மார்க்சியத் தத்துவத்தின் மீது ஈடுபாடு கொண்டு செயல்பட்ட ம.சிங்காரவேலர் (1860--1946), ப.ஜீவானந்தம் (1908--1963) ஆகிய தமிழ்நாட்டு மனிதர்களின் வரிசையில் விதந்து பேச வேண்டிய மனிதர்களில் ஒருவர் கவிஞர் தமிழ்ஒளி என அறியப்படும் தோழர் தமிழ்ஒளி ( 1924--1965) ஆவார். இந்தத் தோழர் பற்றிய விரிவான அறிமுகம் மற்றும் புரிதல் தமிழ்ச் சூழலில் இருக்கிறது என்று கூற முடியவில்லை. அந்தக் கண்ணோட்டத்தில், அவரது ‘காலமும் கருத்தும்’ எவ்வாறு தொழிற்பட்டது என்பது குறித்த பதிவாக இதனைக் கருதுகிறேன். தமிழ்ஒளியைப் புரிந்துகொள்ள அவரது நாற்பது ஆண்டுகால வாழ்க்கை நிகழ்வுகளையும் அதனை அவர் எவ்வாறு எதிர்கொண்டார் என்ற விவரங்களையும் பதிவு செய்வது அவசியம். அவர் சமூகத்தை எதிர்கொண்ட முறைமைகளை, அவரது பல்வேறு ஆக்கங்களின் மூலமே அறிந்து கொள்ள முடிகிறது. அவரது தன்விளக்கக் குறிப்பாக, தமது இறுதிக் காலத்தில் (1961) எழுதி வெளியிட்ட எட்டு பக்கக் குறிப்பான “போராடும் மனிதனின் புதிய உண்மைகள்” என்ற பதிவும் நமக்கு உதவுகிறது. அவரது இந்தக் குறிப்பு மற்றும் அவரது ஆக்கங்களைக் கால ஒழுங்கில் வாசிக்கும்போது கிடைக்கும் விவரணங்களைக் கொண்டு தோழர் தமிழ்ஒளியைப் பேச இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்கிறேன்.
தோழர் தமிழ்ஒளி வாழ்க்கையைப் பின்கண்ட வகையில் பதிவு செய்யலாம். தமிழ்ஒளி தான் பிறந்த ஆண்டு 1925 என்று பதிவு செய்துள்ளார். ஆனால், பெரியவர் செ.து.சஞ்சீவி (1929--2023) அவர்களின் குறிப்பு சார்ந்து 1924 என்றே அறியப்பட்டுள்ளது. தமிழ் ஒளி நினைவு மறதியால் அவ்வாறு பதிவு செய்திருக்கலாம்.
முதல் கட்ட அவரது வாழ்க்கையை 1924-1944 என்று வரையறை செய்யலாம். பாண்டிச்சேரி குக்கிராமத்தில் பிறந்து வளர்ந்த ஒடுக்கப்பட்ட சமூக இளைஞன்; பாரதிதாசனோடு தொடர்புகொண்டு வாழ்ந்த காலம்; மற்றும் அவரது அரசியல் ஈடுபாடு என்பதாக இந்தக் காலம் அமைகிறது.
இரண்டாம் கட்ட வாழ்வாக 1945-1954 என்ற காலப்பிரிவைச் சொல்ல முடியும். இந்தக் காலம் முழுவதும் பொதுவுடைமை இயக்கத்தில் தொண்டனாக இருந்து செயல்பட்ட காலம்.
இறுதிக் கட்ட வாழ்க்கை என்பது 1955-1965 என்று கணிக்கலாம். சுதந்திர மனிதனாக வாழ்ந்து பல்வேறு ஆக்கங்களையும் உருவாக்கிய காலமாக இதனைக் கருத்தில் கொள்ள முடிகிறது.
***
மேற்குறித்த காலப்பாடு சார்ந்து தோழர் தமிழ்ஒளி அவர்களின் வாழ்க்கையை, அவரது செயல்களை சற்று விரிவாகப் பதிவு செய்வோம். அவர் தன்னைப் பற்றிப் பதிவு செய்துள்ள குறிப்பு கீழ் வருமாறு அமைகிறது.
“1949 இல் “ஜனயுகம்’’ என்ற மார்க்சிய தத்துவ மாதப் பத்திரிக்கை (Theoritical Monthly) ஒன்றை என் பெயரிலேயே தொடங்கி நடத்தினேன். அப்பத்திரிக்கையில் பதிந்துகொண்டபோது நான் கொடுத்துள்ள வாக்குமூலத்தை, இன்று மீண்டும் தெரிவிக்கும் நிலையில் உள்ளேன். நான் பிறந்த ஊர்: ஆடூர், குறிஞ்சிப்பாடி, தெ.ஆ.மாவட்டம்; பெற்றோர்: சின்னசாமி, செங்கேணி அம்மாள்; பிறந்த ஆண்டு: 1925; பெற்றோர் இட்ட பெயர். விஜயரங்கம். என் நூற்களில் பதிவான பெயர் தமிழ்ஒளி (என்ற) கவிஞர் தமிழ்ஒளி.” (போராடும் மனிதனின் புதிய உண்மைகள்: (24.2.1961:6--7)
இவ்வாறு இன்றைய பாண்டிச்சேரி ஒன்றியப் பகுதியில் பிறந்து வளர்ந்த தமிழ் ஒளி அவரது பள்ளிப்படிப்பை அருகில் உள்ள சிற்றூரிலும் உயர்நிலைப் பள்ளிப் படிப்பை பாண்டிச்சேரி நகரத்திலும் முடித்திருக்கிறார். அந்தக் காலம் என்பது பாவலர் பாரதிதாசன் (1891--1964) புகழ்பூத்து வாழ்ந்த காலம் (1928--1948). அவரது ஆக்கங்களை வளர்ந்து வந்த சுயமரியாதை இயக்க இளைஞர்கள் வாசித்து, எழுச்சி பெற்ற காலம். சுயமரியாதை இயக்கம் திராவிடர் கழகமாக (1944) அடையாளம் பெற்ற காலம். இக்காலங்களில் சுயமரியாதை இயக்கக் கருத்துநிலைகளில் ஈடுபாடு கொண்ட இளைஞனாகவே தமிழ்ஒளி தமது பொதுவாழ்க்கையைத் தொடங்கியிருக்கிறார். பாரதிதாசனோடு நெருங்கிய தொடர்பில் இருந்தார் என்றும் அவர் குறித்தப் பதிவுகளில் பலரும் குறிப்பிட்டுள்ளனர். பாரதிதாசனின் பாடுபொருள், கவிதைமொழி ஆகியவை தமிழ் ஒளியின் ஆக்கங்களில் ஆழமான தாக்கம் செலுத்தியுள்ளதை வாசிக்கும் எவரும் எளிதில் அறியலாம். பாரதிதாசனுக்கும் தமக்கும் உள்ள உறவு குறித்து, தமிழ்ஒளி வகுப்புத் தோழராக இருந்த பாவலர் ச.பாலசுந்தரம் (1924--2007) அவர்களிடம் பகிர்ந்து கொண்டதை, அவர் தாம் எழுதிய நினைவலைகள் (2008) எனும் தமது வாழ்க்கை வரலாற்று நூலில் பின்கண்டவாறு பதிவு செய்துள்ளார்.
“முதலாவது ஆண்டில் என் உடன் படித்து வந்தவர்களுள் புதுச்சேரியிலிருந்து வந்த விஜயரங்கம் என்பவர் ஒருவர். தமிழ்ஒளி என்று புனைபெயர் வைத்துக்கொண்டு கிழமை இதழ்களுக்குக் கவிதை கட்டுரை எழுதி வந்தார். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். எளிய குடும்பத்தவர். கையெழுத்து மிக அழகாக எழுதுவார். எப்பொழுதும் ஏதாவது கவிதை எழுதிக்கொண்டிருப்பார்.
ஆசிரியர்கள் பாடம் நடத்தும்போது அதில் அவ்வளவு ஈடுபாடு இருக்காது. புதுமைப்பித்தன், ரகுநாதன் போன்ற எழுத்தாளர்களின் கவிதைகளை விமர்சிப்பார். என்னிடத்தில் ஈடுபாடும் அன்பும் கொண்டார். எனக்கு அவரிடத்தில் வியப்புக் கலந்ததொரு ஈடுபாடு. ஒரு நாள் கேட்டேன், “உங்களுக்கு இவ்வளவு தமிழ் உணர்வும் கவிதைத் திறனும் எப்படி வந்தன?” அவர் உடனே, “பாரதிதாசனால்தான். நான் அவரிடம் அவர் எழுதும் கவிதை கட்டுரைகளைப் படியெடுக்கும் உதவியாளராக இருந்தேன். அவற்றைப் படிக்கும்போது அதைப் போலக் கற்பனை செய்து எழுதிப் பார்ப்பேன். அதே மெட்டில், அதே பாவில் எழுதிப் பார்ப்பேன். அவர் என்பால் ஒரு மகனைப் போல் அன்பு செலுத்தினார். நான் எழுதியதைப் படித்துப் பார்த்துள்ளார். ஒரு நாள் ‘விசயரங்கம் உன்னிடம் கவிதை உணர்வும், திறனும் உள்ளன. போதிய தமிழறிவு பெற்றால் ஒரு நல்ல கவிஞனாக எழுத்தாளனாக வரலாம். உன்னைத் தமிழ்ப் படிக்க வைப்பது என் பொறுப்பு. தஞ்சாவூர் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் உள்ள புலவர் கல்லூரிக்கு உன்னை அனுப்பி வைக்கிறேன்’ என்று தாளாளருக்கு அறிமுகக் கடிதம் கொடுத்து அனுப்பி வைத்தார்” என்றார். எங்கள் நட்பு நெருக்கமாயிற்று. அவர் எழுதுவதைப் பார்த்து நானும் எழுத முற்பட்டேன். தமிழ்ஒளி இசைப்பாட்டும் எழுதுவார். எண்சீர் விருத்தம் சரளமாக எழுதுவார். பாட்டு எழுதுவதற்குச் சிந்தனை தான் முக்கியம். அரசியலாக இருந்தாலும் சமூகம் பற்றியதாக இருந்தாலும் அவற்றிலுள்ள குறை, நிறைகளை ஆய்ந்து பார்க்க வேண்டும். வாழ்த்துப்பா பாடுவது பெரிய திறமையாகாது என்பார். நான் சிலவற்றை எழுதிக்காட்டும் போது மகிழ்ச்சியடைவார்.”
இவ்வகையில் 1943--44 வாக்கில் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் வித்வான் படிப்பிற்கான நுழைவு ஆண்டில் (Preliminary Class) மட்டும் படித்துள்ளார். பின்னர் சென்னைக்கு வந்துவிட்டதை அறியமுடிகிறது. ‘தமிழ்ஒளி கவிதைகள்’ (2018) எனும் முழுத்தொகுப்பு நூலில் 1944 முதல் அவரது கவிதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. தொடக்க காலத்தில் அவரது கவிதைகள், திராவிடநாடு, குடியரசு, பிரசண்ட விகடன், தமிழ் முரசு, கவிமலர், புது வாழ்வு ஆகிய திராவிட இயக்கச் சார்பான இதழ்களில் வெளிவந்துள்ளதைக் காண்கிறோம். பின்னர் பொதுவுடைமை இயக்கத்தில் அவர் செயல்பட்ட போதும், போர்வாள் என்ற திராவிட இயக்க இதழ்களிலும் தமது கவிதைகளை வெளியிட்டுள்ளார். பாவேந்தரின் குயில் இதழிலும் இக்காலங்களில் எழுதியுள்ளார். திராவிடநாடு (1944) இதழில் வெளிவந்துள்ள இவரது கவிதை பின்வருமாறு பேசுகிறது.
“தமிழனுக்கே தமிழ்நாடு - இதைத்
தடுக்க யார் செய்தாலும் கேடு
சமர்செய்து வீழ்த்துவீ ரின்றே - மேலும்
சாடுந் திறல்கொண்டு நின்றே!” (2018:17)
இவ்வகையில் அன்றைய திராவிடர் கழகம் முன்னெடுத்த குறிப்பாக, தந்தை பெரியார் பேசிய ‘தமிழ்நாடு தமிழருக்கே’ எனும் முழக்கத்தை தமது கவிதைகளில் வெளிப்படுத் துவதைக் காணலாம். இவ்வகையில் 1944-47 காலங்களில் அவர் எழுதிய கவிதைகளில், சுயமரியாதை இயக்கச் சிந்தனைகளும் பொதுவுடைமை இயக்கச் சார்பான கருத்துக்களும் வெளிப்படுத்துவது இயல்பாக இருந்த காலம் அது. இந்தப் பின்புலத்தில் சுயமரியாதை இயக்கக் கருத்து மரபில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, படிப்படியாக இடதுசாரி இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டவராகத் தமிழ்ஒளி அவர்களை நாம் இனம் காணமுடியும். திராவிட இயக்க இதழான ‘போர்வாள்’ (1947) இதழில் தமிழ்ஒளியின் “வந்த விடுதலை யாருக்கடா?” எனும் தலைப்பில் எழுதிய கவிதையின் ஒருபகுதி.
பார்ப்பானின் கொட்டம் அடங்கவில்லை - கவி
பாரதி எண்ணமும் கூடவில்லை - நல்ல
தீர்ப்பினை மக்கள் அடையவில்லை - வட
தேச விடுதலை யாருக்கடா?
வெள்ளையன் ஓடும் நேரத்தில் - அவன்
விட்டுச்செல்லும் ஆட்சி மேடையிலே - பகல்
கொள்ளைக் கடைக்காரர் ஏறுகிறார் - இந்தக்
குருட்டு விடுதலை யாருக்கடா?
பஞ்சைத் தொழிலாளர் ஓங்கவில்லை - அவர்
பார்வையில் சோகமும் நீங்கவில்லை - தமிழ்
நெஞ்சந்துடிக்குது நீதியில்லை - எனில்
நேர்ந்த விடுதலை யாருக்கடா?
பொதுவில் உடைமைகள் ஆகிடவும் - பணப்
பூதங்கள் ஆட்சியில் ஏகிடவும் - இருள்
மதங்கள் எலாம்ஓடி பட்டிடவும் - எழில்
வாய்ந்த விடுதலை வேண்டுமடா! (2018:39--40)
இந்தக் கவிதை மூலம் தமிழ்ஒளி எனும் மனிதர் கொண்டிருந்த கருத்து நிலைபாடுகளைப் புரிந்து கொள்ள முடியும்.
***
தமிழ்ஒளி 1946--47 ஆம் ஆண்டுகளில் பொதுவுடைமைக் கட்சியோடு தன்னை இணைத்துக் கொள்கிறார். இந்தப் பின்புலத்தில் தமிழ்ஒளி ஆக்கங்களில் அதற்கான விரிவான பதிவுகள் இடம்பெற்றுள்ளதைக் காணமுடிகிறது. அந்த நிகழ்வுகள் குறித்து ஜெயகாந்தன்(1934--2015) பதிவு பின்வருமாறு அமைகிறது.
பாரதிதாசனிடம் ஒரு மாணாக்கனாய் நேர்முகப் பயிற்சி பெற்றவர். பாரதிதாசனின் மகன் மன்னர்மன்னனுக்கு விளையாட்டுத் தோழர். கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் பயின்றவர்; பெரும் புலவர். தமிழ் மொழியில் அவர் அறியாத் துறை இல்லை. 1945-இல் திராவிடர் கழகத்தின் தீவிரக் கருஞ்சட்டை வீரராய்த் திகழ்ந்த உறுப்பினர்.
1947-ஆம் ஆண்டு சுதந்திர தினத்தன்று கம்யூனிஸ்டுக் கட்சி ஆபீசுக்குக் கவிஞர் தமிழ் ஒளியும் கவிஞர் குயிலனும் வந்தபோது முதலில் நான் அவர்களைச் சந்தித்தேன்.
கவிஞர் தமிழ் ஒளி பெரியார் அவர்கள் ‘சுதந்திர நாளைத் துக்க நாளா’கக் கொண்டாடுமாறு கூறிய கூற்றை ஏற்க முடியாதவராய் தி.க.வுடன் பிணக்கம் கொண்டு, ஜீவாவிடம் வந்தார். அதனடியாக அவர் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராகவும் மாறினார். இக்காலத்தில் நான் கட்சி அலுவலகத்தில் வாழ்ந்து கொண்டிருந்தபடியினால் அடிக்கடி கவிஞரைச் சந்தித்துப் பழக நேர்ந்தது”.
1947 ஆம் ஆண்டு ‘தாய்நாடு’ எனும் இதழில் எழுதிய கவிதை இந்தியாவில் இடதுசாரி இயக்கம் எவ்வாறு கால்கொண்டுள்ளது, அதன் வரலாற்றுப் பின்புலங்கள் எவையெவை? என்பவற்றையெல்லாம் கவிதையாகப் படைக்கிறார். அந்தப் பகுதி பின்வருமாறு அமைகிறது.
தஞ்சையிலே நெல்லையிலே கோவை தன்னில்
தலைநிமிர்ந்த கோனேரி வத்தி ராவில்
வெஞ்சமரில் இறங்கிவிட்ட தொழிலா ளர்கள்
விடுக்கின்ற அறிக்கையிது! தமிழ்நாட் டாரின்
நெஞ்சத்துக் குமுறல்மேல் ஆணை வைத்தே
நிகழ்த்துகிறோம்! இப்போதே நடையைக் கட்டு!
அஞ்சிடுவோம் எனநினைத்தா சுட்டுக் கொன்றே
அடக்குமுறை நடத்துகிறாய்? துச்ச மன்றோ?
....... ....................................
திருவாங்கூர், சிரக்கலிலே, குருதி தோய்ந்த
சிவப்புநிறக் கொடியேற்றிப் போராட்டத்தை
உருவாக்கி விட்டவர்மேல் ஆணை வைத்தே
உலகறியச் சொல்கின்றோம்! ஆங்கிலேய
துருப்பிடித்த ஏகாதிபத்தியத்தின்
சுரண்டுதலை, உள்நாட்டு முதலாளித்வ
கருங்காலிக் கூட்டத்தை ஒழிப்போ மென்றே
கங்கணத்தைக் கட்டுகிறோம்! முழங்கு சங்கே! (2018:29)
இதன்மூலம் தஞ்சை, நெல்லை, கோவை, மற்றும் ஆந்திரப் பகுதிகளில் செங்கொடி இயக்கம் செயல்பட்ட வரலாற்றைத் தமது கவிதையில் பதிவுசெய்திருக்கிறார். இப்பகுதிகளில் இடதுசாரி இயக்கம் வலுவாக செயல்பட்டது என்பது வரலாறு. அந்த வரலாற்றின் இலக்கியப் பதிவாகவே தமிழ்ஒளியின் கவிதைகள் உருப்பெற்றுள்ளன. இவ்வகையில் சுயமரியாதை இயக்க மரபிலிருந்து விடுபட்டு இடதுசாரி இயக்கத்திற்குள் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட தமிழ்ஒளியை அவரது கவிதைகள் காட்டுகின்றன. 1947 ஆம் ஆண்டில் கம்யூனிஸ்டு கட்சித் தோழராகச் செயல்பட்டவர் தோழர் ஊ.கோவிந்தன். அவர் புதுயுகநிலையம் எனும் பதிப்பகத்தைத் தொடங்கினார். அதன் முதல் வெளியீடாக ‘நிலைபெற்ற சிலை’ எனும் தமிழ்ஒளியின் குறுங்காவியத்தை வெளியிட்டார். தமிழ்ஒளியின் ‘வீராயி’ எனும் குறுங்காவியத்தைப் பெரியவர் மா.சு.சம்பந்தம் அவருடைய தமிழர் பதிப்பகத்தின் மூலம் வெளியிட்டார். அவைதீக மரபில் செயல்பட்டுச் சமண சமய ஈடுபாடு உடையவராக வாழ்ந்தவர் பேராசிரியர் மே.சக்கரவர்த்தி நயினார். அவர் தமது முத்தமிழ்ப் பதிப்பகம் மூலம் “கவிஞனின் காதல்” எனும் குறுங்காவியத்தை வெளியிட்டார். இவை மூன்றும் 1947 இல் வெளிவந்தவை. இந்த மூன்று காவியங்களும் சாதிய ஒடுக்குமுறை, அதிகார வெறி, பொதுவுடைமைக் கருத்துநிலை ஆகிய பொருண்மைகளைக் கொண்டவை. ஒடுக்கப்பட்ட மக்களைக் கதைப் பாத்திரங்களாகக் கொண்டவை ‘வீராயி’ போன்ற ஆக்கங்கள். இவ்வகையில் இவரது தொடக்ககால ஆக்கங்கள் என்பது, இடதுசாரி இயக்கத் தோழர்களாலும் சுயமரியாதை இயக்கச் சார்பாளர்களாலும் வெளியிடப்பட்டதை அரசியல் கருத்துநிலை சார்ந்த செயல்களாகவே புரிந்துகொள்ள முடிகிறது. இந்தக் காலத்தில்தான் “ஜனசக்தி பிரசுரம்” கம்யூனிஸ்டுகளால் உருவாக்கப்பட்ட காலம்.
வெ.நா.திருமூர்த்தி அவர்களின் ‘கம்யூனிஸ்ட் பாடல்கள்’ எனும் சிறுவெளியீடு 1946இல் வெளியிடப்பட்டது. அதற்கு வ.ரா. முன்னுரை எழுதியுள்ளார். இதில் 25 பாடல்கள் 32 பக்கங்களில் இடம்பெற்றுள்ளது. இடதுசாரிக் கவிஞர்களின் அச்சிடப்பட்ட முதல் கவிதை நூல் இது என்று சொல்லலாம். 1930கள் முதல் ஜீவா ‘ஜனசக்தி’ போன்ற இதழ்களில் பாடல்களை எழுதிவந்தாலும் 1962 இல் தான் தொகுத்து நூல் வடிவம் பெற்றது. இந்தக் காலங்களில் உருவான ‘சோவியத் கழகம்’ என்ற அமைப்பிற்கு திரு.வி.க. தலைமையேற்றார். இச்சூழலில் இடதுசாரி மரபுசார்ந்த ஆக்க முயற்சிகளில் தமிழ்ஒளி அவர்களின் முன்னோடி முயற்சிகளை இனம் காண முடிகிறது. தமிழ்ச் சமூக ஆக்க இலக்கிய உருவாக்க மரபில் தமிழ்ஒளியின் இடம் எவ்வாறு உள்ளது என்ற புரிதல் தமிழ்ச் சமூகத்தில் இருப்பதாகக் கூற முடியவில்லை. கம்யூனிஸ்டு இயக்கத் தோழர்களின் பாடல்கள், இடதுசாரிக் கருத்துப் பிரச்சாரம் நோக்கிய மேடைப் பாடல்கள் மரபில் இருந்து வந்த காலம் அது. அதில் ஜீவாவிற்கும் வெ.நா. திருமூர்த்தி அவர்களுக்கும் முக்கியமான இடமுண்டு. இந்த மரபில் தமிழின் மரபான கவிதை வடிவத்தில், இடதுசாரி கருத்து சார்ந்து எழுதியவராக தமிழ்ஒளியை இனம் காணலாம். அதனால்தான் தமிழ்க் கவிதை உருவாக்கம், அரசியல் கருத்து மரபு சார்ந்து பாரதி, பாரதிதாசன், தமிழ்ஒளி என்ற வரிசையில் அமைகிறது. இதற்கு மாறாக பாரதி, பாரதிதாசன், பட்டுக்கோட்டை எனக் குறிப்பிடும் இடதுசாரி கட்சிகள் சார்ந்த இலக்கிய வரலாற்றுப் பார்வையை மறுபரிசீலனை செய்வது அவசியம் என்பதை பிறிதொரு கட்டுரையில் விரிவாகவே பதிவு செய்துள்ளேன். (பார்க்க: நூலறிவன். ரவிக்குமார் அகவை 60 நிறைவு விழா மலர். 2022:219)
தமிழ்ஒளியின் குறுங்காவியங்களை அரசியல் சார்ந்த கண்ணோட்டத்தோடு 1947 இல் வெளியிட்டதைப்போலவே அவரது சிறிய அளவிலான கவிதைத் தொகுதிகளைத் தோழர்கள் வெளியிட்டனர். தேவகோட்டையைச் சேர்ந்த தோழர் ஏகநாதன் தமது “உண்மை பிரசுரத்தின்” மூலம் ‘நீ எந்தக் கட்சியில்?’ என்ற தொகுப்பை வெளியிட்டார். இந்த வெளியீட்டில் தமிழ்ஒளி எழுதியுள்ள குறிப்பு கவனத்தில் கொள்ள வேண்டியதாகும்.
“பிற பதிப்பகங்கள் போலல்ல உண்மைப் பிரசுரம். உழுபவனுக்கே நிலம், உழைப்பவனுக்கே அதிகாரம், என்ற உன்னத சமதருமத்தின் அடிப்படையிலே உயர்ந்த இலக்கியங்களை வெளியிட முன்வந்திருக்கும் தோழர் ஏகநாதன் உயரிய லக்ஷியத்திலே மலர்ந்த மலர். உண்மைப் பிரசுரம்! அதன் மணம் பாரெங்கும் வீசி, பாட்டாளித் தோழர்களின் பார்வையிலே புதிய ஒளியையும், உள்ளத்திலே உணர்ச்சிகளையும் எழுச்சியையும் உண்டாக்குமாகுக! (1948:2)”
இந்தத் தொகுப்பில் நேரடியான அரசியலை முன்வைக்கிறார் தமிழ்ஒளி. குடிசையில் மற்றும் ஆலையில் வாழும் மனிதர்களின் வாழ்க்கையைப் பேசுகிறார். இப்படிக் கேட்கிறார்
ஏ செந்தமிழா என்னுடைச் சோதரா
நீ யார் பக்கம்? நின்றிட வேண்டும் ?
கொள்ளையடித்திடும் கொடியவர் பக்கமா?
துன்பமுற்றிடும் தொழிலாளர் பக்கமா?
...................................
இப்போதே நீ எவர்பக்கம்? என் றியம்பிடு வாயே!
நான்கு நீண்ட கவிதைகளைக் கொண்ட 24 பக்கங்களில் அமைந்துள்ள கவிதைகள் தமிழ்ஒளியின் இடதுசாரி இயக்கச் செயல்பாட்டின் அடையாளத்தைப் பேசுவதாகவே அமைகிறது. கூலி விவசாயிகள், ஆலைத் தொழிலாளிகள் ஆகியோருக்கான அரசியல் எது என்பதாகவே இக்குறுநூல் கவிதைகள் பேசுகின்றன. தன்னை ஒரு ‘செஞ்சட்டைக்காரர்’ என்று கவிதையில் பதிவு செய்கிறார். தமிழனே கேள்! என்ற தலைப்பில் உள்ள ஆறு பத்திகளை உள்ளடக்கிய கவிதையில் இரண்டு பத்திகளை மட்டும் கீழே தருகிறேன்.
தமிழனே நான் உலகின் சொந்தக் காரன்
தனிமுறையில் நான் உனக்குப் புதிய சொத்து!
அமிழ்தான கவிதைபல அளிக்க வந்தேன்
அவ்வழியில் உனைத்திருத்த ஓடி வந்தேன்
இமை திறந்து பார் ! விழியை அகலமாக்கு!
என் கவிதைப் பிரகடனம் உலகமெங்கும்
திமுதிமென எழுகின்ற புரட்சி காட்டும்
சிந்தனைக்கு விருந்தாகும் உண்ண வா நீ!
................................................
.................................................
சீனத்தில் இருபத்துக் கோடி மக்கள்
செய்கின்ற புரட்சிப் போர் நமக்கு நல்ல
ஞானத்தை அளிக்கின்ற நிகழ்ச்சி யாகும்!
நமதருகில் தெலிங்கான வீர மக்கள்
கானத்து விலங்கனைய நைஜாம் தன்னைக்
கருவறுக்க எழுந்ததுவும் நமது நாட்டின்
ஈனநிலை ஒழித்துவிட நமக்குத் திட்டம்
இதுவென்று காட்டுகிற புதிய ஜோதி! (1948:15)
பாரதிதாசனின் கவிதைகளைப் போலவே இருக்கும் இக்கவிதைகளில் தன்னை ஒரு தமிழன் என்றும்; நான் ஒரு கம்யூனிஸ்டு என்றும் பிரகடனம் செய்வதைப் பார்க்கிறோம். இப்படியான வடிவில் கவிதைகளை வேறு யாராலும் எழுதப்பட்டதாகக் கூற இயலாது.
தேவக்கோட்டைத் தோழர் ஏகநாதன் வெளியிட்ட ‘நீ எந்தக் கட்சியில்?’ (1948) என்ற சிறு வெளியீட்டைப்போல் மலேசியாவைச் சேர்ந்த தோழர் சாம்பசிவம் மற்றும் எஸ்.சங்கரன் ஆகிய இரு தோழர்கள் ‘மே தினமே வருக’ (1952) எனும் 12 கவிதைகள் அடங்கிய தொகுப்பை வெளியிட்டனர். நிலைபெற்ற சிலை (1947) வீராயி (1947) ஆகிய குறுங்காப்பியங்களின் சிறு பகுதிகளையும் இணைத்து வெளியிட்டனர். இது ஓர் அரசியல் செயல்பாடாகவே அமைந்தது. அதில் தோழர் தமிழ்ஒளி ‘என்கருத்து’ என்ற தலைப்பில் எழுதியுள்ள பதிவு முக்கியமானது.
“மே தினமே வருக’ என்ற கவிதையை நான் 1948 இல் எழுதினேன். இப்பொழுது அதையே திருத்தியும் விரித்தும் எழுதியுள்ளேன். ‘மே தின ரோஜா’ என்பது சிறுகதைக் கவிதை................. தற்காலக் கவிஞர்கள் யாரும் மே தினத்தைப் பற்றி எழுதவில்லையென்றே நான் கருதுகிறேன். மே தினத்தைப் பற்றிய இக்கவிதைகள் தமிழுக்குப் புதிது; சுவை புதிது; பொருள் புதிது. பாரதி, தேசிய -சர்வதேசிய பாரம்பரியத்தைத் தமிழில் நிலை நிறுத்தினான். அன்றும், இன்றும், என்றும் அதை வளர்ப்பதே என் இலக்கிய நோக்கம்.” (23.4.1952)
‘மே தினமே வருக’ எனும் தொகுதியில் அமைந்துள்ள சில கவிதைகள் பின்வருமாறு அமைகிறது.
“காடு நகராச்சு; காலம் பவுனாச்சு;
வீடு கலையகமாய் விண்ணகமாய் மின்னிற்று!
தொழிலாளர் சாதனையைத் தூக்கிக் கொடிபிடித்து
வாராய் மணிவிளக்கே வந்திடுவாய் மே தினமே.”
.................................................
நீல நெடுந்திரையாய் நீள்கின்ற கைகளினால்
ஞாலத் தொழிலாளர் நல்லரசைத் தோற்றுவிப்போம்
என்ற சபதமொடும் எண்ணரிய வேகமொடும்
குன்றா உறுதியொடும் கொள்கையோடும் நீ வருக!
.................................................
உலகத் தொழிலாளர் ஒற்றுமையே, நல்லுணர்வே,
அன்பே, இருகடலின் ஆழந்திருந்து வந்த
முத்தே, முழுநிலவே, மேதினமே வாராய் நீ!
வாராய் உனக்கென்றன் வாழ்த்தை யிசைக்கின்றேன்! (1952:8,11)
இவ்வகையில் கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கையின் கவிதை வடிவமாக இவை அமைந்திருப்பதைக் காண முடிகிறது. இந்த மரபைத் தொடர்ந்து, கதைப் பாடல் வடிவில் ‘மே தின ரோஜா’ (1952) எழுதியதைத் தமிழ்ஒளி குறிப்பிடுவதை முன்னர் பதிவு செய்தோம். கதைப் பாடல் வடிவம் என்பது, கண்ணன்-ராதை என்ற காதலர்களைப் பற்றிப் பேசுவதாக உள்ளது. கண்ணன் சேரி மக்களுக்கு உதவச் செல்கிறான். ஆனால், ராதையின் பெற்றோர் வெறுப்படைகின்றனர். இந்த முரண்பாடுகளைப் பேசுகின்றது ‘மே தின ரோஜா’. சாதியத்தைச் சாடும் சிறு வடிவிலான கதைப்பாடலுக்கு ‘மே தின ரோஜா’ என்ற பெயரைச் சூட்டியிருப்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
1948 ஆம் ஆண்டுகளில், கம்யூனிஸ்டுக் கட்சி தடை செய்யப்பட்டிருந்த காலங்களில், அவ்வியக்கத்தின் இதழான ‘முன்னணி’யில் தமிழ்ஒளியும், குயிலனும் வேலை செய்தனர். இவ்விருவரும் கட்சியின் ஒத்துழைப்போடு அவ்விதழைக் கொண்டு வந்தனர். ‘மே தினமே வருக’ எனும் சிறு தொகுப்பில் உள்ள கவிதைகள் அனைத்தும் ‘முன்னணி’ இதழில் வெளிவந்தவையே. இவ்வகையில் இடதுசாரி இயக்கச் செயல்பாடுகள் என்பதாக அவரது கவிதை உருவாக்கம் அமைந்ததைக் காண்கிறோம். தமிழ்ஒளி எழுதியுள்ள சுமார் 118 கவிதைகளில் நான்கில் மூன்று பங்கு பொதுவுடைமைக் கருத்துக்களை வெளிப்படுத்தும் கவிதைகளே. 1946--1954 காலப்பகுதியில் அவரது ஆக்கங்கள் அனைத்தும் பொதுவுடைமைக் கருத்து சார்ந்த, கம்யூனிஸ்டுக் கட்சியில் பணியாற்றிய தொண்டரின் உணர்வுத் தளத்தைக் காட்டுவதாகவே அமைந்திருப்பதைக் காண்கிறோம். இவ்வாறு இயக்கம் சார்ந்து, ஜீவாவைப் போல், வெ.நா.திருமூர்த்தி போல் கவிதைகளை, குறுங்காப்பியங்களைப் படைத்தவர் தமிழ்ஒளி.
‘பொதுவுடைமைப் பொங்கல்’ (1948), ‘துறைமுகத் தொழிலாளி’ (1948), ‘திசையதிர நடக்கிறது சீனத்துச் செஞ்சேனை’ (1948), ‘சியாங்’குக்குப் பிரகடனம் (1949), ‘புதுவைத் தொழிலாளிக்கு கோவைத் தொழிலாளியின் கடிதம்’ (1949), ‘தோழர் கணபதி தூக்கிலிடப்பட்டார்’ (1949), ‘ஜனசக்தி வாராய்’ (1952) ஆகிய பல கவிதைகள் இடதுசாரி இயக்கச் செயல்பாடுகளைப் பற்றிப் பேசிய கவிதைகளே ஆகும். எனவே 1946--1954 காலம் என்பது தமிழ்ஒளி என்ற கலைஞன் கம்யூனிஸ்டாகச் செயல்பட்ட காலம். அனைத்து ஆக்கங்களிலும் இடதுசாரி மரபு சார்ந்த பொருண்மைகளையே அவர் பதிவு செய்திருப்பதை நம்மால் இனம் காண முடிகிறது. இப்படியொரு கவிஞரை இக் காலச் சூழலில் இனம் காண முடிகிறதா? என்ற கேள்வி எழுகிறது.
தமிழ்ஒளி ஆக்கங்கள் ‘முன்னணி’ இதழில் வெளிவந்தன. 1948--49 ஆண்டுகளில் 48 இதழ்கள் முன்னணி வெளிவந்தது. இதில் கவிதை, கட்டுரைகள், சிறுகதைகள், புத்தக விமர்சனங்கள் ஆகியவற்றை தமிழ்ஒளி எழுதினார். 1948இல் வெளிவந்த தொ.மு.சி.ரகுநாதனின் (1923--2001) ‘இலக்கிய விமர்சனம்’ நூலுக்கு மிக விரிவான விமரிசனத்தைத் தமிழ்ஒளி எழுதியுள்ளார். முன்னணி மூன்று இதழ்களில் தொடர்ச்சியாக வெளிவந்துள்ள அப்பதிவு, சமகால இலக்கிய நிகழ்வுகள் மீது தமிழ்ஒளி கொண்டிருந்த ஈடுபாட்டைக் காட்டுவதாக அமைகிறது. ரகுநாதன் நூல் பற்றிய எதிர்மறையான பதிவுகளை தமிழ்ஒளி செய்துள்ளார். அதில் ஒரு பகுதி பின்வருமாறு அமைகிறது.
ஒரு கலைஞன் - அவன் உண்மையிலேயே மெட்டீரியலிஸ்டாக இருந்தால், விஞ்ஞானம் நிரூபித்த உண்மைகளைத்தான் போற்றி எழுதுவான். விஞ்ஞானத்தால் நிரூபிக்கப்பட்டு இதுவரையில் ஒப்புக்கொண்ட உண்மைக்குப் பிரதானமா? விஞ்ஞானத்தால் நிரூபிக்கப்படாத, இதுவரையில் நடந்தேறாத கற்பனாவாதத்திற்குப் பிரதானமா? லோகாயதவாதிக்கு முன்னதுதான் பிரதானம்.
நிரூபிக்கப்பட்ட அடிப்படை விஞ்ஞான உண்மை யொன்று, ‘எப்போதோ மாறலாம்’ என்ற ஒரு விதியேற்படுத்திக்கொண்டு, விஞ்ஞான உண்மைக்கு மாறுபட்டதையும் ஆதரியுங்கள் என்று ஆசிரியர் பகிரங்கமாகக் கூறுகிறார். இந்தக் கண்ணோட்டம் மெட்டீரியலிசத்தின் உட்பகை. ஆசிரியர் இன்னும் ஒருபடி மேலே போகிறார்.
நிரூபணம் செய்யப்பட்ட விஷயங்களுக்கு அப்பாற்பட்ட விஷயங்களை லகுவில் ஒதுக்கிவிட முடியாது என்று அவசரப்பட்டு ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறார். இதற்கு என்ன அர்த்தம்? கடவுள் என்ற ஒருபருப் பொருள் இருக்கிறது. அதை நாம் கண்டுபிடிக்க முடியாது என்றால் ஒதுக்கிவிடக் கூடாது என்பதுதான் ஆசிரியருடைய அபிப்பிராயம், அவருடைய மெட்டீரியலிசம்.
நிரூபணம் செய்யப்பட்ட விஷயங்களுக்கு அப்பாற்பட்ட விஷயங்களை விஞ்ஞான ஆராய்ச்சியால் கண்டுபிடிக்கும் போது மெட்டீரியலிஸ்ட் அவ்வுண்மையை ஏற்கத் தயங்க மாட்டான். அது மனித அறிவின் வளர்ச்சியைக் குறிக்கும். ஆனால், அதற்காக வெறும் ஊகத்தையெல்லாம் தலைமேல் தூக்கி வைத்துக்கொண்டு ஆஹா ஊஹு போட முடியுமா?” (முன்னணி:1949)
ரகுநாதனின் இலக்கிய விமர்சனம், அன்றைய சூழலில் க.நா.சுப்பிரமணியம் (1912-1988) போன்றவர்களால் பெரிதும் விதந்து பேசப்பட்டது. மௌனி (1907--1985), லா.ச.ரா (1916--2007) போன்ற எழுத்தாளர்களை ரகுநாதன் மதிப்பீடு செய்திருந்த முறை இடதுசாரிகளால் ஏற்கத்தக்கதாக இல்லை. இந்த மரபில்தான் தமிழ்ஒளி ரகுநாதனை விமர்சனம் செய்திருப்பதைக் காண முடிகிறது. மேலும், விந்தன் (1916--1975) நடத்திய மனிதன் இதழில் ரகுநாதன் தொகுத்த ‘புதுமைப் பித்தன் கவிதைகள்’ குறித்தும் விரிவான விமர்சனத்தை தமிழ்ஒளி எழுதினார். புதுமைப்பித்தன் கவிதைகளை, கவிதை என்ற வடிவத்தில் சேர்க்க முடியாது என்று சொல்கிறார். இந்த தொகுப்பில் ரகுநாதன் எழுதியுள்ள முன்னுரையையும் கடுமையான சொற்களில் மதிப்பீடு செய்துள்ளார் தமிழ்ஒளி. இவ்வாறு, அன்றைய சூழலில் இடதுசாரிக் கருத்துநிலைச் சார்போடு செயல்பட்ட ரகுநாதனை, கம்யூனிஸ்டுக் கட்சித் தொண்டனாகச் செயல்பட்ட தமிழ்ஒளி செய்துள்ள விமர்சனங்களை, இன்றைய சூழலில் வாசிக்கும்போது, இடதுசாரி இயக்க மரபில் செயல்பட்டவர்களின் முரண்பட்ட பார்வைகளை கண்டறிய முடிகிறது. தமிழ்ஒளி சமகால இலக்கியப் போக்குகளை இனம் கண்டு பேசுபவராக இருந்திருக்கிறார். முன்னணி இதழில் அவர் எழுதியுள்ள ‘பிரச்சார இலக்கியம்’ எனும் கட்டுரை (31.10.1948) கவனத்திற்குரியது. இடதுசாரிகளின் ஆக்கங்களை பிரச்சாரம் என்று கூறுபவர்களுக்கு பதிலளிக்கும் வகையில் அந்த கட்டுரை அமைந்திருப்பதை பார்க்கிறோம்.
சில ஆண்டுகளுக்கு முன் நண்பர், பேரா.பா.மதிவாணன் அவர்களின் வீட்டில் உள்ள பழைய புத்தகங்களைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, 1937 இல் வெளிவந்த ‘ஜனசக்தி’ முதலாண்டு இதழின் தொகுப்பு இருந்தது. அதனைப் புரட்டும்போது அதற்குள்ளிருந்து அஞ்சல் உரை ஒன்று கீழே விழுந்தது. அதனை எடுத்துப் பார்த்தபோது, தமது வகுப்புத் தோழரான பாவலர் ச.பாலசுந்தரம் அவர்களுக்குத் தமிழ்ஒளி எழுதிய நீண்ட கடிதம் அது. அந்தக் கடிதம் தமிழ்ஒளி குறித்த புதிய வரலாற்றுத் தகவல்களை நமக்குத் தருகிறது. 12.12.1949 இல் அந்த கடிதம் எழுதப்பட்டிருக்கலாம். தேதி உள்ளது. ஆண்டு இல்லை. தமிழ்ஒளி அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கத் தமிழ்நாட்டுக் கிளையின் செயலாளர் என்பதை அக்கடிதம் சொல்கிறது. அந்தக் கடிதத்தை அவரது கையெழுத்து வடிவிலேயே வெளியிட்டோம் (2008). தமிழ்நாட்டில் செயல்பட்ட முற்போக்கு எழுத்தாளர் அமைப்பு குறித்து தோழர் ருக்மணி அம்மாள் அவர்கள் வீட்டில் திரட்டிய வேறு சில ஆவணங்களுடன் அதனை வெளியிட்டேன். இதன்மூலம் இந்திய அளவிலான முற்போக்கு அமைப்பில் தமிழ்ஒளி செயல்பட்ட வரலாற்றைப் பதிவு செய்ய முடிகிறது. அக்கடிதத்தில் தமிழ்ஒளி பதிவுசெய்துள்ள பின்வரும் பகுதிமூலம் அவரது மார்க்சியத் தத்துவ ஈடுபாட்டை அறிந்துகொள்ள முடிகிறது. மார்க்சியம் பற்றிய தத்துவ அடிப்படைகள்; மார்க்சியம் செயல்பட்ட வரலாறு என 18 புள்ளிகளை வரிசை எண் போட்டு தமிழ்ஒளி எழுதியுள்ளார். அதன் முதல் 5 புள்ளிகளை மட்டும் கீழே தருகிறேன்.
1) “உலகம் மாறாப்பொருளல்ல; அது மாறும் இயல்புடையது. கணத்திற்கு கணம் மாறியே வந்தேயிருக்கிறது; மனிதன் மற்றுமுள்ள உயிர்ப் பிராணிகள் யாவும் மாறும் இயல்புடையன. இதுதான் பரிணாம விதியென்று குறிக்கப்பெறுகிறது.
2) உலகின் தோற்றம்தான், கருத்தின் தோற்றம். உலகில்லாமல் கருத்தில்லை. அதாவது, பொருளில்லாமல் எண்ணமில்லை. ஜடப்பொருள்களின் பிரதிபலிப்பே நம் கருத்து. இது தர்க்க இயல் உலக ஞானம். ஆங்கிலத்தில் (dialectical materialism) ‘டைலக்டிகள் மெட்டீரியலிசம்’ என்பர். நாஸ்திகத்தின் அடிப்படை இதுதான்.
3) மாறும் உலகிற்கேற்ப, மாறும் ஜடப்பொருள்களுக்கேற்ப நம் எண்ணங்கள் மாற வேண்டும். மாற்றிக்கொள்ள வேண்டும். 4) இதுவரையில் நிகழ்ந்துள்ள உள் அமைப்பின் மாறுதல்களைக் கணக்கிட்டு, இனி அது இவ்வாறு மாறும் என்று கண்டுபிடித்த விஞ் ஞானமே சோஷலிசம். இதனை சாதித்தவர் கார்ல் மார்க்ஸ்.
5) உயிர்ப்பிராணிகளின் (பரிணாம விதிப்படி) வளர்ச்சியில் வாலில்லாக் குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்பதை டார்வின் கண்டுபிடித்தார். அந்தத் தத்துவ அடிப்படைகளின் மீது, மனித சமூக அமைப்பின் வளர்ச்சியைக் கண்டுபிடித்து இலக்கணம் வகுத்தவர் மார்க்ஸ். இதுவே சமூக விஞ்ஞானம்.”
தமது நண்பர் பாவலர் பாலசுந்தரம் அவர்களை, மார்க்சியத் தத்துவத்தின்பால் வென்றெடுக்க மேற்கொண்ட முயற்சியாக இக்கடிதம் அமைகிறது.
அகில இந்திய அமைப்பான முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் கிளை 13.11.1949 இல் தமிழகத்தில் உருவாக்கப்பட்டதாக எழுத்தாளர் பொன்னீலன் குறிப்பிடுகிறார். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் வரலாற்றை ‘ஜீவநதி’ எனும் பெயரில் பொன்னீலன் பதிவு செய்துள்ளார். அந்நூலில் இந்த தகவலைச் சொல்கிறார்.(2003:19) தமிழ்ஒளி தமது நண்பருக்குக் கடிதம் எழுதியுள்ளது 12.12.49. ஆக, தமிழ்நாட்டில் அக்கிளை தொடங்கப்பட்ட அடுத்த மாதம் தமது நண்பருக்குத் தமிழ்ஒளி எழுதுகிறார். பாவலர் ச.பாலசுந்தரம் அவர்கள், தமிழகத்தின் புலமைத்துவப் பேராசான்களில் ஒருவர். தமிழ்ஒளி தனது தத்துவ மரபிற்குத் தனது நண்பரை அணிசேர்க்கும் முயற்சி மூலம் மார்க்சியத்தில் கொண்டிருந்த ஈடுபாட்டைக் காண முடிகிறது.
***
1930களில் சுயமரியாதை இயக்க ஈடுபாடு உடைய இளைஞராக உருப்பெற்றிருக்கிறார். அவரது பதின்பருவம் தொடங்கி இருபதாம் வயதுவரை அக்கருத்து நிலையில் செயல்பட்டிருக்கிறார். பின்னர் படிப்படியாக மார்க்சியத் தத்துவ ஈடுபாடு சார்ந்தவராகச் செயல்பட்டிருக்கிறார். அது உத்தேசமாக 1944--1954 காலங்களாக அமைந்திருந்ததைக் கணக்கிட முடிகிறது. தமிழ்ஒளியின் இந்தக் காலமே அவரது சீர்மிகு சமூகச் செயல்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட காலமாக அமைகிறது. 1953--1954 வாக்கில் அவர் இடதுசாரி அமைப்பின் நேரடிச் செயல்பாட்டிலிருந்து விடுபட்டிருக்க வேண்டும் என்று கருத முடிகிறது. 1954--1965 என்ற அவரது இறுதிக்காலம் வரையான வாழ்க்கையாக அமைகிறது. இக்கால அவர் வாழ்க்கையைப் புரிந்து கொள்ள அவரது ஆக்கங்களை அடிப்படையாகக் கொண்டு மதிப்பீடு செய்ய இயலுகிறது. அதனைப் பின்வருமாறு பகுத்துக்கொள்ளலாம்.
- -விந்தன் நடத்திய ‘மனிதன்’ (1954--1955) இதழோடு தொடர்புகொண்டு அதில் தமிழ்ஒளி செயல்பட்ட வரலாறு சார்ந்த பதிவுகளைச் சொல்ல முடிகிறது. குறிப்பாக சிறுகதை எழுத்தாளராக அவரை இனம் காணுவதற்கான ஏதுக்கள் குறித்து உரையாட முடிகிறது.
- -1947 இல் குறுங்காவியங்களை எழுதியவர்; தொடர்ந்து சிலப்பதிகாரப் பாத்திரங்களைக் கொண்டு சிறிதும் பெரிதுமான காவியங்களை உருவாக்கியுள்ளதை அறிகிறோம்.
- காவியங்களின் தன்மைகள் குறித்தும் அறிவது அவசியம். காதல் எனும் பொருண்மை சார்ந்து உருவகக் காவியமாக ‘கண்ணப்பர்
கிளிகள்’ (1958) என்ற படைப்பையும் உருவாக்கியுள்ளார். புத்தம் சார்ந்து ‘கோசலைக்குமாரி’ (1962) ‘புத்தர் பிறந்தார்’ (1958) ஆகிய படைப்புகளை உருவாக்கியுள்ளார். ‘புத்தர் பிறந்தார்’ முழுமை பெறவில்லை.
சிறார் இலக்கிய உருவாக்க மரபு, நவீன எழுத்தாளர்களிடத்தில் பரவலாக இருப்பதை அறிகிறோம். அந்த வடிவத்திலும் இக்காலங்களில் தமிழ்ஒளி செயல்பட்டிருப்பதைப் பார்க்கிறோம். இத்தன்மை குறித்த விரிவான உரையாடலை நிகழ்த்த வேண்டும்.
1940--1960 காலங்களில் ‘வானொலி’ எனும் ஊடகம் தமிழ்ச் சமூகத்தில் செல்வாக்கான இடத்தைப் பெற்றிருந்தது. நவீன எழுத்தாளர்கள் பெரும்பாலோர் வானொலிக்காக நாடகங்களை எழுதும் மரபைக் கொண்டிருந்தனர். அந்த வகையில் நாடகங்களை எழுதுவதில் ஆர்வம் கொண்டிருந்த தமிழ்ஒளி, சுமார் இருபது ஓரங்க நாடகங்களை பல்வேறு இதழ்களில் வெளியிட்டதையும் அறிய முடிகிறது. வானொலியில் நிகழ்த்தியதாக அறிய முடியவில்லை.
சிலப்பதிகாரம், திருக்குறள் ஆகியவை குறித்த ஆய்வுகளைச் செய்திருக்கிறார். இவருக்கு மிகவும் ஈடுபாடு மிக்க இலக்கியங்களாகச் சிலப்பதிகாரம், திருக்குறள், சீவகசிந்தாமணி, கம்பராமாயணம் ஆகியவை என்பதைத் தமிழ்ஒளி பதிவு செய்திருக்கிறார்.எனவே அவரது 1954--1965 காலங்களில் கவிதைகள், காவியங்கள், சிறுகதைகள், சிறார் இலக்கியங்கள், நாடகங்கள், புனைவுகள் எனப் பல பரிமாணங்களில் செயல்பட்டிருக்கிறார். இத்தன்மைகள் குறித்து அவரது பதிவுகள் பின்வருமாறு அமைகிறது.
பணமோ, பக்கபலமோ அற்ற நிலையில், சமூகத்தின் தாழ்ந்த படியிலே வளர்ந்து, தலை நிமிர்ந்த என்னை, நிலப்பிரபுத்துவப் பிற்போக்கும் - முதலாளித்துவ “முற்போக்கும்,” இருட்டடிப்புச் செய்துள்ளன! அதன் காரணமாகவே -மக்கள் மன்றத்தின் முன் மறைக்கப்பட்டிருந்த என்னை, நானே அறிமுகப்படுத்திக்கொள்ள முன்வந்தேன்.
உரை நடைத்துறை, கவிதைத்துறை ஆகியவற்றில், கடந்த பதின்மூன்று ஆண்டுகட்கு மேலாய்த் தமிழ் மொழியின் ஆக்கங்கருதித் தொண்டுபுரியும் என்னைத் தமிழறிஞர் சிலர் அறிவர்! எனினும், நாடு அறியாது!
“நிலைபெற்ற சிலை”, “வீராயி”, “கவிஞனின் காதல்”, “நீ எந்தக் கட்சியில்”, “மேதினமே வருக” கவிதை நூற்களும் - கவிஞர் விழா, சாக்கடைச் சமுதாயம், ஸ்டாலின், (நாடகம் - சிறு கதை, வாழ்க்கை வரலாறு) முதலிய நூற்களும் ஏற்கனவே என்னால் எழுதி, - வெளியிடப்பெற்ற நூற்களாகும்!
சிந்தனை, அமுத சுரபி, முன்னணி, (தற்போதைய “முன்னணி” அல்ல) கலாவல்லி, மனிதன், கலைமகள், உமா, கண்ணன், நல்லறம், சரஸ்வதி, சுதேசமித்திரன், தாமரை, ஜனசக்தி, கங்கை, சாட்டை, சக்தி, அணில் முதலிய இதழ்கள் என் எழுத்தைப் பரப்பப் பெரிதும் துணை செய்தன. எனினும் - சமூகத்தில் நிலவிய தீயசக்திகள், மக்கள் கண்களினின்றும் என்னை அடியோடு மறைத்துவிட - உலகினர் கண்களின் முன் நான் ஒரு கவிஞனாகவோ நூலாசிரியனாகவோ - தோற்றமளிக்காமல் மறைந் தொழிய எத்தனையோ இடர்ப்பாடுகளைத் தோற்றுவித்தன!
தமிழ்ஒளி ‘முன்னணி’ இதழில் ‘சாக்கடைச் சமுதாயம்’ எனும் பெயரில் சிறுகதை ஒன்றை எழுதினார். வேறு சில கதைகளையும் எழுதியுள்ளார். இவை ‘சாக்கடைச் சமுதாயம்’ (1952) எனும் தொகுப்பாக வெளிவந்தது. சாக்கடைச் சமுதாயம் எனும் கதை நகர சுத்தி தொழிலாளர்களைப் பற்றியது. தமிழ்ச் சிறுகதை உலகில் 1930--1960 காலங்களில் வ.ரா போன்றவர்கள் உருவாக்கிய நடைச் சித்திரம், சிறுகதை வடிவத்திலான பத்திரிக்கை எழுத்து ஆகும். ‘மணிக்கொடி’ தொடங்கி அந்த மரபு இருந்தது. தமிழ்ஒளியின் சிறுகதை வடிவங்கள் தாம் நேரடியாகக் கண்ட உதிரிப் பாட்டாளி, ஒடுக்கப்பட்ட மக்களைப் பற்றியதாகவே இருந்தது. இந்த மரபில் சாதனை நிகழ்த்தியவர் விந்தன். அதுகுறித்த விரிவான பதிவுகளைச் செய்துள்ளேன். (பார்க்க: விந்தன் எனும் ஆளுமை: கருத்தரங்கக் கட்டுரைத் தொகுப்பு. 2014இல் தமிழ் இலக்கியத் துறையில் நடந்த கருத்தரங்கம்) விளிம்புநிலைப் பாட்டாளிகளைச் சிறுகதை வடிவில் பதிவு செய்து சாதனை படைத்தவர் ஜெயகாந்தன் (1934-2015) என்பதும் அறிந்த செய்தி. இந்தப் பின்புலத்தில் வ.ரா. விந்தன், இஸ்மத் பாஷா, தொ.மு.சி.ரகுநாதன், ஜெயகாந்தன் ஆகிய படைப்பாளிகள் வரிசையில் (1930--1960) தமிழ்ஒளியும் இணைந்துகொள்கிறார். இவர்களுக்கு மாக்ஸிம் கார்க்கியின் (1868--1936) எழுத்துக்கள் ஆதர்சமாக அமைந்திருந்ததைக் காண முடியும். 1940--1960 காலங்களின் இடதுசாரிப் படைப்பாளர்களிடத்தில் கார்க்கி எழுத்துக்களின் தாக்கம் மிகுதியாகும். சுமார் இருபது சிறுகதைகளைத் தமிழ்ஒளி எழுதியிருக்கிறார். அவை ‘சாக்கடைச் சமுதாயம்’ (1952) ‘குருவிப்பட்டி’(1963,2007,2020), ‘உயிரோவியம்’ (1989,2007) ஆகிய பெயர்களில் வெளிவந்துள்ளன. இது தொடர்பான விரிவான பதிவுகளைச் செய்ய முடியும். வேறொரு வாய்ப்பில் அதனை விரிவாகச் செய்யவேண்டும்.
தமிழ்ஒளி அவர்களின் ஈடுபாடுடைய துறை என்பது காவியங்களை எழுதுவது என்று புரிந்துகொள்ளமுடியும். இதனைப் பாரதிதாசனின் நேரடித் தாக்கமாகவே புரிந்துகொள்ளலாம். 1947--1952 காலங்களில் நான்கு குறுங்காப்பியங்களை அவர் எழுதினார். அதில் 1947 இல் மட்டும் மூன்று காவியங்கள். 1955--1965 காலங்களில் ஐந்து காவியங்கள் அவர் எழுதியிருக்கிறார். அவை அவரது கவித்திறனின் உச்ச வளர்ச்சியைக் காட்டுவதாக அமைந்துள்ளன. ‘விதியோ? வீணையோ?’ எனும் காவியம் 1954 இல் எழுதப்பட்டது. 1962 இல்தான் அச்சு வடிவம் பெற்றது. அதில் தமிழ்ஒளி எழுதியுள்ள விரிவான முன்னுரை இடம்பெற்றுள்ளது.
“உரையும் பாட்டும் செய்யுளும் பெற்று வருவதே இசை நாடகம் (opera). அது சில சமயங்களில் கூத்தைக் கொண்டு இயலும்” (1954:18) என்று குறிப்பிடுகிறார். சிலப்பதிகாரப் பாத்திரங்களைக் கொண்டு வேனிற் காதையை மட்டும் புதிய இசை நாடக வடிவத்தில் தாம் உருவாக்குவதாகப் பதிவு செய்கிறார். சிலப்பதிகாரம் பண்டைக்காலக் கூத்து வடிவம் என்றும் சொல்கிறார். இக்கருத்தைப் பின்னர் பேரா.முத்துசண்முகம் அவர்கள் சிலப்பதிகாரம் முப்பது நாட்களில் நிகழ்த்தப்பட்ட கூத்து என்று ஆய்வு செய்துள்ளார். இந்தக் கருத்துக்குத் தமிழ்ஒளி மூலமாக அமைகிறார். “திரிகூட ராசப்பரின் குற்றாலக் குறவஞ்சி, அருணாசலக் கவிராயரின் ராம நாடகம் முதலியவை, ‘நாடக’ மரபை உட்கொண்ட தெருக் கூத்துக்களாகும்” (1954:7) என்று கூறுகிறார் தமிழ்ஒளி. “பண்டைத் தமிழ் ‘ஆப்பெரா’க்களுக்கு ஒரு மாதிரியே சிலப்பதிகாரம். அதனை மேலும் வலுப்படுத்துவது மறைந்துள்ள நமது பழைய கலைக்குப் புத்துயிர் தருவதாகும் என்பது என்கருத்து” (1954:10). கேரளத்தில் நடைபெறும் “சாக்கையர் கூத்து” மரபோடு சிலப்பதிகாரத்தை இணைத்துப் பேசுகிறார். இவ்வகையில் இசை நாடகமாக ‘விதியோ? வீணையோ?’ எழுதிய தமிழ்ஒளி இதன் தொடர்ச்சியாகவே
‘மாதவி’ காவியத்தையும் (1957) படைத்தார். இக்காவியம் முப்பத்தெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு (1995) அச்சு வடிவம் பெற்றது. மாதவி பௌத்த துறவியாக இறுதிக் காலத்தில் மாறுவதாக இக்காவியத்தைப் படைத்துள்ளார். மூன்று காண்டங்களில் 27 பகுதிகளைக் கொண்ட இந்தப் படைப்பு, இருபதாம் நூற்றாண்டில் உருவான புதிய சிலப்பதிகாரம் ஆகும். இக்காவியத்தின் அமைப்பும் அதன் கவிப்பாங்கும் சிலப்பதிகார மரபை மீண்டும் தமிழுக்குக் கொண்டு வந்தது என்று கூற முடியும். நீண்ட நெடுங்காலம் கையெழுத்துப் பிரதியைப் பாதுகாத்துத் தமிழுலகிற்கு வழங்கிய பெரியவர் செ.து.சஞ்சீவி வணக்கத்திற்குரியவர்.
இவ்வகையில் சிலப்பதிகாரம் தொடர்பான நவீன காவிய உருவாக்கத்தில் தமிழ்ஒளி பங்கு குறிப்பிட்டுச் சொல்லத்தக்கது. இதன் தொடர்ச்சியாகவே 1959 இல் அவர் வெளியிட்ட ஆய்வான ‘சிலப்பதிகாரம் காவியமா? நாடகமா? எனும் நூல் அமைகிறது. சிலப்பதிகாரத்தை இசை நாடகப் பிரதியாகவும், காவியப் பிரதியாகவும் ஆய்வுசெய்த பெருமை தமிழ்ஒளிக்கு உண்டு. 1954 தொடங்கி 1957 ஆண்டு முடிய சிலப்பதிகாரத்தோடு வாழ்ந்திருக்கிறார் தமிழ்ஒளி. அதன் பல பரிமாணங்கள் குறித்த ஆக்க இலக்கியம் மற்றும் ஆய்வு நோக்கில் செயல்பட்ட அவரது உலகம் பற்றித் தமிழ்ச் சமூகம் கணக்கில் எடுத்துக் கொண்டதாகக் கூற முடியாது. இப்பொருண்மை குறித்து விரிவாகத் தனித்து எழுதிய வேண்டிய தேவையுண்டு.
பௌத்த மரபின் மீது ஈடுபாடு கொண்ட மனிதராகவே தமிழ்ஒளி இருந்திருக்கிறார். 1958 இல் ‘புத்தர் பிறந்தார்’ எனும் முடிவுறாத காவியத்தையும் 1962 வாக்கில் ‘கோசலைக்குமரி’ எனும் காவியத்தையும் அவர் படைத்திருக்கிறார். அவை அவரது மறைவிற்குப் பின் 1966 இல் அச்சு வடிவம் பெற்றன. மிக எளிய கவிதை மொழியில் புத்தர் வாழ்க்கையைப் பதிவு செய்யத் தமிழ்ஒளி திட்டமிட்டுள்ளார். அது முழுமை பெறாதது பெரும் இழப்பு. தமிழ்ஒளி எழுதியுள்ள ‘கோசலைக்குமரி’ (1962) 1966 இல் அச்சு வடிவில் வந்துள்ளது. அதற்கு தமிழ்ஒளி எழுதியுள்ள முன்னுரை பின்வருமாறு அமைகிறது.
“உண்மை வரலாற்றை அடிப்படையாய்க் கொண்டு எழும் புனைவுகள், தருக்கவியலைப் பின்பற்றியும், காலத்தின் பண்பை வெளிப்படுத்தும் நோக்கத்துடனும் அமைந்துவிட்டால், அது வரலாற்றை விளக்கும் சிறந்த இலக்கியமாய் அமைதல் ஒருதலை. இத்தகைய சிறந்த இலக்கியமாய் விளங்குவதே ராகுல்ஜியின் ‘பிரபா’ என்ற சிறுகதை.
வால்காவிலிருந்து கங்கை வரை’ என்ற நூலிற் காணும் - ‘பிரபா’ என்ற சிறுகதையைத் தழுவி, இச்சிறு காவியத்தைப் புனைந்துள்ளேன். என் கற்பனைக்கேற்பக் கதையில் மாறுதல்களைச் செய்து கொண்டேன்.
ஆரியர் மதமும் - புத்த மதமும் ஒன்றை யொன்று கடுமையாய் எதிர்த்துப் போராடிய காலத்தில் வாழ்ந்து, புத்த மதத்தை ஏற்றுக் கொண்ட கவிஞன் என்ற முறையில் - அசுவகோஷ் ஒரு ‘போராட்டக்காரனாய்’ விளங்குதல் இயல்பே.
அவ்வியல்புக் கேற்பவே என் கதையை அமைத்துக் கொண்டேன். இந்தக் கதையை உலகுக்குதவிய பேராசிரியர் ராகுல சாங்கிருத்தியாயன் அவர்கட்குத் தமிழ் நாட்டுக் கவிஞன் என்ற முறையில், என் உளமார்ந்த நன்றியைச் செலுத்துகிறேன்.
இந்தப் படைப்பின் மூலம் ராகுல சாங்கிருத்தியாயன் (1893--1963) மீது தமிழ்ஒளியின் ஈடுபாட்டைக் காண முடிகிறது. ராகுல்ஜி பற்றித் தமிழ்ஒளியின் பதிவு வருமாறு.
பேராசிரியர் ராகுல சாங்கிருத்தியாயன் அவர்கள், காளிதாசனைக் கவி அசுவகோஷுக்குப் பிற்பட்டவன் என்று காட்டுகிறார். வரலாற்றியலுக்குப் பொருந்தியுள்ள இம்முடிவு, உவந்து ஏற்றுக் கொள்ளக்கூடியதாகும். இக்கருத்தின் வழி நோக்கத் தமிழ் இலக்கியத் தொன்மை எத்தகையது என்று புலப்படும்.
“இராமன் கடவுள் அல்லன்; ஓர் ஆரிய மன்னனே என்றும், வால்மீகி, காளிதாசன், போன்றோர் ஆரிய மன்னர்கள் உதவிய செல்வங்களில் மதியையிழந்து, அம்மன்னர்களைப் புகழ்ந்து பாடிய “போகி” கள் என்றும், - நமக்குக் கூறும் ராகுல சாங்கிருத்தியாயன் அவர்களை - “உண்மையின் அருகே மிகத்துணிச்சலுடன் நிற்கும் இருபதாம் நூற்றாண்டின் வீரர்” என்று நாம் போற்றலாம்.
(கோசலைக்குமரி. முன்னுரை) ராகுல்ஜியின் ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு உலகின் முதல் நாகரிகம் தொடங்கிய “காவிரியிலிருந்து - கங்கைவரை சென்றால் உலகம் எத்தனையோ புதுமைகளைச் சந்திக்கும்” என்று இந்நூல் முன்னுரையில் தமிழ்ஒளி எழுதுகிறார். இன்றைய தொல்லியல் ஆய்வு முடிவுகள் சார்ந்து தெற்கிலிருந்து இந்திய வரலாற்றை எழுத வேண்டும் எனும் கருத்தை 1960களில் தமிழ்ஒளி பதிவுசெய்திருக்கிறார். 1958 இல் உருவான ‘கண்ணப்பன் கிளிகள்’ (1966 இல் அச்சு வடிவம்) எனும் உருவக காவியத்தின் உருவாக்கம் பற்றி தமிழ்ஒளி கூறுகிறார். “விசித்திரமான ஆசைகளும் லட்சியங்களும் இலக்கியக் கர்த்தாவின் மனோ தர்மத்திற்கேற்றவாறு தோன்றி, இலக்கியக்காட்சிகளை ஏற்படுத்துகின்றன. அவையே இலக்கியக் கர்த்தாவின் இதய நிழல். அது மிகச்சிறிய வித்தினின்றும் கிளைத்து மிகப் பெரிய விருட்சமாக வளரும், ஆலின் நிழலைப் போன்றது. கிளிகள் முதல் இமகிரிகள் வரை, அவன் இதய நிழலுக்குள் அடங்கியே நிற்கின்றன. இவற்றினின்றும் ‘கண்ணப்பன் கிளிகளின் உருவ விளக்கத்தைப் புரிந்து கொள்ள முடியும். இதுவே, ‘கதை பிறந்த கதை!” தமிழில் இப்படியான இன்னொரு உருவக வடிவ ஆக்கத்தைக் காண்பது அரிது. அவ்வகையில் இந்நூல் விதந்து பேசும் தகுதியுடையது.
‘மாசறு கற்பினள் அகலிகை’ எனும் சிறுகாவியத்தைத் தமிழ்ஒளி படைத்துள்ளார். அதில் புதுமைப்பித்தன் படைத்த கதையே தமக்கு ஏற்புடையது என்பதைப் பின்வருமாறு பதிவு செய்கிறார்.
“கம்பன் ஒருபுறம் இருக்க - அகலிகை கதையை எழுதிய திரு. வெ.ப.சு. அவர்கள், கம்பனுடைய அதே தர்மக்கண் அளித்த உக்கிரப் பார்வையால், இந்திரனைக் கடை கெட்ட போக்கிரியாய்க் -காமவெறியனாய்ச் சித்தரித்துக் காட்டுகிறார். கம்பரில் - கைக்கிளையிலிருந்த இந்திரன் - வெ.ப.சு. அவர்களில் பெருந்திணைக்கு வந்து விடுகிறான். திரு.ச.து.சு.யோகியும், வெ.ப.சு.அவர்களின் அதே தர்ம ஆவேசத்துடன் கிளம்பி இந்திரனைச் சாடுகிறார். “காமச்சிறுபுழு நீ” என்று இந்திரனைச் சுடுகிறாள் - யோகியின் அகலிகை. யோகியின் ஆவேசத்திற்கு அச்சுடு சொல்லே எடுத்துக்காட்டு. ஆனால், யோகியின் கோதமன் - வால்மீகி, கம்பர், வெ.ப.சு.ஆகியோர்களின் கோதமர்களினின்றும் வேறுபட்டவன். பலஹீனமுடையவன். எனினும், மேற்காட்டிய இரு சாராரும் ஒப்பும் கருத்து என்னவெனில், “இராமன் அறத்தின் நாயகன், இந்திரன் அறங்கொன்ற அற்பன்” என்பதே. இக்கருத்தே அவர்களை இணைக்கும் சங்கிலி. ஆனால், இவ்விரு சாராருடனும் இணையாத, ஓர் அபூர்வக் கருத்தையும் நாம் தமிழ் இலக்கியத்திற் காண்கிறோம். அக்கருத்திற்குரியவர், மோகன ஆற்றலைப் பெற்றுள்ள புதுமைப்பித்தன் என்பவர் ஆவார்.
யோகியின் கோதமனைப் போன்றே, புதுமைப் பித்தனின் கோதமனும் பலஹீனன்தான். ஆனால், புதுமைப்பித்தன், இன்னும் ஒரு படி மேலே போய், பக்குவமடையாத ஒருவனின் சபலங்களைக் காட்டுவது போன்று அவ்வளவு, தெளிவாகக் கோதமனைப் படம் பிடிக்கிறார்.அவர் மட்டுமே தொல்லாசிரியன்மார் அறத்தின் வேலியென்று காட்டிய இராமனைக் கேவலம், அவன் பாதத்தூளியால் உயிர்பெற்ற அகலிகையைக் கொண்டே தோற்கடித்தார். தர்க்கசாத்திரம் எதைக் கற்றுக்கொடுக்குமோ, எதைக் கற்றுக் கொடுத்தால் தர்க்க சாத்திரம் சரியென்று ஏற்றுக்கொள்ளப்படுமோ,-அதே ஆயுதத்தைக் கொண்டு இராமதத்துவத்தைத் தகர்த்தெறிந்தார் புதுமைப்பித்தன். அவர் மட்டுமே, ஒரு சரித்திரக் கதாநாயகனைப் போன்று துணிவுடன் பிறர் நெருங்கவே அஞ்சும் அத்தாணி மண்டபத்தை அடைந்து -அங்கே குருடாய்க் கிடந்த உண்மையின் கண்களைத் திறக்க முயன்றார். எனினும், உண்மையின் இருகண்களும் இன்னும் திறக்கப்படவில்லையென்றே நாம் கூறலாம். என்று பதிவு செய்து, இந்திரன் பற்றிய தமிழ் மரபில் உள்ள பதிவுகளை அடிப்படையாகக் கொண்டு இதனை எழுதுகிறார்.
“தொல்காப்பியமும் குறளும் கூறும் இந்திரன் வேதங்களிற் புகழப்படும் இந்திரனே ஆவான். அந்நூற்களின் துணைகொண்டு, அகலிகையை அணுகும்போது, கோதமன் மின்மினிபோல் மினுக்கின்றான். - அகலிகை, தாரகை போல் ஒளிர்கின்றாள். இந்திரனோ எட்ட முடியா அமரர் உலகில் ஞாயிறென மிளர்கிறான். எந்தத் தர்க்க சாத்திரம், புதுமைப்பித்தனைக் கிளறி, இராமனை எதிர்க்கத் தூண்டியதோ, அதே தர்க்க சாத்திரந்தான் என்னைக் கிளறிக் குயுக்திக்காரக் கோதமனை அம்பலப்படுத்தத் தூண்டியது. ஒரு முனிவனுக்கு இருக்க வேண்டிய புலனடக்கம், கோதமனுக்கு இல்லை. அவன் இல்லறத்தைக் கூடத் தாண்டவில்லை. அதற்குள், அவன் சாப ஆற்றலைப் பெற்று விட்டான் என்பது, தவம் என்கிற தத்துவத்திற்கு ஏற்பட்ட களங்கம். என் அகலிகை, அக்களங்கத்தை முதன் முறையாய்த் துடைத்தெறிகிறாள். இனி, கதையைப் படிக்கலாம்.
தமிழ்ஒளி சிறார் இலக்கியங்களை உருவாக்குவதில் ஈடுபாடு கொண்டிருந்ததைக் காணமுடிகிறது. அவை வெளிவந்த விவரங்கள்? யார் வெளியிட்டார்கள் என்ற விவரங்களைக் கண்டறிவது பெரும் குழப்பமாக இருக்கிறது. “பாடு பாப்பா” 1967 இல் வெளிவந்த நூல். இப்போது ‘அந்தி நிலா பார்க்கவா’ (இரண்டாம் பதிப்பு 2015) வெளியிடப்பட்டுள்ளது. 1960--1964 ஆம் ஆண்டுகளில் ‘அறிவூட்டும் அற்புதக் குட்டிக்கதைகள் நூறு’ என்பது “வன மலர்கள்” (2007) என்ற மறு உருவில் அச்சாகியுள்ளது. அவர் வாழ்ந்த காலத்தில் இவற்றை வெளியிட முயன்று இயலாமல் போனதை தமிழ்ஒளி குறிப்பிடுகிறார். தமிழ்ஒளி அவர்களின் “பாடு பாப்பா பாடு” என்ற முதல் சிறார் இலக்கியத்திற்கு தி.ஜ.ரங்கநாதன் (1901--1974) எனும் தி.ஜ.ர எழுதியுள்ள முன்னுரை, தமிழ்ஒளியைப் புரிந்துகொள்ள உதவும் அரிய ஆவணமாக உள்ளது. அப்பகுதி வருமாறு -
“கவிதையின் ஆணிவேரே குழந்தை உள்ளந்தான். குழந்தையின் மாசற்ற உள்ளத்திலே பிறக்கும் வியப்பு, ஆர்வம், ஆனந்தம், ஆத்திரம், கற்பனை, பொய் அறியாச் சொல் இவையெல்லாம் இணைந்த திரள்தான் கவிதையின் உயிர்க்கரு. ஒரு வகையில், கவிஞன் ஒரு குழந்தை; அறிவும் அனுபவமும் முதிர்ந்த குழந்தை. கவிஞர் தமிழ் ஒளி இத்தகைய ‘குழந்தை’- சிறந்த கவிஞர்.”
தமிழ்ஒளி பற்றி தி.ஜ.ர. மேலும் எழுதுகிறார்.
“கவிஞர் தமிழ் ஒளியுடன் சிலகாலம் நேரில் பழகும் பேறு எனக்குக் கிட்டியது. அவர் பண்பிலே சிறந்தவர்; சித்த உறுதி கொண்டவர். உருவிலே அடக்கமானவர்; நெஞ்சிலே உரம் மிக்கவர் அவருடைய இந்த சிறப்புக்களெல்லாம் அவருடைய கவிதைகளில் பிரதிபலிக்கின்றன.”
இவ்வகையில் சிறார் இலக்கியப் படைப்பாளியாகவும் இருந்த தமிழ்ஒளி குறித்தப் புரிதல் பொதுவெளியில் இருப்பதாகப் படவில்லை. முறையான வெளியீடும் அதனைப் பல தளங்களில் முன்னெடுக்கும் முயற்சிகளும் முறையாக மேற்கொள்ளாத நிலையாகவே இதனைப்புரிந்துகொள்ள முடிகிறது. அதனை முறைப்படுத்தும் தேவை நம்முன் இருக்கிறது. சிறார் படைப்புகள் ‘சரஸ்வதி’ (1954) ‘தாமரை’ (1959) ‘அமுதா சுரபி’ (1964) ஏடுகளில் வெளிவந்ததாக செ.து.சஞ்சீவி பதிவு செய்கிறார். சிறார் இலக்கிய வெளியீடு குறித்து, தமிழ்ஒளி செய்துள்ள பதிவு பின்வருமாறு அமைகிறது.
“சென்னை, தியாகராய நகரிலுள்ள ஒரு பதிப்பகம் என் நூறு குட்டிக் கதைகளை வெளியிட முன்வந்து, என்னிடமிருந்து கையெழுத்துப் பிரதியைப் பெற்றுக்கொண்ட பின், நேரிய ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொள்ள மறுத்தும், - என் விருப்பத்திற்கு மாறான நிலையில் என் நூலைப் பயன்படுத்தக் கருதியும் செய்த சூழ்ச்சியை நான் நேரிற் கண்டறிந்தேன். எனவே, எனக்கெதிரான சூழ்ச்சி வலையில், அப்பதிப்பகம் மேலும் ஒரு கண்ணியாய் இடம் பெற்றதையும் அறிந்தேன்.
இவ்வாறு - மறைமுகமாகவும், வெள்ளிடையாகவும் என் ஆற்றலை மறைக்க - என் தமிழ்ப்புலமைக்குத் திரையிட, நான் ஒரு கவிஞன் என்பதை இருட்டடிப்புச் செய்ய - நான் இயற்றியுள்ள நூற்களை ஆள் மாறாட்டம் செய்ய நடந்த முயற்சிகளைக் கண்டு துணுக்குற்றேன். (போராடும் மனிதனின் புதிய உண்மைகள். 1961) 1947 இல் ‘கவிஞர் விழா’ எனும் பெயரில் தமிழ்ஒளியின் ஓரங்க நாடகங்கள் அடங்கிய தொகுப்பு வெளிவந்துள்ளது. அவை மீண்டும் தனி நூலாக இல்லாமல், அவரது சிறுகதைத் தொகுப்போடு இணைந்து வெளியிடப்பட்டுள்ளது. ‘உயிரோவியங்கள்’ (2007) என்ற சிறுகதைத் தொகுப்பில் அவை இடம்பெற்றுள்ளன. பதினெட்டு நாடகங்கள் அச்சிடப்பெற்றுள்ளன. தமிழ்ஒளி நாடக முயற்சிகள் குறித்து பாவலர் ச.பாலசுந்தரம் அவர்களின் பதிவு பின்வருமாறு அமைகிறது.
ஒருநாள் பாலு சார் “நான் ஒரு நாடகம் எழுதி சக்தி நாடகக் கம்பெனிக்கு அனுப்பியிருக்கிறேன். அனேகமாக அது அவர்களுக்குப் பிடிக்கும்” என்றார். எனக்கு வியப்பாக இருந்தது. அவர் சொன்னதுபோலவே சக்தி நாடக சபா உரிமையாளர் கிருஷ்ணசாமி அவரைப் புறப்பட்டு வருமாறு எழுதியிருந்தார். மறுநாள் திண்டுக்கல்லுக்குப் புறப்பட்டுச் சென்று மறுநாள் திரும்பி வந்தார். பாலு சார் அவர்கள் நாடகத்தை ஏற்றுக் கொண்டார்கள். பயிற்சி கொடுத்து அடுத்த மாதம் அரங்கேற்றுவதாகக் கூறியுள்ளார்கள் என்றார். அக்காலத்தில் ஒரு நாடகக் கம்பெனியார் ஒருவர் நாடகத்தை எடுத்துக் கொண்டால் எழுதிய ஆசிரியருக்கு முதல் நாள் வசூலாகும் தொகையை ஊதியமாகக் கொடுப்பது வழக்கம். தமிழ்ஒளி நாடகம் அரங்கேறிய நாளன்று சென்று வந்து முதல் நாள் வசூலான தொகையுடன் சிறிது சேர்த்து 700 ரூபாய் கொடுத்தார்கள். இன்றைய மதிப்பில் அத்தொகை 70,000 ஆகும். மறுநாள் ஊருக்குச் சென்று வருவதாகக் கூறி அவர் பெட்டியை என்னிடம் ஒப்பித்துவிட்டுச் சென்றார். திரும்பி வரவில்லை. (2008:64-60)
இவ்வகையில் ‘ஸ்டாலின்’ என்ற நாடகத்தையும் தமிழ்ஒளி எழுதியதைப் பதிவு செய்துள்ளார். (1947--1948) அந்தப் பிரதி கிடைக்காமலே போய்விட்டது. இந்தப் பின்புலத்தில் இவருடைய ஓரங்க நாடகங்கள் குறித்த அவரது பதிவு பின்வருமாறு அமைகிறது.
“இந்த ஓரங்க நாடகங்கள் படிப்பதற்கென்றே எழுதப்பட்டவை. நடிக்கவும் கூடும். விரும்புவோர் என் யோசனையையும் கேட்டுக்கொண்டால் சில திருத்தங்களுடன் அழகாக நடிக்கலாம்.
பெரிய நாடகங்களைவிட, ஓரங்க நாடகங்களின் மூலம் நாட்டில் நடக்கும் கொடுமைகளை எளிதில் சித்திரித்துக் காட்டி மக்களிடத்தில் எழுச்சியை உண்டாக்க முடியும் என்பது எனது நம்பிக்கை. (2007:97)
தமிழ்ஒளி ‘சிற்பியின் கனவு’ (1945), சேரன் செங்குட்டுவன் (1946) என்ற நாடகப் பிரதிகளை எழுதியதாகப் பதிவு உள்ளது. அவை இப்போது கிடைக்கவில்லை.
காவியப்படைப்பாளி, கவிஞர், நாடக ஆசிரியர், சிறார் இலக்கியப் படைப்பாளி, சிறுகதை ஆசிரியர் என்றெல்லாம் அறியப்பட்ட தமிழ்ஒளி, ஆய்வாளராகவும் செயல்பட்டிருக்கிறார்.
-தமிழ்ச் சமூக வரலாறு குறித்த தனித்த பார்வைகளை முன்வைத்துள்ள பாங்கு
சிலப்பதிகாரம் குறித்த விரிவான ஆய்வு
-திருக்குறள் குறித்த அவரது பார்வை ஆகிய கோணங்களில் தமிழ் ஒளியின் ஆய்வுகளை இனம் காண முடிகிறது. ‘தமிழும் சமஸ்கிருதமும்’ எனும் தலைப்பில் 1960 இல் ஒரு நூலை வெளியிட்டிருக்கிறார். இதில் உள்ள முதல் கட்டுரை, தமிழ்நாட்டின் நிலப்பகுதிகள் எவ்வாறு இருந்தன என்பதை இலக்கிய மற்றும் தொன்மக் கதைகள் வழி பேசுகிறார். பின்னர் இந்நிலப் பகுதி எவ்வாறு துண்டாடப்பட்டது? அதன் விளைவால் சமசுகிருதமொழி எவ்வாறு தமிழ்ச் சமூகத்தில் கால் கொள்ளத் தொடங்கியது? இதனால் திராவிட மொழிகளில் ஏற்பட்ட மாற்றங்கள் எவையெவை? சமசுகிருதம் எவ்வாறு பேச்சு வழக்கிழந்த ‘செத்தமொழி’யாக மாறியது? அதன் வரலாறு, அதன் பரவல், திராவிட மொழிகளோடு உள்ள உறவு என்று பல பரிமாணங்களில் பேசுகிறார்.
சமசுகிருத மொழி பற்றிய விவரணங்களை முன்வைத்த நிலையில், தமிழின் தொன்மைகள் எவை? கால்டுவெல் (1814--1891) மூலம் தமிழுக்கு கிடைத்த அங்கீகாரம், அவரது ஒப்பிலக்கண ஆய்வுகள், தமிழக மன்னர்கள் காலத்தில் தமிழ் எவ்வாறு நடைமுறையில் இருந்தது? எனப் பலகோணங்களில் தமிழ்ச் சமூக வரலாற்றைச் சமசுகிருத மொழி சார்ந்த வரலாற்றோடு இணைத்துப் பேசுகிறார்.
மார்க்சியம் பேசும் மனித சமூக வரலாற்றைத் தமிழ்ச் சமூக வரலாற்றோடு எவ்வாறு இணைத்துப் பார்க்க முடியும் என்ற முயற்சியையும் மேற்கொண்டிருக்கிறார். சங்க இலக்கியம், தொல்காப்பியம் ஆகிய பிரதிகளின் வழி தமிழ்ச் சமூக வரலாற்றைப் பேசுவது குறித்தும் எழுதியுள்ளார். தமிழர்களின் திணைக்கோட்பாடு மக்கள் சமுதாய வரலாற்றைக் கண்டறிவதற்கு எவ்வாறு உதவுகிறது என்றும் எழுதுகிறார். முதலில் ‘தமிழும் சமசுகிருதமும்’ என்று வெளிவந்த நூல் பின்னர், ‘தமிழர் சமுதாயம்’(2006,2020), ‘வரலாற்றில் தமிழர் இனம்’ (2002), எனும் பெயர்களில் வெளியிடப்பட்டுள்ளன. தமிழ்ச் சமூக வரலாறு தொடர்பான விரிவான ஆய்வுகளை அவர் செய்துள்ளார் என்று கூற முடியாது; மாறாக மார்க்சிய வரலாற்றுப் பொருள்முதல்வாதம் சார்ந்து தமிழ்ச் சமூக வரலாற்றை எவ்வாறு கட்டமைக்கலாம் என்பதற்கான முயற்சியைத் தமிழ்ஒளி முன்னெடுத்திருப்பதைக் காண முடிகிறது.
“சிலப்பதிகாரம் காவியமா? நாடகமா?” எனும் தலைப்பில் 1959 இல் அவர் ஒரு நூலை எழுதியிருக்கிறார். ‘விதியோ? வீணையோ?’, ‘மாதவி காவியம்’ ஆகிய காவியப் படைப்புகளை சிலப்பதிகாரம் சார்ந்த வழிநூல்களாகப் படைத்திருக்கிறார். சிலப்பதிகாரத்தை தமிழரின் இசை நாடகம் மற்றும் தமிழ் மரபுகளை உள்வாங்கியது என்ற கருத்துருக்களை முன்வைப்பதை முன்னர் உரையாடலுக்குட்படுத்தினோம். அவர் அந்த நூலுக்கு எழுதியுள்ள ‘அரங்குவாயில்’ எனும் பகுதியில் பின்கண்ட செய்தியை பதிவு செய்கிறார்.
“சிலப்பதிகாரம் காவியமா நாடகமா?’ எனும் இந்நூலில், அது காவியமுமன்று நாடகமுமன்று அஃதோர் ‘இசை நாடகமே’ என்பதனைத் தக்க சான்றுகள் காட்டி நிறுவியுள்ளேன்.
“சிலப்பதிகாரம் படிப்பதற்காக எழுதப்பட்டதென்று கருதி, அதைப் பள்ளிக்கூடங்களில் அடைத்துவைத்த பழங்கொள்கையைத் தகர்த்து, ‘அஃது பண்வகுத்துப் பாடவும் எண்வகுத்து ஆடவும் அரங்கில் நிகழ்த்தும் கதை’ என்பதனைத் திறனாய்வு கொண்டு தெளிவாக்கியுள்ளேன்.
மன்னர் கலையாய்ப் பிறந்து, மக்கள் கலையாய் வளர்ந்து உலக வழக்கொழிந்து சிதையாமல் உயிர்பெற்றுத் திகழும் இசை நாடகத்தின் தாயகம் தமிழகமே என்பதனைத் தக்கார் அறியவும் தரணியோர் புரியவும் செய்துள்ளேன்.
சிலப்பதிகாரத்தில் விளங்காமற் கிடந்த பொருட்களை விளக்கியும், குழப்பங்களை அகற்றியும், கொள்கைகளை இணைத்தும் காட்டியுள்ளேன்.
சிலப்பதிகாரத்தை அரங்கில் ஏற்றிக் காண்பதே குழப்பங்களை அகற்றுதற்குரிய வழி, அதனை எவ்வாறு அரங்கில் ஏற்ற வேண்டும் என்பதனை இந்நூலைப் படிப்போர் எளிதிற் புரிந்துகொள்ளலாம்.”
இவ்வாறு சிலப்பதிகாரத்தை ஒரு நிகழ்த்துப் பிரதியாகக் கட்டமைக்க விரும்பிய தமிழ்ஒளியின் பார்வை கவனத்திற்குரியது. ‘திருக்குறளும் கடவுளும்’ எனும் தலைப்பில் 1959 இல் தமிழ்ஒளி ஒரு நூலை வெளியீட்டுள்ளார். திருக்குறள் பற்றிய ஆய்வாக அது அமைந்துள்ளது. இந்நூலை எதற்காக எழுதினேன் என்ற அவரது விளக்கம் முக்கியமானதாக அமைந்துள்ளது. அப்பகுதி பின்வருமாறு அமைகிறது.
“திருக்குறளிற் காணப்படும் தத்துவம் எது? என்று அறியப் புகுவர், அக் குறளிற் காணும் கடவுள் வாழ்த்தையும் அதற்குப் பரிமேலழகர் கண்ட உரையையும் படித்ததும் மயங்கிச் செய்வதறியாது திகைக்கின்றனர்.
திருவள்ளுவர் வாழ்த்தும் கடவுள் எக்கடவுள் ? என்று கேட்கக் கருதுமுன், பரிமேலழகர் தம் சைவாகமத்தை விரித்துக் காட்டிச் சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மூவரையும் ஒன்றுபடுத்தி, மூவராகிய முதற் கடவுள் என்று கூறி, வாசகர்களை வழிமாற்றி அழைத்துச் சென்று விடுகின்றார்.
பரிமேலழகர் உரையை மறுத்து எழும் இவ்விளக்கம் வரலாற்றுண்மையும், இலக்கியச் சான்றும், இலக்கணத் தெளிவும் நிறைந்ததாகும்.”
திருக்குறள் பத்தொன்பதாம் நூற்றாண்டில் பரவலாக வாசிக்கப்பட்டபோது, பரிமேலழகர் உரைதான் விரிவாக அறியப்பட்டதாக இருந்தது. அதிக அளவில் மறு பதிப்பு பெற்ற நூலாகவும் பரிமேலழகர் உரையே இருந்தது. திராவிட இயக்கம் வளர்ச்சிபெற்ற நிலையில், பரிமேலழகர் உரையை மறுதலிக்கும் ஆய்வுகள் உருப்பெறத் தொடங்கின. அந்தப் பின்புலத்தில் தமிழ்ஒளி அப்பணியை மேற்கொண்டிருக்கிறார். தேசிய இயக்க ஈடுபாட்டில் இருந்த நாமக்கல் கவிஞர் இராமலிங்கரும் (1888--1972) ‘திருவள்ளுவர் திடுக்கிடுவார்’ எனும் தலைப்பில் பரிமேலழகர் உரையை மறுத்து எழுதியுள்ளார்.
***
தமிழ்ஒளி சுயமரியாதை இயக்க மரபு சார்ந்த திராவிடக் கருத்தியலை, அவர் இடதுசாரி அமைப்பில் செயல்பட்டபோதும் நடைமுறைப்படுத்தியிருக்கிறார். அதனை உறுதிப்படுத்தும் செயல் என்பது, அவர் இறுதிக்காலம் வரை இந்தி எதிர்ப்பாளராகவே இருந்துள்ளார். இந்த நிலைப்பாடு, அவர் அன்றைய இடதுசாரி இயக்கத்தோடு முரண்பட்ட காரணமாக இருந்திருக்கலாம். இடதுசாரி இயக்கங்கள் அன்றைய சூழலில் ‘மும்மொழிக் கொள்கை’யை ஏற்றுக்கொண்டிருந்தன. இந்தப் பின்புலத்தில் கீழ்க்காணும் தமிழ்ஒளியின் பதிவு முக்கியமானது.
“திராவிட முன்னேற்றக் கழகத்திடம் எனக்குப் பல கருத்து வேற்றுமைகள் இருப்பினும் - இந்தி எதிர்ப்புக் கொள்கையில் நான் அக்கழகக் கருத்துடன் முற்றும் இணைந்தவன். வடநாட்டுப் பெரு முதலாளித்துவத்தின் ஆதிக்கத்தாலேயே இந்தித் திணிப்பு நடைபெறுகின்றது என்பதை உணர்ந்தவன். எனவே. திரு. ஈ.வெ.கி.சம்பத் அவர்கள், “இந்தி எதிர்ப்புப்போர்” தொடங்கக் குரல் எழுப்பியபோது - நான், “இந்தி எதிர்ப்புப் பரணி” என்ற பாடல்களை எழுதினேன். அப்பாடல்களை -என்னிடமிருந்து, பெற்றுக்கொண்ட திரு.நா.வா. கலைமணி என்பவர், தாம் நடத்திய “தமிழர் நாடு” இதழில், என் பெயர் இன்றிப் பாடல்களை வெளியிட்டார். அவரும் தீயசக்திகளுடன் கையிணைத்து நின்றதை நான் கண்டேன்!
அதே பாடல்களைப் பின்னர் “தாய் நாடு” என்ற இதழில் வெளியிட்டேன். (போராடும் மனிதனின் புதிய உண்மைகள். 1961)
தமிழ்ஒளியை ஒரு கவிஞனாக மட்டுமே அறிந்துள்ள தமிழ்ச் சமூகம் அவரது பல்வேறு பரிமாணங்களையும் அறிந்து கொண்டாடும் தேவை, அவரது நூற்றாண்டு கொண்டாடும் நேரத்தில் உருவாகியிருப்பதாகக் கருதுகிறேன். தமிழ்ஒளி யார்? என்பதற்கு கீழ்க்காணும் பதிவுகளை முன்வைக்க முடியும்.
-1925 ஆம் ஆண்டில் தந்தை பெரியார் அவர்களால் முன்னெடுக்கப்பட்ட சுயமரியாதை இயக்கம், தொடக்க காலங்களில், தோழர்கள் ம.சிங்காரவேலு, ப.ஜீவானந்தம் ஆகியோரின் ஈடுபாட்டோடு செயல்பட்டது. அவ்வமைப்பில் தமிழக இளைஞர்கள் தங்களை இணைத்துக் கொண்டனர். அவ்வமைப்பு பின்னர் ‘திராவிடர் கழகம்’ (1944) என்று பெரியாரால் அடையாளப்படுத்தப்பட்டது. அந்த அமைப்பில் தன்னை இணைத்துக்கொண்ட இளைஞன் தமிழ்ஒளி. அதன் தாக்கம் அவரது வாழ்க்கை முழுவதும் இருந்திருப்பதைக் காண முடிகிறது.
-1944--45 வாக்கில் தமிழ்ச் சூழலில் செயல்பட்ட கம்யூனிஸ்டுக் கட்சியோடு இணைந்து சுமார் பத்து ஆண்டுகளுக்கு மேலாக இடதுசாரித் தத்துவப் புரிதலோடு செயல்பட்டவர் தமிழ்ஒளி. கம்யூனிஸ்டுக் கட்சி தடை செய்யப்பட்டபோது தலைமைப் பொறுப்பில் இருந்த தோழர்கள் தலைமறைவு வாழ்க்கையில் இருந்தனர். அந்த காலத்தில் (1948--49) கம்யூனிஸ்டுக் கட்சி வார இதழான ‘முன்னணி’யில் துணை ஆசிரியராகக் கவிஞர் குயிலன் அவர்களோடு இணைந்து செயல்பட்டவர். இக்காலங்களில் அவரது படைப்புக்கள், மார்க்சியக் கருத்துநிலை சார்ந்துதான் இருந்தது. பாரதி, பாரதிதாசன், தமிழ்ஒளி எனும் தமிழ்க் கவிதைப் பாரம்பரியத்தைக் கட்டமைக்கும் வகையில் அவர் செயல்பட்டார்.
-1954 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு, கம்யூனிஸ்டு இயக்கத்தில் நேரடியான செயல்பாட்டில் இல்லை. மாறாகச் சுதந்திர எழுத்தாளராகத் தாம் ஏற்ற மார்க்சியத்தோடு சுயமரியாதை மரபும் சார்ந்த கருத்து மரபோடு வாழ்ந்த வரலாற்றைக் காண முடிகிறது.
தமிழ்ஒளியின் நாற்பதாண்டு கால வாழ்வை அவரது ஆக்கங்களில் கண்டறிந்து கொண்டாட வேண்டிய கடமை தமிழ்ச் சமூகத்திற்குண்டு. மாறாக, அவரது இறுதிக்கால வாழ்க்கைப் போக்குகளை மட்டும் கவனத்தில் கொண்டு, அவரைக் கொண்டாட மறுத்த சுயமரியாதை இயக்கம் மற்றும் இடதுசாரிப் பார்வைகளை மறுபரிசீலனை செய்வோம். பாரதியைப்போல், பாரதிதாசனைப்போல் கொண்டாட வேண்டிய தோழர் தமிழ்ஒளி என்பதைப் புரிந்துகொள்வோம்.
குறிப்பு:
பெரியவர் செ.து.சஞ்சீவி தொகுத்து வெளியிட்ட ‘தமிழ்ஒளி கவிதைகள்’ முழுத் தொகுப்பு (2018), ‘போராடும் மனிதனின் புதிய உண்மைகள்’ (1961) எனும் தமிழ்ஒளியின் எட்டுபக்கச் சிறுவெளியீடு மற்றும் தமிழ்ஒளி அவர்களின் முதல்பதிப்பு நூல்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு மேற்குறித்த உரையாடலை நிகழ்த்தியுள்ளேன்.
- பேராசிரியர் வீ.அரசு
தமிழ் ஒளி நூல் பட்டியல்
காவியங்கள்
கவிஞனின் காதல் 1944 1947
நிலைப்பெற்ற சிலை 1945 1947
வீராயி 1947 1947
மேதின ரோஜா 1952 1952
விதியோ? வீணையோ? 1954 1961
மாதவி காவியம் 1957--58 1995 கண்ணப்பன் கிளிகள் 1958 1966 புத்தர் பிறந்தார் 1958 1966
கவிதைகள்
நீ எந்தக் கட்சியில் 1948 1948 மேதினமே வருக! 1948 1952 தமிழ்ஒளியின் கவிதைகள் 1954--64 1966 மக்கள் கவிதைகள் 1954--58 1987
சிறார் பாடல்கள்
பாடு பாப்பா 1948--62 1967 பாப்பா பாட்டு 1950 1950 அந்தி நிலா 2001 (சிறார் பாடல்கள் அந்திநிலா என்பதாகத் தொகுக்கப்பட்டுள்ளது)
ஆய்வுகள்
சிலப்பதிகாரம் நாடகமா? காவியமா? 1959 1959 திருக்குறளும் கடவுளும்1959 1959 தமிழும் சமஸ்கிருதமும்1950 1960 தமிழர் சமுதாயம் 1951 1962
சிறுகதைகள்
சாக்கடைச் சமுதாயம் 1948--49 1952 மாமாவின் சாகசம் 1952 1952 (குறுநாவல்)
அறிவூட்டும் 100 1960 1961
அற்புதக் கதைகள் (இக்கதைகள் வனமலர்கள் என்பதாகத் தொகுக்கப்பட்டுள்ளது)
குருவிப்பட்டி 1954--60 1961
உயிரோவியம் 1948--49 1989
நாடகங்கள்
கவிஞர் விழா (ஒரங்க நாடகம்)
சிற்பியின் கனவு
சேரன் செங்குட்டுவன்
தோழர் ஸ்டாலின்