இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், சவூதி அரேபியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 150 பள்ளிகளில் பணியாற்றும் 1300க்கும் மேற்பட்ட கணித ஆசிரியர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 80 சதவீத ஆசிரியர்கள் பதில் கூறமுடியாமல் தடுமாறியதாக ஓர் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்றாட வாழ்க்கையில் உண்டாகும் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டறியும் திறனை வளர்த்துக்கொள்ள உதவும் தர்க்கரீதியான பகுப்பாய்வு, இயற்கணிதம் உள்ளிட்ட பாடங்களிலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டதாக, கல்விக்கான முன்னெடுப்புகள் (இஐ) எனும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் தெரிவித்துள்ளது. மனப்பாடக் கல்வி முறையிலிருந்து புதிய சிந்தனைகளைத் தூண்டும் கல்வி முறையை மாற்றியமைத்தால் இந்தநிலை மாற வாய்ப்புள்ளதென்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது. இக்கருத்து வரவேற்கக்கூடியதே.

பீகாரிலுள்ள பல்வேறு அரசுப் பள்ளிகளில் மூன்றரை லட்சம் ஆசிரியர்கள் பல ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். 2023ஆம் ஆண்டில் பீகார் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் நடத்தும் ஆசிரியர் சேர்ப்புத் தேர்வெழுதி அரசு ஆசிரியராகத் தேர்வாகலாம் என அரசு அறிவித்திருந்தது. இம்முடிவை எதிர்த்து ஒப்பந்த ஆசிரியர்கள் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டனர். "நாட்டைக் கட்டமைக்க ஆசிரியர்கள் உதவி புரிகின்றனர். அப்படியிருக்கையில் உங்களால் இந்தத் திறன்தேர்வைக்கூட எதிர்கொள்ளமுடியாது என்றால் நீங்கள் ராஜினாமா செய்துவிட்டுப் போகலாம்" என்று நீதிபதி பி.வி.நாகரத்னா ‘குட்டு‘ வைத்து வழக்கை தள்ளுபடி செய்துள்ளார்.

ஜார்கண்ட் மாநிலம் ஹசாரிபாக்கில் உள்ள ஒயாசிஸ் பள்ளி முதல்வரான எக்சானுல் ஹக் என்பவர் நீட் தேர்வுக்கான நகர ஒருங்கிணைப்பாளராகவும் துணை முதல்வர் இம்தியாஸ் ஆலம் என்பவர் தேசியத் தேர்வு முகமையின் பார்வையாளராகவும் செயல்பட்டு வந்தனர். வினாத்தாள்கள் இருந்த டிஜிட்டல் பெட்டியை உடைத்து அவற்றை கசியவிட்டதாக இவ்விருவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டு தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். கடமை மறந்து சுயநல வெறிகொண்ட இந்த ‘ஆசிரிய‘ப் பதர்கள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டியர்கள்.

தர்மபுரியில் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அரசுப் பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். தாயின் பராமரிப்பில் இருந்த அச்சிறுமிக்கு அவர் அவ்வப்போது கல்வி மற்றும் குடும்பச் செலவுக்கு உதவி செய்து வந்திருந்த நிலையில் தற்போது அத்துமீறியிருக்கிறார்.

ஆசிரியப் பணி அறப்பணி, எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும் என்பவற்றையெல்லாம் வழிதவறிப் பிறழும் ஆசிரியர்களுக்கு எப்படி, யார் உணர்த்துவது?

- உங்கள் நூலகம் ஆசிரியர் குழு