இவ்வுலகில் உள்ள உயிரினங்களில் எல்லாம் மேம்பட்ட உயிரினமாகக் கருதப்படும் மனித இனத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் பிறந்த உடனேயே தன் பெற்றோரை, குறிப்பாகத் தன் தாயைச் சிக்கெனப் பிடித்துக் கொள்கிறது. காரணம் இந்தப் பிடிமானமும், பாசப்பிணைப்பும் இல்லையென்றால் அந்தக் குழந்தையினால் இந்த உலகில் பிழைத்து, வளர்ந்து வாழ முடியாது. இது இயற்கையினால் குழந்தையின் மரபணுவில் எழுதப்பட்டுள்ள அடிப்படை உள்ளுணர்வு.

இப்படித் தாய்க்கும் சேய்க்கும் உண்டாகும் பாசப்பிணைப்பு குழந்தை பிறந்த உடனேயே வந்து விடுகிறது. குழந்தை மருத்துவர்கள் இதை MOTHER INFANT BONDING என்று சொல்கிறார்கள். குழந்தையும் இந்த பாசக் கயிற்றைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு தன் அன்புக்கும் சிரிப்புக்கும், மழலை மொழிக்கும் குடும்பத்தில் உள்ள அனைவரையும் அடிமையாக்கிக் கொண்டு, இவ்வுலகில் பிழைத்து வளர்ந்து வாழ்ந்து விட வேண்டும் என்ற ஒரே இலக்கை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்து விடுகிறது. மனித இனத்தில் மட்டும்தான் குழந்தை வளர்ப்பில் தாயும் தந்தையும் பொறுப்பேற்று குழந்தையை வளர்த்து ஆளாக்குகிறார்கள். மற்ற விலங்கினங்களில் எல்லாம் ஆண் பொறுப்பில் இருந்து கழண்டு கொள்வார்.

குழந்தை வளர்ச்சி பற்றி ஆராயும் மனவியலாளர்களும், குழந்தை மருத்துவர்களும் இந்த பாசப்பிணைப்புக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். பாசப்பிணைப்பைப் பாதுகாப்பானதாக உணரும் குழந்தை சிறுவயதிலேயே ஒரு தேடல் உணர்வுடன் வெளி உலகை ஆராய ஆரம்பித்து அதற்குத் தகுந்தவாறு தன்னையும் மாற்றிக்கொண்டு வளர்ந்து பின்னாளில் முழுதும் பரிணமிக்கிறது. உறுதியற்ற பாசப்பிணைப்பும் பாதுகாப்பற்ற குடும்பச் சூழலும் ஒருங்கே அமைந்துள்ள இடத்தில் வளரும் குழந்தை பெரியவனாகி இந்த சமூகத்தில் சேரும்போது அவ்வளவாக பரிணமிக்க முடிவதில்லை.

குழந்தைகளின் உடல், மன வளர்ச்சியிலும் ஆரோக்கியத்திலும் முக்கிய பங்கு வகிப்பவை அவர்கள் பெற்றோர்களிடம் இருந்து பெற்ற மரபணுக்களும், வளரும் சூழலும்தான். அதிலும் அவர்களின் ஆரம்பகால வளர்ச்சிக்கு மிக முக்கியமாக உதவுவது பெற்றோர்களால் உருவாக்கப்படும் குடும்பச் சூழலும் அங்கு நிலவும் உணர்வு பூர்வமான அணுகுமுறையும் தான்.

neglected childகுழந்தை வளர்ப்பு பற்றி ஆராய்ந்த மனவியலாளர்கள் முக்கியமான இரண்டு கேள்விகளை வைத்துதான் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வளர்க்கும் விதத்தை முடிவு செய்தார்கள் என்கின்றனர். 1. குழந்தைகளிடம் பெற்றோர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள்? 2. அந்த எதிர்பார்ப்புகள் நிறைவேற குழந்தைகள் வளர்ச்சியில் அவர்களின் பங்களிப்பு என்ன?

இங்கே நாம் பார்க்கப் போவது குழந்தைகளின் வளர்ச்சியில் பங்கெடுக்காமல், அவர்களைப் புறக்கணித்து வளர்க்கும் (NEGLECTFUL PARENTING) முறையைக் கையாளும் பெற்றோர்களைப் பற்றிதான். இவர்கள் குழந்தைகளிடம் இருந்து பெரிதாக எதையும் எதிர்பார்க்க மாட்டார்கள். தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் பற்றியெல்லாம் நினைக்க நேரமில்லாதவர்கள். அதேபோல் அந்தக் குழந்தைகளின் வளர்ச்சியிலும் இவர்களின் பங்களிப்பு மிகவும் குறைவாகவே இருக்கும்.

இவ்வகைப் பெற்றோர்கள் எப்படி இருப்பார்கள்?

இந்த வகைப் புறக்கணிப்புப் பெற்றோர்கள் ஆரம்பத்தில் இருந்தே குழந்தை மீது அக்கறை­யின்றி, அரிதாக சில நேரங்களில் வெறுப்பை உமிழும் தன்மையுடன் இருக்கிறார்கள். இவர்கள் உணர்வு பூர்வமாகக் குழந்தையிடம் இருந்து விலகி இருந்தாலும். அவர்களுக்கு செய்ய வேண்டிய உணவு, உடை, இருப்பிடம் போன்ற அடிப்படைத் தேவைகளைச் செய்து கொடுத்து விடுவார்கள். ஆனால் பாசமோ வழிகாட்டுதலோ இருக்காது.

குழந்தை பிறந்ததிலிருந்தே இயற்கையிலேயே பெற்றோர்களுக்கு தன்னிச்சையாக வரும் ஆசையும் பாசமும் கூட இவர்களுக்குக் குறைவாகவோ அல்லது இல்லாமலேயே கூட இருக்கும். ஒரு சில பெற்றோர்கள் வைத்திருக்கும் இயற்கைக்கும் அறிவியலுக்கும் ஒவ்வாத நம்பிக்கைகளும் பிறக்கும் குழந்தையைப் புறக்கணிக்கக் காரணமாகி விடுகிறது. சிலருக்குக் குழந்தையே கூட அவர்களால் விரும்பப்படாத நேரத்தில், விரும்பப்படாத பாலினத்தோடு பிறந்திருக்கும். வீட்டில் குழந்தை பிறப்பு என்ற நிகழ்வு நடந்ததாகவே கருதாமல் அவர்கள் வேலையில் மூழ்கி இருப்பார்கள். பச்சிளம் குழந்தையைத் தூக்கிக் கொஞ்சுவதோ அல்லது அதன் சிரிப்பிலும் மழலை மொழியிலும் தன்னிலை மறந்து மகிழவோ தெரியாது.

வீட்டில் குழந்தை வளர்வதற்கான அமைதியான, பாசம் மிகுந்த சூழல் எதுவும் இருக்காது. பெரும்பாலும் இம்மாதிரி பெற்றோர்கள் அவர்கள் குழந்தையாக இருந்தபோது இவ்வாறு அலட்சியமாக வளர்க்கப்பட்டிருக்கலாம். அல்லது பெற்றோர்களே கூட மனநோயினால் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கலாம். அமைதியற்று கொந்தளிப்புடன் இருக்கும் குடும்பச் சூழலில் எப்போதும் சண்டை, சச்சரவுடன் இருக்கும் நபர்களுக்கு மத்தியில் குழந்தை வளரும்போது எளிதில் அவர்களால் புறக்கணிக்கப்பட்டு விடுகிறது.

போதை, வன்முறை, வறுமை, படிப்பறிவு இல்லாமை, சமூக அமைப்பில் அவர்களின் குடும்ப நிலை, சட்ட விரோதச் செயல்களில் ஈடுபாடு முதலான காரணங்களாலும் பெற்றோர்கள் குழந்தைகளைப் புறக்கணிக்கிறார்கள். ஒரு சில பெற்றோர்களுக்கு அவர்களின் அன்றாட வாழ்க்கைப் போராட்டமே பெரிதாக இருக்கும் போது குழந்தைகளைப் பற்றி நினைக்க நேரமிருப்பதில்லை.

சமூகத்தில் மேல் மட்டத்தில் வசதி வாய்ப்புகளுடன் இருக்கும் ஒரு சிலரும் கூட அவர்களின் வேலைப்பளு, வாழ்க்கைமுறை போன்ற காரணங்களால் குழந்தைகளைக் கவனிக்க நேரமின்றி இந்த வகையில் குழந்தைகளை வளர்க்க நேரிடுகிறது. இவர்களின் மனப்பான்மையே குழந்தைகள் தங்களைத் தொந்தரவு செய்யக் கூடாது என்பதுதான். இவர்கள் மிக முக்கிய பதவி மற்றும் அதிகாரத்தில் இருப்பவர்கள். எப்போதும் உர் உர், சிடுசிடு தான். குழந்தைகள் கிட்டே வந்தாலும் கண்டு கொள்ள மாட்டார்கள், அல்லது எரிந்து விழுவார்கள். நீ எது வேண்டுமானலும் செய்து கொள். ஆனால் என் கிட்டே வராதே. எனக்கு ஆயிரம் வேலை இருக்கு என்பார்கள். இவர்களுக்கு குழந்தைகள் என்ன படிக்கிறார்கள், வீட்டுப் பாடங்கள் முடித்தார்களா, நல்ல பழக்கங்கள் உள்ளதா? நல்ல நண்பர்களுடன் இருக்கிறார்களா? என்றெல்லாம் தெரிந்து கொள்ள விருப்பம் இருக்காது.

பாதுகாப்பு, காவல் போன்ற சவாலான வாழ்க்கை முறையில் இருக்கும் பெற்றோர்களுக்கு குழந்தைகளை நல்ல முறையில் வளர்த்து ஆளாக்க ஆசை இருந்தாலும் நேரடியான பங்களிப்பு அமைவதில்லை. உயர் அதிகாரிகள், நிர்வாகப் பொறுப்பில் இருப்பவர்கள், வெளியூர், வெளிநாடுகளில் இருக்கும் பெற்றோர்கள், போன்றவர்களாலும் குழந்தைகளைக் கண்காணித்து கண்டித்து வளர்க்க நேரமில்லை. இந்தக் குறைபாட்டை ஈடு கட்டும் விதமாக வீட்டில் இருக்கும் மற்ற குடும்ப உறுப்பினர்கள் அன்பையும், அக்கறையையும் பாசத்தையும் வெளிப்படுத்தி வளர்க்கும்போது எதிர்மறையான விளைவுகளின் வீரியம் குறைந்து விடுகிறது.

இதனால் குழந்தைகள் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள்?

பெற்றோர்களின் பாசத்திற்காக ஏங்கிக் கிடைக்காமலே வளரும் இக்குழந்தைகள் எப்போதும் சோகத்துடன் தனிமை விரும்பிகளாக இருப்பார்கள். தங்களை யாரும் நேசிக்கவில்லை என்ற எண்ணம் இவர்களுக்கு நிறைய இருக்கும். பெற்றோர்கள் மீது இவர்களும் பாசம் இல்லாமலேயே வளருவார்கள்.

பள்ளியிலும் மன முதிர்ச்சியின்றி, தனிமை விரும்பிகளாக இருப்பார்கள். தனித்துவமும் கொஞ்சம் குறைவாகத்தான் இருக்கும். பள்ளியில் மற்ற மாணவர்களிடம் நட்பு முறையில் எளிதில் பழகத் தெரியாததால் அடிக்கடி வீண் வம்புகளும் சண்டைகளும் வரும். பள்ளிப் படிப்பிலும் சிறக்க மாட்டார்கள். மற்ற மாணவர்களின் கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளாகுவார்கள்.

வீட்டில் குழந்தைகளுக்கான எந்த வரைமுறைகளோ சட்டதிட்டங்களோ இல்லையாதலால் எல்லாமும் குழந்தைகள் விருப்பப்படிதான். இம்மாதிரி வளரும் குழந்தைகள் சுய கட்டுப்பாடு இல்லாது பெரும்பாலும் உணர்ச்சி வசப்பட்டு முடிவு எடுப்பவர்களாக இருப்பார்கள். அதனால் ஆபத்தான பழக்க வழக்கங்களும், சில நேரங்களில் விபத்துக்களும் எட்டிப் பார்க்கும். இளங்குற்றவாளி என்ற நிலைக்கும் ஒரு சிலர் சென்று விடுவார்கள். இவர்களின் விடலைப் பருவமும் கல்லூரி வாழ்வும் மிகவும் கவனமாகப் பயணப்பட வேண்டிய காலமாகும்.

இதற்கு என்ன செய்யலாம்?

1.            குழந்தைகளை முற்றிலும் புறக்கணித்து அவர்களைக் கிட்டே நெருங்க விடாதபடி வாழும் பெற்றோர்கள் முதலில் மாற வேண்டும். பெற்றோர்கள் தங்கள் முக்கிய வேலையை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு குறைந்த பட்சம் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரமாவது (ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் என்பது உங்கள் வேலையில் குறுக்கீடு என்று கருதாமல் குழந்தைகளுக்காக நீங்கள் செய்யும் முதலீடு என்று எண்ணுங்கள்.) தங்கள் குழந்தையிடம் மனப் பூர்வமாக அன்பும் அக்கறையும் தெரியும்படி பேசிப் பழக வேண்டும். குழந்தைகளின் மனப் போக்கையும் அவர்களின் ஏக்கங்களையும் தெரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். அவர்களின் பள்ளி நிகழ்வுகள், நண்பர்கள் பற்றி அக்கறையுடன் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.

2.            நாமும் நம் பெற்றோர்களால் விரும்பப் படுகிறோம் என்ற முழு நம்பிக்கை குழந்தைகளுக்கு வர வேண்டும். குழந்தைகளின் நியாயமான கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும். உங்கள் குழந்தைகளின் உலகில் நீங்களும் சேர்ந்து அவர்களை ஊக்குவித்து, பிரச்சினைகளுக்கு எப்படி முடிவு எடுக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுக்க வேண்டும்.

3.            வேலை நிமித்தம் குழந்தைகளின் வளர்ச்சியில் நேரடியாகப் பங்கேற்க முடியாமல் இருக்கும் பெற்றோர்களும் அவர்களின் குடும்பத்தில் உள்ள மற்றவர்களின் ஒத்துழைப்புடன் இதற்கு எளிதில் தீர்வு காணலாம்.

4.            அமைதியற்று கொந்தளிக்கும் குடும்பச் சூழலில் வளரும் குழந்தைகள்தான் மிகவும் அதிகமாக பாதிக்கப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். முதலில் குடும்பச் சூழல் அமைதியாக்கப்பட வேண்டும். அந்தச் சூழலுக்கான காரணிகள் நீக்கப்பட வேண்டும். தேவைப்பட்டால் பெற்றோர்களும் வீட்டில் உள்ளவர்களும் மனநல ஆலோசகரை நாடி சிகிச்சை பெற வேண்டும். வீட்டில் இருப்பவர்களுக்கு எவருக்கேனும் மனநோய், போதை, வன்முறை போன்ற பாதிப்புகள் இருந்தால் தகுந்த மனநல மருத்துவரையும் அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

- ப.வைத்திலிங்கம், குழந்தைகள் நல மருத்துவர்.

Pin It