எளிய பாமர மக்களும் கதைகளைப் வாசிக்கும் பொழுது தமிழில் உள்ள இலக்கண இலக்கியக்  கூறுகளை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் சு. தமிழ்ச்செல்வி எழுதிய மாணிக்கம் நாவல் கிராமத்து மக்களின் பேச்சு வழக்கு நடையிலும், வட்டார வழக்கிலும் எழுதப்பட்டிருந்தாலும் அதில் இலக்கண, இலக்கியக் கூறுகளை அதிகமாகப் பயன்படுத்தி உள்ளார் என்பதை அந்நாவலின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. அந்த வகையில் அவர் நாவலில் பயன்படுத்தியுள்ள இலக்கண, இலக்கியக் கூறுகள்  கீழ்க்காணுமாறு:maanikkam novel

  • எண்ணுப் பெயர்கள்
  • வினாத் தொடர்கள்
  • இணைமொழிகள்
  • அடுக்குத்தொடர்
  • இரட்டைக்கிளவி
  • எண்ணும்மைகள்
  • பழமொழிகள்
  • ஆங்கிலச் சொற்கள்
  • முரண் தொடை
  • நாட்டுப்புறப் பாடல்கள்

எண்ணுப் பெயர்கள்

“எண்ணுப்பெயர்கள் மொழிகளின் அடிப்படைச் சொற்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றன. உலக மொழிகள் அனைத்திலும் எண்ணுப் பெயர்கள் காணப்படும். எண்ணப்படு பொருள்களின் (Count nouns) எண்ணிக்கையைக் குறிக்கும் பெயர்களையே எண்ணுப் பெயர்கள் என அழைக்கின்றோம். இப்பெயர்கள்  பொருள் அடிப்படையிலும், அமைப்பு அடிப்படையிலும் பிற பெயர்களில் இருந்து வேறுபட்டு நிற்கும். எண்ணிக்கையை அல்லது அளவைக் குறிக்கும் நிலையில், இவை வேறு பல பெயர்களில் இருந்து மாறுபட்டிருக்கக் காணலாம்”. (சா. அகத்தியலிங்கம் மொழியியல் சொல்லியல் ப 131)

 எண்ணிக்கையைக் குறிப்பதற்குப் பயன்படும் பெயர்ச் சொற்கள் எண்ணுப் பெயர்கள் எனப்படுகின்றன.  தமிழ்மொழியில் உள்ள எண்ணுப் பெயர்களை,

முழு எண்ணுப் பெயர்கள்

பின்னங்கள்

கலப்பு எண்ணுப் பெயர்கள் என மூன்றாக வகுக்கலாம்.

எண்ணுப்பெயர்ச்  சொற்களில் பெரும்பாலும் இரண்டு எண்களை இணைத்து தமிழ்ச்செல்வி பயன்படுத்தியுள்ளார். எண்ணுப் பெயர்களைச் செய்யுள் நடையில் மட்டுமல்லாமல், உலக வழிகளிலும் எடுத்துரைத்து உள்ளார்.

  • இரண்டு மூன்று வீடுகள் தாண்டியதும் வீட்டுக்குள்ளிருந்து ரோட்டையும் மழையையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த வண்டு வாஞ்சேரியக்கா கேட்டாள் - (இரண்டு மூன்று) (மா- 18)
  • ஆயிரம் ஐநூறு சம்பாரிச்சாலும் நான் ஓடி கடந்து அலைஞ்சு நடவு நட்டு, களப்பறிச்சு வச்சிருக்க அஞ்சயும் பத்தியுந்தான் கணக்கு பண்ணி கேட்பியா? (ஆயிரம் ஐநூறு, அஞ்சயும் பத்தியும்) - (மா - 30)
  • கடைசியா தஞ்சாவூர் மெடிக்கலுக்கு கூட்டிட்டு போனாவோ, அங்க பத்து பயிஞ்சி நாளு வச்சிருந்தாவோ... பத்து பயிஞ்சி) - (மா -38)
  • நான்கைந்து மாதங்களுக்கு இங்கேயே தங்கி இருக்கும். ஆள் உயரத்திற்கு நீட்டிக் கொண்டு பார்க்கும். (கூழைக்கிடா நாரை) - (நான்கைந்து மாதங்கள் - மாணிக்கம் 195)
  • ஒரு கூழக்கிடாவை எழுநூறு, எண்ணூறு, ஆயிரம் ரூபாய்க்குக் கூட விற்பார்கள். (எழுநூறு எண்ணூறு ஆயிரம் - மாணிக்கம் 195)
  • அதிகாரிகளில் சிலர் ஐந்தாறு பேராய் சேர்ந்து வத்தையை வாடகைக்கு எடுத்துக்கொண்டு தெற்கே போவார்கள். (ஐந்தாறு - மாணிக்கம் 196)

எண்ணுப் பெயர்கள் சாரியை, அளவு, நிறைபெயர்களுடனும் மற்றும் ஒன்று, பத்து, நூறு, ஆயிரம் ஆகியவற்றுடனும் சேர்ந்து வரும். ஆனால் தமிழ்ச்செல்வி நான்கைந்து, ஐந்தாறு என்று எண்களை இணைத்து கூறியுள்ளார். இக்கால வழக்கில் பயன்படுத்தப்படும் எண்ணிக்கை அடிப்படையில் இவற்றைக் கையாண்டு உள்ளார். காலமாற்றத்திற்கு ஏற்ப சில வழக்காறுகளைப் பயன்படுத்துவதன் மூலம் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டக்கூடிய வகையிலும் எளிமைப்படுத்திக் கூறுவதிலும் தன் எழுத்து நடையை மாற்றி அமைத்துள்ளார்.

வினாத் தொடர்கள்

வினாத்தொடர் என்பது ஒரு கேள்வியின் வடிவம் ஆகும். இதில் விடை் தேட, அல்லது ஒரு தகவலை உறுதிப்படுத்த ஒரு கேள்வி கேட்கப்படுகிறது. இது எ,யா,ஆ,ஓ என்ற வினா எழுத்துக்களுடன் முடிவடையும். வினா தொடரின் வகைகளாவன பின்வருமாறு:

  • அறிவினா
  • அறியா வினா
  • ஐய வினா
  • கொளல் வினா
  • கொடை வினா
  • ஏவல் வினா

சு.தமிழ்ச்செல்வி அவர்கள் மாணிக்கம் நாவலில் அதிகமான வினாத் தொடர்களைப் பயன்படுத்தி உள்ளார். பிற வட்டார மக்களுக்குப் புரியாத வட்டார வழக்குச் சொற்களைப் பயன்படுத்தினாலும் அதற்கான விளக்கத்தையும் எடுத்து உரைத்துள்ளார்.

  • எனக்கு நீ பெரிய தேங்கா தரணும் தருவியா? (மாணிக்கம் 63) - இதில் ஏவல் வினா இடம் பெற்று வருகிறது.
  • இப்ப வந்து சொன்னா காலையிலேயே சொல்ல வேண்டியதுதானே? (மாணிக்கம் 208) – அறிவினா
  • ஒன்னக்கிட்ட காசில்லயா? (30) – அறியா வினா
  • என்ன சொன்னான் ஜோசியக்காரன்? (மாணிக்கம் 201) – அறியா வினா
  • அப்புறம் வாத்தியாரே வாய்மேட்டுல எல்லாரும் சவுரியம் தான? (141) – அறியா வினா

தமிழ்ச்செல்வி அவர்கள் வினாத் தொடர்களிலும், வட்டார வழக்குச் சொற்களைப் பயன்படுத்தியுள்ளதுடன் அதற்கான பொருளையும் எடுத்துரைக்கின்றார். குறிப்பாக, தேங்காய் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் இங்கு, “எனக்கு நீ பெரிய தேங்காய் தரணும்; தருவியா?” என்று வினா எழுப்பி, விடையாக பெரிய தேங்காய் என்பது ஆட்டுக்கிடா என்று அதற்கான பதிலையும் வெளிப்படுத்தியுள்ளார். தன் தொடர்களில் வினாத் தொடர்களை அதிகம் பயன்படுத்தி வினா எழுப்பி விடை கூறுவதன் வாயிலாக படிப்பவர்கள் எளிமையாகக் கருத்தை உள்வாங்கிக் கொள்ள முடியும் என்ற எண்ணத்தைத் தன் நூலின் வாயிலாக சு.தமிழ்ச்செல்வி வெளிப்படுத்தி உள்ளார்.

இணை மொழிகள்

இணைமொழிகள் என்பது பேச்சிலும் எழுத்திலும் ஒன்றுக்கு மேற்பட்ட சொற்கள் இணைந்து வருவதாகும். ஓசை நயம் பெற்று, பொருட்செறிவுடன் இரு சொற்கள் இணைந்து வருவது இணைமொழி என்றும் அழைக்கப்படும். பல சொற்களில் விளக்க வேண்டிய பொருளை இரண்டு சொற்களில் மிக எளிமையாக விளக்கிவிடுகின்றது.

  • நேரிணைச் சொற்கள்
  • எதிரிணைச் சொற்கள்
  • செறியினைச் சொற்கள்

1.      பண்புச் செறியினைச் சொற்கள்

2.      செயல் செறியினைச் சொற்கள்

என இணைமொழிகள் மூன்று வகைப்படும்.

  • அவன் விருப்பப்படி துணிமணிகளையும் சாமான்களையும் தூக்கிக் கொண்டு ஊர் ஊராய் சுத்த வேண்டும் (மாணிக்கம் பக் 133) - • நேரிணைச் சொற்கள்
  • நா அடக்க ஒடுக்கமா இல்லன்னு யாரு சொன்னா? (மாணிக்கம் ப 179) - பண்புச்செறியினைச் சொற்கள்
  • மீன் பிடிப்பதிலும் எத்தனையோ நுணுக்கங்கள், சவால்கள், நெளிவு சுளிவுகள் இருக்கின்றன. (மாணிக்கம் 300)
  • அஞ்சுக்கோட்டையில் யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பிய மாணிக்கம் பேராவூரணி பஸ்சை பிடித்து நேராக கொன்னக் காட்டிற்கு வந்தான் (மா – 116) – செயல் செறியினைச் சொற்கள்

இத்தொடர்களில் உள்ள துணிமணி என்பது ஆடைகள் மற்றும் ஆபரணங்களையும், அடக்க ஒடுக்கமா என்பது பணிவையும் வெளிப்படுத்தும் வகையிலும் ஒத்த கருத்துள்ள இணைமொழிகள் ஆகவும், நெளிவு சுளிவு என்பது உத்திகள் என்ற பொருளின் அடிப்படையில் ஒத்த கருத்துள்ள இணை மொழியாகவும் அமைந்துள்ளன. பொருளை விரைவிலும் எளிமையாகவும் விளங்்கிக் கொள்ள இணை மொழிகளை அதிகம் பயன்படுத்தி உள்ளார்.

அடுக்குத் தொடர்

ஒரு சொல் விரைவு, வெகுளி, அச்சம், துன்பம், மகிழ்ச்சி போன்றவை காரணமாக இரண்டு, மூன்று, நான்கு முறை அடுக்கி வருவது அடுக்குத் தொடர். இவை பிரித்தாலும் பொருள் தரும் தன்மை உடையவை ஆகும். அடுக்குத் தொடரின் வகைகளாவன:

அசைநிலை அடுக்குத் தொடர்

பொருள் நிலை அடுக்கத் தொடர்

இசை நிறை அடுக்குத்தொடர்

  • அம்மா அம்மா என்று செல்லாயியை கூப்பிட்டான் (மாணிக்கம் ப 21) – அசைநிலை அடுக்குத்தொடர்
  • அவன் பிள்ளைகளுக்கு பாக்கெட் பாக்கெட்டா ரொட்டி கொடுக்கிறான். (மா -152) - பொருள் நிலை அடுக்குத்தொடர்
  • அவரைப் பார்த்ததும் ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. (மாணிக்கம் 45) - அசைநிலை அடுக்குத்த்தொடர்
  • கிழவியும் சரசுவும் விழுந்து விழுந்து சிரித்தார்கள் (மாணிக்கம் 119) – இசை நிறை அடுக்குதொடர்

பெரும்பாலும் மாணிக்கம் நாவலில் விரைவு காரணமாக அம்மா என்ற சொல்லையும், கோபத்தை வெளிப்படுத்தும் வகையில் ஆத்திரம் என்ற சொல்லையும், மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் விழுந்து என்ற சொல்லையும் பயன்படுத்தி உள்ளார். அடுக்குத் தொடர்கள் கதையை எளிமையாகப் புரிந்து கொள்வதற்கு மிகவும் உறுதுணையாக அமைந்துள்ளன. இதைப் போன்று இன்னும் பல அடுக்குத் தொடர்கள் இந்நாவலில் பெறுகின்றன.

இரட்டைக்கிளவி

கிளவி என்பது சொல்லைக் குறிக்கும். இரட்டைக்கிளவியைப் பிரிக்க முடியாது. பிரித்தால் பொருள் தராது. இரட்டைச் சொல்லாகவே சேர்ந்து வரும். இரண்டு சொற்களைப் போலத் தோற்றமளித்தாலும் ஒரே சொல்தான். இரட்டைக்கிளவி என்பது இரண்டு சொற்களாய்ச் சேர்ந்து ஒரு தன்மை பெற்று நின்று வினைக்கு அடைமொழியாய்க் குறிப்புப் பொருள் உணர்த்தி வருவதாகும்.

“இசையும் குறிப்பும் பண்பும் பற்றி சில சொற்கள் இரட்டித்தே வரும். அவை இரட்டைக்கிளவி எனப்படும். இரட்டைக்கிளவி அவ்விரட்டில் பிரிந்து தனித்து ஒழியா (சு.கு அருணாசலம் கல்லூரித் தமிழ் இலக்கணத் தெளிவு 128)”

  • “இறால்களை 'மளமள'வென்று எடுத்துப் போட்டுக் கொண்டே வந்தார்”. (மாணிக்கம் ப 11)
  • “வெங்கிடுசாமியும் நாஞ்சியும் மடமடவென உடைத்துப் போட்டார்கள்” (மாணிக்கம் 27)
  • கிடாய்களிரண்டுமே நல்ல மேனியாய் கொழுகொழுவென்று வளர்ந்து நின்றன.(மா – 58)
  • வேப்பெண்ணையை கடகடவெனக் குடித்தால் (மாணிக்கம் 113)
  • மாணிக்கத்தின் உடம்பு கணகணவென்று காய்ந்தது. (மா – 137).

இத்தொடர்களில் மளமள, மடமட, கடகட என்ற சொற்கள் வெவ்வேறாக இருந்தாலும் விரைவாக என்ற ஒரே பொருளைத் தரக்கூடியனவாக  உள்ளன. ஆனால் அந்தந்தச் சூழலுக்குத் தகுந்தபடி வெவ்வேறு இரட்டைக்கிளவிச் சொற்களைப் பயன்படுத்தி இருப்பதன் நோக்கம் தொடர்ந்து ஒரே மாதிரியான சொற்களைப் பயன்படுத்தினால் படிக்கும் வேகம் குறையும் என்பதற்காக வேறுபட்ட இரண்டு கிளவிச் சொற்களைப் பயன்படுத்தி உள்ளார். வேறுபட்ட சொற்கள் வாசகர்களிடம் படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

எண்ணும்மைகள்

கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் ‘உம்’ எனும் விகுதி இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட முறையோ வெளிப்படையாக வருமாயின், அது எண்ணும்மைகள் எனப்படும்.

  • மாணிக்கமும் நாஞ்சியும் வீட்டு வாசலில் சைக்கிளை நிறுத்தியது தான் தாமதம் – (மா_2-20) - மாணிக்கமும் நாஞ்சியும்
  • தனியாக மகனும் கணவனும் மட்டும் கடலுக்குப் போய் இருக்கிறார்கள் என்பதைக் கேள்விப்பட்டது முதல் வேண்டாத தெய்வங்களை எல்லாம் வேண்டிக் கொண்டிருந்தாள் செல்லாயி - (மா -19) - மகனும் கணவனும்
  • சேற்றையும் சுண்ணாம்பையும் காயத்தில் அப்புவாள் – (மா -32) சேற்றையும் சுண்ணாம்பையும்
  • வலைத்தென்னி முடித்த போது வலைக்குக் கீழே தரையில் ஒரு முறமளவுக்கு மட்டியும், சங்கும், நெருப்பு நண்டும், அதன் கால்களும், உமிரிச்செடியும் உதிர்ந்து கிடந்தன. – (மா-36)-மட்டியும், சங்கும், நெருப்பு நண்டும், அதன் கால்களும், உமிரிச்செடியும்

இவ்வாறாக ‘உம்’ எனும் விகுதி வெளிப்படையாக வரும் எண்ணும்மைகளை்  இந்நாவலில் இன்னும் பல இடங்களில்  ஆசிரியர் பயன்படுத்தியுள்ளார்.

பழமொழிகள்

பழமொழி என்பது ஒரு சமுதாயத்தில் நீண்ட காலமாகப் புழக்கத்தில் இருந்து வரும் அனுபவ அறிவுரைகள் ஆகும். இவை பெரும்பாலும் பதிவு செய்யப்படாத வாய்மொழி வழக்காகவும், நாட்டுப்புறவியலின் ஒரு கூறாகவும் அமைகின்றன. பழமொழிகளையும் வட்டார வழக்குத் தன்மையில் எடுத்துரைப்பதன் நோக்கம் அந்தந்த வட்டார வழக்குச் சொற்களை பிற வட்டாரத்தைச் சேர்ந்த மக்களும் புரிந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படைக் காரணமாகும்.

  • ரெண்டியருமே ஒரே குட்டையில வூறுன மட்டதான உனக்கு மட்டும் எங்கே இருந்து வந்துடும் நல்ல புத்தி,? ( மாணிக்கம் 37)
  • நண்டு கொழுத்த வளயில தங்குமா? (மாணிக்கம் ப 134)
  • தாயும் புள்ளையுமாயிருந்தாலும் வாயும் வயிறும் வேற வேறங்குறது உண்மைதானே? (மாணிக்கம் 158)

பழமொழி வழியாக வாசகர்களுக்குக் கருத்துக்களை எடுத்துரைப்பதன் மூலம் வாசகர்கள் கதையை எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். அதே சமயம் பழமொழிகள் மக்கள் மத்தியில் எளிமையாக புழக்கத்திற்கு வரும்; பழமொழிகளை அழியாமல் காப்பாற்றவும் முடியும் என்ற நோக்கத்தில் பழமொழிகளை மிகுதியாகப் பயன்படுத்தியுள்ளார் நூலாசிரியர்.

ஆங்கிலச் சொற்கள்

காலச்சூழலுக்கு ஏற்ப ஆங்கிலத் தொடர்களை அதிகமாகப் பயன்படுத்தி உள்ளார் ஆசிரியர். முற்காலத்தில் வடமொழி மற்றும் பிற மொழிகளைக் கலந்து எழுதுவதைப் போல இக்காலத்தில் ஆங்கிலத்தைக் கலந்து எழுதும் பழக்கம் அதிகமாகி உள்ளது.

  • கப்பல்களில் செல்வோர் பயன்படுத்திவிட்டுப் போகும் தண்ணீர் பாட்டில்கள், டப்பாக்கள் போன்றவை எங்கிருந்து எல்லாமோ மிதந்து வந்து கரையில் ஒதுங்கும். (மாணிக்கம் 300)
  • இரண்டு வெல்டிங் மிஷின்களை வாங்கிப் போட்டு எளிமையாக பட்டறையை ஆரம்பிக்க வேண்டும் என்றாலும் குறைந்தது 30,000 ஆவது ஆகுமாம். (மாணிக்கம் 301)

தமிழ், ஆங்கிலம் கலந்து மொழிபெயர்ப்பு செய்து தன் நூலில் ஆசிரியர் பயன்படுத்தி உள்ளார். இதன் வாயிலாக ஆங்கிலச் சொற்களையும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற கருத்தினை அறிய முடிகிறது.

முரண் தொடை

இலக்கண இலக்கியங்களில் அடியோ சீரோ ஒன்றுக்கொன்று எதிர்நிலையாக நிற்பது முரண் தொடை என்று அழைக்கப்படுகிறது.

படிக்கின்றவரைக் கட்டி இழுத்து ஒரே இடத்தில் அமர்ந்து படிக்கத் தூண்டும் ஆற்றல் உடையது முரண் தொடை. சொல்லும் பொருளும் முரண்பட்டு வருதல் ஐந்து வகைகளில் அமையும்..

1.      சொல்லும் சொல்லும் முரண்பட்டு வருதல்

2.      பொருளும் பொருளும் முரண்பட்டு வருதல்

3.      சொல்லும் பொருளும் சொல்லோடு முரண்பட்டு வருதல்

4.      சொல்லும் பொருளும் பொருளோடு முரண்பட்டு வருதல்

5.      சொல்லும் பொருளும் சொல்லோடும் பொருளோடும் முரண்பட்டு வருதல் என எல்லா தொடர்களும் இதன் அடிப்படையிலேயே அமைகின்றன.

“மொழியினும் பொருளினும் முரணுதல் முரணே” (தொல்.பொருள் 1352)

  • இரவும் பகலும் உடையப்பனின் பக்கத்திலே இருந்து கவனித்தான் (மா -139) – சொல்லும் சொல்லும் முரண்பட்டு வருதல்
  • குறுக்குமாய் நெடுக்குமாய் ஓடியது மாடன் (மா – 60) – பொருளும் பொருளும் முரண்பட்டு வருதல்
  • வலையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக மீன்கள் கிடந்தன. (மாணிக்கம் 10 ) – சொல்லும் பொருளும் சொல்லோடு முரண்பட்டு வருதல்
  • விடிந்ததும் விடியாதுமாய் மாணிக்கம் வந்திருப்பதைக் கேள்விப்பட்டு ஓடி வந்தான் முருகையன் (மா -135) சொல்லும் பொருளும் பொருளோடு முரண்பட்டு வருதல்
  • கீழே பாதியும் மேலே பாதியுமாக கொட்டி இறைத்துக்கொண்டே சாப்பிட்டார். (மாணிக்கம் 50)
  • பத்தியம் போட்டதிலிருந்து காலையும் மாலையும் இரண்டு வேளை மருந்து மட்டுமே கொடுத்தாள். (மாணிக்கம் 118)

அங்கொன்றும் இங்கொன்றும், கீழே மேலே, காலை மாலை போன்று இன்னும் பல தொடர்களில் முரண்பட்டு வரும் வகையில் அமைத்துள்ளார் ஆசிரியர். முரண் சொற்களைக் கொண்ட தொடர்களை அதிகமாகப் பயன்படுத்தி உள்ளார். இதன் அடிப்படையில் கருத்துக்களை விரைவில் உள்வாங்கி கொள்ள முடியும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் பதிவு செய்துள்ளார்.

நாட்டுப்புறப் பாடல்

நாட்டுப்புறப் பாடல் என்பது ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் அல்லது மக்களின் அன்றாட வாழ்விலும், விழாக்களிலும், இன்பத்திலும், துன்பத்திலும், தொழிற்சார் பணிகளின் போதும் பாடப்படும் பாடல் ஆகும்.

  • மாமரத்து கீழ நின்னு யாம்

       மனக்கொறைய சொன்னேன்னுன்னா

       மாங்கா தெறிச்சி வுழும்

       மாமரமும் இத்து விழும்….              (மா -44)

  • கருவ மரத்தடியே நான்

       காயாடும் போதல்லவோ

       காயாட்டதத்தாம் மறந்து – இந்த

       கருணருக்கு மாலயிட்டேன்...          (மா -70)

இப்பாடல்கள் பெண்ணொருத்தியின் மனக்குமுறலைக் கூறுவதாக அமைந்துள்ளது.

  • ராராரோ ரா ரி ரா ரோ….

       யாங்கண்ணே ராராரோ….

       வானத்து மீ….னோ…ஓ…

       மேகத்து….. மின்னொளியோ…ஓ…..(மா -114)

மேலே வரும் பாடல் தாய் தன் குழந்தைக்கு பாடும் தாலாட்டு பாடலாக அமைந்துள்ளது.

  • சாதி எலுமிச்ச சமுத்திரத்து நீர் வாழ சாதியிலே காய்க்காமல்    சனம்வெலவி காய்ச்சேனே...

(மா -144)

எனத் தொடங்கும் இப்பாடல் ஒரு பெண்ணின் ஒப்பாரிப் பாடலாக அமைகிறது.

தொகுப்புரை

சு.தமிழ்ச்செல்வி அவர்கள் தன் முதல் நாவலான மாணிக்கம் நாவலில் சொற்களை இலக்கண, இலக்கியத் தேவையைக் கருதிப் பயன்படுத்தி உள்ளதை கட்டுரையின்் வாயிலாக அறிய முடிகின்றது. அதே சமயத்தில், நாவலைப் படித்துக் கதையை அறிந்து கொள்வதோடு மட்டுமல்லாமல் இலக்கண, இலக்கியக் கூறுகளையும், படிக்கின்ற வாசகர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் எண்ணுப்பெயர், இணைமொழிகள், பழமொழிகள், இரட்டைக்கிளவி, அடுக்குத் தொடர், வினாத் தொடர், ஆங்கில சொற்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி உள்ளார். இலக்கண, இலக்கியக் கூறுகளை எளிமைப்படுத்தி நாவலில் பயன்படுத்தி உள்ளதன் அடிப்படையில் மிக எளிமையாகக் கதையைப் புரிந்து கொள்ள வாய்ப்புள்ளது என்பதில் ஐயமில்லை.

துணை நின்ற நூல்கள்

  • மாணிக்கம் - சு தமிழ்ச்செல்வி - நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் சென்னை 2007
  • தொல்காப்பியம் தெளிவுரை – ச.வே. சுப்பிரமணியன் - மணிவாசகர் பதிப்பகம் சென்னை 2003
  • தொல்காப்பியம் – தமிழண்ணல் - மீனாட்சி புத்தக நிலையம் மதுரை 2010
  • மொழியியல் தொல்லியல் அனைத்திந்திய மொழியியல் கழக வெளியீடு – ச.அகத்தியலிங்கம் சென்னை 1979.

கட்டுரையாளர்கள்:

த.கோமதி, முனைவர் பட்ட ஆய்வாளர் (முழு நேரம்), முதுகலை & தமிழாய்வுத் துறை, முத்துரங்கம் அரசினர் கலைக் கல்லூரி (தன்னாட்சி), வேலூர்-2

நெறியாளர்: முனைவர் இரா.சிவகுமார், இணைப் பேராசிரியர் & நெறியாளர், முதுகலை & தமிழாய்வுத் துறை, முத்துரங்கம் அரசினர் கலைக் கல்லூரி (தன்னாட்சி),வேலூர்-2