பழங்குடி மக்களைக் குறிக்கும் அண்மைக் காலச் சொல்லாடல்கள் பயன்பாடு பழங்குடியினர் தொன்மையையும் திணைசார் பண்பையும் நீர்த்துப் போகச் செய்யும் முயற்சியா?

தொல்குடி, முதுகுடி, பழங்குடி என்னும் சொல்லாடல்களால் பண்டைத் தமிழ் இலக்கியங்கள் இம்மண்ணிற்குச் சொந்தமான மக்களைக் குறித்திடக் காண்கிறோம். “மண்ணின் மைந்தர்” எனப் பொருள்பட Autothones/ Auhothonous People எனவும் ‘பூர்வீகக் குடிகள்’ எனப் பொருள்படும் வகையில் Aborigines/ Aboriginal People எனவும் குறிக்கப்பட்ட முந்தைய சொல்லாட்சிகளுக்கு மாற்றாக, அண்மைக் காலமாகத் ‘திணைக் குடிகள்’ என்று பொருள்படும் Indigenous People என்கிற சொல்லாடலை யுனெஸ்கோ (UNESCO) அறிமுகப்படுத்தியுள்ளது. இருப்பினும், Indigenous People என்னும் சொல்லாடலானது மிகுந்த நெகிழ்வுத் தன்மை கொண்டுள்ளமையால், சில நூற்றாண்டுகளாக அல்லது பல தலைமுறைகளாக ஒரே வாழிடத்தில் தொடர்ந்து வாழ்ந்து வரும் மக்கள் குழுக்களையும் இச்சொல்லாடலானது குறித்திடுவதனால், முந்தைய சொல்லாடல்களான ஆதிவாசி (Adivasi), பழங்குடி (Tribe) என்பவை காட்டிடும் தொன்மையை (Antiquity) இது கொண்டிருக்கவில்லை என்று உறுதியாகக் கூறலாம்.

பழங்குடி பற்றி நிலவிடும் பல்வேறு சொல்லாடல்கள்

‘மலை மக்கள்’ என்று பொருள்படும் வகையில் உருவாக்கப்பட்ட அந்நாளைய சொல்லாடலான ‘கிரிஜன்’ (Girijan) தொடங்கி, அண்மையில் ஒன்றிய அரசு உருவாக்கியுள்ள (“மக்கள் ஜாதி” எனப் பொருள்படும்) ‘ஜன்ஜாதி’ (Janjati) வரை பல்வேறு சொல்லாடல்கள் பழங்குடி மக்களைக் குறிப்பிட இந்தியா முழுமையும் வழக்கத்தில் உள்ளன. இவற்றை வெறும் சொல்லாடல்கள் மட்டுமே என்று எளிதில் புறம் தள்ள நம்மால் இயலவில்லை; ஏனெனில், ‘பழங்குடி’ பற்றிய அண்மைக் காலச் சொல்லாடல்கள் ஒவ்வொன்றுக்குள்ளும் ஒரு வகையான அரசியல் தெளிவாக உள்ளமையே இதற்குக் காரணம் ஆகும். tribes 733சான்றாக, ‘கிரிஜன்’, ‘மலை ஜாதி’, ‘மலை மக்கள்’ என்னும் சொல்லாடல்கள் மலைவாழ் மக்களை மட்டுமே ‘பழங்குடி’ எனக் கணக்கில் கொள்கின்றன. இவ்வகைச் சொல்லாடல்கள் மலை அடிவாரம், சமவெளி, உப்பங்கழி, கடற்கரை உள்ளிட்ட பிற நிலவியல் பரப்புகளில் வாழ்ந்துவரும் பழங்குடி மக்களைக் கருதுவதும் இல்லை -கணக்கில் எடுத்துக் கொள்வதும் இல்லை. இவற்றிற்கு எல்லாம் மேலாகப் பழங்குடி மக்களுடைய தொன்மையும் இம்மக்கள் மண்ணின் மைந்தரே என்பதும் இத்தகைய சொல்லாடல்களால் அடிபட்டுப் போய்விடுகின்றன. இதனாலேயே, ‘இந்துத்துவ’த்தை தனது அடிப்படைக் கருத்தியலாகக்கொண்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்பானது ‘வனவாசி கேந்திரம்’ (Vanavasi Kendra) என்கிற பெயரில் தனது அமைப்பின் கிளைகளைத் தமிழ்நாட்டின் பழங்குடி வாழ்விடப் பகுதிகளில் பழங்குடியினர்க்கான அமைப்பு எனும் பெயரில் நிறுவிச் செயல்பட்டு வருவதை நம்மால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை.

‘பழங்குடி’யைக் குறிக்கும் Tribe என்கிற சொல்லாடலானது ஆங்கிலேயக் காலனிய அரசு உருவாக்கியது -அதை ஏற்பதற்கில்லை என்று வாதிடும் இந்துத்துவவாதிகளுக்கு, அதே ஆங்கிலேயக் காலனிய அரசு உருவாக்கிக் கொடுத்த ‘இந்து’ (Hindu) என்னும் சொல்லாடல் மட்டும் ஏற்புடையதாக விளங்கும் இரட்டை மனப்பாங்கை இங்கே நாம் கருதிப் பார்க்க வேண்டும்.

“பழங்குடியினர் பெருமையைப் பறை சாற்றுகிறோம்” என்கிற பொய்யான முன்னெடுப்புடன் கடந்த சில ஆண்டுகளாக ஒன்றிய அரசு பழங்குடிப் போராளி பிர்சா முண்டா நினைவு நாளில் கொண்டாடும் ‘ஜன்ஜாதிய கௌரவ் திவாஸ்’ (Janjatiya Gaurav Diwas) என்பதில் தொன்மை சான்ற பழங்குடி மக்களை “மக்கள் ஜாதி” எனும் பெயரில் அவர்களுடைய தொன்மைச் சிறப்பை நீர்த்துப் போகச் செய்து உள்ளமையை எவ்வாறு நம்மால் ஏற்றுக் கொள்ள இயலும்.

கடந்த 2006-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘வன உரிமைகள் (அறிந்தேற்புச்) சட்டத்’தில், ‘வனம் வாழ் பட்டியல் பழங்குடிகள்’ (Forest Dwelling
Scheduled Tribes) மற்றும் ‘பிற மரபார்ந்த வனம் வாழுநர்’ (Other Traditional Forest Dwellers) என்று காலம் காலமாக வனத்தில் வாழ்ந்து வரும் ‘உரிமைப் பங்காளர்களை’ (Stakeholders) இனங்கண்டுள்ள நிலையில், ஒட்டுமொத்தமாக ‘வனவாசி’ என்னும் சொல்லாடலுக்குள் இவ்விரு வகைமையினரையும் ஒரு சேர உள்ளே இணைப்பதனால் பழங்குடி மக்களுடைய தொன்மைச் சிறப்பானது பறிபோய் விடும் என்கிற நமது நியாயமான அச்சம் இன்றைய ஒன்றிய அரசால் கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என உறுதிபட உரைக்கலாம்.

தமிழ்நாட்டில் மிக அண்மைக் காலமாகப் ‘பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடி’ (Scheduled Caste & Schedule Tribe) எனும் பொதுச் சொல்லாடலைக் குறிக்கப் புதுச் சொல்லாட்சியை உருவாக்குகிறோம் என்கிற சாக்கில், ‘சான்றோர் / ஆன்றோர்’ என்னும் சொல் வழக்கை உருவாக்கியுள்ள ஒரு சாரார், ‘பழங்குடி’ எனும் சொல்லாடலை ‘ஆன்றோர்’ என வசதியாகப் பயன்படுத்தி வருகின்றன்; இதன் விளைவாகப் ‘பழங்குடிக் குடியிருப்பு’ என்பன போன்ற புதுச் சொல்லாடல்களை ‘ஆன்றோர் குடியிருப்பு’ எழுதியும் பேசியும் வரும் தவறானதொரு முன்னெடுப்பைக் கையில் எடுத்துள்ளனர்; இது மிகவும் கண்டிக்கத் தக்கது ஆகும்.

நிறைவுரை

‘பழங்குடி மக்களை’க் குறிக்கப் பயன்படும் ‘ஆதிவாசி’ என்கிற சொல்லாடலை மாற்றி, ‘வனவாசி’ என்று இந்துத்துவ அமைப்புகள் குறிப்பிடத் தொடங்கியுள்ளமைக்குத் தக்க எதிர்வினையாக “Original Inhabitants” என்று பொருள்படும் “மூல் நிவாஸ்” (Mulnivas) என்கிற சொல்லாடலை நடு இந்தியப் பழங்குடிச் செயல்பாட்டாளர்கள் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்; இந்நிலையில், தற்போது ஒன்றிய அரசானது ‘மக்கள் ஜாதி” எனப் பொருள்பட ‘ஜன்ஜாதி’ என்கிற சொல்லாடலை முன்னெடுத்துள்ளமை அதிர்ச்சி அளிக்கிறது. சர்ச்சைக்கு உரிய ‘ஜன்ஜாதி’ எனும் இப்புதுச் சொல்லாடலுக்கு இதுவரை எந்தவொரு பழங்குடிச் செயல்பாட்டாளரோ மானிடவியலாளரோ எவ்வகையான எதிர்வினையும் ஆற்றாமல் இருப்பது மேலும் கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

ஓரிடத்திலேயே நிலையாகப் பன்னெடுங்காலம் வாழ்ந்து வரும் படிநிலைச் சமுதாய மக்கள் குழுவைக் குறிக்க ‘நிலைக்குடி’ என்கிற சொல்லாடலையும் ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு இடம் பெயரும் ‘வாழ்க்கைப் பாங்கினைக்’ (Lifestyle) கடைப்பிடிக்கும் படிநிலைச் சமுதாய மக்கள் குழுவைக் குறித்திட ‘அலைகுடி’ எனும் சொல்லாடலையும் பயன்படுத்துவது போல, தொன்று தொட்டு ஒரே வாழிடத்தில் வாழ்ந்து வரும் படிநிலைகள் அற்ற ஒருபடித்தான சமூகத்தைக் கொண்ட தொன்மை சான்ற திணைக் குடிகளைக் குறிக்கப் ‘பழங்குடி’ என்கிற சொல்லாடலையே தொடர்ந்து பயன்படுத்த வேண்டும் என்பதே மானிடவியலாளர்களுடைய முடிந்த முடிபாகும்.

- முனைவர் சி.மகேசுவரன், முதுநிலை ஆய்வுத் தகைஞர், இந்தியச் சமூக அறிவியல்கள் ஆய்வுக் குழு, மொழியியல் துறை, பாரதியார் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் -641046

Pin It