fisherman britjo

இந்தியா சுதந்திரம் அடைந்தபோது சமஸ்தானங்கள் அனைத்தும் ஒன்றாக இணைக்கப்படுகிறது. ராமநாதபுரம் சமஸ்தானம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டபோது, கச்சத்தீவும் தமிழகத்தின் ஒரு பகுதியாக இணைக்கப்படுகிறது. ராமநாதபுர சேதுபதி கச்சத்தீவை குத்தகைக்கு விட்டு வந்தார் என்றும் சொல்லப்படுகிறது. இது தொடர்பான ஆவணங்களை மத்திய அரசிடம் கருணாநிதிதான் ஒப்படைத்தார் என்றும் கூறப்படுகிறது.

அணைத்து ஆவணங்களும் வைத்துக்கொண்டு, கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதியே இல்லை. இரு நாட்டுக்கும் இடையே உள்ள ஒரு பொதுவான பகுதி யாருக்கு சொந்தம் என்று தெரியாத "டிஸ்பியூட்டட் லேண்ட்" (Disputed territory - சர்ச்சைக்குரிய பகுதிகள்) என்று அறிவிக்கிறது மத்திய அரசு.

தேசத்தின் பாதுகாப்பு குறித்து அச்சம் நிலவியபோது, அமெரிக்க ஆதிக்க சக்திகள் இலங்கையில் ஒரு பெரிய இராணுவ மற்றும் விமான படைத்தளத்தை உருவாக்க முயற்சி எடுத்தார்கள். அதை தடுப்பதற்கான சில சமாதான பேச்சுவார்த்தைகளை எடுக்க மத்திய அரசு தள்ளப்பட்டது. அதற்காக இலங்கையுடன் செய்து கொண்ட ஒப்பந்தம்தான் கச்சத்தீவை விட்டுக்கொடுப்பது. மேலும் மீனவர்களுக்கு உரிமைகள் அளிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது என்கிறார்கள் காங்கிரஸ் கட்சிக்காரர்கள்.

தமிழக காங்கிரசின் தலைவர் மற்றும் பொதுச் செயலாளராக இருந்த பழ.நெடுமாறன்(1970 -1979) "கச்சத்தீவு தாரை வார்ப்பு" குறித்து எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

1983ல் எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது, அப்போதைய ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் இந்திய வரைப்படத்தில் இருந்து கச்சத்தீவை நீக்கி உத்தரவு பிறப்பிக்கிறார். இந்த உத்தரவுக்குப் பின்னர் தான் கச்சத்தீவு இந்திய வரைப்படத்தில் இருந்து நீக்கப்படுகிறது. அதுவரை இந்திய அரசு வெளியிடும் வரைப்படங்களில் கச்சத்தீவு இருந்துள்ளது. இந்த உத்தரவு பிறப்பிக்கும்போது தமிழகத்தின் முதல்வராக இருந்தவர் எம்ஜிஆர், நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் ஜெயலலிதா என்பது கவனிக்கத்தக்கது.

"கச்சத்தீவை மத்திய அரசு தாரை வார்த்தது தனக்குத் தெரியவே தெரியாது. பத்திரிக்கை வாயிலாகத்தான் நான் அதை தெரிந்து கொண்டேன்" என்றார் கருணாநிதி. டெசோ மாநாட்டில் பேசிய கருணாநிதி, "கச்சத்தீவு விசயத்தில் "சரத்தில்" சில திருத்தங்களை செய்து பரிந்துரைத்தேன். அதை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது" என்றார். இது முரண்பாடுகளின் மூட்டை.

"இந்திய ஜனசங்கத்தின் முன்னாள் தலைவர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் கச்சத்தீவை மீட்பது குறித்து வழக்கு தொடுக்கப்படும் என்று கூறியிருக்கிறாரே" என்று செய்தியாளர்கள் கேட்ட போது "இது குறித்து நான் கருத்து சொல்ல விரும்பவில்லை" என்கிறார் கருணாநிதி. வீராணம் ஊழலை மறைக்க கச்சத்தீவை கருணாநிதி காவு கொடுத்தார் என்ற குற்றச்சாட்டும் உண்டு.

கச்சத்தீவை மீட்க உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா தொடர்ந்த வழக்கில் திமுக தன்னை இணைத்துக்கொள்ள வேண்டும் என கேட்காதது நகை முரண்.

1974 ஆம் ஆண்டு நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் "கச்சத்தீவு வேண்டும்" என்கிற தீர்மானம் போடும்போது அதிமுக வெளிநடப்பு செய்கிறது. முதலமைச்சராக இருந்தபோது மாநில அரசின் அதிகாரத்திக்கு உட்பட்டு என்னால் என்ன செய்ய முடியுமோ நான் அதைச் செய்கிறேன் என்றார் ஜெயலலிதா.

கச்சத்தீவில் இலங்கை நாட்டுக்கு உள்ள இறையாண்மையை ஏற்றுக் கொள்ளலாம் என்று பிரதமாக இருந்த வாஜ்பாய்க்கு கடிதம் எழுதியவர் ஜெயலலிதா. மேலும் கச்சத்தீவை பிரித்துக் கொடுத்தது இரு நாடுகளுக்கும் இடையே நல்லுறவை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் என்று பிரதமராக இருந்த நரசிம்மராவுக்கு கடிதம் எழுதியவர் ஜெயலலிதா என்பது நினைவு கூறத்தக்கது.

ஆட்சியில் இருக்கும் போது, ஊழல் செய்கிறீர்களே எனக் கேட்டால் 'தேனை எடுத்தவன் புறங்கையை நக்குவான்' என விளக்கம் தருவதும், நீங்கள் மக்களிடம் தேர்தல் அறிக்கையில் சொல்லி இருப்பதை செய்யவில்லையே எனக் கேட்டால் 'வெறும் கரண்டி இருந்தால் எப்படி வேண்டுமானாலும் ஆட்டி ஆட்டி பேசலாம், ஆனால் கரண்டியில் பருப்பு இருந்தால் பார்த்துதான் நடக்க வேண்டும்' என்று மாற்றி மாற்றிப் பேசி மக்களை குழப்பினார்கள்.

நொண்டி குதிரைக்கு சறுக்கியதுதான் சாக்கு என்பது போல திராவிடக் கட்சிகள் சமாளித்துக் கொண்டு ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

மீனவ நண்பன் பிரிட்ஜோ இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொலை என்கிறார்கள். இலங்கை அரசு மறுப்பு தெரிவித்து விட்டு விசாரணை நடத்தப்படும் என்கிறது.

'பொறுக்கிகளுக்கு' காண்டாமிருகத் தோலும், கழுதை மூளையும் தான் உள்ளது, தமிழக பொறுக்கிகள் கட்டுமரத்துடன் சென்று இலங்கையிடம் சண்டையிட வேண்டும் என்று தமிழர்களை சீண்டுகிறார் பிஜேபி-யின் சு.சாமி.

எல்லையில் பாகிஸ்தான் இராணுவம் எச்சில் துப்பினாலே "போர் போர்" என்று முழங்கும் மத்திய அரசு, மரணித்து பல மாதங்களாகி விட்டன என்று மக்களே பேசிக்கொள்கிறார்கள்.

​"அரசியலின் முலம் நாம் வேண்டுவது சில்லறைப் பதவிகளையல்ல, சிங்கார வாழ்வையல்ல. நமது இனத்தின் விடுதலையை நாம் விரும்புகிறோம். அதற்கே அரசியலை நாம் துணை கொள்கிறாம். அதன் பொருட்டே அரசியலில் பணியாற்றுகிறோம்" என்கிறார் பேரறிஞர் அண்ணா. திராவிடக் கட்சிகள் இனியாவது அண்ணா சொன்னவற்றைப் பின்பற்றுமா?

- தங்க.சத்தியமூர்த்தி

Pin It