‘காமிக்ஸ்’ என்றால் தமிழில் சித்திரக்கதை அல்லது படக்கதை என்று சொல்லப்படுகிறது. ‘காமிக்ஸ்’ என்றால் வேடிக்கை என்பதுதான் பொருள். வேடிக்கை உருவங்கள், நகைச்சுவைத் துணுக்குகளுக்கு முக்கியத்துவம் இருந்ததால் ‘காமிக்ஸ்’ என்று பெயர் வந்திருக்கலாம்.
சித்திரம் வழியாகக் கதையை வாசிப்பதால் சித்திரக் கதையாகிறது.
தமிழில் சித்திரக்கதை தோன்றிய போது அது சிறுவர்களுக்கானது, பொழுது போக்கிற்காக வாசிக்கப்படும் ஒன்று என்றே கருதப்பட்டது. அதற்குக் காரணம் சித்திரக் கதையால் சிறுவர்கள் அதிகம் ஈர்க்கப்பட்டார்கள் என்பதுதான்.
சித்திரக் கதை என்பது காட்சி மூலமாக ஒன்றை வாசித்தலாக இருந்தது. இது ஒரு புதுவகையான வாசிப்பு முறை. இந்தப் புதுமை சிறுவர்களைக் கவர்ந்தது. அதுமட்டுமல்லாமல், படிப்போரைக் கதை நிகழும் களத்திற்கே அழைத்துச் சென்று பரவசப்படுத்தியது.
சித்திரக் கதைகள் சிறுவர்களுக்குப் பிடித்த மானவையாக இருப்பதற்கு காட்சிகள் மட்டும் காரணமல்ல, குறைந்த அளவிலான சொற்கள் கொண்ட கதாபாத்திரங்களின் உரையாடலும் காரணமே. ஒரு நாடகத் தன்மையான உரையாடல், காட்சி களோடு உரையாடல்களும் இணைந்த ஓர் இயக்கத் தன்மையே சித்திரக் கதைகளின் அடிப்படை. சித்திரக் கதையில் மொழி பாதி, ஓவியம் பாதி. அதனால் விறுவிறுப்பான படிக்கும் தன்மையை ஏற்படுத்தியது.
சித்திரக் கதை என்றால் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது ‘தினந்தந்தி’யின் கன்னித் தீவு. கன்னித் தீவைத் தாண்டி பலருக்கு சித்திரக் கதையைப் பற்றித் தெரியாது.
‘கன்னித் தீவு’ படக் கதைத் தொடர் தலை முறை தலைமுறையாகத் தொடர்கிறது. நாலு கட்டங்களில் நாலு படங்கள், இரண்டு வார்த் தைகள் என்று போடப்படுகிறது. உதாரணமாக, ‘உள்ளே குதித்தான்... அங்கே... நீயா?!...’ தொடரும் போட்டு விடுவார்கள். சித்திரக் கதைகளில் உள்ள எளிமை சிறுவர்களைப் படிக்க வைத்தது. மேலும் சித்திரக்கதை ஒரு கதாநாயகப் பாத்திரத்தின் மீது வடிவமைக்கப்பட்டதால் மனதைக் கவர்ந்தது. சிந்துபாத், வீரப் பிரதாபன், இரும்புக் கை மாயாவி, ஜேம்ஸ்பாண்ட், ஸ்பைடர்மேன், மாண்ரேக், பலே பாலு, சுப்பாண்டி என்ற பாத்திர உருவாக்கம் சித்திரக் கதைகளின் சிறப்பாகும்.
‘காமிக்ஸ்’ என்ற சித்திரக் கதை வெளிநாட்டி லிருந்து தமிழுக்கு வந்ததாகும். தமிழில் சித்திரக் கதைக்கு 70 வயதுக்கும் மேல் ஆகிவிட்டது. குழந்தை இலக்கியத்தில் ‘காமிக்ஸ்’சின் பங்கு புறக்கணிக்கப்பட முடியாத ஒன்றாகும்.
1948-ல் தமிழில் முதல் சித்திரக் கதை சிறுவர் இதழான டமாரத்தில் வந்தது. அதைத் தொடர்ந்து ஓவியர் சந்தனு நடத்திய ‘சித்திரக் குள்ளன்’ என்ற சிறுவர் இதழில் ‘வேதாள உலகம்’, ‘காட்டுச் சிறுவன் கண்ணன்’ போன்ற சித்திரக் கதைகள் வந்து குழந்தைகளைக் கவர்ந்தன. அக்காலத்தில் வந்த எல்லா சிறுவர் இதழ்களிலும் (கண்ணன், அணில் மாமா, கோகுலம், ரத்ன பாலா, பூந்தளிர், பாலமித்ரா, பாப்பா மலர், பார்வதி) சித்திரக் கதைகள் இடம்பெற்றன. அதிலும் பார்வதி இதழில் வெளிவந்த சித்திரக் கதைகள் சிறுவர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றன. ஓநாய்க் கோட்டை, கனவா? நிஜமா? டயல் 100, அவள் எங்கே? கண்ணாடி மாளிகை, வீர விஜயன் போன்ற சித்திரக் கதை களை உருவாக்கிய வாண்டு மாமாவே அதற்குக் காரணம். அவருக்கு ‘கௌசிகன்’ என்ற பெயரும் உண்டு. ஓவியரும் கூட.
சித்திரக் கதைகளை சிறப்பாக எழுதியவர் களில் குறிப்பிடத்தக்கவர் முல்லை தங்கராசன். கண்மணி காமிக்ஸ், முத்து காமிக்ஸ் ஆகியவற்றை ஆரம்பித்து மேலைநாட்டு காமிக்ஸின் தமிழ் பதிப்பு போல் நடத்தினார்.
தமிழில் சித்திரக் கதைகள் (Comics)1950-80 காலகட்டத்தில் வெற்றிக் கொடி நாட்டியிருந்தன. சிறுவர் இதழ்கள், வெகுஜன வார, மாத, தனி இதழ்கள், புத்தகங்கள் என்று சித்திரக் கதை வியாபகம் பெற்றிருந்தது; வியாபாரமும் பெற்றிருந்தது.
1960-களில் வெளிவந்த டமாரம், மிட்டாய், கண்ணன் போன்ற குழந்தைகள் பத்திரிகைகளை விட அணில் அதிக வரவேற்பைக் குழந்தைகளிடம் பெற்றதற்குக் காரணம் அதில் இடம்பெற்ற சித்திரக் கதைகளே. அணிலின் ஆசிரியர் புவிவேந்தன் இதை சாதித்தார். பிரபல ஓவியர் உபால்டு சித்திரங்களை வரைந்தார். வீர, தீர, மாய ஜாலக் கதைகளுக்குப் புகழ் பெற்ற அம்புலி மாமாவுடன் அணில் போட்டி யிட்டது.
அணிலில் வந்த சித்திரக் கதைகளின் சாகச கதாநாயகர்கள் தமிழ், இந்திய மரபைப் பிரதிபலித் தார்கள். ஆங்கிலத்தில் ஜேம்ஸ் பாண்ட்டைப் போல் தமிழில் சாகச மன்னன் வீரப் பிரதாபனை அணில் அண்ணா புவிவேந்தன் உருவாக்கினார். வீரப் பிரதாபனை கதாநாயகனாகக் கொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட கதைகள் அணிலில் வந்தன. அந்தக் காலத்தில் சிறுவர் இதழான அணில் 50,000 பிரதிகள் விற்றன.
சித்திரக் கதையின் வெற்றி கல்கி, குமுதம், விகடன், ராணி போன்ற வெகுஜன வார, மாத இதழ்களையும் தாவிப் பிடித்தது. ஆனால் இவ் விதழ்களில் வெளிவந்தவை சிறுவர்களுக்கான சித்திரக் கதைகளல்ல. ‘அப்புசாமியும் சீதாப் பாட்டியும்’ போல் சிரிப்புக் கதைகளும் காதல் கதைகளும் குடும்பக் கதைகளும் சித்திரக் கதைகளாக வந்தன.
கல்கி சிறுவர்களுக்கென ‘கோகுலம்’ இதழை நடத்தியது. அதில் 16 பக்க அளவிற்கு புராண, இதிகாசக் கதைகளை சித்திரக் கதைகளாக வெளி யிட்டது.
ராணி ‘காமிக்ஸ்’க்கென்று இதழை வெளியிட்டது. ஆங்கில துப்பறியும் கதைகளின் சாயலில் சித்திரக் கதைகளை வெளியிட்டது.
தினப் பத்திரிகைகளும் தங்களது இணைப்பான சிறுவர் மலர், தங்க மலர், சிறுவர் மணி, தினபூமி இதழ்களில் சித்திரக் கதைகளை வெளியிட்டு வருகின்றன.
விகடன் பத்திரிகை சிறுவர் இதழாக சுட்டி விகடனை நடத்துகிறது. அதில் குறிப்பிடத்தக்க சித்திரக் கதைகளை வெளியிட்டுள்ளது. ஓவியர் முத்துவின் கை வண்ணத்தில் ‘எலி ப்ரெண்ட்ஸ்’ சித்திரக் கதை சிறுவர்களைக் கவர்ந்தது. உண்மை + உழைப்பு = உயர்வு என்ற சுதா சேஷய்யன் எழுதிய கதைக்கு மணியம் செல்வன் ஓவியம் வரைந்துள்ளார். ‘கனவு நாயகன்’ என்று அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு சித்திரக் கதையாக வந்தது. ‘ஐடியா அகிலன்’ என்ற அறிவியல் படக் கதை வித்தியாசமானது.
இவ்வாறு சித்திரக் கதை சிறுவர்களுக்கான நீதிக் கதைகளாகவும் வீர தீரப் பண்புகளை வளர்க்கும் கதைகளாகவும் இருந்த நிலை மாறியது. பெரும் பதிப்பகங்கள் கையில் அதன் உள்ளடக்கம் கொலை, வன்முறை, மர்மம், பழிக்குப் பழி என மாறியது. காமிக்ஸ்க்குக் கட்டுப்பாடு இல்லாமல் போனது. அதனால் அவற்றை சிறுவர்கள் படிப்பது தீமை தரும் என்ற கருத்து ஏற்பட்டது. ‘காமிக்ஸ்’-இல் பயன்படுத்தப்பட்ட ஒலிக் குறிப்பு சொற்கள் (‘டமார், டுமீல், டுமீல், சதக்... சதக்... தொபுக்!...) வன்முறையாக மாறிப் போன கதைக்கு அடையாள மாக இருந்தன. மர்மக் கல்லறை, மரணக் குகை, காட்டேரிக் கானகம், தேடி வந்த தூக்குக் கயிறு, ரத்தப் பலி, சித்ரவதை, கொலை மாடி கோமாளி என்று ‘காமிக்ஸ்’-இன் தலைப்புகளும் சிறுவர்கள் படிக்க தடை போட்டன. ஆனால் தடையையும் மீறி சிறுவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்களுக்குத் தெரியாமல் ஒளித்துவைத்து படித்தனர். ‘காமிக்ஸ்’-இன் கவர்ச்சி அப்படி!
லயன் காமிக்ஸ், முத்து காமிக்ஸ், பைகோ காமிக்ஸ், இந்திர ஜால் காமிக்ஸ் போன்றவை அந்நிய பண்பாட்டுத் திணிப்பு; திகில், மர்ம, சாகசக் கதைகள் வெளியிட்டன. துப்பாக்கிக் கலாச்சாரத்தை வளர்த்தன. இப்போக்கை ஆதரிப்பது போல் ‘கல்கண்டு’ இதழில் எழுத்தாளர் தமிழ்வாணன் ‘மர்ம மனிதன்’ எனும் தன் தொடர் கதைக்கு முன் அறிவிப்பாக ‘இப்பொழுது நமக்கு வேண்டியது நீதிகள் அல்ல. துப்பாக்கியைக் கண்டு தூர ஓடக் கூடாது. அதைத் தொட்டுப் பார்க்கும் வீர உணர்ச்சி வேண்டும்’ என்று கூறி துப்பாக்கிக் கதைகளின் அவசியத்தை வலியுறுத்தினார்.
இதைக் கண்டு பெற்றோர் கலங்கினர். பெரியோர் திகைத்தனர். குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா தமிழ்வாணனின் கருத்தை எதிர்த்து கட்டுரை எழுதினார். ‘குழந்தைகளுக்கு முக்கியமானவை நீதிக் கதைகளே: துப்பாக்கிக் கதைகள் அல்ல’ என்றார்.
இதற்கு மறுதலையாக ராமகிருஷ்ண மடம் ‘கதைமலர்’ வரிசை புராண, இதிகாச, ஆன்மீக கதைகளை வெளியிட்டன.
மிகப் பெரிய நிறுவனமான ‘அமர் சித்ரகதா’ 400 தலைப்புகளுக்கும் மேலாக இந்திய புராண, இதிகாசக் கதைகளை சித்திரக் கதை களாக வண்ணத்தில் வெளியிட்டுள்ளன. ஜாதகக் கதைகள், தெனாலி ராமன், பீர்பால் கதைகள் மற்றும் தேசத் தலைவர்களின் வாழ்க்கைக் கதை களையும் சித்திரக் கதைகளாக ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழி மாற்றம் செய்து வெளியிட்டு உள்ளன.
“இந்து மதத்திலுள்ள பெருந்தெய்வ வழி பாட்டை முன்னிறுத்தும் வகையில் அச்சிடப்படும் கதைகளை வெளியிடும் இந்நிறுவனங்கள், தமிழில் உள்ள நாட்டுப்புறக் கதைகளைக் கண்டு கொள் வதில்லை” என்று புதுவைப் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் பா.இரவிக்குமார் குறிப்பிடுவது கவனிக்கத்தக்கது.
30 வருடங்களுக்கு முன் தமிழ் காமிக்ஸ் நூல்களுக்கு இருந்த முக்கியத்துவம் இப்போது இல்லை. இன்று தமிழ் ‘காமிக்ஸ்’ காற்றோடு கலந்து விட்டதோ என்று நினைக்கத் தோன்றுகிறது. ஏனென்றால் நூலகங்களில் தேடினாலும் தமிழ் ‘காமிக்ஸ்’ நூல்கள் இல்லை, பதிப்பகங்களும் மறந்து விட்டன.
ஏன், தமிழ்க் குழந்தைகளுக்கு ‘காமிக்ஸ்’ நூல்கள் வாசிக்கப் பிடிக்கவில்லையா?
சமூகத்தில் ‘காமிக்ஸ்’க்கு எதிரான மனநிலை இன்னமும் இருக்கிறது என்பது உண்மை. ‘காமிக்ஸ்’-ஐ தொடர்ந்து படிக்கிறவர்கள் வளராதவர்கள் என்ற கருத்து இருக்கிறது. ஆனால் இது ஏற்புடைய கருத்தல்ல. ‘காமிக்ஸ்’-ஐ வளர்த் தெடுத்திருந்தால் அதைப் படிப்பவர்கள் எப்படி வளராமல் போவார்கள்?
ஆங்கிலத்தில் ‘காமிக்ஸ்’ கல்வி, ஆய்வு, விளையாட்டு, விண்வெளி என்று பல்துறைகளில் வளர்கிறது. ‘கிராபிக்’ நாவல் (Graphic Noval) வளர்ச்சி கண்டுள்ளது. தமிழில் ‘கிராபிக்’ நாவல் ஒன்றிரண்டு மட்டுமே வந்துள்ளன. அவற்றில் ஒன்று மர்ஜென் சட்ராமியின் ‘ஈரான் - குழந்தைப் பருவம்’ ஈரானுக்குத் திரும்புதல் ஆகியவை. இவையும் போதிய கவனிப்புப் பெறவில்லை. சமீபத்தில் கல்கியின் பொன்னியின் செல்வன் ‘கிராபிக் நாவல்’ வடிவில் வந்துள்ளது.
தமிழில் ‘காமிக்ஸ்’ நூல்கள் குறையக் காரண மென்ன என்பதை ஆராய வேண்டும், காமிக்ஸ், கிராபிக்ஸ் நாவல் பெரும்பாலும் ஓவியரின் தளம். இத்துறையில் ஓவியராகவும் எழுத்தாளராகவும் இருப்பவர்களே கொண்டாடப்படுகிறார்கள்’ என்கிறார் ஓவியர் ‘ட்ராட்ஸ்கி’ மருது. ஓவியராக இல்லாத எழுத்தாளர்களுக்கு ‘காமிக்ஸ்’ மீது அக்கறை இல்லை. ஆனால் குழந்தைகள் கொண் டாடும் கலை, இலக்கிய வடிவமாக காமிக்ஸ் இருக்கிறது.
மிகவும் உழைப்பை வேண்டுகிற வடிவம் ‘காமிக்ஸ்’. அதற்குத் தமிழ்ப் பதிப்பகங்கள் தயாராக இல்லை. தரமில்லாத வெளியீட்டை குழந்தைகள் விரும்ப மாட்டார்கள். லாபமில்லாத வெளியீட்டைப் பதிப்பகங்கள் விரும்ப மாட்டார்கள்.
குழந்தைகளை வசீகரிக்கும் ‘காமிக்ஸ்’-ஐத் தமிழில் வளர்த்தெடுக்க என்ன செய்ய வேண்டும்?
‘காமிக்ஸ்’ ஓவியர் தளம் என்பதால் ஓவியர்களை மேன்மைப்படுத்துவோம்.
‘காமிக்ஸ்’-ஐஅந்நிய பண்பாட்டுத் திணிப்பு, வன்முறை, மதச் சார்பு ஆகியவற்றிலிருந்து விடு வித்து நமது மண்ணின் அடையாளங்களுடன் வளர்த்தெடுப்போம்!