ரீசஸ் போவதற்கான பெல் அடிச்சதும், குழந்தைகள் பள்ளி வாசலை விட்டு சிறு மணிகளை உருட்டிவிட்டது போல உருண்டு கலைந்து, டாய்லெட்டை நோக்கி ஓடின, வெளியில் வந்த மிஸ் ஒருத்தி அவர்களை ஆங்கிலத்தில் அதட்டினாள், எத்தனை தரம் சொல்றது வரிசையா போகனும்! கூச்சல் போடக்கூடாதுன்னு?! சனியங்களா! என்று பிறகு தமிழுக்கு மாறினாள். வகுப்பிலேயே டயாபரை மாற்றத் தெரியாத சிறுவன் ஒருவன் தனது டவுசரில் ஈரம் பண்ணியிருந்தான். அவனை ஆயம்மாள் ஒருத்தி இரைந்தவாறே அழைத்துக் கொண்டு போனாள். நரேன் தனக்கு பின் வகுப்பில் படிக்கும் தனது தங்கையை தேடிக் கொண்டு போன போதுதான் அது நடந்தது.

bird 280அவன் டாய்லெட் பக்கம் போகவில்லை. மாறாக தங்கையைத் தேடி பள்ளித் தோட்டம் இருந்த பகுதிக்கு வந்திருந்தான். தங்கை அங்கு வந்திருக்கவில்லை. ஒரு வேளை அவள், டாய்லெட் போய்விட்டு இந்தப் பக்கமாக வரலாம் என்று நினைத்துக் கொண்டான். அவன் ஒரு புங்க மரத்தின் நிழலில் நின்றிருந்தான் பெல் அடிப்பதற்கு சிறிது நேரம் இருந்தது. காலை வெயில் கண்கள் கூசின. அப்போதுதான் பொத்தென்று அந்த சத்தம் கேட்டது. அவன் காலடியில்தான் அப்படி கேட்டது. பின்னுக்கு நகர்ந்தான் ஒரு சிறிய எல்லோ கலர் பஞ்சு.. இல்லை! இல்லை.. பிளவர் அதும்கூட இல்லை அது அசைந்தது. சின்னஞ்சிறியதாக இருந்தது. அவன் குனிந்து பார்த்தான். பிறகு தொட்டபோது, அவனது செல்ல நாய்க்குட்டி போல இருந்தது. ஆனால் அது நாய்க்குட்டி இல்லை. அது இத்தனை சின்னதாக இருக்க முடியாது. அது ஒரு சின்ன குருவி.. பெயர் தெரியாத குருவி..! நரேனுக்கு இப்போது என்ன செய்வதென்று தெரியவில்லை.

அது மரத்திலிருந்த தன் கூட்டிலிருந்து விழுந்திருக்க வேண்டும். மேலே அண்ணாந்து பார்த்தான். இலைமறைவில் இலை தழைகளால் ஆன ஒரு கூடு தெரிந்தது. சாதாரணமாகப் பார்த்தால் அது தெரியாது. மற்ற குஞ்சுகளில் சத்தம் இப்போது லேசாக காதில் விழுவதாக இருந்தது. அதன் தாய்க் குருவி, வேறு எங்காவது இரை தேடிச் சென்றிருக்கலாம். விழுந்த அந்த சிறிய பறவையை என்ன செய்வதென்று தெரியவில்லை. அதற்குள் பெல் அடித்துவிட்டார்கள். ஒரு கணம் யோசித்தான். பிறகு அந்தக் குருவியை ஒரு பஞ்சைப் போல தொட்டுத் தூக்கி, தன் கால்சட்டை பாக்கெட்டில் விட்டான். சிறிதாக முனகிக் கொண்டிருந்த அது, லேசான கதகதப்பில் தாயின் அரவணைப்பு என்று நினைத்ததோ தெரியவில்லை, பிறகு ஏதும் ஓசை இல்லை. அவன் தன் வகுப்பை நோக்கி நடந்தான்.

பிரியங்கா மிஸ், கிளாஸ் வரும் போதே காலில் சக்கரம் கட்டியிருப்பாள். அவன் ஓடினான். ஏற்கனவே அவள் நடத்தும் பாடத்தின் பக்கங்களைப் பிரித்து வைத்துக் கொண்டிருந்தாள். வாசலில் இவனை நிறுத்தி முறைத்தாள். பெல் அடித்து ஏன் தாமதம் என்று ஆங்கிலத்திலேயே கேட்டு குச்சியை ஆட்டினாள். இவனுக்கு கைகள் நடுங்கின. என்ன நினைத்தாளோ சரி, சரி போய் உட்கார் என்றாள். அவன் தனது டையை இழுத்துவிட்டுக் கொண்டு, அமர்ந்தான். சுகாதாரம் பற்றிய பாடம் மிச்சமிருந்தது.

இன்றைக்கு யார் யார் ஷு போடாமல் டாய்லெட்டுக்குப் போனது என்று அதட்டும் குரலில் கேட்டாள் மிஸ். எல்லோரும் கை தூக்கினார்கள். நரேன் போட்டுப் போகவில்லை. மறந்துவிட்டு போய்விட்டான் என்று சொல்ல முடியாது. வெயில் கசகசப்பில் அது மற்றுமொரு உறுத்தல். எல்லாவற்றிற்கும் மேலாக, அவனுக்கு டாய்லெட் போகும் விருப்பத்தை விட வழியில் இருக்கும் பள்ளி மைதானத்திலிருக்கும் குறுகுறு மணலில் நடக்கவே ஆசைபட்டான். அவன் எழும்பி நின்றான். மிஸ் புருவத்தை உயர்த்தினாள். அவன் கால்களில் ஒட்டியிருந்த வெண்மணல் அப்படியேயிருந்தது. மிஸ் கோபத்தோடு அவனை எச்சரித்தாள். அவள் மாணவர்களைப் பார்த்து பொதுவாக குற்றம் சொன்னாள். “நான் இங்கே சுகாதாரம் பற்றி பாடம் எடுத்துக்கிட்டு இருக்கேன் நீங்க என்னடான்னா அழுக்கு பிள்ளைகளா நடந்துகிறிங்க.. வெறும் காலில் நடந்தால் எத்தனை டிசிஸ் வரும் தெரியுமா?!” என்றாள். பிறகு அருகிலிருந்த குழாயில் கைகால்களை நன்கு கழுவிவிட்டு மிதியடியில் துடைத்துவிட்டு வரச்சொல்லி உத்தரவிட்டாள். அவன் தயக்கத்தோடு எழுந்து போனான். அவனது வீடு நான்காவது தளத்தில் இருந்தது. மணலை மருந்துக்குக் கூட பார்க்க முடியாது. மணல் வீட்டிலும், பிளாட்டிலும், ஏன் பள்ளியிலும் கூட தீண்டத்தாகாத பொருளாகும்.

தனது இருக்கையில் போய் நரேன் அமர்ந்தான். அந்த அசைவில் அவன் மறந்தே போய்விட்ட அந்தப் பெயர் தெரியாத பறவைக் குஞ்சு தூக்கம் கலைந்திருந்தது. மிஸ் இப்போது பறவைகள் பற்றி பாடம் எடுத்துக் கொண்டிருந்தாள்.

“பறவைகளில் நல்லவையும், கெட்டவையும் உண்டு. சுகாதாரக் கேட்டை ஏற்படுத்தக் கூடியவை, மோசமான வியாதிகளை பரப்பக் கூடியவை. மற்றது, முட்டை, கறிகளுக்காக வளர்க்கக் கூடியவை. பயன் தரக் கூடிய நல்லவை. உங்களுக்குத் தெரிந்த பறவைகள் பெயரை எல்லாம் சொல்லுங்கள் பார்ப்போம்!” என்றாள். நரேனுக்கு அடுத்து சன்னலோரம் உட்கார்ந்திருந்த ஏ.ஆனந்த் வெளியில் இருந்த மரங்களில் பறவைகளைத் தேடிக் கொண்டிருந்தான். மிஸ் அவனை கவனித்துவிட்டாள். அவளுக்கு கோபம் பொங்கியது. ஆனந்தை சன்னல் கதவுகளை மூடச் சொல்லி கத்தினாள். அவன் நடுங்கிப் போனான். அவனை வாசல் கதவருகே நின்று பாடம் கேட்க வேண்டும் என்றும் வகுப்பு முடியும் வரை இதுதான் தண்டனை என்றும் கடுகடுத்தாள். “பறவை எல்லாம் வெளியில் கிடையாது. அது பாடத்தில் இருக்கு. இங்க கவனிக்கனும் தெரியுதா?!” “தேவையானால் ஸ்கீரினில் போட்டு காண்பிப்பேன்!” என்றாள். பிறகு ஏதோ நினைத்துக் கொண்டவளாக எல்லா சன்னல் கதவுகளையும் மூடச் சொன்னாள். குறிப்பாக தோட்டப் பக்கம் இருந்த சன்னல்கள் உடனடியாக மூடப்பட்டன. முன்பு அவள் மரங்கள் பற்றி பாடம் எடுக்கும் போதும் அப்படித்தான் செய்தாள்.

மிஸ் கேட்டபோது யாருக்கும் எந்தப் பறவையின் பெயரும் உடனடியாக நினைவுக்கு வருவதாயில்லை. சுத்தம், சுகாதாரம் கருதி நிறைய பறவைகள் நகரின் எல்லையில் வைத்து பராமரிக்கப் படுகின்றன. காக்கைகள் இப்போது அறவே ஒழிக்கப்பட்டுவிட்டன. மைனாக்களை வீட்டில் வளர்த்தால் அரசின் தண்டனை உண்டு. தவிட்டுக் குருவிகள் முற்றிலும் தடை செய்யப்பட்டவையாகும். மூன்றாம் இருக்கை பிள்ளை ஒருவன் எழுந்து ‘சிட்டுக் குருவி’ மிஸ் என்றான். நினைத்துக் கொண்டது போல. வகுப்பில் எல்லோரும் சேர்ந்தார்போல சிரித்துவிட்டார்கள். அவனுக்கு என்னவோ போலாயிற்று. மிஸ் கேலியான புன்னகையோடு கேட்டாள், ‘மியூசியத்தில் பாடம் செய்து வெச்சிருக்கிறதப் பார்த்தியா!’ என்று அதற்கு அவன் ஆமாம் என்று தலையாட்டினான். “இல்லாத அழிஞ்சு போன பறவை பத்தி எல்லாம் பேசக் கூடாது தெரியுதா?!” என்றாள்.

வகுப்பில் ஒரு சிலரே மிகச் சில பறவைகளின் பெயர்களைச் சொல்லக் கூடியதாக இருந்தது. மயில் அது தேசியப் பறவை. பிறகு.. புறா.. இப்படி. நரேன் முறை வந்தபோதுதான் தனது பறவையின் நினைவு உடனடியாக வந்தது பாக்கெட்டை தடவினான். மிஸ் சிரித்தாள். பறவை பெயர் கேட்டால், பாக்கெட்டை தேடுறியே பாக்கெட்டிலா இருக்கும் என்றாள். அவன் ஆமாம் என்பது போல தலையாட்டி, பிறகு இல்லை என்றான். மிஸ் குழப்பமானாள்.

நரேன் வைத்திருந்த பறவை இப்போது அவனது கால்சட்டை பாக்கெட்டிலிருந்து வெளியே குதித்து காலியாயிருந்த கௌதமின் இடத்தில் அமர்ந்து ஒரு முறை தனது இன்னு முளைக்காத சிறகுகளை கோதிக் கொண்டது. பின் இருக்கை சுபிக்சா இதை கவனித்துவிட்டாள். திடீனெ அலற முற்பட்ட அவள் அடக்கிக் கொண்டு, “ஏய் நரேன் என்ன அது?” என்றாள் கிசுகிசுப்பாக. நரேன் இதற்குள் தனது பறவைக் குஞ்சைப் பார்த்து அதை எடுத்து தனது பாக்கெட்டினுள் வைக்க உடனடியாக முயன்றான். ஆனால் அது சிறிது உயரம் எழும்பி பறந்தது, நிறைமதியின் இருக்கையில் போய் அமர்ந்தது. அவள் வீறிட்டுக் கத்தினாள். “மிஸ்! அய்யோ இங்க இங்க ஒரு ‘பேட்’ மிஸ்” என்று சுட்டினாள்.. குழந்தைகள் அந்த இடத்தில் வந்து குவிந்து அதிசயித்தன. வகுப்பின் திடீர் சலசலப்பை உணர்ந்த மிஸ் குரல் உயர்த்தி சத்தம் போட்டாள்.

“பறவை எவ்வளவு ஒழுங்கு தவறாதவை, தன் கூட்டத்தோடு சீராக பறக்கக் கூடியவை. நீங்க அந்த ஜென்மமா என்ன! ஏன் இப்படி அங்குமிங்குமா அலையறீங்க!” என்று எழுந்து வந்து கத்திய சிறுமியிடம் முறைத்தாள். பிறகு அவளது டேபிளில் இருந்த வஸ்து ஒன்று நகர்வதைக் கண்டதும் அவள் ஆத்திரம் உச்சத்திற்கு போனது.

“ஏய் என்ன இது எப்படி இங்க வந்தது?!”. என்று தடுமாறினாள். குழந்தைகள் ஒரு நிமிடம் சட்டென அமைதியடைந்தன. “தெரியலை மிஸ்.. பறந்து வந்திருக்கனும்!“.. என்றன ஒரே குரலில். “நரேன்தான் மிஸ் வெச்சிருந்தான்!” என்றது ஒரு குரல். “நரேன் இங்கே வா அக்லி பாய்!” என்றாள் மிஸ். உடனடியாக அவள் பள்ளி சிப்பந்திகளை வரவழைத்து போன் செய்தாள். “உனக்கு இது எப்படி கிடைத்தது?!” என்றாள் டேபிளில் இருந்த அந்த குருவியை பார்த்துக் கொண்டே. அவன் சொன்னான். மிஸ் உடனே “யார், யார் இந்த அக்லி பேடை தொட்டிங்களோ அவங்க எல்லாம் போய் கையை நல்லா சுத்தமா வாஷ் பண்ணிட்டு வரவேண்டும்!” என்று கண்டித்தாள். பிறகு நரேனிடம், “இது மாதிரியான பறவைகளை பார்த்தால் தொடக்கூடாது, டிசிஸ் கூட வரலாம். கொத்தி காயம் ஏற்படலாம்.. மிஸ்ஸுடம் தான் சொல்ல வேண்டும் பறவைகளைத் தொட்டால், போலீஸ் வரும் தெரியுமா?” என்றாள் மிரட்டும் தொனியில்.

பள்ளி சிப்பந்திகள் இருவர் வரவும் அந்த பிஞ்சுக் குருவி வகுப்பின் மூலைக்குப் பறந்தது. சிப்பந்திகள் அதை ஒரு வலை வைத்துப் பிடிக்க முயன்றனர். குழந்தைகள் ஒரே ஆராவாரம் செய்தன. இறுதியில் அதை அவர்கள் பிடித்தெடுத்தார்கள். கையுறை அணிந்த சிப்பந்தியில் ஒருவன், “இது தடை செய்யப்பட்ட பறவை, இது நமது பள்ளி வளாகத்தில் இருப்பது தெரிந்தால் அரசு நம்மீது நடவடிக்கை எடுக்கும்!” என்றான் இரகசியக் குரலில். வகுப்பறை சிறிது தயங்கி பிறகு மவுனித்தது. அவர்கள் அதை எடுத்துப் போகவும், வகுப்பு ஒன்று கூடி, மிஸ்சின் அனுமதிக்கும் காத்திராமல், அந்த சின்னஞ்சிறு பறவைக்காக முழங்காலிட்டு பிராத்தனை செய்து கொண்டது. நரேனுக்கு கண்கள் கலங்கின. அவன் மிஸ்ஸிடம் வந்தான், “மிஸ், நான் அதை எடுத்த இடத்திலேயே விட்டுடறேன்!“ என்றான். அவள் “நோ. நோ நீ தொட்டதே பெரிய டெரர். போ போய் உட்கார்!” என்றாள்.

உணவு இடைவேளைக்கான பெல் அடித்ததும் அவர்கள் சோம்பலாகக் கலைந்தார்கள். நரேன் விலகி தோட்டத்துப் பக்கமாக நழுவினான். அவன் முன்பு நின்ற மரத்தினடிக்கு வந்தான். அங்கு அவன் பார்த்த காட்சி பிஞ்சு மனதை நொறுக்குவதாக இருந்தது. சிறிய வண்ண இறகுகள் ஆங்காங்கு பிய்த்துக் கிடந்தன. அவைகளின் கூடு சிதறிப் போய் தனியாகக் கிடந்தது. அதை தொட்டான். மிதமான சூடொன்று அதில் இருந்தது. வேறு சில குஞ்சுகளும் அதில் இருந்திருக்க வேண்டும். அவற்றின் தாய்ப் பறவை அங்கும் இங்கும் கத்தி கூக்குரலிட்டவாறு எங்கோ ஒடி மறைவதைப் பார்த்தான். இனி அது சுட்டுக் கொல்லப்படும். மெல்ல முழந்தாளிட்டு குனிந்து குஞ்சுப் பறவைகளின் இறகொன்றை எடுத்து கன்னத்தில் வைத்துக் கொண்டான். இப்போது, முன்னும் காணாத கண்ணீர் அவனிடமிருந்து பெருக்கெடுத்தது.

-    இரா.மோகன்ராஜன்

Pin It