ஃபியோதர் தோஸ்தோயெவ்ஸ்கியின் வெண்ணிற இரவுகள் வெளிவந்து, White Nights 178 ஆண்டுகள் கடந்து விட்டன. உலகம் முழுவதும் 40க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, உலக இலக்கியத்தில் அதிகமாக மொழிபெயர்க்கப்பட்ட காதல்–உளவியல் படைப்புகளில் ஒன்றாக விளங்குகிறது. இது பல பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டங்களில் இடம்பெற்று கல்வியியல் முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது. மேலும், பல நாடுகளில் திரைப்படம், நாடகம், பாலே போன்ற கலைவடிவங்களாக மாற்றப்பட்டு, பரவலான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படைப்பின் மூலம் மனித மனத்தை ஆழமாக ஆராயும் மனவியல் யதார்த்தவாதத்தின் தலைசிறந்த எழுத்தாளராக ஃபியோதர் தோஸ்தோயெவ்ஸ்கி உலக அளவில் அங்கீகரிக்கப்பட்டார்.
ஃபியோதர் தோஸ்தோயெவ்ஸ்கி எழுதிய வெண்ணிற இரவுகள் (White Nights) 1848ஆம் ஆண்டில் எழுதப்பட்ட ஒரு குறுநாவல். இது அவரது இலக்கிய வாழ்க்கையின் தொடக்கக்காலப் படைப்பாக இருந்தாலும், மனித மனத்தின் ஆழமான உணர்வுகளை வெளிப்படுத்தும் சிறந்த படைப்பாகும். Crime and Punishment, The Brothers Karamazov போன்ற அவரது பிற்கால நாவல்களில் இருப்பதைப் போல சிக்கலான தத்துவ விவாதங்கள் இதில் இல்லை. ஆனால் தனிமை, நிறைவேறாத காதல், ஒரு கணம் கிடைக்கும் மகிழ்ச்சியின் மதிப்பினை வெளிப்படுத்துதல் போன்றவை இந்தக் குறுநாவலை மிகவும் உன்னதமானதாக மாற்றுகின்றன.
இந்தக் கதை ரஷ்யா நாட்டில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரத்தில் நடைபெறுகிறது. கோடைக்காலத்தில் அந்த நகரத்தில் இருள் முழுமையாக இறங்காத இரவுகள் இருக்கும். அவற்றையே “வெண்ணிற இரவுகள்” என்று அழைப்பார்கள். இந்தச் சூழல் கதைக்கு ஒரு கனவுத்தன்மையை அளிக்கிறது. பகலும் இரவும் தெளிவாகப் பிரியாத நிலை - அதாவது, இரவும் பகலும் கலந்த நிலை. இது கதாநாயகனின் கனவுக்கும் யதார்த்தத்துக்கும் இடையிலான குழப்பத்தைக் குறிக்கிறது. நகரமே ஒரு மனநிலையாக மாறி, கதையின் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் இடமாகச் செயல்படுகிறது.
செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரத்தில், பகலும் இரவும் ஒன்றோடொன்று கலந்திருந்தன. தெருக்கள் மென்மையாக மின்னின; பாலங்களில் மனிதர்களின் மெதுவான காலடி ஓசை; இரவிலும் கால்வாய்களில் வானம் பிரதிபலித்தது. இவைதான் “வெண்ணிற இரவுகள்” — கனவுக்கும் யதார்த்தத்துக்கும் நடுவே தொங்கிக் கொண்டிருக்கும் தருணங்கள். அந்த இரவுகளின் ஒன்றில்தான், தனிமையில் மூழ்கிய ஒரு கனவுலகவாதியான அந்த இளைஞனின் கதை தொடங்குகிறது.
நகரத்தில் எட்டு ஆண்டுகளாக வாழ்ந்திருந்தாலும், அவனுக்கு உண்மையான நண்பர்கள் என்று ஒருவரும் இல்லை. அவனது நாட்கள் தெருக்களில் நடந்து செல்வதிலே கழிந்தன. மனிதர்களை விட அங்குள்ள கட்டடங்களே அவனுக்கு நெருக்கமானவை. ஒவ்வொரு வீடும், ஒவ்வொரு பால்கனியும், ஒவ்வொரு சுவரும்—அவனுக்கு நன்கு பரிச்சயம். அவன் விரும்பிய ஒரு வீடு புதிய நிறத்தில் பூசப்பட்டிருந்தால், அது அவனுக்குத் துரோகம் செய்ததுபோல் தோன்றும். மனித உறவுகள் அவனை அச்சுறுத்தின. மனிதர்கள் புரியாதவர்கள், அணுக முடியாதவர்கள் என அவனுக்குத் தோன்றியது. ஆகவே அவன் தன்னைக் கனவுலகத்துக்குள் ஒளித்துக் கொண்டான். அங்கே உரையாடல்கள் எளியவை; அன்பு பாதுகாப்பானது.
அவன் தன்னைக் “கனவுலகவாதி” என்று அழைத்துக் கொண்டான். அவன் கனவுகள் பெருமையுடனோ வீரத்துடனோ கூடியவை அல்ல; அவை வெறும் மனித நெருக்கம், நட்பு, அன்பு பற்றிய மெல்லிய கற்பனைகள். அவன் வாழாத வாழ்க்கைகளில் தான் இருப்பதாகக் கற்பனை செய்தான். அவனது சிறிய வாடகை அறையில் தான் அவன் முழு உலகமும் இருந்தது. அவன் அதை அப்படியே உருவாக்கினான். ஆனால் விழித்தபின், வெறுமை இன்னும் கூர்மையாகக் குத்தும். இருந்தாலும், அவன் அந்தத் தனிமையை ஏற்றுக்கொண்டான் - பழகிய நண்பரை போல.
ஓர் இரவு, வழக்கத்தை விட மனம் கலங்கிய நிலையில், அவன் தனக்குத் தெரிந்த பாதைகளைத் தாண்டி நடந்தான். நகரம் அசாதாரணமாக அமைதியாக இருந்தது. மங்கலான ஒளி எங்கும் பரவியிருந்தது. ஒரு பாலத்தைக் கடக்கும்போது, கம்பியில் சாய்ந்து நின்று அழுது கொண்டிருந்த ஓர் இளம் பெண்ணை அவன் கவனித்தான். அவள் அமைதியாக அழுதுகொண்டிருந்தாள். அந்தக் காட்சி அவன் உள்ளத்தில் ஏதோ செய்தது. புதிதாக மனதில் ஒன்று அசைந்தது. மனித உள்ளத்தை நோக்கி ஒரு திடீர் ஈர்ப்பு.
அவன் அவளிடம் பேசத் தயங்கியபோது, ஒரு குடிகாரன் அவளிடம் நெருங்கி அநாகரிகமாக எதோ பேசத் தொடங்கினான். அச்சமயம், அவனது தயக்கம் ஒதுங்கியது. அவன் அந்தப் பெண்ணுக்கும் அந்த மனிதனுக்கும் நடுவே போய் நின்றான். மென்மையாகவும் உறுதியாகவும் பேசி, அந்த மனிதனை விரட்டினான். அவன் முணுமுணுத்துக்கொண்டே நகர்ந்து சென்றுவிட்டான். அந்தப் பெண் தன்னைப் பாதுகாத்த அவனைப் பார்த்தாள் - அச்சமும் நன்றியும் கலந்த பார்வையுடன். அந்த நொடி, மிகவும் மென்மையானது; உணர்வுப்பூர்வமானது அதுவே எல்லாவற்றிற்கும் தொடக்கம்.
அவர்கள் சேர்ந்து நடக்கத் தொடங்கினர். ஆரம்பத்தில் அந்தப் பெண் எச்சரிக்கையுடன் இருந்தாள். தனது நட்பைத் தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம் என்று அவனிடம் கூறினாள். அவனை நம்புவதற்கான ஒரே காரணம்—அவன் அவளைக் காத்ததுமட்டுமல்ல, அவனது வெகுளித்தனமான பேச்சும் நேர்மையும் அவனை ஆபத்தில்லாதவனாகக் காட்டின. அவனுக்கு அவளுடன் சேர்ந்து நடப்பதே ஆனந்தம். இதுவே போதும் என்று இருந்தது.
அவள் பெயர் நஸ்தென்கா. இளம்பெண், நேர்மையான மனம், நம்பிக்கையும் சோகமும் கலந்த குரல். அவள் அந்தப் பாலத்திற்கு அடிக்கடி வருவதற்குக் காரணம் ஒருவன். அவன் அது பற்றி அதிகம் கேட்கவில்லை. இந்த மென்மையான உறவு உடைந்து போய்விடுமோ என்ற பயம் அவனை அடக்கியது.
இரவு விரைவாக முடிந்தது. பிரியும் இடத்தில், நஸ்தென்கா தயங்கினாள். மறுநாள் அதே இடத்தில் சந்திக்கலாமா என்று கேட்டாள். அந்தக் கேள்வி அவனை அதிர்ச்சியடையச் செய்தது. எட்டு ஆண்டுகளில் கிடைக்காத மகிழ்ச்சி ஒரு நொடியில் வந்தது. அவன் உடனே சம்மதித்தான். அவள் சென்றபின், அவன் அங்கேயே நின்றான். ஒருவர் தன்னை வாழ்க்கைக்குள் அழைத்திருக்கிறார் என்ற உணர்வில் திளைத்தான்.
அடுத்த இரவு, அவன் மிகவும் முன்பே வந்தான். நஸ்தென்கா வந்தபோது, அவனுக்கு அந்த ஆனந்தம் வலியாகவே இருந்தது. இப்போது அவர்கள் முன்புபோல் இல்லாமல் சுதந்திரமாகப் பேசினர். அவன் தன் தனிமையை அவளுடன் பகிர்ந்தான். கற்பனையில் அதிகம் வாழும் வாழ்க்கையை, மனிதர்களிடம் இருந்து விலகியிருப்பதை, அவன் இதுவரை யாரிடமும் சொல்லாத உண்மைகளை அவளிடம் சொன்னான்.
நஸ்தென்கா அவனை இகழவில்லை. பரிதாபத்துடன் கேட்டாள். அவனது நேர்மை அவளை நெகிழச் செய்தது.
அவள் தன் கதையைச் சொன்னாள். அவள் கண்பார்வை இழந்த தன் பாட்டியுடன் வாழ்ந்தாள். தன் பேத்தியைவிட்டுப் பிரிய மனம் இல்லாத பாட்டி, தினமும் நஸ்தென்காவின் ஆடையுடன் தன் ஆடையையும் இணைத்து ஒரு முடிச்சுப் போட்டு அதில் ஓர் ஊக்கையும் மாட்டிக்கொள்வாள். தினசரியும் இப்படித்தான் அந்தக் கட்டுப்பாடு, அவளைச் சிறையில் அடைத்ததுபோல் இருந்தது,
ஒரு வருடத்திற்கு முன்பு, அவர்கள் வீட்டின் மாடியில் ஓர் இளைஞன் வாடகைக்குத் தங்கியிருந்தான். அவன் நல்லவன், புரிந்துகொள்ளும் மனம் கொண்டவன். நஸ்தென்கா அவனைக் காதலித்தாள். அவன் சொந்த ஊர்சென்று திரும்பி வந்து அவளை அழைத்துச் செல்வதாக வாக்குறுதி அளித்தான். அவள் நம்பினாள்.
ஒரு வருடம் கடந்தது. அவன் வரவில்லை. ஆனாலும் அவள் தன்னுடைய நம்பிக்கையை விடவில்லை. தினமும் அவர்கள் சந்திக்கும் அந்தப் பாலத்தின் அருகில் காத்திருந்தாள்.
இந்தக் கதையைக் கேட்ட அந்த இளைஞனின் மனம் வருந்தியது. அவளது இதயம் ஏற்கெனவே ஒருவனுக்குச் சொந்தம் என்பதை உணர்ந்தான். இருந்தாலும், அவன் அவளை விட்டு விலகவில்லை. 'நாம் நண்பர்களாக இருப்போம்' என்று கூறி அவளது காத்திருப்பில் துணையாக இருப்பதாக வாக்குக் கொடுத்தான்.
அடுத்தடுத்த இரவுகளில், அவர்களது உறவு மிகவும் ஆழமானது. அவன் அவளைக் காதலிக்கத் தொடங்கினான். அவன் இதுவரை அறியாத உணர்வு அது. அவள் முகபாவனைகள், அவள் குரல்—எல்லாம் அவன் மனத்தில் அப்படியே பதிந்ததுவிட்டடன.
ஓர் இரவு, அவன் தன் காதலை அவளிடம் வெளிப்படுத்தினான். அவள் மகிழ்ச்சியில் தடை செய்யமாட்டேன் என்றும் உறுதியோடு கூறினான். நஸ்தென்கா குழம்பினாள். ஒரு நிமிடம், அவன் மீது அப்படியே சாய்ந்தாள்.
ஆனால் அடுத்த இரவு, அவர்கள் சந்தித்தபோது அவளின் காதலன் திரும்பி வந்திருந்தான். இது எதிர்பாராதது. கனவுலகவாதியான அந்த இளைஞனின் உலகம் உள்ளே சிதைந்தது. ஆனாலும் அவன் சிரித்தான். அவளுடைய மகிழ்ச்சியை விரும்பினான். அந்த மனிதன் வந்தபோது, நஸ்தென்கா உணர்ச்சி பொங்க அவனிடம் ஓடினாள். போகும் முன், அவள் அந்த இளைஞனைப் பார்த்துக் கலங்கினாள், தடுமாறினாள். அவளா்ல் உணர்வுகளைக் கட்டுப்படுத்தமுடியாமல் அவனிடம் வந்து நன்றி சொன்னாள். பின்பு அவனைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொள்டே அவள் தன் பழைய காதலுடன் சென்றுவிட்டாள். இப்போது வெண்ணிற இரவுகள் வெறுமையாக இருந்தன. சில நாட்களில் அவளிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. அவன் செய்த அன்புக்கு நன்றி என்றும், அவனை என்றும் உயிர்நண்பனாக நினைப்பதாகவும் எழுதியிருந்தாள்.
அவன் அந்தக் கடிதத்தை வாசித்து அழுதான். கோபம் இல்லை. நன்றியுணர்வே இருந்தது. அந்த நான்கு இரவுகள் அவனை மாற்றியிருந்தன. அவன் வாழ்ந்திருந்தான். காதலித்திருந்தான். இப்போது அவன் தனியாக இருந்தாலும், வெறுமையில்லை. ஒரு கணம் கிடைத்த உண்மையான அன்பு தன் வாழ்நாளுக்குப் போதுமானது என்று அவன் உணர்ந்தான். வெண்ணிறஇரவுகள் மெல்ல மறைந்தன. இருள் திரும்பியது. ஆனால், அவன் உள்ளத்தில், ஒரு மென்மையான ஒளி எப்போதும் தங்கியிருந்தது.
இந்தக் கதையின் கதைசொல்லி ஓர் இளைஞன். அவனுக்குப் பெயர் குறிப்பிடவில்லை. அவனை நாம் கனவுலகவாதி என்று அழைக்கலாம். அவன் பல ஆண்டுகளாக செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரத்தில் வாழ்ந்தாலும், உண்மையான நண்பர்கள் என்று யாரும் அவனுக்கு இல்லை. அவனது தனிமை சமூக நிராகரிப்பால் உருவானது அன்று; மனிதர்களிடம் நெருங்குவதற்கான மனப்பயத்தால் உருவானது. மனித உறவுகள் அவனுக்குச் சிக்கலானவை. ஆகவே அவன் வாழ்க்கையை வேடிக்கை பார்க்கும் ஒருவனாக மட்டுமே இருந்து, வாழ்வில் பங்கேற்காமல், கனவுகளுக்குள் வாழ்கிறான்.
தோஸ்தோயெவ்ஸ்கி இந்தக் கனவுலகவாதியை மிகுந்த உணர்ச்சியுள்ள மனிதனாக வர்ணிக்கிறார். ஆனால் அதே நேரத்தில், அவன் முழுமையாக மனவளர்ச்சி இல்லாதவனாகவும் காட்டப்படுகிறான். அவன் தனிமையை ஒரு வாழ்க்கை முறையாக ஏற்றுக்கொள்கிறான். உண்மையான உறவுகளைத் தேடாமல், கனவுகள் போதுமானவை என்று தன்னைத் தானே ஏமாற்றிக்கொள்கிறான். இந்த மனப்பாங்கு அவனைத் தற்காலிகமாகப் பாதுகாத்தாலும், அவன் தன்வாழ்க்கையை முழுமையாக வாழ முடியாமல் போகிறான்.
கதை நஸ்தென்கா என்ற இளம் பெண்னை அந்த இளைஞன் சந்திக்கும் நிகழ்வுடன் தொடங்குகிறது. ஒரு பாலத்தில் அழுதுகொண்டிருந்த அவளை ஒரு குடிகாரனிடமிருந்து காப்பாற்றும் தருணம், கனவுலகவாதியின் வாழ்க்கையில் முக்கியமான திருப்பமாக அமைகிறது. அந்த நொடியில்தான் அவன் பார்வையாளராக இருந்து, செயலில் இறங்குகிறான். இது அவன் வாழ்க்கையில் யதார்த்தம் நுழையும் முதல் தருணமாகும்.
நான்கு இரவுகள் அந்த இளைஞனும் நஸ்தென்காவும் சந்தித்துப் பேசுகிறார்கள். இந்த உரையாடல்கள்தான் கதையின் மையம். ஒவ்வோர் இரவும் அவர்களுக்கிடையிலான நெருக்கத்தை அதிகரிக்கிறது. அதே நேரத்தில், இந்த உறவு தற்காலிகமானது என்பதையும் வாசகனுக்கு உணர்த்துகிறது. குறுகிய கால எல்லை, அவர்களின் உணர்ச்சிகளின் தீவிரத்தைக் கூட்டுகிறது.
நஸ்தென்கா அந்தக் கனவுலகவாதி இளைஞனுக்கு எதிர்மறையான பாத்திரம். அவள் கனவுகளில் வாழவில்லை; உண்மையான வாழ்க்கையை விரும்புகிறாள். ஆனால் அவள் மிகுந்த மனச்சார்பு கொண்டவள். அவள் கண் தெரியாத பாட்டியுடன் வாழ்கிறாள். பாட்டியின் அன்பு கட்டுப்பாடாக மாறி, நஸ்தென்காவின் சுதந்திரத்தினைத் தடுக்கிறது. இதன் காரணமாக, அவள் காதல் மீது நம்பிக்கை கொள்கிறாள்.
அவள் தன் காதலனை எதிர்பார்த்துக் காத்திருக்கும் கதை, அவளது மனநிலையை வெளிப்படுத்துகிறது. அவள் வாழ்க்கையின் முழு எதிர்காலத்தையும் ஒரே மனிதனின் மீது வைத்திருக்கிறாள். இது நம்பிக்கையாகத் தோன்றினாலும், ஒரு விதமான மனஅடிமைத்தனமாகவும் இருக்கிறது. இங்கு தோஸ்தோயெவ்ஸ்கி தனிமைக்கு இரண்டு விதமான பதில்களைக் காட்டுகிறார் - கனவுலகவாதியின் கனவுலகத் தப்பிப்பு மற்றும் நஸ்தென்காவின் காதல்.
கனவுலகவாதி நஸ்தென்காவைக் காதலிக்கிறான். அவன் காதல் மென்மையானது, தியாகமானது. அவன் அவளை அடைய முயலவில்லை. அவளது மகிழ்ச்சியே அவனுக்குப் பிரதானம். இது அவனது உயர்ந்த மனநிலையையும், அதே நேரத்தில் அவன் தன்னை மதிக்காத தன்மையையும் காட்டுகிறது.
அந்தக் கனவுலகவாதி தன் காதலை வெளிப்படுத்தும் தருணம் மிகவும் உணர்ச்சிபூர்வமானது. அவன் எந்த எதிர்பார்ப்புமின்றி உண்மையைச் சொல்கிறான். நிராகரிப்பு ஏற்படலாம் என்பதை அறிந்தும், அவன் தன் காதலை வெளிப்படுத்துகிறான். தோஸ்தோயெவ்ஸ்கி ஒருதலைக் காதலை மனித அனுபவத்தின் இயல்பான ஒரு பகுதியாக இங்கு காட்டுகிறார்.
நஸ்தென்காவின் பழைய காதலன் திரும்பி வரும் போது, கதையின் உச்சக்கட்டம் வருகிறது. கனவுலகவாதியின் நம்பிக்கை உடைகிறது. ஆனால் அவன் கோபப்படுவதில்லை. அவளுடைய மகிழ்ச்சிக்காக அவன் விலகி நிற்கிறான். இது அவனது மனிதநேயத்தின் உச்சமாகும். அதே நேரத்தில், அவன் தன்னை இழப்பதையும் காட்டுகிறது.
கதையின் முடிவு அமைதியானது. நஸ்தென்கா சென்றபின், கனவுலகவாதி மீண்டும் தனிமைக்குத் திரும்புகிறான். ஆனால் அவன் பழைய மனிதன் அல்லன்; அவன் உணர்ச்சிகளை அனுபவித்திருக்கிறான். நஸ்தென்காவின் கடிதம், அவர்களது உறவு உண்மையானது என்பதை உறுதிப்படுத்துகிறது.
இந்தக் குறுநாவலின் முக்கிய கருப்பொருள் நகர்ப்புறத் தனிமை ஆகும். மனிதர்கள் அருகருகே வாழ்ந்தாலும், மனதளவில் வெகுதூரம் இருக்கிறார்கள் என்பதை தோஸ்தோயெவ்ஸ்கி காட்டுகிறார். இந்தக் கருத்து இன்றைய உலகுக்கும் மிகப் பொருத்தமானதாக உள்ளது.
கனவுக்கும் யதார்த்தத்துக்கும் இடையிலான மோதல் மற்றொரு முக்கிய கருப்பொருள். கனவுலகவாதியின் கற்பனை உலகம் அவனைப் பாதுகாக்கிறது; ஆனால் மாற்றத்தை அளிப்பது யதார்த்தமே! என்று இந்தக் கதை சொல்கிறது.
“வெண்ணிற இரவுகள்” என்ற பொருள் (symbol) கதையின் மையமாக உள்ளது. அந்த ஒளி நிரந்தரமன்று; அதுபோலவே கனவுலகவாதியின் மகிழ்ச்சியும் தற்காலிகமானது. இருள் திரும்பும்போது, அவன் வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
தத்துவ ரீதியாக, இந்தக் கதை ஒரு கேள்வியை எழுப்புகிறது: ஒரு கணம் கிடைக்கும் உண்மையான மகிழ்ச்சி, ஒரு வாழ்நாளுக்குப் போதுமா? தோஸ்தோயெவ்ஸ்கி இதற்கு ‘ஆம்’ என்று மறைமுகமாகப் பதிலளிக்கிறார்.
மொழிநடை ரீதியாக, White Nights மென்மையான, இசைபோன்ற தன்மையுள்ள எழுத்தாகும். முதல் நபரின் உரையாடல் வாசகனைக் கனவுலகவாதி மனத்துக்குள் அழைத்துச் செல்கிறது. சில நேரங்களில் உணர்ச்சி அதிகமாகத் தோன்றினாலும், அது கதையின் தன்மைக்கு ஏற்றதாக உள்ளது.
வெண்ணிற இரவுகள் (White Nights) என்பது தனிமை, காதல், மனித மனத்தின் பலவீனம் ஆகியவற்றை ஆழமாக ஆராயும் ஓர் அழகான படைப்பு. சிறிய நிகழ்வுகள் மூலம் பெரிய உண்மைகளைச் சொல்வதே இந்தக் கதையின் சிறப்பு. இன்றைய காலத்திலும் இந்தக் குறுநாவல் மனித உறவுகளின் அவசியத்தை நமக்கு நினைவூட்டுகிறது.
மொழி, நடைவிவரிப்பு
இந்தக் குறுநாவலின் மொழி மென்மையானது, உணர்ச்சி நிறைந்தது, ஆனால் மிகைப்படுத்தப்படாதது. தோஸ்தோயெவ்ஸ்கியின் ஆரம்பகால எழுத்து என்பதால், இங்கு கவிதைத் தன்மை (lyrical quality) அதிகமாகத் தெரிகிறது. வாக்கியங்கள் நீளமாக இருந்தாலும், அவை மனநிலையின் ஓட்டத்தைப் பிரதிபலிக்கின்றன. கனவுலகவாதியின் உளவுலக அலைச்சல், அவனது எண்ணங்களின் தொடர்ச்சியாக மொழியில் வெளிப்படுகிறது. இதனால் மொழி செயற்கையாக அல்லாமல், மனதிலிருந்து நேரடியாக வெளிவருவது போலத் தோன்றுகிறது.
நடைவிவரிப்பு (style) ரீதியாக, இந்தக் கதை மென்மையான ரொமான்டிக் நடை மற்றும் உளவியல் யதார்த்தவாதத்தின் (psychological realism) கலவையாக உள்ளது. பிற்கால தோஸ்தோயெவ்ஸ்கியின் கடுமையான, தத்துவ நெறி நிறைந்த நடை இங்கு இல்லை. அதற்குப் பதிலாக, தனிமை, தயக்கம், மெளன வேதனை போன்ற உணர்வுகள் மெதுவாகக் கட்டமைக்கப்படுகின்றன. நகரத்தின் விவரிப்புகள் குறைவாக இருந்தாலும், அவை மனநிலையை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ஒரு புவியியல்வகையில் இல்லாமல், கனவுலகவாதியின் மனநிலையின் பிரதிபலிப்பாக மாறுகிறது.
கதைசொல்லும் உத்தி (narrative technique) முதல் நபர் உரையாடலாக அமைந்துள்ளது. இந்த உத்தி வாசகனைக் கதையின் உள்ளே இழுத்துச் செல்கிறது. வாசகர் கனவுலகவாதியின் எண்ணங்கள், நினைவுகள், தயக்கங்கள் அனைத்தையும் நேரடியாக அனுபவிக்கிறார். இந்த நெருக்கம், கதையின் உணர்ச்சித் தாக்கத்தை அதிகரிக்கிறது. ஆனால் இதே உத்தி, கதையின் பார்வையை ஒருபக்கமாகவும் மாற்றுகிறது. நஸ்தென்காவை நாம் முழுமையாக அறிய முடியாமல், கனவுலகவாதியின் பார்வை வழியாக மட்டுமே காண்கிறோம்.
கதையின் கால அமைப்பு மிகச் சுருக்கமானது—நான்கு இரவுகள் மற்றும் ஒரு காலை. இந்தக் குறுகிய கால கட்டமைப்பு, கதையின் தற்காலிக மகிழ்ச்சி என்ற கருத்தை வலுப்படுத்துகிறது. கதை நேர்கோட்டில் (linear narrative) நகர்ந்தாலும், நினைவுகள் மற்றும் உள்ளார்ந்த சிந்தனைகள் மூலம் அது ஆழமடைகிறது. வெளிப்படையான நிகழ்வுகள் குறைவாக இருந்தாலும், உள் நிகழ்வுகள் அதிகமாக உள்ளன. இதுவே இந்தக் கதையின் முக்கிய கதைசொல்லும் சிறப்பாகும்.
உரையாடல்கள் இயல்பானவை, நாடகத்தனமில்லாதவை. அவை கதையை முன்னே நகர்த்துவதுடன், பாத்திரங்களின் மனநிலையையும் வெளிப்படுத்துகின்றன. குறிப்பாக, கனவுலகவாதியின் நீண்ட மனமொழிகள், அவனுடைய தனிமையும், உணர்ச்சிப் பசிப்பையும் தெளிவாக காட்டுகின்றன.
மொத்தத்தில், வெண்ணிற இரவுகள் (White Nights) மொழி, நடை, கதைசொல்லும் உத்தி ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு மென்மையான, உணர்ச்சி நேர்மை கொண்ட படைப்பாக மதிப்பிடப்படுகிறது. பெரிய சம்பவங்கள் இல்லாமலேயே, மனித மனத்தின் ஆழமான உண்மைகளை வெளிப்படுத்தும் திறன் இந்தக் குறுநாவலின் இலக்கிய வெற்றியாகும்.
- பாரதிபாலன்