தொல்குடிச் சமூகத்தில் வேட்டையாடுதல் என்பது, அதன் அன்றாட வாழ்வியலின் அத்தியாவசியமாகவே இருந்து வந்துள்ளது. அன்று, அதுதான் அவர்களின் அடிப்படைத் தொழில். காலங்கள் மாறினாலும், காலத்திற்கேற்ப பல்வேறு நவீனத் தொழில்நுட்ப முறைகள் மாறி மாறி வந்தாலும், வேட்டையாடுதல் என்பது இன்று வரையிலும், ஏதோ ஒரு வகையில் நடைமுறையில் இருக்கத்தான் செய்கிறது. விலங்குகள் மற்றும் போலவே, மீன் பிடித்தலும்கூட ஒருவகையான வேட்டையாடுதலேயாகும்.

ஆதிகாலத்தில் உணவுத்தேவைக்காகத் தொடங்கிய வேட்டையாடுதல் நாளடைவில் வீரத்தைக் காட்டும் செயல்பாடாகவும் மாறி, பின்னாளில் பொருளாதாரத் தேவைக்காக நடக்கும் ஒரு செயல்பாடாகவும் அமைகிறது எனலாம். வேட்டையாடுதலினைத் தனி வேட்டையாடல், கூட்டாக வேட்டையாடல், குழுவாக வேட்டையாடல் என மூவகைப்படுத்தலாம். வேட்டையாடுதலில் மிக முக்கியமான மீன் வேட்டை என்பது, ஒரு இனக்குழுச் சமூகத்தை மட்டும் சார்ந்ததா? இல்லை எல்லா இனக்குழுச் சமூகத்துக்கும் பொதுவானதா? என்பதையும் பார்க்க வேண்டியுள்ளது.

தனியாக வேட்டையாடுதல்

பறவைகள், விலங்குகள் போன்றவற்றை மனிதன் உணவுத்தேவைக்காகத் தனியாக வேட்டையாடி வந்தான். வேட்டையாடலில் அவனின் ஆற்றல்கள் அற்புதமாக வெளிப்பட வெளிப்பட, நாளடைவில் அது அவனின் வீரத்தைக் காட்டும் செயல்பாடாகவும் மாறவே, தனியாக வேட்டையாடுதலில் மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபட்டான். வேட்டையாடும் வீரம் அவன் குலத்தில் அவனுக்கு மதிப்பையும், மரியாதையையும் தேடிக்கொடுத்தது. இதனால்தான் வேட்டையாடி உயிர்விட்ட மனிதனை தெய்வமாக வழிபடும் மரபு நாட்டார் மரபாக இருந்து வருகிறது; வேட்டையின்போது வீரமரணம் அடைந்தவரின் அடையாளமாக கல் நட்டு வழிபாடு செய்து வந்தனர். இவ்வழிபாடு நடுகல் வழிபாடாக இன்றும் தொடர்கிறது. இவற்றின் எச்சமாக நாட்டார் வழிபாட்டுச் சடங்குகளில் விலங்கு பலியும் நடைபெறுகின்றது.fishermen 445கூட்டாக வேட்டையாடுதல்

நண்பர்கள் அல்லது உறவினர்கள் என நான்கைந்து பேர் கூடி வேட்டையாடுதலை கூட்டாக வேட்டையாடுதல் எனலாம். அவர்கள் தங்களின் வேட்டைப் பொருளைத் தமக்குள் மட்டுமே பிரித்துக்கொள்வார்கள். வேட்டைப் பொருளை மட்டுமல்லாது, வேட்டைக்கருவிகளையும் கூட தமக்குள் பகிர்ந்து கொள்வார்கள். மேலும், கூட்டாக வேட்டையாடச் செல்லும்போது, அவர்கள் தமக்குள் ஒருவிதமான பரஸ்பரப் பாதுகாப்பு கிடைக்கின்றதாகவும் உணர்கிறார்கள். தனிநபர்கள் வேட்டையில் சேரும் போது கூட்டு வேட்டையாக மாறுகின்றது.

குழுவாக வேட்டையாடுதல்

குழுவாக வேட்டையாடுதலும் கூட்டாக வேட்டையாடுதல் தான் என்றாலும், இங்கே வரும் வேறுபாடு என்னவெனில், குழு வேட்டை என்பதில் பல்வேறு இனக்குழுக்கள் பங்கெடுக்கின்றன. அவர்கள் வேட்டையாடுதலை தங்களது இனக்குழுவுக்கான அடையாளமாகக் கருதுகின்றனர். சமூகமும் வேட்டையாடும் முறையைக் கொண்டு, இனக்குழுவினை அடையாளம் காண்கிறது. குழுவாகச் சென்று வேட்டையாடுபவர்கள் வேட்டைப் பொருளை தனது குழுவினருக்குப் பகிர்ந்தளித்தது போக, மீதமுள்ளவற்றை விற்று பொருளாதாரமாக மாற்றுகின்றனர்; மேலும், வேட்டைப் பொருளை எதிர்காலத் தேவைக்கு வேண்டியும் பாதுகாத்து வைக்கின்றனர். இந்த இனக்குழுக்கள் வேட்டையாடுதலின் வழி மட்டுமே மனநிறைவு அடைகின்றனர். இனக்குழுக்கள் தங்களது குலக்குறியீடாக உள்ள விலங்குகளை ஒருபோதும் வேட்டையாடமாட்டார்கள். குறிப்பிட்ட விலங்கினை வேட்டையாடுவதை தம் பெருமையாகக் கொள்வர். அதுவே தங்களது இனக்குழுவிற்கு வெற்றி எனக் கருதி வெற்றியைக் கொண்டாடுவார்கள். குழு வேட்டை என்பது குழுவின் ஒற்றுமையாகும்.

இனக்குழு வேட்டை இன்று சடங்குகளாக நடைபெறுகிறது. தினந்தோறும் வேட்டையாடிய மனிதன் காலப்போக்கில் உணவுமுறை மாறுதல், அரசியல் சட்டங்கள், ஆன்மீகத் தாக்கம், அசைவ உணவு விலக்குதல் போன்ற பல்வேறு காரணங்களால் வேட்டையாடச் செல்வதைக் குறைத்துக் கொண்டான். இருந்த போதிலும், தொன்மைத் தொடர்பினைக் கைவிடாமல் வருடத்தில் ஒரு நாளைத் தேர்ந்தெடுத்து, இனக்குழுவினர் அனைவரும் சேர்ந்து வேட்டையாடி வேட்டைப் பொருளைப் பகிர்ந்து கொள்கின்றனர். தங்களது குல தெய்வத்திற்குப் படையல் செய்கின்றனர். வேட்டையாடுதல் தொன்மத் தொடர்ச்சியாக உள்ளது. ஆனால் மீன் வேட்டை அன்றும் இன்றும் தொடர்ந்து நடைபெறுகின்றது. இதற்கு முக்கியமான காரணம் மீன் என்பது உலகில் பெரும்பான்மையான மக்களின் தவிர்க்கமுடியாத உணவுப் பொருளாக இருப்பதுதான்.

வேட்டையாடலும் ஒரு வீரமே!

ஆதி மனிதன் தனது உணவுத் தேவைக்காக மட்டுமே வேட்டையாடத் தொடங்கினான். சில விலங்குகளின் மீது அச்சம் தோன்றியது. அவ்விலங்குகளை வேட்டையாடுவதன் வழி தன்னுடைய அச்சம் நீங்கி விட்டதாகக் கருதினான். அச்சமூட்டுகின்ற விலங்குகளைக் கொல்லும் போது தனது உயிரினையும் இழக்க நேரிடும். எனவே தனது உயிரினைப் பெரிதாக எண்ணாமல் அந்த விலங்குடன் நேருக்கு நேர் நின்று போராடி விலங்கினைக் கொல்வது என்பது பெரும் வீரமாகக் கருதப்பட்டது. போர்ப் பயிற்சிக்காக கொடிய விலங்குகளையும், பறவைகளையும் மறைந்திருந்து தாக்கினர். அதிலும் குறிப்பாக வில் அம்புகளைக் கருவியாகப் பயன்படுத்தினர். கத்தி, வாள், கூர்மையான கல், இரும்புக் கருவிகள் ஆகியன வேட்டையாடுவதற்கான கருவிகளாக இருந்தன. தங்களுக்குத் தொல்லை தரும் மனிதர்களை மட்டுமல்லாது, விலங்குகளைக் கொல்வதும் வீரமாகக் கருதப்பட்டது.

போர்க் காலத்தில் வெற்றியை முன்னிறுத்தி மனிதர்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டு இறந்து போகின்றனர். இதுவும் ஒருவகை வேட்டைதான். புராணங்களில் வரும் தெய்வக் கதாபாத்திரங்கள் விலங்குக்கொலையை வீரமாகக் காட்டியது. ஆனால், அதே விலங்கினை உணவாக உட்கொள்ளும் மனிதனை விலக்கி வைத்து வேடிக்கை பார்க்கிறது. இது இந்துக்களின் தர்மமாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. 'கொன்னா பாவம் தின்னாபோச்சு' என்பார்கள். ஆனால் கொன்றால் பாவம் இல்லை, தின்றால் மட்டும் பாவம் என்று கூறுவது ஒரு அபத்தமாகத் தோன்றுகிறது. காலங்காலமாக விலங்கினை வேட்டையாடி உணவாக உட்கொண்ட மனிதன் பின்னாளில் தீட்டு என ஒதுக்கப்பட்டான். இந்தக் கோட்பாட்டிற்குப் பின்னால் வைதீகம் ஒளிந்திருக்கிறது. இந்துக் கற்பிதங்கள் தோன்றிய பின்னர்தான், தொல்குடி சமூகத்தினர் சிலர் விலங்கு உணவினை விலக்கினர். விலங்கு வேட்டையில் உயிர் வதை என்பது தர்மமாகும். ஆனால் விலங்கின் ஊணை உண்பது மட்டும் அதர்மமாம். இதெப்படி அதர்மம் என்பது வைதீகத்துக்கு மட்டுமே புரிந்த ரகசியம் என்றுதான் சொல்ல வேண்டும்.

மீன் வேட்டை

உணவு மற்றும் பொருளாதாரத் தேவையினை முன்வைத்து இன்றுவரையிலும் மீன் வேட்டை என்பது ஒரு தொடர்ச் செயல்பாடுதான். உலகில் உள்ள எல்லா நாடுகளிலும், மீன் என்பது மனிதனுக்கு மிக முக்கியமான உணவுப் பொருளாக தொன்மைக்காலம் தொட்டே இருந்துவருகிறது. மீன்பிடித் தொழிலில், மீன் என்பது வேட்டையாடுபவனுக்கு உரிய பொருளாக மட்டுமல்லாது, வேட்டையில் ஈடுபடும் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது. வேட்டையாடுபவர்களைத் தாண்டி, மீன் பொது வெளிக்கு வரும்போது, வேட்டைப் பொருள் வாழ்வியலுக்கான பொருளாதாரமாக மாறுகின்றது. 'முந்தைய காலங்களில் தற்போதைய கண்டுபிடிப்புகள் இல்லாதபோது மீன்களை கல்லால் அடித்தும், கூர்மை பொருந்திய கம்புகள், ஈட்டிகள் போன்றவற்றைப் பயன்படுத்தி மீன்களைப் பிடித்தனர். பிறகு கட்டுமரங்கள், வலைகள் எனத் தற்போது சிறிய, பெரிய படகுகள் வரை மீன்கூட்டம்(மாப்பு) பார்த்து பல்வேறு நிலைகளில் தொழில் புரிகின்றனர்.'(இர.திவ்யா,ப-33)

நாகப்பட்டினம்

நீண்ட கடற்கரையைக் கொண்டிருக்கிற தமிழ்நாட்டில், நாகப்பட்டின மாவட்ட மீனவர்களை இக்கட்டுரை தன் பாடுபொருளாகக் கொண்டுள்ளது. நாகப்பட்டினம் தொன்மையான வரலாற்றையும், பண்பாட்டையும் கொண்ட மாவட்டமாகத் திகழ்கிறது. இது நீண்ட வரலாற்றுச் சுவடுகளைக் கொண்டுள்ளது. நாகப்பட்டினம் என்ற பெயர் எப்படி வந்தது என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன. அவற்றை இளங்குமரனார் என்பவர் நாகப்பட்டினம் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். எனினும் மக்கள் வழக்காற்றில் வழங்கப்படும் வழக்காறு இவ்வாறு சொல்கிறது: சோழ மன்னன் நாகர் நாட்டை போரில் வென்று, அந்நாட்டு இளவரசி பீலிவலையைத் திருமணம் செய்துகொண்டார்; நாகர் நாட்டு இளவரசி பீலிவலை தனது குழந்தையுடன் கால் பதித்த இடம்தான் நாக நாடு என்றாகியது; நாளடைவில் நாகநாடு நாகப்பட்டினமாக மாறிற்று.

நாகப்பட்டினம் ஒரு துறைமுகமாகும். அதாவது, தேவநதி, ஓடம்போக்கி, கடுவையாறு என்ற மூன்று காவிரிக் கிளை ஆறுகள் கலக்குமிடம் நாகப்பட்டினம் துறைமுகமாகும். மேலும் காவிரியின் கிளை ஆறான வெள்ளையாறும், அரிந்திரா நதியும் வேளாங்கண்ணிக்கும், செருதூருக்கும் இடையில் கடலோடு கலக்கிறது.

நாகப்பட்டினம் மீனவர்கள்

தமிழ்நாட்டில் 600க்கும் மேற்பட்ட மீனவக் கிராமங்கள் உள்ளன. அவற்றில் 27 இனப்பிரிவுகள் உள்ளன. நாகப்பட்டினம் தொடங்கி சென்னை வரை பட்டினவர் என்ற இனக்குழுவினர் கடலுக்கு மிக அருகில் வாழ்கின்றனர். இவர்கள் ஆழ்கடல் மீன்பிடித்தலில் ஈடுபடுகின்றனர். இவர்களைப் போலவே பரவர் என்ற குழுவினரும் தென்மாவட்டங்களில் ஆழ்கடல் மீன் பிடித்தலில் ஈடுபடுகின்றனர். அவர்களின் பிரிவுகள் பட்டினவர், பரவர், பெரிய பட்டினவர், சின்னபட்டினவர், கரையாளர், மரைக்காயர், நுள்ளக் கரையாளர், அம்பளக்காரன், சோழியன், தெக்கத்தியான், அச்சாணி, சென்னப்பச் செட்டியார் என தொழில் மற்றும் திறமையின் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுள்ளனர். பட்டினவர் என்று அழைக்கப்படுபவர்கள் தங்களை மீனவச் செட்டியார் என்றும் பர்வத ராஜகுல பட்டினச் செட்டிமார் என்றும் அழைத்துக்கொள்கின்றனர். இவர்களுள் பரவரும், பட்டினவரும் ஒரே பிரிவினைச் சார்ந்தவர் என்று கூறுகின்றனர். பரவர் என்பவர் கடல் முழுதும் பரந்து விரிந்து தொழில் செய்பவர்கள் ஆவார்கள். மரக்கலத்தில் சென்று மீன் பிடித்த மரக்கலராயர் தான் மரைக்காயர் எனப்பட்டனர். கரையில் கயிறு இழுத்து வேலை செய்தவர்கள் கரையாளர் எனப்பட்டனர். கடற்கரையில் சரியாக வேலை செய்யாதவர்கள் நுள்ளர் என்றும் நுள்ளக் கரையாளர் என்றும் அழைக்கப்படுகின்றனர்.

நாகப்பட்டினக் கடற்கரைக் கிராமங்களை ஒட்டி வாழ்கின்றவர்கள் படையாச்சி என்ற இனக்குழுவினர். இவர்கள் குறித்து பழங்கதை ஒன்று வழங்கப்படுகிறது. சோழ மன்னர் தனது படைகளை அழைத்துக்கொண்டு, கடல்கடந்து போர் செய்வதற்காக நாகப்பட்டினம் கடற்கரை நோக்கிச் சென்றார். கடலைப் பார்த்துவிட்டு, அதன் தன்மையை அறிந்து பாதுகாப்பாக எவ்வாறு பயணம் செய்வதென்று தெரியாமல் நிற்கும் நேரத்தில், மன்னனைக் காண கடற்கரைக்கு பட்டினவர்கள் வந்தனர். அவர்கள் மன்னனிடம் கடலின் ஒவ்வொரு அசைவையும் நாங்கள் அறிவோம், எனவே உங்களுடன் போர் செய்ய நாங்கள் வருகிறோம் எனப் புறப்பட்டுச் சென்றனர். மன்னனும் மகிழ்வுடன் ஒத்துக்கொண்டார். தன்னுடன் வந்த படைகளை பட்டினவர்களின் குடும்பத்திற்குக் காவலாக விட்டுச் சென்றார். அந்தப் படை வீரர் குழுக்கள் தான் இன்றைக்குப் படையாச்சி என்று அழைக்கப்படும் குழுவினர்.

பட்டினவச் செட்டிமார்களின் தலைவர்களை மீனவ மக்கள் ‘நாட்டார்’ என்றழைக்கின்றனர். இவர்கள் நீதிமான்களாக இருப்பார்கள். பட்டினவ மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருபவராகவும், இந்த இனக்குழுவினரிடம் ஒற்றுமை மற்றும் ஒழுங்கமைவைக் கட்டிக்காப்பவராகவும் இருப்பார். இந்த நாட்டார்கள் தற்போது பஞ்சாயத்தார்கள் என்றழைக்கப்படுகின்றார்கள். நாட்டார் செட்டிமார்கள் சோழ மன்னனின் படைக்கு உதவி செய்தமையால், சோழ மன்னன் பதவி ஏற்கும் போது முடி எடுத்துக்கொடுப்பவர்கள் இவர்கள் தான் என்று மக்கள் கூறுகின்றனர்.

பிள்ளை என்று அழைக்கப்படுகின்ற குழுவினர் மீன்பிடித் தொழில் செய்பவர்களை கரையாரப்பிள்ளை என்றும் அழைக்கின்றனர். (கோடியக்கரைப் பகுதிகளில் உள்ளனர்.) மற்றொரு பிரிவினர் பள்ளியர்கள் என்று சொல்லக்கூடிய மீனவப் பிரிவினர். (இவர்கள் நாகை மாவட்டத்தில் ஆறுகாட்டுத்துறையில் உள்ளனர்)

இவர்கள் மூவரில் மரபுவழித் தொழில்நுட்ப முறையினைப் பயன்படுத்தி ஆழ்கடலில் சென்று தொழில் செய்பவர்கள் பட்டினவர் என்று சொல்லக் கூடிய மீனவச் செட்டியார்கள் மட்டுமே.

'நெய்தல் நில மக்கள் தாங்களே பல்லாண்டு கால அனுபவங்களின் வாயிலாக உருவாக்கிக் கொண்ட மரபு சார்ந்த நுட்பங்கள், அனுபவ அறிவு நுட்பங்கள் போன்ற திறன்களைக்கொண்டு நெய்தற் பரப்போடு இயைபு பெற்று வாழ்வதால் மீனவர்களைத் தனித்துவ வாழ்க்கைப் பண்புடையவர்களாகக் காணமுடிகிறது.' (இர.திவ்யா ப-28)

மீனவர்களை உள்நாட்டு மீனவர்கள் என்றும், கடலோடி மீனவர்கள் என்றும் வகைப்படுத்துகின்றனர். நன்னீரில் மீன்பிடிப்பவர்களை உள்நாட்டு மீனவர்கள் எனவும் உப்பு நீரில் மீன்பிடிக்கும் மீனவர்களை கடலோடி மீனவன் என்றும் அடையாளப்படுத்துகின்றனர். இவ்விரு மீனவர்களுக்குள்ளும் பல்வேறு ஒற்றுமை வேற்றுமைகளை அறியமுடியும். கடலோடிகள் மீன்பிடித் தொழிலை மட்டுமே செய்கின்றனர். வேறு எந்தத் தொழிலிலும் ஈடுபடுவதில்லை. முழுநேரமும் மீன்பிடித்தொழில் சார்ந்த வேலைகளை மட்டுமே செய்கின்றனர். கடல் தொழிலில் மீனவர்கள் அதிகளவில் இழப்புகளைச் சந்திக்கின்றனர். புயல், மழை, காற்றுபோன்ற இயற்கைச் சீற்றங்களினால் பேரிழப்புகளைச் சந்திக்கின்றனர். மேலும் கடல் எல்லைப் பிரச்சனைகள் காரணமாகவும் உயிரினை இழக்கின்றனர்.

கடற்கரையின் ஓரத்திலேயே தனது இருப்பிடத்தை அமைத்து வாழ்கின்றனர். இதற்கான காரணமாக அவர்கள் கூறுவது கடலின் தன்மைகள் அவ்வப்போது மாறும் தன்மை கொண்டது; அவ்வப்போது கடலில் ஏற்படும் மாற்றத்தை அறிந்து கொள்வதற்காகவே இங்கேயே வாழ்கிறோம் என்கிறார்கள். கடலோடி மீனவர்களில் பெரும்பான்மையோர் கடற்கரை மணலில்தான் படுத்து உறங்குவார்கள். கடலின் அலையையும் காற்றையும் வைத்தே மீன்பிடிக்க செல்வதா வேண்டாமா என்று முடிவெடுத்துவிடுவார்கள்.

உள்நாட்டு மீனவர்கள் விவசாயத் தொழிலிலும் ஈடுபடுகின்றனர். ஓய்வு நேரங்களிலும், வேலை­யில்லாத சமயத்திலும் மீன்பிடித் தொழிலினைச் செய்கின்றனர். அரசு அறிவிக்கும் உதவிகள் எதுவும் உள்நாட்டு மீனவர்களுக்குக் கிடைப்பதில்லை. எவ்விதமான இழப்புகளையும் சந்திப்பதில்லை. நினைத்த நேரத்தில் மீன் பிடிப்பார்கள். நாட்டு மீன்களைப் பிடிப்பதற்கு பல்வேறு உத்திகளைக் கையாளுகின்றனர்.

கடலில் மீன்பிடிப்பதற்கு பல்வேறு தொழில்நுட்ப முறையினையும், அனுபவ அறிவினையும் பயன்படுத்துகின்றனர். இத்தகைய அனுபவ அறி­வினை, இயற்கை குறித்த கணிப்பினை அடுத்தடுத்த தலைமுறையினருக்கும் கடத்துகின்றனர். அறிவியல் தொழில்நுட்பம் வளர்சியடைந்தாலும் இக்கட்டான சூழலில் மரபறிவே அவர்களுக்கு கை கொடுக்கின்றது. உள்நாட்டு மீனவர்களுக்கு இவ்வாறான சிக்கல்கள் அதிகம் இல்லை எனலாம்.

மீன்பிடித் தொழிலில் ஈடுபடுபவர்கள் அனைவரையும் மீனவர்கள் என்று அழைக்கலாம். எனினும் ஆழ்கடலில் சென்று மீன்பிடிக்கும் தொழி­லினை அறிந்த, கடல்குறித்து அனுபவ அறிவினைப் பெற்ற, கடற்கரையிலேயே வாழும் துணிவான மக்களை நாம் காலங்காலமாக மீனவர்கள் என்று அடையாளப் படுத்துகிறோம் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றும் வேட்டையாடுதல் தொடர்கிறது.

- கனிமொழி செல்லத்துரை, நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர்

Pin It