‘சாகரா’ என்னும் சொல் நெய்தல் நிலத்தைச் சார்ந்த மீனவர்களின் மீன்திருவிழாவாகும். கடலும் கடல் சார்ந்த கேரளக் கடற்கரைப் பகுதியில் மட்டுமே இவ்விழா கொண்டாடப்படுகிறது. இதனை ’மீன்கொய்த்து’ என்று கேரளக் கடலோர மீனவர்கள் குறிப்பிடுகின்றனர். இக்கட்டுரை, சாகரா என்றால் என்ன? இது எவ்வாறு உருவாக்கப்படுகிறது? மலையாள இலக்கியங்கள் சாகராவை எவ்வாறு பதிவாக்குகின்றன? மலையாள இலக்கியங்களில் இது எவ்வாறு பதிவாகியுள்ளது? இன்று கேரளக் கடற்கரைப் பகுதியில் சாகரா நிகழாததற்கான காரணங்கள் யாவை? ஆகியவற்றை எடுத்துரைப்பதாக அமைகிறது.

கடலின் கரையில் உருவாகும் சாகரா:-

ஓணத்தைக் கேரளமக்கள் தங்களின் தேசிய விழாவாகக் கொண்டாடுவதைப் போலவே சாகராவை, கடற்கரையின் ஓணமாகக் கேரள மீனவர்கள் கொண்டாடி வருகின்றனர். ‘சாகரா’ என்பதற்கு மலையாளப் பேரகராதி காற்று, நீரோட்டம், அலைகள், சேறு என்று பொருள் கூறுகிறது. இப்பொருள்களை உடைய சாகரா என்னும் சொல் மீன்கொய்த்தை எவ்வாறு குறித்தது? என்பதைப் பார்ப்போம். இப்பூமி அகன்று விரிந்தது. இதன் பெரும்பாலான பகுதி கடல் நீரால் சூழப்பட்டுள்ளது. உலகத்திலுள்ள எந்த கடற்கரைப் பகுதிகளிலும் காணப்படாமல் கேரளத்திலுள்ள சில குறிப்பிட்ட கடற்கரைப் பகுதிகளில் மட்டுமே காணப்படக்கூடிய ஒரு அற்புதமான நிகழ்வே ‘சாகரா.’ பருவ மழைக்காலத்தில் நீர்ப்பெருக்கு அதிகமாகும்போது மழை நீரானது நாட்டிலுள்ள அனைத்து கழிவுப்பொருட்களையும், ஆறுகளின் அடிமட்டங்களில் படிந்துள்ள வண்டல் மண்ணையும் இழுத்துக்கொண்டு கடலில் கலக்கின்றது. அவ்வாறு மழைநீரால் கடலில் சேர்க்கப்பட்ட வண்டல் மண், ஆலப்புழை முதல் சேர்த்தலை வரையிலுள்ள கேரளக் கடற்கரைப் பகுதியில் களிமண் திட்டுக்களாகப் படிகிறது. அவ்வாறு படிந்திருக்கும் நேரங்களில் அப்பகுதியில் நமது கால்களை வைத்தால் புதைந்து போகும் அளவிற்கு அம்மண் மென்மையானதாகக் காணப்படும். இப்பகுதியிலுள்ள வண்டல் மண் ஒரே இடத்தில் தேங்குகிறது. அவ்வாறு கடலில் படிந்த வண்டல் மண்ணைக் கடல் வெளியே தள்ளி விடுகிறது. அவ்வண்டல் மண் இரண்டு வாரங்கள் முதல் மூன்று மாதங்கள் வரை, ஒரே இடத்தில் தங்குகிறது. பின்னர் அக்களிமண் திட்டு மறைந்துவிடும்.chakaraஇவ்வாறு மணல் படிந்த இடத்தில், கடல் அமைதியாக இருக்கும். இப்பகுதிக்கு அதிக எண்ணிக்கையிலான மீன்கள் கூட்டம்கூட்டமாகக் கடலின் பல்வேறு பகுதியில் இருந்து வந்து சேருகின்றன. இக்களிமண் திட்டுகளில் உள்ள ஜைவ வளங்கள் (இயற்கை வளங்கள்), கனிமங்கள் மீன்களின் உணவாகவும் புகலிடமாகவும் மாறுகின்றன. அவ்வாறு வந்து சேரும் மீன்களைப்பிடிக்க கேரளத்தின் பல பகுதியில் இருந்து வரும் மீனவர்கள் எராளமான மீன்களைப் பிடித்துச்செல்கின்றனர். அவ்வாறு எராளமான மீன்கள் கிடைப்பதால்தான் இதனைக் ’கடற்கரையின் ஓணம்’ என்றும் ’மீன்கொய்த்து’ என்றும் கேரளக் கடல்வாழ் மக்கள் கூறுகின்றனர்.

சுற்றிலும் உள்ள கடல் பகுதிகள் கொந்தளித்து அலைகள் வானளவு உயர்ந்தாலும் சாகரா அல்லது வண்டல் மண்திட்டு இருக்கும் பகுதி அமைதியாகவும் ஆபத்து இல்லாமலும் இருக்கும். அதனால் மீனவர்கள் பயமின்றி மீன்பிடிப்பர். பயமில்லாலும் மீன்பிடிக்கச் செல்கின்றனர். பலவகையான மீன்கள் இப்பகுதியில் பிடிபடுவதால் இதனைச் ’சாகரா’ என்றும் அழைக்கின்றனர். இது ஒரு விசித்திரமான கடல் நிகழ்வு. இந்த அரிய நிகழ்வு இந்தியாவின் மாநிலமான கேரளாவின் சில கடலோரப் பகுதியில் மட்டுமே நிகழ்கிறது. உள்ளூர் மீனவர்கள் இதனை ஒரு வரப்பிரசாதமாகக் கருதுகின்றனர். குறிப்பாக ஆலப்புழை முதல் சேர்த்தலை வரையிலான கடற்கரைப் பகுதியில் மட்டுமே இது காணப்படுகிறது. கொல்லம் பகுதியில் ஒரே ஒருமுறை மட்டுமே இச்சாகரா நிகழ்ந்ததாக அப்பகுதிவாழ் மீனவமக்கள் கூறுகின்றனர்.

சாகராவும் கேரள கடற்கரை மீனவர்களும்:-

கேரள கடற்கரை மீனவர்கள் சாகராவுக்குத் தரும் விளக்கத்தை இப்பகுதியில் காண்போம். ’சாகரா’ என்பது எப்போதாவது தோன்றும் ஒரு நிகழ்வாகும். ஆழ்கடலில் உள்ள மீன்கள் கூட்டமாகச் சஞ்சரித்து கடலின் கரைப்பகுதியில் வந்து சேரும். அவ்வாறு வந்த மீன்களை மீனவர்கள் ஏராளமாகப் பிடிப்பதால் இதனைச் ’சாகரக்கொய்த்து’ என்று அழைப்பர். மீனவர்கள் ’சாகரா’ என்பதனைக் ’கொய்த்து’ என்று அழைக்கின்றனர். செம்மீன் (இறால்) அதிகமாகக் கிடைத்தால் அதனை செம்மீன் கொய்த்து என்றும் சாளை மீன் அதிகமாகக் கிடைத்தால் அதனைச் சாளக்கொய்த்து என்றும் அழைக்கின்றனர். திருவனந்தபுரம் கடற்கரை மீனவர்களும் சாகரா என்பதைக் கொய்த்து என்ற பொருள் நிலையிலேயே பயன்படுத்துகின்றனர்.

இனப்பெருக்கக் காலத்தில் அதாவது ஜூன் முதல் ஆகஸ்ட் வரையுள்ள காலங்களில் மீன்கள் முட்டையிடுவதற்கு ஆழ்கடலில் இருந்தும் நடுக்கடலில் இருந்தும் அலையடிக்கும் கடலின் பகுதிக்கு வருகின்றன. இதனைப் ஃபளவர்லா என்று சொல்லுவர். ஜூன் முதல் ஆகஸ்ட் வரையுள்ள மாதங்களை மீன்களின் இனப்பெருக்கக் காலமாகக் கொள்கின்றனர். இவ்வினப்பெருக்கக் காலத்திற்கும் சாகராவுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. மீன்கள் எப்போதும் குளிர்ச்சியான பகுதிகளில்தான் முட்டையிட்டு இனப்பெருக்கத்தை நடத்துகின்றன. இவ்வினப்பெருக்கத்தைக் காயல் கடலோடு கலக்கும் பொழிமுகங்களில் அதிகமாகக் காணலாம். காயலில் இருந்து கடலில் கலக்கும் வண்டல்மண் குளிர்ச்சியுடையதாகக் காணப்படுவதால் மீன்கள் தங்கள் இனப்பெருக்கத்திற்கு இப்பகுதியைத் தேர்ந்தெடுப்பதாக மீனவர்கள் கூறுகின்றனர்.

இவ்வினப்பெருக்கக் காலத்தில் இயந்திரக் கப்பல்கள் கடலில் செல்வதற்கு அனுமதிப்பதில்லை. காரணம் இயந்திரக்கப்பல்களில் செல்லும் மீனவர்கள் கப்பலின் அடிப்பகுதியிலிருந்து மீன்களைப் பிடிக்கின்றனர். இயந்திரக்கப்பல்கள் வழியாக வீசப்படும் வலைகள் இரண்டிலிருந்து நான்கு கிலோ மீட்டர் வரை நீண்டு காணப்படுகின்றன. நீளமான வலைகளை விரித்து மீன்களைப் பிடிப்பதால் மீன் முட்டைகள் அழிந்து போவதற்குக் காரணமாக அந்த வலைகள் அமைகின்றன. எனவே மீன்களின் இனப்பெருக்கக் காலங்களில் இயந்திரக்கப்பல்களைக் கடலில் செல்லவும் மீன்களைப் பிடிக்கவும் அனுமதிப்பதில்லை.

சாகராவும் மலையாள இலக்கியங்களும்:-

மலையாளத்திலுள்ள நெய்தல்திணை நாவல்கள் இச்சாகராவைப் பற்றிக் கூறுகின்றன. செம்மீன்தான் மலையாளத்தின் முதல் நெய்தல் நாவலாகும். இதன் ஆசிரியர் தகழி சிவசங்கரப்பிள்ளை ஆவார். ஒரு மீனவனின் வாழ்நாள் ஆசையே அவனுக்கென்று சொந்தமான ஒரு படகும் ஒரு வலையும் என்னும் கருத்தை மையமிட்டு இப்புதினம் அமைகிறது. மரக்காத்திகள் (மீனவப்பெண்கள்) கற்பு நெறியில் தவறினால் கடல் சீற்றத்திற்கு ஆளாகுவார்கள் என்னும் கருத்தையும் இந்நாவல் அழுத்திச் சொல்கிறது கருத்தம்மா, கொச்சுமுதலாளி, பழனி போன்ற கதாபாத்திரங்களைக் கொண்டு இக்கதை நகர்கிறது.

இப்புதினத்தில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றும் மீன் கிடைக்காமையால் வறுமையில் வாடுகின்றனர். அவ்வாறு கடன்பட்டு வருந்திய அக்கடற்கரை மக்கள் ”இந்த சாகரா முடிஞ்சதும் பணத்தைத் திருப்பிக் கொடுக்கிறோம்” (செம்மீன். ப.73) என்றும் மீன்கறியோடு சோறு உண்பதற்கும் சாகராவை எதிர் நோக்கி இருப்பதை செம்மீன் நாவல் படம் பிடித்துக் காட்டுகிறது.

மேலும் அப்பகுதி மக்கள், “சாகரா வரட்டும் மல்துணியும் மேல் துண்டும் வாங்கிப்புடலாம்” என்றும் “சகல ஆசைகளும் சகல கனவுகளும் நிறைவேறப் போகிற காலம் அது” என்றும் கூறி சாகராவை எதிர் நோக்கி இருப்பதைச் செம்மீன் நாவல் காட்டுகிறது. ( 2013: 102)

மேலும் இந்நிகழ்வு செம்மீன் என்ற மலையாளத் திரைப்படத்திலும் காட்டப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் வரும் "புத்தன் வலக்கரே புன்னப்பறகாரே " என்ற பாடல் சாகராவைப் பற்றிக் கூறுகிறது. இப்பாடல், புறக்காட்டு கடப்புறத்து சாகரா, என்றும் கடற்கரைப்பகுதியில் திருவிழா என்றும், கடலின் மீது போட்டிகள், கடற்கரையின் ஓணம் என்றும் கடலுக்குப் பூத்திருநாள் என்றும் சாகராவை விவரிக்கிறது.

மரக்காப்பிலே தெய்யங்கள் என்ற புதினம் ’செம்மீன் சாகரா இக்கடற்கரையில் நடந்தது போன்று வேறு எங்கும் காணப்படவில்லை ( ம. கா. தெ ப.128) சாகராவை மீன்வேட்டை மீன்கொய்த்து என்ற நிலையில் எடுத்துரைக்கிறது.

மலையாள நெய்தல் திணை புதினங்கள் மட்டுமே இச்சாகராவை எடுத்துரைக்கிறது. தமிழகத்தில் தோன்றிய நெய்தல் திணைப் புதினங்களில் இச்சாகராவைப் பற்றிய குறிப்புகள் காணப்படவில்லை. இதிலிருந்து கேரளத்தில் அதுவும் குறிப்பாக ஆலப்புழை கடற்கரைப்பகுதியில் மட்டுமே இச்சாகரா காணப்பட்டதையும் மீனவர்கள் இதனைத் திருவிழாவாகக் கொண்டாடியதையும் அறிந்துகொள்ளமுடியும்.

மேலும் தமிழ் மலையாள நெய்தல் திணையைப் பற்றி ஆய்வு செய்த பிரபாகரன் ‘‘ ‘சாகரா’ என்றால் மீன்பிடித் திருவிழா என்று பொருள். மீன்கள் அதிகமாகக் கிடைக்கும் காலங்களில் கேரளக் கடற்கரைப் பகுதியில் இவ்விழா நடத்தப்படும். இவ்விழாவிற்கு அனைத்துப் பகுதியைச் சார்ந்த மீனவர்களும் வந்து தங்களது படகுகளை இறக்கி மீன்பிடித்துச் செல்வர். அதிகப்படியான மீன்கள் காணப்படும். ஆகையால் இத்திருவிழாவை மீனவர்களின் அறுவடைத் திருவிழா எனலாம். கட்டுப்பாடுகளின்றி வெளியூர் மீனவர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வர். காசர்கோடு, கொல்லம், ஆலப்புழா போன்ற மாவட்டங்களில் கடலோர கிராமங்களில் இவ்விழா வருடம் தோறும் நடத்தப்பட்டு வருகிறது.

தற்காலத்தில் மீன்வளம் குறைந்து வருவதால் ஒரு சில இடங்களில் மட்டுமே இந்நிகழ்ச்சியைக் காணமுடிகிறது. கேரள மீனவர்களின் பரம்பரைக் கலையாகச் "சாகரா" எனும் திருவிழாவைக் காண்கின்றனர். அயல மீன்பெயித், செம்மீன் பெய்த், சாள மீன் பெயித் என்று திருவனந்தபுரம் கடற்கரை பகுதியைச் சார்ந்த மீனவர்கள் அழைத்து வருகின்றனர். கேரளத்தின் வடபகுதியில் இந்நிகழ்வு மீன் கொய்த் என்னும் பெயரில் அறியப்படுகிறது என்று கூறுகிறார்.(2022:196)

தற்காலத்தில் சாகரா:-

மூன்று மாதங்கள் வரை நீண்டு நின்ற சாகரா தற்பொழுது மூன்று நாட்கள் மட்டுமே காணப்பட்டது. இதற்குக் காரணம், Institute of Oceanography நடத்திய ஆய்வில் தெரியவந்தது. ஆலப்புழா கடற்கரை மணலில், புவி வெப்பமடைவதைத் தடுக்கும் பாக்டீரியா உள்ளிட்ட பல உயிரியல் கனிமங்கள் மறைந்திருப்பதை கடல்சார் ஆய்வு நிறுவனத்தின் விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். சாகராவால் ஏற்படும் ஃப்ராஜிலேரியா, நோக்டிலூகா மற்றும் காசினோடிஸ்கஸ் பைட்டோபிளாங்க்டனை போன்றவற்றை மீன்கள் உண்பதாகவும் கண்டறிந்தனர்.

அதிக ஃபிராஜிலேரியா உருவாகும் நேரத்தில், சாகரா அதிகமாகக் காணப்படும். சாளை, கானாங்கெளுத்தி, இறால் மற்றும் காடா போன்ற மீன்கள் இந்நேரத்தில் அதிகமாகச் சேகரிக்கப்படுகின்றன. சாகரா நேரத்தில் வண்டல்மண் அடியும் பகுதிகள் பழுப்பு-பச்சை நிறத்தில் காணப்படும். நீர் கீழே இருந்து மேல்நோக்கி தள்ளப்படுவதால், மீன்கள் ஆக்ஸிஜனைப் பெற மேற்பரப்புக்கு வருவதாகவும் கண்டறிந்தனர். ஆனால் இன்று இத்தகைய ஜைவ வளங்கள் இயற்கையாகக் கிடைக்கப்பெறாததாலும் நீர்களிலும் நிலங்களிலும் பிளாஸ்டிக் கழிவுகள் ஏராளமாகக் காணக்கிடைப்பதாலும் கடல்நீரில் கலக்கும் அமிலக் கழிவுநீராலும் கடல் நீர் மாசுபடுகிறது. எனவேதான் சாகரா போன்ற இயற்கை நிகழ்வுகள் தற்போது கேரளக் கடற்கரையில் நிகழவில்லை என்று ஆய்வுகள் உறுதி செய்கின்றன. மேலும் கடந்த மூன்று வருடங்களாகக் கேரளக் கடற்கரைப் பகுதியில் மிகக் குறைவான நாட்களே சாகரா தோன்றுகிறது. கேரளத்தில் நடந்த வெள்ளப்பெருக்கு காரணமாகக் கடல் நீர் அதிகமாக மாசுபட்டதாலும் சாகரா அதிகமாக நடைபெறவில்லை எனலாம்.

முடிவுரை:-

சாகரா கேரளக் கடற்கரையில் ஆலப்புழைப் பகுதியில் நடைபெறும் ஒரு அற்புதமான நிகழ்வு. இது கேரளக் கடற்கரைப் பகுதிக்குரிய தனிச்சிறப்பாகும். சாகாராவை மீனவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்ததையும் மீனவர்களின் வறுமை சாகரா தோன்றும் காலத்தில் நீங்கினதையும் மலையாள இலக்கியங்களும் திரைப்படங்களும் எடுத்துரைக்கின்றன. இன்று சாகரா என்னும் நிகழ்வு மிகக் குறைந்த நாட்களே நடைபெறுகிறது. கடல் மாசுபாடே இதற்குக் காரணமாக அமைகிறது. மீன்வளம் பெருகக் கடல் மாசுபடுதலையும் இயற்கை மாசுபடுதலையும் தடுக்க வேண்டியது அவசியமாகும்.

பயன்பட்ட நூல்கள்:-

1.            அம்பிகாசுதன் மாங்ஙாடு - மரக்காப்பிலே தெய்யங்கள், டி.சி புக்ஸ், கோட்டயம், 2010

2.            செம்மீன் திரைப்படப் பாடல் https://m3db.com/lyric/puthan-valakkare

3.            தகழி சிவசங்கரப்பிள்ளை ஆசிரியர் (சுந்தர இராமசாமி மொ.பெ) செம்மீன், சாகித்திய அகாதெமி, இரவீந்திர பவன், புது தில்லி, 2013

4.            தோமஸ் கே.வி - எந்தாணு சாகரா? ஆய்வுக்கட்டுரை https://luca.co.in/chakara/

5.            பிரபாகரன் கி. தமிழ் மலையாள நெய்தல் திணை நாவல்கள் ஓர் ஒப்பீட்டாய்வு, அச்சிடப்படாத கேரளப் பல்கலைக்கழக முனைவர் பட்ட ஆய்வேடு 2022

6.            மலையாள லெக்சிகன் பதிப்புத்துறை, கேரளப் பலகலைக்கழகம், திருவனந்தபுரம்,2012.

- முனைவர் ஹெப்ஸி ரோஸ் மேரி.அ, உதவிப் பேராசிரியர், கேரள பல்கலைக்கழகம், காரிய வட்டம், திருவனந்தபுரம்

Pin It