நக்வெய்ன் மார்க்சியப் பள்ளியில் (9)
ஆசிரியர்: வெங்கடேஷ் ஆத்ரேயா
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் பேராசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்ற வெங்கடேஷ் ஆத்ரேயா அவர்கள் இந்தியாவின் தலைசிறந்த மார்க்சியப் பொருளாதார அறிஞர். உலக அரசியல் பொருளாதாரக் கூட்டமைப்பிடமிருந்து 21ஆம் நூற்றாண்டின் அரசியல் பொருளாதாரத்திற்கான சிறந்த சாதனையாளர் விருதைப் பெற்றவர்.
தலைப்பு: மார்க்சின் ஆய்வு முறையும், சரக்கும்:
நாம் எதற்காக மார்க்ஸின் மூலதனத்தைப் படிக்க வேண்டும். நான் என்னைப் பற்றிய ஒரு சிறு குறிப்புடன் தொடங்குகிறேன். நான் பொருளாதாரத்தில் முனைவருக்கான ஆய்வுப் படிப்பிற்காக அமெரிக்காவுக்கு சென்றிருந்தேன். அங்கு வியத்நாம் மீது அமெரிக்கா ஏவிய ஏகாதிபத்தியப் போருக்கு எதிராக மாணவர் இயக்கங்கள் எழுச்சியுடன் வளர்ச்சி பெற்று வந்தன.
உலகின் மிக சக்தி வாய்ந்த அமெரிக்கா, ஏன் வியத்நாம் எனும் சிறிய மூன்றாம் உலக நாட்டின் மீது போர் தொடுக்க வேண்டும் என்ற கேள்விக்கான பதிலை நான் படித்த பொருளாதாரப் புத்தகங்கள் தரவில்லை. அதன் பின்னர் நான் இரண்டாவது கல்விப் பருவத்தின் போது பல்கலைக்கழத்தில் இயங்கி வந்த மூலதனத்திற்கான மாணவர் வாசிப்பு வட்டத்தில் இணைந்தேன். மூலதன வாசிப்பு என் வாழ்வையே மாற்றியது.
மார்க்ஸ் 17 வயது இளைஞராக இருந்த போது அறிவுக் கூர்மையுடனும் முதிர்ச்சியுடனும் தன் தந்தைக்கு எழுதிய கடிதத்தை நீங்கள் படித்தீர்களானால், அவர் இளமைக் காலத்திலேயே தன் வாழ்க்கைப் பாதையைத் தேர்ந்தெடுத்திருந்ததையும், பொதுநலனுக்காக ஒருவர் வாழ்வதே சிறந்த வாழ்வு என்ற தெளிவுடன் இருந்ததையும் காண முடியும்.
அரசியல் பொருளாதாரத்தில் மார்க்சின் ஆய்வு முறை:
ஒரு நுண்ணோக்கியையோ, வேதிக் கரணியையோ கொண்டு பொருளாராதார அமைப்புகளைப் பகுப்பாய்வு செய்ய இயலாது. அதற்கு பதிலாக அருவமாக்க முறைகளின் மூலமே பொருளாதாரத்தைப் பகுப்பாய்வு செய்ய வேண்டும். இவ்வுலகம் நம் உணர்வு நிலைக்கு அப்பால் தன்னிச்சையாக இயங்கி வருகிறது. உலகின் சமூக நிகழ்வுகளை அவை உள்ளபடியே உண்மையாகப் பிரதிநிதித்துவப்படுத்தும் கோட்பாட்டுக் கருத்தினங்களை நாம் உருவாக்க வேண்டும். அருவமாக்கத்தின் மூலமே உலகைப் படிக்க முடியும்,
வரலாற்றுப் பொருள் முதல்வாதம்:
சமூகத்தை ஆய்வு செய்யும் மார்க்சிய ஆய்வு முறை வரலாற்றுப் பொருள் முதல்வாதம் என அழைக்கப்படுகிறது. வரலாற்றுப் பொருள் முதல்வாதம் சமூக வளர்ச்சியின் வரலாற்றை இயற்கையுடன் மனிதர்களுக்குள்ள உறவின் அடிப்படையிலும், மனிதர்களுக்கிடையிலான உறவுகளின் அடிப்படையிலும் உற்று நோக்குகிறது. சமூக உற்பத்தியிலிருந்தே மார்க்சிய ஆய்வு முறை தொடங்குகிறது. உற்பத்தி என்பது நம் இருத்தலுக்கு முற்றிலும் அவசியமானது. உற்பத்தியே மனிதனின் அடிப்படையான செயல்பாடாகவும் உள்ளது.
உற்பத்திக்கு மிகவும் அவசியவமான உணர்வார்ந்த பயன்பாடுடைய செயல்முறைதான் மனித உழைப்பு என்பது. அதுவே மனிதத்தை வரையறுக்கிறது. உழைப்பு என்பது சமூகத்தன்மை கொண்டது. சமூக உழைப்பு இல்லாமல் உற்பத்தி செய்ய இயலாது. இங்கு சமூக உற்பத்தி என்பது அதன் இயற்கையான மற்றும் சமூக ரீதியான பொருளில் குறிப்பிடப்படுகிறது.
சமூகத்தின் உறுப்பினர்கள் தங்களை மறு உற்பத்தி செய்ய பொருளார்ந்த உற்பத்திச் செயல்பாடுகளில் ஈடுபடுகின்றனர். உற்பத்தியின் போது இயற்கைச் சக்திகளைக் கைக்கொண்டு இயற்கையை மாற்றுவதுடன், அச்செயல்பாடுகளால் மனிதர்களும் மாற்றத்திற்குட்படுகிறார்கள். மார்க்சிய முறையில் ஒரு மனித சமூகத்தை ஆய்வு செய்யும் போது அதன் இரண்டு முக்கியமான பகுப்பாய்வுக் கோட்பாடுகளாக உற்பத்தி சக்திகளும், உற்பத்தி உறவுகளும் உள்ளன.
கடந்த கால மற்றும் நிகழ்காலச் செயல்பாட்டு முறைகளின் மூலம் பெறப்பட்ட ஒட்டுமொத்தக் கோட்பாட்டறிவு, செயல்பாட்டு அறிவு, இயற்கைச் சூழலின் மீதான நம் ஆளுகை இவை அனைத்தையும் ஒன்று சேர்த்தே உற்பத்திச் சக்திகள் என மார்க்ஸ் குறிப்பிடுகிறார். உற்பத்திச் சக்திகள் என்பது தொழில்நுட்பத்தை மட்டும் குறிப்பதல்ல. இது உற்பத்திக்கான ஒருங்கமைப்பு முறைகள், உழைப்புப் பிரிவினை ஆகியவற்றையும் குறிக்கிறது. உற்பத்தி உறவுகள் என்பது சமூக உற்பத்தியில் ஈடுபடும் போது சமூக உறுப்பினர்களிடையே காணப்படும் உறவுகளைக் குறிக்கிறது. இது வர்க்கங்களுக் கிடையிலான உறவுகளையும் சமூகத்தின் உடைமை உறவுகளையும் குறிக்கிறது.
சமூகம் மறு உற்பத்தியில் ஈடுபடும் போது உற்பத்திச் சக்திகள் தொடர்ச்சியாக வளர்கின்றன. முதலாளித்துவ நெருக்கடியின் போதும் கூட உற்பத்தி சக்திகள் தேங்கி விடுவதில்லை, வளரவே செய்கின்றன. வளர்ந்து வரும் உற்பத்திச் சக்திகளுக்கும், பழைய உற்பத்தி உறவுகளுக்கும் இடையே காணப்படும் தவிர்க்க இயலாத முரண்பாடுகளே சமூக வளர்ச்சியின் வரலாற்று அடிப்படையிலான இயக்குசக்தியாக உள்ளன.
உற்பத்திச் சக்திகளும் உற்பத்தி உறவுகளும், ஒற்றுமையயும் (சார்புத் தன்மை), முரண்பாடுகளையும் கொண்டுள்ளன. உற்பத்திச் சக்திகளுடனான உற்பத்தி உறவுகளின் ஒற்றுமை (சார்புத் தன்மை) தற்காலிகமானதே தவிர நிரந்தரமானதல்ல. அவற்றிற்கிடையிலான உள்முரண்பாடுகள் தவிர்க்க இயலாதவை.
உற்பத்திச் சக்திகள் தொடர்ந்து வளர்ச்சிப் போக்கில் உள்ளன. ஆனால் உற்பத்தி உறவுகள் வளர்ச்சியின்றித் தேங்குவதால் பழமையடைகின்றன. அதனால் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் உற்பத்தி சக்திகள், உற்பத்தி உறவுகளோடு பொருத்தப்பாடுடையவை ஆகக் காணப்பட்டாலும், காலப் போக்கில் சமூக வளர்ச்சியின் போது உற்பத்தி சக்திகளுக்கும், உற்பத்தி உறவுகளுக்கும் இடையிலான முரண்பாடுகள் வளர்கின்றன.
காலப்போக்கில் இம்முரண்பாடுகள் தீவிரமடைவதால் உற்பத்தி சக்திகளும், உற்பத்தி உறவுகளும் ஒன்றுக்கொன்று பொருத்தப்பாடிழந்து இணக்கமற்றவையாகின்றன. முரண்பாடுகளின் அளவில் ஏற்படும் வளர்ச்சி, ஒரு கட்டத்தில் பண்பளவிலான பாய்ச்சலை ஏற்படுத்துகிறது. உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சிக்குப் பொருத்தப்பாடுடைய புதிய உற்பத்தி உறவுகள் உருவாகின்றன. சமூகப் புரட்சியின் மூலம் புதிய உற்பத்தி முறை உருவாகிறது. எந்தச் சமூக மாற்றமும் எந்திர கதியில் நடப்பதில்லை.
பழைய உற்பத்தி முறையில் உள்ள அனைத்துமே குப்பைத் தொட்டிக்குச் செல்வதில்லை. நிலைமறுப்பு என்பது இயங்கியல் அடிப்படையுடையது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். ஒவ்வொரு உற்பத்தி முறையும் அதன் உள்ளார்ந்த சமூக முரண்பாடுகளால் தற்காலிகமானதே. உற்பத்தி முறை என்பது அடிப்படையில் அருவமாக்கப்பட்ட ஒரு கோட்பாடே. ஒரு சமூக அமைப்பில் ஒரு குறிப்பிட்ட உற்பத்தி முறையே ஓங்கிக் காணப்பட்டாலும் கூட உண்மையில் எந்த ஒரு சமூக அமைப்பும் ஒரே ஒரு உற்பத்தி முறையை மட்டுமே கொண்டிருப்பதில்லை. அமெரிக்காவில் முதலாளித்துவத்திற்கு மத்தியில் அடிமைமுறையும் இருந்தது. ஒரு சமூக அமைப்பு ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட உற்பத்தி முறைகளையும், உற்பத்தி உறவுகளையும் கொண்டிருக்கலாம்.
வரலாற்றுப் பொருள் முதல்வாதத்தின் மூலம் சமூக உற்பத்தியும், உற்பத்தி உறவுகளும், சமூக உற்பத்தியில் வெவ்வேறு பாத்திரங்களை வகிக்கும் வர்க்கங்களுக்கிடையே காணப்படும் வர்க்கப் போராட்டமுமே வரலாற்றின் இயக்குசக்திகளாக உள்ளன என்பதைக் காணலாம். உற்பத்திச் சக்திகளுக்கும், உற்பத்தி உறவுகளுக்கும் இடையில் காணப்படும் உள்ளார்ந்த முரண்பாடுகளே சமூக மாற்றத்திற்கான இயக்கு விசையாக உள்ளன.
வரலாற்று பொருள் முதல்வாதம் என்பது பொருளாதாரக் குறுக்கல் வாதமல்ல. அதில் சித்தாந்தத்திற்கும், அரசியலுக்கும் முக்கியப் பங்கு உள்ளது. வரலாற்று பொருள்முதல்வாதத்தில் சமூகம் குறித்த அடித்தளம், மேல்கட்டுமானம் என்ற கருத்தாக்கம் உள்ளது. சமூகத்தில் உற்பத்திச் சக்திகளும், உற்பத்தி உறவுகளும் பொருளாதார அடித்தளமாகவும், அரசியல், சித்தாந்தம் ஆகியவை அதன் மேல்கட்டுமானாகவும் அறியப்படுகிறது.
பொதுவாக சமூக வளர்ச்சியில் அடித்தளத்தின் நிர்ணயப் போக்கு ஓங்கிக் காணப்படும் என்ற போதிலும், மேல்கட்டுமானமும், பொருளாதார அடித்தளத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும். எங்கெல்ஸ், பிளாக்குக்கு எழுதிய கடிதத்தில் வரலாற்றைத் தீர்மானிப்பதில் முதன்மையானதாக பொருளாயத உற்பத்தி நிகழ்வே இருக்கும் எனக் குறிப்பிட்டோமே ஒழிய பொருளாதாரக் கூறுகள் மட்டும்தான் வரலாற்றைத் தீர்மானிக்கும் என்ற பொருளில் நானோ, மார்க்ஸோ குறிப்பிடவில்லை என்று விவரித்துள்ளார்.
வரலாற்று அடிப்படையிலான சமூகப் பகுப்பாய்வின் போது பொருளாதார அடித்தளத்திற்கும், மேல்கட்டுமானத்திற்கும் இடையிலான உறவை பொருளாதாரம், அரசியல், சித்தாந்தம் ஆகியவற்றுக்கிடையிலான நேருக்கு நேரான தொடர்புகளாக எந்திர கதியாகப் பார்க்கக் கூடாது. அரசியலும், சித்தாந்தமும், ஒப்பளவில் சுயேச்சை தன்மை கொண்டது.
பொருளாதார அடித்தளம், அரசியல், சித்தாந்தம் ஆகியவற்றில் காணப்படும் சமமற்ற வளர்ச்சிப் போக்கு முரண்பாடுகளைத் தோற்றுவிக்கிறது. சமூகத்தைப் பற்றிய மார்க்சிய பார்வை என்பது ஹெகலிய வகையிலான எளிய ஒற்றை முழுமையல்ல. சிக்கலானக் கூறுகளை உள்ளடக்கிய முழுமை, அதில் காணப்படுவது ஒற்றை முரண்பாடு மட்டுமல்ல. அது முரண்பாடுகளின் கூட்டமைப்பாக உள்ளது.
மார்க்ஸ் பொருளாதாரம் என்று குறிப்பிடும் போது அதன் விரிவான அர்த்தத்தில் குறிப்பிடுகிறார். சமூக உற்பத்தியின் ஒட்டுமொத்தப் பொருளாயத நிலைகளையே பொருளாதார அடித்தளம் என மார்க்ஸ் குறிப்பிடுகிறார். ஆனால் பொதுவாக பொருளாதாரம் என்னும் சொல் அதன் குறுகிய அர்த்தத்தில் புரிந்து கொள்ளப்படுகிறது என்பதால் இது தவறான புரிதலுக்கு வழிவகுக்கிறது. இதனால் மார்க்சியமும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும் பொருளாதாரக் குறுக்கல் வாதமாகப் புரிந்து கொள்ளப்படுகிறது.
இன்று பிரதானமாகக் காணப்படும் பொருளாதார நூல்களில் பொருளாதாரம் என்பது சந்தையாகக் குறுக்கப்பட்டுள்ளது. அவற்றின் ஆய்வு முறையானது தனிநபர் நுகர்விலிருந்தே தொடங்குகிறது. மார்க்சியம் என்பது சிக்கலான முழுமையை ஆராய்கிறதே ஒழிய வெறும் தனிநபரை மட்டும் அல்ல. மார்க்ஸியப் பார்வையில் பொருளாதாரம் என்பது மிகப்பரந்த கண்ணோட்டத்தில் ஆராயப்படுகிறது.
மார்க்சிய முறை, உற்பத்தியினுடைய, சமூக உறவுகளுடைய வரலாற்றுத் தனித்தன்மையை அங்கீகரிக்கிறது. ஒரு குறிப்பிட்ட சகாப்தத்தைச் சமூகப் பகுப்பாய்வு செய்ய, மார்க்சியம் அந்த சகாப்தத்திற்குப் பொருத்தமான கருத்தினங்களை உருவாக்குகிறது.
மார்க்சியத்தில் உற்பத்தி என்பது எப்போதும் சமூக ரீதியாகவும், வரலாற்று ரீதியாகவும் குறிப்பிடப்படுகிறது என்பதால் பகுப்பாய்வு செய்யும் போது உற்பத்தி, நுகர்வு, விநியோகம், பரிமாற்றம் இவற்றிற்கு இடையிலான உறவுகளையும் கருத்தில் கொள்ள வேண்டும். மார்க்ஸியப் பார்வையில், விநியோகம் என்பது உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் விநியோகமாக மாறுவதற்கு முன் உற்பத்திச் சாதனங்களின் விநியோகமாக உள்ளது என்பதையும், சமூகத்தின் உறுப்பினர்கள் எவ்வாறு பல்வேறு வகையான உற்பத்தி நடவடிக்கைகளில் பகிர்ந்தளிக்கப் பட்டுள்ளார்கள் என்பதையும் குறிப்பிடுகிறது.
இந்த விநியோகங்களின் விளைவாகவே உற்பத்திப் பொருட்களின் விநியோகம் அமைகிறது. முதலாளித்துவச் சமுதாயத்தில் கூலி உழைப்பு, முதலாளித்துவ உற்பத்தி உறவுகளின் முன்னிருப்பின் அடிப்படையில்தான் வருவாய் கூலியாகவும், இலாபமாகவும் விநியோகம் செய்யப்படுகிறது. மார்க்சிய ஆய்வுமுறை வருமான விநியோகத்திற்கு முன்பே உற்பத்திச் சாதனங்களின் விநியோகத்தைப் பரிசீலிக்கிறது.
உற்பத்தி, விநியோகம், நுகர்வு, பரிவர்த்தனை (சுற்றோட்டம்) ஆகிய ஒன்றோடொன்று தொடர்புடைய கூறுகளைக் கொண்ட சிக்கலான கூட்டமைப்பாகத்தான் உற்பத்தி நிகழ்வை மார்க்சியம் நோக்குகிறது. முதலாளித்துவத்தில் மூலதனம் என்பது உற்பத்தி சாதனங்கள் தனியாரிடம் இருக்கும் போதுதான் அதற்கான முழுமையான பொருளைப் பெறுகிறது. மூலதனம் என்பது பணமோ, உற்பத்தி சாதனங்களோ மட்டும் அல்ல. முதலாளித்துவ சமூகத்தின் உற்பத்தி உறவுகளையும் அது குறிக்கிறது.
சமூக யதார்த்தத்தை மார்க்சிய முறையில் ஆய்வு செய்யும் போது அதற்குப் பொருத்தமான அருவமாக்கப்பட்ட கருத்தினங்களை உருவாக்க வேண்டும். ஆய்வு முறையின் போது அருவமாக்கப்பட்ட எளிய கருத்தினங்களை அவற்றிற்கிடையே உள்ள தொடர்புகளுக்குரிய வகையில் அடுத்தடுத்து முறையாக ஒன்றுடன் ஒன்றாக இணைத்து, தொகுத்துக் கட்டமைத்து அறிவியல் பூர்வமாக முழுமையாக்குவதன் மூலமே தூலமான எதார்த்தத்தைப் பிரதிபலிக்கும் சித்தாந்தத்திற்கான துல்லியமான கருத்தினங்களை பெற முடியும்.
இந்த ஆய்வு முறைகளின் மூலம் மட்டுமே வரலாற்று அடிப்படையிலான குறிப்பிட்ட பிரச்சனைகளுக்குத் தீர்வுகளைப் பெற முடியாது சமூகத்தைப் புரிந்து கொள்வதன் மூலமே மாற்றத்தை கொண்டுவர முடியாது. முழுமையான சித்தாந்தத்தின் அடிப்படையிலான செயல்பாட்டின் மூலமே சமூகத்தின் நிலைமைகளை மாற்ற முடியும். ஒன்றுபட்ட சித்தாந்தத்தாலும், செயல்முறையாலும் மட்டுமே பயனுள்ள முறையில் சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியும். சமூக மாற்றத்தை ஏற்படுத்த நாம் தூலமான முறையில் செயல்பட வேண்டும்.
சரக்கு:
முன்-முதலாளித்துவப் பொருளாதாரத்தில் வர்த்தகம் என்பது சமூகத்தில் குறைவாகவே இருந்துள்ளது. முதலாளித்துவ வளர்ச்சி வரலாற்றில் சிறு உற்பத்தியாளர் அவரது உற்பத்திச் சாதனங்களிடமிருந்து பிரிக்கப்பட்டு உழைப்பாளியாகிறார். ஒன்று அவர் முதலாளியிடம் தன் உழைப்புச் சக்தியை விற்றுப் பிழைக்க வேண்டும், இல்லை பட்டினியால் சாக வேண்டும். அவர் உற்பத்திச் சாதனங்களிலிருந்து விடுமை பெற்றதால் ‘சுதந்திரமானவராகக்’ கருதப்படுகிறார், அவர் பெற்றது பட்டினி கிடப்பதற்கான சுதந்திரம் மட்டுமே.
விவசாயியாக இருக்கும் போது உயிர் வாழ்வதற்கு இருந்த உத்தரவாதத்தைக் கூட தொழிலாளியாக இருக்கும் போது அவரால் பெற முடியவில்லை. முதலாளி வர்க்கம் என்பது மக்களின் நுகர்வு வளர்ச்சியைத் தடுப்பதாகவே இருந்து வருகிறது. முதலாளித்துவ சமூகத்தில் உழைப்புச் சக்தியும் சரக்காக்கப்பட்டுள்ளது. மூலதனம் என்பது இறுகிய இறந்த உழைப்பையே குறிக்கிறது.
உற்பத்தியின் போது மூலதனத்தின், அதாவது இறந்த உழைப்பின் பகுதியும், உழைப்பாளியின் உயிருள்ள உழைப்பும் சரக்குடன் சேர்கிறது. தொழில்நுட்ப வளர்ச்சியின் மூலம் மூலதனம் தொடர்ந்து சரக்கை உற்பத்தி செய்வதற்கு ஆகும் நேரத்தைக் குறைத்து வருகிறது. மூலதனத்தால் தொழிலாளர் திறனற்றவராக ஆக்கப்படுகிறார். முதலாளித்துவத்தின் வளர்ச்சி தொழிலாளர்களைத் திறனற்றவர்களாக்குகிறது. முதலாளித்துவச் சமுதாயத்தில் உற்பத்தி என்பது ஒருவரின் பயன்பாட்டுக்காக செய்யப்படுவதில்லை. சந்தைகளில் விற்பதற்காகவே செய்யப்படுகிறது. சரக்கு உற்பத்தி என்பது சேவைக்காகச் செய்யப்படுவதில்லை, தனியாரின் லாபத்திற்காகவே செய்யப்படுகிறது.
மார்க்ஸ் ’மூலதன’த்தில் முதலாளித்துவ உற்பத்தி முறையின் பகுப்பாய்வை சரக்கிலிருந்து தொடங்குகிறார். அதன் மூலம் சரக்கு உற்பத்தியில் வளர்ச்சி பெற்ற முதலாளித்துவ உற்பத்தி முறையின் அடிப்படையான உள்முரண்பாடுகளை வெளிக் கொணர்கிறார். சரக்கின் பகுப்பாய்வின் மூலமே அதற்கடுத்தடுத்து அமைந்த அரசியல் பொருளாதார ஆய்வுகளுக்கு அடிப்படையாய் அமைந்த மதிப்புக் கோட்பாட்டை உருவாக்குகிறார்.
ஒவ்வொரு சரக்கும் இரண்டு பண்புகளைக் கொண்டுள்ளன. ஒன்று மனிதத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அவை கொண்டுள்ள பயன்மதிப்பு, ஆனால் சரக்கை உற்பத்தி செய்பவருக்கு முக்கியமாய்படுவது சரக்கின் பயன்மதிப்பு அல்ல, வேறொரு சரக்கிலமைந்த அதன் பரிவர்த்தனை மதிப்பே.
வெவ்வேறு வகையான சரக்குகளை எவ்வாறு ஒன்றுடன் ஒன்று பரிவர்த்தனை செய்து கொள்ள முடிகிறது. வெவ்வேறு வகையான சரக்குகளுக்குப் பொதுவாக ஒரு பண்பு இருப்பதன் மூலமே அவற்றை ஒன்றுடன் ஒன்று பரிவர்த்தனை செய்து கொள்ள முடிகிறது. சரக்குகளில் காணப்படும் அந்தப் பொதுவான பண்பு என்ன? அவை அனைத்துமே மனித உழைப்பினால் உருவாக்கப்பட்டவை என்பதே. அவை வெவ்வேறு வகையான உழைப்பின் மூலம் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்ற போதும்.
அவற்றை நீக்கி விட்டுப் பார்த்தோமானால் சரக்குகள் அனைத்துமே மனித உழைப்பின் விளைபொருட்களாக உள்ளன என்பதே அவற்றிலுள்ள பொதுவான பண்பு. அதுவே சரக்குகளுக்கு மதிப்பைத் தருகிறது. மதிப்பு என்பது சரக்கினுடைய சமூகப் பண்பாகவே உள்ளது. சரக்கானது தூலமான உழைப்பிலிருந்து பயன் மதிப்பையும் அருவாக்கமாக்கப்பட்ட உழைப்பிலிருந்து மதிப்பையும் பெறுகிறது.
சரக்கின் மதிப்பு என்பது முற்றிலும் ஒரு சமூகப் பண்பாகவும் அந்தப் பொருளின் பொருளார்ந்த தன்மைக்கு எதிரானதாகவும் உள்ளது. அப்பொருளின் ஒரு அணு கூட அதன் மதிப்பின் கூறாக இருப்பதில்லை. சரக்கின் மதிப்பின் அளவானது சரக்கை உருவாக்கத் தேவையான சராசரி உழைப்பு நேரத்தால் நிர்ணயிக்கப்படுகிறது. அதுவே சரக்குகளின் விலையையும் நிர்ணயிக்கிறது.
மதிப்பு என்பது ஆழமான பொருளைக் கொண்டுள்ளது. ஒரு சரக்கின் விலை என்னும் போதும், அதைச் சமூக ஏற்பாட்டின் வடிவமான பணத்தில் குறிப்பிடும் போதும் மதிப்பின் ஆழமான அர்த்தம் அதனால் மூடி மறைக்கப்படுகிறது. நாம் சரக்குகளின் மேல்மட்டத்தில் தெரியும் விலையைப் பார்ப்பதுடன் நின்று விட்டால், அந்த சரக்குகள் உற்பத்தி செய்யும் போது என்ன விதமான சமூக உறுவுகளை உருவாக்குகின்றன என்பது குறித்து அதில் பொதிந்துள்ள ஆழமான உண்மைகளை அறிந்து கொள்ள முடியாது.
சரக்குகளைப் பெருமளவில் உற்பத்தி செய்யும் முதலாளித்துவச் சமூகத்தில் சரக்குற்பத்தியில் ஈடுபடும் போது சமூகத்தின் உறுப்பினர்கள் என்ன மாதிரியான சமூக உறவுகளைக் கொண்டுள்ளனர் என்பதைச் சமூகத்தை மேலோட்டமாக பார்க்கும் போது தெரிவதில்லை,
விலை வடிவம், சரக்கின் உள்ளார்ந்த மதிப்பின் கூறுகளை வெளிக் கொணர்வது இல்லை. பண வடிவிலான சரக்குலகம் தனியார் உழைப்பின் சமூகத் தன்மையையும், உற்பத்தியாளர்களுக்கு இடையிலான உறவுகளையும் வெளிக் கொணர்வதற்கு பதில் அவற்றை மூடி மறைக்கிறது. இதனால் முதலாளித்துவம் சமத்துவமுள்ள சமுதாயம் போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறது.
ஆனால் அந்தத் தோற்றமே உண்மையாகக் கருதப்படுகிறது. முதலாளித்துவத்தில் பெயரளவிற்கே சமத்துவம் உள்ளது. அடிமைச் சமூகத்திலோ, நிலக்கிழாரிய சமூகத்திலோ வெளிப்படையாகவே தெரியும் சமூக உறவுகள், வர்க்க முரண்பாடுகள் முதலாளித்துவச் சமூகத்தில் வெளிப்படையாகத் தெரிவதில்லை. முதலாளித்துவ சமுதாயத்தில் உற்பத்தியாளர்களுக்கு இடையிலான உறவுகள் சரக்குகளுக்கு இடையிலான உறவுகளாக வெளியே தெரிகிறது.
மனிதர்களுக்கிடையிலான உறவுகள் பொருட்களுக்கு இடையிலான உறவுகளாகத் தெரிகிறது. இவ்வாறு சரக்கு என்னும் வடிவம் உண்மைகளை மர்மமாக்கித் தோற்ற மயக்கத்தை ஏற்படுத்துகிறது. இதையே சரக்குகளின் மாய்மாலம் என மார்க்ஸ் விளக்குகிறார்.
முதலாளித்துவச் சமூகத்தை அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்ய அதன் வெளித் தோற்றத்தைத் தாண்டி அதில் உட்பொதிந்துள்ள சாரத்தை வெளிக் கொணர வேண்டும். அதன் மூலமே அச்சமூகத்தின் வெளித்தோற்றத்திற்கும் அதன் உண்மையான சாரத்திற்கும் இடையிலான முரண்பாடுகளைப் புரிந்து கொள்ள முடியும்.
(தொடரும்)
- சமந்தா