ஆர்தர் கிரோபர் 2002 ஆம் ஆண்டில் பெய்ஜிங்கில் சீனா-சார்ந்த ஆராய்ச்சி சேவையான டிராகனோமிக்ஸை கூட்டாக நிறுவினார். 2017 வரை அதன் முதன்மை இதழான சீனா எகனாமிக் குவார்டர்லியின் தலைமை ஆசிரியராக இருந்தார். டிராகனோமிக்ஸ் 2011 ஆம் ஆண்டில் காவேகலுடன் இணைந்தது. கிரோபர் இணைந்த நிறுவனத்தின் ஆராய்ச்சித் தலைவராகப் பணியாற்றினார்.

டிராகனோமிக்ஸை நிறுவுவதற்கு முன்பு, அவர் ஆசிய பொருளாதார நிலைமைகளில் தேர்ச்சி பெற்ற ஒரு பத்திரிகையாளராக 15 ஆண்டுகள் பணியாற்றினார். சீனா, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பிற ஆசிய நாடுகளிலிருந்து செய்தி வழங்கினார். அவர் நியூயார்க் பல்கலைக் கழகத்தின் ஸ்டெர்ன் வணிகக் கல்லூரியில் பொருளாதாரத்தின் இணைப் பேராசிரியராகவும், வெளிநாட்டு உறவுக் குழு மற்றும் அமெரிக்கா-சீனா உறவுகளுக்கான தேசியக் குழுவின் உறுப்பினராகவும், பெய்ஜிங்கில் உள்ள புரூக்கிங்ஸ்-சிங்ஹுவா மையத்தின் வருகைதரும் ஆய்வாளராகவும் உள்ளார். அவரது புத்தகம் "சீனப் பொருளாதாரம்: அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியவை" (China’s Economy - What Everyone Needs To Know by Arthur R. Kroeber, Oxford University Press, 2016)ஆக்ஸ்போர்ட் யுனிவர்சிட்டி பிரஸ் நிறுவனத்தால் 2016 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது, இரண்டாம் பதிப்பு 2020 ஆம் ஆண்டில் வெளியானது, பல்கலைக்கழக வகுப்பறைகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

chinas economy"இந்த வையத்து நாட்டிலெல்லாம் தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறி கெட்டுப் பாழ்பட்டு நின்ற" ஒரு நாடு. நூறு ஆண்டுகளுக்கு முந்தைய இந்தியாவுக்கு பாரதியார் பாடியது சீனாவுக்கு இன்னும் அதிகமாகப் பொருந்தியது. சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் சீன தேசம் உள்நாட்டில் போர்புரியும் பிரபுக்களாலும் அந்நிய ஏகாதிபத்தியங்களின் ஆதிக்கத்தாலும் நசுக்கப்பட்டு சுரண்டப்பட்டு அலைக்கழிக்கப்பட்டுக் கொண்டிருந்தது.

125 ஆண்டுகளுக்குப் பிறகு சீனா உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரமாக வளர்ச்சியடைந்துள்ளது; நாட்டு மக்கள் மத்தியில் அறுதி ஏழ்மையை ஒழித்துள்ளது. சராசரி வாழ்க்கைத்தரத்தை உயர்த்தியுள்ளது. மின்சார வாகனங்கள், சூரிய மின்தகடுகள், 5ஜி தொழில்நுட்பம் தொடங்கி உயர்வேக புல்லட் ரயில்கள் உள்ளிட்ட உள்கட்டுமானங்களை அமைப்பதிலும் உலகில் முதலிடம் வகிக்கிறது.

சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்ட நூறாவது ஆண்டான 2021 இல் "அனைத்து வகையிலும் மிதமான வளம் கொண்ட ஒரு சமூகத்தைக் கட்டமைக்க வேண்டும்" என்ற இலக்கை அமைத்திருந்தது, 1949 முதல் சீனாவில் அதிகாரத்தில் இருக்கும் அக்கட்சி.

அதே போல, சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய நூறாவது ஆண்டான 2049 இல், "வளமான, வலுவான, சனநாயக, பண்பாட்டில் முன்னேறிய, இணக்கமான ஒரு நவீன சோசலிச நாட்டைக் கட்டமைக்க வேண்டும்" என்று சீன அரசு இலக்கு அமைத்துள்ளது.

இந்த விந்தை எப்படி நடக்கவிருக்கிறது? சீனப் பொருளாதாரத்தின் இயக்கு விசைகள் என்ன? வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் மக்களின் நலவாழ்வையும் சாதிப்பதற்கு அவை எவ்வாறு ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. 2049 இன் இலக்கை சீனா எட்டி விடுமா? அது எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் என்னென்ன? அதன் வலிமைகள் என்னென்ன?

ஆர்தர் கிரோபர் எழுதிய "சீனப் பொருளாதாரம்: அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியவை" (China’s Economy What Everyone Needs To Know by Arthur R. Kroeber Oxford University Press, 2016) என்ற ஆங்கில நூல் இது தொடர்பான ஏராளமான விவரங்களைத் திரட்டித் தருகிறது. ஆர்தர் கிரோபர் சீனாவின் தென் பகுதியில் உள்ள ஹாங்காங் சிறப்பு நிருவாகப் பகுதியில் "டிராகனாமிக்ஸ்" (டிராகன் பொருளியல்) என்ற ஆய்வு நிறுவனத்தை நிறுவி நடத்தி வருகிறார். சீனாவின் முன்னணிப் பல்கலைக் கழகங்களுடனும் அமெரிக்காவின் முன்னணி பல்கலைக் கழகங்களுடனும் இணைந்து ஆய்வுகளைச் செய்கிறார்.

அவர் மேற்கத்திய முதலாளித்துவக் கருத்துநிலையில் இருந்து சீனப் பொருளாதாரம் பற்றிய தனது ஆய்வுகளை முன் வைக்கிறார். ஒரு நாட்டைப் பற்றிப் புரிந்து கொள்வதற்கு அதன் பொருளாதாரத்தின் கட்டமைவைப் புரிந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் சீனாவின் உள்நாட்டு நிலைமைகளைப் பற்றிப் புரிந்துகொள்ள மிக ஆதாரமான நூல் இது.

நூலாசிரியரின் பார்வையில் சீன அரசியல் பொருளாதாரத்தின் முதன்மையான கூறுகளைப் பின்வருமாறு தொகுக்கலாம் (இவை மார்க்சிய லெனினியப் பார்வையில் இன்னும் மேம்பட்ட புரிதலைத் தருகின்றன. அது குறித்து இக்கட்டுரையின் இறுதிப் பகுதியில் சுருக்கமாகப் பார்க்கலாம்).

சீன அரசியல் பொருளாதாரத்தின் மையமான கூறுகள்

அ. ஆட்சிமுறை

சீனாவில் இருப்பது அதிகாரத்துவ மேலாதிக்க ஒரு கட்சி அரசு (bureaucratic-authoritarian one-party state)

சீன நிருவாக அமைப்பு கொள்கையளவில் மையப்படுத்தப்பட்டது, ஆனால் நடைமுறையில் கணிசமான அளவு பரவலாக்கப்பட்டது

சீனாவின் கம்யூனிஸ்ட்டுக் கட்சி அரசாங்கம், நீதிமன்றங்கள், ஊடகங்கள், வணிக நிறுவனங்கள் (அரசு, தனியார்), பல்கலைக் கழகங்கள், மத நிறுவனங்கள் அனைத்தையும் கட்டுப்படுத்துகிறது.

ஆ. பொருளாதார வளர்ச்சி

சீனாவின் பொருளாதார வளர்ச்சி, மையப்படுத்தப்பட்ட திட்டமிட்ட முறையில் இருந்து 1979 முதல் சந்தை அடிப்படையிலான செயல்பாடுகளுக்கு படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டது. இதற்கு 1991 இல் வீழ்ச்சியடைந்த சோவியத் ஒன்றியத்தின் அனுபவங்களும் இருபதாம் நூற்றாண்டில் ஏற்றுமதிசார் பொருளாதார வளர்ச்சி அடைந்த கிழக்காசிய நாடுகளான ஜப்பான், தென் கொரியா, தைவான் ஆகியவற்றின் அனுபவங்களும் வழிகாட்டியாகப் பயன்பட்டன.

கடந்த 45 ஆண்டு கால சீனாவின் வளர்ச்சிக்குப் பின்னால் பெருந்திட்டம் எதுவும் இருக்கவில்லை. பாறைகளைத் தடவித் தடவி ஆற்றைக் கடப்பது என்ற முறையில்தான் சீனாவில் கொள்கைகள் வகுக்கப்படுகின்றன.

1980களின் சீர்திருத்தம் – திறந்து விடுதல் கொள்கையின் கீழ், 30 ஆண்டுகளில் சீனா உலகின் முன்னணி ஆலை உற்பத்தி நாடாகவும் முன்னணி ஏற்றுமதி நாடாகவும் வளர்ந்துள்ளது.

சீனாவின் ஏற்றுமதிசார் பொருளாதார வளர்ச்சிக்கு வெளிநாட்டு நிறுவனங்களின் அந்நிய நேரடி முதலீடுகள் உந்துசக்தியாக இருந்தன.

சீனா புதுப்பிக்கப்படக் கூடிய ஆற்றல் உற்பத்தியில் (காற்றாலைகள், சூரிய மின்சக்தி, அணு மின்உலைகள், நீர்மின் நிலையங்கள்) உலகில் முன்னணியில் உள்ளது.

இ. நிலச்சீர்திருத்தம் – நகரமயமாதல்

1949 புரட்சிக்குப் பிறகு நிலத்தில் தனியுடைமை ஒழிக்கப்பட்டுள்ளது. நாட்டுப் புறத்தில் நிலம் கிராம சமூகத்தின் கூட்டு உடைமையாக உள்ளது. 1980-களிலிருந்து நிலத்தின் பயன்பாட்டு உரிமை தனிப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

நகர்ப்புறங்களில் 1980-களுக்கு முன் அரசு நிறுவனங்களுக்குச் சொந்தமான குடியிருப்புகள், 1990களில் அதில் குடியிருந்தவர்களுக்கு குறைந்த விலைக்கு விற்கப்பட்டன. அவற்றை விற்கும் உரிமையும் பிற வீடுகளை வாங்கும் உரிமையும் சட்டப்படியானதாக்கப்பட்டது. இது நகர்ப்புற வீட்டுமனைச் சந்தைப் பெருக்கத்தைத் தூண்டிவிட்டுள்ளது.

ஈ. சீன நிறுவனங்களின் கட்டமைப்பு

விமானப் போக்குவரத்து, ரயில் போக்குவரத்து, ஆற்றல் – கச்சா எண்ணெய், எரிவாயு, நிலக்கரி உற்பத்தி, உருக்கு, அலுமினியம், பெட்ரோ வேதிப் பொருட்கள், கனரகத் தொழில்கள், உள்கட்டுமானம், வாகன உற்பத்தி, இராணுவத் தளவாடங்கள் உற்பத்தி அரசுக் கட்டுப்பாட்டில் உள்ளன. பொருளாதாரத்தில் செயல்திறனை மேம்படுத்துவதற்கு முன்தேவை தனியார் மூலதனம் இல்லை, போட்டியே என்ற அடிப்படையில் ஒன்றுக்கும் மேற்பட்ட அரசு நிறுவனங்கள் இந்தத் துறைகளில் போட்டியிடுகின்றன. நுகர்பொருள் துறைகள், சில்லறை விற்பனை, உணவகங்கள் போன்ற சேவைத் துறைகளில் தனியார் நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.

சீனாவின் நிதித்துறை கறாராக ஒழுங்குபடுத்தப்பட்டு வரம்பிடப்பட்டுள்ளது. வங்கித் துறை அரசு வங்கிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. நிதித்துறை சூதாட்டக் கருவிகள், பங்குச் சந்தை சூதாட்டம் கடுமையாக ஒழுங்குபடுத்தப்படுகிறது.

உ. உள்நாட்டில் சீனாவுக்கு முன் நிற்கும் சவால்கள் – ஆசிரியரின் தீர்வு

பொருளாதார ஏற்றத்தாழ்வும் ஊழலும் சீன அரசு சரிசெய்ய வேண்டிய மிகப்பெரிய சவால்களாக உள்ளன.

சீனா தொடர்ந்து பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்ய வேண்டுமானால், ஆதாரங்களைத் திரட்டுவதன் மூலம் வளர்ச்சி (resource mobilization phase) என்பதிலிருந்து செயல்திறனை மேம்படுத்துவதன் மூலம் வளர்ச்சி (efficiency phase) என்பதை நோக்கி நகர வேண்டும்.

சீனாவின் வேகமான வளர்ச்சி அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம் போன்ற நாடுகள், இந்தியா போன்ற ஆசிய நாடுகள், ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகள் அனைத்துக்கும் வெவ்வேறு வகையான வாய்ப்புகளையும் சவால்களையும் வழங்குகிறது.

கிரோபர் இந்நூலை 13 இயல்களாக அமைத்துள்ளார். முதல் இயலில் சீனாவின் அரசியல் பொருளாதாரத்தின் பொதுவான தன்மைகளை விளக்குகிறார். இயல்கள் 2, 3, 4 முறையே வேளாண்மை, தொழில்துறை, நகரமயமாக்கம் முதலிய அடிப்படைப் பொருளாதார இயக்கங்களைப் பற்றிப் பேசுகின்றன.

சீனாவில் வணிக நிறுவனங்களின் கட்டமைப்பு (அரசுத் துறை, தனியார் நிறுவனங்கள்) இயல் 5 இலும், சீனாவின் மைய அரசுக்கும் மாகாண அரசுகளுக்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் இடையிலான நிதி உறவைப் பற்றி இயல் 6 இலும், வங்கிகள், பங்குச் சந்தைகள் உள்ளிட்ட நிதித்துறை அமைப்பு பற்றி இயல் 7 இலும் பேசப்படுகிறது.

ஆற்றலும் சுற்றுச் சூழலும், மக்கள்தொகை மாற்றங்களும் உழைப்பாளர் சந்தையும், நுகர்வோர் பொருளாதாரம் ஆகியவை இயல்கள் 8, 9, 10 ஆக அமைகின்றன.

சீனா எதிர்கொள்ளும் உள்நாட்டு சவால்களான பொருளாதார ஏற்றத்தாழ்வும் ஊழலும் பற்றிய இயல் 11 உம், சீனா தனது வளர்ச்சி முறையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தும் இயல் 12 உம், சீனாவும் உலக நாடுகளும் எனத் தொகுத்துக் கூறும் இயல் 13 உம் நூலை நிறைவு செய்கின்றன.

இந்நூலில், பிற நாடுகளுடன் குறிப்பாக அமெரிக்காவுடன் சீனாவின் உறவு பற்றியும், சீனாவின் வளர்ச்சியை முடக்குவதற்கு அமெரிக்கா எடுக்கும் முயற்சிகள் பற்றியும் பேசப்படவில்லை. இந்நூல் சீனாவின் உள்நாட்டு அரசியல் பொருளாதாரத்தை மட்டுமே தனது ஆய்வுப் பொருளாக எடுத்துக் கொண்டுள்ளது.

சீனாவின் அரசியல் பொருளாதாரக் கட்டமைப்பு

சீனா உலகின் மிகப் பழமையான அரசு அமைப்பைக் கொண்டுள்ளது. பொ.ஆ ஆறாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட அதிகாரத்துவ முறையும் தேர்வு முறையும் சாராம்சத்தில் மாறாமல் தொடர்கின்றன. அத்தகைய வரலாற்றுத் தொடர்ச்சியில் 1949 இல் கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரத்துக்கு வந்ததும் 1979இல் சீர்திருத்தங்கள் திறந்து விடுதல் என்ற பாதையை மேற்கொண்டதும் முதன்மையான திருப்பு முனைகளாக அமைந்தன.

சீனாவின் பொருளாதார வளர்ச்சிப் பாதையைப் பின்வரும் கட்டங்களாகப் பிரிக்கலாம்.

1979 முதல் 1991 வரை – முதல் தலைமுறை சீர்திருத்தங்கள்

1991 முதல் 2001 வரை – இரண்டாம் தலைமுறை சீர்திருத்தங்கள்

2001 முதல் 2008 வரை – சீனா உலக வர்த்தகக் கழகத்தில் உறுப்பினராவது, ஆலை உற்பத்தி, நகர்ப்புற வீடு கட்டுமானம், ஏற்றுமதி முதலியவற்றின் வியத்தகு வளர்ச்சி

2008 முதல் இப்போது வரை – மேற்கத்திய நாடுகளில் பொருளாதார நெருக்கடி, சீனா உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் (பெல்ட் ரோட் முன்னெடுப்பு) உள்கட்டமைப்புகளில் பெருமளவு முதலீடு செய்வது, அறிவியல் – தொழில்நுட்ப வளர்ச்சி.

1979 இல் ஏற்றுமதி ஆலை உற்பத்திக்கான சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், தென்சீனாவின் கடற்கரையோர வட்டாரங்களான ஷென்ஜென் (Shenzhen), ஜுஹாய் (Zhuhai), ஷியாமன் (Xiamen), ஷான்தௌ (Shantou) ஆகிய பகுதிகளில் செயல்படுத்தப்பட்டன. அவற்றுக்குள் பொருட்களை இறக்குமதி செய்வது வரியின்றி அனுமதிக்கப்பட்டது. அந்நிய முதலீடுகள் பெருமளவில் ஊக்குவிக்கப்பட்டன.

இந்தப் பகுதிகள் சீனாவின் தென் எல்லையில் உள்ள ஹாங்காங், தைவான், மக்காவ் ஆகிய தன்னாட்சிப் பகுதிகளை ஒட்டி (இடையே கடல்) அமைந்திருப்பதால் வணிகத்துக்கும் அந்நிய முதலீட்டுக்கும் பொருத்தமான இடங்களாக இவை அமைந்திருந்தன.

இந்தச் சிறப்புப் பொருளாதார மண்டலங்களின் வெற்றியைத் தொடர்ந்து பிற பகுதிகளுக்கு இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. 1984 ஆம் ஆண்டில் 14 கடலோரத் திறந்த நகரங்கள் என்ற கொள்கையின்படி 14 கடற்புற நகரங்களில் அந்நிய வணிகமும் முதலீடும் அனுமதிக்கப்பட்டன. குறிப்பாக, 1990 ஆம் ஆண்டில் ஷாங்காய் (Shanghai) மாநகரத்தின் வளர்ச்சியடையாத கிழக்குப் பகுதி மிகப்பெரிய சிறப்புப் பொருளாதார மண்டலமாக கட்டமைக்கப்பட்டது. இந்தக் கொள்கைகள் படிப்படியாக நாடு முழுவதற்கும் விரிவுபடுத்தப்பட்டன.

1970-களின் இறுதியில் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியிலும் பயன்பாட்டிலும் மேற்குலகத்தை விடப் பின்தங்கிய நிலையில் இருந்தது, சீனா. 1970-களில் அமெரிக்காவுடன் அரசுறவை ஏற்படுத்திக் கொண்டது, சீனா. பிற கிழக்காசிய நாடுகளைப் போல உள்நாட்டு தொழில் குழுமங்களைச் சார்ந்திருக்க முடியாத நிலை இருந்தது. இதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன.

ஒன்று, சீனாவில் 1949 ஆம் ஆண்டு புரட்சியின் மூலம் கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரத்துக்கு வந்த பிறகு தனியார் முதலாளித்துவக் குடும்பங்களின் ஆதிக்கம் ஒழித்துக் கட்டப்பட்டிருந்தது. தொழில் வணிக நிலையங்கள் அனைத்தும் அரசுடைமையாக்கப்பட்டிருந்தன.

இரண்டாவதாக, ஜப்பான், தென் கொரியா, தைவான் போன்ற பகுதிகளைப் போல அமெரிக்காவின் கீழ்ப்படிந்த நாடாக சீனா இல்லாத நிலையில் அந்நிய நிறுவனங்களின் நேரடி முதலீட்டை அனுமதித்தால்தான் தொழில் வளர்ச்சியை எட்ட முடியும், தொழில்நுட்பங்களைப் பெற முடியும் என்ற நிலை இருந்தது.

ஜப்பான், தென் கொரியா, தைவான், ஹாங்காங் பகுதிகளில் செழித்து வளர்ந்திருந்த ஏற்றுமதிசார் தொழில்கள் சீனாவின் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்குள் தமது உற்பத்தியை நகர்த்தத் தொடங்கின. பொருளின் வடிவமைப்பு ஒரு நாட்டில், கச்சாப் பொருள் தொடங்கி அடுத்தடுத்த உற்பத்திக் கட்டங்கள் பல்வேறு நாடுகளில் அமைந்த ஆலைகளில் நடந்து விற்பனை முதன்மையாக அமெரிக்க, ஐரோப்பியச் சந்தைகளில் என்ற உலகளாவிய உற்பத்திச் சங்கிலிகளின் பகுதிகளாக அவை அமைந்தன.

1992 முதல் 2001 வரை ஆண்டுக்கு $3,700 கோடி அந்நிய நேரடி முதலீடுகள் சீனாவுக்குள் வந்தன.

2001 முதல் 2010 வரை ஆண்டுக்கு $10,000 கோடி அந்நிய நேரடி முதலீடுகளை சீனா ஈர்த்தது.

2014 ஆம் ஆண்டில் உலக ஏற்றுமதியில் சீனாவின் பங்கு 12% ஆக இருந்தது. உலக அளவில் ஆலை உற்பத்தி ஏற்றுமதியில் சீனாவின் பங்கு 18 விழுக்காடு ஆகும். சீனா உலகளாவிய உற்பத்தி வலைப்பின்னல்களின் மையமாக ஆகியுள்ளது.

சீன நிறுவனங்களின் கட்டமைப்பு

சீனாவின் பெரும்பான்மையான பெருநிறுவனங்கள் அரசு நிறுவனங்களாக உள்ளன. நுகர்பொருள் துறையிலும் சேவைத் துறைகளிலும் செயல்படும் சிறிய/நடுத்தர தனியார் நிறுவனங்கள் மொத்த உற்பத்தியிலும் வேலை வாய்ப்பிலும் பெரும்பங்கு வகிக்கின்றன.

2002இல் சீனாவில் 200 தொழில் குழுமங்கள் (qiye jituan) இருந்தன. Zhuda fangxiao (பெரியவற்றை வலுப்படுத்தல் – சிறியவற்றைக் கைவிடுதல்) என்ற கொள்கையின் கீழ் பெரு நிறுவனங்கள் வலுப்படுத்தப்பட்டன. சிறு நிறுவனங்கள் தனியார்மயப்படுத்தப்பட்டன அல்லது இழுத்து மூடப்பட்டன. நுகர்வோர் துறைகள், சில்லறை விற்பனை, உணவகங்கள் தனியார் மூலதனத்திடம் விடப்பட்டன.

2013 இல் 1.5 இலட்சம் அரசு நிறுவனங்கள் உள்ளன. அவற்றின் ஒட்டுமொத்த சொத்துமதிப்பு 16.8 இலட்சம் கோடி டாலர். 92 நிறுவனங்கள் உலகின் 500 முன்னணி நிறுவனங்களின் பட்டியலில் உள்ளன. அவறில் 89 மைய அரசு நிறுவனங்கள், 23 உள்ளூர் அரசாங்க நிறுவனங்கள், 10 தனியார் நிறுவனங்கள், 6.5 கோடி பேர் அவற்றில் வேலை செய்தனர். அவை மொத்த உற்பத்தியில் 30%ஐ பங்களிப்பு செய்தன.

சீன மக்கள் வங்கி, சீன வங்கி, சீன வணிக வங்கி, சீன கட்டுமான வங்கி, சீன தொழில் வணிக வங்கி இவை நிதியமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. நகர்ப்புற கடன் கூட்டுறவு சங்கங்கள் நகர்ப்புற வங்கிகளாகவும் நாட்டுப்புற கடன் கூட்டுறவு சங்கங்கள் நாட்டுப்புற வங்கிகளாகவும் மாற்றப்பட்டுள்ளன. இவை அனைத்துமே அரசுக்குச் சொந்தமானவை.

கம்யூனிஸ்ட் கட்சி கட்டுப்படுத்தும் அரசு

சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல், அரசாங்கம், இராணுவம் என மூன்று அதிகார மையங்களையும் கட்டுப்படுத்துகிறது. கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் மைய இராணுவ ஆணையத்தின் தலைவராகவும் குடியரசின் தலைவராகவும் பொறுப்பு வகிக்கிறார். 1978 முதல் 1992 வரை தெங் ஷியாவ்பிங் (Deng Xiaoping), 1992 முதல் 2002 வரை ஜியாங் செமின் (Jiang Zemin), 2002 முதல் 2012 வரை ஹு ஜின்தாவ் (Hu Jintao) இந்த உச்சநிலைப் பொறுப்பை வகித்துள்ளனர். 2012 இலிருந்து ஷி ஜின்பிங் (Xi Jinping) தலைமைப் பொறுப்பில் உள்ளார்.

முடிவுகள் உயர்நிலைத் தலைவர்கள் குழுவின் கூட்டுத்துவ அடிப்படையில் எடுக்கப்படுகின்றன. இந்த உயர்நிலைத் தலைவர்களின் குழுவில் கடந்தகாலத் தலைவர்களும் அடங்குவர். கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்புத் துறை அமைப்பாக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணித்துக் கட்டுப்படுத்துகிறது.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியில் 2025 நிலவரப்படி 10 கோடி உறுப்பினர்கள் உள்ளனர். இவர்கள் நாடு முழுவதும் கட்சியின் கொள்கைகளை செயல்படுத்துவதற்கான முகமைகளாக உள்ளனர்.

சீனாவில் மாகாண மட்டத்திலான 31 ஆட்சிப் பகுதிகள் உள்ளன. அவற்றில், சீனாவின் தென்மேற்கில் இந்திய எல்லையில் உள்ள திபெத் தன்னாட்சிப் பகுதி 30 இலட்சம் மக்கள் தொகையைக் கொண்டது, சீனாவின் தென்கிழக்கில் ஹாங்காங், தைவான் அருகில் இருக்கும் குவாங்தோங் மாகாணத்தின் மக்கள் தொகை 10.4 கோடி. பாதிக்கும் மேற்பட்ட மாகாணங்களின் மக்கள்தொகை 4.6 கோடிக்கும் அதிகம். அதாவது, பல மாகாணங்கள் உலகின் பல நாடுகளை விடப் பெரியவை. கொள்கை முடிவுகள் ஒரு பகுதியில் சோதிக்கப்பட்டு கிடைக்கும் விளைவுகளைப் பொறுத்து நாடு முழுவதும் விரிவாக்கப்படுவது என்ற அணுகுமுறைக்கு இந்தக் கண்ட அளவிலான நாட்டின் அமைப்பு ஏதுவாக உள்ளது.

சீனாவின் உள்நாட்டு அரசியல் பொருளாதாரம் பற்றிய ஆர்தர் கிரோபரின் கண்ணோட்டத்தைப் பின்வருமாறு தொகுத்துச் சொல்லலாம்.

அரசியல் பொருளாதாரச் சீர்திருத்தங்களைத் தொடங்கிய 35 ஆண்டுகளில் சீனா உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரமாகவும் பல தொழில்நுட்பங்களில் அமெரிக்காவுடன் போட்டியிடக் கூடியதாகவும் வளர்ந்திருப்பது அதன் தனித்துவமான வரலாற்றுப் பின்னணி, கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சிமுறை, உலகச் சூழல்களை சரியாகப் பயன்படுத்திக் கொண்டது, உள்நாட்டு முரண்பாடுகளைச் சரிவரக் கையாண்டது முதலிய காரணிகளால் நிகழ்ந்திருக்கிறது. சீனா, தனது வளர்ச்சியைத் தொடர வேண்டுமானால், சீர்திருத்தங்களைத் தீவிரப்படுத்தி முதலாளித்துவ நாடாளுமன்ற ஜனநாயக முறையையும், தனியார் மூலதனத்தையும் முழுமையாக ஊக்குவிக்க வேண்டும்.

சீன அரசியல் பொருளாதாரம் பற்றிய மார்க்சியப் பார்வை

இந்நூல் சீனாவின் வளர்ச்சிப் பாதையை 1978 சீர்திருத்தம் - திறந்து விடுதல் என்பதிலிருந்து தொடங்கிப் பேசுகிறது. இதுவே, மேற்கத்திய ஆய்வாளர்களின் வழக்கமான அணுகுமுறை.

1949 புரட்சி முதல் 1978 வரை சீனாவின் அரசியல் பொருளாதாரத்திலும் மக்களின் வாழ்நிலையிலும் ஏற்பட்ட மாற்றங்களை ஆர்தர் கிரோபர் போன்ற ஆய்வாளர்கள் எதிர்மறையாகப் பார்க்கின்றனர். 1949க்கு முன்னர் சீனாவின் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு அதைத் தொடர்ந்த உள்நாட்டுப் போர் என்று பின்தங்கிய, குழப்பமயமான நிலையில் இருந்தது. புரட்சிக்குப் பிந்தைய அடுத்த 30 ஆண்டுகளில் நிலச்சீர்திருத்தம், பண்பாட்டுப் புரட்சி நடத்தப்பட்டன. தாய்சேய் நலம், கல்வி, மருத்துவம், ஊட்டச் சத்து போன்ற மனிதவளக் குறியீடுகளில் பெருமளவு முன்னேற்றம் ஏற்பட்டது. இதுதான் சீர்திருத்தம் – திறந்து விடுதல் கொள்கைகளை செயல்படுத்துவதற்கான அடித்தளத்தை உருவாக்கியிருந்தது. இதனை ஆர்தர் கிரோபர் பொருட்படுத்தவில்லை.

கிரோபரின் நூல், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைகளை அடுத்தடுத்த தலைமுறை தலைவர்களின் தனிப்பட்ட ஆளுமைகள் மூலமாகவும் பல்வேறு மட்டங்களில் உள்ள ஊழியர்களின் தனிப்பட்ட ஆளுமைகள் விருப்பங்கள் மூலமாகவும் புரிந்து கொள்கிறது. பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் வெகுமக்கள் வர்க்கங்களின் சர்வாதிகாரம் என்பதை அதிகாரத்துவ மேலாதிக்க அரசு என்று வரையறுக்கிறது. இதற்குச் சரியான பெயர் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம்.

இது பெரும்பான்மை மக்களுக்கு ஜனநாயகத்தையும் சிறுபான்மை சுரண்டும் சக்திகள் மீது சர்வாதிகாரத்தையும் சுமத்துகிறது. இதன் தலைமையில் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளது. அது மார்க்சிய லெனினியக் கருத்தியலின் அடிப்படையில் சோசலிசத்தைக் கட்டியமைப்பதற்கான திட்டத்தை வழிநடத்திச் செல்கிறது.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி சீர்திருத்தம் – திறந்து விடுதல் என்ற கொள்கையைச் செயல்படுத்தத் தொடங்கிய பிறகும் பின்வரும் கோட்பாடுகளை உறுதியாகப் பின்பற்ற வேண்டும் என்று, சீர்திருத்தங்களை முன்னெடுத்த சீனத் தலைவர் தெங் ஷியாவ்பிங் வரையறுத்துள்ளார்

சோசலிசப் பாதையில் உறுதியாக நிற்றல்

வெகுமக்களின் ஜனநாயக சர்வாதிகாரத்தைப் பராமரித்தல்

கட்சியின் தலைமைப் பாத்திரத்தை உறுதி செய்தல்

மார்க்சிய-லெனினிய-மாவோ சிந்தனையைப் பின்பற்றுதல்

கிரோபர் குறிப்பிடும் அதிகாரத்துவ மேலாதிக்கம், கொள்கையளவில் மையப்படுத்தல் நடைமுறையில் பரவலாக்கம், நகர்ப்புறத்துக்கும் நாட்டுப்புறத்துக்கும் இடைவெளியைக் குறைத்தல், ஊழலின் தோற்றமும் அதை எதிர்த்த போராட்டமும், ஏற்றத்தாழ்வுகளை சமன் செய்தல் இவை அனைத்தும் ஒரு முழுமையான திட்டத்தின் பகுதிகளாக உள்ளன. அந்தத் திட்டம் நிலம், ஆலைகள், தொழில்நுட்பம் போன்ற உற்பத்திச் சாதனங்களில் முதலாளித்துவத் தனியுடைமையை ஒழித்து சுரண்டலை அழித்தொழிக்கும் சோசலிசத்தைக் கட்டியமைப்பதாகும்.

சீன அரசின் திட்டங்கள் மைய அரசினால் வகுக்கப்பட்டு, மாகாணங்களிலும் உள்ளூர் பகுதிகளிலும் தனிப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களைக் கொண்ட குழுக்களால் திட்டமிட்ட முறையில் செயல்படுத்தப்படுகின்றன.

எடுத்துக்காட்டாக, சீனாவில் அறுதி வறுமையை ஒழித்தல் என்ற திட்டத்தை கம்யூனிஸ்ட் அரசு செயல்படுத்திய முறையைப் பார்க்கலாம்.

2019 ஆம் ஆண்டு ஜூன் 17 அன்று, குவாங்ஷி தன்னாட்சி மண்டலத்தின் கம்யூனிஸ்ட்டுக் கட்சிச் செயலாளர் ஹுவாங் வென்ஷியோ (Huang Wenxiu) என்ற பெண் ஊழியர் மலைச்சரிவில் சிக்கி உயிரிழந்தார். அவரது வயது 30.

மூன்று ஆண்டுகளுக்கு முன்புதான் ஹுவாங் பெய்ஜிங் நார்மல் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். இப்பல்கலைக்கழகம் சீனாவின் முன்னணி பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். பெய்ஜிங்கில் பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் தனது பணிவாழ்வைத் தொடர்வதற்கு மாறாக ஹுவாங், சீனாவின் மேற்குப் பகுதியில் உள்ள பின்தங்கிய மாகாணமான குவாங்ஷியில் உள்ள தனது சொந்த ஊருக்குத் திரும்பினார். மிகவும் பின்தங்கிய, தொலைதூர கிராமமான லெஇய மாவட்டத்தில் பணியாற்ற முன்வந்தார். பணியின் போது இயற்கையின் சீற்றத்துக்குப் பலியானார்.

1978க்கும் 2013க்கும் இடையே அறுதி ஏழ்மையில் வாழும் சீன மக்கள் தொகை மொத்த மக்கள்தொகையில் 80 விழுக்காட்டிலிருந்து 9 விழுக்காடாகக் குறைந்திருந்தது. 2014 ஆம் ஆண்டு அறுதி ஏழ்மையை முற்றிலும் ஒழித்துக் கட்டுவது என்ற இலக்கை சீன அரசு அறிவித்தது. அதன்படி எட்டு இலட்சம் கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர்கள், சமூகச் செயல்பாட்டாளர்கள், தன்னார்வலர்கள் திரட்டப்பட்டனர். அவர்கள் கள ஆய்வு மூலம் நாடு முழுவதிலும் 1.28 இலட்சம் கிராமங்களில் வசிக்கும் 2.94 கோடி குடும்பங்களில் 8.96 கோடி ஏழை மக்களை அடையாளம் கண்டனர்.

30 இலட்சம் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சி ஊழியர்கள் 2.55 இலட்சம் குழுக்களாக ஏழ்மை நிலவும் கிராமங்களுக்கு அனுப்பப்பட்டனர். அவர்கள் கிராம அரசு அலுவலர்கள், ஏழைக் குடும்பங்கள், தன்னார்வலர்கள் முதலியோரோடு இணைந்து ஏழ்மைக்கான காரணங்களைக் கண்டறிந்து அவற்றைக் களைய வேலை செய்தனர். அவர்களில் ஒருவர்தான் மேலே குறிப்பிட்ட ஹுவாங் வென்ஷியோ. வேலை வாய்ப்புகளை உருவாக்குவது, தொழில்களை கிராமப் புறங்களுக்கு மாற்றுவது, காடுகளையும் புல்வெளிகளையும் மீட்டமைப்பது, கல்வியறிவை மேம்படுத்துவது எனப் பல்முனை நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டன.

இவற்றின் விளைவாக அறுதி ஏழ்மையில் உள்ள மக்கள் தொகை சுமார் 10 கோடி என்பதிலிருந்து சுழியாக ஆனது. நீடித்த வாழ்வாதாரங்களை உருவாக்குவதன் மூலம் குடும்பங்கள் மீண்டும் ஏழ்மையில் வீழ்வது தடுக்கப்பட்டுள்ளது.

சீனாவில் நிலத்தில் தனியுடைமை ஒழிக்கப்பட்டிருக்கிறது. தனியார் முதலாளிகள் கடுமையான ஒழுங்குபடுத்தலுக்கு உள்ளாகிறார்கள். மூலதனத்தால் ஊழல்படுத்தப்பட்ட கட்சி ஊழியர்கள் மரண தண்டனை வரையில் கடுமையாகத் தண்டிக்கப்படுகிறார்கள். அவர்கள் கொள்ளையடித்துச் சேர்த்த சொத்துகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்படுகின்றன. பொதுவான வளம் என்ற முழக்கத்தின் கீழ் பொருளாதார ஏற்றத்தாழ்வு சமன் செய்யப்படுகிறது.

சோசலிசத்தை நோக்கிய சீன மக்களின் பயணத்தை இந்த அடிப்படையில் புரிந்து கொள்வதற்கு படிக்க வேண்டிய நூல்கள்:

  • கைலே ஃபெர்ரனா எழுதிய உலகிற்கு சீனா ஏன் தேவை - வளர்ச்சி, சூழலியம், முரண்பாடுகளுக்குத் தீர்வு, பொதுவான செழுமை (Why the World Needs China – Development, Environmentalism, Conflict Resolution & Common Prosperity by Kyle Ferrana),
  • கார்லோஸ் மார்ட்டினஸ் எழுதிய கிழக்கு இன்னும் சிவப்பாகவே உள்ளது. 21 ஆம் நூற்றாண்டில் சீன சோசலிசம் (The East is Still Red – Chinese Socialism in the 21st Century by Carlos Martinez),
  • ரோலண்ட் போயர் எழுதிய சீனப் பண்புகளுடன் கூடிய சோசலிசம்: வெளிநாட்டவர்களுக்கு ஒரு கையேடு (Socialism with Chinese Charecteristics – A Guide for Foreigners by Roland Boer)

மா. சிவகுமார்