ஒரு கிராமம். ஒரு குடும்பம். அண்ணனும் தம்பியும் வேறு வேறு அரசியல் கட்சியைச் சார்ந்தவர்கள். அண்ணன் இராமசாமி, காங்கிரஸ்; தம்பி ரங்கசாமி, திமுக. வேறு வேறு கட்சியைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் குடும்பத்தில் ஒற்றுமையாக இருக்கிறார்கள். விவசாயத்தில் வரும் வருமானத்தை எடுத்து இருவரும் கட்சிக்காகச் செலவு செய்கிறார்கள்.

pr ramanujam novelதம்பி ரங்கசாமியுடன் கட்சித் தொண்டனாக இருக்கும் துரைராஜ் என்பவன், தன்னிடம் கட்சிச் செலவுகளுக்காக ரங்கசாமி தரும் பணத்தைக் கொஞ்சம் செலவு செய்து விட்டு மிச்சப் பணத்தைத் தன் வீட்டுக்காக ஒதுக்கிக் கொள்ளுகிறான்.

ஒற்றுமையாக இருக்கும் அண்ணன் இராமசாமியையும் தம்பி ரங்கசாமியையும் பிரித்துவிட்டால் ரங்கசாமியை நிறைய ஏமாற்றிப் பணத்தைச் சேர்த்துக் கொள்ளவும் கட்சியில் உயர்ந்த பதவிக்குச் சென்று தேர்தலில் வெற்றிபெற்று முடிந்தால் மந்திரியாகவும் ஆகிவிடலாம் என்ற நப்பாசையினால்  பாகப் பிரிவினை செய்து கொள்ளுமாறு ரங்கசாமியை துரைராஜ் கடுமையாகத் தூண்டுகிறான். அவனது திட்டம் வெற்றி பெறும் நிலையில் துரைராஜை ரங்கசாமி புரிந்து கொண்டு அவனிடம் இருந்து அமைதியாக ஒதுங்கிக் கொள்ளுகிறார். இதற்கு ராமசாமியின் அண்ணியும் மாமியாரும் நல்ல எண்ணத்தோடு ஒத்துழைக்கிறார்கள். குடும்பம் ஒற்றுமையாக நடைபோடுகிறது. இதுதான் கதை.

கிராமங்களைச் சுற்றியே நாவல் நகர்வதால் கிராமங்களில் உள்ள குடும்பங்களின் பழக்க வழக்கங்கள், பண்பாடு, கலாசாரம், பேச்சுவழக்கு, மக்களின் மன இயல்புகள் யாவும் தெற்றெனத் தெரியவருகின்றன. அரசியல் என்பது மக்களுக்குத் தேவையான ஒன்றுதான். ஆனால் அது குடும்பத்தையும் உறவுகளையும் சிதைத்து விடாமல், குடும்பத்தில் உள்ளோர் கண்காணிக்க வேண்டியது அவசியம் என்பதை இந்த நாவல் எடுத்துச் சொல்லுகிறது.

இப்போதெல்லாம் சில அண்ணன் தம்பிகள், வேறு வேறு கட்சியில் சேர்ந்துகொண்டு எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தங்கள் குடும்பத்துக்கு வேண்டிய எல்லாவித நன்மைகளையும் தேடிக்கொள்வதை திட்டமிட்டே செய்கிறார்கள்.

ஜோசியம் பார்க்க உள்ளூர் ஜோசியக்கரனை அழைத்து மிக எளிய முறையில் பார்த்து, கிராமத்து மக்கள் மனம் மகிழ்ச்சியும் அடைகிறார்கள். இதற்காக ஆயிரக்கணக்கில் செலவு செய்வதில்லை.

பொதுவாக, நகரவாசிகளைவிட கிராமத்துக்காரர்கள் நிறையவே சாப்பிடுவார்கள். "வயிற்றுக்கு வஞ்சனை இல்லாமல் சாப்பிட வேண்டும்" என்று சொல்வார்கள்.  நாராயணசாமி நாயக்கர் நூற்றுப் பத்து வடையைப் போட்டிக்காகச் சாப்பிட்டார். எல்லோரும் சாதாரணமாக ஐம்பது வடை சாப்பிடுவார்கள் என்ற செய்தி இதனை உறுதி செய்கிறது.

ஓய்வு நேரங்களில் வீட்டில் பலகாரம் செய்தால் அக்கம் பக்கத்தில் இருக்கும் உறவுக் காரர்களுக்கும் நட்புகளுக்கும் தாராளமாக அள்ளித் தந்து மகிழ்ச்சி அடைவது கிராமத்துப் பழக்கம் என்பதை அங்கம்மாள் வடை சுடும்போது பார்க்கிறோம்.

அரசியல் என்பது நகரம், கிராமம், ஏழை, பணக்காரன், குடிசை, கோபுரம் என்ற வேறுபாடு இல்லாமல் எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது என்பதைக் கோபால்சாமியும் அவரது மனைவி அம்சவல்லியும் பேசும் பேச்சுக்கள் தெளிவாக்குகின்றன.

1967 இல் நடைபெற்ற தேர்தல் தொடர்பான தரவுகள் வேண்டுவோர் இந்த நாவலில் தேடிக் கொள்ளலாம். அந்த அளவுக்கு ஒரு வரலாற்று ஆவணப் பெட்டகமாக இந்த நாவல் விளங்குகிறது. நேரு இறந்த நாள், இந்தி எதிர்ப்புப் போராட்டம் ஆகியன இந்த ஆவணத்தின் ஒரு பகுதி எனலாம்.


இராமசாமி, அவரது மனைவி அலமேலு இருவரும் தங்கள் குடும்பக் கௌரவத்தை நிலை நாட்ட எடுத்த முயற்சிகள் வாசகர்களுக்கு ஒரு பாடமாக நெஞ்சில் நிலைக்கும் என்பதில் ஐயமில்லை.

பெரியார் கொளுத்திப் போட்ட சாதி ஒழிப்புக் கொள்கை, கடவுள் மறுப்புக் கொள்கை, கலப்புத் திருமணம், பார்ப்பனர் இல்லாத் திருமணம் என்பனவற்றையும் கிராமத்து மக்களின் தெய்வ பக்தி போன்றவையும் இந்த நாவல் அலசுகிறது.

சிறு வயதிலிருந்தே சக்கர நாற்காலியில் உலாவரும் இதன் ஆசிரியர், ஒவ்வொன்றையும் மிகவும் நுட்பமாக உற்றுநோக்கி தனது பார்வை எத்தகையக் கூர்மையானது என்று சொல்லாமல் சொல்லும் விந்தையை என்னென்பது!

நிகழ்ச்சிகளை வரிசைப்படுத்திச் சொல்லும்போது மிகச் சிறிய செய்திகளையும் விடாமல் சொல்லுவது சமுதாயம் தொடர்பான ஆசிரியரின் கூரிய பார்வையைக் காட்டுகிறது.
ஒரு நிகழ்வைப் பற்றியோ மனிதரைப் பற்றியோ மிகத் துல்லியமாக வருணிக்கும் இவரது திறன் போற்றத் தக்கது.

கலைஞர் கருணாநிதி அவர்கள் ராஜேந்திரன் மற்றும் அவரது கழகத் தோழர்களிடம் நெக்குருகிப் பேசும் பேச்சுகள் கலைஞரின் உண்மையான அச்சு அசல் பேச்சு போலவே இருக்கிறது.

எம். ஜி. ஆர். அவர்கள் குண்டடிப்பட்டுத் தமிழகமே கொந்தளித்தபோது, அது தி. மு. கழகத் தொண்டர்களின் எழுச்சியை இன்னும் தட்டியெழுப்பி ஊர் முழுதும், பாதை முழுதும் மனிதத் தலைகளாகவே நிரம்பி வழிந்ததை ஆசிரியர் நேரில் பார்த்தது போல விவரித்துள்ளார்.

மருத்துவ மனையில் நாச்சியார் தமது பேறு காலத்தின்போது துடித்தத் துடிப்பு, அவரது தாய் மங்கம்மாள் ஓவென்று கதறிய கதறல், அவரது தந்தை பெருமாள்சாமி செய்வதறியாது திகைத்தது, ராஜேந்திரன் அப்போது அங்கே நாச்சியாருடன் இல்லாதது ஆகிய இந்தச் சூழலில் பேறுகால அறைக்கு வெளியே நின்று வாசகர்களாகிய நாமும் கதறி அழுவதை நிறுத்த முடியவில்லை.

நாச்சியாரின் குழந்தை மூச்சுத் திணறலால் இறந்துவிட்டது என்னும் செய்தியை டாக்டர் சொல்லும்போது நமக்கு இதயமே நின்றுவிடுவதுபோல் தோன்றி விம்முகிறோம்.

துரைராஜ், தலையாட்டிக் குட்டிப் பெருமாள் போன்ற ரத்தம் குடிக்கும் குள்ளநரிகள் ஒவ்வொரு கிராமத்திலும் உலவிக் கொண்டுதான் உள்ளன. அந்த நரிகளுக்கு பலியாகாமல் இராமசாமியின் குடும்பத்தினர் தப்பித்துக் கொண்டதில் ராமசாமிக்கும் பங்கு உண்டு. அதற்காக நாம் ராமசாமிக்கு நன்றி சொல்ல வேண்டும். நாமும் மகிழ்ச்சி அடைகிறோம்.

இந்த நாவலில் வரும் நாச்சியாரின் தாய் மங்கம்மாள் மற்றும் இராமசாமியின் மனைவி அலமேலு இருவரும் வாசகர்கள் நெஞ்சில் நிலையான இடத்தைப் பிடித்து விடுகின்றனர். இராமசாமியின் குடும்பம் கட்டிக் காப்பாற்றப்படுவதற்கு அவர்கள் இருவரும் பெருந் தூண்களாக விளங்குகின்றனர். இவர்களைப் போலவே ஒவ்வொரு குடும்பத்திலும் பெண்கள் இருந்து விட்டால் நாட்டுக்குப் பெரும் நன்மை கிடைக்கும்.

இவையாவும் சிறப்புற அமைந்து இந்த நாவல் வெற்றிநடை போடுவதற்குக் காரணம் நாவலாசிரியரின் சிந்தனைத் திறனே என்பதில் ஐயமில்லை.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் நடைபெற்ற திருமணத்தை விவரிக்கும் தன்மை, திருமணச் சமையல், பந்தி விசாரித்தல் போன்ற செயற்பாடுகள், கள்ளச் சாராயம் காய்ச்சுவது தொடர்பான செயற்பாடுகள், களப்புக் கடையில் மக்களின் ஈர்ப்புத் தன்மை, குழந்தை தாய்ப்பால் குடிக்கும்போது எழுகின்ற சத்தம், தயிரின் வெளிர் மஞ்சள் நிறம், மகப்பேறு மருத்துவ மனையில் டாக்டர்களின் உணர்ச்சிக்கேற்ற முகபாவங்களை வெளிப்படுத்துதல், பம்புசெட்டுக் குடிசையின் ஓட்டைகளைச் சொல்லும் பாங்கு, ராக்கம்மாவும் ரங்கசாமியும் தங்களது கட்டுப்பாட்டை உடைத்துக்கொண்டு இணைந்துச் சங்கமமாகிய நிகழ்வு, ரங்கசாமிக்குப் பெண் பார்க்கும் படலம், கொடுக்காப்புளியின் வண்ணங்கள், அதனைச் சாப்பிடும் முறை, பொதுவுடமைக் கொள்கைகளைப் பின்பற்றச் செல்லும் கேசவனின் மன இயல்புகளைப் படம் பிடித்துக் காட்டுதல்,  கட்சித் தொண்டர்களின் கட்சி விசுவாசம்,  காமராஜர் புன்னகை செய்வதை எடுத்துச் சொல்லும் நயம், அறிஞர் அண்ணா மூக்குப் பொடி போடும் நயம், போன்ற செய்திகள் யாவும் ஆசிரியரின் கூர்மையான பார்வைக்குச் சில எடுத்துக் காட்டுகளாகும்.

"ஒரு நல்ல நாவலைப் படித்த முழு நிறைவு மனதிற்கு ஏற்பட்டது" என்னும் திருப்தியில் மனம் திளைக்கிறது.

நூற் பெயர்: கால நதியில் கரையும் உறவுகள் - புதினம்
ஆசிரியர் : பேராசிரியர் பி. ஆர். இராமானுஜம், புது டெல்லி.
மின்னஞ்சல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
வெளியீடு : நெம்புகோல் பதிப்பகம், மதுரை. செல்லிடப் பேசி: 9442508754.

- டாக்டர் புதேரி தானப்பன், புது டெல்லி.

Pin It