ஆடுதலைப் போராட்ட காலத்தில் பிரிட்டிஷாரை நாட்டை விட்டு விரட்ட வேண்டும் என்ற ஒரே சிந்தனை மட்டுமே மக்கள் மத்தியில் இருந்தது. விடுதலை இந்தியாவின் அமைப்பு முறை எவ்வாறு இருக்க வேண்டும் என்ற சிந்தனை கம்யூனிஸ்டுகள் மத்தியில் மட்டுமே இருந்தது. அரசியல், பொருளாதார, சமூக நீதியுடன் கூடிய உழைப்பாளிகளுக்கான உண்மையான சுதந்திரத்தை அடைவது அவர்களது விருப்பமாக இருந்தது. கிடைத்த சுதந்திரம் அவ்வாறான சுதந்திரம் அல்ல என்று அவர்கள் கருதினர்.

நாடு விடுதலையடைந்தவுடன் இந்திய சுதந்திரம் உழைப்பாளிகளுக்கானது அல்ல கை மாற்றப்பட்ட சுதந்திரம் என்று 1948-ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சி கல்கத்தா காங்கிரஸ் தீர்மானித்தது. அதன் தொடர்ச்சியாக இந்தியாவில் பல்வேறு சதி வழக்குகள் கம்யூனிஸ்டுகள் மீது தொடரப்பட்டது. தமிழ்நாட்டில் 10க்கும் மேற்பட்ட சதி வழக்குகள் தொடரப்பட்டது. அவற்றில் ஒன்று தான் நெல்லை சதி வழக்கு. இவ்வழக்கில் 12-ஆவது குற்றவாளி நூலாசிரியர். இவ்வழக்கில் சிறைக் கொடுமைகளை அனுபவித்து தங்களது இன்னுயிரை ஈந்த தியாகிகள் சிலர் சரியாக அறியப்படாது போயினர். அத்தியாகத்தினை வெளிக்கொண்டு வரும் நோக்கில் படைக்கப்பட்டதே இந்நூல்.

வரலாற்று நிகழ்வுகளை உரிய ஆவணச் சான்றுகளுடன் எடுத்துக் கூற வேண்டியவர்கள் பதிவு செய்ய வேண்டும். இல்லையெனின் மக்கள் மத்தியில் ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்கு எடுத்துச் செல்லப்படுகையில் ஒரு சில தவறுகளோடு எடுத்துச் செல்லப்பட்டு விடும். அம்மாதிரி நிகழாமல் சக சிறைக் கைதிகளிடம் சிறைக் குறிப்புகளை சிறையிலேயே எழுதி, சிறைப்பணியாளர் மூலம் வெளியே கொண்டு வந்து படைக்கப்பட்டுள்ள இந்நூல் ஒரு ஆவணமாகும்.

இந்நூலைப் படிக்கும் போது நாஜிக் கோர்ட்டினால் மரண தண்டனை விதிக்கப்பட்டு 1943-ஆம் ஆண்டு செப்டம்பர் 8-ஆம் நாள் தூக்கிலிடப்பட்ட ஜூலியஸ் பூசிக் பான்கிராப்ஸ் சிறையில் எழுதி, காவலாளி மூலம் வெளியே கொண்டு வரப்பட்டு பூசிக் மனைவி அகுஸ்தினா பூசிக்கால் வெளியிடப்பட்ட தூக்கு மேடைக் குறிப்பு நூல் நினைவுக்கு வருகிறது. நூலிலிருந்து சில துளிகள்.

1945-ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் பண்ணையூருக்கு ஆசிரியர் பணிக்குச் செல்லும் நூலாசிரியர் அறப்பணியாக ஆசிரியர் பணியைச் செய்வதுடன், நிலப்பிரபுத்துவம் கோலோச்சியிருந்த காலத்தில் பண்ணையடிமைத்தனத்திற்கு எதிராகவும், தீண்டாமைக் கொடுமைக்கு எதிராகவும் போராடி விவசாய சங்கம், கொத்தடிமை மீட்பு ஆகிய பணிகளின் மூலம் உழைக்கும் மக்களை வர்க்க ரீதியாக ஒன்றுபடுத்துகிறார். இவரது கொள்கையும் கம்யூனிச கொள்கையும் ஒத்த நோக்கில் இருந்ததால் பள்ளியில் தலைமறைவு கம்யூனிஸ்டுகளுக்கு தங்க இடம் கொடுத்தார். அதுவே இவரை இவ்வழக்கில் சேர்க்கக் காரணமாயிற்று. இன்றும் தன்னை “கிறிஸ்தவ கம்யூனிஸ்ட்” என்று அழைத்துக் கொள்கிறார். 65 பேர் தொடர்புடைய இவ்வழக்கில் சிலரைப் பற்றி இந்நூலில் கூறப்பட்டுள்ளது.

சிங்கைத் தோழர் கே.பி.எஸ்.மணி - 1950-ஆம் ஆண்டு பிப்ரவரி 11-ஆம் தேதி சேலம் சிறையில் கொடூரமான துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு 22 கம்யூனிஸ்டுகள் கொல்லப்பட்டனர். இத்துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த கே.பி.எஸ்.மணியின் இடது கை செயலற்றுப் போய் விட்டது. நெல்லைச் சதி வழக்கில் 65 பேரில் கே.பி.எஸ்.மணிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 1952சூலை மாதத்தில் மதுரை சிறையில் ரிமாண்ட் ஒன்பதாம் பிளாக்கில் காரிருள் சூழ்ந்திருந்த அந்தகாரத்தில், குமட்டும் நெடி நாற்றத்தில் இந்த போராளியின் வாழ்க்கை வரலாறை அவரே சொல்லச் சொல்ல சக கைதியான நூலாசிரியரால் அப்படியே பதிவு செய்யப்பட்டுள்ளது. “நான் தூக்கிலிடப்பட வேண்டியவனா? எனது வாழ்விலிருந்து தீர்ப்புக் கூறுங்கள்” என்று துவங்கும் பதிவின் இறுதியில், இப்போது எனக்கு சற்று நிம்மதி கிடைத்திருக்கிறது என்கிறார் நூலாசிரியர். நெஞ்சின் தாகம் தொனிக்கிறது.

வீரத்தியாகி வேலுச்சாமித் தேவரின் தலைமறைவு வாழ்க்கையின் ஒரு நாள் நிகழ்வு - தலைமறைவு வாழ்க்கையில் அவரை குளியலறையில் வைத்து கூட்டமாக நின்று “பெருமாள் மாமா மனைவிக்கு ஆம்பளை பிள்ளை பிறந்திருக்கு” என்று சொல்லி காவல் துறையிடமிருந்து காப்பாற்றும் உருக்கமிக்க இந்நிகழ்வு வீரத்தாய்மாரை நினைத்து பெருமிதம் கொள்ள வைக்கிறது.

கட்சியைக் காதலித்த மீனாட்சிநாதன் - இலக்கியத்தை கற்றறிந்த மீனாட்சிநாதன் சிறைச்சாலையை கல்விக்கூடமாக மாற்றுகிறார். நூலாசிரியருக்கும் மீனாட்சிநாதனுக்கும் நெருக்கம் ஏற்படுகிறது. சோவியத், சீன இலக்கியங்களைப் படிப்பதில் ஆர்வமாயிருந்த இவர் மூலம் ஆங்கில முற்போக்குக் கதைகளைப் படித்து அவைகளை தமிழ் மொழியாக்கம் செய்கிறார் - பின்னாளில் 1958-இல் ‘மௌனத்தியாகி’ என்ற அந்நூல் வெளிவந்ததாக செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது. 1948-ஆம் ஆண்டில் வி.கே.புரத்தில் தலைமறைவு வாழ்க்கையில் இருந்த மீனாட்சிநாதனை காத்ரீன் என்ற பெண் காதலிக்கிறாள். தலைமறைவுத் தோழர்கள் திருமணம் செய்யக்கூடாது என்று கட்சித் தலைமை கருதியதால் காதலைக் கைவிடுகிறார்.

சிறையில் நாலாம் பிளாக்கில் படித்த ‘ஸ்டார்ம்’ (புயல்) (இலியா எரன்பர்க் எழுதியது) நாவலின் கதாநாயகி மெடோ தன் மனமின்றி மணந்த, மணவாழ்க்கை நடத்தாத நாஜி ஆதரவாளனான தன் கணவனை கொரில்லாப் போரில் சுட்டுக்கொன்றுவிட்டு காதலன் செர்ரிக்கு தனது சேவையை தெரிவிக்கக் காத்திருக்கிறாள். ஜாமீனில் வெளிவரும் மீனாட்சிநாதன் மீது 2-ஆம் சதி வழக்கு பின்னப்பட்டு மீண்டும் சிறை செல்ல, காத்திருக்கும் காத்ரீன் காச நோய் பீடிக்கப்பட்டு 13-4-54-இல் இறந்து விடுகிறார். புயல் நூலை தன் வாழ்க்கையுடன் பங்கு கொண்ட நூல் என்று மீனாட்சிநாதன் பதிவு செய்கிறார்.

நெல்லைச் சதி வழக்கில் ‘காரவீட்டுக் கந்தையா’ ஒரு சாட்சி. மனசாட்சியின் உந்துதல் தாங்க முடியாமல் காவல் துறையினர் வாங்கித் தந்த கோடி வேட்டி, சட்டையினை தூக்கி எறிந்து, கால் சட்டையுடன் கீழ் கோர்ட்டில் போலீஸாரின் அடி தாங்க முடியாமல் பொய் சாட்சி சொன்னதாகவும், வாத்தியார் ஊரை முன்னுக்குக் கொண்டு வந்த உத்தமர் என்றும் சாட்சியமளிக்கிறார். உழைப்பாளியின் வெள்ளந்தியான மனதைக் காட்டுகிறது இச்சாட்சியம்.

இச்சாட்சி தனது பயத்தை வெளிப்படுத்த, நீதிபதி காவல்துறையினரை நீதி மன்றத்திற்கு வெளியே நிற்கச் சொல்லி ஆணை பிறப்பிப்பது நீதியின் மாட்சிமையை காட்டுவதாய் உள்ளது. உண்மையைச் சொல்லி விட்ட மகிழ்ச்சியில் சிறிது காலம் வாழும் காரவீட்டுக் கந்தையா சிறை சித்திரவதைகளால் உடல் முழுவதும் கட்டிகள் ஏற்பட்டு 1960 டிசம்பரில் மரித்துப் போகிறார். இப்படி மரித்துப் போன எண்ணற்ற தோழர்களை காலம் காட்டும் என்று முடிக்கிறார் ஆசிரியர்.

நாட்டுப்புறப் பாடல்களை கூர்மையான மார்க்சிய நோக்கில் ஆய்வு செய்த பேராசிரியர் நா.வானமாமலையுடன் ஏற்பட்ட நட்பையும், நெல்லைச் சதி வழக்கு நாவலான ‘வாத்தியார்’ நாவலுக்கு அவருடன் நடந்த உரையாடலின் போதே ‘வாத்தியார்’ என்ற பெயர் பிறந்ததாக “பன்முகப் பார்வை கொண்ட இலக்கிய மேதை நா.வானமாமலை” என்ற தலைப்பில் பதிவு செய்துள்ளார்.

“வர்க்கப் போராட்டத்தில் வாத்தியார் தூக்கில் தொங்கிய சூர்யாசென்” என்ற தலைப்பில் ஆசிரியர்கள் ஏன் வர்க்க ரீதியில் அணி திரட்டப்படவில்லை என்ற அங்கலாய்ப்பை முன்வைக்கிறார்.

இலக்குடன் தொழிற்சங்கங்கள் செயல்பட வேண்டும் என்று கருதும் ஆசிரியர் வர்க்க ரீதியாக ஆசிரியர்கள் அணி திரண்டால் எவ்வாறிருக்கும் என்ற தனது விரிந்த ஆவலை முன்வைக்கிறார். தன்னைப் போன்றே ஆசிரியரான சூர்யாசென் சிட்டகாங்க் புரட்சிக்குழுவில் செயல்பட்டு 1925-28-இல் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து 1931 சனவரி 12 அன்று 17 வயதில் தூக்கிலிடப்பட்டதைப் பதிவு செய்துள்ளார்.

1947-ஆம் ஆண்டு அக்டோபர் 11 பாரதி மணிமண்டபத் திறப்புவிழாவில் ராஜாஜி முதன்மைப் பேச்சாளர். கட்டியிருக்கும் தோரணங்கள் மணி மண்டபத்தை மறைப்பதாக ராஜாஜி பேசுகிறார். மக்களின் வேண்டுகோளுக்கிணங்க ஜீவாவிற்கு 5 நிமிடம் பேச அனுமதியளிக்கப்படுகிறது. தோரணங்கள் மணிமண்டபத்தை மட்டும் மறைக்கின்றன - உங்களது தோரணைகள் பாரதியையே மறைக்கின்றன என்று ஆதிக்கத்தைச் சாடுகிறார் ஜீவா. 5 நிமிட அனுமதி முக்கால் மணி நேரம் மக்களின் வரவேற்பால் இடி இடித்து முழங்கியதாகவும், இந்நாட்டிற்குக் கிடைத்திருக்கும் விடுதலை உண்மையான விடுதலைதானா என்ற எண்ணத்தை ஏற்படுத்தியதாகவும் “பாரதி மணி மண்டபத் திறப்பு விழா” என்ற பகுதியில் பதிவு செய்கிறார்.

இளம் தலைமுறை கம்யூனிஸ்டுகள் படித்து தங்களது உணர்வுமட்டத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற ஆதங்கத்தில் படைக்கப்பட்ட நூல்.

நெல்லைச் சதிவழக்கின் தியாக தீபங்கள்

ஆசிரியர்: ஆர்.எஸ்.ஜேக்கப்

வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,

41-B, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,

அம்பத்தூர், சென்னை - 600 098

விலை: ரூ. .65/-

Pin It