இறையன்புவின் ஒப்பற்ற எழுத்தாற்றல், நயமிக்க சொல்லாற்றலில் சொக்கிக் கிடக்கும் மாநகர் மதுரைவாசிகள் அதிகம் என்பதால் மதுரை, தெப்பக்குளம் தியாகராசர் கல்லூரியின் புதிய எழில்மிகு அரங்கம் 17.12.2023 ஞாயிறன்று பிற்பகல் நிரம்பி வழிந்தது. தமிழாசிரியர், கவிஞர், எழுத்தாளர் எனப் பன்முக ஆற்றல் கொண்ட ஞா.சந்திரன் வரவேற்க, தீந்தமிழ்த் தியாகராசர் கல்லூரியின் செயலாளர் கருமுத்து ஹரி தியாகராசன் தலைமையேற்க, நியூ செஞ்சரி புக் ஹவுஸ் மேலாண்மை இயக்குநர் தோழர் க.சந்தானம் முன்னிலை உரையாற்ற, இலக்கிய விமர்சகர் ந.முருகேச பாண்டியன் ஆய்வுரையாற்ற, பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் சிறப்புரையாற்ற, நூலாசிரியர் வெ.இறையன்பு அவர்களின் ஏற்புரையுடன் விழா நிறைவுற்றது.iraianbu book releaseதோழர் க.சந்தானம் அவர்களின் உரை...

நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் வாயிலாக வெளிவரும் வெ.இறையன்பு அவர்களின் புத்தகங்கள் யாவுமே பிரமாண்டமானவை, ஒவ்வொரு படைப்பும் தனித்துவம் மிக்கவை. அந்த வரிசையில் என்ன பேசுவது! எப்படிப் பேசுவது! என்ற தலைப்பிலான இந்தப் புத்தகமும் எங்கள் நிறுவன வரலாற்றில் மைல்கல் ஆகும். இவ்வளவு பக்கங்களிலான, நேர்த்தியான தாள், அச்சு முறைகளில் அமைந்த களிக்கோ அட்டை பைண்டிங் ஆன புத்தகப் பிரதிகள் மூவாயிரம் எனும் போது நாங்கள் பயந்தது உண்மைதான், ஆனால், மதுரை மாநகரில் கூடியுள்ள கூட்டத்தையும், புத்தகங்களை வாங்குவோர் பட்டியலையும் பார்த்தபோது எங்களது இயல்பான பயம் போன இடம் தெரியவில்லை. மதுரையை மையமிட்டே எங்களுக்கு மிகப் பொ¤ய வரவேற்பைப் பெற்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. அதற்காக பெருமளவு உழைத்த எங்களது மண்டல மேலாளர், மேலாளர் மற்றும் எமது பணியாளர்கள் பெரிதும் பாராட்டுக்கு உரியவர்கள்.

நூலாசிரியர் வெ.இறையன்பு அவர்களின் ஏற்புரை

தமிழகத்தைப் பொருத்தவரை தற்போது மேடைப்பேச்சு அரிதாகி வருகிறது. சிறு வயதில் நான் பள்ளியில் படித்தபோது தேசியத் தலைவர்களின் நினைவாக பல்வேறு பேச்சுப் போட்டிகளை நடத்தி மாணவர்களின் திறனை பேச்சுப் போட்டிக் கலையின்பால் ஈர்ப்பார்கள். ஆனால், தற்போது மதிப்பெண் முறையிலான கல்வி ஆழப் பதிந்துவிட்டதால், பேச்சுப் போட்டிக்கு மாணவர்கள் தயாராவதும் இல்லை, பெற்றோர்கள் அதனை வரவேற்பதும் இல்லை.

குடும்பத்து உறுப்பினர்களுக்கு இடையேயும், நண்பர்கள் சந்திப்பின்போதும், கலந்து உரையாடும் கலாச்சாரம் அரிதாகி வருகிறது. மேற்படி நிலைகளைக் கருத்தில் கொண்டுதான் இந்தப் புத்தகம் உருவாக்கப்பட்டது.

தகவல் பரிமாற்றத்திற்கு முக்கிய சாதனம் மொழி, மனிதன் மட்டுமே தகவல் பரிமாற்றத்தற்கு மொழியைப் பயன்படுத்துவதில்லை. விலங்குகளும் பயன்படுத்துகின்றன. மேடைப் பேச்சுக்குத் தயாராகும் நபர்கள் முதலில் தான் எது பற்றி பேச உள்ளோம் என்பது பற்றியான தயாரிப்புகளுடன் பேச வேண்டும். பேச்சில் இலக்கியம், அறிவியல், நகைச்சுவை அனைத்தும் அடங்கியிருத்தல் அவசியம். இதற்கு வாசிப்புத்திறன் மட்டுமின்றி ஆழமான சிந்தனைப் போக்கையும் வளர்த்துக் கொள்வது அவசியம். அத்தகைய தேவையின் அடிப்படையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

குறுகிய கால அவகாசத்தில் இப்புத்தகத்தை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் சிறப்பாகத் தயாரித்து வெளியிட்டுள்ளதைப் பாராட்டுகிறேன். அதற்கான இசைவினைத் தந்து சிறந்த பங்களித்துள்ள என்.சி.பி.எச் மேலாண்மை இயக்குநர் க.சந்தானம், அடுத்தடுத்த நிலைகளில் உள்ள நிர்வாகிகளையும், எப்போதும் போல இப்புத்தக விழாவை சிறந்த முறையில் ஏற்பாடு செய்திருக்கும் மண்டல மேலாளர் நண்பர் அ.கிருஷ்ணமூர்த்தி, மேலாளர் மகேந்திரன், கவிஞர் ஞா.சந்திரன் மற்றுமுள்ள என்.சி.பி.எச் தோழமைகள் ஒவ்வொருவருக்கும் நன்றி என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

எழுத்தாக்கம்: கவிஞர் மு.செல்லா

Pin It