1887இல் சீவகசிந்தாமணியை ஆராய்ந்து அச்சிட்டு வெளியிட்ட பின்னர், 1888ஆம் ஆண்டில் மூன்று சிற்றிலக்கிய நூல்களை அச்சிட்டு வெளியிட்டிருக்கிறார். அவை திருவாவடுதுறையாதீனத்து கச்சியப்பசுவாமிகள் இயற்றிய கச்சி ஆனந்த ருத்தி ரேசர் வண்டுவிடுதூது, கௌரிமாயூரம் இராமையர் இயற்றிய கௌரிமாயூரமென்று வழங்கும் திருமயிலைத் திரிபந்தாதி, திரிசிரபுரம் சி. தியாகராச செட்டியாரவர்கள் இயற்றிய திருச்சிற்றம்பல வெண்பாவந்தாதி, திருவாரூர் பாதி திருவொற்றியூர் பாதி வெண்பா வந்தாதி, திருவாரூர் மருந்து வெண்பாமாலை என்பனவாகும்.
மூன்று சிற்றிலக்கியப் பதிப்புகளுக்குப் பின்னர் 1889இல் பத்துப்பாட்டு நூலை அச்சிட்டு வெளியிட்டிருக்கிறார். பத்துப்பாட்டுப் பதிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காலப்பகுதியில் சாமிநாதையர் அவர்களுக்கு இரு பெரும் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. ஒன்று 7-1-1888இல் மீனாட்சி சுந்தரம் பிள்ளைக்குப் பின்னர் திருவாவடுதுறை மடத்தில் இவருக்குப் பேராதரவு அளித்துவந்த ஆதீனகர்த்தர் மேலகரம் சுப்பிரமணிய தேசிகர் மறைவுற்றது, மற்றொன்று, 19-1-1888இல் இவருக்குக் கும்பகோணம் கல்லூரியில் தமிழாசிரியர் பணிவாய்ப்புக் கிடைக்கப்பெறுவதற்குக் காரணமாக இருந்த சி. தியாகராச செட்டியார் மறைவுற்றது. இருவரின் இழப்பு சாமிநாதையரைப் பெரிதும் பாதித்திருக்கிறது. இந்த இருபெரும் இழப்புகளால் ஏற்பட்ட துயரங்களைப் பத்துப்பாட்டு ஆராய்ச்சி யினால் மறக்கச் செய்திருக்கிறார். ஓரிடத்தில் அந்த இருபெருந் துயரத்தைக் கடந்து சென்றது குறித்து இப்படி எழுதியிருக்கிறார்.
சுப்பிரமணிய தேசிகர், தியாகராச செட்டியார் என்னும் இருவர் பிரிவும் என்னை வருத்தினாலும் பத்துப்பாட்டு ஆராய்ச்சியை நிறுத்தவே இல்லை. அந்தத் துக்கத்தை ஆராய்ச்சியினால் மறக்க எண்ணினேன். சுப்பிரமணிய தேசிகருடைய அன்புச் செயல்களை நினைந்து நினைந்து பொழுது போக்கும் அளவோடு நான் பத்துப்பாட்டு ஆராய்ச்சியை மேற்கொண்டேன் (என் சரித்திரம், ப. 635).
சாமிநாதையர் பத்துப்பாட்டுச் சுவடியைத் தேடித் திரட்டும்பொருட்டு பல ஊர்களுக்குப் பயணம் மேற்கொண்டிருக்கிறார். அந்தப் பயணத்தில், கொங்குவேள் மாக்கதை, தக்கயாகப்பரணி, தொல் காப்பியம், ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, புறப் பொருள் வெண்பாமாலை முதலான நூற் சுவடிகள் கிடைக்கப்பெற்றுள்ளன. பத்துப்பாட்டின் முதல் பதிப்பிற்குக் கீழ்வரும் பல சுவடிகள் உதவியிருக் கின்றன. இந்தச் சுவடிகளைக் கொண்டு ஆறுமாத காலத்திலேயே பத்துப்பாட்டுப் பதிப்புப் பணியைச் செய்து முடித்திருக்கிறார்.
- திருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்வான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை
- தருமபுர ஆதீனத்துப் புத்தகசாலை
- வேலூர் குமாரசாமி ஐயர்
- திருவாவடுதுறையாதீனத்து அம்பலவாண தேசிகர்
- ஆறுமுகமங்கலம் குமாரசாமி பிள்ளை
- திருநெல்வேலி கவிராஜ ஈசுவரமூர்த்தி பிள்ளை
- திருப்பாற்கடனாத கவிராயர்
- திருப்பாற்கடனாத கவிராயர் பேரர் திருப்பாற்கடனாத கவிராயர்
- ஆழ்வார் திருநகரி, தீராதவினைதீர்த்த திருமேனிகவிராயர், பரம்பரையோராகிய தேவர்பிரான் கவிராயர்
- பொள்ளாச்சி, வித்வான் சிவன்பிள்ளை
- திருநெல்வேலி வித்துவசிரோமணி, திருவம்பலத்தின்னமுதம் பிள்ளை
- திருமயிலை, அண்ணாசாமி உபாத்தியாயர்
- தபால் ஸ¨பரின்டெண்டன்ட், ம. வி. கனகசபைப்பிள்ளை
- சென்னை இராசாங்கத்துக் கையெழுத்துப் புத்தகசாலை
பத்துப்பாட்டுப் பதிப்பிற்குப் பின்னர் 1891இல் யாழ்ப்பாணம் கொழும்புத்துறை இலந்தைநகர் ஸ்ரீதண்டபாணி விருத்தம் ஸ்ரீமுத்துக்குமாரர் ஊசல் முதலியன என்ற நூலை இயற்றிப் பதிப்பித்து வெளி யிட்டிருக்கிறார். கொழும்பில் வசித்துவந்த சாமி நாதையரின் அன்பரான தி. குமாரசாமி செட்டியார் என்பவர் கொழும்புத்துறை இலந்தைநகரில் புதிய ஆலயம் ஒன்றைக் கட்டிமுடித்து, அவ்வாலயத்தில் தண்டபாணி சுவாமி, முத்துக்குமாரர் சாமி சிலை களை அமைப்பித்திருந்தார். இவ்விரு மூர்த்திகள் சம்பந்தமாகச் சில செய்யுட்களை இயற்றித் தர வேண்டுமென்று சாமிநாதையரிடம் குமாரசாமி செட்டியார் கேட்டிருக்கிறார். அன்பரின் வேண்டு கோளுக்கு இணங்க தண்டபாணி சுவாமி சம்பந்த மாகப் பத்து விருத்தங்களையும், முத்துக்குமாரர் சம்பந்தமாக ஓர் ஊசலையும், எச்சரிக்கையும், ஐந்து கீர்த்தனங்களையும் இவர் எழுதி அனுப்பியிருக் கிறார். இது தொடர்பாகக் குமாரசாமி செட்டியார், சாமிநாதையருக்கு 29-7-1889, 29-9-1889, 27-10-1889, 2-12-1889ஆம் நாட்களில் கடிதம் எழுதியிருக்கிறார். கோயில் சம்பந்தமாக எழுதிய பாடல்களைக் குமாரசாமி செட்டியாரின் பொருளுதவியுடன் கும்ப கோணத்திலுள்ள லார்ட் ரிப்பன் அச்சுக்கூடத்தில் சாமிநாதையர் அச்சிட்டு வெளியிட்டிருக்கிறார்.
சாமிநாதையர் பத்துப்பாட்டை ஆராய்ந்து அச்சிடும் பணியில் ஈடுபட்டிருந்த காலத்திலேயே சிலப்பதிகாரப் பதிப்பு தொடர்பான பணிகளையும் மேற்கொண்டிருந்தமையால் பத்துப்பாட்டுப் பதிப்பு வெளிவந்த இரண்டாண்டுக்குள்ளேயே 1892இல் சிலப்பதிகாரத்தை அச்சில் பதிப்பித்து வெளியிட்டிருக்கிறார். சிலப்பதிகாரப் பதிப்புப் பணி நடைபெற்றிருந்த காலப்பகுதிக்கு இடையில் சாமிநாதையர் இரு முக்கிய குடும்ப காரியங்களைச் செய்து முடித்திருக்கிறார். ஒன்று, 1891 மே மாதம், மகன் கல்யாண சுந்தரத்திற்கு உபநயன நிகழ்வை நடத்தி முடித்திருந்தது. மற்றொன்று கும்பகோணம் கல்லூரியில் வேலை பெற்ற தொடக்கத்தில், கும்ப கோணம் பக்தபுரி அக்கிரகாரத்தில் மாதம் மூன்றரை ரூபாய்க்கு வாடகைக்கு இருந்த வீட்டைக் காலி செய்துவிட்டு அதே அக்கிரகாரத்தில் ஒரு மெத்தை வீட்டில் ஆறு ரூபாய்க்கு வாடகைக்குக் குடியேறியது. முன்பிருந்த வீட்டைக் காலிசெய்துவிட்டு வேறொரு வீட்டிற்கு இடம் பெயர்ந்தது குறித்து இப்படி எழுதியிருக்கிறார்:
என் பிரயாணங்களும் ஆராய்ச்சியும் விரிய விரிய என் தமிழ்க் குடும்பமும் தமிழ்நூற் செல்வமும் அதிகமாயின. அவற்றைப் பாதுகாப்பதற்குப் போதிய வசதி அவசியமாயிற்று. நான் இருந்த வீட்டில், மேலும் மேலும் நான் கொணர்ந்து சேர்க்கும் ஏட்டுச் சுவடிகளை வைப்பதற்கும், அன்பர்களுடன் இருந்து ஆராய்ச்சி செய்வதற்கும் இடம் போதவில்லை. ஆதலால் 1891-ஆம் வருஷம் ஜூன் மாதம் முதல் முன்பிருந்த பக்தபுரி அக்கிரகாரத்திலேயே வடவண்டைக் கோடியிலுள்ள ஒரு மெத்தை வீட்டை மாதம் ரூ.6 வாடகைக்குப் பேசி அதிலே இருந்து வரலானேன். புதிய வீட்டுக்கு வந்தவுடன் நல்ல சுவடிகளை மேலும் தேடித் தொகுக்கலா மென்றும் பல மாணாக்கர்களுக்குப் பாடம் சொல்லலாமென்றும் பலரை வைத்துக் கொண்டு தமிழாராய்ச்சி செய்யலாமென்றும் என் யோசனை விரிந்தது (என் சரித்திரம், ப. 694).
சாமிநாதையர் தம் பதிப்பு, ஆராய்ச்சிப் பணி களுக்கு ஏற்றவகையில் இருப்பிடச் சூழலை மாற்றி யமைத்துக்கொண்டு முழு முயற்சியோடு தம் பதிப்புப் பயணத்தை இடைவிடாது மேற்கொண்டிருக்கிறார் என்பதை இதன்வழி அறியமுடிகிறது. முன்பு பதிப்பித்த நூல்களைக் காட்டிலும் பெருமளவு உழைப்பைச் சிலப்பதிகாரப் பதிப்பிற்குச் செலுத்தி யிருக்கிறார். அந்த உழைப்பைக் குறித்து அறிந்து கொள்ள என் சரித்திரத்தில் உள்ள அவரின் இந்தக் கூற்று சான்றாக உள்ளது.
அடியார்க்கு நல்லாருரையிலுள்ள குறையைப் போக்கிக் கொள்ளுவதற்கு நான் அலைந்த அலைச்சலும் பட்ட சிரமமும் கொஞ்சமல்ல, ஐம்பது ஊர்களுக்கு மேல் பிரயாணம் செய்தேன். எதிர்பார்த்த பயன் கிடைக்கவில்லை. இனி மேல் பிரயாணத்தை நிறுத்திக் கொண்டு சிலப்பதிகாரத்தை அச்சிடற்குரிய முயற்சிகளைச் செய்ய வேண்டுமென்று முடிவு செய்தேன். உடனே சிறுவயல் ஜமீன்தாருக்கெழுதித் திருமானூர்க் கிருஷ்ணையரைக் கும்ப கோணத்திற்கு வருவித்தேன். அவரையும் வேறு அன்பர்களையும் வைத்துக்கொண்டு முடிந்தது முடித்தலாகப் பதிப்புக்கு வேண்டிய அங்கங்களைச் செப்பஞ் செய்யலானேன் (என் சரித்திரம், ப. 705).
சாமிநாதையர் சிலப்பதிகாரத்தை முதன் முதலாக (1892)ப் பதிப்பித்து வெளியிட்டபோது, அடியார்க்கு நல்லார் உரையைத் தனியாகவும், அரும்பத உரையைத் தனியாகவுமே பதிப்பித்திருக்கிறார். முதல் பகுதியில் அடியார்க்கு நல்லார் உரையும், இரண்டாம் பகுதியில் அரும்பத உரையும் அமைக்கப்பெற்றிருந்தன. இரண்டிற்கும் தனித்தனியான முகப்புப் பக்கம், முகவுரை ஆகியன அமைக்கப்பெற்றிருந்தன. 1920ஆம் ஆண்டு வெளிவந்த இரண்டாம் பதிப்பில்தான் அடியார்க்கு நல்லார் உரையும், அரும்பத உரையும் ஒரே பகுதியில் அமைத்து வேறுபடுத்திக் காட்டப்பட்டுள்ளன.
சாமிநாதையர் சிலப்பதிகாரத்தைப் பதிப்பிப்பதற்கு முன்னர் இரண்டு நூல்களில் இணைப் பதிப்பாசிரியராகவும், நான்கு நூல்களில் தனி பதிப்பாசிரியராகவும் இருந்து விளங்கியிருக்கிறார். முற்பதிப்புகளின் வழியாகப் பெற்றிருந்த அனுபவங்களையெல்லாம் சிலப்பதிகாரப் பதிப்பில் வெளிப்படுத்தியிருப்பதைக் காணமுடிகின்றன. முற்பதிப்புகளில் அமையப்பெறாத பல பதிப்பு நுணுக்கங்களைச் சிலப்பதிகாரப் பதிப்பில் அமைத்திருப்பதையும் காண முடிகிறது. சிலப்பதிகாரப் பதிப்புக் காலத்தில் அவருக்கு ஏற்பட்டிருந்த பதிப்பு அனுபவங்களை அவரே பிற்காலத்தில் இப்படிக் கூறி நினைவு கொண்டிருக்கிறார்.
தமிழ் நூற்பதிப்பில் நாளாக ஆக உண்டான ஆராய்ச்சிப் பழக்கமும் பண்டைத் தமிழ் நூலறிவும் புதிய புதிய முறைகளைத் தோற்றுவித்தன. சிந்தாமணிப் பதிப்பைக் காட்டிலும் பத்துப்பாட்டிற் சில புதிய பகுதிகளைச் சேர்த்தேன். அதைக் காட்டிலும் சிலப்பதிகாரத்தில் இன்னும் சில பகுதிகளை ஆராய்ச்சி செய்பவர்களுக்கு உதவியாகச் சேர்க்க வேண்டுமென்று தோற்றியது. அவற்றிற்குரிய விஷயங்கள் சிலப்பதிகார மூலத்திலும் உரையிலும் பல இருந்தன. அடியார்க்கு நல்லார் உரையினால் தெரியவரும் நூல்களைப் பற்றிய குறிப்புக்களை அவசியம் எழுத வேண்டுமென்ற ஆசை எனக்கு மிகுதியாக எழுந்தது. நூலாலும் உரையாலும் அறியப்படும் அரசர் முதலியோர் பெயர்களை வகைப்படுத்தி அகராதி வரிசையில் அமைக்க வேண்டுமென்பது மற்றொரு விருப்பம். இப்படி என்னுடைய ஆராய்ச்சி வகை விரிந்து கொண்டே சென்றது (என் சரித்திரம், பக். 705 - 706).
1891ஆம் ஆண்டு ஜூன் மாதம் கோடைமுறை நாட்களில், திருமானூர்க் கிருஷ்ணையருடன் சென்னை வந்து சிலப்பதிகாரப் பதிப்பு வேலையைச் செய்யத்தொடங்கிய சாமிநாதையர் 1892ஆம் ஆண்டு கோடைவிடுமுறை நாட்களிலும் சென்னைக்கு வந்து சிலப்பதிகாரப் பதிப்பு வேலையைச் செய்திருக்கிறார். சாமிநாதையருடன் வந்திருந்த திருமானூர்க் கிருஷ்ணையர் சென்னையிலேயே தங்கியிருந்து, புரூப்களைப் பெற்றுத் திருத்தம் செய்து தரும்பொருட்டு இவருக்கு அவ்வப்போது அனுப்புவதும், கல்லூரிப் பணிக்கிடையில் கிருஷ்ணையர் அனுப்பிய புரூப்பைத் திருத்தி அச்சகத்திற்கு அனுப்புவதுமாகச் சிலப்பதிகாரப் பதிப்புப் பணி நடைபெற்று வந்திருக்கிறது. இடையிடையே விடுமுறை நாட்களில் இவரும் சென்னை வந்து சிலப்பதிகாரப் பதிப்பு வேலையை இருந்து கவனித்து செய்துவிட்டுச் சென்றிருக்கிறார். சாமிநாதையரின் பலநாள் பேருழைப்பின் வழியாக 1892ஆம் ஆண்டு சிலப்பதிகாரம் அச்சுருவாகி வெளிவந்தது.
சிலப்பதிகாரப் பதிப்பு வெளிவந்து தமிழ்நாட்டினரின் பாராட்டைப் பெற்றது. இப்பதிப்பு வெளிவந்தபோது தமிழ் அறிஞர்களிடமும், ஆர்வலர்களிடமும் ஒரு புதுவித புத்துணர்ச்சி தோன்றியிருந்தது. தமிழ்நாட்டில் ஏற்பட்டிருந்த புதுவித கிளர்ச்சி குறித்து உ.வே.சா. இப்படி எழுதுகிறார்:
சீவகசிந்தாமணியும் பத்துப்பாட்டும் தமிழ் நாட்டில் உலாவத் தொடங்கிய பிறகு பழந்தமிழ் நூல்களின் பெருமையை உணர்ந்து இன்புறும் வழக்கம் தமிழர்களிடையே உண்டாயிற்று. அவற்றின் பின்பு சிலப்பதிகாரம் வெளிவரவே, பண்டைத் தமிழ் நாட்டின் இயல்பும், தமிழில் இருந்த கலைப் பரப்பின் சிறப்பும் யாவர்க்கும் புலப்படலாயின. ‘கண்டறியாதன கண்டோம்’ என்று புலவர்களும் ஆராய்ச்சியாளர்களும் உவகைக் கடலில் மூழ்கினர் (என் சரித்திரம், ப. 713).
சிலப்பதிகாரப் பதிப்புப் பணி நடைபெற்றுக்கொண்டிருந்த காலத்திலேயே புறநானூறு, பதிற்றுப்பத்து, மணிமேகலை ஆராய்ச்சிப் பணிகளையும் சாமிநாதையர் செய்துவந்திருக்கிறார். சிந்தாமணிப் பதிப்பைப் போன்று சிலப்பதிகாரமும் அச்சில் பதிப்பித்து வெளியிட வேண்டுமென்று பெரிதும் விரும்பிய சேலம் இராமசாமி முதலியார் 1892ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் இரண்டாம் தேதி இயற்கை எய்தியிருக்கிறார். தமிழ் நலத்தையும் இவரின் நலத்தையும் பெரிதும் விரும்பியிருந்த இராமசாமி முதலியாரின் இறப்பு சாமிநாதையரைப் பெரிதும் பாதித்திருக்கிறது.
சிலப்பதிகாரப் பதிப்பு வெளிவந்த கொஞ்ச காலத்திற்குப் பின்னர் ஒரு நவராத்திரி விழாவிற்கு வரவேண்டுமென்று இராமநாதபுரம் பாஸ்கர சேதுபதி மன்னரிடமிருந்து இவருக்கு அழைப்பு வந்திருந்தது. அந்த அழைப்பை ஏற்று இவர் இராமநாதபுரம் சென்று நவராத்திரி விழாவில் பங்கேற்றிருக்கிறார். சிறுவயல் ஜமீன்தாராகிய முத்துராமலிங்கத் தேவருடனும், பாலவநத்தம் ஜமீன்தாரும் பொன்னுசாமித் தேவருடைய மகனுமாகிய பாண்டித்துரைத் தேவருடனும் நெருங்கிப் பழகும் சந்தர்ப்பம் அப்போது இவருக்கு வாய்த்திருக்கிறது. அப்போது முத்துராமலிங்கத் தேவர் சாமிநாதையரிடம், இனிமேல் வெளியிடப்போகும் நூல்களுக்குத் தொடர்ந்து பொருளுதவி செய்வதாக வாக்களித்திருக்கிறார்.
சேதுபதி மன்னர் அழைப்பின் பேரில் விழாவிற்கு வந்திருந்த பல வித்துவான்களைச் சந்திக்கும் வாய்ப்பு சாமிநாதையருக்கு அப்போது ஏற்பட்டிருக்கிறது. பத்துநாட்கள் அங்கே தங்கியிருந்து விழாவைக் கண்டுகளித்துப் புறப்படுகையில் பாஸ்கர சேதுபதி மன்னர் இவருக்கு உயர்ந்த இரு சால்வைகளை (சாதராக்கள்) அணிவித்துச் சிறப்பித்திருக்கிறார். அந்த இரு சால்வைகளைக் கும்பகோணம் வந்து பெற்றோர்களிடம் காண்பித்துவிட்டு, திருவாவடுதுறை சென்று அப்போது ஆதீன கர்த்தராக இருந்து விளங்கிய அம்பலவாண தேசிகரிடம் காண்பித்து மகிழ்ந்திருக்கிறார். பின்னர் இரு சால்வைகளையும் திருவாவடுதுறை மடத்திற்கு ரூபாய் 300/- க்கு விலையாகக் கொடுத்துவிட்டு அந்தப் பணத்தைப் பெற்றுவந்து சிலப்பதிகாரப் பதிப்பால் தமக்கு ஏற்பட்டிருந்த கடனைத் தீர்த்திருக்கிறார். கடன் தீர்ந்த மகிழ்ச்சியில் வேறு நூல்களைப் பதிப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.
சிலப்பதிகாரப் பதிப்பிற்குப் பிறகு திருப்பெருந்துறைக் கட்டளை விசாரணை சுப்பிரமணியத் தம்பிரான் அவர்கள், மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் இயற்றிய திருப்பெருந்துறை தல புராணத்தை வெளியிடவேண்டுமென்று விரும்பினமையால் 1892ஆம் ஆண்டு இறுதியில் அந்நூலைப் பதிப்பித்து வெளியிட்டிருக்கிறார். குறிப்புரை முதலியவற்றை எழுதி வெளியிட வேண்டுமென்று இவருக்கு விருப்பம் இருந்தும், விரைவில் வெளியிட வேண்டுமென்று தம்பிரான் வற்புறுத்தியதால் மூலத்தை மட்டும் பதிப்பித்து வெளியிட்டிருக்கிறார்.
சாமிநாதையர் சிந்தாமணிப் பதிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காலத்திலேயே சங்க இலக்கிய நூற்பெயர்களை அறியும் சூழல் ஏற்பட்டிருந்ததால், அதுமுதல் அந்நூல் பற்றிய குறிப்புகள், சுவடிகள் எங்குக் கிடைத்தாலும் சேகரித்து வைத்துக்கொள்ளத் தொடங்கியதால் சங்க இலக்கிய நூல்களை ஒன்றன் பின் ஒன்றாகப் பதிப்பித்து வெளியிட்டு வந்திருக்கிறார். சிலப்பதிகாரப் பதிப்பிற்குப் பிறகு தமது ஆசான் இயற்றிய திருப்பெருந்துறைப் புராணத்தின் மூலத்தை மட்டும் 1892இல் பதிப்பித்து வெளியிட்ட சாமிநாதையர் 1894இல் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான புறநானூற்றைப் பதிப்பித்து வெளியிட்டிருக்கிறார்.
1893, ஜனவரி மாதத்தில் வெ. நா. ஜூபிலி அச்சுக்கூடத்தில் புறநானூறு அச்சாகத் தொடங்கியிருக்கிறது. வழக்கம்போல கோடைவிடுமுறையில் சென்னை வந்திருந்து அச்சு வேலையைக் கவனித்திருக்கிறார். எப்போதும் இவரது அச்சுப் பணிக்கு உடனிருந்து உதவிவந்த திருமானூர்க் கிருஷ்ணையரால் புறநானூற்றுப் பதிப்புப் பணிக்கு உடனிருந்து உதவமுடியாத சூழல் ஏற்பட்டுவிடவே வை.மு. சடகோபராமானுஜாசாரியார் இவருடன் இருந்து உதவி செய்திருக்கிறார். 1893ஆம் ஆண்டு கல்லூரிக் கோடைவிடுமுறையில் புறநானூற்றின் முதல் 18 பாரங்கள் நிறைவேறியுள்ளன. கோடைவிடுமுறை முடிய சில நாட்களே இருந்தமையால் சென்னையிலிருந்து புறப்பட்டுச் சேலம் வழியாகப் பயணித்துப் புறநானூற்றில் சொல்லப்பட்டுள்ள சில ஊர்களை நேரில் சென்று பார்த்துவிட்டுக் கும்பகோணம் சென்று சேர்ந்திருக்கிறார். மேலும் அச்சாக வேண்டிய பகுதிகளின் ப்ரூபைக் கும்பகோணத்திற்கு அனுப்பும்படி ஏற்பாடாகியிருந்தமையால் பதிப்புப் பணி இயல்பாக நடந்துகொண்டிருந்தது. புறநானூற்றுப் பதிப்பு நடந்து வந்த காலத்தில் கும்பகோணம் கல்லூரியில் முதல்வராக இருந்துவிளங்கிய ஜே. ஹெச். ஸ்டோன் என்ற ஆங்கிலேயர் இவருக்குப் பெரிதும் உதவியிருக்கிறார்.
புறநானூற்றுப் பதிப்புப் பணி நடைபெற்று வந்த காலத்தில் உ.வே. சாமிநாதையருக்கு மூன்று துக்க நிகழ்வுகளை எதிர்கொள்ள வேண்டிய சூழல் வாய்த்துப்போனது. சில வகைகளில் இவருக்குக் குருவாகச் சொல்லத் தக்கவரும் சில வகைகளில் இவர்பால் மிக்க அன்புவைத்து விளங்கியவருமாகிய மகா வைத்தியநாதையர் 27-1-1893இல் மறைவுற்றது முதல் இழப்பாகும். வைத்தியநாதையரின் மறைவால் சாமிநாதையர் பெரும் வருத்தத்திற்கு ஆளாகியிருக்கிறார். மகாவைத்தியநாதையர் வரலாற்றைக் கலைமகள் இதழில் எழுதி வெளியிட்டுவந்து 1936ஆம் ஆண்டு மகாவைத்தியநாதையர் என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டிருக்கிறார் என்பது இங்கு நினைவு கொள்ளத்தக்கது.
7-10-1893இல் இவரது தந்தை வேங்கடசுப்பையர் மறைவுற்றிருக்கிறார். தந்தையின் இழப்பு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாக இவருக்கு அமைந்துபோனது. இந்தக் காலத்தில் இவரது தாய் சரஸ்வதி அம்மையாரும் மிகவும் நோய்வாய்ப்பட்டு நினைவற்று இருந்திருக்கிறார். தந்தை இறப்பு, தாயார் உடல்நலிவுற்றிருந்த துக்கங்களெல்லாம் தணிவதற்குள் இவரின் மிக நெருங்கிய அன்பர் பூண்டி அரங்கநாத முதலியார் 10-12-1893இல் காலமானது இவரைப் பெரும் துன்பத்திற்கு ஆளாக்கியது. தந்தை இறந்துபோன துக்கம் தணிவதற்குள் மற்றொரு அன்பரின் இழப்பு இவருக்குப் பெரும் பேரிழப்பாக அமைந்து போனது.
தந்தையாரை இழந்த துக்கமும், குடும்பப் பொறுப்பை வகிக்க வேண்டுமே என்ற கவலையும், அரங்கநாத முதலியார் காலமான வருத்தமும் சேர்ந்து அவரது மனவுறுதியைக் குலைத்திருக்கின்றன. அதனால் இவருக்கு உடல் பலவீனம் அடைந்து; பித்த சுரம் ஏற்பட்டிருக்கிறது. சில நாட்கள் அந்த நோயினால் துன்புற்றுத் தக்க மருந்துகளை உட்கொண்டு ஒருவாறு அதிலிருந்து மீண்டுவந்திருக்கிறார். நோயின் பிடியில் ஓராண்டு காலம் ஓடிப்போயிருக்கிறது. இந்த ஓராண்டு காலத்தில் பதிப்புப் பணி ஏதும் நடைபெறவில்லை. புறநானூற்றுப் பதிப்புப் பணியும் இடையில் நடைபெறாமல் நின்றுபோயிருந்தது. ஓராண்டிற்குப் பின்னர்தான் 1894ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் புறநானூறு பதிப்பித்து நிறைவேறியிருக்கிறது. சாமிநாதையர் பதிப்பித்த எட்டுத் தொகை நூல்களுள் இதுவே முதலாவதாகும். அதனால் முகவுரையில் எட்டுத் தொகை நூல்களைப் பற்றிய வரலாற்றை விரிவாக எழுதியிருக்கிறார். அகம், புறம் என்னும் இருவகைப் பொருளின் இயல்பையும் அதில் விளக்கியிருக்கிறார்.
விரிவான முகவுரை, நூலிற்கண்ட நாடு முதலியன பாடினோர் வரலாறு, பாடினோருடைய பெயர் வேறுபாடுகள், பாடப்பட்டோர் வரலாறு, பாடப்பட்டோருடைய பெயர் வேறுபாடுகள், நூற்பொருட் குறிப்பு, புறநானூறு மூலமும் உரையும், பாட்டு முதற் குறிப்பகராதி, திணை விளக்கம், துறை விளக்கம், துறைக்குறிப்பு, அரும்பதவகராதி, இலக்கணக்குறிப்பகராதி, பிரயோக விளக்கம் என்று புறநானூற்றுப் பதிப்பு முன் வெளிவந்த பதிப்பைக் காட்டிலும் பலவகையில் மேம்பட்டிருந்தது. இந்தப் புதிய பதிப்பு முறைகளை அவர் கைக்கொண்ட வரலாற்றுப் பின்புலத்தைக் கீழ்வரும் என் சரித்திரத்திலுள்ள இந்தக் குறிப்பு வெளிப்படுத்துகிறது.
புறநானூற்றை அச்சிடுவதாக நிச்சயம் செய்தவுடனே, பதிப்பு முறையைப் பற்றி யோசிக்கலானேன். வரவரப் புதிய துறைகளிலும் புதிய முறைகளிலும் விஷயங்களைச் சேர்த்து நூல்களைப் பதிப்பிக்க வேண்டுமென்ற விருப்பம் எனக்கிருந்தது. ஆங்கிலம் தெரியாத எனக்கு அப்பாஷையிலுள்ள சிறந்த பதிப்புக்களைப் பார்த்து மகிழவோ, அவற்றைப் போலச் செய்து பார்க்கவோ சக்தியில்லை. சங்கநூலைப் படிக்கவோ, படித்தபின் ஆராய்ச்சி செய்யவோ, அதன் பின் பதிப்பிக்கவோ இறைவன் திருவருள்தான் துணையாக இருந்தது. அவற்றில் முன் பழக்கம் இல்லாத நான் எந்த எந்த விதத்தில் ஆராய்ந்தால் அழகாக இருக்குமென்று தோற்றுமோ அவ்வவ்விதத்தில் முயன்று வரலானேன்.
கும்பகோணம் காலேஜில் சரித்திர ஆசிரியராக இருந்த கே. ஆர். துரைசாமி ஐயரென்பவர் தம் கையில் பெரிய இங்கிலீஷ் புஸ்தகமொன்றை ஒரு நாள் வைத்திருந்தார்.
“என்ன புத்தகம்?” என்று கேட்டேன்.
“பைபிள்” என்றார்.
“பைபிள் சிறியதாக அல்லவா இருக்கும்? இது மிகப் பெரியதாக இருக்கிறதே!” என்றேன்.
“இது பைபிளில் ஒரு விசேஷப் பதிப்பு. பைபிளிலுள்ள விஷயங்களைத் தொகுத்து வகைப்படுத்தி ஒரே மாதிரியான சொல்லும் கருத்தும் உள்ள பகுதிகளை அங்கங்கே காட்டிப் பதிப்பித்திருக்கிறார்கள். ஒவ்வொரு பக்கத்திலும் நடுவிலே தனியே இந்த ஒப்புமைப் பகுதி இருக்கிறது. இதை, ‘கன்கார்டன்ஸ்’ (Concordance) என்று இங்கிலீஷில் சொல்வார்கள்” என்று சொல்லி அதைப் பிரித்துக் காட்டினார்.
அந்த ஒப்புமைப் பகுதிகளில் பலவகை எண்கள் காணப்பட்டன. அப்புத்தகத்தில் அதைத் தொகுத்தவர் படமும் அவருக்கு உதவியாக இருந்தவர் படமும் இருந்தன.
“இந்த ஒப்புமைப் பகுதியால் என்ன பிரயோசனம்?” என்று கேட்டேன்.
“பைபிளில் ஒரே செய்தி பல இடங்களில் வருகிறது. ஒரே விதமான சொற்றொடர்களும் வருகின்றன. அவற்றைத் தொகுத்து வைத்து ஆராய்ந்தமையால் சில விஷயங்களின் உண்மையான பொருளும் சில சொற்களின் திருத்தமான உருவமும் புலப்பட்டனவாம். பைபிளில் ஏறியிருந்த பிழையான பாடங்கள் இந்தச் சோதனையினால் திருத்தமடைந்தனவாம்” என்று அவர் எனக்கு விளக்கினார்.
அப்போது எனக்குப் புறநானூற்று ஆராய்ச்சியில் புதுமுறை ஒன்று தோற்றியது. புறநானூற்றிலுள்ள விஷயங்களையும் சொற்களையும் முதலிலே அகராதியாகச் செய்துகொண்டு ஆராய்ச்சி செய்தால் உண்மையுருவத்தைக் கண்டுபிடிப்பது சுலபமாக இருக்குமென்று அறிந்தேன். அங்ஙனமே செய்து வைத்துக் கொண்டேன் (என் சரித்திரம், பக்.723-724)
புறநானூற்றுப் பதிப்பைத் தொடர்ந்து, 1894இல் சென்னைப் பல்கலைக்கழக மாணவர்களுக்காகச் சிலப்பதிகாரம் புகார்க் காண்டத்திலுள்ள நாடுகாண்காதை மூலத்தை அடியார்க்கு நல்லார் உரையுடன் பதிப்பித்து வெளியிட்டிருக்கிறார். தமிழ் பயிலும் மாணவர்களுக்குப் பயன்படும் நோக்கில் இவர் பதிப்பித்து வெளியிட்ட முதல் நூல் இதுவாகவே இருக்கக்கூடும். இதன்பின்னர் பல நூல்களை இவ்வாறு மாணவர்களுக்காகப் பதிப்பித்து வெளியிட்டிருக்கிறார். இவ்வகை நூல்களின் பதிப்பு முறைகள் இவர் பதிப்பித்த ஏனைய நூல்களிலிருந்து முற்றாக வேறுபட்டிருந்தன.
1895இல் புறப்பொருள் வெண்பாமாலையை அதன் பழைய உரையுடன் பதிப்பித்து வெளியிட்டிருக்கிறார். பாண்டித்துரைத் தேவர் இந்நூலைப் பதிப்பித்து வெளியிட மிகவும் விரும்பியிருக்கிறார். இதன் பின்னர் 1898இல் மணிமேகலையைப் பதிப்பித்து வெளியிட்டிருக்கிறார். இதற்கு முன்னர் 1897ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் மகன் கல்யாணசுந்தரம் ஐயருக்கு நாகப்பட்டினத்தில் இருந்த சக்கரபாணி ஐயரென்பவருடைய மகள் கமலாம்பாளைப் பெண்பார்த்துத் திருமணத்தை நடத்தி முடித்திருந்தார்.
1896ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஒருநாள் பாண்டித்துரைத் தேவர் கும்பகோணத்திலிருந்த மௌன சுவாமிகளைத் தரிசிப்பதற்காக வந்திருக்கிறார். அப்போது ஒருநாள் சாமிநாதையர் வீட்டிற்குப் பாண்டித்துரைத் தேவர் வருகைபுரிந்திருக்கிறார். பாண்டித்துரைத் தேவரின் வருகையையட்டி தம் வீட்டில் சங்கீத கச்சேரி ஒன்றை நடத்தியிருக்கிறார். வந்திருந்த பாண்டித்துரைத் தேவர் சாமிநாதையர் சேகரித்து வைத்திருந்த ஏட்டுச் சுவடிகளையெல்லாம் பார்வையிட்டு பெருவியப்புற்றிருக்கிறார். மணிமேகலை அச்சுப் பணி அப்போது நடைபெற்று வருவது அறிந்து, அப் பணிக்குத் தாம் பொருளுதவி செய்வதாக வாக்களித்துவிட்டுச் சென்றிருக்கிறார். அதுமுதல் இவரின் நூலாராய்ச்சி பணிகளுக்குத் தொடர்ந்து ஆதரவு அளித்து வந்திருக்கிறார்.
மணிமேகலைப் பதிப்பிற்குப் பழைய உரையில்லாத காரணத்தால் சாமிநாதையரே உரை எழுதியமைத்துப் பதிப்பித்திருக்கிறார். இவர் முதன் முதல் உரையெழுதிப் பதிப்பித்த நூல் இதுவேயாகும். இந்நூல் ஆராய்ச்சிக்கு, மளூர், ஸ்ரீமத் உ. வே. அரங்காசாரியர், கொழும்பு, பொ. குமாரசாமி முதலியார், இலங்கை பௌத்தவித்தியோதய பாடசாலைத் தலைவர் ஸூமங்களர், பெருகவாழ்ந்தான், உ.வே. அரங்காசாரியர், கும்பகோணம் கல்லூரிச் சமஸ்கிருத பண்டிதர் திருமலை ஈச்சம்பாடி, உ. வே. ஸ்ரீநிவாஸாசாரியர், திருமானூர் கிருஷ்ணையர், கும்பகோணம், பேட்டைத்தெரு, தியாகராஜபண்டாரம், திருப்பெருந்துறை, பொன்னுசாமிப்பிள்ளை, கும்பகோணம் நேட்டிவ் ஹைஸ்கூல் தமிழ்ப்பண்டிதர் மணலூர், இராமானுஜாசாரியார், பின்னத்தூர், நாராயணஸாமி ஐயர், மணலூர், சந்தானமையங்கார், மளூர், உ.வே. அரங்காசாரியார், சுப்பிரமணிய முதலியார், கிருஷ்ணசாமி ஐயர், சோமசுந்தர ஐயர், சுப்பிரமணிய ஐயர், நடேச ஐயர், கோபாலசாமி ஐயர், தமிழ்ப்பண்டிதர், திருவல்லிக்கேணி, உ.வே. வை. மு. சடகோபராமானுஜாசாரியார் என்ற பல அன்பர்கள் உதவியிருக்கின்றனர்.
பாண்டித்துரைத் தேவரின் பொருளுதவியுடன், உயர்நீதிமன்ற வழக்கறிஞராக இருந்த, எழும்பூர், ஸ்ரீமத். உ.வே.ஓ. இராஜகோபாலாசாரியர், சிவகங்கை, சிறுவயல் ஜமீந்தார் முத்துராமலிங்கத் தேவர் ஆகிய இருவரும் இந்நூலிற்குப் பொருளுதவி செய்திருக்கின்றனர்.
சாமிநாதையர், பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதி தொடங்கி அந்த நூற்றாண்டின் இறுதிவரையில் பதிப்புத்துறையில் ஈடுபட்டு உழைத்த வரலாற்றுக் குறிப்புகள் மட்டுமே இதுவரையில் சொல்லப்பட்டது. இது சாமிநாதையரின் பதிப்பு வரலாற்றுப் பகுதியில் முதல்நிலையாகக் கொள்ளத்தக்கது. பதினான்கு நூல்களை அந்தக் காலப் பகுதியில் அவர் பதிப்பித்து வெளியிட்டிருக்கிறார். அந்நூல்கள் சங்க இலக்கியம், காப்பியம், இலக்கணம், சிற்றிலக்கியம் எனும் தமிழின் முக்கியமான இலக்கிய வகைப்பாடுகளில் இருந்தன. பதிப்புத்துறையின் பல நுணுக்கங்களையும், தமிழின் ஆகச்சிறந்த நூல்களின் சுவடிகளைத் தேடித்திரட்டித் தம்வசம் பாதுகாத்து வைத்திருக்கும் நிலையையும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலேயே சாமிநாதையர் பெற்றிருந்தார்.
20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து எனும் சங்க இலக்கிய நூல்களையும், பல சிற்றிலக்கிய நூல்களையும் பதிப்பித்து வெளியிட்ட சாமிநாதையர் தம் இறுதிக்காலம் வரையில் பல நூல்களைப் பதிப்பித்து வெளியிட்ட வரலாற்றைத் தமிழ்ப் பதிப்பு வரலாற்றில் பார்க்கமுடிகிறது. ஆகமொத்தமாகச் சாமிநாதையர் பதிப்பித்து நூல்களின் எண்ணிக்கைக் கீழ்வருமாறு காணக்கிடைக்கின்றன. சாமிநாதையர் இறுதிக்காலம் வரையில் (1942) வெளிவந்த முதல் பதிப்புகள், மறு பதிப்புகளின் விவரங்கள் மட்டுமே இங்குத் தரப்பட்டுள்ளன. இப்பதிப்புகள் அவரின் நேரடிப் பார்வைக்கு உட்பட்டவையாகக் கருதத்தக்கன. அவர் இறப்பிற்குப் பின் வெளிவந்த மறு பதிப்புகளும், அவர் எழுதி வைத்திருந்த குறிப்புக்களைக் கொண்டு பிறர் பதிப்பித்து வெளியிட்ட நூல்களின் வரலாறுகளும் தனியே நோக்கத்தக்கன.
சங்க இலக்கியப் பதிப்புகள்
வ. எண் நூல் பெயர் முதல் பதிப்பு இரண்டாம் பதிப்பு மூன்றாம் பதிப்பு
- பத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும் - 1889,1918,1931
- பத்துப்பாட்டு மூலம் - 1931
- புறநானூறு மூலமும் பழைய உரையும் - 1894, 1923, 1935
- புறநானூறு மூலம்,1936
- ஐங்குறுநூறு மூலமும் பழைய உரையும் - 1903,1920
- பதிற்றுப்பத்து மூலமும் பழைய உரையும் - 1904 ,1920,1941
- பரிபாடல் மூலமும் பரிமேலழகர் உரையும் - 1918 ,1935
- குறுந்தொகை மூலமும் உ.வே.சா. உரையும் 1937
காப்பியப் பதிப்புகள்
- சீவகசிந்தாமணி மூலமும் நச்சினார்க்கினியர் உரையும் - 1887,1907, 1922
- சிலப்பதிகார அரும்பதவுரை - 1892
- சிலப்பதிகாரம் மூலமும் அடியார்க்கு நல்லார் உரையும் (1892) சிலப்பதிகாரம் மூலமும் அரும்பத உரையும், அடியார்க்கு நல்லார் உரையும் - 1892,1920,1927
- மணிமேகலை மூலமும் உ.வே.சா. அரும்பத உரையும் - 1898,1921,1931
- பெருங்கதை மூலமும் உ.வே.சா. குறிப்புரையும் - 1924, 1935
- பெருங்கதை மூலம் - 1935
- உதயணகுமாரகாவியம் மூலமும் உ. வே. சா. குறிப்புரையும் - 1935
இலக்கணப் பதிப்புகள்
வ. எண் நூல் பெயர் முதல் பதிப்பு இரண்டாம் பதிப்பு மூன்றாம் பதிப்பு நான்காம் பதிப்பு
- புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் சாமுண்டி தேவநாயகரியற்றிய உரையும் - 1895 , 1915, 1924, 1934
- நன்னூல் மூலமும் மயிலைநாதருரையும் - 1918
- நன்னூல் மூலமும் சங்கர நமச்சிவாயருரையும் - 1925, 1935
- தமிழ்நெறி விளக்கம் மூலமும் பழைய உரையும் (பொருளியல்) - 1937
சிற்றிலக்கியப் பதிப்புகள்
வ. எண் நூல் பெயர் முதல் பதிப்பு இரண்டாம் பதிப்பு மூன்றாம் பதிப்பு
- சுப்பிரமணிய தேசிக விலாசச்சிறப்பு, வேணுவனலிங்க விலாசச்சிறப்பு (திருவாவடுதுறை யாதீனத்தைச் சேர்ந்த ஆறுமுகச்சுவாமிகளுடன் இணைந்து பதிப்பித்தது) 1878.
- திருக்குடந்தைப் புராணம் (தியாகராச செட்டியாருடன் இணைந்து பதிப்பித்த நூல்) -1883
- திருச்சிற்றம்பல வெண்பாவந்தாதி, திருவாரூர் பாதி திருவொற்றியூர் பாதி வெண்பாவந்தாதி, திருவாரூர் மருந்து வெண்பாமாலை - 1888
- கச்சி ஆனந்த ருத்திரேசர் வண்டுவிடுதூது - 1888, 1931
- திருமயிலைத் திரிபந்தாதி - 1888, 1930
- திருப்பெருந்துறைப்புராணம் - 1892, 1913
- திருவாவடுதுறைக்கோவை - 1903, 1926
- வீரவனப்புராணம் - 1903
- சீகாழிக்கோவை - 1903
- சூரைமாநகர்ப் புராணம் - 1904
- திருக்காளத்தி நாதருலா - 1904, 1925
- திருப்பூவண நாதருலா - 1904, 1923
- திருவாரூருலா - 1905, 1910 , 1925
- திருவாரூர்த் தியாகராசலீலை - 1905 1928
- திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம் - 1906, 1927
- தனியூர்ப்புராணம் - 1907
- தேவையுலா - 1907, 1911, 1925
- மண்ணிப்படிக்கரைப் புராணம் - 1907
- திருப்பாதிரிப்புலியூர்க் கலம்பகம் -1908, 1919, 1940
- ஸ்ரீமீனாட்சிசுந்தரம்பிள்ளையவர்கள் பிரபந்தத்திரட்டு - 1910, 1926
- திருக்காளத்திப்புராணம் - 1912
- திருத்தணிகைத்திருவிருத்தம் - 1914
- மதுரைச் சொக்கநாதர் தமிழ்விடுதூது - 1930, 1932, 1941
- தக்கயாகப்பரணி - 1930
- மதுரைச் சொக்கநாதருலா - 1931
- கடம்பர்கோயில் உலா - 1932
- கொட்டையூர் ஸ்ரீசிவக்கொழுந்து தேசிகர் இயற்றிய பிரபந்தங்கள் - 1932
- பழனிப்பிள்ளைத்தமிழ் - 1932
- ஸ்ரீபத்மகிரி நாதர் தென்றல்விடுதூது - 1932
- மதுரைச் சொக்கநாதர் மும்மணிக்கோவை - 1932
- திருமயிலை கபாலீசுவரர் பஞ்சரத்தினம் - 1932
- பழனி இரட்டைமணிமாலை - 1932, 1935
- களக்காட்டுச் சத்தியவாகீசர் இரட்டைமணிமாலை - 1932, 1935
- திருக்கழுக்குன்றச் சிலேடை வெண்பா - 1933, 1939
- சங்கரநயினார் கோயிற் சங்கரலிங்க உலா - 1933
- பாசவதைப் பரணி - 1933
- சங்கரநயினார் கோயில் அந்தாதி - 1934
- வலிவலமும்மணிக்கோவை - 1934
- விளத்தொட்டிப் புராணம் - 1934
- கலைசைக்கோவை - 1935
- பழமலைக்கோவை - 1935
- திரு இலஞ்சி முருகன் உலா - 1935
- ஆற்றூர்ப்புராணம் - 1935
- திருமயிலை யமக அந்தாதி மூலமும் பழைய உரையும் - 1936
- மான் விடு தூது - 1936
- திருவரங்கச் சிலேடை மாலை - 1936
- திருவாரூர்க் கோவை - 1937, 1941
- சிராமலைக்கோவை - 1937
- திருக்கழுக்குன்றத்து உலா - 1938
- திருக்காளத்தி நாதர் இட்டகாமிய மாலை - 1938
- திருமலையாண்டவர் குறவஞ்சி - 1938
- திருமாலிருஞ்சோலைமலை அழகர் கிள்ளைவிடுதூது - 1938, 1941
- சிவ சிவ வெண்பா மூலமும் உரையும் - 1938
- புகையிலை விடு தூது - 1939
- தணிகாசல புராணம் - 1939
- தென்திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - 1939
- ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் பிரபந்தங்கள் - 1939
- திருக்குற்றாலச் சிலேடை வெண்பா - 1940
- வில்லைப்புராணம் - 1940
மாணவர்களுக்காகப் பதிப்பித்த நூல்கள்
- சிலப்பதிகாரம் - புகார்க் காண்டம் - நாடுகாண்காதை மூலமும் அடியார்க்கு நல்லார் உரையும் 1894
- சிலப்பதிகாரம் - புறஞ்சேரியிறுத்தகாதை மூலமும் அடியார்க்கு நல்லாருரையும் - 1897
- பத்துப்பாட்டு - முல்லைப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும் - 1903, 1910, 1927,
- புறப்பொருள் வெண்பாமாலை (முதல் நான்கு படலங்கள்) மூலமும் பழைய உரையும் - 1904
- பத்துப்பாட்டு - பட்டினப்பாலை மூலமும் நச்சினார்க்கினியர் உரையும் - 1906
- சிலப்பதிகாரம் - கொலைக்களக் காதை மூலமும் அடியார்க்கு நல்லாருரையும் - 1907
- புறநானூறு (200 - 266) மூலமும் பழைய உரையும் - 1907
- பத்துப்பாட்டினுள் இரண்டாவதாகிய பொருநராற்றுப்படை மூலமும் நச்சினார்க்கினியருரையும் - 1907
- புறப்பொருள் வெண்பாமாலை - வாகை, பாடாண் படலம், மூலமும் பழைய உரையும் - 1908
- பத்துப்பாட்டு - குறிஞ்சிப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும் 1908
- புறநானூறு (51 - 100), மூலமும் பழைய உரையும் 1909
- பத்துப்பாட்டு - சிறுபாணாற்றுப்படை மூலமும் நச்சினார்க்கினியர் உரையும் 1909
- புறநானூறு (101 - 125) மூலமும் பழைய உரையும் 1911
- பத்துப்பாட்டினுள் பத்தாவதாகிய மலைபடுகடாம் மூலமும் நச்சினார்க்கினியருரையும் 1912
- சிலப்பதிகாரம் - மதுரைக்காண்டம் - ஊர்காண்காதை, அடைக்கலக்காதை மூலமும் அரும்பதவுரையும், அடியார்க்கு நல்லார் உரையும் - 1930
- பெருங்கதையின் இரண்டாம் பகுதியாகிய இலாவாண காண்டம் 1935
1930இல் வெளிவந்த சிலப்பதிகாரம் - மதுரைக்காண்டம் - ஊர்காண்காதை, அடைக்கலக்காதை மூலமும் உரையும் கொண்ட பதிப்பின் பின் அட்டையில் உள்ள நூல்களின் அச்சு விவரங்கள் - இவை அச்சுருவான முழு விவரங்கள் இதுவரையில் இந்த ஆய்வாளருக்குக் கிடைக்கப்பெறவில்லை
- சீவகசிந்தாமணி - கோவிந்தையாரிலம்பகம் மூலமும் உரையும்
- சிலப்பதிகாரம் - இந்திரவிழவூரெடுத்தகாதை மூலமும் அடியார்க்கு நல்லார் உரையும் அரும்பதவுரையும்
- சிலப்பதிகாரம் - நாடுகாண்காதை மூலமும் அடியார்க்கு நல்லார் உரையும் அரும்பதவுரையும்
- மணிமேகலை - முதல் மூன்று காதைகள், மூலமும் குறிப்புரையும்
மற்றோருவருடன் இணைந்துத் தொகுத்துப் பதிப்பித்த நூல்
- செய்யுள் வாசகத் திரட்டு - 1937
(குறிப்பு:- இவற்றுள் சிற்றிலக்கியப் பதிப்புகளுள் மேலே குறிப்பிட்டவைகளைக் கடந்து இரண்டாம், மூன்றாம் பதிப்புகளும்; மாணவர்களுக்காகப் பதிப்பித்தவைகளில் குறிப்பிட்டவைகளைக் காட்டிலும் கூடுதலான பதிப்புகளும் வெளிவந்திருக்கலாம். கிடைத்த தரவுகளின் அடிப்படையில் இந்த விவரங்கள் தரப்பட்டுள்ளன; தேடுதல் தொடரும் நிலையில் இவ்விவரங்களுள் மாற்றம் ஏற்படலாம். மேலதிகமாக மாற்றம் நிகழ்வதற்கு வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.)
23ஆம் வயது தொடங்கி 87ஆம் வயது வரையிலும் வாழ்நாளின் பெரும்பகுதியில் தமிழகம் முழுவதும் தேடியலைந்து சுவடிகளைக் கண்டெடுத்து ஆராய்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை அச்சிட்டு வெளியிட்ட சாமிநாதையருக்கு இறுதிவரையில் தமிழ் நூல்களைத் தேடிக் கண்டு வெளியிடும் ஆர்வம் மட்டும் குறைந்திருக்கவே இல்லையென்பதைக் கீழ்வரும் அவரின் குறிப்பொன்று நமக்குப் புலப்படுத்துகிறது.
தமிழ் ஆராய்ச்சியில் நான் ஈடுபட்ட பிறகு தமிழ் ஏட்டுச் சுவடிகளைத் தேடுவது என் வாழ்க்கையில் ஒரு முக்கியமான வேலையாகிவிட்டது. அச்சிட்ட புத்தகமோ, அச்சிடாததோ எதுவானாலும் சுவடியின் உருவத்திலே காணும்பொழுது ஏதோ ஒரு தெய்வத்தின் உருவத்தைக் காண்பதுபோலவே நான் எண்ணுவது வழக்கம். சுவடிகளைத் தேடி அவை இருக்குமிடம் சென்று மூலை முடுக்குகளிற் கிடக்கும் அவற்றைத் தொகுத்து ஆராய்வதில் என் உள்ளம் ஒரு தனி இன்பத்தை அடையும். என் உடலில் முதுமைப் பருவத்தின் தளர்ச்சி ஏறிக்கொண்டே வந்தாலும் என் உள்ளத்தில் மட்டும் ஏட்டுச் சுவடிகளிலுள்ள பற்று இறங்கவே இல்லை (மாணாக்கர் விளையாட்டுகள், கலைமகள், தொகுதி 10, பகுதி 55 - 60, 1936).
தமிழின்பால் தணியாத பற்றும், உள்ளார்ந்த ஈடுபாடும், அயராத பேருழைப்பும் சாமிநதையரின் நிலைத்த புகழுக்குக் காரணங்களாக அமைந்தன. அவர் பதிப்பித்து வெளியிட்ட நூல்களைக் காட்டிலும் பதிப்பிக்கக் கருதிச் சுவடிகளைத் தேடித்திரட்டி ஆராய்ந்து வைத்திருந்த நூல்களின் எண்ணிக்கை மிகுதியாக இருப்பதாக அறியக்கிடக்கின்றன. சாமிநாதையருக்குக் காலம் இன்னும் கொஞ்சம் இடம் தந்திருப்பின் மேலும் பல தமிழ் நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டிருப்பார்.
துணைநின்ற நூல்கள்
சாமிநாதையர், உ.வே. 2008 (ஏழாம் பதிப்பு). என் சரித்திரம். சென்னை: மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூல்நிலையம்
ஜகந்நாதன், கி.வா. 1983. என் ஆசிரியப்பிரான். சென்னை: மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூல்நிலையம்
சாமிநாதையர், உ. வே. 1938. நல்லுரைக் கோவை (மூன்றாம் பாகம்). சென்னை: கார்டியன் அச்சுக்கூடம்
வேங்கடாசலபதி, ஆ. இரா. 2018. உ.வே.சாமிநாதையர் கடிதக் கருவூலம், சென்னை: டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூல்நிலையம்.
உ.வே.சாமிநாதையர் பதிப்பித்த நூல்களின் விவரங்களைத் திரட்டுவதற்குப் பேருதவி புரிந்த மறைமலையடிகள், ரோஜா முத்தையா, உ. வே. சாமிநாதையர், ஆவணக் காப்பகம், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் ஆகிய நூலகங்களின் நூலகர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
(1909, ஆகஸ்டு, 5, உ.வே.சா. அவர்களின் புத்தக ஆராய்ச்சிச் செலவுக்கு ஆயிரம் ரூபாய் வழங்குவதாகத் தீர்மானித்து அரசாங்கம் வழங்கிய உத்தரவு இவருக்குக் கிடைக்கப்பெறுதல், 1932, ஆகஸ்ட் 3, சென்னைப் பல்கலைக்கழகம் உ.வே.சா. அவர்களின் தமிழ்ப் பணியைப் பாராட்டி ‘டாக்டர்’ (Doctor of Literature) பட்டம் அளித்துப் பெருமைபடுத்தியது; 1933, ஆகஸ்டு 1, செனட் மண்டபத்தில் கவர்னருக்கு அளிக்கப்பட்ட தேநீர் விருந்தில் உ.வே.சா. கலந்துகொள்ளுதல்)