கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன் அவர்களுடனான ஒர் உரையாடல்

பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன் அவர்கள் தமிழ்ச் சமூக வரலாற்றுப் புரிதல்சார் எழுத்துகளைப் பதிவு செய்த ஆய்வாளர்களில் குறிப்பிடத்தக்கவர். குறிப்பாக தமிழ்ச் சமூக நாட்டார் வழக்காறுகளைக் கொண்டு தமிழ்ச் சமூக வரலாறுகளைக் கட்டமைத்ததில் மிகவும் குறிப்பிடத்தக்கவர் ஆவார். பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியம் அவர்களின் எழுத்துகளை நூல்வழியாக மட்டுமே முழுமையாக அனுபவித்த நிலையைக் கடந்து நேரில் சென்று சில வினாக்களை முன்வைத்து அவருடைய ஆய்வுகளையும் ஆய்வு முறையியல் தேர்ந்தெடுப்பின் நுட்பங்களையும் அறிய வேண்டும் என்பது என் நீண்டநாள் விருப்பமாக இருந்தது. 20.05.2024 அன்று நான் மட்டும் சென்று சென்னையில் அவரது மகன் வீட்டில் அவரைச் சந்தித்தது. 24.05,2024 அன்று என் பேராசிரியர் முனைவர் இரா. சீனிவாசன் அவர்களோடு சென்று சந்தித்தது. இந்தச் சந்திப்புகளின் சூழல்களில் கிடைக்கப்பெற்ற புரிதல்களையும், அவருடைய எழுத்துகளால் பெற்ற புரிதல்களையும் இணைந்த பதிவாக இப்பதிவு அமைகிறது.

ஆ.சிவம் அவர்கள் சென்ற ஏப்ரல் தொடக்கத்தில் தன்னுடைய எண்பத்தியோராம் அகவையை நிறைவு செய்து எண்பத்தி இரண்டாம் அகவையைத் தொடங்கியிருக்கும் நிலையில் மிக மகிழ்ச்சியான உணர்வோடு அவரின் வீட்டிற்குச் சென்றேன்.

பேராசிரியரின் வாசிப்புப் பழக்கம்

பேராசிரியர் ஆ. சிவம் அவர்களுடனான வழக்கமான உரையாடலின் முடிவில் வினா எழுப்பிக் கொண்டு உரையாடும் நிலையாகத் தொடர்ந்தது. இந்நிலையில் பேராசிரியரின் வாசிப்பு சூழல் குறித்த தொடக்க நிலையைக் கேட்டபோது மிக அரிதான தகவல்களைக் கூறத் தொடங்கினார்.

a sivasubramanian 338அவருடைய குழந்தைப் பருவம் என்பது மற்ற குழந்தைகளின் பருவ காலங்களைப் போல் ஓடியாடி விளையாடும் குழந்தைகளின் பழக்கத்திலிருந்து வேறுபட்டதாக இருந்திருக்கிறது. குழந்தைப் பருவத்தில் இதயம் சார்ந்த நோய் ஏற்பட்டதால் வேகமாக நடக்கக்கூடாது, ஓடக்கூடாது என்று மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள். அதனால் பள்ளிப் பருவத்தின் ஓய்வுக்காலம் என்பது ஆனந்தவிகடன், கல்கி உள்ளிட்ட இதழ்களை வாசிக்கக்கூடியதாகவும், தங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கும் சுற்றி வாழ்பவர்களுக்கும் இதழ்களை வாசித்துக்காட்டும் சூழலும் வாசிப்புப் பழக்கம் தொடர்ச்சியாக நடைபெறுவதற்குக் காரணமாக அமைந்துள்ளது. அடுத்தகட்ட நிலையில் சிறுகதை, நாவல் வாசிக்கும் நிலையாகவும் உருவாகியிருக்கிறது.

அவரின் பள்ளிக் காலத்தில் தான் பயின்ற உயர்நிலைப்பள்ளியில் தொடர்ச்சியாக வாசிக்கும் பழக்கம் உருவான நிலையை மிகுந்த சுவையான அனுபவமாக பகிர்ந்துகொண்டார். பள்ளி நூலகராக இருந்த தி.க.சரவணமுத்து என்பவரின் பங்களிப்பில் இவரின் வாசிப்புப் பழக்கத்தை அதிகரிக்கச் செய்திருக்கிறது. மாணவப் பருவத்தில் வாசிப்பில் காட்டிய ஆர்வமும், நூலக சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஒழுக்கமுடைய மாணவனாக இருந்ததால் நூலகருக்குப் பிடித்த மாணவர்களுள் ஒருவராக விளங்கியிருக்கிறார். மேலும், இவரோடு சில மாணவர்களும் வாசிப்புப் பழக்கத்தில் இணைந்திருக்கிறார்கள். இந்நிலையில் நூலகர் இந்தக் குழுவை நூலகத்தில் உள்ள இதழ்களைப் பாதுகாப்பதற்கான பாதுகாவலர்களாகப் பயன்படுத்தியிருக்கிறார். அதாவது இதழ்களில் உள்ள படங்களை மற்றவர்கள் கிழிக்காமல் பார்த்துக்கொள்வதுடன் பென்சில், பேனாவால் கிறுக்காமல் பார்த்துக்கொள்வது இக்குழுவின் பணியாக இருந்தது. இக்குழு மாணவர்களுக்கான நாள் அட்டவணையிட்டு மாணவர்களின் இந்தப்பணிக்கு ஊக்கமளிக்கும் வகையில் நூலகத்திலிருந்து நூல்களை எடுத்துச் செல்ல சலுகை காட்டியிருக்கிறார். இந்தப் பயனைப் பெற்றவர்களில் இவரும் ஒருவர். இவ்வாறான வாசிப்புப் பழக்கம் என்பது பல்வேறு நூல்களைப் பாடப் புத்தகங்களைக் கடந்து வாசிப்பதற்கான வழக்கத்தை உருவாக்கியிருக்கிறது.

நூல் நிலையங்களின் நூல்களில் மட்டுமல்லாமல் இவரின் தந்தையின் வாசிப்பும் இவரின் வாசிப்பை விசாலப்படுத்தியிருக்கிறது. பள்ளிப்படிப்பைக் கடந்த இவரின் தந்தை, சாமிநாத சர்மா, ஏ.கே. செட்டியார், டால்ஸ்டாய் எனப் பலருடைய நூல்களை வாசித்துள்ளதின் தாக்கம் இவர் நூல் வாசிப்பில் உச்சம் தொடுவதற்குக் காரணம் என்று குறிப்பிட்டார்.

ஆளுமைகளுடனான தொடர்பு உருவாதல்

இவர் மேற்கொண்ட தொடர்ச்சியான வாசிப்பைப் போலவே பல ஆளுமைகளுடனான நட்பு பதினேழு வயதிலேயே உருவானது. தன்னுடைய இளமைக் காலத்தில் அறிமுகமான ஆளுமைகள் குறித்து பகிர்ந்துகொள்ளும்போது, சிந்துபூந்துறையிலிருந்து பள்ளிக்குச் செல்லும் வழியில் இருந்த நெல்லை புத்தக நிலையத்தின் உரிமையாளரான அண்ணாச்சி சண்முகம் பிள்ளை அவர்களுடனான பழக்கம், அந்தப் புத்தகக் கடையில் சம்பளம் இல்லாத ஒரு பணியாளாக இவரை மாற்றியிருக்கிறது. அந்தப் புத்தகக் கடையில்தான் சாமிநாதசர்மா இயற்றிய கார்ல் மார்க்ஸ் வரலாறை வாங்கிப் படித்திருக்கிறார். அந்தப் புத்தகக் கடைக்கு வரும் கம்யூனிசத் தோழர்களின் உரையாடல்களைக் கேட்டிருக்கிறார். சண்முகம் பிள்ளை அவர்களுடனான தொடர்பால் வாசிப்பும் பல ஆளுமைகளுடான தொடர்பும் மார்க்சியம் சார்ந்த அறிவும் தோற்றம் பெற்றிருக்கின்றது. மேலும் ஏ.ஜி. பெருமாள் என்பவரின் தொடர்பும் இவரின் ஆளுமை வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இவர்தான் ஜோசப் நீதம், ஜே.டி. பெர்னால், ராகுல் சாங்கிருத்யாயன், கோசாம்பி ஆகியோரைப் பற்றியும் அவர்களுடைய எழுத்துகளைக் குறித்தும் உரையாடல் வடிவில் உணர்த்தியிருக்கிறார்.

மார்க்சியம் சார்ந்த நூல்களின் வாசிப்பு, மார்க்சிய அறிஞர்கள் சார்ந்து உருவான நட்பு ஆகியவற்றால் நெல்லை கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்திற்கு செல்லக்கூடிய பழக்கம் இவருக்கு ஏற்பட்டிருக்கிறது. அந்தக் கட்சி அலுவலகத்தின் மூலமாக அறிமுகமானவர்தான் தோழர் நல்லகண்ணு.

இவரின் அறிமுகத்தைப் பற்றிக் கூறும்போது, “நெல்லை கட்சி அலுவலகத்தில்தான் தோழர் நல்லகண்ணுவைச் சந்தித்தேன். முழுக்க கிராமத்து மனிதராகவே அவர் எப்போதும் எனக்குக் காட்சியளிப்பார். அவர் கட்சி அலுவலகத்தில் உட்கார்ந்துகொண்டு ஆங்கிலப் பேப்பர் படிப்பது பொருத்தமில்லாமல் இருப்பதாக எனக்கு அந்தக் காலத்தில் படும். புத்தகங்களுக்கு வெளியில் கிராமப்புறங்கள், கோயில்கள், கிராமியக் கதைகள், பாடல்கள், சாதிய முரண்பாடுகள் ஆகியவற்றையெல்லாம் பற்றிய உணர்வை எனக்கு ஏற்படுத்தியவர் இவர்தான். எந்தப் புத்தகத்திலும் கிடைக்காத அபூர்வமான வரலாற்றுத் தகவல்களைக் கிராமத்து வாழ்க்கையிலிருந்து அவர் எடுத்துச் சொல்லிவிடுவார். அவரைச் சந்தித்ததும் அவரோடு பழகியதும் என் பார்வையில் திருப்புமுனைகளை ஏற்படுத்தின. தலித்துகள், சாதியக் கொடுமைகளின் உக்கிரம், நிலச்சுவான்தார்களின் அக்கிரமங்கள் பற்றிய உணர்வை என்னில் ஏற்படுத்தியவரும் அவர்தான்.” (தமிழ்ச் சூழல்களில் ஆய்வும் அரசியலும்,2014, பக்.22-23) என்று குறிப்பிடுகிறார்.

இதன்மூலம் ஆய்வுக் களங்களின் திறப்புகள் நல்லகண்ணு அவர்களின் தொடர்பின் மூலமாக பெற்றிருக்கிறார். இதைப்போன்று பேராசிரியர் அருணாச்சல கவுண்டர், தொ.மு.சி.ரகுநாதன், தோழர்கள் ப.மாணிக்கம், பாலதண்டாயுதம், ஜீவா முதலானவர்களின தொடர்பும் மிக குறிப்பிடத்தக்க நிகழ்வுகளாகும். ப. மாணிக்கம் அவர்கள்தான் கட்சிப் பணிகளில் ஆர்வம் கொண்டிருந்த இவரை கட்சிப் பணிக்கு பலர் இருக்கிறார்கள், எழுத்துப் பணிக்குத்தான் ஆள் வேண்டும். அதை நீ செய் என்று மடைமாற்றம் செய்து ஆய்வு நிலையிலான எழுத்துப்பணியில் செல்வதற்கு காரணமாகியிருக்கிறார்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்ற காலத்தில் பேராசிரியர்கள் உளுந்தூர்பேட்டை சண்முகம், உலக ஊழியர், அ.நடேச முதலியார், மெய்யப்பன், மு.அண்ணாமலை, ஆறு அழகப்பன், சோம. இளவரசு எனப் பல பேராசிரியர்களுடன் வீடுவரை சென்று உரையாடும் அளவிலான நெருக்கமான உறவு இருந்திருக்கிறது. இவற்றோடு, ஒருசாலை மாணாக்கராக இருந்த பேராசிரியர் நாச்சிமுத்து, முனைவர் மே.து.ராசுகுமார் உள்ளிட்ட பல்வேறு ஆளுமைகளின் தொடர்பும் இவரைப் படிப்படியாக ஆய்வுப் பணி நோக்கி நகர்த்தியிருக்கிறது என்பதையும் உணர்ந்துகொள்ள முடிந்தது.

பேராசிரியர் நா.வானமாமலையுடனான அறிமுகம்

இவரது ஆய்வுக் களங்கள் விரிவடைந்தமைக்கு ஆய்வு முறையியல் தேர்வுக்கும் பேராசிரியர் நா. வானமாமலை அவர்களுடனான சந்திப்பும், அவர் உருவாக்கிய நெல்லை ஆய்வுக்குழுவும் நடத்திய ஆராய்ச்சி இதழும், இவற்றோடு இணைந்திருந்த ஆய்வுவட்டத் தோழர்களும் மிகக் குறிப்பிடத்தக்கக் காரணம் என்பதை நூல்களின் மூலமாகப் படித்து அறிந்திருந்தாலும் ஆ.சிவம் அவர்களுடனான உரையாடலில் ஒரு மகிழ்ச்சியான உணர்வோடு அவர் கூறினார்.

நா.வானமாமலையுடனான சந்திப்பு குறித்தும் அவர் பதிவு செய்தார். இச்சந்திப்பு குறித்து பேராசிரியர் முத்துமோகன் மேற்கண்ட நேர்காணல் நூலில் குறிப்பிடும்போது, “தோழர் ப. மாணிக்கம்தான் ‘வானமாமலையிடம் போங்கள்’ என்று அனுப்பிவைத்தார். நேரடி அரசியலில் நான் ஈடுபடுவதை அவர் விரும்பாததே இதற்குக் காரணம் என்பதை வெகுநாட்கள் கழித்து அறிந்துகொண்டேன். பாளையங்கோட்டை முருகன் குறிச்சியில் டயோசிசன் அச்சகத்திற்கு அருகில் உள்ள சத்திரம் தெருவில், பாளையங்கோட்டை வாய்க்காலுக்கு அருகில் உள்ள வீட்டில் பேராசிரியர் நா.வா. அப்போது குடியிருந்தார். ‘தோழர் மாணிக்கம் அனுப்பினார், வந்தேன்' என்று அறிமுகப்படுத்திக் கொண்டேன். அப்போதுதான் என்னைப்பற்றி தோழர் ப. மாணிக்கம் அவரிடம் கூறியுள்ளார் என்பது தெரிய வந்தது. முதல் அறிமுகத்திலேயே ‘ஏன் உடம்பை ஒடுக்கிக் கொண்டு நிற்கிறாய்? உட்காரு’ என்றார். கொஞ்ச நேரம் அவரோடு பேசிவிட்டுப் புறப்படும்போது இரண்டு புத்தகங்கள் படிக்கத் தந்தார். பிறகு அடிக்கடி அவரைத் தேடிச் செல்வேன். சில வேளைகளில் அவருக்கு மாலை நேர நடைபயணத் தோழனாகிவிடுவேன்." (தமிழ்ச் சூழல்களில் ஆய்வும் அரசியலும் - பேராசிரியர் ந. முத்துமோகன்) என்று கூறுவதிலிருந்தும் பேராசிரியர் நா.வா அவர்களுடன் ஆ.சிவம் அவர்களுக்கு ஏற்பட்ட சந்திப்பை விளங்கிக்கொள்ளலாம். இந்தச் சந்திப்பு இவருக்குக் கிடைத்த தமிழியல் ஆய்வுக்கான கைவிளக்கு என்றே கருதலாம்.

ஆராய்ச்சி இதழும் ஆய்வாளராக உருவான சூழலும்

ஆ. சிவம் அவர்கள் தொடர்ச்சியான வாசிப்புப் பழக்கம் கொண்டதோடு தான் ஒரு ஆய்வாளராக உருவான சூழலை மிக சுவையாக எடுத்துரைத்தார். பேராசிரியர் நா.வா.வின் கட்டாயப்படுத்துதலால்தான் எழுதத் தொடங்கினேன். வாசிப்பில் ஆர்வமுடையவன் என்பதே என்னுடைய முதல் அடையாளமாகத் தொடக்கத்தில் இருந்தது. சில தவிர்க்க முடியாத நிர்பந்தங்களால் உருவானதாகவே என் எழுத்துகள் நிகழ்ந்திருக்கிறது.

இவ்வாறு ஆ.சிவம் அவர்கள் தான் ஆய்வாளராக உருவான அனுபவத்தை, தோழர் எ. சண்முகானந்தம் மேற்கொண்ட நேர்காணலில், “பேராசிரியர் நா. வானமாமலை என்னை எழுதச் சொல்லிக் கட்டாயப்படுத்திக் கொண்டே இருப்பார். அவர் ‘ஆராய்ச்சி’ இதழைத் தொடங்கியபோது, அதன் புற வேலைகளில் பங்கெடுத்துக்கொண்ட நான்கைந்து பேரில் நானும் ஒருவன். ‘இதழுக்கு நீயும் ஒரு கட்டுரை கொடு. அப்போதுதான் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும்’ என்றார். என்னுடைய கட்டுரை இடம்பெற்றுத்தான் ‘ஆராய்ச்சி’ இதழ் சிறப்படைய வேண்டும் என்பதில்லை. மற்றவர்கள் மொழியில் சொல்லப்போனால் ‘எனது கட்டுரை அதில் ஒரு திருஷ்டிப் பொட்டுதான்’ ஆனாலும், ‘நாட்டுப்புறப் பாடல்களும் திருமண உறவுகளும்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதிக் கொடுத்தேன். அது, திருமண உறவுகள் தொடர்பாக, நாட்டார் பாடல்கள் என்ன சொல்கின்றன என்பதைப் பற்றியது. அந்தக் கட்டுரையை அச்சில் பார்த்தபோது, அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது. அப்போது நா.வா சொன்னார், ‘ரொம்பக் கறரா இருந்திருந்தா இந்தக் கட்டுரையை நான் போட்டுருக்கக் கூடாது. ஆனா, நீ தொடர்ந்து எழுதணும்னு நான் விரும்புகிறேன். அதனாலதான் அனுமதிச்சேன். அடுத்தமுறை செறிவா ஒரு கட்டுரை எழுது’ என்று சொன்னார். அதன் பிறகு, ‘பரதவர்களின் வாசல்படி மறியல்’ என்ற கட்டுரையை நிறைய கள ஆய்வுகள் செய்து எழுதினேன். அது அவருக்கு நிறைவாக இருந்தது. ‘நல்ல கட்டுரையா வந்திருக்கு. இதை அப்படியே போட்டுக்கலாம்' என்று சொன்னார். இதழிலும் கொண்டு வந்தார். அது வெளிவந்த பிறகு, எனக்கு நிறைய தொடர்புகள் ஏற்பட்டன. அப்போது தொலைபேசி வசதியில்லாத காலம் என்பதால், ஏராளமான கடிதங்கள் வந்தன. பலரும் நேர்ப்பேச்சில் அந்தக் கட்டுரை குறித்து என்னிடம் விவாதித்தார்கள். அது எனக்கு உற்சாகமளித்தது. அங்கிருந்து இந்த ஆய்வுப் பயணம் தொடங்கியது." (பண்பாடு முதல் காட்டுயிர் வரை - ஏ.சண்முகானந்தம்) என்ற எழுத்தோடு இணைத்தும் உணர்ந்துகொள்ளலாம்.

நாட்டார் வழக்காற்றியலின் ஆய்வின் தொடக்க நிலை

தமிழகத்தில் நாட்டார் வழக்காற்றியல் சார்ந்த ஆய்வுகளை நோக்கும்போது, 1960க்கு முன்பு 1960க்கு பின்பு என்ற இரு நிலைகளில் வைத்து புரிந்துகொள்ள வேண்டியது இன்றியமையாதது. ஏனெனில், 1960க்கு முன்பாக நாட்டார் வழக்காற்றியல் சார்ந்த ஆய்வியலை நோக்கும்போது, நாட்டார் வழக்காறுகளை சேகரிப்பதாகவும், சேகரித்த நாட்டுப்புறப்பாடல்கள், கதைகள், கதைப்பாடல்கள், விடுகதைகள், பழமொழிகள் பதிப்பித்து வெளியிடுவதாகவும் உள்ளது. நாட்டார் வழக்காறுகள் சார்ந்த ஆய்வாக முன்னெடுக்கப்பட்டதா எனில் பெரும்பான்மையாக இல்லை என்ற விடையே கிடைக்கும்.

ஏ.சண்முகானந்தம் தொகுத்த பண்பாடு முதல் காட்டுயிர் வரை என்ற நூலில், “ஐம்பதுகளின் இறுதிவரை ‘நாட்டாரியல், நாட்டுப்புறவியல்’ என்கிற சொல்லே இங்கு அறிமுகமாகவில்லை. நாட்டுப்புறப் பாடல்கள் மட்டுமே அறிமுகமாகியிருந்தன. மேலும், அன்றைக்கு இந்தப் பாடல்களுக்குக் குறிப்பிடும்படியான மதிப்பும் இருக்கவில்லை. மதிப்பு குறைவான ஓர் இலக்கிய வகைமையாகவே நாட்டார் பாடல்கள் பார்க்கப்பட்டன. கி.வா.ஜகந்நாதன் அந்தக் காலகட்டத்தில் சில நாட்டுப்புறப் பாடல்களைத் தொகுத்து, ‘மச்சு வீடு’, ‘கஞ்சியிலும் இன்பம்’, ‘நாடோடிப் பாடல்கள்’ என்ற மூன்று தலைப்புகளில் நூலாகக் கொண்டு வந்தார். பெரியசாமித் தூரன் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்தவர், கொங்குப் பகுதியில் நிலவிய பாடல்களைத் தன்னுடைய மாணவர்களைக் கொண்டு சேகரித்து, ’காற்றிலே மிதந்த கவிதைகள்’ என்ற நூலாகக் கொண்டு வந்தார். தி.நா. சுப்பிரமணியன் தமிழ்நாட்டின் முன்னோடி கல்வெட்டு ஆய்வாளர். தென்னிந்திய சாசனங்களையெல்லாம் பதிப்பித்தவர். ‘காட்டு மல்லிகை’ என்ற தலைப்பில் நூலாகக் கொண்டுவந்தார்.

பெர்சி மாக்வின் என்ற பிரிட்டிஷ் அதிகாரி. இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பே இந்தியாவை விட்டு வெளியேறியவர். ஒரு பாடலுக்கு ஓரணா, ரெண்டணா எனக் கொடுத்து மக்களிடம் சேகரித்த நாட்டுப்புறப் பாடல்களையெல்லாம் இந்தியாவை விட்டுப் போகும்போது, ஒரு குறிப்பேட்டில் எழுதி, அதை சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு அன்பளிப்பாகக் கொடுத்துவிட்டார். பல்கலைக்கழகத்திற்கு அதை என்ன செய்வதென்று தெரியவில்லை. பலகாலம் அதைத் தூங்க வைத்துவிட்டனர். ஒன்று மட்டும் அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. இதில் இருப்பதெல்லாம் பழமையான விஷயம். பழமையான விஷயங்கள் இருக்க வேண்டிய இடம், சரஸ்வதி மஹால். ஆக, அங்கு அனுப்பிவிட்டார்கள். சரஸ்வதி மஹால்காரர்களுக்கு, இது ஒலைச்சுவடி இல்லை, இலக்கியமுமில்லை, இலக்கணமுமில்லை. ஆகவே என்ன செய்வது எனத் தெரியவில்லை. கி.வா.ஜகந்நாதனுக்கு அனுப்பி, இதைப் பதிப்பியுங்கள் எனக் கேட்டுக்கொண்டார்கள். அவர் அதை ‘மலையருவி’ என்ற பெயரிட்டுப் பதிப்பித்தார்.

மு.அருணாசலம் மரபுவழித் தமிழறிஞர். ‘காற்றில் மிதந்தவை’ என்ற தலைப்பில் சில பாடல்களைப் பதிப்பித்தார். அன்னகாமு என்பவர் ‘ஏட்டில் எழுதாக் கவிதைகள்’ என்ற பெயரில் ஒரு நூலைப் பதிப்பித்தார். இவை அனைத்தும் கவனித்தால்ஞ் குறிப்பாக நூல் பெயரைக் கவனித்தால், இவை அனைத்தும் ரசனை அடிப்படையில் பார்க்கப்பட்ட, பதிப்பிக்கப்பட்ட நூல்கள் என அறிந்து கொள்ளலாம். இன்றைக்கு நாட்டுப்புறவியல் ஓர் அறிவியல் துறையாக வளர்ந்துவிட்டது. இங்கிருந்து அவற்றைப் பார்க்கும்போது, அவற்றில் ஆய்வியல் குறைபாடுகள் உள்ளதாகக் தோன்றும். ஆனால், அன்றைய காலகட்டத்தில் இவ்வளவு பாடல்களைத் தொகுத்து, இந்தத் துறைக்கு வளம் சேர்த்த அவர்களது பணி, மதித்துப் போற்றத்தக்கது. அன்றைக்கு அவர்கள் அவ்வளவு பாடல்களைச் சேகரிக்காவிட்டால் நாட்டுப்புறவியல் அந்தப் பாடல்களையெல்லாம் இழந்திருக்கும்” என்று குறிப்பிடுவதிலிருந்து தொடக்ககால நாட்டார் வழக்காற்றியல் சார்ந்த சேகரிப்பும் அதன் முக்கிதயத்துவத்தையும் புரிந்துகொள்ளலாம்.

இரண்டு அறிஞர்களும் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வின் முன்னேற்றமும்

தமிழக நாட்டார் வழக்காற்றியலைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் இரண்டு அறிஞர்களின் ஆய்வு முன்னெடுப்புகளைப் புரிந்துகொள்ள வேண்டும். ஒன்று, பேரா. நா. வானமாமலை. இரண்டு, பேராசிரியர் முத்துசண்முகம் பிள்ளை. இந்த இரண்டு அறிஞர்களின் நாட்டார் வழக்காற்றியல் சார்ந்த முன்னெடுப்பு என்பது, முன்பு குறிப்பிட்டதைப்போல, 1960களுக்கு முந்தைய, பிந்தைய ஆய்வு என்ற வரையறையை தீர்மானிக்கக்கூடியதாக அமையும். இவ்விரு அறிஞர்களின் ஆய்வு முறையியல் தமிழ்ச் சூழலில் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வியல் சார்ந்து ஏற்படுத்திய தாக்கம் குறித்து பேராசிரியர் மிக விரிவாகவே உரையாடினார்.

தமிழகத்தில் நடைபெற்ற நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுகளைப் பற்றி ஆ.சிவம் அவர்கள் குறிப்பிடும்போது, தமிழகத்தில் நடைபெற்ற ஆய்வுகளைப் பொறுத்தவரையில் தொடக்கத்தில் வழக்காறுகளை சேகரித்தல், சேகரித்த வழக்காறுகளைப் பதிப்பித்தல், இதன் தொடர்ச்சியாக நாட்டார் வழிபாடு, சடங்குகள், கலைகள் உள்ளிட்டவற்றை விவரணையாக எடுத்துரைத்தல் என்ற நிலைகளில்தான் இருந்தது. பிறகுதான் நாட்டார் வழக்காற்றுகளை சமூகத்துடன் இணைத்து சமுக வரலாறுகளாகவும், ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் பண்பாடாகவும், கோட்பாடுகளைக் கொண்டு பொருத்தி ஆராயும் ஆய்வுமுறையாகவும் வளர்ச்சி பெற்றது. சுருக்கமாகக் கூறினால், ‘தமிழில் வருணனைமுறை, மார்க்சியமல்லாத கோட்பாட்டு ஆய்வுகள், மார்க்சியக் கோட்பாட்டு ஆய்வுகள் என்ற மூன்று வகையான ஆய்வுகள் இன்றும் நிலவுகின்றன. ஆயின் மார்க்சியம் சார்ந்த ஆய்வுகளே அளவிலும் செல்வாக்கிலும் மிக அதிகமாக உள்ளன’ என்று தம் உரையில் பதிவு செய்தார்.

நாட்டார் வழக்காற்றியல் சார்ந்த மேற்காணும் ஆய்வுமுறையிலிருந்து வேறுபடுத்திய ஆய்வுமுறையில்தான் பேராசிரியர் நா. வானமாமலை, பேராசிரியர் முத்துசண்முகம் பிள்ளை அவர்களின் ஆய்வுமுறையியல் அறிமுகம் உள்ளது. பேராசிரியர் நா. வானமாமலை அவர்கள் 1960, 1964 ஆகிய ஆண்டுகளில் வெளியிட்ட தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள் (1960), தமிழர் நாட்டுப் பாடல்கள் (1964) ஆகிய இரண்டு நூல்களும் நாட்டார் வழக்காற்றியல் சார்ந்த ஆய்வில் புதிய ஆய்வியல் முறையை அறிமுகப்படுத்தியது. நாட்டார் வழக்காற்றியல் சார்ந்து வெறும் பதிவுகளாக பதிப்பிக்கப்பட்ட தொகுப்புகளிலிருந்து அது மிகவும் மாறுபட்டிருந்தது. அதில் யார் யார் அந்தப் பாடல்களைப் பாடினர், யார் யார் அவற்றைச் சேகரித்தனர், எந்தப் பகுதியில் அந்தப் பாடல்கள் நிலவின என்ற குறிப்புகளை உள்ளடக்கியதாக நூல் இருந்தது. மேலும், பாடல்களின் உள்ளடக்கத்தைக் கொண்டு அப்பாடல்களின் பதிவுகளுக்கு கீழே சில வரிகளில் அந்தப் பாடலுக்கும் அப்பாடல் சேகரிக்கப்பட்ட சமூகத்திற்குமான தொடர்பைப் பற்றி விளக்கி எழுதியிருந்தார். இந்த முறையியல் என்பது, நாட்டார் வழக்காறுகள் ரசனைக்கும் பொழுதுபோக்கிற்குமானது அல்ல, அதில் ஆய்வதற்குச் சமுகம் தொடர்பான செய்திகளும் இருக்கின்றன என்று உணர்த்தியது.

பேராசிரியர் நா.வா. அவர்களின் இரண்டு நூல்களும் நாட்டார் வழக்காறுகள் குறித்த பார்வையையும் ஆய்வையும் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றது என்றால் மிகையல்ல. மேலும், கட்டபொம்மன் குறித்த கதைப்பாடலைப் பதிப்பித்தபோது அந்த நூலுக்கு அவர் எழுதிய முன்னுரையும் முக்கியமானது. கட்டபொம்மன் கொள்ளைக்காரனா? வீரனா? என்ற விவாதத்திலான முன்னுரை என்பது நாட்டார் வழக்காறுகளைக் கொண்டு ஒரு வரலாற்றைக் கட்டமைக்க முடியும் என்பதை மெய்ப்பித்தது. பேராசிரியர் நா.வா நோக்கிய மார்க்சிய அடிப்படையிலான பார்வையான எல்லாவற்றிலும் இருக்கும் அரசியலைப் புரிந்துகொள்வது என்ற நோக்கு என்னைப் போன்ற ஆய்வாளர்கள் வர்க்க அரசியலையும், அடித்தள மக்கள் வரலாற்றையும் புரிந்துகொண்ட ஆய்வுகளை உருவாக்குவதற்கு மிக முக்கியமான காரணமாக அமைந்தது என்று கூறி முடித்த நிலை என்பது நாட்டார் வழக்காறுகள் ஒரு ஆய்வுப் பொருளாக மாறுதல், சமூக வரலாறுகளாக நா. வா. பார்த்த பார்வை, தான் உருவாக்கிய மாணவர்களுக்கு சமூக வரலாற்று ஆய்வுகளுக்கு நாட்டார் வழக்காறுகள் மிக முக்கியமான முதன்மையான துணைக்கருவி என்பதைக் கற்பித்த பாடத்தைப் புரிந்துகொள்வதற்கான உரையாகக் காண முடிகிறது.

பேராசிரியர் நா.வா அவர்கள் கல்விப் புலத்திற்கு வெளியில் நாட்டார் வழக்காற்றியலை சமூகவியல் ஆய்வாக அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச் சென்றதைப் போன்று, கல்விப் புலத்தில் நாட்டார் வழக்காற்றியலை கொண்டு சென்ற பெருமை மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பேராசிரியர் முத்துசண்முகம்பிள்ளை அவர்களுக்கு உண்டு. அவர் வெளிநாட்டில் தான் பெற்ற ஆய்வு முறையியலை மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தன்னிடம் பயின்ற ஆய்வு மாணவர்களிடம் எடுத்துரைத்து, நாட்டார் வழக்காற்றியல் சார்ந்த ஆய்வுப் பொருண்மைகளை முனைவர் பட்ட ஆய்வுக்கு வழிகாட்டினார். இச்செயல்பாடு மிக முக்கியமானதாகும்.

இச்செயலால் அறிமுகமானவர்களே பேராசிரியர் மு. இராமசாமி, பேராசிரியர் சரஸ்வதி வேணுகோபால் ஆகியோர். பேராசிரியர் மு. இராமசாமி அவர்கள் தோல்பாவை நிழல் கூத்து பற்றியும், பேராசிரியர் சரஸ்வதி வேணுகோபால் மதுரை மாவட்ட தாலாட்டு, ஒப்பாரிப் பாடல்களிலும் ஆய்வு மேற்கொண்டனர். பேராசிரியர் அதன் பிறகு தெருக்கூத்து குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். மேலும், பி.ஆர். சுப்பிரமணியம் அவர்களும் கேரளத்தில் அமைப்பியல் கோட்பாட்டைக் கொண்டு கதைப்பாடல் பொருண்மையில் ஆய்வு மேற்கொண்டார். பேராசிரியர் காவ்யா

சு. சண்முகசுந்தரம் (1975இல் நாட்டுப்புறவியல் என்ற சொல்லை உருவாக்கியவர்) திருநெல்வேலி மாவட்டம், பேராசிரியர் ஆறு. இராமநாதன் தென்னாற்காடு மாவட்டம் சார்ந்த நாட்டுப்புறப்பாடல்களைக் கொண்டு ஆய்வு மேற்கொண்டார். இவ்வாறு பல ஆய்வாளர்களும் பல நாட்டார் வழக்காறுகளை அடிப்படையாகக் கொண்ட ஆய்வுகளும் இன்றுவரை தொடர்ச்சியாக வந்துகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

பேராசிரியர் தே. லூர்து அவர்களின் பங்களிப்பும் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு வளர்ச்சியில் குறிப்பிடத்தக்கதாகும். 1976இல் நாட்டார் வழக்காற்றியல் என்ற சொல்லை உருவாக்கியதோடு, அச்சொல் குறித்த விளக்கத்தையும் தெளிவுபடுத்தினார். இவர் மேற்கத்திய கோட்பாடுகளைத் தமிழில் மொழிபெயர்ப்பு செய்து கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட ஆய்வுகள் தமிழகத்தில் உருவாகக் காரணமாக இருந்தார் என்ற பேராசிரியரின் தொடர்ச்சியான உரை தமிழக நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு வரலாற்றை மிக நுட்பமாக அறியச் செய்கிறது.

மார்க்சியத்தை முதன்மையாகக் கொண்ட ஆய்வு முறையியல்

ஆ.சிவம் அவர்களின் உரையில் தொடர்ச்சியாக மார்க்சியம் சார்ந்த ஆய்வுகளின் தரம் குறித்தும், பேராசிரியர் நா.வா. உருவாக்கிய மார்க்சியம் சார்ந்த ஆய்வு மரபின் தனித்தன்மை குறித்தும் நூலிழையாக இழையோடி வருவதைக் காண முடிந்தது. மார்க்சிய அறிவின் பின்புலத்திலிருந்து ஆய்வு மேற்கொள்ளும் ஆ.சிவம் அவர்களின் எழுத்துகளுக்கும், மார்க்சிய பின்புலத்தை வெளிப்படுத்தாத அறிஞர்களின் எழுத்துகளுக்கும் உள்ள வேறுபாடு உணர்த்தும் நிலையில் சில பதிவுகள் உரையிலும் இடம்பெற்றது. அதனால், பேராசிரியரின் எழுத்துகளுக்கான ஆய்வு முறையியலின் சிறப்பம்சம் குறித்துக் கேட்டபோது, ஆற்றொழுக்காக தன்னுடைய எழுத்துக்களுக்காக தான் கொண்டுள்ள நுட்பங்களைக் கூறத் தொடங்கினார். அப்போது, தமிழ்நாட்டில் மார்க்சியம் அல்லாத ஆய்வுகளை, முதலாவது, கோட்பாடு ஒன்றைக் எடுத்துக்கொண்டு அதைப் பொருத்திப் பார்க்கும் வகையில் தரவுகளைச் சேகரித்து எழுதுவது. இரண்டாவதாக, தரவுகளைச் சேகரித்துவிட்டு பின்னர் கோட்பாடு ஒன்றை அதில் பொருத்திப் பார்ப்பது. மூன்றாவதாக, தரவுகளைச் சேகரித்து அவற்றை முறைப்படுத்தி விவரணை முறையில் எழுதுவது என்ற மூன்று நிலைககளில் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுகளை நுட்பமாக வகைப்படுத்தினார். இவற்றில் மூன்றாம் நிலையிலான ஆய்வு முறையியலைத்தான் தான் பின்பற்றுவதாகவும் கூறுகிறார்.

அதாவது, ஒரு ஆய்வுக் களத்தை எடுத்துக் கொண்டு, நுட்பமான கள ஆய்வு மேற்கொண்டு, கள ஆய்வின் அடிப்படையில் மட்டுமல்லாமல் அந்தப் பொருண்மை குறித்து இலக்கியம், இலக்கணம், கல்வெட்டு மற்றும் பிற ஆவணப் பதிவுகளையும் எடுத்துக் காட்டி விவரணையோடு எழுதுவது என் எழுத்துகளின் சிறப்பம்சம் என்று கூறுவதும், நாட்டார் வழக்காறுகளை வெறும் ஆய்வுப் பொருளாக மட்டும் பார்க்காமல், இந்த வழக்காற்றிற்கு யார் உரிமையாளர்களாக இருக்கிறார்களோ அவர்களின் வாழ்க்கையையும் வழக்காற்றையும் மேம்படுத்த முனைவதாக இருந்திருக்க வேண்டும் என்று குறிப்பிடுவதும், “மாற்று வரலாற்றுக்கான தரவுகளாக வாய்மொழி வழக்காறுகளும் சடங்குகளும் அமைகின்றன. இவற்றை நாம் அப்படியே வரலாற்றில் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதில் ஐயமில்லை. மரபு வழி வரலாற்றுக்கான தரவுகளை எவ்வாறு ஏனைய தரவுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்து ஒரு முடிவுக்கு வருகிறோமோ அதே போன்று இத்தரவுகளையும் பயன்படுத்தி உண்மையைக் கண்டறியலாம்.” (முன்னுரை, அடித்தள மக்கள் வரலாறு) என்று குறிப்பிடுவதும் பேராசிரியர் பதிவு செய்யும் எழுத்துகளின் தனித்தன்மையைப் புரிந்துகொள்ளச் செய்கிறது.

மேலும், நான் வரலாறு, சமூகவியல், நாட்டார் வழக்காற்றியல், பண்பாட்டியல் என எந்தப் பொருண்மை குறித்து ஆய்வு மேற்கொண்டாலும் முதன்மையான தரவுகளாக நாட்டார் வழக்காற்றியல் தரவுகளை எடுத்துக்கொள்கிறேன். அந்த நாட்டார் வழக்காற்றியலுக்கும் அந்த வழக்காற்றியலை வழங்கும் சமூகத்திற்கான உறவை நுட்பமாக பார்க்கத் தவறுவதில்லை. வழக்காற்றியலை விவரிக்கும் விவரணையாக மட்டும் அமையாமல் பயன்முறை நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாகக் கொண்டுவருகிறேன். இவை என்னுடைய எழுத்துகளின் தனித்தன்மையாக கருதுகிறேன் என்று கூறுவதன் மூலம் தன்னுடைய ஆய்விற்கான தனித்த ஆய்வு முறையியலை பேராசிரியர் கைகொண்டிருப்பதை அறிய முடிகிறது.

இவற்றோடு, பேராசிரியர் முத்துமோகன் நேர்காணல் செய்து பதிவு செய்துள்ள தமிழ்ச் சூழலில் ஆய்வும் அரசியலும் என்ற நூலில் இடம்பெற்றுள்ள, “எல்லாப் பிரச்சனைக்குள்ளும் ஓர் அரசியல், குறிப்பாக வர்க்க அரசியல், மறைந்துள்ளது என்பதே நான் கற்றுக்கொண்ட மார்க்சியம் எனக்கு உணர்த்தியுள்ளது. அரசியல் என்பது வர்க்கம் சார்ந்தது என்றும் அது கற்றுக்கொடுத்துள்ளது. சமயம், பண்பாடு ஆகியவற்றிற்கு முழுமையாக இல்லாவிட்டாலும் ஓரளவுக்காவது இது பொருந்தும் என்பதை அது உணர்த்தியுள்ளது. பண்பாடு எனும்போது இந்தியச் சூழலில் சாதியையும் அது உள்ளடக்கியுள்ளது என்பதை நினைவில் கொண்டவன். பல்வேறு சமூகவியலாளர்கள் Holistic Study என்ற பெயரில் முழுமையான ஆய்வு அணுகுமுறை குறித்துப் பேசியுள்ளார்கள் அல்லவா! நானும் என்னுடைய ஆய்வுகள் முழுமையான ஆய்வுகளாக அமைய வேண்டுமென்று விரும்புபவன். அவ்வகையில் மார்க்சிய சமூகவியலைக் கையாள முயலுகிறேன். வளைக்க முடியாத இறுக்கமான கோட்பாடாக மார்க்சியத்தை நான் பார்க்கவில்லை. பொருளியல் என்ற நிலையுடன் மட்டும் நின்றுவிடாமல் பல்வேறு வகைப்பட்ட தரவுகளைச் சேகரித்து அவற்றிற்கு இடையே ஓர் இயைபு காண்பது அவற்றின் வழியாக அதன் அரசியல், பொருளியல், பண்பாட்டு உண்மைகளை வெளிப்படுத்த முயற்சி செய்கிறேன். செவ்விலக்கியம், நாட்டார் வழக்காறு, சமயம், வரலாறு, தொல்லியல், கல்வெட்டியல் தொடர்பான தரவுகளும் அவற்றிற்கிடையே மறைந்து கிடைக்கும் உறவுகளும் முக்கியமானவை என்றும் கருதுகிறேன். தேவைப்படும்போது சாட்சிகளைப் போல, பிற நாட்டு அறிஞர்களை துணைக்கு அழைத்துக் கொள்கிறேன்” எனும் இக்கருத்துகளை இணைத்துப் புரிந்துகொள்ளும்போது இவரின் ஆய்வு முறையியலின் நுட்பத்தை முழுமையாகப் புரிந்துகொள்ளலாம்.          

ஆய்வின் தனித்துவம்

ஆ.சிவம் அவர்கள் தொடர்ச்சியாக அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்ச் சமூக வரலாற்றை நாட்டார் வழக்காற்றியலைக் கைக்கொண்டு கோட்பாடுகளற்ற தனித்ததொரு ஆய்வு முறையியலோடு எழுதி வருகின்றார். நாட்டார் வழக்காற்றியலின் நான்கு வகைகளான வாய்மொழி வழக்காறுகள், மக்களின் பழக்க வழக்கங்கள், நிகழ்த்துக் கலை, பொருள்சார் பண்பாடு என்ற நான்கு நிலையிலும் தன்னுடைய ஆய்வுகளை மேற்கொண்டு வருபவர். தனித்த நூல்களாகவும், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு நூல்களாகவும், குறுநூல்களாகவும், பதிப்பு நூல்களாகவும் தமிழ்ச் சமூகத்தைப் புரிந்துகொள்வதற்கான சமூக வரலாற்றை மார்க்சியக் கண்ணோட்டத்தோடு பதிவு செய்துவருவது தமிழ்ச் சமூகத்திற்கு இவரின் சிறந்த பங்களிப்பாகும்.

இவரின் எழுத்துகளை கிறித்துவ வரலாறு, புழங்குபொருள் சார்ந்த பண்பாட்டு ஆய்வுகள், தமிழக அரசியல் வரலாறு, பண்பாட்டு ஆய்வு வரலாறு, சாதி சமய வரலாறு, அடித்தள மக்கள் வரலாறு எனப் பல்வேறு நிலைகளில் வகைப்படுத்தி ஆராய வேண்டும். பேராசிரியரின் எழுத்துகளை தமிழக வாசகர்கள் முழுமையாக வாசிக்க வேண்டும். பேராசிரியரின் எழுத்துகளை வாசிப்பதால் சமூகத்தை மாற்றிவிட முடியும் என்பதல்ல. பொருளுக்கும் உழைப்புக்குமான தொடர்பை அறிந்துகொள்ள முடியும். வர்க்க உருவாக்க அரசியலைப் புரிந்துகொள்ள முடியும். நாட்டார் வழக்காற்றியல் ஆய்வின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளலாம். நாட்டார் வழக்காறுகள் என்பது சமூக உருவாக்கத்திற்கான, சமூக மாற்றத்திற்கான கருவிகள் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். நாட்டார் தெய்வங்களும் வழிபாடுகளும் உருவான அரசியலைப் புரிந்துகொள்ளலாம், நாட்டார் வழக்காற்றியலைக் கொண்டு உள்ளூர் வரலாறுகளைக் கட்டமைக்க வேண்டியதன் அவசியத்தைப் புரிந்துகொள்ளலாம். குறிப்பாக, பொருள் உற்பத்தியில் உழைப்பாளிகளின் உழைப்பை அந்நியமாக்கும் முதலாளித்துவ சமூகத்தை மாற்றியே ஆக வேண்டும் என்னும் எண்ணமாவது உருவாகும். இவையே பேராசிரியரின் எழுத்தின் வெற்றியாகும்.

இவருடனான நேரடி உரையாடல் என்பது பல்வேறு ஆய்வுக் களங்களையும் ஆய்வு முறையியலையும் கற்பித்தது. குறிப்பாக, தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய பல ஆய்வுக் களங்களையும் எடுத்துக்காட்டியது சிறப்பாகும். அந்த ஆய்வுக் களங்களுக்குள் ஆய்வுக்குச் செல்வதற்கு முன்பாக ஒரு குறிப்பிட்ட ஆய்வுப் பொருண்மை சார்ந்து வாசிப்பு நிலையில் தயாராக வேண்டிய முறைமை, கள ஆய்வில் மேற்கொள்ள வேண்டிய நுட்பமான நிலைகள் ஆகியவற்றை எடுத்துக்காட்டி உரையாடியது ஆயிரம் புத்தகங்களைப் பார்த்த அனுபவமும் நூறு புத்தகங்களை முழுமையாக படித்த அனுபவமாகவும் இருந்தது.

- முனைவர் மு. ஏழுமலை, நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர், உதவிப் பேராசிரியர், து.கோ. வைணவக் கல்லூரி, அரும்பாக்கம், சென்னை.