கற்பூர மஞ்சரி என்றொரு நாடகம். அது பிராகிருத மொழியில் எழுதப்பட்டது. குறிப்பாக மகாராஷ்டிரி என்ற கிளைமொழியில் படைக்கப்பட்டது. இக்கிளைமொழி பிராகிருத கிளை மொழிகளில் மிகவும் சிறந்தது (Prakrit Par Excellence). பிராகிருத மொழியில் எழுதப்பட்ட ஒரே நாடகமும் இதுதான். சமஸ்கிருத நாடகங்களில் பிராகிருத கிளை மொழிகளும் கலந்து வரும்.ஆனால் கற்பூர மஞ்சரியில் ஒரே கிளை மொழிதான் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது நாடக ஆசிரியரின் மொழிப் பற்றினை வெளிப்படுத்துகிறது.
இந்நாடகத்தை எழுதியவர் ராஜசேகரன் என்ற பெரும் புலவராவார். அவருக்கென்று பிராகிருத இலக்கிய வரலாற்றில் தனி இடமுண்டு.இவர் தக்காணத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். தென்னிந்தியாவைக் குறித்து அறிந்தவர். அவர் படைத்த இந்நாடகத்தில் தென்னகத்தைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. அவற்றைச் சுட்டிக் காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கம். மேலும் இந்த நாடகத்தில் பாணர்கள் (bards) இடையிடையே வந்து செல்கின்றனர். அவர்கள் அரசர்களை வாழ்த்துவதைக் காண முடிகிறது. பழந்தமிழில் வரும் பாணர்களோடு இவர்களை ஒப்பிட்டுக் காட்டலாம். நாடகத்தில் வரும் சுமார் 150 சொற்கள் தமிழிலும் காணப்படுகின்றன. அவை பொதுவான சொற்கள் எனக் கொள்ளலாம். இச்சொற்களில் சொற்பொருள் மாற்றங்கள் அறிந்து கொள்ளத் தக்கவை. ஒலிமாற்றங்களும் ஆராயத்தக்கவை.
ராஜசேகர- நாடக ஆசிரியர்:
ராஜசேகரா கி.பி.10 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர் என்று சிலர் கருதுகின்றனர். வேறு சிலர் 8-ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் வாழ்ந்தவர் என்று தெரிவிக்கின்றனர். மகேந்திரபாலர் (நிர்பயராஜா என்ற பெயரும் உண்டு) என்ற அரசருக்கு தாம் சமயகுரு என்று ராஜசேகரா குறிப்பிடுகிறார். நர்மதைக்கு வடக்கே நிலவிய ஆரியவர்த்தா என்ற பகுதியை ஆண்ட மகிபாலரும் (10-ஆம் நூற்றாண்டில்) நாடக ஆசிரியருக்கு தெரியும். 'சங்கரதிக்விஜயம்' என்ற நூலில் ராஜசேகரா குறிப்பிடப்படுவதால் ஆதிசங்கரர் சமகாலத்தவர் என்றும் கேரளாவைச் (மலைய) ஆண்ட குலசேகர பெருமாளே ராஜசேகரா என்ற குறிப்பும் காணப்படுகிறது. இக்கருத்து தவறானது என்று நோவ் (Konow) நம்புகிறார்.
ராஜசேகரா யாயாவர (Yaayaavara) பார்ப்பன வகுப்பைச் சேர்ந்தவர். பார்ப்பனரில் இருவகை கிரஹஸ்தர் உள்ளனரென்றும், ஒன்று: சாலீன கிருஹஸ்தர், மற்றொன்று: யாயாவர கிரஹஸ்தர் என்றும் தெரிந்து கொள்ள முடிகிறது. இவர் சைவ சமயத்தை சார்ந்தவர்; சிவனையும் பார்வதியையும் நாடகத்தின் தொடக்கத்தில் வழிபடுகிறார். ராஜசேகராவின் மூதாதையர் மராட்டியத்தில் விதர்பா,குந்தலா பகுதியில் வசித்தவர்கள். 'மகாராஷ்ட்ர சூடாமணி' என்னும் பட்டப்பெயர் இவருக்கும் இவரது மூதாதையருக்கும் இருந்தது.
நாடக ஆசிரியர் குறித்து ஆப்தே இவ்வாறு கருதுகிறார்: ராஜசேகராவுக்குத் தென்னிந்தியப் பழக்க வழக்கங்கள், இடப்பெயர்கள் யாவும் தெரியும். கருத்த கன்னங்களையும் வெள்ளந்தி புன்னகையையும் வெற்றிலையால் சிவந்த வெண்பற்களையும் உடைய திராவிடப் பெண்களையும் நெளிந்த கருங் குழலையுடைய கர்நாடகப் பெண்களையும் ராஜசேகரா வருணிக்கிறார். இவை மட்டுமின்றி ஆந்திர (praudhaandhriistanapiditaha), மலையப் (malayastritarjinitarjitaha) பெண்கள் குறித்தும் சுட்டுகிறார். காம்பே முதல் குமரி வரை உள்ள நாடுகளை இவர் பதிவு செய்துள்ளார்.
கன்னோஜை ஆண்ட மகேந்திரபாலரது அவைக்களத்திலும் அவரது மகன் மகிபாலன் அவையிலும் புலவராகத் திகழ்ந்தார். தமிழகத்திலும் மகிபாலன் பட்டி என்றொரு ஊர் இருக்கிறதன்றோ? தக்காணத்தில் பிறந்தாலும் வடக்கே சென்று கன்னோஜில் அவையில் புலவராகத் திகழ்ந்தார். சேதிநாட்டுடனும் ராஜசேகரா தொடர்பு கொண்டிருந்தார்.
நாடக அமைப்பு:
கற்பூர மஞ்சரி நாடகம் நான்கு அங்கங்களைக் கொண்டது. ஒவ்வொரு அங்கத்திலும் உட்பிரிவாகக் காட்சிகள் அமைந்துள்ளன. நாடகத்தின் கதைக்களம் தக்காணம் (அ) தென்னிந்தியாவாக இருக்கலாம்.அது பற்றிய தெளிவான தகவல்கள் இல்லை. இந்நாடகம் ஓர் காதல் கதை. அரசன் அரசி இருக்கவே கற்பூரமஞ்சரி என்ற தலைவியை காதலித்து மணந்து கொள்வது. இதற்கு அரசி பல தடைகளை ஏற்படுத்துகிறாள். அவற்றை முறியடித்து மணப்பது தான் கதை வளர்ச்சி.
நாடகத் தொடக்கத்தில் அரசன் அரசியை நோக்கி 'தக்காண அரசின் புதல்வி' (Daughter of Sovereign of Deccan) என்று வருவதால் கதைக்களம் அதுவே என்று நம்பப்படுகிறது. கதை நடைபெறும் காலம் வசந்த காலமும் கோடையும் ஆகும். நாடகம் கடவுள் வாழ்த்துடன் தொடங்குகிறது. சரஸ்வதி, வியாசர் முதலிய புலவர்களுக்கு வணக்கம். சகோரப் பறவை நிலவின் கதிர்களை உண்டு ஜீவிப்பதைப் போல புலவர்களும் கவிதை மொழியை உச்சரித்து உயிர்க்கின்றனர்.
பின்னர் அரங்க மேலாளர் பிரவேசிக்கிறார். கடவுளர்க்கெல்லாம் கடவுளான சிவனையும் பார்வதியையும் வணங்குவோம். அவர்தம் மகனான ஆறு முகங்களை உடைய (கார்த்திகேயனை) வணங்குவோம்.
அ.மேலாளர்: நாடகத்தின் ஆசிரியர் யார்?
உதவியாளர்: பதில் சொல்கிறேன். தலையில் நிலவை அணிந்தவர் யார்? மகேந்திர பாலரின் குரு யார்?
அ.மேலாளர்: கேள்விக்குக் கேள்வியே பதிலா? ராஜ-------சேகரா? அ.மேலாளர் தொடர்கிறார்: "ஆசிரியர் சமஸ்கிருத மொழியைத் தவிர்த்து பிராகிருத மொழியை ஏன் தேர்ந்தெடுத்தார்.
உதவியாளர்: சமஸ்கிருத கவிதைகள் கரடுமுரடானவை. பிராகிருத கவிதை மென்மையானவை. ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே உள்ள வேறுபாடு அவற்றிற்கிடையே உள்ளது. இவ்விடத்தில் ஆசிரியர் மொழிப்பற்றை வெளிப்படுத்துகிறார். இவ்வாறு கதையாடல் செல்கிறது.பின்னர் அரசனும் அரசியும் மேடையில் தோன்றுகின்றனர். இருவரும் வசந்தகாலத்தை வரவேற்று வாழ்த்திக்கொள்கின்றனர். அவ்வேளையில் பாணர்கள் இருவர் திரைக்குப் பின்னால் இருந்து "வசந்தம் தங்களுக்கு மகிழ்ச்சியைத் தருவதாக" என்று புகழுரை ஒலிக்கின்றனர். ஒரு பாணன் தென்றலை விதந்து ஓதுகிறார்.
"குளிர் மலைய வரையின்றும் தென்றலாய் வருகிறது/அது பாண்டி நாட்டுப் பெண்களின் கன்னங்களைத் தழுவி / காஞ்சியின் இளம்பெண்களின் கர்வத்தைத் தகர்த்து/சோழநாட்டுப் பெண்களின் காதலில் நிரம்பி வழிந்து/கர்நாடக அழகிகளின் கூந்தலை அலைக்கழித்து/குந்தல நாட்டுக் காதலர்களை இணைக்க "தென்றல் வருகிறதாம்.இரண்டாவது பாணனும் செண்பகம் முதலிய மலர்களையும் அவற்றின் மணத்தையும் வர்ணிக்க, அரசியும் பாணர்களை ஆமோதித்து தென்றலைப் போற்றுகிறார்.
"இலங்கையின் கதவுகளில் தோரணமாலைகளை அசைத்து/ அகத்திய முனிவரின் ஆஸ்ரமத்தில் சந்தன மரங்களைத் தாலாட்டி/ கற்பூர மணம் கலந்து, அசோக மரங்களின் கிளைகளை நடுங்கச் செய்து/ வெற்றிலைக் கொடிகளை நடனமிடச் செய்து/ தாமிரபரணி தண்ணீரை முத்தமிட்டு/ தென்றல் வீசத் தொடங்கிற்று".
இவ்விடத்தில் பாண்டி நாடு, சோழநாடு,காஞ்சி, தாமிரபரணி, அகத்தியர் வாழும் பொதியமலை, மலைய நாடு (மலாடு, மலபார் நாடு) ஆகிய தென்னியப் பகுதிகளைக் குறித்த செய்திகளைத் தெரிந்து கொள்ள முடிகிறது. தமிழின் புற வரலாற்றை (External History of Tamil) அறிந்து கொள்ள இத்தரவுகள் உதவும். (காண்க:குறிப்பு-2)
பாணர்கள்:
ஒவ்வொரு அங்கத்தின் இடையே அல்லது நிறைவில் பாணர் வந்து செல்வதைக் காண்கிறோம். பாணர் அரசரைப் போற்றி ஊக்கப் படுத்துபவர்களாக வந்து செல்கின்றனர். ஓரிரு பாணரின் வாழ்த்து மொழிகளைக் காணலாம்:
1) அரசே! உங்கட்கு வெற்றி உண்டாகுக! நீ கிழக்கு தேசநாடுகளின் மங்கையை வசீகரிக்கும் ஆற்றல் உடையை.சம்பா நாட்டின் செண்பக மலர்களைப் போல் அணிகலன் அணிந்துள்ளாய். வங்காளதேச அழகிகளின் ஒளியைப் பொருந்தியவனே! அழகிய பொன்னின் நிறத்தை உடையவனே ! வசந்தத்தின் தொடக்கம் தங்களுக்கு மகிழ்ச்சியைத் தரட்டும். (பக்கம்-227).
இன்னொரு இடத்தில் பகற்பொழுது மறைவதை பின்வருமாறு பாணர் வருணிக்கிறார். "மாலைப்பொழுது அரசருக்கு மகிழ்ச்சியை அளிக்கட்டும். பகற்பொழுதின் ஆன்மாவாகத் திகழும் ஞாயிறு எங்கே மறையப் போகிறது? பகல்நேரம் சா(யு)குங்காலம் வந்தது. ஞாயிறு மறைந்ததைக் கண்டு தாமரைகள் சுருண்டு கண்களை மூடிக் கொண்டன." (பக்கம்-242). கடைசி அங்கத்தில் அரசனுக்கும் கற்பூர மஞ்சரிக்கும் திருமணம் நடக்கிறது. அப்போதும் பாணர்,
அரசரை வாழ்த்துகிறார். "திருமண விருந்து இன்பத்தை நல்கட்டும்."
பல்வேறு உணவுப் பொருட்களின் பெயர்களைப் பட்டியல் இடுகிறார். இவ்வாறு பாணர்கள் அவ்வப்போது மன்னர்களைப் போற்றுவதை நமது பழைய இலக்கியங்களில் காணலாம். "வைகறைப் பொழுதிலும் மாலைப் பொழுதிலும் வள்ளல்களின் கடைத்தலையில் நின்று வாழ்த்திப் பாடுவது பொருநர் மரபாகத் தெரிகிறது. "(அ.தட்சிணாமூர்த்தி, பக.287,2016) "ஓய்மா நாட்டு நல்லியக்கோடனை, "முதுவோர்க்கு முகிழ்ந்த கையினை எனவும்/இளையோர்க்கு மலர்ந்த மார்பினை எனவும்/ ஏரோர்க்கு நின்ற கோலினை எனவும்/ தேரோர்க்கு அழன்ற வேலினை எனவும்" சிறுபாணாற்றுப்படையில் பாணன் வாழ்த்துகிறான்.
(மேற்படி நூல் பக்-287). பாணர்கள் "சுரம் பல கடந்து, வடியா நாவின் வல்லாங்கு பாடி" பரிசிலுக்கு ஏங்குபவர் என்பதை இங்கு நினைவு கூரலாம்.
கற்பூரமஞ்சரி:
நிறைவு நாடகத்தின் முடிவு பரதரின் நாட்டிய சாஸ்திரத்தில் வரும் மேற்கோளோடு நிறைவடைகிறது. அதாவது: "வறுமை காட்டுத் தீயைப் போன்றது. அத் தீ புலவர்களை நாளுக்கு நாள் மிகவும் நலிவடையச் செய்கிறது. கலைஞர்களின்/ கற்ற புலவர்களின் திறமையைக் குலைத்து விடுகிறது. திருமகளின் கடைக்கண் பட்டு வறுமைத் தீ அணைவதாக! "இந்தக் குறிப்புடன் நாடகம் நிறைவடைகிறது. சங்ககால கலைஞர்களும் "பசியால் வாடினர்; வாடிய உடம்பினர். இப்பசி அறிவு முதலானவற்றை அழித்ததற்குக் காரணமானது. கற்ற கல்வியே வெறுக்கச் செய்வது; ஒடுக்குவதற்கு காரணமானது; தன்னையே வெறுக்கச் செய்வது" (காண்க: கா.சுப்பிரமணியன், பக்-79;1982) புலவர்பால் கொண்ட இரக்கத்தினையும் அரசர் அவர்களுக்கு உதவும் விழைவினையும் காண்கிறோம்.
பொதுவான சொற்கள்:
தமிழில் காணப்படும் சொற்கள் சுமார் 150 -கும் மேல் கற்பூரமஞ்சரி நாடகத்திலும் கிடைக்கின்றன.இவை சமஸ்கிருத மொழியிலும் உள்ளவை.எல்லா சொற்களும் இங்குத் தரப்படவில்லை.வடசொற்கள் தமிழ்ப்படுத்தும் போது கடன் சொற்களுடன் -அம்,-அன்,ஐ விகுதிகள் சேர்க்கப்படும். வடமொழிக்கே உரிய சிறப்பெழுத்துக்கள் தவிர்க்கப்பட்டுத் தமிழ் எழுத்தால் மாற்றி அமைக்கப்படும்.
க.மஞ். தமிழ். பொருள்.
காளி காளி. ‘கொற்றவை'
குமரி. குமரி. ‘பெண்'
உமா. உமா. ‘இறைவி'
கோடி. கோடி. ‘எண்’
கிரி. கிரி. ‘மலை’
குரு. குரு. ‘ஆசிரியர்’
சூடாமணி. சூடாமணி ----------
ஜல. ஜல. ‘நீர்’
துலா. துலா. ‘எடை'
பரம். பரம். ‘உயர்ந்த’
பலி. பலி. -------
அம் சேர்ந்தவை:
அங்க. அங்கம் ‘உடல்பாகம்'
அங்கண. அங்கணம் ‘சாக்கடை'
ஆரம்ப. ஆரம்பம். ‘தொடக்கம்'
களங்க. களங்கம் ‘குற்றம்குறை'
காரண. காரணம் -----------
கும்ப கும்பம். ‘நீர்க்குடம்'
ஐ விகுதி சேர்த்து:
ஆணா. ஆணை ‘கட்டளை'
திசா. திசை. ‘திசை '
பரம்பரா. பரம்பரை ‘வம்சம்'
மாலா. மாலை. ‘(பூ)மாலை'
வேலா. வேளை ‘நேரம்'
அர்/அன் விகுதி:
அசுர. அசுரர். ‘தேவர்- எதிரி'
பிராகிருத மொழியில் டண்ணகரம் (நாமடி மூக்கொலி) மட்டும்தான் உண்டு.றன்னகரம் இல்லை. னகரம் வரும் இடத்தில் ணகரம் வரும் என்பது பொது விதி.இது திராவிடமொழிகளின் தாக்கம்.சொற்களைப் பிற மொழிகளில் இருந்து கடனாளும் போது சொற் பொருண்மையில் மாற்றங்கள் ஏற்படலாம். எடுத்துக்காட்டாக, 'சத்த' என்ற சொல் word, speech, sound, noise போன்ற பொருளில் வருகின்றன. ஆனால் அதே தமிழில் sound, noise என்ற இரு பொருண்மையில் மட்டுமே வருகின்றன. இன்னொரு எடுத்துக்காட்டு: 'சம்பவ' என்ற சொல் பிறப்பு, மூலம் (birth, origination) ஆகிய பொருண்மையில் வர தமிழில் நிகழ்ச்சி, நிகழ்வு ஆகிய பொருளில் மட்டுமே வருகிறது.
மற்றொரு எடுத்துக்காட்டாக: 'சரள' என்ற சொல் straight, honest என்ற பொருளில் வர தமிழில் சரளமாக பேசுதல் என்று வருகிறது. 'காண' one eyed (person) என்ற சொல் காணப்படுகிறது. இதற்குத் தமிழ்ச்சொல்லான கண்/காண் மூலமாக இருக்கலாம். ராஜசேகரா ஏராளமான தேசிச் சொற்களை (provincial words) பயன்படுத்தி உள்ளார். அவற்றின் மூலம் பிறமொழிக் குடும்பங்களாக இருக்கலாம். இந்நாடகத்தில் ஊஞ்சல் திருவிழா வருகிறது. தாய்லாந்தில் தாய் பிராமணர்கள் 'லோஜிஞ்சா' என்ற ஊஞ்சல் விழா நடத்துவதை அறிஞர் சுட்டுவர்.
குறிப்பு :
1) நாடகத்தின் மூன்று பிரதிகள் தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தில் இருந்ததாகவும், இப் படிகளில் ழகர எழுத்து இருப்பதாகவும் அறிய முடிகிறது.
2) அசோகரின் கல்வெட்டுகளிலும் தென்னிந்தியா குறித்த தகவல் கிடைக்கின்றன. "புனித, கருணையுள்ள, மேன்மை தங்கிய மன்னர் தனது ஆட்சிக்குட்பட்ட பகுதிகளிலும், தனது நாட்டிற்கு அருகிலுள்ள சோழ, பாண்டிய, சேர் நாடுகளிலும், சதியபுத்ராவிலும் தாமிரபரணி ஆறு வரையிலும் ----------- நோய் தீர்க்கும் ஏற்பாடுகளை செய்திருக்கிறார். (கிர்னார் வாசகம், வின்செட்)
துணை நூல்கள்:
1. சுப்பிரமணியம், கா. (1982). சங்ககாலச் சமுதாயம். நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் லிட்., சென்னை.
2. தட்சிணாமூர்த்தி, அ. (2016). சங்க இலக்கியங்கள் உணர்த்தும் மனித உறவுகள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் லிட். சென்னை.
3. வின்சென்ட் கி . ஸ்மித். (2009). அசோகர் இந்தியாவின் பௌத்த பேரரசர். சந்தியா பதிப்பகம்.சென்னை -63
4. மீனாட்சிசுந்தரன்.தெ.பொ.(1965) தமிழ் மொழி வரலாறு. சர்வோதய இலக்கியப் பண்ணை, மதுரை.
5. Rajasekara's Karpuramanjari. (1963) Edited with Translation, Index by Sten Konow. Motilal Banarsidass: Delhi. Second edition.
- ஆ.கார்த்திகேயன்