் செல்வர்களான வணிகர்கள் அங்காடித் தெருவில் பன்றிகளை வளர்த்தனர். இதனைப் பெரும் பாணாற்றுப்படை (339-414) நமக்குக் கூறுகிறது.
‘கள்ளடு மகளிர் வள்ள நுடக்கிய
வார்ந்துகு சின்னீர் வழிந்த குழம்பின்
ஈஞ்சேறாடிய இரும்பல் குட்டிப்
பன்மயிர்ப் பிணவோடு பாயம் போகாது
நென்மா வல்சி தீட்டிப்பன்னாட்
குழிநிறுத் தோம்பிய குறுந்தாளேற்றை பெரும்பாணாற்றுப்படை : 339 -45
(கள்ளைச் சமைக்கின்ற மகளிர் வட்டில் கழுவின வடிந்து சிந்தும் சில நீர் பலகால் வடிதலின் நிறைந்து வழிந்த குழம்பிடத்தே ஈரத்தையுடைய மயிரையுடைய பெண் பன்றிகளுடனே புணர்ச்சியைக் கருதும் கருத்தாற்போகாமல் நெல்லை இடித்த மாவாகிய உணவைத் தின்னப் பணணிப் பலநாள் குழியில் நிறுத்திப் பாதுகாத்த குறிய கால்களையுடைய ஆண்பன்றி) என்று செல்வர்கள் பன்றிவளர்த்தமைக்குக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் சான்றளிக்கிறார்.
செல்வர்கள் அங்காடித் தெருவில் ஆண்பன்றிகளைக் குழிக்குள் நிறுத்தி வளர்த்தனர். அவை பெண்பன்றிகளைப் புணர்வதைத் தடுப்பதற்காகக் குழிக்குள் நிறுத்தப்பட்டன. ‘ புணரிற்கொழுப்பின்றாம்” என்று நச்சினார்க்கினியர் இதற்குக் காரணம் கூறுகிறார். புணர்ச்சியைத் தடுப்பதற்காக மட்டுமல்ல, மலம் தின்பதைத் தடுப்பதற்காகவும் அவை குழிக்குள் நிறுத்தப்பட்டன. அரிசிமா முதலிய உயர்வகைத் தீனியைத் தின்னக் கொடுத்தனர். கொழுத்த நிணமும் தசையும் பெறுவதற்கே அவர்கள் அங்ஙனம் செய்தனர். பன்றிவளர்ப்பிலும் கூட ஆண்டைகளின் செல்வச் செருக்கு வெளிப்படுத்தப் படுவதை இங்குக் காண்கிறோம்.
அடிமைகள் ஆண்டைகளைப் போல் ஆடுமாடுகளை வளர்க்க முடியாது. அதற்கு அவர்கள் வாழ்ந்த சமூக அமைப்பே காரணம் ஆகும். அவர்கள் தனியுடைமை உணர்வு தலை தூக்கியிருந்த அடிமைச் சமூகத்தில் வாழ்ந்தனர். ஆடுகளையும் மாடுகளையும் வளர்க்க வேண்டுமானால் விரிவான மேய்ச்சல் நிலங்கள் வேண்டும். கால்நடைகளுக்குத் தேவையான தீவனப் பயிர்களை வளர்க்க விளைநிலம் வேண்டும். மக்கள் கணசமூகமாக வாழ்ந்த காலகட்டத்தில் சமூகத்துக்குப் பொதுவாக இருந்த நிலம் அடிமைச் சமூகத்தில் தனியுடைமை ஆக்கப்பட்டுவிட்டது. அரசரும் படைத்தலைவரும் பார்ப்பாருமாகிய தனிமனிதர்கள் பொதுவாக இருந்த நிலங்களை அபகரித்து ஆக்கிரமித்துக் கொண்டனர். விடுநிலம் எனப்பட்ட பொது மேய்ச்சல் நிலம் தனியார் கைகளுக்குப் போய்விட்டது. இவ்வாறு, விளைநிலங்களும் மேய்ச்சல் நிலங்களும் தனியுடைமையாகிவிட்டன. இதனை,
‘தண்பணை தழீஇய தளராவிருக்கைப்
பகட்டா வீன்ற கொழுநடைக்குழவிக்
கவைத்தாம்பு தொடுத்த காழூன்றல் குல்
ஏணிஎய்தா நீணெடு மார்பில்
முகடு துமித்தடுக்கிய பழம்பல்லுணவின்
குமரி மூத்த கூடோங்குநல்லில்”
(பெருமையுடைய பசுக்கள் ஈன்ற வளைந்த அடியையுடைய கன்றுகளைக் கட்டின தாமணியையுடைய நெடிய தாம்புகள் கட்டிக் கிடக்கின்ற தறிகள் நட்ட பக்கத்தையும் ஏணிக்கு எட்டாத நெடிய வடிவினையும் தலையைத்திறந்த உள்ளே சொரியப்பட்ட பழையவாகிய பலநெல்லினையும் உடையவாய், அழியாத் தன்மையவாய் முதிர்ந்த கூடுகள் வளர்ந்தநல்ல இல்) என்று, பெரும்பாணாற்றுப்படை (242 -47) கூறுகிறது.
அடிமை எஜமானர்களின் இல்லங்களில் ஏணிக்கு எட்டாத உயரத்தையுடைய நெல் நீரம்பிய நெற்கூடுகளும் அவற்றுக்கு அருகில் பசுக்களும் கன்றுகளும் கட்டப்பட்ட கட்டுத்தறிகளும் இருந்ததைக் கூறும் பெரும்பாணாற்றுப்படை அடிகள், நிலமும் கால்நடைகளும் ஆண்டைகளின் ஆக்கிரமிப்புக்கு உட்படுத்தப்பட்ட செய்தியை உணர்த்துகின்றன.
இந்நிலையில் ஆண்டைகளைப் போல அடிமைகளும் ஆடுமாடுகளை வளர்க்க நினைத்தால் அவற்றை எங்கே கொண்டு போய் மேய்ப்பது? கால்நடைகளுக்குத் தேவையான தீவனப் பயிர் வளர்ப்பதற்கு வேண்டிய விளைநிலங்களுக்கு எங்கே போவது? எனவே தான், அடிமைகள் மேய்ச்சல் நிலமோ தீவனப்பயிர்களோ தேவைப்படாத எளிமையாக வளர்ப்பதற்கேற்ற பன்றிகளையும் கோழிகளையும் வளர்க்க முற்பட்டனர். தாம் வாழும் சேரிகளிலும் குடிசைகளிலும் அவற்றை வளர்த்தனர். பன்றி வளர்ப்பு எளிமையான தொழிலாக இருந்தது. இவற்றை வளர்ப்பதற்கு கடின உழைப்பு தேவையில்லை. பொருட் செலவு ஏதும் இல்லை. மேய்ச்சல் நிலம் தேவையில்லை. தீவனம் எதுவும் கொடுக்க வேண்டியதில்லை. எளிய பராமரிப்பில் இவற்றை வளர்த்துப் பயன் பெறலாம். இவை அடிமைகளின் இறைச்சித்தேவையையும் ஓரளவு நிiவு செய்தன. அதனால் தான் அடிமைகள் பன்றிகளைக் குடிசைகளில் வளர்த்தனர்.
மனிதன் வேட்டைச் சமூகமாக வாழ்ந்த கால கட்டத்தில் வேட்டையின் மூலமாக உணவுத்தேவையையும் இறைச்சித் தேவையையும் ஓரளவு நிறைவு செய்து கொண்டான். ஆனால் அடிமைச் சமூகத்தில், சமூகம் இரண்டு வர்க்கங்களாக – உழைக்கும் வர்க்கம் உழைப்பைச் சுரண்டும் வர்க்கம் என்று – பிளவுபட்ட நிலையில் அடிமைகளான உழைக்கும் மக்கள் தங்கள் உழைப்பின் பயனைச் சுரண்டும் வர்க்கத்தினிடம் பறிகொடுத்;து விட்டு வாய்க்கும் கைக்கும் எட்டாத நிலையிலேயே இருந்து வந்தனர். உணவு பெறுவதே பெரும்பாடாக இருந்தநிலையில் அவர்கள் ஊனைப் பற்றி நினைத்தாவது பார்க்க முடியுமா ? எனவே தான் அவர்கள் தங்கள் இறைச்சித் தேவைக்காகப் பன்றிகளை வளர்ந்தனர்.
வேட்டைச் சமூகத்தில் எயினர்கள் வேட்டையாடிக் கொண்டு வந்த சிறிய விலங்கான உடும்பைக் கூடச் சுட்டு அனைவரும் தமக்குள் சமமாகப்பங்கிட்டு உண்டதனை நமக்குக் கூறிய சங்க இலக்கியங்கள், தற்போது அடிமைச் சமூகத்தில் ஊன் விலைக்கு விற்கப்பட்ட காட்சியைக் காட்டுகின்றன.
‘தினற் பொருட்டால் கொல்லாது உலகெனில் யாரும்
விலைப் பொருட்டால் ஊன் தருவார் இல்”
என்று, ஊன் விலைக்கு விற்கப்பட்ட செய்தியைத் திருவள்ளுவர் கூறுகிறார். ஊன் மட்டுமல்ல, உணவும் விiலைக்கு விற்கப்பட்டது. அப்பம் முதலிய உணவுப் பண்டங்கள் அங்காடித் தெருவில் விற்கப்பட்ட செய்தியைச் சங்க இலக்கியங்கள் அறிவிக்கின்றன.
ஊன் விலைக்கு விற்கப்பட்டாலும் அதனை வாங்கியுண்னும் நிலையில் அடிமைகள் இல்லை. அடிமைகளின் வாங்கும் சக்தி என்பது பூஜ்ஜியமாகவே இருந்தது. எனவே தான் அவர்கள் சேரிகளில் பன்றிகளை வளர்த்தனர். பன்றி வளர்த்தல் இழிதொழிலாகக் கருதப்பட்டமையால் மேன் மக்கள் எனப்பட்ட அடிமை எஜமானர்கள் அவற்றை வளர்க்க வில்லை. கிளிகளைக் கூண்டுகளில் வளர்த்த பார்ப்பார் தம் மனைகளில் கோழிகளையும் நாய்களையும் வளர்க்கவில்லை. செல்வர்கள் அங்காடித்தெருவில் பன்றிகளைக் குழிக்குள் நிறுத்தி வளர்த்த செய்தி முன்னர்க் கூறப்பட்டது.
செல்வர்களான ஆண்டைகள் ஆடு மாடு மான் முதலியவற்றின் கொழுத்த ஊனை நெய்யிற் பெய்து பொரித்தும் வறுத்தும் சூடு குறையாமல் சுவையாகத் தின்று கொழுத்தனர். ஆனால் உழைக்கும் வர்க்த்தினரான அடிமைகள் வயல்களில் எளிதாகக் கிடைக்கும் நண்டு நத்தை தவளை மீன் ஆமை முதலியவற்றின் இறைச்சியைச் சரியாகப்பக்குவம் செய்யாமல் அவித்தும் சுட்டும் தின்றனர். அடிமைகள் பக்குவம் செய்யப்படாத இறைச்சியை உண்டனர் என்ற செய்தி முன்னர்க் கூறப்பட்டுள்ளது. அவர்கள் ஆமையும், மீனும் உண்டனர் என்ற செய்தியை ‘அரிநர் கீழ் மடைக்கொண்டவாளையும் உழவர் படைமிளிர்ந் திட்டயாமையும்’ என்று புறநானூறு ( 42 ) கூறுகிறது.
ஏணிக்கு எட்டாத உயரமுடைய நெற்கூடுகளும் அவற்றுக்கு அருகில் பசுக்களும் கன்றுகளும் கட்டப்பட்ட தொழுக்களும் ஆண்டைகள் மற்றும் அந்தணர்களின் வளமனைகளில் அமைந்திருந்த காட்சியை நமக்குக் காட்டியசங்க இலக்கியங்கள், அடிமைகளின் குடிசைகளோடு பன்றிக் குடிசைகளும் சேர அமைந்திருந்த புறச் சேரிகளையும் காட்டத் தவறவில்லை.
மனிதன் காட்டுமிரண்டி நிலையிலும் அநாகரிக நிலையிலும வேட்டைச் சமூகமாகவும் மேய்ச்சல் சமூகமாகவும் வாழ்ந்த கால கட்டத்தில் ஈத்திலை வேய்ந்த எய்ப்புறக் குரம்பையில் வாழ்ந்தது போலவே வளர்ச்சியும் முன்னேற்றமும் ஏற்பட்டிருந்த அடிமைச் சமூகத்தில் அடிமைகள் ஓட்டையும் பொத்தலுமான ஓலைக்குடிசைகளில் வாழ்ந்த அவலம் தொடரவே செய்தது. இதனைச் சங்க இலக்கியங்கள் தெளிவுறக் காட்டுகின்றன.