குழந்தையின் வளர்ச்சியில் முக்கிய பங்கு பள்ளிக் கல்வி. பள்ளிக்கூடம் நல்ல குடிமகன்களை உருவாக்கி நாட்டிற்கு அர்ப்பணிக்கும் இடம். அங்கே குழந்தையின் அறிவு வளர்ச்சிக்கும் மன முதிர்ச்சிக்கும் அடித்தளம் போடப்படுகிறது. பெற்றோர்கள் தேர்ந்தெடுத்த பள்ளிக்கூடத்தில் குழந்தைக்கு அட்மிஷன் கிடைத்தால் பெருமகிழ்ச்சி அனைவருக்கும். சிறு குழந்தைகளுக்கு பள்ளிக்கூடம் வீட்டின் தொடர்ச்சியாக இருக்க வேண்டும். அங்கே இருக்கும் சூழலும் குழந்தைகள் இயல்பாக உணரும்படியும் படிப்பதற்குத் தூண்டும்படியும் இருக்க வேண்டும்.

தொடர்ந்து பள்ளிக்கூடம் செல்லும் குழந்தை திடீரென்று ஒரு நாள் 'நான் பள்ளிக்குப் போக மாட்டேன்' என்று அடம்பிடித்தால் ஏதேனும் காரணம் இருக்குமோ என்று பெற்றோர்கள் எண்ண வேண்டுமே ஒழிய குழந்தையைக் கட்டாயப்படுத்தி பள்ளிக்கு அனுப்பக் கூடாது. குழந்தைகள் இப்படி பள்ளிக்குப் போக மறுப்பதை SCHOOL REFUSAL என்றும், போவதற்குப் பயப்படும் உணர்வுபூர்வமான நிலையை SCHOOL PHOBIA என்றும் கூறுகிறார்கள். சிறு குழந்தைகள், மற்றும் பதின்பருவத்தினரின் மனப்போக்கு பற்றியும் அவர்கள் பள்ளி செல்ல மறுப்பதற்கான காரணங்கள் மற்றும் அதற்கான தீர்வுகள் பற்றியும் இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.kid crying at schoolசிறு குழந்தைகளிடம் தெரியும் காரணங்கள்.

வெளி உலகை ஆராயும் ஆர்வத்துடன் மன வளர்ச்சியும், பிறருடன் பழகும் முதிர்ச்சியும் இயல்பாக இருக்கும் குழந்தைகளுக்கு பள்ளி செல்லுவதில் சிக்கல்கள் ஏதும் இருக்காது. மற்றவர்கள் அவர்களுக்கே உரிய பய உணர்வோடு பள்ளிக்கூடத்தை அணுகுவதால் தினமும் வீட்டில் களேபரப் படுத்தி விடுவர்கள். ‘இன்று பள்ளிக்குப் போக மாட்டேன்' என்று தீர்மானமாகச் சொல்லி விடுவார்கள். பயத்துடன் பதற்றமும் சேர்ந்துகொண்டு காலையில் பள்ளி செல்லும் நேரம் வரும்போது வயிற்று வலி, தலைவலி, மயக்கம் போன்ற காரணங்களைச் சொல்லி பள்ளிக்கு செல்வதைத் தவிர்க்கப் பார்ப்பார்கள். வீட்டில் எங்கேனும் போய் ஒளிந்து கொள்வார்கள். பெற்றோர்களிடம் கெஞ்சுவார்கள். இவர்களிடம் பயம் தவிர மற்ற மருத்துவக் காரணங்கள் ஏதும் கண்டுபிடிக்க முடியாது.

நிறைய குழந்தைகளுக்குப் பெற்றோரைப் பிரிந்து இருக்க வேண்டுமே என்ற பெரிய கவலையும் அதனால் ஏற்படும் மன அழுத்தமுமே பள்ளிக்கு செல்வதைத் தவிர்க்கத் தூண்டும். அறிமுகமற்ற புதிய சூழல் பயத்தை மேலும் அதிகரிக்கும். இம்மாதிரியான குழந்தைகள் பள்ளிக்கூடத்தை வேற்று கிரகம் போன்ற உணர்வுகளுடன் அணுகுகிறார்கள் என்றே சொல்லலாம். இன்னும் ஒரு சில குழந்தைகள் வீட்டில் உள்ள பெற்றோர்களின் கவனத்தைத் தங்கள் பக்கம் திருப்ப 'இன்று பள்ளிக்குப் போக மாட்டேன்' என்ற ஆயுதத்தை உபயோகிப்பார்கள். வீட்டில் அடம் பிடித்து சாதிக்கும் குழந்தைகளுக்கு இந்த டெக்னிக் எளிதில் வந்துவிடும்.

வீட்டில் உள்ள காரணங்கள்

சில நேரங்களில் பெற்றோர்களே குழந்தைகளைப் பள்ளிக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு விடுகிறார்கள். இதற்கான காரணங்கள் வீட்டிலும் வெளியிலும் நிறைய இருக்கின்றன. உடல்நலக் குறைபாடு, அவசர நிகழ்வுகள் போன்று பல உள்ளன. வீட்டில் நிலவும் வறுமை, வேலைக்குப் போக வேண்டிய கட்டாயம், நெருங்கிய உறவுகளின் இழப்பு போன்ற காரணங்களுக்கு தீர்வுகளும் அவ்வளவு எளிதல்ல. படிப்பின் அருமை தெரியாத பெற்றோர்கள், அமைதியற்ற குடும்ப சூழல், வன்முறை, போதை என பாதை மாறிய பெற்றோர்கள் நடுவே வளரும் குழந்தைக்கும் இயல்பாகவே படிப்பில் நாட்டம் வராது.

பள்ளியில் உள்ள காரணங்கள்

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஒருமுறை 'நான் யாருக்கும் கற்பிக்கத் தேவை இல்லை, அவர்கள் கற்பதற்கான சூழலை மட்டுமே கொடுக்கிறேன்' என்றாராம். ஆசிரியர் மாணவர் உறவு நன்றாக இருக்கும்போது குழந்தைகள் பள்ளிக்கூடம் போக மறுக்கும் நிலை குறைந்து விடும். அதுபோல் பள்ளிக்கூடங்கள் குழந்தைகளைப் பயமுறுத்தா வண்ணம் அவர்களின் மனமும் அறிவும் வளரும்படியான சூழலைக் கொடுக்க வேண்டும்.

படிப்பில் பின் தங்கியுள்ள குழந்தைகளுக்கு டெஸ்ட், மார்க், மதிப்பீடு என்றாலே சற்று பயம் வந்து விடும். அத்துடன் அடிக்கடி பள்ளிக்கூடம் போகாத நிலையும் சேர்ந்து முடிக்க வேண்டிய வீட்டுப் பாடங்கள் அதிகமாகச் சேர்ந்து கொள்ளும். மீண்டும் பள்ளிக்குப் போகலாம் என்று முடிவு செய்தாலும் ஆசிரியர்களின் கண்டிப்புக்கு ஆளாக வேண்டுமே என்ற எண்ணம் மேலோங்குவதால் போகாமல் இருந்தாலே பரவாயில்லை என்ற முடிவுக்கு வந்து விடுவார்கள். பின்னர் படிப்பதில் ஆர்வக் குறைவும், தேர்வுகளில் குறைவான மதிப்பெண்களும் வருவதால் நாளடைவில் வகுப்புத் தோழர்களிடம் இருந்தும் ஆசிரியர்களிடம் இருந்தும் விலகி வந்து விடுவார்கள். பாதியில் படிப்பை விட்டு விட்டு வேறு வேலையில் ஆர்வம் கொள்வார்கள். இந்த விபரீத வளையத்திற்குள் குழந்தைகள் சிக்காமல் பெற்றோர்கள் பார்க்க வேண்டும்.

பெற்றோர்கள் என்ன செய்யலாம்?

குழந்தைகள் பள்ளிக்கூடம் போக மறுக்கும் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வே கூடிய சீக்கிரம் குழந்தையை மீண்டும் பள்ளிக்கூடம் போக வைப்பதுதான். பிரச்சினை எங்கே உள்ளது என கண்டுபிடித்து தீர்க்கும் முயற்சியையும் அங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும். பெரும்பாலான நேரங்களில் பெற்றோர்களும் பள்ளி ஆசிரியர்களும் சேர்ந்து எளிதில் தீர்த்து விடலாம்.

ஆரம்பப் பள்ளி செல்லும் குழந்தை போக மாட்டேன் என்று சொல்லும்போது பெரும்பாலும் பெற்றோர்களைப் பிரிந்து இருக்க வேண்டுமே என்ற பயமும் பதட்டமுமே காரணமாக இருப்பதால் அவர்களுக்கு பள்ளிக்கூடத்தை கொஞ்சம் கொஞ்சமாக அறிமுகம் செய்து பயத்தைப் போக்கலாம்.

முதலில் பெற்றோருடன் ஒரு விசிட், பிறகு தனியாக ஒரு 1-2 மணி நேரம், போகப் போக நேரத்தை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும். இங்கே குழந்தை மீது சற்று கண்டிப்பைக் காட்டி பள்ளிக்கூடம் அனுப்ப வேண்டும். குழந்தைமேல் அனுதாபப்படத் தேவையில்லை.

தேவையிருப்பின் பள்ளியில் பயமற்று இருக்கும் இன்னுமொரு குழந்தையுடன் நம் குழந்தையை நண்பனாக்கி விட்டால் எளிதில் இயல்பாகி விடுவார்கள். வீட்டிலும் பயமற்று பிறரோடு பழகும் திறமையை வளர்க்கும்படி பெற்றோர்கள் சொல்லித் தர வேண்டும். பள்ளியில் உள்ள ஆசிரியர்களும் அவர்களுக்கு சின்னச் சின்ன வேலைகளும் பொறுப்புகளும் கொடுத்து ஆசிரியர்கள் மீதான பயத்தைப் போக்கலாம்.

உடல்நிலை சரியில்லாத குழந்தையை பள்ளிக்கு அனுப்புவது தவறு. அதே நேரம் பயத்தினால் போக மாட்டேன் என்று சொல்லும் குழந்தையை அடையாளம் காணவும் தெரிய வேண்டும். வீட்டில் படிப்புக்கும், வீட்டுப் பாடத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து வளர்க்க வேண்டும். குழந்தைகளின் வகுப்புத் தோழர்கள் பற்றியும், பள்ளிக்கூடம் பற்றியும் அவ்வப்போது குழந்தைகளிடம் பெருமையாகப் பேசி, பள்ளிக்குப் போக வேண்டும் என்ற ஆர்வம் எப்போதும் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். குழந்தைகள் எப்போதும் பரிசும் பாராட்டும் விரும்புவார்கள். சிறுசிறு பாராட்டுக்கள், பரிசுகள், குழந்தை அடம் இல்லாமல் பள்ளி சென்று வந்த பிறகு கொடுக்கலாம். முன்னரே கொடுத்து விடாதீர்கள்.

பதின் பருவமும் பள்ளிக்கூட மறுப்பும்

பதின்பருவம் முழுவதுமே குழந்தைகள் வாழ்வில் ஒரு கொந்தளிப்பான காலம். ஹார்மோன்களின் தாக்கத்தால் உடல் அளவில் நிறைய மாற்றங்கள், மனதளவில் அலைபாயும் எண்ணங்கள், உணர்ச்சிப் பிரவாகங்கள், மனப்பதட்டம், மனச்சோர்வு என பதின்பருவம் முழுவதும் நிரம்பிக் கிடக்கும். இவைகளுக்கு மத்தியில் அந்தக் குழந்தை படிப்பிலும், மற்ற சமூகத் திறமைகளிலும் சாதித்து தனக்கென ஒரு இடம் பிடிக்க வேண்டும். பதின்பருவத்துக் குழந்தைகளை வீட்டில் உள்ளவர்கள் தொடர்ந்து கண்காணிக்கவும் இயலாது. அவர்களுக்கும் படிப்பில் ஆர்வமும் பொறுப்பும் வந்து விடுவதால் பள்ளிக்கூடம் போக மறுக்கும் நிலையும் வராது.

ஆனாலும் ஒரு டீன்ஏஜ் குழந்தை, பள்ளிக்குப் போக மாட்டேன் என்று சொல்லும்போது வீட்டில் இருப்பவர்கள் அதை அலட்சியப்படுத்த முடியாது. இந்த வயதில் மன அழுத்தம், மனச் சோர்வு, சக மாணவர்களுடன் சண்டை, ஆசிரியர்களோடு பிரச்சினை, கிண்டல், கேலி, வன்முறை, பாலின ரீதியான துன்புறுத்தல் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

அரிதாக இந்த வயதில் ஒரு சில குழந்தைகள் பள்ளிக்குச் செல்கிறேன் என்று பெற்றோர்களிடம் சொல்லிவிட்டு பள்ளிக்குச் செல்லாமல் நண்பர்களுடனோ அல்லது தனியாகவோ தாங்கள் விரும்பிய இடத்திற்கு சென்று பொழுதைக் கழித்துவிட்டு சாயங்காலம் வீட்டுக்கு எப்போதும் போல வந்து சேருவார்கள். இதை ஆங்கிலத்தில் TRUANCY என்பார்கள். பெற்றோர்களால் குழந்தை பள்ளிக்குச் செல்லவில்லை என்பதை எளிதில் கண்டுபிடிக்க முடியாது.

இந்தக் குழந்தைகளுக்கு பள்ளிக்கூடம் போகவில்லையே என்ற வருத்தமோ, கவலையோ இருக்காது. மனச்சோர்வோ அல்லது மன அழுத்தமோ இவர்களிடம் காண முடியாது. பள்ளிக்கூடம் போக வேண்டிய கட்டாயம் வந்தாலும் வெறுப்பாகவே பள்ளி செல்லுவார்கள். பள்ளிக்கூடமும் அங்கே ஆசிரியர்களும் இம்மாதிரி குழந்தைகளுக்குப் பிடிக்காதவர்களாக இருப்பார்கள். ஆனால் வெளியில் பிடித்த நண்பர்கள் வட்டத்துடன் ஒன்றிப்போய் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

இந்த மாதிரிப் பழக்கம் இருக்கும் குழந்தைகளை அனைவரும் சந்தேகக் கண்ணோடு பார்ப்பதும், கண்டிப்பதும் தண்டிப்பதும் நடந்தேறும். குழந்தைகளும் நாளடைவில் பெற்றோர்களை எதிர்த்துப் பேசவும் நடக்கவும் கற்றுக் கொள்ளுவார்கள். கொஞ்சம் கொஞ்சமாக பொய் பேசுவதும் திருடுவதும் வந்து சேரும். போதை, வன்முறை என்று மாறி பள்ளிப் படிப்பு வேண்டாம் என்று தாங்களாகவே நிறுத்திக் கொள்வார்கள். இங்கே ஒரு புள்ளி விபரத்தை நினைவு படுத்துகிறேன். முன்னேறிய நாடான அமெரிக்காவில் சிறைகளில் உள்ளவர்களில் 68 சதவீதம் பேர் உயர்நிலைப்பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் என்று ஒரு ஆய்வு சொல்லுகிறது.

என்ன செய்யலாம்?

பதின் பருவத்தினர் பள்ளி செல்ல மறுக்கிறார்கள் என்றால் அது பெற்றோர்களுக்கு ஒரு எச்சரிக்கை மணி! உடனடியாக அலட்சியப் படுத்தாமல் காரணம் கண்டு குழந்தையை நல்வழிப்படுத்த வேண்டும். பெற்றோர்கள், ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகம், மனவியல் ஆலோசகர்கள், மனநோய் மருத்துவர்கள் என அனைத்து தரப்பினரின் பங்களிப்போடு தீர்வு காண வேண்டி வரும்.

- ப.வைத்திலிங்கம், குழந்தை மருத்துவ நிபுணர்.

Pin It