படிப்பது ஆகச் சிறந்த நோக்கத்தின் தூரத்தை மெல்ல மெல்ல கடப்பது போன்றது.  

மதில் ஏறி குதித்த பூனைகளின் இரவுகளை வடிகட்டி சொல்லுதல் சிரம்தானே. நிகழ்வின் பக்கங்களில் கண்களால் மொழி செய்யும் ஆன்ம ஊடுருவல் படிப்பது. 
 
மூன்று கவிதை புத்தகங்கள். மூன்று வெளிகள். மூன்றும் அருவிகள். எட்டி குதிக்கலாம். எட்டி நிற்கலாம். வயிறு முட்ட குடிக்கலாம். வானுயரக் கொட்டி சாகலாம். அவரவர் பாடு அவரவர் பேடு.
 
நான் ஒரே நேரத்தில் நான்கைந்து புத்தகங்களை படிக்கும் பழக்கும் உள்ளவன். இம்முறை மூன்று கவிதை தொகுப்புகளில் அணிலாடும் மூன்றில் ஆனது.......திகைக்க திகைக்க யுத்த நிலை. சற்று செத்த நிலையும் கூட. தலையற்ற ஆட்டின் ஞாயிறில் இடம் வலம் புரியாத கொடி அசைக்கும் ஒற்றைக் காக்கையின் தீராப் பசியென இன்னமும் திரு திருவென விழிக்கிறேன். ஏற்றியது தீபமா தீப்பந்தமா....? எரிந்து விடல் சுலபம். ஒற்றை சுடரின் நாவசைவில்.. மூன்று திசைகள் என இம்மூன்று தொகுப்புகள் எனக்குள் தகிப்பவை. எவர் படிக்கவும் திகைப்பவை.
 
முதலில் 
 
devarasigan 278"காலம் வெளி மற்றும் ஒரு பறவையின் துடுப்புகள்" என்ற கவிதை தொகுப்பு 
 
எனக்கும் பறவைக்கும் நீண்ட நெடும் தூரத்து நெருக்கம் இருக்கிறது. நான் எப்போதும் பறவையாகவே வாழ விரும்புகிறவன். வானமெங்கும் சிறகடித்து விட்டு யாருமறியா மரணம் வேண்டும் என்கிறவன். அப்படி பறவையையே தன் கவிதை தொகுப்பிற்கு பெயராய் வைத்திருக்கும் அய்யா "தேவரசிகன்" அவர்களை தஞ்சையில் சந்திக்கும் அற்புதமான தருணம் எனக்கு வாய்த்தது. "எழுத்தாளி" இலக்கிய அமைப்புக்கு நன்றி சொல்லத்தான் வேண்டும். 20 நிமிடங்கள் பேசி இருப்போம். எல்லாமே ஞானத்தின் திறவுகள். மொழியின் லயம் நடை கூறின்..... கவிதையின் தரம் அறம் குறித்து அத்தனை நெருக்கமாக பேசினார். பேச பேசஎல்லாமே கவிதை சொல்லும் மந்திரத்தின்பால் பறக்காமல் என்ன செய்ய முடியும். பறவை என்ற பெயருக்குள் அவரும் இருக்கிறார் என்று அறிந்ததில் கூடுதல் நெருக்கம் வந்திருந்தது.
 
ஆங்கில கவிதைகள் அவ்வப்போது அள்ளி வீசுகிறார். அவர் கண்ட உலக சினிமாக்கள் குதிரையில் வந்து இறங்குகிறது. சொற்கள் அப்படி. நானும் உலக சினிமாக்களின் ரசிகன் என்ற முறையில் நெருக்கம் கூடிக் கொண்டு செல்ல....அவரின்  "காலம் வெளி மற்றும் ஒரு பறவையின் துடுப்புகள்" கவிதை தொகுப்பு என் கைகளில்...
 
வன்மை இல்லாத மேன்மை உள்ளம் கொண்ட கவிதைகள் இவருடையவை. அலைபாயும் நதியின் நர்த்தனங்களை கொண்டு கவிதைகள் செய்திருக்கும் இத்தொகுப்பில் பல இடங்களில் அனுபவமும்... காண் பொருளும் நுட்பமாய் ஊடாடப் பட்டிருக்கின்றன. மெல்லிய கோடுகளால் இழைக்கப்பட்ட மானுட நகர்வுகள் இவரின் சிந்தனைகள். கோபமோ தாபமோ... ஆசையோ.... யோசனையோ... எல்லாமே சில நையாண்டித்தனத்தோடு வெளிவருகையில்... உண்மையின் சுடரை அணையாமல் காப்பாற்றுவது எத்தனை வலியானது என்பதை புரிய முடிகிறது.  
 
மோட்சம் என்றொரு கவிதையில் 
 
நொண்டிக் கோடா 
அந்த விளையாட்டின் பெயர் 
நீ விளையாடிய பின்னுமா 
 
என இடையே ஒரு பத்தி. நெடு நேரம் பற்றி எரிந்து கொண்டிருந்தது கவிதை.
 
கால் மேல் கால் போட்டு
அமரும் சமயம் 
பறக்கும் பறவை
பந்தயக் குதிரை 
 
என்று இன்னொரு பத்தி. இப்படி ஒரு தரிசனத்தை என் பறவைகள் எனக்கு கொடுக்கவே இல்லை என்ற வருத்தம் இருப்பினும் அவர் பறவைகளை கண் கொட்டாமல் காண்பதில் அவர் வானத்தில் நானும் சில பறவை என யூகிக்க கொஞ்சம் நிறம் கிடைத்தது.
 
கடற்கரையில் 
நிர்வாணமாய் கிடக்க 
ஆசைப்பட்டேன் 
 
அவசரமாய் எனக்கு 
உடை மாற்றி 
அலுவலகத்திலோ 
தொலைச்சாலையிலோ
நிறுத்தினீர்கள் 
 
"வேண்டியதும் கிடைத்ததும்" என்றொரு கவிதையில் இப்படி ஒரு பத்தி வருகிறது. எனக்கு பத்திக் கொண்டு வந்தது. ஒரு கவிஞனின் வலி ஆடைகளால் மூடி மறைக்கப்பட்டது. நான் கூட இந்த கொடூரத்தை அனுபவித்திருக்கிறேன். அவனின் சிறகசைக்கும் ஆசையெல்லாம் ஏதாவது ஒரு கட்டிடத்துள் கணிப்பொறி முன்னால் கல்லாய் போவதில் முடிந்து விடுகிறது. காலம் முழுக்க அவனை அடைத்து வைத்து காசு காய்க்கும் மரமாய் ஆக்கி விடுவதில் ஊரும் உறவும் கவிஞனுக்கு கவிஞன் மாற்றம் இல்லை என்பது மட்டும் தான் ஆறுதல் 
 
நினைவுக்கு வராத பெயர்கள் 
அனைத்தும் 
நல்ல பெயர்களே 
 
நினைவுக்கு வரவில்லை 
எனத் தொல்லை 
படுத்த வேண்டாம் 
 
விட்டு விடுங்கள் 
 
நினைவுக்கு வந்த பெயர்களை மட்டும் 
வைத்துக் கொண்டு 
என்ன செய்வதாம்?
 
என முடித்துக் கொண்டார் 
 
எத்தனை எத்தனை நினைவுக்கு வராத பெயர்களை நாம் கடந்து கொண்டிருக்கிறோம். நினைவுக்கு வந்த பெயர்களை கடக்காமலா இருக்கிறோம்...! தத்துவார்த்த தீர்க்கத்தை சொற்களின் முலாம் பூசிக் கொண்டு கவிதை செய்யும் யதார்த்தத்தின் வழியே அவரின் கடந்த காலம் பெயர்களற்று நிற்பதை காண்கிறேன்.
 
விடிகாலையில் காலடி சப்தங்களை வீட்டிலே வைத்து விட்டு 
காற்று
 திருகி பூக்கள் பறிக்கும் லாவகம் இவரின் கவிதைகள். முதிர்ச்சியின் சொற்கட்டுகளில் மூச்சு நிரம்ப வெளிவருகையில் முகம் எல்லாம் தேஜஸ் நிரம்பி வழிதலை வழி எல்லாம் ஒளி சீவும் கூர் தமிழின்பால் நின்று கூவலாம். பறக்கும் திசைக்கு ஒரு விசையென இருக்கும் பறவையின் தூரங்களில் இவரின் கவிதைகள் சிறகசைத்துக் கொண்டே இருக்கிறது. 
 
வானம் இறங்கும் என தொடங்கலாம். மெல்ல கிறங்கும் என முடிக்கலாம்....
 
புத்தகம் : காலம் வெளி மற்றும் ஒரு பறவையின் துடுப்புகள்
ஆசிரியர் : தேவரசிகன் 
விலை : 80/-
பதிப்பகம் : தமிழாசை பதிப்பகம்
 
**********
 
அடுத்து கவிஞர் இளங்கவி அருள் எழுதிய "நான் உனது மூன்றாம் கண்" கவிதை தொகுப்பு.
 
ilankavi arul bookபடிக்க படிக்க அழுத்தம் நிறைந்த பெரும் சோகம் என்னை கவ்வத் தொடங்கியது. இருள் அப்பிய தேசத்தின் கொண்டிகள் யாருமற்று தானாகவே உடைந்து நொறுங்கும் காட்சிகள் இங்கு ஏராளம். சமுதாயத்தின் மீது கடுங்கோபம் கொண்ட ஒரு கடைசி மனிதனின் மௌனங்களில் இக்கவிதை தொகுப்பு தன் செந்நீரை சொட்டிக் கொண்டே இருக்கிறது.
 
"கடலை பற்றிய கனவின் சித்திரம்" என்றொரு கவிதை. 
 
பிரெஞ்சுக்காரன் 
நாம் விரும்பும் கடலை 
பாட்டிலில் அடைத்து வைத்திருக்கிறான் 
படகும் துடுப்பும் தவம் இருக்கின்றன 
மூடியை திறக்காமல் மிதப்பதெப்படி 
இரவில் கசியும் பாடலைத் 
தடுத்து வைக்கிறது காற்று 
மீன் குஞ்சுகள் இல்லாத கடல் 
அலையை எழுப்பாது 
எப்படியோ எல்லை கடந்து 
ஆழ்ந்து உறங்குகையில் 
பெரும் புயல் ஒன்றால் 
படகை விட்டு பிரிந்தது துடுப்பு 
கரை ஒதுங்கி கிடந்தது 
படகும் பாட்டிலும் 
 
அரூபத்தின் பின் நின்று ஆத்மார்த்தமாக அலையை அலசுகிறது கவிதை. இன்னதென இனம் புரியா ஆனால் உணரும் உள் நோக்கின் வெளி வடிவமென இருக்கும் பாடுபொருளை சொன்னால் விளங்காது. உயிர் சொற்களால் உருவான பக்கத்தை நீங்களே அணுகும் போது உங்களுக்குள் ஒன்று உணரும்... அது எழுதிய போது இருந்தது போல இல்லாத ஒன்றாகும்.
 
64 பக்கங்கள். ஒவ்வொரு கவிதையிலும் இலை விடுத்த சோகம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தவம் களைத்த புத்தனை வெறுப்பதைத் தவிர ஒன்றும் செய்ய இயலாத யசோதரையின் அழுகுரல் ஆழங்களில் அசைவற்று கிடக்கிறது. 
 
இளந்தாரிகளின் முணுமுணுப்பு என்ற ஒரு கவிதையில் 
 
இளந்தாரிகளின் முணுமுணுக்கிறார்கள் 
வேசிகள் வாழ்ந்த நம் தெரு என்று 
என முடிக்கிறார்.
 
வரலாறும் வாழ்வின் நிலையும் சரி சமமாக இரைந்து கிடக்கும் இவரின் கவிதைகள்.... ஒரு மாயத்தின் நிறமற்ற படிக்கட்டுகளாக எங்கோ சென்று கொண்டே 
இருக்கின்றன. யாத்திரை மறந்த கால்களின் மத மதப்பை தானே பூசிக் கொண்டு நிற்கும் கூடுகளடற்ற மேகத்தின் ரூபங்களில் தானே அலங்கரிக்கவும் செய்கின்றன. காமத்தின் மத்தியை பற்றிக் கொண்டு மேல் எலும்பும் சொப்பனங்களின் மீளா வட்டத்தை கவிதைகளாக்கி புனைய விடுகிறார். வாழ்வின் நடுநிலைமை அதுவென தான் இருக்கும் என்னும் உண்மையை உரக்க சொல்லும் இக்கவிதைகளில் ஓஷோவின் தரிசனமும் உண்டு. 
 
மூன்றாம் கண் ஆபத்தானது. அது அத்து மீறும் காட்சிகளை கண்டு பிடித்து அடித்து துவைக்கும். நிஜத்தை நேருக்கு நேர் சந்திக்க இயலாதோர் மூன்றாம் கண்ணை ஒதுக்குவர். ஏனெனில் மூன்றாம் கண் நெற்றிக்கண்னை விட கூர்மையானது. 
 
"இனம்" என்றொரு கவிதையில் சாட்டை கொண்டு சாடும் கோபத்தை அணையாமல் இருக்க விடுவதே எடுபிடிகளை அடித்து விரட்டும் ஆயுதம். நமக்கு ஆயுதம் கவிதை. தொடரட்டும் இலக்கிய பணி. 
 
புத்தகம் : நான் உனது மூன்றாம் கண்
ஆசிரியர் : இளங்கவி அருள்  
விலை : 60/-
பதிப்பகம் : முரண்களரி படைப்பகம்  
 
*********************
 
கடைசியாக 
 
yazhisai manivannan bookயாழிசை மணிவண்ணனின் "பஞ்சு மிட்டாய் பூக்கும் மரம்"
 
பஞ்சு மிட்டாய் கனவுகளுக்கு கண்கள் ஏந்தும் வரிகளுக்கு ஒரு கவிதைக் கூடை நிறைய பஞ்சு மிட்டாய்கள். 
 
88 பக்கங்கள்.... திகட்ட திகட்ட கவிதைகள். எது பற்றி.. எல்லாமும் பற்றி. 
 
கை தவறிய 
நெகிழி கோப்பைகளுக்குத் 
தரையை இசைக்கத் தெரியவில்லை.
 
புத்தகத்தின் முனை மடக்கி விட்டு வெறித்து அமர்ந்திருந்தேன். ஆகச் சிறந்த இம்மாதிரி கவிதைகளை படிக்ககையில்..... உள்ளுக்குள் உருளும் வடிவத்துக்கு கவிதை என்றே பெயரிடலாம். நகல்கள் நிரம்பிக் கிடக்க மூச்சடைத்துக் கிடந்த முகநூல் விட்டு முகம் திருப்ப செய்த இந்த பஞ்சு மிட்டாய்க்காரனுக்கு என்ன தந்தால்தகுமென தவித்தேன். இரண்டு முறை படித்து விட்டு மூன்றிரவு சிந்தித்து விட்டு ஒரு முறை எழுதி விடலாம் எனத்தான் இக்கட்டுரை. பக்கத்துக்கு பக்கம் மூன்று மூன்று வரிகளில்... முத்தமிட்டிருக்கலாம். சத்தமிட்டிருக்கலாம். யுத்தமிட்டிருக்கலாம். ஆனால் எல்லா லாமும்.... மெல்லிய நீரோடை. குதித்து நீந்துபவனுக்கு மட்டுமல்ல.... வெறித்து காண்பவனுக்கும் மனம் நிறையும் அந்தி மாலை ஆற்றின் நெகிழ்வு.
 
கச்சை மீறி சுரக்கிறாள் 
கோபுரத்தில் சிற்பமாக சமைந்தவள்  
சற்று முன் சிறுமழை
 
ஓவென கத்த தூண்டும் மென் மொழி இது. நெஞ்சில் அடித்துக் கொண்டு அழும் காதலின் தூரம் இது. பெரும் மழையில் கல்லாய் சமைந்து விடலாம்தான் போல என கூச்சலிடும் பெருத்த அமைதி இது. கல்லின் வடிவெல்லாம் கற்பனையின் நிலையாகி நிகழ்த்துக்கலையின் உச்சத்தில் கொஞ்சம் சுரந்துதான் பார்க்கலாம் கச்சையற்ற இச்சை. கவிதைக்கு கால்கள் முளைக்கும் காட்டில் பஞ்சுமிட்டாய்க்காரன் கையில் மூன்றடுக்கு சொற்கள். மூளை முடுக்கெல்லாம் கவிதை பிசுபிசுப்பு.
 
மதுக்கிண்ணங்கள் மோதிக் கொள்கின்றன 
என் காதில் கேட்கிறது 
ஆயுள் உடையும் சப்தம் 
 
ஹைக்கூவுக்கு இனி யாரேனும் உதாரணம் தேடினால் இது போதும். மதுவின் கொடூரத்தை மரணத்தின் ஆயுளை உடைந்த சொற்களில் பூட்டி மொழி உணர்ச்சி செய்த யாழிசைக்கு இது மணி மகுட கவிதை. தாராளமாய் அண்ணாந்து பார்க்கலாம். அத்தனை சீக்கிரம் பாராட்டுதலோ புகழுதலோ கூடாத காரியம் எனக்கு. இப்புத்தகம் இலகுவாக்கியது என்னை. இன்னும் ஓடு... விடாதே என தோள்கள் தூக்கியது. மனம் திறந்து கவிதைக்காரனை பறக்க விடு என்றது. ஒவ்வொரு பக்கத்திலும் ஒரு பட்டாம் பூச்சி. படிக்க படிக்க பறக்கும் மனதை நீங்கள் அடைக்கவே முடியாது. காடு செய்யும் கவிதை தொகுப்பில் மரமாகிட வேண்டும். பின் யாழிசையின் காற்றுக்கு இசையாகிட வேண்டும்.
 
சிரிக்க தெரிந்த 
கனிகள் அனைத்தையும் 
கடித்து வைத்திருந்தன அணில்கள் 
 
*
 
நத்தை ஓட்டினை வெறித்தபடியே 
தன் பேருருவை நொந்து கொள்கிறான் 
நடைபாதையில் துயில்பவன் 
 
இனி என்ன சொல்ல... படித்து விடுங்கள்.... இவைகள் சிரிக்க தெரிந்த கவிதைகள். சக மனிதனை நினைக்க தெரிந்த கவிதைகள் 
 
புத்தகம் : பஞ்சு மிட்டாய் பூக்கும் மரம்
ஆசிரியர் : யாழிசை மணிவண்ணன் 
விலை : 90/-
பதிப்பகம் : சந்தியா பதிப்பகம் 
 
- கவிஜி
Pin It