காவ்யா சண்முகசுந்தரம் அவர்கள் புனைவுகளை சுந்தரபாண்டியன் என்ற பெயரிலேயே வெளியிடுகிறார். அந்த வகையில் அவரின் ஐந்து நாவல்களில் ஆராரோ, அந்தி போன்றவை திருநெல்வேலி மாந்தர்களும், அவர்களது வாழ்வியலும் பற்றி சிறப்பானவை. அந்தப் பிரதேச மனித உணர்வுகளை சரியாகக் காட்டியவை. அவற்றை நல்ல திரைப்படங்களாக ஆக்கும் முயற்சுகள் பற்றி பாலு மகேந்திரா போன்ற இயக்குனர்கள் சிலாகித்திருக்கிறார்கள்.

porunai novelஅந்த வரிசையில் “பொருநை” என்ற தலைப்பில் வந்திருக்கும் நாவல் ஒரு வகையான சுயசரிதை தன்மையைக் கொண்டிருக்கிறது. நாவலை காவ்யா சண்முகசுந்தரம் அவர்கள் சுந்தரபாண்டியன் என்ற பெயரில் வெளியிட்டு இருக்கிறார். இது ஒரு மாணவர், ஆறுமுகம் என்ற கதாபாத்திரம் பற்றியது. தாமிரபரணிக் கரையில் வசிக்கிறான். தமிழ் கற்கிறான். தமிழ் கற்கிற சூழலும் அவனைச் சுற்றியுள்ள சூழலும் அவனை வாழ்க்கை சார்ந்த பல புது ஆர்வம் கொண்டு வாழ்க்கையைச் செலுத்த செல்கிறது. பழைய பாளையங்கோட்டை, திருநெல்வேலி சார்ந்த விஷயங்கள். பாளையங்கோட்டை, திருநெல்வேலி, வேணுவனம், கொற்கை என்று பல விஷயங்களை அவன் சுற்றுலாவுக்காக திரிந்து மனதில் ஏற்றுக் கொண்டாலும் அவை அவனுடைய அனுபவங்களில் சில அடுக்குகளாக மாறிப் போகின்றன.

இந்த நாவலில் ஆரம்பத்தில் உள்ள பேச்சு நடை சட்டென உரைநடையாக மாறுவது கூட நல்ல விஷயம் தான். பேச்சு நடை ஒவ்வொரு வட்டாரத்திற்கும் தனித்தன்மையாக இருக்கிற போது அதை எல்லோரும் விரும்பிப் படிப்பார்கள் என்று சொல்ல முடியாது. ஆனால் உரைநடையான ஒரு பொதுமொழி என்பது எல்லோருக்கும் இயல்பாகி விடுகிறது. சுலபமாக வாசிக்கவும் ஏதுவாகி விடுகிறது. அப்படித்தான் பேச்சு நிலையில் ஒரு பகுதியாய் ஆரம்பிக்கின்ற நாவல் பின்னால் பொது மொழியாய் உரைநடைக்குள் வந்து விடுகிறது.

அந்த உரைநடையில் பல விஷயங்கள் கவனிக்கவும் கூர்மையான வாழ்க்கை அனுபவங்களைச் சொல்லவும் முடிகிறது. தப்பு செய்தவர்கள் தப்பவே முடியாது என்று சில கதாபாத்திரங்கள் வந்து போகிறார்கள். நாடகம் என்றால் இது மேடையில் பார்க்கிற விஷயமாக இல்லை. வாழ்க்கையில் பார்க்கிற பல விஷயங்களில் நாடகம் இருப்பது இந்த நாவலில் பல சம்பவங்களில் இனம் கண்டுகொள்ள முடிகிறது

 காவ்யா சண்முகசுந்தரம் அவர்களின் கிண்டலும் நக்கலும் அவரின் உரைநடையிலும் பேச்சிலும் பல சமயங்களில் தட்டுப்படும். அதைத்தான் தட்டுங்கள் திறக்கப்படும் என்று அறிய இயேசு வருவார் போன்ற விஷயங்களிலும் அஞ்சு குஞ்சு என்றாரே வள்ளுவர் என்ற சம்பவங்களிலும் சிறப்பாக வெளிப்படுகிறது. இது மாதிரி போகிற போக்கில் வாழ்க்கை சம்பவங்களை அடுக்குகின்ற போது இலக்கியம் பற்றிய ஆழமான புரிதலையும் தந்து விடுகிறார். இலக்கியம் இல்லாத அறிவியல் வீண் என்பது போல் அறிவியல் இல்லாத இலக்கியமும் வீண் என்பதை சொல்லிக் கொண்டு போகிறார்.

இந்த நாவலில் தமிழ்க் கல்வி படிக்கிற ஆறுமுகம் அவர்களின் கல்லூரி வாழ்க்கை மற்றும் சுற்றியுள்ளவருடைய அனுபவங்களால் நிரம்பி இருக்கிறது. இந்த அனுபவங்கள் மூலம் தமிழக வரலாறும், தமிழக அரசியல் கலை இலக்கிய சூழலும் பதிவாகி இருக்கிறது. ஒரு காலகட்டத்தின் சரித்திரப் பதிவாக பல விஷயங்கள் நாவல் துணையோடு வந்து விடுகின்றன

பொருநை பொதிகையில் பிறந்தது. அகத்தியரின் தமிழ் தண்ணீராய்ப் பாய்ந்தது. இதனை வால்மீகியாக இருக்கட்டும், வியாசராகட்டும், காளிதாசராக இருக்கட்டும், எல்லோரும் இதனைப் பாராட்டிப் பாடி இருக்கிறார்கள். தாமிரபரணி என்பது இன்னொரு பெயர் என்றொரு குறிப்பு வருகிறது. இந்தக் குறிப்புக்கான அம்சங்களை வாழ்வியல் அனுபவங்களோடு பல்வேறு இடப் பதிவுகள், மனிதர்கள் ஆர்வங்கள் மூலமாக இந்த நாவலில் திறப்பு இருக்கிறது. சுய சரிதை தன்மை கொண்ட இந்த நாவலில் சுந்தரபாண்டியன் அவர்களையும் காவ்யா சண்முகசுந்தரம் அவர்களையும் அவர்களோடு இருக்கிற நண்பர்களையும் அடையாளம் கண்டு கொள்ளலாம். இந்த அடையாளம் காணுதல் என்பதற்கு, மனிதர்களோடு இயைந்த வகையில் இந்த நாவலின் புனைவு உதவுகிறது என்பது முக்கியமானது.

பொருநை நாவல் | சுந்தரபாண்டியன்

விலை:ரூ.150 | வெளியீடு: காவ்யா பதிப்பகம்

- சுப்ரபாரதிமணியன்

Pin It